என் மலர்
நீங்கள் தேடியது "Pregnancy"
- மற்ற குழந்தைகளைப் போல டெஸ்ட் டியூப் பேபியும் நார்மலாக இருக்குமா?
- ஐவிஎஃப், இக்ஸி முறைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமா?
கருமுட்டை அல்லது விந்தணு தானம் பெற்று குழந்தை பெறுபவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம், குழந்தை நம்மைப்போல இருக்குமா? அல்லது தானம் வழங்கியவர்களைப் போல இருக்குமா என்றுதான். இப்படி செயற்கை கருத்தரித்தலில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு, அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமளித்துள்ளார் கருத்தரித்தல் சிறப்பு சிகிச்சை மருத்துவர் நிவேதிதா.
"டெஸ்ட் டியூப் பேபி" முறை ஆரோக்கியமானதா?
ஐவிஎஃப், இக்ஸி முறையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என சொல்கிறோம். 10 பேர் குழந்தை இல்லை என வருகிறார்கள் என்றால், எல்லோருக்கும் ஐவிஎஃப் பண்ணமாட்டோம். முதலில் அடிப்படை சிகிச்சைகளை அளிப்போம். அந்த சிகிச்சைகளில் சிலர் கருவுறுவார்கள். சிலருக்கு அடிப்படை சிகிச்சை முறைகள் உதவாது. அவர்களுக்கு வேறுவழியில்லை என்ற சூழலில்தான், டெஸ்ட் டியூப் பேபி முறையை அறிவுறுத்துவோம். டெஸ்ட் டியூப் பேபி என்றாலே குழந்தை எப்படி இருக்கும்? குழந்தை நார்மலாக இருக்குமா? என்று எல்லோரும் கேட்பார்கள். சாதாரணமாக 100 பேர் கருவுறுகிறார்கள் என்றால், அதில் 97 பேருக்கு குழந்தை ஆரோக்கியமானதாகத்தான் இருக்கும். அதில் 3 சதவீத குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும். இது இயற்கை கருவுறுதலின் சதவீதம்.
அதேபோல அந்த 3-5 சதவீதம் என்பது ஐவிஎஃப் முறையிலும் இருக்கும். இயற்கையாக கருவுறும்போது குழந்தைக்கு பிரச்சனைகள் இருந்தால் நாம் அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஐவிஎஃப் முறையில் குழந்தைக்கு பிரச்சனை என்றால், அதை பெரிதுப்படுத்தி, ஐவிஎஃப் என்பதால்தான் இப்படி ஆனது என நினைத்துக்கொள்வோம். இயற்கை கருவுறுதலில் என்னென்ன சவால்கள் உள்ளதோ, அதே சவால்கள் ஐவிஎஃப் முறையிலும் உள்ளது. ஐவிஎஃப் முறை நூறு சதவீதம் பாதுகாப்பானது என என்னால் கூறமுடியாது. ஆனால் 97 சதவீதம் அது பாதுகாப்பானதுதான். ஐவிஎஃப் முறையில் பிறக்கும் குழந்தைகள் அப்நார்மலாக, வித்தியாசமாக இருப்பார்கள் எனக்கூறுவார்கள். அப்படி எல்லாம் கிடையாது. வெளிநாடுகளில் ஐம்பது வயதில்கூட ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.
சிலருக்கு கருப்பைக்கு வெளியில் உள்ள குழாயில் குழந்தை வளருவது ஏன்?
மாதம் மாதம் பெண்களுக்கு சினைப்பையில் இருந்து ஒரு முட்டை வெளியே வரும். அந்தநேரத்தில் உடலுறவு கொண்டால், விந்தணுக்கள் நீந்தி சென்று, அதனுடன் இணைந்து கரு உருவாகும். ஒருசிலருக்கு கருக்குழாய் அடைப்பு அல்லது பாதிப்பு இருந்தால், கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள குழாயிலேயே கரு தங்கி வளரத்தொடங்கிவிடும். இதனை எக்டோபிக் கர்ப்பம் எனக் கூறுவோம். இந்தக் கருவால் ஆரோக்கியமாக வளர முடியாது. ஏனெனில் குழந்தையை தாங்குவதற்கான அமைப்பு கருக்குழாய்க்கு இருக்காது.
ஆண், பெண் குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணங்கள் என்ன?
பொதுவாக பல பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை பிசிஓடி. முறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல்பருமன் அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. சிலருக்கு இந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும், குழந்தை இருக்காது. இதனை விவரிக்கப்படாத கருவுறாமை எனக்கூறுவோம். அதுபோல கருக்குழாய் அடைப்பு, ஃபைப்ராய்டு கட்டிகள் உள்ளிட்டவற்றாலும் பெண்களுக்கு கருவுறுதல் தள்ளிப்போகும். அரிதாக சிலருக்கு முட்டையின் எண்ணிக்கையே குறைவாக இருக்கும். அதாவது இளம்வயதிலேயே அவர்களுக்கு மாதவிடாய் நின்றிருக்கும்.
ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, விறைப்புத்தன்மை இல்லாமல் இருப்பது, வேகமாக விந்து வெளியேறுதல், விந்துக்கள் வெளியே வராமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் காரணமாக இருக்கின்றன.
கருமுட்டை, விந்தணு தானம் என்றால் என்ன?
முன்னர் சொன்னவாறு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கருமுட்டை தீர்ந்துவிடும். அவர்களுக்கு கருமுட்டை இருக்காது. இந்த பிரச்சனை உடைய பெண்கள் கருவுற வேண்டும் என ஆசைப்பட்டால், அவர்களுக்கு வேறு பெண்களிடம் இருந்து முட்டையை தானமாக வாங்கி, அவர்களின் கணவரின் விந்தணுவுடன் இக்ஸி செய்து, கரு உருவாக்கி, அந்த கருவை சம்பந்தப்பட்ட பெண்ணின் கருப்பையில் வைத்துவிடுவோம். இது யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும்தான் செய்வோம். இது தம்பதியரின் விருப்பம் இருந்தால் மட்டும்தான் செய்யமுடியும். இதேபோன்றுதான் விந்து தானமும்.
விந்தணு தானம் பெற்று உருவாகும் குழந்தை யார் ஜாடையில் இருக்கும்?
இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் மற்றும் பயம்தான். தானம் பெறுபவர்களுக்கு ஏற்றவாறு உடல்தோற்றத்தை கொண்டவர்களைத்தான் தானம் வழங்குபவராக முதலில் தேர்ந்தெடுப்போம். இப்போது ஒரு பெண்ணுக்கு கருமுட்டை தானம் பெறுகிறோம் என்றால், தானம் தருபவரின் ரத்த வகை, உயரம், எடை, நிறம் போன்றவற்றை பார்த்துதான் தேர்வு செய்வோம். தானம் பெறுபவர், வழங்குபவர் என இரண்டுபேரின் வெளிப்புறத் தோற்றத்தை ஒற்றுமைப்படுத்திதான் தேர்வு செய்வோம். அதுபோலத்தான் விந்தணு தானம் செய்பவர்களையும் தேர்வு செய்வோம். புறத்தோற்றத்தை வைத்துதான் தேர்வு செய்கிறோம் என்பதால், அவர்களின் முட்டை அல்லது விந்து தானம் மூலம் உருவாகும் குழந்தை பெற்றோர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்காது.
கருவுற்றவர்கள் இயல்பான வேலைகளை செய்யலாமா?
முதல் மூன்று மாதம் எந்த வேலையும் செய்யக்கூடாது என வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். அதற்கு காரணம் குழந்தை கலைந்துவிடுமோ என்ற பயம். ஆனால் அது அப்படி கிடையாது. முதல் மூன்று மாதத்தில் கரு என்பது உருவாகும். அது ஆரோக்கியமாக உருவானால் அப்படியே தொடரும். எனவே பயம் தேவையில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. சிலருக்கு குறை மாதத்திலேயே குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மருத்துவர்களே சில கட்டுப்பாடுகளைக் கூறுவோம். மற்றபடி முழு நேரம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது.
- 18 வயதுக்கு கீழே, திருமணத்துக்கு முன்பு ஏற்படும் எந்த கர்ப்பமானாலும் போக்சோ சட்டத்தின் கீழ் வரும்.
- 45 சதவீதமான பெண்கள் கருத்தரித்து 6 வாரத்தில் கருக்கலைப்பு செய்கிறார்கள்.
பெண்கள் மத்தியில் தற்போது அதிகரித்து வரும் பிரச்சினைகளில் ஒன்று திருமணத்துக்கு முன்பே கருத்தரித்தல். இது இளம்பெண்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சினை ஆகும். ஒரு பெண் திருமணத்துக்கு முன்பு கருத்தரிப்பது என்பது சரியா அல்லது தவறா என்பது பற்றி நாம் பார்க்கப் போவதில்லை. அது அவர்களின் தனிப்பட்ட உரிமை ஆகும். அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடையது. அது நாம் தடுக்கக்கூடிய விஷயம் அல்ல.
18 வயதுக்கு மேல் கருக்கலைப்பு செய்ய சட்டத்தில் இடம் உண்டா?
பெண்கள் கருத்தரிப்பதற்கு என்று ஒரு குறிப்பிட்ட வயது என்பது இருக்கிறது. ஒரு பெண் திருமணம் ஆகாத நிலையில் 18 வயதுக்கு முன்பு கருத்தரித்தால் அது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இதில் பாதிக்கப்படும் சிறுமிகள் ஆனாலும் சரி, பாதிப்புக்கு உட்படுத்திய ஆணாக இருந்தாலும் சரி, அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறார்கள்.
மேலும் இந்த விவகாரத்தில் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்து உண்மையை மறைக்கும் அவர்களின் குடும்பத்தினர், இதை சட்டத்துக்கு தெரியப்படுத்தாமல் கருக்கலைப்பு மற்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் என எல்லோருமே இதில் கண்டிப்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வருவார்கள்.
18 வயதுக்கு கீழே, திருமணத்துக்கு முன்பு ஏற்படும் எந்த கர்ப்பமானாலும் போக்சோ சட்டத்தின் கீழ் வரும். எனவே 18 வயதுக்கு கீழே கர்ப்பத்துடன் பரிசோதனைக்கோ அல்லது சிகிச்சைக்கோ அல்லது கருக்கலைப்புக்கோ வரும் சிறுமிகள் பற்றி மருத்துவர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவிப்பார்கள். இது எல்லாமே அனைத்து மருத்துவர்களுக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஒரு பெண் திருமணம் ஆகி கர்ப்பமாக இருந்தாலும் சரி, திருமணத்துக்கு முன்பு கர்ப்பமாக இருந்தாலும் சரி, அவருக்கு 18 வயதுக்கு கீழே இருந்தால், அவர் யாராக இருந்தாலும் சரி, மருத்துவர்களாகிய நாங்களும், போக்சோ சட்டப்படி இதை போலீசாரிடம் தெரியப்படுத்துவோம். இது மருத்துவர்களின் கடமை.
இதுவே 18 வயதை கடந்த ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு கருத்தரித்தால், அவர் அந்த கருவை கலைக்கலாமா என்றால் தாராளமாக கலைக்கலாம். அவர் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டத்தில் இடம் உண்டு. 18 வயதுக்கு மேல் யார் வேண்டுமானாலும் கருக்கலைப்பு செய்யலாம்.
கருக்கலைப்பு செய்வதற்கான சில வழிமுறைகள்?
ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிற இந்த கருத்தரித்தல் மற்றும் கருக்கலைப்பு பிரச்சினைகள் தான் ஒரு பெண்ணின் வாழ்க்கையில், குறிப்பாக இளம் பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. திருமணத்துக்கு முன்பு கர்ப்பம் தரித்தலும், அதை செய்கிற கருக்கலைப்பு முறைகளும் இளம்வயது பெண்களின் இறப்பு, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கிய பாதிப்புக்கு பெரிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் 1971-ம் ஆண்டு மருத்துவ கருக்கலைப்பு சட்டம் (எம்.டி.பி.) கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் கருக்கலைப்பு முறையானது. ஒரு வரையறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி18 வயதை தாண்டிய பெண்கள் கண்டிப்பாக கருக்கலைப்பு செய்யலாம். அதற்கு அவர்கள் திருமணம் ஆகி இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. திருமணத்துக்கு முன்பு அவர்கள் கருக்கலைப்பு செய்வதற்கு சட்ட ரீதியாக இடம் இருக்கிறது. இது தவறு அல்ல, கண்டிப்பாக பண்ணலாம்.
ஆனால் இந்த கருக்கலைப்பை யார் செய்ய வேண்டும்? எந்த சூழ்நிலையில் செய்ய வேண்டும்? என்ன முறைகளில் செய்ய வேண்டும் என்பதற்கான சில வழிமுறைகள் இருக்கிறது. தகுதி பெற்ற ஒரு மருத்துவர் தான் இந்த கருக்கலைப்பை செய்ய வேண்டும். அந்த மருத்துவர்கள், மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
கருக்கலைப்பு செய்வதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட எந்த மருத்து வரும் 18 வயதை கடந்த பெண்ணுக்கு திருமணமான பிறகு உருவான கருவையோ அல்லது திருமணத்திற்கு முன்பு ஏற்படுகின்ற கருவையோ கலைப்பதற்கு உரிமை உண்டு.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
உலக அளவில் அதிகரித்து வரும் கருக்கலைப்பு?
ஆனால் இன்றைக்கும் உலக அளவில் பார்த்தால், கருக்கலைப்பு என்பது மிகவும் அதிகரித்து வருகிறது. 45 வயதுக்கு கீழே உள்ளவர்களில் நான்கில் ஒரு பெண், ஏதாவது ஒரு காரணத்தால், தேவையில்லாத கர்ப்பம் என்று கருக்கலைப்பு செய்கிறார். இது திருமணமான பிறகு உருவாகும் கர்ப்பம் மட்டுமின்றி, திருமணத்துக்கு முந்தைய கர்ப்பம் உள்பட அனைத்துமே அடங்கும்.
இதில் 45 சதவீதமான பெண்கள் கருத்தரித்து 6 வாரத்தில் கருக்கலைப்பு செய்கிறார்கள். அதுவே கிட்டத்தட்ட 50 சதவீதமான பெண்கள் 10 முதல் 15 வாரத்துக்குள் கருக்கலைப்பு செய்கிறார்கள். ஒரு பெண் 20 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்வதில் எந்தவித தடையும் இல்லை.
இப்போது உள்ள ஒரு புதிய சட்ட திருத்தத்தின்படி சிறப்பு பிரிவாக, பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வது 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு வலுவான காரணம் இருக்க வேண்டும். கருவில் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது தாய்க்கு ஆபத்து ஏற்பட நேரிட்டாலோ அந்த பெண்களுக்கு 24 வாரத்திலும் கருக்கலைப்பு செய்யலாம்.
ஆனால் ஒவ்வொரு கருக்கலைப்பையும் செய்வதற்கு சில வரைமுறைகள் இருக்கிறது. 12 வாரத்துக்குள் இருக்கும் கருவை கருக்கலைப்பு செய்தால் அதற்கான பயிற்சி பெற்று தகுதி சான்றிதழ் வைத்துள்ள ஒரு மருத்துவர், எல்லா வசதிகளும் இருக்கின்ற ஒரு சரியான மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யலாம்.
ஆனால் அதுவே 12 வாரத்தை தாண்டிய கருவாக இருந்தால், அதை கருக்கலைப்பு செய்ய 2 மருத்துவர்கள் சான்றிதழ் வழங்க வேண்டும். இந்த கருவை ஏன் கருக்கலைப்பு செய்கிறார்கள்? அதற்கான காரணம் என்ன? இந்த கருவளர்ந்தால் கருவுற்ற பெண்ணுக்கு ஏதாவது பிரச்சினைகள் வரலாம், இதனால் அவர் மனதளவில் பாதிக்கப்படலாம், அவர்களின் குடும்பங்களில் பிரச்சினை ஏற்படக்கூடும், அதனால் அந்த பெண் பாதிக்கப்படலாம் என்று உறுதி செய்தால் மட்டுமே இதனை கருக்கலைப்பு செய்ய முடியும்.
மேலும் அந்த கரு வளரும்போது அந்த கருவுக்கு பிரச்சினை வரும். அது நல்ல கருவாக இல்லை, அந்த கரு வளர்ந்து குழந்தையாக பிறந்தாலும் ஆரோக்கியமாக வாழ முடியாது என்று அதை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கினால் இந்த கருவை கருக்கலைப்பு செய்யலாம்.
இந்த காரணங்கள் இல்லாமல் கண்டிப்பாக மற்ற எந்த காரணத்துக்காகவும் 12 வாரம் தாண்டிய கருவை ஒரு பெண்ணால் கருக்கலைப்பு செய்வது என்பது இயலாத காரியம். இதெல்லாம் பாதுகாப்பான, சட்ட ரீதியான கருக்கலைப்பு முறைகள். சரியான மருத்துவரிடம் சென்று பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்வது என்பது பாதுகாப்பான சட்டரீதியான கருக்கலைப்பு ஆகும்.
சீரான முறையில் கருக்கலைப்பு செய்தாலும் பிரச்சினைகள் ஏற்படலாம்:
அதே நேரத்தில் இந்த பாதுகாப்பான, சட்ட ரீதியான கருக்கலைப்பும் முழுமையான பாதுகாப்பு கொண்டது தானா என்று கேட்டால் அதிலும் பிரச்சினைகள் வரலாம். அனைத்து வித பரிசோதனைகளையும் செய்து, முக்கியமாக எல்லாவித அடிப்படை பிரச்சினைகளையும் சரி செய்து சீரான முறையில் சிகிச்சை அளித்து கருக்கலைப்பு செய்தால் கூட பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த பிரச்சினைகள் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். குறிப்பாக திருமணத்துக்கு முன்பு கர்ப்பம் அடையும் பெண்களுக்கு இந்த பாதிப்பானது மிகவும் அதிகமாக இருக்கிறது.
இன்றும், இளம்வயது பெண்களின் ஆரோக்கிய பாதிப்புக்கும், உயிர் இழப்புக்கும் பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படும் கருக்கலைப்பே மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறது என்பது வருந்தத்தக்க விஷயம். எனவே இந்த கருக்கலைப்பை எப்படி பாதுகாப்பாக செய்வது? பாதுகாப்பாக கருக்கலைப்பை செய்யும் போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது? இந்த பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
- கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல.
- கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது.
கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் 'கர்ப்ப ரோபோவை' உருவாக்கி வருகிறது.
சீன ஊடக அறிக்கைகளின்படி, கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல. இந்த கர்ப்ப ரோபோக்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்டுள்ளன.
செயற்கை அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட இந்த செயற்கை கருப்பை, மனித கருப்பை போலவே செயல்படுகிறது.
நிஜ வாழ்க்கையில், கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது.
கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

உண்மையில், இந்த செயற்கை கருப்பை ஒரு புதிய முறை அல்ல என்று டாக்டர் ஜாங் கூறினார்.
விஞ்ஞானிகள் முன்பு பயோ பேக் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை கருப்பையின் உதவியுடன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பெற்றெடுத்ததாக அவர் விளக்கினார்.
இந்த பயோ பேக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் கர்ப்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கர்ப்ப ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு தயாராக இருக்கும் என்றும், இதற்கு ரூ. 12.96 லட்சம் வரை செலவாகும் என்றும் ஜாங் கூறினார்.
- அந்த பெண்ணுக்கு பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து வந்தது.
- ஆனால் அந்த பெண்ணின் கருப்பை காலியாக இருந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 30 வயது பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத குழந்தை இருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது.
அந்த பெண்ணுக்கு பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து வந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. ஆனால் அந்த பெண்ணின் கருப்பை காலியாக இருந்தது. பின்னர் மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய பரிந்துரைத்தனர்.
பின்னர் கல்லீரலின் வலது பக்கத்தில் கரு கண்டுபிடிக்கப்பட்டது. 12 வார வயதுடைய கருவுக்கு வழக்கமான இதயத் துடிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கல்லீரலில் இருந்து வரும் இரத்த நாளங்கள் கருவுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இந்தியாவில் இதுபோன்ற முதல் வழக்கு இதுவாகும்.
இதுவரை, உலகில் இதுபோன்ற எட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த அரிதான நிலை இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது.
இதுபோன்ற கர்ப்பம் தாய்க்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. உடனடி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது கல்லீரல் சிதைவு அல்லது இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.
அந்தப் பெண் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். சிக்கலான அறுவை சிகிச்சையைத் திட்டமிட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- கடந்த மூன்று ஆண்டுகளாக இவரிடம் அந்த மாணவன் டியூஷன் பயின்று வந்துள்ளார்.
- மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் ஐந்து மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில், 14 வயது மாணவனால் 23 வயது டியூஷன் ஆசிரியை கர்ப்பமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 25 ஆம் தேதி டியூஷன் ஆசிரியையும் மாணவரும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர். நான்கு நாள் தேடுதலுக்குப் பிறகு செல்போன் சிக்னல் மூலம் குஜராத்-ராஜஸ்தான் எல்லைக்கு அருகே இருவரையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
டியூஷன் ஆசிரியை சூரத்தில் உள்ள அவரது வீட்டிலும், கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் சென்ற இடங்களிலும், சிறுவனுடன் பலமுறை உடல் உறவில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இவரிடம் அந்த மாணவன் டியூஷன் பயின்று வந்துள்ளார். கடந்த ஓராண்டாக இவர்கள் மிக நெருக்கமாக இருந்ததாகவும் இருவரும் பல மாதங்களாக உடல் ரீதியான உறவில் ஈடுபட்டதாக அப்பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் ஐந்து மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது. 14 வயது சிறுவன் தான் அந்த குழந்தையின் தந்தை என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய போலீசார், "தனக்கும் அந்த சிறுவனுக்கும் சிறந்த வாழ்க்கை அமைய, கருவை கலைக்க அப்பெண் விருப்பம் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் அனுமதி அளித்தவுடன் கருவை கலைக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். கருக்கலைப்புக்குப் பிறகு டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படும்" என்று தெரிவித்தனர்.
- குழந்தை பிறப்புக்கு வாடகைத்தாயை அமர்த்துவதில் பல்வேறு முறைகள் உள்ளன.
- சில ஆண்டுகளாக வாடகைத்தாய் முறை பிரபலம் அடைந்து வருகிறது.
அந்த காலத்தில் குழந்தை பாக்கியம் தாமதமாகும் பெண்கள், குழந்தை வேண்டி அரச மரத்தை சுற்றுவார்கள். சில தம்பதியர் வேறொருவரின் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பார்கள். இது இன்னும் வழக்கத்தில் இருந்தபோதிலும், செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்வதற்காக ஆஸ்பத்திரிகளையும், செயற்கை கருத்தரிப்பு மையங்களையும் பெண்கள் தற்போது நாடுகிறார்கள். ''தங்கள் குழந்தை, தங்கள் ரத்தம்'' என்ற உணர்வே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
அத்துடன் 'பதிலித்தாய்' எனப்படும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் போக்கும் சமீப காலமாக அதிகரித்திருப்பதை காணமுடிகிறது.
அது என்ன வாடகைத்தாய் முறை?...
''ஒரு பெண், விருப்பப்பட்டு முன் வரும் ஒரு தம்பதியின் குழந்தையை சுமந்து, அதை பெற்றெடுத்த பின் அந்த தம்பதியிடம் ஒப்படைக்கும் நடைமுறைக்கு பெயர்தான் வாடகைத்தாய் முறை'' என்று சட்டம் சொல்கிறது.
எளிமையாக சொல்வது என்றால், பஸ் நிலையத்திலோ, ரெயில் நிலையத்திலோ நம்மால் தூக்கிச்செல்ல முடியாத சுமையை சுமந்து செல்ல கூலித் தொழிலாளியை அமர்த்துகிறோம் அல்லவா? அதுபோல் தங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத தம்பதியர், தங்களுக்கு குழந்தை பெற்றுக்கொடுக்க ஒரு பெண்ணை அமர்த்திக்கொள்வதற்கு பெயர்தான் வாடகைத்தாய் முறை.
இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொடுக்கும் ஆஸ்பத்திரிகள் ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
* குழந்தை பிறப்புக்கு வாடகைத்தாயை அமர்த்துவதில் பல்வேறு முறைகள் உள்ளன. ஒரு பெண்ணின் கருப்பை கருவை தாங்கும் சக்தியின்றி பலவீனமாக இருந்தால், அந்த பெண்ணின் கருமுட்டையையும், அவரது கணவரின் உயிரணுவையும் எடுத்து சேர்த்து கருவை உருவாக்கி, ஒரு குறிப்பிட்ட நாளில் வாடகைத்தாயாக இருக்க சம்மதிக்கும் பெண்ணின் கருப்பையில் வைத்து விடுவார்கள். அங்கு குழந்தை வளரும். அந்த பெண் குழந்தையை பெற்றுக்கொடுத்ததும், அவரது வேலை முடிந்துவிடும். இந்த முறையில் அவர் குழந்தையை சுமந்தவர் மட்டுமே ஆவார். மரபியல் ரீதியாக அவருக்கும் குழந்தைக்கும் எந்த உறவும் கிடையாது. கருவை சுமக்கும்போது மட்டுமே குழந்தைக்கு தாயாக இருப்பார். தேவைப்பட்டால் சில காலம் அவர் அந்த தம்பதியினருடன் இருந்து குழந்தைக்கு பாலூட்டுவார். அவ்வளவுதான்.
* பெண் மலட்டுத்தன்மையுடன் இருந்தால், டாக்டர்கள் அவரது கணவரின் உயிரணுவையும் வாடகைக்தாயாக இருக்க சம்மதிக்கும் பெண்ணின் கருமுட்டையையும் சேர்த்து கருவை உருவாக்குவார்கள். பின்னர் அதை வாடகைத்தாய் தன் வயிற்றில் சுமந்து, குழந்தையை பெற்றுக்கொடுப்பார்.
* இதேபோல் சம்பந்தப்பட்ட தம்பதியரில் கணவரின் உயிரணு பலவீனமாக இருந்தால் அந்த பெண்ணின் கருமுட்டையையும் வேறொரு ஆணின் உயிரணுவையும் சேர்த்து கருவை உருவாக்கி வாடகைத்தாயின் கருப்பையில் வைத்து அவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
* இது தவிர இருவருமே குழந்தை பெறும் தகுதி இல்லாதவர்கள் என்றாலும் வேறொரு ஆணிடம் இருந்து உயிரணுவை பெற்று வாடகைத்தாயின் கருமுட்டையுடன் சேர்த்து செயற்கை முறையில் கருவை உருவாக்கி அவரது கருப்பையில் வைத்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
* இதேபோல் திருமணம் செய்து கொள்ளாத ஒரு ஆணோ அல்லது பெண்ணோ கூட இப்படி வாடகைத்தாய் மூலம் தங்களுக்கு ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த இரு முறைகளில் வாடகைத்தாயாக இருக்கும் பெண் மரபியல் ரீதியாகவும் குழந்தைக்கு தாயாக இருப்பார்.
வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொடுக்கும் பெண்ணுக்கு சம்பந்தப்பட்ட தம்பதியர் தங்கள் தகுதிக்கு ஏற்ப பணம் கொடுக்கலாம், பிற உதவிகள், வசதிகள் செய்து தரலாம். எதுவுமே கொடுக்காமலும் இருக்கலாம். சில நாடுகளில் பணம் கொடுப்பது சட்டப்படி குற்றம்; செல்லுபடி ஆகாது.
வாடகைத்தாயாக இருக்கும் பெண்கள் பணத்துக்காக குழந்தை பெற்றுக்கொடுத்தாலும் உளவியல் ரீதியாக அவர்கள் சில பிரச்சினைகளை சந்திப்பது உண்டு. தான் 10 மாதங்கள் சுமந்து பெற்ற குழந்தை எங்கோ ஒரு இடத்தில் இருக்கிறதே! அதன் முகத்தை கூட பார்க்க முடியவில்லையே! என்ற ஏக்கம் அவர்களுக்கு ஏற்படுவது உண்டு.
உடல் ரீதியாகவோ அல்லது மருத்துவ ரீதியாகவோ ஒரு பெண் கருத்தரித்து குழந்தை பெற முடியாத நிலையில் இருந்தால், அதை காரணம் காட்டி கணவன் அவளை விவாகரத்து செய்துவிடாமல் தடுப்பதற்காக பழங்காலத்திலேயே வாடகைத்தாய் முறை இருந்ததாக பாபிலோனிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வாடகைத்தாய் முறை அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.
இந்தியாவில் சமீபத்திய சில ஆண்டுகளாக வாடகைத்தாய் முறை பிரபலம் அடைந்து வருகிறது.
இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான செலவு குறைவு என்பதால், வெளிநாட்டினர் ஏராளமானோர் இங்கு வந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்துக்கொண்டே போனது. நிலைமை மோசமானதால், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டினருக்கு இனி சுற்றுலா விசா வழங்கப்படமாட்டாது என்று கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்த வாடகைத்தாய் முறையை பேராசை கொண்ட சில டாக்டர்களும், இடைத்தரகர்களும் பணம் பறிக்கும் ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டதால், அதை தடுக்கும் பொருட்டு வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி முதல் அமலுக்கு வந்த இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* வாடகைத்தாயாக உள்ள பெண்ணின் வயது 25 முதல் 35 வரை இருக்கவேண்டும்.
* சம்பந்தப்பட்ட தம்பதியின் நெருங்கிய உறவு பெண்கள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும். அதற்காக 3 முறை முயற்சி செய்யலாம்.
* வாடகைத்தாய் கர்ப்பம் தரிப்பதற்கு முன், பின் என 16 மாத கால காப்பீடு செய்ய வேண்டும். மருத்துவ செலவு கொடுக்கலாம்.
* ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும்.
* ஒரு பெண் பணத்துக்காக வாடகைத்தாய் ஆக முடியாது. வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு இந்தியாவில் தடை உள்ளது.
* வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் தம்பதி இந்தியராக இருப்பதோடு, திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கவேண்டும்.
* தம்பதியில் மனைவியின் வயது 23-ல் இருந்து 50-க்குள் இருக்க வேண்டும். கணவரின் வயது 26-ல் இருந்து 55-க்குள் இருக்க வேண்டும்.
* வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி அல்லது அவர்கள் இருவரில் ஒருவர் குழந்தைபேறுக்கு தகுதியான உடல்நிலை இல்லாதவராக இருக்க வேண்டும்.
* தம்பதிக்கு ஏற்கனவே குழந்தை இருக்கக்கூடாது. தத்துக்குழந்தையோ அல்லது ஏற்கனவே வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்ட வேறு குழந்தையோ இருக்கக்கூடாது.
* தம்பதிக்கு இயற்கையான முறையில் பிறந்த குழந்தை இருந்து அது குணப்படுத்த முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ, உடல் நலம் மனநலம் ஆகியவற்றில் குறைபாடு இருந்தாலோ, மாவட்ட மருத்துவ வாரியத்திடம் அதற்கான சான்றிதழ் பெற்று தாக்கல் செய்ய வேண்டும்.
* திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்கள், பிரிந்து வாழும் தம்பதி, தன் பாலின உறவாளர்கள், கணவன் அல்லது மனைவி இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், ஏற்கனவே குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி இல்லை.
* வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொடுக்கும் ஆஸ்பத்திரிகள் அரசிடம் பதிவு செய்ய வேண்டும்.
* வாடகைத்தாய் முறையை வணிக ரீதியாக பயன்படுத்துபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
இதுபோன்று பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்று உள்ளன.
இந்த சட்ட திருத்தத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. அப்பாவி ஏழை பெண்களை வாடகைத்தாயாக பயன்படுத்தி, குழந்தை பேறுக்காக ஏங்கும் தம்பதிகளிடம் இருந்து ஆஸ்பத்திரிகள் பணம் கறப்பது குறையும் என்று சட்ட திருத்தத்தை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள்.
''நெருங்கிய உறவு பெண்கள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க முடியும் என்பது உளவியல் ரீதியாக சில சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. யாரோ ஒரு பெண் என்றால் குழந்தையை பெற்றுக்கொடுத்துவிட்டு போய்விடுவார். உறவுப்பெண் என்றால் அவர் தான் சுமந்து பெற்ற குழந்தையை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு ஏற்படும். இது அவளுக்குள் ஒரு பாசப்போராட்டத்தை ஏற்படுத்துவதோடு, குழந்தையின் பெற்றோருக்கு தர்மசங்கடமான சூழ்நிலையையும் உருவாக்கும். மேலும் குழந்தை வளர வளர அதன் மனதிலும் பாதிப்புகள் ஏற்படலாம்'' என்பது சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்களின் கருத்து.
தம்பதிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்று மாவட்ட மருத்துவ வாரியத்திடம் இருந்து சான்றிதழ் வாங்கி வரவேண்டும் என்று கூறுவது அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவு வழங்கியுள்ள தனியுரிமைக்கு எதிரானது என்று சட்ட நிபுணர் அனில் மல்கோத்ரா கூறுகிறார்.
வாடகைத்தாய் முறை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் என்றால், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொடுக்கும் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள டாக்டர்கள் முன்வரமாட்டார்கள் என்று இந்த துறையின் நிபுணரான டாக்டர் நாராயண பட்டேல் கூறி இருக்கிறார்.
- தற்போது 'சிசேரியன்' பிரசவங்கள் அதிகரித்து வருகிறது.
- உடல் ஆரோக்கியமாக இருந்தால் சிசேரியனைத் தவிர்க்கலாம்.
கர்ப்பம் தரித்த பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சுகப்பிரசவம் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், தற்போது 'சிசேரியன்' எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் நடக்கும் பிரசவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்கள் மற்றும் தவிர்ப்பதற்கான வழிகள் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மற்றும் உதவி பேராசிரியர் அர்ச்சனா கந்தசாமி.
சுகப்பிரசவம்: கருப்பையில் வளரும் குழந்தை, உரிய காலத்தில் தாயின் இடுப்பு எலும்பைத் தாண்டி கர்ப்பப்பையைக் கடக்கும். பிறகு கர்ப்பப்பை வாயைக் கடந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதுவே சுகப்பிரசவம்.
சிசேரியன்: குழந்தை வெளியேறும் இந்தப் பாதையில் தடை ஏற்படுதல், பிரசவத்தின் போது உடல் நலம் காரணமாக, தாய் அல்லது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகுதல், உரிய காலத்தில் பிரசவ வலி வராமல் இருத்தல் போன்ற காரணங்களால் அறுவை சிகிச்சை முறையில் குழந்தையை வெளியே எடுப்பார்கள். இதுதான் சிசேரியன்.
தற்போது சிசேரியன் அதிகரிக்க காரணம் என்ன?
தாமதமான திருமணம் மற்றும் குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடுவ தால் 35 வயதுக்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் அதிகரித்து உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், ஊட்டச்சத்து குறைவு போன்றவற்றால் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பிரசவத்தில் ஏற்படும் பிரச்சினையே சிசேரியன் அதிகரிக்கக் காரணம். இது தவிர கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம், பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல் காரணமாகவும் சிசேரியன் செய்ய நேரிடும்.
சுகப்பிரசவமா, சிசேரியனா என்பதை மருத்துவர்கள் எப்போது தீர்மானிக்கிறார்கள்?
கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தையின் உடல்நிலை மருத்துவரால் முற்றிலுமாக பரிசோதனை செய்யப்படுகிறது. அதைப் பொருத்தே சிசேரியன் செய்வது திட்டமிடப்படுகிறது. அதே சமயம், கடைசி நேரத்தில் சிசேரியன் தேவைப்படும் சூழலும் ஏற்படும். இரட்டைக் குழந்தையாக இருந்தால் பெரும்பாலும் சிசேரியன் சிறந்த வழியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது, தாய் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது.
முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்தால், அடுத்த குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்பு உள்ளதா?
முதல் குழந்தை பிறப்பதற்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, கர்ப்பப்பையை குறுக்கே வெட்டி தையல் போட்டிருந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கருத்தரிக்கையில் சுகப்பிரசவமாகும் வாய்ப்பு உண்டு.
சிசேரியனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
உடல் ஆரோக்கியமாக இருந்தால் சிசேரியனைத் தவிர்க்கலாம். யோகா, உடற்பயிற்சி, நடைபயிற்சி எப்போதும் அவசியம். உணவு முறையிலும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். எண்ணெய் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.
- துரித உணவுவகைகளை தவிர்ப்பது மூலநோயாளிகளுக்கு நல்லது.
- ஆமணக்கு எண்ணெய் மூல நோயில் நன்மை தருவதோடு, தாய்பாலை பெருக்கவும் செய்யும்.
பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னரும், காலம் முழுவதும் தொடர்ந்து தொந்தரவு ஏற்படுத்தும் நோய்நிலைகளுள் முக்கிய இடம் பிடிப்பது ஆசனவாய் சார்ந்த நோய்கள் தான். அதில் மூலநோயின் வலியும், வேதனையும் வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எதிரிக்கு கூட இந்த வேதனை வரக்கூடாது என எண்ணுவார்கள் இந்நோயால் அவதிப்படுபவர்கள்.
மாறிப்போன உணவுப்பழக்க வழக்கமும், மறந்து போன பாரம்பரிய வாழ்வியல் நெறிமுறைகளும் மூலநோய் உண்டாவதற்கு முக்கிய காரணமாக உள்ளன என்பது ஒருபுறம். மறுபுறம் பார்த்தால், பெண்களுக்கு பிரசவ காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் கருவில் உள்ள மகவு கருப்பையில் வளர்ந்து அதன் பின்னே உள்ள மலக்குடலை அழுத்துவதால் பெண்களுக்கு மூலநோய் போன்ற ஆசனவாய் தொடர்பான நோய்கள் ஏற்படக் காரணமாக அமைகின்றது.
கிட்டத்தட்ட 40 சதவீதம் பெண்கள் பிரசவத்தின் போதும், பிரசவத்தின் பின்னரும் மூல நோய்குறிகுணங்களால் அவதியுறுகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. இந்த வருத்தமளிக்கும் புள்ளி விவரம் பல ஆண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. நோயின் தாங்க முடியாத குறிகளோடு, பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டி, குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளும் பக்குவம் பெண்களுக்கு மட்டுமே உரியது. இத்தகைய குணத்திற்கே பெண்களுக்கு விருதுகள் பல குவியவேண்டும். ஆனால் எதையும் எதிர்நோக்காமல் அன்றாட வாழ்வினை நகர்த்துவது அவர்களுக்கே உரிய தனிச்சிறப்பு.
'குழந்தை பிறந்து நாலு நாள் தான் ஆச்சு, மலம் கழிக்கும் போது ரத்தம் சிதறுகிறது அதோடு வலியும் எரிச்சலும் அதிகமா இருக்கு' என்று மருத்துவரை அணுகும் பெண்கள் பலர் இத்தகைய வேதனையை எண்ணித் துடிப்பது அதிகம். பிரசவத்திற்கு பின்னர் கருப்பையில் இருந்து வெளியேறும் குருதியுடன், மூலநோயில் வெளிப்படும் குருதியும் ஒன்று சேர்ந்து பெண்களை ரத்த சோகை நோய்க்கு அடிமையாக்கி இன்னும் உடலை சோர்வாக்கும். இந்த மன வேதனையால் தாய்ப்பால் சுரப்பும் குறையக்கூடும்.
சித்த மருத்துவக் கூற்றுப்படி வாதமும்,பித்தமும் மலக்குடலில் ஒன்றிணைந்து மூல நோயை உண்டாக்குகிறது. இதனை 'அனில பித்த தொந்தமலாது மூலம் வராது' என்ற தேரையர் சித்தரின் நோய்களுக்கான முதல் காரணப் பாடல் வரிகளால் அறியலாம். அதாவது மலக்குடலில் சேரும் அதிகப்படியான வாயுவும், சூடும் ஒன்றிணைந்து மலச்சிக்கலையும், நோய்நிலையையும் உண்டாக்கி குறிகுணங்களை தோற்றுவிக்கிறது.
ஆகவே வாதம்,பித்தம் தணிக்குப்படியான அதாவது வாயுவையும், சூட்டையும் குறைக்கும்படியான சித்த மருத்துவம் கூறும் மூலிகைகளை பயன்படுத்த மூல நோயில் நல்ல தீர்வு எட்ட முடியும். சோற்றுக்கற்றாழை, கடுக்காய், திரிபலை, நிலாவாரை, குங்கிலியம், தொட்டாற்சிணுங்கி, கருணை, பிரண்டை, வெங்காயம், துத்தி போன்ற பல எளிய மூலிகைகள் மூலநோய்க்கு பயன்தருவதாக உள்ளன.
சுவைகள் தான் நம் உடலின் ஆரோக்கியத்தின் அடிப்படை. ஆறு சுவைகளும் நம் அன்றாட உணவில் சேர்க்க வேண்டுவது அவசியம். இனிப்பையும்,காரத்தையும் அதிகம் கொண்டாடும் நாம் மற்ற சுவைகளை கொண்டாடுவதில்லை. சுவை மருத்துவம் என்பது சித்த மருத்துவத்தின் ஒரு அங்கம். ஆறு சுவைக்கும், உலகில் உள்ள பஞ்ச பூதங்களுக்கும், உடலில் உள்ள வாதம்,பித்தம்,கபம் ஆகிய மூன்று குற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை சித்த மருத்துவம் கூறுகின்றது. ஆக, ஆரோக்கியத்திற்கு அடித்தளமிடும் ஆறு சுவைகளும் கொண்ட ஒன்று எளிய சித்த மருத்துவ மூலிகையான 'கடுக்காய்' தான். இந்த கடுக்காய் மூல நோய் வகைகள் அனைத்திற்கும் நல்ல பலன் தரக்கூடியது.
மூலநோயில் மகத்துவமிக்க மூலிகையான துத்தி இலை என்ற கீரையை அறிந்திடாத தமிழ் சமூகம் இல்லை எனலாம். துத்தி கீரை நெய்விட்டு வதக்கி உணவில் சேர்த்துக்கொள்வது மூலநோயில் உண்டாகும் வீக்கத்தை குறைத்து அதன் வலி, வேதனையை போக்கும். பிரண்டை எனும் எளிய மூலிகையும் மூல நோயில் நிவாரணம் தரும். பிரண்டையை நெய் விட்டு வதக்கி உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். உணவில் நெய் சேர்த்துகொள்வது என்பதும் வாதம், பித்தம் இரண்டையும் சமனாக்கும் எளிய வழி.
சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள திரிபலை எனும் மருந்து வீக்கத்தை குறைப்பதுடன் ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தி நோய்நிலையை குறைக்கும். இதனை மோரில் கலந்து எடுத்துக்கொண்டால் பலன் தரும். தொட்டால் சிணுங்கி என்ற தொட்டால் இலைகள் சுருங்கும் தன்மையுடைய மூலிகை இன்றைய தலைமுறையினர் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதன் இலைகள் பல ஆண்டுகளாக சித்த மருத்துவத்தில் மூலநோய்க்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் வாதத்தையும்,பித்தத்தையும் குறைக்க அவ்வப்போது எண்ணெய் குளியல் எடுத்தலும்,பேதி மருந்துகளை எடுத்தலும் மூல நோயின் குறிகுணங்களுக்கு நிவாரணம் தரும். சித்த மருத்துவம் கூறும் எளிமை வழிமுறையாக ஆமணக்கு எண்ணெய்யை பாலில் கலந்து இரவு வேளையில் எடுத்துக்கொள்ள வாதம், பித்தம் இரண்டும் குறைந்து நோய்குறிகளை குறைக்கும். மூலநோயில் எரிச்சலால் அவதியுறும் பெண்கள் கற்றாழை சாறுடன், ஆமணக்கு எண்ணெய் சேர்த்து எடுத்துக்கொள்ள பித்தம் தணிந்து எரிச்சல் குறையும். இதனை 'குமரி எண்ணெய்' என்று சித்த மருத்துவம் கூறுகின்றது.
மூல நோயில் உண்டாக்கும் ரத்தப்போக்கினை கட்டுக்குள் கொண்டு வர துவர்ப்பு சுவையுள்ள பொருட்களை அதிகம் உணவில் சேர்க்கலாம்.
ழைப்பூ, அத்திப்பிஞ்சு, மாதுளைப்பிஞ்சு, பிஞ்சு காய்கறிகள் இவை நல்ல பலனைத் தரும். இம்பூறல் எனும் மூலிகை ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தும் சிறந்த மூலிகை. இதனை 'இம்பூறல் காணாது ரத்தம் கக்கி செத்தான்' என்ற சித்த மருத்துவ பழமொழியால் அறியலாம். மேலும் சங்கு,சிலாசத்து, படிகாரம், நாகம் ஆகிய உபரச,உலோகப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் பற்ப மருந்துகளும் இந்நோய் நிலையில் உதவும்.
மூல நோயால் அவதியுறும் பெண்கள் குடலில் வாயுவையும், பித்தத்தையும் அதிகரிக்காத உணவுமுறைகளை பின்பற்றுவது அவசியம். வாழை,உருளை, பட்டாணி வகைகள் இவை குடலில் வாயுவையும், அசைவ உணவுகள், டீ,காபி போன்றவை குடலில் பித்தத்தையும் அதிகரித்து நோய்நிலையை அதிகரிக்கும். ஆகவே பெண்கள் அவரவர் உடல் நிலைக்கு பொருந்தும்,பொருந்தாத உணவுகளை அறிந்து எடுத்துக்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும். கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். இது மூலம், ஆசன வெடிப்பு ஆகிய நோய்நிலைகளில் நற்பலன் தரும். இதனை சித்த மருத்துவம் 'மண் பரவு கிழங்குகளில் கருணை இன்றி புசியோம்' என்று குறிப்பிடுகிறது.
சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள கருணைக்கிழங்கு லேகியமும், தேற்றான் கொட்டை லேகியமும் மூல நோயால் அவதியுறும் பெண்களுக்கு பெரிதும் உதவும். இதனை இன்னும் சில சித்த மருந்துகளோடு ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டால் நோய்நிலையில் மாற்றம் வரும். மலச்சிக்கலை தீர்க்க ஆமணக்கு எண்ணெய், நிலாவரை சூரணம், கடுக்காய் சூரணம்,சிவதை சூரணம் ஆகிய சித்த மருந்துகள் உதவும்.
ஆமணக்கு எண்ணெய் மூல நோயில் நன்மை தருவதோடு, தாய்பாலை பெருக்கவும் செய்யும். இது 'குழந்தைகளை தாய்போல் வளர்க்கும்' என்று சித்த மருத்துவம் கூறுகிறது. மலச்சிக்கலை தீர்க்கவும், உட்சூட்டைக் குறைக்கவும் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பகல் நேரங்களில் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள நார்சத்து மூலநோயில் நன்மை பயப்பதோடு, தாய்ப்பாலை அதிகரிக்க உதவும்.
எண்ணெய் தோய்ந்த பொருட்களும், மசாலா மிதக்கும் பொருட்களும், அசைவ உணவுகளும் குடலில் வாதம் மற்றும் பித்தத்தைக் கூட்டி மூல நோயாளிகளின் வலியை,வேதனையை பெருக்கி மிகுந்த மன அழுத்தத்தில் ஆழ்த்தும். ஆகவே நவீன வாழ்வியலை விடுத்து, துரித உணவுவகைகளை தவிர்ப்பது மூலநோயாளிகளுக்கு நல்லது.
மூலநோய் எரிச்சலுக்கு எளிய வீட்டு வைத்திய மருந்து மோர் தான். மோரை உணவுப்பொருளாக பார்க்காமல் மருந்தாக பார்ப்பது சித்த மருத்துவம். அதனை மூல நோயின் எரிச்சலால் அவதிப்படும் பெண்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். வாரம் இருமுறை எண்ணெய் குளியல் எடுப்பதும் நல்லது. எளிமையாக சீரகம் சேர்த்து காய்ச்சிய நல்லெண்ணெய்யை பயன்படுத்த நோய்க்காரணத்தை குறைத்து நன்மை பயக்கும். எரிச்சல் உள்ளவர்கள் அவ்வப்போது சீரகம் அல்லது சோம்பு இவற்றில் ஒன்றை கசாயமிட்டு குடிக்க குறிகுணங்கள் விரைவில் மாறும். மலம் கழித்த பின் சிட்ஸ் பாத் எடுக்க திரிபலை சூரணம் பயன்படுத்தலாம். நார்சத்து அதிகமுள்ள பிஞ்சு காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக்கொள்வது மலச்சிக்கலை போக்கி மூலநோய் மற்றும் ஆசனவெடிப்பு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
மூலக்குடோரி தைலம் என்ற சித்த மருந்தினை பயன்படுத்துவது மூலநோய்க்கு அறுவை சிகிச்சை போன்றது. அதாவது கடுக்காய் பிஞ்சும், ஆமணக்கு எண்ணெய்யும் சேர்ந்தது தான் இந்த மருந்து. மிக எளிய மருத்துவ முறைகளே சித்த மருத்துவத்தில் பல்வேறு வியாதிகளுக்கு நல்ல பலன் தரும் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். குங்கிலிய வெண்ணெய் எனும் சித்த மருந்து மூல நோயின் எரிச்சலை போக்கும்,உட்சூட்டினை நீக்கும். இதில் சேரும் குங்கிலியம் எனும் மூலிகைப்பிசின் பித்தத்தை குறைத்து வீக்கத்தை குறைக்கும்.
மூல நோயால் அவதியுறும் பெண்கள் சித்த மருத்துவம் கூறிய ஆசனப் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். பாலாசனம், பாவன முக்தாசனம், வஜ்ராசனம், விபரீத கரணி, பத்த கோணாசனம், அர்த்த மச்சேந்திராசனம், ஹாலாசனம் ஆகிய ஆசனப்பயிற்சிகளை மேற்கொள்ள அபானவாயு வெளியேறி மூல நோயின் வேதனையை குறைக்கும். அதோடு சீரணத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலையும் போக்கும். அத்துடன் இடுப்பு தசைப் பயிற்சி செய்வதும் நல்லது.
மூல நோயின் பெரும்பாலான அறிகுறிகள் குழந்தை பிறப்புக்கு பின்னர் தன்னிச்சையாகவே பல பெண்களுக்கு குறைந்துவிடுகிறது. உணவில் நார்ச்சத்து அதிகரிப்பதன் மூலமும், மலச்சிக்கலை போக்குவதன் மூலமும் இந்த நோய் நிலையின் குறிகுணங்களில் நல்ல முன்னேற்றம் பெற முடியும்.
காலை விரதமும், அசைவ உணவுகளை எடுத்துக்கொள்வதும், தினசரி ஒரு லிட்டருக்கு குறைவான நீராகாரங்களை எடுத்துக்கொள்வதும், உணவில் நார்ச்சத்துள்ள பொருட்களை சேர்த்துக் கொள்ளாததும் மூலநோயில் தாபிதத்ததை உண்டாக்கி குருதிப்போக்கை உண்டாக்குவதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இந்த ஆய்வுமுடிவுகள் கூறுவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்த மருத்துவம் கூறிவிட்ட மூலநோய்க்கான காரணமுறைகளோடு பொருந்துவது என்பது ஆச்சர்யத்திற்குரியது. ஆக சித்த மருத்துவம் கூறும் வழிமுறைகளை பின்பற்றி வாழ்தலே அடுத்த தலைமுறையை நோயிலிருந்து காத்து மகிழ்ச்சியான வளமான வாழ்விற்கு அடித்தளமிடும்.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com
- சிசேரியன் அதிகரித்து இருப்பதாகப் பல புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
- அவசர கால சிசேரியன்(Emergency Cesarean) என்று பெயர்.
இயற்கையான முறையில் பிரசவம் நிகழும்போது, நேரம் அதிகமாக அதிகமாக, பிரசவ வலி அதிகரித்து, கருப்பை வாய் அகலமாக விரிந்து, குழந்தை வெளியில் வரும் அளவுக்குத் திறக்கும். இந்த மாதிரியான முன்னேற்றங்கள் ஏற்படாமல் போகும்போது, மருந்துகள் கொடுத்து இயற்கை பிரசவத்துக்கு முயற்சி செய்தபிறகும், பிரசவத்தில் சரியான முன்னேற்றங்கள் இல்லை எனும்போது, சிசேரியன் தேவைப்படும். மூன்றில் ஒரு பங்கு சிசேரியன்கள் இந்தக் காரணத்துக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன.
குழந்தைக்கு மூச்சுத்திணறல்குழந்தையின் கழுத்தைத் தொப்புள் கொடி சுற்றியிருந்தால், கருப்பையின் வாய்ப்பகுதி வழியாக முதலில் தொப்புள்கொடி வெளியில் வந்துவிட்டால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். கருவில் குழந்தையைச் சுற்றியுள்ள திரவம் மிகவும் குறைவாக இருந்தாலோ, மிகவும் அதிகமாக இருந்தாலோ, குழந்தை கருப்பையில் நெடுக்குவாட்டத்தில் படுத்திருந்தாலோ குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். அ்ப்போது இனியும் காத்திருப்பது ஆபத்து என அறியப்பட்டால், சிசேரியன் அவசியப்படலாம். பெரும்பாலான சிசேரியன்கள் இந்தக் காரணத்துக்காகவே செய்யப்படுகின்றன.
குழந்தையின் அளவும் நிலைமையும் உயரம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு இடுப்பெலும்பின் துவாரம் சற்றே குறுகலாக இருக்கும். குழந்தை அதன் வழியாகப் புகுந்து வெளியில் வர இயலாமல் போகும் அல்லது குழந்தையின் தலை பெரிதாக இருக்கும். சில நேரங்களில் குழந்தையின் தலை மேலேயும், கை, கால், பிட்டம் கீழேயும் இருக்கும் அல்லது வெளியில் வர முடியாதபடி தலை சற்றே சாய்ந்தபடி இருக்கும். இம்மாதிரியான நேரங்களில் இயற்கை பிரசவத்தில் சிக்கல்கள் தோன்றலாம் என்பதால், சிசேரியன் செய்யப்படும்.
பிரசவ நேரத்தில் குழந்தையின் தலைக்கு முன்னால் நஞ்சுக்கொடி இருந்தால், குழந்தை வெளியில் வருவதைத் தடுத்துவிடலாம். குழந்தை வெளியில் வருவதற்கு முன்பே அது கருப்பையை விட்டுத் திடுதிப்பென்று துண்டிக்கப்படலாம். அப்போது அளவுக்கு மீறிய ரத்தப்போக்கு ஏற்படலாம். இந்த நிலைமைகளில் சிசேரியன்தான் கைகொடுக்கும்.
- காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த காரணத்தினால் சுஷ்மிதா 7 மாத கர்ப்பமாகி உள்ளார்.
- வீட்டில் தனியே இருந்த சுஷ்மிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேப்பலம் பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரது மகன் 24 வயதான நரேஷ் குமார்.
இவர் பி.காம் படித்து முடித்துவிட்டு திருவாரூரில் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகள் சுஷ்மிதா வயது 21 என்பவருக்கும் கல்லூரி படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சுஷ்மிதாவின் பெரியம்மா வீடு நரேஷ் குமாரின் வீட்டின் அருகில் உள்ளதால் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சுஷ்மிதா இளங்கலை வரலாறு முடித்துவிட்டு தற்போது பி.எட் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த காரணத்தினால் சுஷ்மிதா 7 மாத கர்ப்பமாகி உள்ளார்.
இந்த விவகாரம் சுஷ்மிதாவின் வீட்டிற்கு தெரியவர அவர்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சுஷ்மிதா நரேஷ்குமார் வீட்டிற்கு வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் பஞ்சாயத்து பேசி காதலர்கள் இருவரையும் மாலை மாற்றிக் கொள்ள செய்துள்ளனர். தொடர்ந்து பிப்ரவரி 12ஆம் தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது எனவும் முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து சுஷ்மிதா நரேஷ் குமாரின் வீட்டில் கடந்த ஒன்றரை மாதமாக தங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் மூன்று நாட்களில் திருமணம் நடக்கவிருப்பதால் திருமணத்திற்கு தேவையான துணி மற்றும் தாலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக நரேஷ்குமாரின் அம்மா மற்றும் உறவினர்கள் திருவா ரூருக்கு சென்றுள்ளனர்.
அப்போது வீட்டில் தனியே இருந்த சுஷ்மிதா வீட்டிற்கு பின்புறம் உள்ள கூரைக் கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெளியில் சென்று திரும்பி வந்து பார்த்த நரேஷ் குமார் அழுது கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சுஷ்மிதாவை மீட்டுள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து கொரடாச்சேரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இது கொலையா அல்லது தற்கொ லையா என்கிற கோணத்தில் காவல்துறையினர் நரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று நாட்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் பெண்ணின் பெற்றோர் கதறி அழுததும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- நாமக்கலில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
- இந்த நிலையில் கோவை மாணவியிடம் நெருங்கி பழகிய லட்சுமணன், அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.
நாமக்கல்:
நாமக்கலில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
கோவையில் உள்ள பிரபல பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவர் இந்த போட்டியில் பங்கேற்க நாமக்கல் வந்திருந்தார். அதே போட்டியில் பங்கேற்க மாணவர் ஒருவரை தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பயிற்சியாளர் லல் கோத் லட்சுமணன் (வயது 24) என்பவர் அழைத்து வந்திருந்தார்.
இந்த நிலையில் கோவை மாணவியிடம் நெருங்கி பழகிய லட்சுமணன், அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். இந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதை அடுத்து நடந்த சம்பவங்களை கேட்டு அறிந்த பெற்றோர், நாமக்கல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் பூர்ணிமா மற்றும் போலீசார் தெலுங்கானா மாநிலம் சென்று அங்கு உள்ள நல்கெண்டா மாவட்டம் எல்லாபுரம் கிராமத்தில் இருந்த பயிற்சியாளர் லட்சுமணனை கைது செய்தனர். பின்னர் நாமக்கல் அழைத்து வந்த அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.
- மருத்துவ பயன்களை 'மாதுளை மணப்பாகு' அள்ளிக்கொடுக்கும்.
- இடுப்பு பகுதிகளை வன்மையாக்க 'உளுந்து தைலம்' என்ற சித்த மருந்து நற்பலன் தரும்.
"வைத்தியர் ஐயா, புதுசா கல்யாணமான என் பொண்ணு வாந்தி வாந்தியா எடுத்து, மயக்கம் போட்டு விழுந்துட்டா, நீங்க தான் வந்து என்னனு பாத்து நல்ல செய்தியா சொல்லணும்" என்று திருமணமான புதுமணப்பெண்ணின் வாந்தி, பித்த வாந்தியா? அல்லது கர்ப்ப வாந்தியா? என்று நாடி பார்த்து கணித்து சொல்லும் காலம் மலையேறிவிட்டது. இனி அதைப்போன்ற காட்சிகளை பாக்கியராஜ் படங்களில் தான் பார்க்க முடியும். நவீன அறிவியல் அசுர வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ளும் பரிசோதனை கிட் வைத்து மாதந்தோறும் பரிசோதனை செய்து அவர்களே உறுதி செய்துகொள்வது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது.
திருமணமான அடுத்தடுத்த மாதங்களில் சிறுநீர் சோதனை அட்டையில் இரட்டை கோடு வந்ததும் தம்பதிகளுக்கு அளவளாவிய மகிழ்ச்சி. பெண்கள் தம் வயிற்றில் கருவை சுமப்பதில் தான் (மகப்பேறு காலம்) அவர்களுக்கு உச்சகட்ட ஆனந்தம். அவர்களுக்கு தாய்மை மிகப்பெரிய பரிசு. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாயாக இருப்பது என்பது மிகச்சிறந்த உணர்வு. அத்தகைய மகப்பேறு காலத்தில் அவர்கள் சமாளிக்கும் உடல் உபாதைகள் ஏராளம். மகப்பேறு காலத்தின் முதல் 3 மாதங்களில் மசக்கை எனும் கர்ப்பகால வாந்தியை சமாளிப்பது பலருக்கு மிகக்கடினம்.
சிலருக்கு இந்த மசக்கை கர்ப்பகாலம் முழுவதும் குமட்டி, குமட்டி வாந்தி எடுக்கும் நிலை, மகளிரை துன்புறுத்தும். கர்ப்ப காலத்தில் சுரக்கும் அதிகப்படியான ஹார்மோன் முக்கியமாக பீட்டா-எச்சிஜி எனும் சுரப்பு அதிகரிப்பால் இந்த மசக்கை உருவாகும். திருமணமான பெண்கள் மாதவிலக்கு தள்ளி போவதுடன் இந்த மசக்கை உண்டாவதை கர்ப்ப காலத்தின் அடையாளமாக கொள்ளலாம். உண்ட உணவு சிறிது கூட வயிற்றில் தங்காமல் அப்படியே வாந்தியாகி பெண்களை சோர்வடையச்செய்யும். அதற்கான தீர்வை தேடுபவர்கள் ஏராளம்.
கர்ப்ப காலத்தில் மருந்துகளை கட்டுப்பாடோடு பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையை உலக அளவில் விடுத்த முதல் நிகழ்வு 1960 களில் நடந்த தாலிடோமைடு என்ற மருந்தால் ஏற்பட்ட விபரீதம். கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்தது. என்னவெனில் கர்ப்பகாலத்தில் ஏற்படும் மசக்கைக்காக பரிந்துரைக்கப்பட்ட இந்த மருந்தால் ஜப்பான், கனடா, ஸ்வீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பிறந்த சிசுக்கள் பலவும் கை,கால் குறைபாடுள்ளவையாக இருந்தது குறிப்பிடத்தக்க வருத்தம் தரும் நிகழ்வு. ஆனால் அவர்களுக்கு சித்த மருத்துவம் தரும் எளிய மருந்து 'மாதுளை மணப்பாகு'.
சித்த மருத்துவ கணிப்புப்படி அதிகரித்த பித்தம் ஒன்றிணைந்து, இந்த மசக்கையை உண்டாக்குவதால் மாதுளை பித்தத்தை குறைத்து வாந்தியை நிறுத்தும் தன்மை உடையது. இது மிகவும் பாதுகாப்பானது. மாதுளையில் அதன் நிறத்திற்கு காரணமான அதிகப்படியான ஆன்தோசயனின் நிறமிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியத்தையும் நல்ல போஷாக்கையும் அளிக்கும் மாதுளம் பழம் என்பது பலரும் அறிந்தது. அதனைக் கடந்து கர்ப்பகாலத்தில் மாதுளை பழச்சாற்றினை எடுத்துக்கொள்ள பிறக்கும் குழந்தை அழகாகவும்,புத்தி தெளிவாகவும் பிறக்கும் என்பது வாய்மொழி செய்தி அந்த வரிகளை உறுதி செய்கின்றன நவீன அறிவியலின் சில ஆய்வுகள்.
மாதுளையில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் தன்மையுள்ள பாலிபினோலிக் வேதிப்பொருட்கள் உடல் உறுப்புகளுக்கு நன்மையையும் தோலிற்கு அழகையும் கொடுக்கக்கூடியது. அதில் உள்ள வேதிப்பொருட்களால் கர்ப்பகாலத்தில் கருவின் மூளையில் ஏற்படும் காயங்களை தடுத்து, புத்தி தெளிவை உண்டாக்குவதாக எலிகள் மீது நடத்திய ஆய்வுமுடிவுகள் கூறுவது சிறப்பு. மேலும் நஞ்சுக்கொடியின் அழுத்தத்தை குறைத்து, தடைபட்ட கருவளர்ச்சியை அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வளவு மருத்துவ பயன்களை 'மாதுளை மணப்பாகு' அள்ளிக்கொடுக்கும்.
மாதுளை மட்டுமல்லாமல் மசக்கையில் பலனளிக்கும் பல மூலிகை கடைசரக்குகள் உள்ளது. மசக்கையில் இருந்து விடுபட இஞ்சியை அவ்வப்போது நீரில் அல்லது பாலில் சேர்த்து கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளலாம். பல வெளிநாடுகளில் கூட 'மார்னிங் சிக்னஸ்' எனப்படும் மசக்கை வாந்தியை கட்டுப்படுத்த இஞ்சியை மருந்தாக்கி பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பாலில், ஏலக்காய் சேர்த்து கொதிக்கவைத்து எடுத்துக்கொண்டாலும் வாந்தி குறையும். டீ, காபிக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். புதினா இலைகளை தேநீராக்கி குடிப்பதன் மூலமும் பலன் பெறமுடியும். கர்ப்ப காலத்தில் மசக்கை வாந்தியால் ஏற்படும் சத்துக்கள் இழப்பையும், கருவில் வளரும் மகவுக்கு தேவையான போஷாக்கையும் ஈடுகட்ட இரும்புசத்து மாத்திரைகளையும் பாதுகாப்பான சத்துமருந்துகளையும் எடுத்துக்கொள்வது அவசியம்.
சித்த மருத்துவத்தில் உள்ள 'அயசெந்தூரம்' மற்றும் 'அன்னபேதி செந்தூரம்' ஆகிய மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்ல பலன் தரும். அத்துடன் நெல்லிக்காய் லேகியம் எனும் சித்த மருந்து, சத்துக்களை உள்ளடக்கிய அமிர்த பெட்டகமாக உள்ளதால் அதனையும் எடுத்துக்கொள்ளலாம். அதியமான் அவ்வைப்பாட்டிக்கு கொடுத்த நெல்லிக்கனியைப் போல, பெண்கள் தம் கருவில் உள்ள மகவிற்கும் கொடுத்து வருங்கால சந்ததியின் ஆயுள்ரேகையை கருவிலேயே உறுதிசெய்யலாம்.
மேலும் 'கருவேப்பிலை சூரணம்' எனும் சித்த மருந்தையும் பயன்படுத்தலாம். இதில் உள்ள அதிகப்படியான இரும்புச் சத்து அனீமியா எனும் ரத்தகுறைவு நோய்க்கு தீர்வு தரும். கருவேப்பிலை ஈர்க்கினை சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்து கஷாயமிட்டு குடிப்பதாலும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இயற்கையாய் கூடும். மசக்கை வாந்தியும் நிற்கும். கர்ப்ப கால அசீரணமும் நீங்கும். மசக்கையைத் தொடர்ந்து பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு அசீரணம், புளியேப்பம், நெஞ்சு எரிச்சல் ஆகிய குறிகுணங்கள் ஏற்பட்டு அவர்களைத் துன்புறுத்தும். இதற்கு ஏலக்காய் முதன்மையாக சேர்ந்த 'ஏலாதி சூரணம்' என்ற சித்த மருந்து உதவும்.
அவ்வப்போது இதனை எடுத்துக்கொள்ள நன்மை தரும். மேலும் இதனால் பிரசவ காலத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் தோலில் ஏற்படும் கருப்பு நிறமாற்றம் குறையும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் வலி, இடுப்பு பகுதியில் வலி போன்ற உபாதைகளுக்கு மருந்து எடுத்துக்கொள்வதை தவிர்த்தல் நல்லது. இந்த வலிகளுக்கு வெளிப்பிரயோக சித்த மருந்துகளை பயன்படுத்துவது நல்ல பலன் தரும். சித்த மருத்துவத்தில் சிறப்பு மிக்கது உள் மருத்துவம் மட்டுமல்ல. வெளி மருத்துவமும் கூட தான். அந்த வகையில் இடுப்பு பகுதிகளை வன்மையாக்க 'உளுந்து தைலம்' என்ற சித்த மருந்து நற்பலன் தரும்.
அதை ஐந்தாம் மாதம் முதலே கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்த துவங்குவது நல்லது. வலியை குறைக்க 'பிண்ட தைலம்' என்ற மருந்தை பயன்படுத்தலாம். 'குந்திரிக்க தைலம்' என்ற சித்த மருந்தினை அடிவயிற்றில் தடவ தசைகள் தளரும். மகப்பேறுகாலத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் பருவங்களில் தனித்தனியே எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளை சித்த மருத்துவம் பட்டியலிடுகிறது. அவற்றை முறையாக சித்த மருத்துவர் ஆலோசனையைப் பெற்று எடுத்துக்கொண்டால் சுகப்பிரசவத்திற்கு வழிகோலும்.
மாறாக, நஞ்சுக்கொடி மகவின் கழுத்தை சுற்றி இருத்தல், அதிக எடை உள்ள மகவு, அதிக ஆபத்துமிக்க பிரசவம் என்று கணிக்கப்பட்டவர்களும் சித்த மருந்துகளை எடுத்துக்கொள்வது பிரசவத்திற்கு பின் நல்லபலன் தரும். கர்ப்ப காலத்தில் கடைசி மாதங்களில் 'பாவனபஞ்சாங்குல தைலம்' என்ற சித்தமருந்து பெரும் பயனளிக்கும். கருப்பையானது விரிவடையும் போது அதன் பின்பகுதியில் உள்ள மலக்குடலை அழுத்தும்போது மலச்சிக்கலை உண்டாக்கும். அதுவே பின்னாளில் பல பெண்களுக்கு மூலவியாதிக்கு வித்திடும். அவர்கள் பாவன பஞ்சாங்குல தைலத்தை பயன்படுத்த கர்ப்ப சூடு, சிறுநீர்ப்பாதை எரிச்சல், மலச்சிக்கல் இவற்றை போக்கும்.
மேலும் கர்ப்பத்தில் குறைவான பனிக்குடநீரைக் கொண்டுள்ள பெண்களுக்கு தண்ணீர்விட்டான் எனும் மூலிகை சேர்ந்த மருந்துகள் நல்ல பலன் தரும். நவீன வாழ்வியலில் துரித உணவுகளை அதிகம் நாடும் பெண்கள் கர்ப்ப காலத்திலே சர்க்கரை நோயில் அகப்பட்டு கொள்வதை சமீப காலங்களில் அதிகம் காண முடிகிறது. நடை பயிற்சி, உடல் பயிற்சி, இயற்கை உணவு முறைகள் இவற்றை பின்பற்ற மறந்தக்காரணத்தால் 'ஜெஸ்டேஷனல் டயாபடீஸ்' எனும் கர்ப்ப கால நீரிழிவு பலருக்கு வாழ்நாள் முழுவதும் தொடரும் வகையில் மாறிவிடுகிறது.
அதற்காக சித்த மருத்துவம் கூறும் உணவு முறைகளும், மருத்துவ முறைகளும், யோகாசன பயிற்சி முறைகளும் பின்பற்றுதல் அவசியம். அந்த வகையில் மற்றொரு சவாலான நோய்நிலை கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் ரத்த அழுத்தம் அதாவது 'ஜெஸ்டேஷனல் ஹைப்பர்டென்ஷன்'. இதற்கு மருத்துவர் ஆலோசனைப்படி மருத்துவம் மேற்கொண்டு ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது.
இல்லாவிட்டால் பிரசவகாலத்தில் வலிப்பினை ஏற்படுத்தி பல்வேறு சிக்கல்களை தாய்க்கும் சேய்க்கும் ஏற்படுத்தும். பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்கள் சித்த மருத்துவம் கூறும் யோகாசனப் பயிற்சிகளை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் தனித்தனி முறைகளை பயிற்சி செய்து வருவது நல்லது. இதனால் தாய்க்கு மன சோர்வு, உடல் சோர்வு நீங்கி நிம்மதியான தூக்கம் வரும். கருவில் வளரும் மகவுக்கும் ஆரோக்கியம் கிட்டும்.
முதல் மூன்று மாதங்களில் தாடாசனம், உத்தனாசனம், சேது பந்தாசனம், பூர்ணதிதலி ஆசனம், கட்டிசக்ராசனம் ஆகியவற்றுடன் பிராணாயாமம் செய்தல் சிறப்பானது. கர்ப்ப காலத்தின் நடு மூன்று மாதங்களில் தாடாசனம், கட்டி சக்ராசனம், வஜ்ராசனம், அனந்தாசனம், சீதலி பிராணாயாமம், நாடி சுத்தி பிராணாயாமம் இவற்றை பயிற்சி செய்தல் நல்லது. கடைசி மூன்று மாதங்களில் அர்த்த திதலி ஆசனம், பூர்ண திதலி ஆசனம், பிராணாயாமம், தியானம், மற்றும் ஓய்வு நிலை பயிற்சிகளை செய்தல் நல்லது. இவை சுகப் பிரசவத்திற்கு வழிவகுக்கும்.
கர்ப்ப காலத்தின் போது கணவனின் கையைப்பிடித்து சிறிது தூரம் மேற்கொள்ளும் உல்லாச நடை கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன் மாற்றத்தை உண்டாக்கி மன உறுதியையும், ஆனந்தத்தையும் தரும். இதனை புரிந்துகொண்டு ஆண்கள் செயல்படுவதும், அவர்களுடன் நேரத்தை பகிர்ந்து கொள்வதும் இன்றைய அவரச வாழ்வியலில் அவசியமான ஒன்று. இயற்கை உணவும், வாழ்வியல் நெறிமுறைகளும், இன்னும் பல சித்த மருத்துவமுறைகளும் காலம் கடந்து நம்மை காத்துக்கொண்டு நமக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் நலப்பெட்டகமாக உள்ளது. அதனைப் பின்பற்றி வாழ்தல் எளிய சுகப்பிரசவத்திற்கு மட்டுமின்றி மெய்நலத்திற்கும் வழிவகுக்கும்.
தொடர்புக்கு: drthillai.mdsiddha@gmail.com






