என் மலர்
நீங்கள் தேடியது "உடல் நலம்"
- வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
- இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது.
நம் உடலில் நோய் வருவதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான். அதனை அதிகரிக்க அதிமதுர மிளகுப்பாலும் பருகி வரலாம். இந்த பாலை தயாரிக்க அதிமதுரம் கால் டீஸ்பூன், இலவங்கம் ஒரு துண்டு, மஞ்சள் தூள் இரண்டு டீஸ்பூன், மிளகுத்தூள் இரண்டு டீஸ்பூன் தேவைப்படும். இவை அனைத்தையும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து குடித்தால் போதும். காரத்தன்மை சற்று அதிகமாக இருந்தால் அவற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். இதை காலை உணவுக்கு பிறகும், இரவு உணவுக்கு முன்பும் குடிக்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
அதிமதுரத்தில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். உடல் பலவீனம் மற்றும் சோர்வாக இருப்பவர்களுக்கு உடல் ஆற்றலின் அளவை அதிகரிக்கச் செய்யும். இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது. இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் வைரஸ் தொற்று, காய்ச்சலை தவிர்க்கவும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும் இந்த அதிமதுர மிளகுப்பால் பெரிதும் உதவும்.
- மார்பில் வலி ஏற்பட்டாலே அது புற்றுநோயாக இருக்குமோ என பெண்கள் பலரும் பயப்படுவர்.
- மார்பில் புற்றுநோய் என்பது முதலில் வலியை கொடுக்காமல்தான் உருவாகும்.
புற்றுநோய் வருவதற்கான காரணிகள் என்ன? பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிக்க காரணங்கள் என்ன? மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன? ரஷ்யா கண்டறிந்த புற்றுநோய் தடுப்பூசி உண்மையில் பயனளிக்குமா? புற்றுநோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து விளக்கியுள்ளார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் கென்னி ராபர்ட்.
புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?
செல்களின் அபரித வளர்ச்சிதான் புற்றுநோய். ஒரு செல்லின் வளர்ச்சி குறிப்பிட்ட அளவுகோலில்தான் இருக்கவேண்டும். உடலில் ஒரு செல் அதிகமாக வளராமல் இருப்பதற்கும், நேர்க்கோட்டில் வளர்வதற்கும் ஒரு இயக்கமுறை உள்ளது. இந்த இயக்கமுறை கட்டுப்பாட்டை இழப்பதுதான் புற்றுநோய். புற்றுநோய் வர இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மரபுரீதியானது. இரண்டாவது 'ஸ்போராடிக்'. திடீரென ஏற்படும் மரபணு மாற்றங்கள், உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றால் ஒரு தாக்கம் ஏற்பட்டு புற்றுநோய் வரும்.
மார்பக புற்றுநோய் அதிகரிக்க காரணம் என்ன?
இயல்பாகவே ஹார்மோன் மாற்றங்களால் மார்பு வீக்கமடையும். இந்த ஹார்மோன் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தும்போது, அதாவது சமநிலையை இழக்கும்போது மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.
மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன?
புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வே அதற்கான பயத்தை உண்டாக்கும். அநேக நேரங்களில் மார்பில் வலி ஏற்பட்டாலே அது புற்றுநோயாக இருக்குமோ என பெண்கள் பலரும் பயப்படுவர். மார்பில் புற்றுநோய் என்பது முதலில் வலி இல்லாத கட்டியாகத்தான் துவங்கும். வேர்க்கடலை அல்லது நெல்லிக்காய் அளவில் வலியை கொடுக்காமல்தான் உருவாகும். வலி இல்லாமல் வரக்கூடிய கட்டிகளை கவனமாக பார்க்கவேண்டும். ஏனெனில் வலியுடன் வரக்கூடிய கட்டிகள் புற்றுநோய் கட்டியாக இல்லாமல் இருப்பதற்குத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
நீர்க்கட்டி, புற்றுநோய் கட்டியை வேறுபடுத்துவது எப்படி?
20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் தினமும் கைகளால் சுயமார்பு பரிசோதனை செய்யவேண்டும். ஏதேனும் மாற்றங்கள், அதாவது கட்டிகள், வீக்கம் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும். அப்போது மருத்துவர் அது நீர்க்கட்டியா, புற்றுநோய் கட்டியாக என்பதை கூறிவிடுவார்கள். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றால், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து நீர்க்கட்டியா, புற்றுநோய் கட்டியா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட கட்டியா என்பதை கண்டுபிடிக்க முடியும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேமோகிராம் எனப்படும் எக்ஸ்-கதிர் சோதனையை செய்து என்ன கட்டி என்பதை கண்டறியலாம். இதுதான் முதல்படி.
ரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயை அறிய முடியுமா?
ரத்த பரிசோதனையை வைத்து புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான நடைமுறை என்பது இல்லை. இரத்த பரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட சில வகையான புற்றுநோய்களைக் கண்டறிய முடியும். ஆனால் மேமோகிராம் சோதனை மூலம் மார்பக புற்றுநோயை அடையாளம் காணலாம். மரபியல் ரீதியான அதாவது ஒருவருக்கு எந்த வயதில் புற்றுநோய் வந்ததோ, அவர்களின் சந்ததியினருக்கு அந்த வயதிலோ அல்லது அதற்கு 10 வருடங்களுக்கு முன்போ சில சோதனைகளை செய்து அவர்களுக்கு புற்றுநோய் வருமா என்பதை அறியமுடியும். ரத்தத்தில் தெரியக்கூடிய புற்றுநோய்கள் இருக்கின்றன.
அவற்றை சிஏ (CA-Cancer Antigen), CA-125 சோதனைகள் மூலம் அறியலாம். புற்றுநோயை உறுதிப்படுத்தவும், அதனை கண்காணிக்கவும் இந்த சோதனை முறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். புற்றுநோயின் ஆரம்பநிலையிலோ, அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போதோ அல்லது சிகிச்சை முடியும்போதோ, நம் ரத்தத்தில் புற்றுநோய் செல்கள் ரத்த சிவப்பணுக்களுடன் சுழற்சியில் இருப்பதைதான் Circulating DNA cells என சொல்வோம். இந்த சோதனையை நாம் அனைவருக்கும் செய்யமுடியாது.
புற்றுநோய் இருந்து, பின்னர் முழுவதும் மறைந்து, பின்னர் மீண்டும் வந்து, சிகிச்சையை தொடரவேண்டும் என்பவர்களுக்கு மட்டும்தான் ரத்த பரிசோதனை எடுக்க அனுமதி உண்டு. மற்றபடி பொதுமக்களுக்கு ஒரு ரத்த பரிசோதனை மூலம் மட்டும் புற்றுநோய் உள்ளதா? இல்லையா என்பதை சொல்வதற்கு வாய்ப்புகள் இல்லை.
புற்றுநோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?
பெரும்பாலான புற்றுநோய்களுக்கு காரணிகள் உள்ளன. ஜீன்வழியாக தொடரும் புற்றுநோயை தவிர்க்க இயலாது. 8 மணிநேர தூக்கம், சரியான உடல்எடை, புகை மற்றும் ஆல்கஹாலை தவிர்ப்பது, உடல்பருமனை தவிர்ப்பது மூலம் மார்பக புற்றுநோயை தவிர்க்கலாம். கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய்க்கு தடுப்பூசியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 9-14 வயதிற்குள் உள்ளோருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தியதன் மூலம் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் குறைந்துள்ளது. வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் புகைபிடிப்பது. புகைபிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை தவிர்த்தாலே வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயை தவிர்த்துவிடலாம். இவைதான் பொதுவாக தவிர்க்கவேண்டியவை.
'என்டரோமிக்ஸ்' போன்ற புற்றுநோய் தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வழங்கப்படாதது ஏன்?
'என்டரோமிக்ஸ்' ஒரு mRNA தடுப்பூசி. விலங்குகளிடம் கோலோரெக்டர் கேன்சருக்கு இதை பயன்படுத்தி பயனுள்ளதாக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கான முழுமையான தகவல்கள் இன்னும் இல்லை. அவர்கள் வெளியிட்ட தரவுகள்படி ஆரம்பநிலையில் இதனால் பயன் உள்ளது. ஆனால் இது புற்றுநோய் வருவதை தடுக்குமா என்றால் தடுக்காது.
- சீன, மேற்கத்திய சமையல் முறைகளின் கலவையில் பிறந்த உணவுதான் 'பட்டர் கார்லிக் பிரான்'!
- இறாலை நீண்ட நேரம் வேகவைத்தால் ரப்பர் போன்று இறுகிவிடும் என்பதால் கவனமாக சமையுங்கள்!
சமையல் என்பது ஒரு கலை. அதுவும் புதுப்புது உணவு கலவைகளை உருவாக்கி, சுவைகளில் புரட்சி செய்வதென்பது ஒரு அசாத்தியமான திறன். அப்படி, சீன, மேற்கத்திய சமையல் முறைகளின் கலவையில் பிறந்த ஒரு உணவுதான் 'பட்டர் கார்லிக் பிரான்' (Butter Garlic Prawn). உணவகங்களில் மட்டுமே கிடைத்துவந்த இந்த சுவையான இறாலை, வீட்டிலேயே எளிதாகவும், குழந்தைகள் விரும்பும் வகையிலும் எப்படிச் செய்வது என்பதை ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் தியாகு செய்து காட்டுகிறார்.
செய்முறை
* முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடாக்கவும்.
* வாணலி சூடானதும், வெண்ணெயைச் சேர்த்து உருக விடவும். வெண்ணெய் அதிகம் சேர்த்தால் சுவை இன்னும் சிறப்பாக இருக்கும்.
* வெண்ணெய் உருகியதும், பொடியாக நறுக்கிய பூண்டுத் துண்டுகளைச் சேர்க்கவும். வெண்ணெய் மற்றும் பூண்டின் கலவை சேர்ந்து சமைக்கும்போது, சுவை பல மடங்கு அதிகரிக்கும்.
* பூண்டு பொன்னிறமாக வந்தவுடன், முழு சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய குடைமிளகாயைச் சேர்த்து வதக்க வேண்டும். வெண்ணெயில் சமைக்கும்போது அடுப்பின் தீயைக் குறைத்துக்கொள்வது முக்கியம், இல்லையென்றால் வெண்ணெய் கருகிவிடும்.
* இப்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் இறால்களைச் சேர்க்கவும். இறால்களைச் சேர்த்த உடனேயே, தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும். உப்பு சேர்த்த பின்னர்தான் இறால், சுவையை நன்கு உறிஞ்சும்.
* காரத்துக்கு மிளகாய் தூளைச் சேர்க்கவும். இந்த உணவு தயாராக 5 முதல் 10 நிமிடங்களே ஆகும். இறாலை நீண்ட நேரம் சமைத்தால் ரப்பர் போன்று இறுகிவிடும் என்பதால் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* இப்போது சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அதனுடன் சோயா சாஸ் மற்றும் கூடுதல் காரத்துக்குத் தேவையான மிளகாய் தூளையும் சேர்க்கவும். வெண்ணெய் மற்றும் பூண்டுடன் சேர்ந்து சோயா சாஸ் ஒரு அற்புதமான குழம்புப் பக்குவத்தைக் கொடுக்கும்.
* இறுதியாக, பொடியாக நறுக்கிய வெங்காயத் தாளைத் தூவி அடுப்பை அணைக்கவும். இது உணவின் சுவையை மேலும் அதிகரிக்கும்.
இந்த உணவில் உள்ள நன்மைகள்
* இறாலில் புரதம் அதிக அளவில் உள்ளது. இது உடலின் திசுக்கள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு அவசியமானது. மேலும், இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இதய நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
* பூண்டு ஒரு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு. இதில் உள்ள அல்லிசின் என்ற கலவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இது செரிமானத்திற்கும் துணைபுரிகிறது.
* வெங்காயத்தில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதில் உள்ள குவெர்செடின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இப்படி ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் 'பட்டர் கார்லிக் பிரான்', சுவையுடன் சேர்த்து உங்கள் உடலுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. அதோடு இன்றைய வேகமான உலகில், வெளியில் கிடைக்கும் ஆரோக்கியமற்ற உணவுகளை தேடிச் செல்வதற்குப் பதிலாக, உணவகங்களில் சாப்பிடும் அதே சுவையை வீட்டிலேயே அனுபவிக்க இந்த ரெசிபி சிறந்த தேர்வாக இருக்கும். இது குடும்பத்தினருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும் பிடித்தமான ஒரு உணவாக நிச்சயம் அமையும். இதை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து சுவைத்து மகிழுங்கள்.
- எண்ணெய்ப்பசை அதிகம் இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் வருவது அதிகமாக இருக்கும்.
- முகத்தில் சீபம் அதிகம் சுரப்பதால் பருக்கள் தவிர்க்கமுடியாது என்பவர்கள் முகத்திற்கு டோனர் பயன்படுத்தலாம்.
முகத்தை எப்போதும் பளபளப்பாக, அழகாக காட்ட வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் விருப்பம். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைதான் மேக்கப். ஆனால் சிலரின் முகத்தில் பருக்கள், துவாரங்கள் இருக்கும். இவை வெளியில் செல்லும்போதும், பொது நிகழ்ச்சிகள், விசேஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும், ஃபோட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் பலருக்கும் பெரும் சங்கடத்தை கொடுக்கும். சில பருக்கள் மறைந்தாலும், தழும்புபோல் மாறி கருமையாக காட்சியளிக்கும். இதனால் முகத்தில் பருக்கள் இருப்பவர்கள் மேக்கப் போடலாமா? அப்படி மேக்கப் போட்டால் அது இன்னும் அதிக விளைவுகளை ஏதேனும் ஏற்படுத்துமா? என சந்தேகம் எழும், பயமும் இருக்கும். ஆனால் அந்த பருக்களை மறைக்குமாறும், அதற்கு ஏற்றவாறும், அதனால் எந்த பக்க விளைவுகள் ஏற்படாமலும் மேக்கப் போட முடியும் என்கிறார் அழகுகலை நிபுணர் பிரஷாந்தி.
முகத்தில் முதலில் மாய்ச்சுரைசர் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் ரேசர் வைத்து முகத்திலிருக்கும் சின்ன சின்ன முடிகளை அகற்ற வேண்டும். அதன்பிறகு டோனர் பயன்படுத்த வேண்டும். துவாரங்கள் (Pores) கொண்ட சருமத்தைக் கொஞ்சம் டைட்டாக மாற்றுவதற்கும், துவாரங்களை மறைப்பதற்கும் டோனர் அவசியம். எண்ணெய்ப்பசை அதிகம் இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் வருவதும் அதிகமாகவே இருக்கும். முகத்தில் சீபம் அதிகம் சுரப்பதால் பருக்கள் தவிர்க்கமுடியாது என்பவர்கள் முகத்திற்கு டோனர் பயன்படுத்தலாம்.
அடுத்ததாக ப்ரைமர் போட வேண்டும். ப்ரைமருக்கு பின் அவர்களின் முக நிறத்திற்கு ஏற்ப கரெக்டர் பயன்படுத்த வேண்டும். பின்னர் கண்சீலர் போடலாம். இதனைத்தொடர்ந்து ஃபவுண்டேசன் அப்ளை செய்யலாம். ஃபவுண்டேஷனைத் தொடர்ந்து பவுடர் போடவேண்டும். பவுடர் போட்ட பிறகு செட்டிங் ஸ்பிரே அடிக்க வேண்டும். இது முடிந்தால் மேக்கப்பில் ஒரு பார்ட் ஓவர்.
தற்போது கண் பகுதிக்கு மேக்கப் போட வேண்டும். அதற்கு முதலில் ஐப்ரோவை ஷேப் செய்து, அதனை டார்க்கன் செய்ய வேண்டும். தொடர்ந்து ஐ-ஷேடோ அப்ளை செய்ய வேண்டும். ஐ-ஷேடோ நாம் அணிந்திருக்கும் ஆடை நிறத்திற்கு ஏற்ப கொடுக்க வேண்டும். பிறகு ஐ-லைனர், காஜல் போட வேண்டும்.
இறுதியாக லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளலாம். ஆடை மற்றும் ஐ-ஷேடோவிற்கு ஏற்ற நிறத்தில் லிப்ஸ்டிக் கலரை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். மேலும், லிப் லைனரால் நிச்சயம் அவுட்லைன் வரைந்த பின்னரே லிப்ஸ்டிக் போட வேண்டும். லிப்ஸ்டிக் போட்டு முடித்தால் மொத்த மேக்கப்பும் முடிந்தது. குறிப்பாக, இந்த மேக்கப் போட்டு முடித்த பிறகு, முகத்தில் முகப்பரு இருப்பதே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆரம்ப நிலை சர்க்கரை நோயை, யோகா 100% குணமாகும்!
- விடியற்காலை 3-4.30 வரை யோகா பயற்சி செய்வது சிறந்த பலனை தரும்.
உண்மையில் யோகா என்றால் என்ன? தியானம் செய்தால் நமது மனம் மற்றும் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்த முடியுமா? உடல்நலப் பிரச்சனைகள் சரியாகுமா? உள்ளிட்ட நம்மிடையே இருக்கும் சில பொதுவான சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ளார் யோகா பேராசிரியர் சந்துரு.
யோகம் என்றால் என்ன? யோகா என்றால் என்ன?
யோகம் என்ற சொல் யுஜ் என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து வந்தது. ஜோதிடத்தில் நிறைய யோகங்கள் உள்ளன. யோக கலைகளில் யோகம் என்றால் ஒன்றிணைதல் என்று பொருள். கலப்பிடுதல், ஒன்றோடு ஒன்று இணைவது எனக்கூறலாம். பரமாத்மாவோடு, ஜீவாத்மா ஒன்றிணைதல்தான் யோகா. அதற்காக செய்யக்கூடிய பயிற்சிகள்தான் யோக பயிற்சிகள். யோகா, உடல்நலம், மனநலத்தை நன்றாக வைத்துக்கொள்ளும். ஆத்ம பலம் கொடுக்கும். ஆனால் அதனுடைய இறுதி, இறைநிலையோடு இணைவதுதான். நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்வோம்.
யோகா பக்தியுடன் தொடர்புடையதா?
யோகா பக்தியுடன் தொடர்புடையதுதான் என்று முழுமையாக சொல்லமுடியாது. இறைநிலை, யோகம் என்பதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சரியை, கிரியை, யோகம், ஞானம் என சொல்லப்படுவதுண்டு. புறவழிப்பாடு, அகவழிப்பாடு, அகத்துள்ளேயே வழிபாடு என சொல்லப்படுகிறது. இவ்வாறு படிநிலைகள் பல உள்ளன. படிநிலைகள் பலவாக இருந்தாலும், முதல்படி பக்தி. உச்சப்படி ஞானம். இன்று யோகாவில் பெரியநிலைக்கு சென்றவர்கள் பக்திநிலையை மறைக்கிறார்கள். ஒருசிலர் பக்தியில் இருந்து வந்ததுதானே எனக் கூறுகிறார்கள்.
யோகாவிற்கு குருமார்கள் அவசியமா?
உலகில் இருக்கும் அனைத்து வித்தைகளுக்கும் குரு என்பவர் வேண்டும். குருவிடம் கற்றப்பிறகு நீங்கள் தனியாக செய்யலாம். ஆரம்பத்தில் குருவேண்டும்.
மனதை யோகாவால் கட்டுப்படுத்த முடியுமா?
எடுத்தவுடனேயே மனதை கட்டுப்படுத்த முடியாது. அலையும் எண்ணங்களை நிச்சயம் கட்டுப்படுத்த முடியாது. மன அலைச்சுழலை குறைக்கமுடியும். முறையான நீண்ட கால பயிற்சிக்குப்பின் மனதை கட்டுப்படுத்தலாம்.
உடல்நலத்திற்கு யோகா எந்தவிதத்தில் பயனளிக்கிறது?
சில ஆசனங்களை செய்ய வேண்டும். சிசுபால ஆசனம், பட்டர்ஃப்ளை ஆசனம் அவற்றில் முக்கியமானவை. இந்த இரண்டு ஆசனங்களையும் தினசரி செய்துவந்தால், முதுகு தண்டுவடம் நன்றாக இருக்கும். ஸ்ரீ ரவிசங்கரால் உருவாக்கப்பட்ட சுதர்சன கிரியா மூச்சுப் பயிற்சியை தினமும் மேற்கொள்ளலாம். உடலுக்கு நல்லது. இதனை எல்லோரும் செய்யலாம்.
எந்தவிதமான நோய்களை யோகா தடுக்கும்?
சிறுவயதில் இருந்தே ஒருவர் முறையாக யோகா செய்தால் எந்த நோயும் அவருக்கு வரவே வராது. மரணத்தையே வெல்லலாம் என சொல்கிறார்கள். சர்க்கரை, மன அழுத்தம் இருப்பவர்கள் யோகா செய்தால், அவை 100% குணமாகும். ஒருவேளை நோய் முற்றி இருந்தால், யோகா பயிற்சியின் மூலம் அதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். கண்ணுக்கு என்று உள்ள பயிற்சிகளை செய்தால், கண்ணாடியே போடவேண்டாம். ஆனால் அதனை தினமும் செய்யவேண்டும். உடற்பயிற்சியில் கண்பயிற்சிக்கென இரண்டு நிமிடங்களை ஒதுக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் செய்தாலே கண்ணாடி போட்டிருக்கும் அனைவரும் கண்ணாடியை எடுத்துவிடலாம். அதுபோல உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை இருக்கும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தவும், நோயின் தாக்கத்தை குறைக்கவும் யோகாவில் பயிற்சிகள் உள்ளன.
காலை வேளையில்தான் யோகா செய்ய வேண்டுமா?
யோகா, காலையில்தான் செய்யவேண்டும். அதுதான் சிறப்பு. உடற்பயிற்சி காலையில் செய்யவேண்டும். தியானம் விடியற்காலையில் செய்யவேண்டும். அனைவரும் 4.30 - 6 பிரம்மமுகூர்த்தம் சிறந்தது எனக் கூறுவார்கள். ஆனால் அதைவிட சிறந்தது 03 - 4.30 ரிஷிமுகூர்த்தம். அது அமைதியான நேரம். பெரும்பாலும் யாரும் அந்த நேரத்திற்கு எழுந்திருக்க மாட்டார்கள். 8 கோடி பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்றால், அதில் 8 லட்சம் பேர்தான் எழுந்திருப்பார்கள். அந்த நேரத்தில் எழுந்து, கண்ணைமூடி அமர்ந்து, குருமார்கள் எந்த தியானத்தை சொல்லிக் கொடுத்தார்களோ அதை செய்யவேண்டும். ஆரம்பத்தில் அரைமணிநேரம் செய்தாலும், மூன்று, நான்கு வருடங்களுக்கு பிறகு 1 மணிநேரம் தியானம் செய்யவேண்டும். தியானம், உடற்பயிற்சியை ஒரு 6 மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால், நமக்குள்ளே ஒரு உள்ளுணர்வு தோன்றும். நீங்கள் யாரிடமும் எதையும் கேட்கவேண்டிய அவசியமே வராது. தெளிந்த மனநிலை இருக்கும். தெளிவான சிந்தனை இருக்கும். ஒருவரை பார்த்தாலே அவரை எடைபோடும் தன்மை நமக்கு வந்துவிடும். தியானத்திற்கு அவ்வளவு சக்தி உள்ளது. ஆனால் அந்த அளவிற்கு யாரும் தியானம் செய்வதில்லை.
- ஆரோக்கியத்தையும், சுவையையும் விரும்பும் அசைவப் பிரியர்களுக்கான ஸ்பெஷல் டிஷ்!
- கறிவேப்பிலைப் பொடியை, சிக்கன் முழுமையாக வெந்த பிறகு கடைசியில் சேர்க்க வேண்டும்.
சிக்கன் பிரியர்களுக்காகவே தனித்துவமான சுவையுடன், ஆரோக்கியம் நிறைந்த ஓர் உணவுதான் ''கறிவேப்பிலை சிக்கன் ரோஸ்ட்''. கலப்படமற்ற, இயற்கையான சுவையுடன் கூடிய உணவுகளை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு. வழக்கமான சிக்கன் உணவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இதன் தனித்துவமான மணமும், கறிவேப்பிலையின் ஆரோக்கியமும் இணைந்து ஒரு புதுமையான சுவையை வழங்குகிறது. ஆரோக்கியத்தையும், சுவையையும் விரும்பும் அசைவப் பிரியர்களுக்கென்றே பிரத்யேகமான இந்த உணவை, செயற்கை நிறமூட்டிகள் இல்லாமல், முற்றிலும் இயற்கையான முறையில் ஃபெரோஸ் ஹோட்டலின் செஃப் சாந்தம் செய்து காட்டுகிறார்.
கறிவேப்பிலை கோழி ரோஸ்ட் செய்முறை
* முதலில் கறிவேப்பிலை மசாலாவைத் தயார் செய்ய வேண்டும். ஒரு வாணலியில் சிறிது உளுந்தை வறுக்கவும். பின்னர், அதே வாணலியில் கறிவேப்பிலையைச் சேர்த்து, அதன் நிறம் மாறாமல் மொறுமொறுப்பாகும்வரை வறுத்து எடுக்கவும். அதனை ஆறவைத்த பிறகு, மிக்ஸியில் போட்டுப் பொடி செய்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
* அடுத்து சமைக்கத் தொடங்குவோம். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சோம்பு மற்றும் வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.
* தாளித்ததும், காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். பிறகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* இஞ்சி பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும், சுத்தம் செய்து வைத்திருக்கும் எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும்.
* சிக்கன் துண்டுகளை நன்றாக வதக்கி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் முழுமையாக வெந்த பிறகு, தண்ணீர் வற்றி, எண்ணெய் தனியாகப் பிரியும்.
* இந்த சமயத்தில், நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் கறிவேப்பிலை பொடியைச் சேர்த்து, சிக்கனுடன் நன்றாகக் கலக்கவும். பொடியை சேர்த்தவுடன் அதிக நேரம் வேகவிட வேண்டாம். வெகு நேரம் வேகவிட்டால், கறிவேப்பிலையின் நிறம் மாறி கருப்பாகிவிடும்.
* கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும்.
சிறப்பு குறிப்பு: கறிவேப்பிலைப் பொடியை, சிக்கன் முழுமையாக வெந்த பிறகு கடைசியில்தான் சேர்க்க வேண்டும். முதலில் சேர்த்தால், சமைக்கும்போது கறிவேப்பிலையின் நிறம் மாறிவிடும்.
- ஐ-லைனரை கண்ணின் ஓரத்திலிருந்து போடாமல் நடுவில் இருந்து போடவேண்டும்.
- ப்ளெண்ட் செய்யும்போது முழு அழுத்தத்தையும் முகத்தில் காட்டாமல், ப்ளெண்டரில் காட்டவேண்டும்.
மஞ்சள் கொத்து இல்லையென்றால் பொங்கல் வைக்க முடியாது என்று தைப்பொங்கலன்று சிலர் வாக்குவாதம் செய்வர். அப்படி மேக்கப் இல்லையென்றால் தற்போது திருமணம் கிடையாது என்பதுபோல, ஒப்பனை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது திருமணத்தில். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு சடங்குமுறையை பின்பற்றுவர். அவ்வாறு அவர்களது திருமண முறையும் மாறுபடும். திருமண முறைகளுக்கு ஏற்றவாறு மேக்கப் முறைகளும் வந்துவிட்டன. அந்தவகையில் சிம்பிள் கிறிஸ்டியன் மேக்கப் போடுவது எப்படி என விளக்கியுள்ளார் அழகு கலை நிபுணர் உமா. ராணி ஆன்லைனுக்கு அளித்த நேர்காணல் மூலம் அவர் கூறிய ப்ரைடல் மேக்கப் வழிமுறைகளை காணலாம்.
CTM (Cleansing, Toning and Moisturizing) பிராசஸ்
முதலில் கிளென்சிங் பண்ணவேண்டும். ஏனென்றால், பார்லர் வரும்போதே சிலர் மேக்கப் போட்டிருப்பார்கள். அதனை முதலில் நீக்கவேண்டும். கிளென்சிங் செய்தபிறகு டோனர். ஓபன் போர்செஸ் இருப்பவர்களுக்கு டோனர் பயன்படுத்தலாம். டோனர் ஸ்பிரே காய்ந்தபின்பு, மாய்ச்சுரைஸர். அடுத்து கன்சீலர். கன்சீலருக்கு பின் ஃபவுண்டேஷன். எப்போதுமே ஃபவுண்டேஷன் ப்ரைடலின் நிறத்தைவிட கொஞ்சம் ஃபேராக இருக்குமாறு போட்டுக்கொள்ள வேண்டும். மூன்று ஃபவுண்டேஷன்களை எடுத்து எது அவர்களின் நிறத்தைவிட கொஞ்சம் ஃபேராக இருக்கிறதோ அதை பயன்படுத்தலாம். சிலர் ஐ-மேக்கப் போட்டுவிட்டு, ஃபேஸ் மேக்கப் போடுவார்கள். ஃபேஸ் மேக்கப் போட்டுவிட்டும், ஐ-மேக்கப் போடலாம். இப்படித்தான் போடவேண்டும் என்று இல்லை. நான் எப்போதும் ஃபேஸ் மேக்கப் போட்டுவிட்டுதான் ஐ-மேக்கப் போடுவேன். பிரஷ், பியூட்டி ப்ளெண்டர் என எது உங்களுக்கு நன்றாக இருக்கிறதோ, அதிலே ப்ளெண்ட் செய்யலாம். எந்தளவு பிளெண்ட் செய்கிறோமோ அந்தளவிற்கு மேக்கப் நன்றாக வரும்.
ப்ளெண்ட் செய்யும்போது...
ப்ளெண்ட் செய்யும்போது முழு அழுத்தத்தையும் ப்ரைடலின் முகத்தில் காட்டாமல், பிளெண்டரில் காட்டவேண்டும். ஏனெனில் நாம் வேகமாக அழுத்தும்போது விரலின் அழுத்தம் முகத்தில் படும்போது அவர்களுக்கு வலிக்கும். கண்ணிற்கு கீழ் க்ரீஸ் லைன் வரும். அப்போது மேலே பார்க்கசொல்லி, மெதுவாக ப்ளெண்ட் செய்யவேண்டும். அடுத்தது ஃபவுண்டேஷனுக்கு எந்த ஷேடு எடுத்தோமோ அதனைவிட டார்க்கர் ஷேடு எடுத்து காண்டோரிங் செய்யவேண்டும். நீங்கள் எது செய்வதாக இருந்தாலும், ப்ரைடுக்கு விருப்பமா எனக்கேட்டு செய்யுங்கள். ஃபவுண்டேஷன் அப்ளை செய்தபிறகு, பேக் செய்யவேண்டும்.
ஐ-லென்ஸ்
மேக்கப்பிற்கு முன்பு ஐ-லென்ஸ் வைக்கவேண்டும். லென்ஸ் போடுவதற்கு முன்பு ப்ரைடலிடம் கேட்கவேண்டும். அவர்கள் ஐ-லென்ஸ், முன்பு போட்டிருக்கிறார்களா என்று? ஏனெனில் சிலருக்கு தலைவலிக்கும், சிலருக்கு கண் சென்சிட்டிவாக இருக்கும். லென்ஸ் போட்டுக்கொண்டே லைட் வெளிச்சத்தை எல்லாம் பார்த்தால், கண்கலங்கும். எப்போதும் பயன்படுத்துபவர்கள் என்றால் பிரச்சனை இல்லை. அதனால் ப்ரைடலிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
ஐ-மேக்கப்
அடுத்தது ஐ-மேக்கப். நமக்கு எந்த ஐ-ஷேடோ வேண்டுமோ, அதை எடுத்துக்கொண்டு பிளெண்ட் செய்யலாம். அடுத்தது கிளிட்டர். எப்போதும் ஐ-லைனரை ஓரத்திலிருந்து போடாமல் நடுவில் இருந்து போடவேண்டும். அப்போது ப்ளெண்ட் செய்ய நன்றாக இருக்கும். அடுத்தது காஜல். எப்போதுமே கண் புருவத்திற்கு கருப்பு நிறத்தை பயன்படுத்துவதைவிட, நம் இந்தியர்களின் நிறத்திற்கேற்ப ப்ரவுன் ஷேடு பயன்படுத்தலாம். அடுத்தது காண்டோரிங். அடுத்தது ப்ளஷ் மற்றும் ஹைலைட்டர். பின்னர் லிப்லைனர். லிப்லைனர் அப்ளை செய்துவிட்டு, லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளலாம். கடைசியாக செட்டிங், ஃபிட்டிங் ஸ்பிரே அடித்துக் கொள்ளலாம்.
- முகத்தில் தோல் உரிந்தால், சருமத்திற்கு நீரேற்றம் தேவை என்று அர்த்தம்.
- தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம்தான் சருமம் வெண்மையாக உதவுகிறது!
தயிரை உணவில் சேர்த்துக்கொள்வது பல்வேறு நன்மைகளை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏனெனில் இதில் லாக்டோபாகிலஸ் பல்கேரிகஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபிலஸ் போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளதோடு, புரோபயாடிக்குகள், புரோட்டீன்கள், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்துக்களும் உள்ளன. உணவு மட்டுமின்றி தயிர் அழகியல் நடைமுறையிலும் பயன்படுத்தப்படுகிறது. தயிர் பயன்பாடு சருமத்தை பளபளப்பாக்கும் என்று பொதுவாகவே பலருக்கும் தெரியும். ஆனால் சரும பளபளப்பு மட்டுமின்றி பல்வேறு சரும நலன்களை கொண்டுள்ளது தயிர். தயிரை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.
சருமத்திற்கு ஈரப்பதம்...
வறண்ட சருமம் என்பது நீரிழப்புக்கான அறிகுறியாகும். சருமம் வறண்டு போகும்போது முகத்தில் தோல் உரியும். அப்படி தோல் உரிந்தால், சருமத்திற்கு நீரேற்றம் தேவை என்று அர்த்தம். தயிரை முகத்தில் தடவுவது சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கான விரைவான மற்றும் பயனுள்ள வழியாகும். தயிர் சருமத்தின் மந்தமான நிலையை உடனடியாக மேம்படுத்தும். சருமம் பிரகாசமாகவும் மாற உதவும்.
சரும பிரகாசம்...
தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம்தான் சருமம் வெண்மையாக உதவுகிறது. இந்த லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, மெலனின் உற்பத்தியைக் குறைத்து, சருமத்தை பிரகாசமாக்குகிறது. இது மெலனின் உற்பத்தியைத் தடுக்கும் நொதிகளை உற்பத்தி செய்ய உதவுகிறது.

தயிரில் உடலுக்கும், சருமத்திற்கும் அதிக நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன
புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாப்பு
சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் சருமத்தை விரைவில் கருமையடையச்செய்யும். மேலும் சருமத்தை பாதிக்கும். புற ஊதா கதிர்களால் ஏற்படும் புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை சரிசெய்ய தயிரைப் பயன்படுத்தலாம். சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதில் தயிரில் உள்ள துத்தநாகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நெகிழ்ச்சித்தன்மை
சருமம் கொலாஜனை இழக்கும்போது, அதன் நெகிழ்ச்சி குறையும். தயிரை முகத்தில் தடவும்போது சரும நெகிழ்ச்சித்தன்மை அதிகரிக்கும்.
முகச்சுருக்கங்களை தடுக்கும்
சருமம் மீள்தன்மையுடன் இருக்கும்போது, சுருக்கங்கள் மற்றும் முகத்தில் புள்ளிகள் தோன்றுவது குறையும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இந்த நிலையைத் தடுக்க ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இதன் காரணமாக, உங்கள் இளமையைப் பாதுகாக்க மென்மையான, பளபளப்பான சருமத்தைப் பெறுவீர்கள்.
முகப்பரு
தயிரில் உள்ள புரோபயாடிக்குகள், அழற்சி, முகப்பரு புண்களுக்கு முக்கிய காரணமான P. acnes பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவும் என்று கூறப்படுகிறது. ப்ரோபியோனிபாக்டீரியம் ஆக்னஸ் (P. acnes) என்ற பாக்டீரியா இயற்கையாகவே தோலில் வசிக்கிறது. இருப்பினும், முகத்துளைகள் அடைக்கப்படும்போது, இந்த பாக்டீரியாக்கள் பெருகி, வீக்கம் மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்துகின்றன. புரோபயாடிக்குகள் ஒட்டுமொத்த வீக்கத்தைக் குறைக்கின்றன. இது முகப்பருவைத் தணித்து, நீண்ட காலத்திற்கு முகப்பரு வருவதை தடுக்க உதவும்.
பிற தோல்நோய்கள்
புரோபயாடிக்குகளில் காணப்படும் அதே அழற்சி எதிர்ப்பு பண்புகள், ரோசாசியா, சொரியாசிஸ் போன்ற பிற தோல்நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவுகின்றன.
- தீபாவளியின் போதுதான் நாம் பெரும்பாலும் அதிகளவிலான எண்ணெய் உணவுகள் எடுத்துக்கொள்வோம்.
- தீபாவளி மட்டுமின்றி எப்போதும் இந்த மருந்தை வீட்டில் தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது.
தீபாவளியின் போதுதான் நாம் பெரும்பாலும் அதிகளவிலான எண்ணெய் உணவுகள் எடுத்துக்கொள்வோம். அதுவும் எண்ணெய், கொழுப்பு, சர்க்கரை ஆகிய மூன்றையும் ஒரேநேரத்தில் எடுத்துக்கொள்வோம். இவற்றால் அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் வயிற்று உப்புசம், திடீர் ஏப்பங்கள், வாந்தி, வயிற்று வலி, அசதி போன்றவற்றிற்கு வழிவகுக்கும். இவற்றை சரிசெய்ய மருத்துவ குணங்கள் கொண்ட, எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கும் தீபாவளி லேகியம் குறித்து காண்போம்.
தேவையான பொருட்கள்
தீபாவளி லேகியப்பொடி
வெல்லம்
தேன்
நெய்
இஞ்சி
நல்லெண்ணெய்
செய்முறை
கடையில் தீபாவளி லேகிய மருந்து பொடி கிடைக்கும். அந்தப்பொடியை வைத்து தீபாவளி லேகியம் செய்வது எப்படி என பார்ப்போம். கடையில் கிடைக்கும் தீபாவளி லேகியப்பொடியை 100 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்ப 100 கிராம் இஞ்சி எடுத்துக்கொண்டு, அதன் தோலை நன்றாக சீவிக்கொள்ள வேண்டும். பின்னர் சிறுசிறு துண்டுகளாக இஞ்சியை வெட்டி, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த சாற்றை அரைமணிநேரம் அப்படியே வைக்கவேண்டும். அதன் அடியில் வெள்ளை நிறத்தில் தண்ணீர் படியும். கீழே படிந்ததை விட்டுவிட்டு, மேலே நிற்கும் இஞ்சி தண்ணீரை தனியே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில், 200 கிராம் வெல்லத்தை எடுத்து பாகு காய்ச்சுவது போல் கரைக்க வேண்டும். வெல்லம் சூட்டில் கரைந்தபின் அதில், எடுத்துவைத்துள்ள இஞ்சித்தண்ணீரை ஊற்றவேண்டும். பின்னர் லேகியப்பொடியையும் சேர்க்கவேண்டும். அந்தக் கலவையை தொடர்ந்து கலந்துவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். கலவை கெட்டியாக மாறும்போது, கொஞ்சம் சொஞ்சமாக இடையிடையே நெய் மற்றும் நல்லெண்ணெயை சேர்க்க வேண்டும். வேண்டுமானால் தேனும் சேர்த்துக் கொள்ளலாம். கலவை, அல்வா பதத்திற்கு வந்தபின் இறக்கி ஆறவைக்க வேண்டும். நன்கு ஆறியபின், அதனை உருண்டை பிடித்து வைத்துக்கொள்ளலாம். தீபாவளி லேகியம் ரெடி.

பல்வேறு மூலிகைப் பொருட்களை உள்ளடக்கியதுதான் தீபாவளி லேகியம்
தீபாவளி லேகியத்தின் நன்மைகள்...
தீபாவளி மழைக்காலத்தில் வரும். அப்போது ஏற்படும் சளி, இருமல் பிரச்சனைக்கு இந்த லேகியம் நல்ல பலனைத்தரும். தீபாவளியின் போது நாம் எடுத்துக்கொள்ளும் எண்ணெய் பலகாரங்கள், உணவுகள் செரிமானக் கோளாறுக்கு வழிவகுக்கும். அப்போது இந்த லேகியம், செரிமான பிரச்சனையை எதிர்த்து போராட உதவுகிறது. தீபாவளி மட்டுமின்றி எப்போதும் இந்த மருந்தை வீட்டில் தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது. இது கடைகளில் கிடைக்கும் என்றாலும் வீட்டில் தயாரிப்பது ஆரோக்கியமானது.
- மற்ற குழந்தைகளைப் போல டெஸ்ட் டியூப் பேபியும் நார்மலாக இருக்குமா?
- ஐவிஎஃப், இக்ஸி முறைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமா?
கருமுட்டை அல்லது விந்தணு தானம் பெற்று குழந்தை பெறுபவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம், குழந்தை நம்மைப்போல இருக்குமா? அல்லது தானம் வழங்கியவர்களைப் போல இருக்குமா என்றுதான். இப்படி செயற்கை கருத்தரித்தலில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு, அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமளித்துள்ளார் கருத்தரித்தல் சிறப்பு சிகிச்சை மருத்துவர் நிவேதிதா.
"டெஸ்ட் டியூப் பேபி" முறை ஆரோக்கியமானதா?
ஐவிஎஃப், இக்ஸி முறையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என சொல்கிறோம். 10 பேர் குழந்தை இல்லை என வருகிறார்கள் என்றால், எல்லோருக்கும் ஐவிஎஃப் பண்ணமாட்டோம். முதலில் அடிப்படை சிகிச்சைகளை அளிப்போம். அந்த சிகிச்சைகளில் சிலர் கருவுறுவார்கள். சிலருக்கு அடிப்படை சிகிச்சை முறைகள் உதவாது. அவர்களுக்கு வேறுவழியில்லை என்ற சூழலில்தான், டெஸ்ட் டியூப் பேபி முறையை அறிவுறுத்துவோம். டெஸ்ட் டியூப் பேபி என்றாலே குழந்தை எப்படி இருக்கும்? குழந்தை நார்மலாக இருக்குமா? என்று எல்லோரும் கேட்பார்கள். சாதாரணமாக 100 பேர் கருவுறுகிறார்கள் என்றால், அதில் 97 பேருக்கு குழந்தை ஆரோக்கியமானதாகத்தான் இருக்கும். அதில் 3 சதவீத குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும். இது இயற்கை கருவுறுதலின் சதவீதம்.
அதேபோல அந்த 3-5 சதவீதம் என்பது ஐவிஎஃப் முறையிலும் இருக்கும். இயற்கையாக கருவுறும்போது குழந்தைக்கு பிரச்சனைகள் இருந்தால் நாம் அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஐவிஎஃப் முறையில் குழந்தைக்கு பிரச்சனை என்றால், அதை பெரிதுப்படுத்தி, ஐவிஎஃப் என்பதால்தான் இப்படி ஆனது என நினைத்துக்கொள்வோம். இயற்கை கருவுறுதலில் என்னென்ன சவால்கள் உள்ளதோ, அதே சவால்கள் ஐவிஎஃப் முறையிலும் உள்ளது. ஐவிஎஃப் முறை நூறு சதவீதம் பாதுகாப்பானது என என்னால் கூறமுடியாது. ஆனால் 97 சதவீதம் அது பாதுகாப்பானதுதான். ஐவிஎஃப் முறையில் பிறக்கும் குழந்தைகள் அப்நார்மலாக, வித்தியாசமாக இருப்பார்கள் எனக்கூறுவார்கள். அப்படி எல்லாம் கிடையாது. வெளிநாடுகளில் ஐம்பது வயதில்கூட ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.
சிலருக்கு கருப்பைக்கு வெளியில் உள்ள குழாயில் குழந்தை வளருவது ஏன்?
மாதம் மாதம் பெண்களுக்கு சினைப்பையில் இருந்து ஒரு முட்டை வெளியே வரும். அந்தநேரத்தில் உடலுறவு கொண்டால், விந்தணுக்கள் நீந்தி சென்று, அதனுடன் இணைந்து கரு உருவாகும். ஒருசிலருக்கு கருக்குழாய் அடைப்பு அல்லது பாதிப்பு இருந்தால், கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள குழாயிலேயே கரு தங்கி வளரத்தொடங்கிவிடும். இதனை எக்டோபிக் கர்ப்பம் எனக் கூறுவோம். இந்தக் கருவால் ஆரோக்கியமாக வளர முடியாது. ஏனெனில் குழந்தையை தாங்குவதற்கான அமைப்பு கருக்குழாய்க்கு இருக்காது.
ஆண், பெண் குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணங்கள் என்ன?
பொதுவாக பல பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை பிசிஓடி. முறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல்பருமன் அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. சிலருக்கு இந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும், குழந்தை இருக்காது. இதனை விவரிக்கப்படாத கருவுறாமை எனக்கூறுவோம். அதுபோல கருக்குழாய் அடைப்பு, ஃபைப்ராய்டு கட்டிகள் உள்ளிட்டவற்றாலும் பெண்களுக்கு கருவுறுதல் தள்ளிப்போகும். அரிதாக சிலருக்கு முட்டையின் எண்ணிக்கையே குறைவாக இருக்கும். அதாவது இளம்வயதிலேயே அவர்களுக்கு மாதவிடாய் நின்றிருக்கும்.
ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, விறைப்புத்தன்மை இல்லாமல் இருப்பது, வேகமாக விந்து வெளியேறுதல், விந்துக்கள் வெளியே வராமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் காரணமாக இருக்கின்றன.
கருமுட்டை, விந்தணு தானம் என்றால் என்ன?
முன்னர் சொன்னவாறு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கருமுட்டை தீர்ந்துவிடும். அவர்களுக்கு கருமுட்டை இருக்காது. இந்த பிரச்சனை உடைய பெண்கள் கருவுற வேண்டும் என ஆசைப்பட்டால், அவர்களுக்கு வேறு பெண்களிடம் இருந்து முட்டையை தானமாக வாங்கி, அவர்களின் கணவரின் விந்தணுவுடன் இக்ஸி செய்து, கரு உருவாக்கி, அந்த கருவை சம்பந்தப்பட்ட பெண்ணின் கருப்பையில் வைத்துவிடுவோம். இது யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும்தான் செய்வோம். இது தம்பதியரின் விருப்பம் இருந்தால் மட்டும்தான் செய்யமுடியும். இதேபோன்றுதான் விந்து தானமும்.
விந்தணு தானம் பெற்று உருவாகும் குழந்தை யார் ஜாடையில் இருக்கும்?
இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் மற்றும் பயம்தான். தானம் பெறுபவர்களுக்கு ஏற்றவாறு உடல்தோற்றத்தை கொண்டவர்களைத்தான் தானம் வழங்குபவராக முதலில் தேர்ந்தெடுப்போம். இப்போது ஒரு பெண்ணுக்கு கருமுட்டை தானம் பெறுகிறோம் என்றால், தானம் தருபவரின் ரத்த வகை, உயரம், எடை, நிறம் போன்றவற்றை பார்த்துதான் தேர்வு செய்வோம். தானம் பெறுபவர், வழங்குபவர் என இரண்டுபேரின் வெளிப்புறத் தோற்றத்தை ஒற்றுமைப்படுத்திதான் தேர்வு செய்வோம். அதுபோலத்தான் விந்தணு தானம் செய்பவர்களையும் தேர்வு செய்வோம். புறத்தோற்றத்தை வைத்துதான் தேர்வு செய்கிறோம் என்பதால், அவர்களின் முட்டை அல்லது விந்து தானம் மூலம் உருவாகும் குழந்தை பெற்றோர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்காது.
கருவுற்றவர்கள் இயல்பான வேலைகளை செய்யலாமா?
முதல் மூன்று மாதம் எந்த வேலையும் செய்யக்கூடாது என வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். அதற்கு காரணம் குழந்தை கலைந்துவிடுமோ என்ற பயம். ஆனால் அது அப்படி கிடையாது. முதல் மூன்று மாதத்தில் கரு என்பது உருவாகும். அது ஆரோக்கியமாக உருவானால் அப்படியே தொடரும். எனவே பயம் தேவையில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. சிலருக்கு குறை மாதத்திலேயே குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மருத்துவர்களே சில கட்டுப்பாடுகளைக் கூறுவோம். மற்றபடி முழு நேரம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது.
- அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும்
- இயற்கை சூழல் மன அமைதியை அளிக்கிறது.
கிராமத்தில் இருப்பவர்களோடு ஒப்பிட்டால் நகரத்தில் வாழ்பவர்களுக்கு மன அழுத்தம், கவலை அதிகமாக இருக்குமாம். காரணம் நாம் வாழும் சூழல். நாம் நகர்ப்புற சூழல்களிலோ அல்லது அலுவலகத்திலோ நாள் முழுவதும் இருக்கும்போது, ஏதோ ஒன்றை தாங்கிக்கொண்டு இருப்பதுபோலவே ஒரு மன ஓட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். இதன் விளைவாக எப்போதும் ஒரு மனசோர்வு இருக்கும். ஒருநிலையில் மிகவும் அழுத்தமாக இருக்கிறது வெளியே போகலாம் எனக்கூறி, பூங்கா அல்லது ஷாப்பிங் மால்களுக்கு செல்வோம். அல்லது வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வோம். ஏன் பூங்காவிற்கு செல்கிறோம்? சுற்றுலாவிற்கு செல்கிறோம்? கொஞ்சம் நன்றாக உணர்வோம் என்பதற்காக. இதன்மூலம் நமது மனமும், உடலும் இயற்கையான சூழலில் இளைப்பாறுகின்றன என்பதை உணரலாம். அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும். இயற்கையோடு ஒன்றிருப்பது என்னென்ன நன்மைகளை மனதிற்கும், உடலுக்கும் வழங்கும் என்பதை பார்க்கலாம்.
மனத்திறன்களை மேம்படுத்தும்
இயற்கை சூழலில் இருப்பது நம் கவலைகள் அனைத்தையும் மறக்கச்செய்து, ஒருவித அமைதியை கொடுக்கும். எந்த சிந்தனையும் ஓடாது. மனம் தெளிவாக இருக்கும். வெளியில் இருப்பது நம் மனதில் நிம்மதியான விளைவுகளை ஏற்படுத்தும். அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும். இது உங்கள் படைப்பாற்றல் மற்றும் பிரச்சினைகளை கையாள கற்றுக்கொள்ளும் திறனையும் அதிகரிக்கும். இயற்கை சூழல் மகிழ்ச்சியான உணர்வுகளை அதிகரிக்கிறது. மேலும் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்த உதவுகிறது. உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ஏதேனும் மனக்குழப்பத்தில் அல்லது சிக்கலில் இருந்தால் வெளியே கொஞ்சம் நடந்து செல்லுங்கள். உங்களுக்கான விடை கிடைக்கும்.

மனக்குழப்பத்தில் அல்லது சிக்கலில் இருந்தால் வெளியே கொஞ்சம் நடந்து செல்லுங்கள்
மனஆரோக்கியம் மேம்படும்
அடிக்கடி வெளியே செல்வது இதய நோய்களை குறைக்க வழிவகுக்கும். அடிக்கடி வெளியே சென்றால் உங்கள் எலும்புகள், இரத்த அணுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமான வைட்டமின் டியை சூரிய ஒளியில் இருந்து பெறலாம். பசுமையான இடங்களுக்குத் தொடர்ந்து செல்வது மனச்சோர்வு அபாயத்தைக் குறைப்பதோடு, கவனச்சிதறலை தடுக்க உதவும். நாம் வெளியே இருக்கும்போது நன்றாக தூக்கம் வருவதை கவனிக்கலாம். இயற்கை ஒளியில் தினமும் வெளிப்படுவது தூக்கம்/விழிப்பு சுழற்சிகளை சீராக்க உதவுகிறது. டென்மார்க்கில் 1985 மற்றும் 2003 க்கு இடையில் பிறந்த 900,000 குழந்தைகளை ஆய்வு செய்ததில், அதிக பசுமையான இடங்களைக் கொண்ட சுற்றுப்புறங்களில் வாழ்ந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் மனநல கோளாறுகள் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
என்ன செய்யவேண்டும்?
ஒரு நாளைக்கு ஒரு 5 நிமிடமாவது உங்கள் முகத்தில் சூரிய ஒளி படும்படி வெளியே நில்லுங்கள். இயற்கையை உணர காலில் இருக்கும் செருப்பை கழற்றிவிட்டு புல்லில் நடங்கள். வானிலை நன்றாக இல்லாவிட்டால், வீட்டில் ஜன்னலை திறந்துவைத்து இயற்கையை ரசியுங்கள். காற்றோட்டமாக வெளியில் நடந்து செல்லுங்கள். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒரு சுற்றுலாவிற்கு செல்லுங்கள். உங்கள் சைக்கிளில் தூசியைத் தட்டிவிட்டு, அக்கம் பக்கத்தைச் சுற்றி வாருங்கள். உங்கள் நாயை அருகிலுள்ள பூங்காவிற்கு ஒரு நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் விரும்புவதைப் போலவே அவைகளும் இயற்கையை ரசிக்கும். ஒரு புத்தகத்தை எடுத்துட்டு, ஒரு நிழல் தரும் மரத்தடியில உட்காருங்க. வீட்டின் முற்றத்தில் ஒரு படரும் கொடியோ அல்லது ஏதேனும் ஒரு செடியை வளருங்கள். அடிக்கடி பூங்காக்களுக்கு செல்லுங்கள். இயற்கையோடு இணைந்து வாழுங்கள்.
- ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தார் அதியமான்
- சாறு, பொடி, சட்னி என எந்த வடிவத்தில் எடுத்துக்கொண்டாலும் நெல்லிக்காய் நன்மை பயக்கும்.
'ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தார் அதியமான்' என நாம் படித்திருப்போம். உலகில் எவ்வளவோ பொருட்கள் இருக்கும்போது நெல்லிக்கனியை ஏன் கொடுத்தார்? என பலரும் யோசித்திருப்போம். அதற்கு காரணம் நெல்லிக்கனியில் இருக்கும் மருத்துவக் குணங்கள். ஔவை நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதற்காக கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி அவருக்கு நெல்லிக்கனியை கொடுத்தார். அவ்வளவு மருத்துவக்குணமிக்கதா நெல்லிக்காய் என நாம் வியப்போம். ஆம், நெல்லிக்காய் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. அதை எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து காண்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி
கொய்யா, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களைவிட நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுகிறது. அதே நேரத்தில் செல்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
இயற்கை நச்சு நீக்கி
நெல்லிக்காய் உடலில் நச்சு நீக்க செயல்முறையை ஆதரிக்கிறது. இரத்தத்தை சுத்திகரிக்கிறது. உயிர்சக்தியை மேம்படுத்துகிறது.
முதிர்வை தடுக்கிறது
நெல்லிக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இதனால் தோல் மற்றும் உறுப்புகளின் வயதாகும் தன்மையை தடுக்க முக்கிய பங்காற்றுகிறது.
இதய ஆரோக்கியம்
கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது, இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது மற்றும் மாரடைப்பு போன்ற பாதிப்புகளைத் தடுக்க உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கிறது
நெல்லிக்காய் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்தக் கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இது நரம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது.

ஜூஸ், பொடி, சட்னி என அனைத்து வடிவத்திலும் நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளலாம்
பசியை கட்டுப்படுத்தும்
கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால், நெல்லிக்காய் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதனால்தான் எடை குறைக்க விரும்புவர்கள் பலரும் நெல்லிக்காய் ஜூஸ் எடுத்துக்கொள்வார்கள்.
நினைவாற்றலை அதிகரிக்கிறது
நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளை செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. கூர்மையான நினைவாற்றலை வளர்க்க உதவுகின்றன.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், எலும்புகளை வலுப்படுத்த உதவும். இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் மூட்டுவலி போன்ற பிரச்சனைகளையும் தடுக்க உதவும்.
சரும ஆரோக்கியம்
நெல்லிக்காயின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கின்றன, பிக்மெண்டேஷனை குறைக்கின்றன, மேலும் சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பை அளிக்கின்றன.
முடி பராமரிப்பு
பல தலைமுறைகளாக, இந்திய முடி பராமரிப்பில் நெல்லிக்காய் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. வேர்களை வலுப்படுத்துதல், முன்கூட்டியே நரைப்பதைத் தடுத்தல், முடிக்கு பளபளப்பைச் சேர்த்தல் என முடி பராமரிப்பிற்கு முக்கிய பங்காற்றுகிறது நெல்லிக்காய். இதுபோல இன்னும் பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. சாறு, பொடி, நெல்லிக்காய் சட்னி, இல்லை ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காய் அப்படியே சாப்பிடுகிறேன் என்றாலும், எந்த வடிவத்தில் எடுத்துகொண்டாலும் பலனளிக்கும்.






