என் மலர்
குஜராத்
- சர்தார் படேலின் பெருமைகளை மறைக்க காங்கிரஸ் முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
- மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.
குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடைபெற்ற சர்தார் படேல் 150 ஆண்டு நிகழ்வில் மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி. நட்டா காங்கிரசை காரசாரமாக விமர்சித்துக்கொண்டிருந்தார். சர்தார் படேலின் பெருமைகளை மறைக்க காங்கிரஸ் முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போது மேடைக்கு முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை மற்ற அதிகாரிகள் தூக்கிச் சென்றனர். ஆனால் நட்டா இவை எதையும் பொருட்படுத்தாமல் தனது உரையை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இந்த வீடியோவை எக்ஸில் பகிர்ந்துள்ள இந்திய இளைஞர் காங்கிரஸ், ஜே.பி. நட்டா பேசிக்கொண்டிருந்தபோது, பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் மேடை அருகே மயங்கி விழுந்துள்ளார்.
இருப்பினும், நட்டா தனது பேச்சை நிறுத்தவில்லை .மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.
கண் முன்னால் ஒருவர் விழுந்ததைக் கூடப் பொருட்படுத்தாத பாஜக தலைவர்கள், பணவீக்கம், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள் போன்ற பொதுமக்களின் கஷ்டங்களைப் பற்றி எப்படி அக்கறை செலுத்துவார்கள்?
அதிகாரம் மட்டுமே முக்கியம், பொதுமக்களின் கஷ்டங்கள் ஒரு பொருட்டல்ல என்பதே பாஜகவின் யதார்த்தம். பாஜக மனித நேயத்தை விற்றுவிட்டது என்று சாட்டியுள்ளது.
இதற்கிடையே மயங்கி விழுந்தவர், நீண்ட நேரம் நின்றதால் சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ உதவிக்கு பின் அவர் உடல்நிலை சீரானதாக கூறப்படுகிறது.
- அரவிந்த் ஒரு சிறந்த BLO என்றும், அவரது வாக்குச்சாவடியில் 40 சதவீத பணிகளை முடித்துள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.
- BLO க்கள் தற்கொலை தொடர்கதையாகி வருவது பணிச்சுமை குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி (SIR) -க்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) ஆக நியமிக்கப்பட்ட ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
கிர் சோம்நாத் மாவட்டத்தில் தேவ்லி கிராமத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் அரவிந்த் வதேர் நேற்று காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அரவிந்த் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், தனது SIR பணியைத் தொடர முடியவில்லை என்றும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும், மரணத்தைத் தவிர வேறு வழியில்லை என்றும் எழுதியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் என்.வி. உபாத்யாய் தெரிவித்தார்.
அரவிந்த் ஒரு சிறந்த BLO என்றும், அவரது வாக்குச்சாவடியில் 40 சதவீத பணிகளை முடித்துள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.
கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் BLO க்கள் தற்கொலை தொடர்கதையாகி வருவது பணிச்சுமை குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.
- வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்பது நாட்டையும் நமது ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு செயல்முறை ஆகும்.
- நக்சலைட் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளனர்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குஜராத் மாநிலம் ஹரிபரில் நடந்த எல்லை பாதுகாப்பு படையின் 61-வது எழுச்சி தின விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியாவின் எல்லை மற்றும் பாதுகாப்புப் படைகள் சமரசம் செய்யாது என்பதை முழு உலகிற்கும் தெளிவாகியது. ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம், பயிற்சி முகாம்கள் மற்றும் ஏவு தளங்களை நமது ராணுவம் அழித்தது.
துரதிருஷ்டவசமாக, சில அரசியல் கட்சிகள் ஊடுருவல்காரர்களை பாதுகாக்க முயற்சித்து வருகின்றன. ஊடுருவல்காரர்களை அகற்றும் பணியை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன.
இந்த அரசியல் கட்சிகள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு ஆகியவற்றை எதிர்க்கின்றன.
ஊடுருவல்காரர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. நமது நாட்டில் இருந்து அனைத்து ஊடுருவல்காரர்களையும் நாங்கள் அகற்றுவோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது எங்களது உறுதிமொழி ஆகும்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்பது நாட்டையும் நமது ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு செயல்முறை ஆகும்.
தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை முழுமையாக ஆதரிக்குமாறு நாட்டு மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஊடுருவல்காரர்களைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கு பீகார் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு ஒரு எச்சரிக்கை ஆகும்.
நக்சலைட் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளனர். நாட்டை நக்சலைட் பாதிப்பில் இருந்து 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் விடுவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
- ஆம்புலன்ஸின் பின்புறத்தில் தீப்பிடிப்பதைக் கவனித்த ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார்.
- ஆனால் பின்புறத்தில் இருந்த நான்கு பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
குஜராத்தில் அர்வல்லி மாவட்டத்தில் மோடசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த பிறகு நோய்வாய்ப்பட்ட ஒரு நாள் குழந்தை அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்தது.
மோடசா-தன்சுரா சாலையில் ஆம்புலன்சில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆம்புலன்ஸின் பின்புறத்தில் தீப்பிடிப்பதைக் கவனித்த ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார். முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஓட்டுநர் மற்றும் குழந்தையின் பெற்றோரின் உறவினர்கள் காயங்களுடன் தப்பினர். ஆனால் பின்புறத்தில் இருந்த நான்கு பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
குழந்தையுடன், குழந்தையின் தந்தை ஜிக்னேஷ் மோச்சி (38), டாக்டர் சாந்திலால் ரெண்டியா (30), மற்றும் செவிலியர் பூரிபென் மனாட் (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியும் பணியில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
- புல்லட் ரெயில் இயங்குவதற்கான தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
- பணிகளை மேற்கொண்டு வரும் புல்லட் ரெயில் இன்ஜினியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
அகமதாபாத்:
இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் சேவை திட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை தொடங்கப்பட உள்ளது. இதற்காக 508 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரெயில் இயங்குவதற்கான தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அகமதாபாத், ஆனந்த், வதோதரா, பருச், சூரத், பிலிமோரா, வாபி, பொய்சார், விரார், தானே மற்றும் மும்பை என முக்கிய நகரங்கள் வழியாக இந்த புல்லட் ரெயில் இயக்கப்படவுள்ளது.
இந்நிலையில், சூரத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் புல்லட் ரெயில் இன்ஜினியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் கேட்டறிந்தார். அதன்பின் பிரதமர் மோடி பேசியதாவது:
மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் சேவை திட்டம் தொடர்பான அனுபவங்களை, இன்ஜினியர்கள் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு அந்த அனுபவம் உதவியாக இருக்கும்.
நம் நாடு தொடர்ந்து சோதனை நடத்துவதிலேயே இருக்கக் கூடாது. பணிகளில் கிடைத்த அனுபவங்களை புதிய திட்டங்களில் பிரதிபலிக்க வைக்க வேண்டும். அனுபவங்களை ஆவணப்படுத்துவதன் மூலம் அடுத்து வரும் இளம் தலைமுறையினர் தேச கட்டுமானப் பணிகளில் சிறப்பான பங்களிப்பை தர முடியும். அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ வேண்டும் என தெரிவித்தார்.
- தொடர்ந்து சோனியின் தலையை சுவரில் மோதினார்.
- கடுமையான இரத்தப்போக்கு காரணமாக சோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குஜராத் மாநிலம் பாவ்நகர் பாவ்நகரைச் சேர்ந்த சாஜன் பரையா (25) மற்றும் சோனி ரத்தோட் (23) ஆகியோர் கடந்த ஒரு வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையே அவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், திருமண முகூர்த்தத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரவு 9 மணிக்கு, சாஜன், சோனிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. திருமண சேலை பிடிக்காதது தொடர்பாக வெடித்த வாக்குவாதம் திருமண செலவுகள் மற்றும் பணம் குறித்து நீண்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சாஜன், இரும்பு கம்பியால் சோனியின் கைகளிலும் கால்களிலும் அடித்துள்ளார். தொடர்ந்து சோனியின் தலையை சுவரில் மோதினார். கடுமையான இரத்தப்போக்கு காரணமாக சோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சாஜன் அங்கிருந்து தப்பியோடினார்.
தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். சாஜன் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை சிறப்பு குழுக்கள் அமைத்து தேடி வருவதாக ராஜேஷ் படேல் தெரிவித்தார்.
- பீகார் சட்டசபை தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது.
- காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. 243 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
பீகார் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், குஜராத் மாநிலத்தில் வசிக்கும் பீகார் மக்கள் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழா சூரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
நாடு ஏற்கனவே இந்த முஸ்லிம் லீக்- மாவோயிஸ்ட் காங்கிரஸை (MMC) நிராகரித்துள்ளது. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியுடன் பணியாற்றிய ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்சியை பாதுகாப்பது தற்போது மிகவும் கடினமானது என காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
50-60 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் தொடர் தோல்வியால் இப்படித்தான் முடிவடைகிறார்கள் என்பதை அவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது என்பதை உணர்த்தும் தெளிவான விசயம்.
என்.டி.ஏ. வெற்றி பெண்கள் மற்றும் இளைஞர் வாக்காளர்கள் கிடைக்கப்பெற்றது. ஜாமினில் வெளியே வந்தவர்கள், ஜாதிவாத விசத்தை பரப்ப தங்களுடைய அனைத்து எனர்ஜிகளையும் பயன்படுத்தினர். அவர்கள் இதுமட்டுமே வெற்றிக்கு போதுமானது என்று நினைத்தனர். பீகார் தேர்தல் சாதிவாத விசத்தை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. இது நாட்டிற்கு மிகவும் பிரகாசமான அறிகுறியாகும்.
தலித் மக்கள் அதிகம் உள்ள 38 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் எதிர்க்கட்சியை நிராகரித்துள்ளனர்.
பீகார் தேர்தலின்போது, ஜாமினில் வந்த அரசியல்வாதிகளும், அவர்களுடைய கூட்டாளிகளும் ஆட்சிக்கு வந்தால் வக்பு சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று மசோதாவை பொது வெளியில் கிழித்தனர். பீகார் மக்கள் இந்த வகுப்புவாத விசத்தை முற்றிலுமாக நிராகத்துள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார்.
- மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார்.
தெருநாய்கள் பிரச்சனையால் குஜராத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள் என புலம்பி வருகிறார். கடந்த 2006 -ம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வருகிறார்.
திருமணம் முடிந்த கொஞ்சநாளில் அவரது மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார்.
தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அதோடு அந்த நாய்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். இரவு நேரம் அந்த நாய்களுடன் தூங்கினார். மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது. பக்கத்தில் வசித்து வந்த பொதுமக்களும் அப்பெண் மீது போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் விலங்குகள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த அவர் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டினார். இதனால் அந்த பெண்ணின் கணவரும் போலீஸ் நிலையத்துக்கு அலைந்தார். மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார். இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றுவதாகவும், இதன் காரணமாக மன அழுத்தத்தால் தனது ஆண்மை இழந்து விட்டதாகவும் அவர் புலம்ப ஆரம்பித்தார்.
இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அவர் தெரு நாய்களுடன் வாழ்க்கை நடத்திய மனைவியுடன் இனியும் குடும்பம் நடத்த முடியாது என கருதி தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி அகமதாபாத் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மனைவிக்கு ரூ. 15 லட்சம் ஜீவனாம்சம் கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரது மனைவியோ கணவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் ரிசார்ட் நடத்தி வருவதால் தனக்கு ரூ. 2 கோடி வேண்டும் என கேட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 1-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
- குஜராத்தின் சூரத் நகரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
- மேகாலயாவின் ஆகாஷ் குமார் அதிவேகமாக அரை சதம் கடந்து சாதனை படைத்தார்.
அகமதாபாத்:
குஜராத்தின் சூரத் நகரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'பிளேட் குரூப்' போட்டி நடந்து வருகிறது. இதில் மேகாலயா, அருணாச்சல பிரதேசம் அணிகள் மோதுகின்றன. முதல் நாள் முடிவில் மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 386/2 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேகாலயா அணிக்கு அர்பித் படேவாரா (207), கேப்டன் கிஷான் லின்தோ (119), ராகுல் தலால் (144) கைகொடுத்தனர்.
அடுத்து இறங்கிய ஆகாஷ் குமார் சவுத்ரி முதல் 3 பந்தில் 2 ரன் (0, 1, 1) மட்டுமே எடுத்தார். அதன்பின், அடுத்த 8 பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார்.
வரிசையாக 8 சிக்சர்களை விளாசிய இவர் 11 பந்தில் அரைசதம் எட்டினார். முதல்தர போட்டியில் தொடர்ச்சியாக 8 சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 628/6 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆகாஷ் 50 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இந்நிலையில், முதல்தர போட்டியில் அதிவேகமாக (11 பந்து) அரைசதம் விளாசிய வீரரானார் ஆகாஷ் குமார் சவுத்ரி. முன்னதாக, லீசெஸ்டர்ஷையர் அணியின் வெய்ன் ஒயிட் 12 பந்தில் (2012) இச்சாதனை படைத்திருந்தார்.
முதல் தர போட்டியில் வரிசையாக 6 சிக்சர் பறக்கவிட்ட 3வது வீரரானார் ஆகாஷ் குமார். வெஸ்ட் இண்டீசின் சோபர்ஸ், இந்தியாவின் ரவி சாஸ்திரி ஆகியோர் இப்படி சாதித்துள்ளனர்.
- இவருக்கு ஜான்வி, ஜியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
- மாலை வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் போலீசில் புகார் அளித்தனர்.
குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம் போரிசனா கிராமத்தை சேர்ந்த தீரஜ் ரபாரி பல பெட்ரோல் பங்களை நடத்தி தொழிலதிபராக இருந்து வந்தார். இவருக்கு ஜான்வி, ஜியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை தனது மகள்களை காரில் அழைத்துக்கொண்டு ஆதார் கார்டு பதிய தீரஜ் ரபாரி வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார்.
மாலை வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், தீரஜ் தனது நண்பருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு மகள்களுடன் நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
மூவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
- துப்பட்டாவால் முகத்தை முழுவதுமாக மூடிய பெண் ஒருவர் நகைக்கடைக்கு வந்துள்ளார்.
- இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நகைக்கடையில் மிளகாய் போடி தூய் நகையை திருட முயன்ற பெண்ணை கடைக்காரர் 20 முறை அறைந்த சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
நவம்பர் 3 ஆம் தேதி அன்று நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானது.
துப்பட்டாவால் முகத்தை முழுவதுமாக மூடிய பெண் ஒருவர் நகைக்கடைக்கு வந்துள்ளார். அப்போது திடீரென கையில் மறைத்துவைத்திருந்த மிளகாய் பொடியை கடைக்காரர் மீது தூவி நகையை கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
மிளகாய் போடி கண்ணில் விழாததால் சுதாரித்துக்கொண்ட கடைக்காரர் அந்த பெண்ணை பலமுறை பலமாக ஆராய்ந்துள்ளார். அதாவது கிட்டத்தட்ட 25 வினாடிகளில் 20 முறை அப்பெண்ணை பளார் பளார் என்று அவர் அறைந்துள்ளார்.
இது தொடர்பாக கடைக்காரர் புகார் கொடுத்த மறுத்த நிலையிலும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருட முயன்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு.
- பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கறிஞர், சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ்கள் அவர் உடல்நிலை மோசமாக இருப்பதை இருப்பதைக் குறிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
2013 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவின் தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன.
சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
கடந்த மாதம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஆசாராமின் தண்டனையை நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் இன்று காலை, குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் இலேஷ் ஜே. வோரா மற்றும் நீதிபதி ஆர்.டி. வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன், ஆசாராமின் வழக்கறிஞர் தேவ்தத் காமத், மேலும் 6 மாதங்கள் ஜாமீன் கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவையும் மருத்துவ சான்றிதழைகளையும் சமர்ப்பித்தார்.
அவரது உடல்நிலை மற்றும் சிறையில் அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவ வசதிகள் இல்லாததைக் கருத்தில் கொண்டு குஜராத் உயரநீதிமன்றம் அவருக்கு மேலும் 6 மாதம் ஜாமீன் வழங்கி உள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கறிஞர், சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ்கள் அவர் உடல்நிலை மோசமாக இருப்பதை இருப்பதைக் குறிக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய போதிலும், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.






