search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்"

    • சாலேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலில் ராமுலம்மா தரிசனத்திற்காக வந்தார்.
    • சிறிது தூரத்திற்கு மேல் அவரால் மலை பாதையில் ஏறி செல்ல முடியவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், சாலேஸ்வரம் நல்ல மலையை சேர்ந்தவர் ராமுலம்மா (வயது 75).

    இவர் நேற்று சாலேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலில் தரிசனத்திற்காக வந்தார். தரிசனம் முடிந்து வீட்டிற்கு செல்ல மலைப்பாதையில் நடந்து வந்தார். சிறிது தூரத்திற்கு மேல் அவரால் மலை பாதையில் ஏறி செல்ல முடியவில்லை.

    அந்த வழியாக வந்த சாலேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் வேலை செய்யும் ராமதாஸ் என்ற போலீஸ்காரர் மூதாட்டியின் பரிதாப நிலையை கண்டார்.

    இதையடுத்து மூதாட்டியை தனது தோளில் சுமந்து சென்று அவரது வீட்டில் விட்டார். போலீஸ்காரர் மூதாட்டியை தோளில் சுமந்து செல்வதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    போலீஸ்காரரின் மனிதாபிமானத்தை பார்த்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

    தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் துணை ராணுவ படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை ராணுவ வீரர்களுக்கு திருத்தணி போலீஸ் சார்பில் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

    இதற்காக கோழிக்கறி வறுவல், கோழிக்கறி கிரேவி மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகள் தடபுடலாக சமைக்கப்பட்டு, துணை ராணுவ வீரர்களுக்கு சுடச்சுட பரிமாறப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த துணை ராணுவ வீரர்களுக்கு போலீசார் அசைவ விருந்து வைத்த சம்பவம் பொது மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. 

    • கடும் வெயிலால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
    • அரசு நலத்திட்டங்களை பெறுவதில்லை என ரேஷன்கார்டை கவுரவ ரேஷன்கார்டாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    கோடைகாலம் தொடங்கியதால் புதுவையில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது.

    காலை 7 மணி முதல் வெப்பம் அதிகரித்து செல்கிறது. சாலையில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. கடும் வெயிலால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் முதியோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலும் கோடை வெப்பம் தகித்து வருகிறது. வெயிலில் வாடிய முதியவருக்கு போலீஸ்காரர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காரைக்கால் நெடுங்காடு சந்திப்பு சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் முகமது ஹாஜா, அந்த வழியே காலில் செருப்பு அணியாமல் வந்த மூதாட்டியை பார்த்தார்.


    கடும் வெயிலால் நடக்க சிரமப்பட்டு வந்தார். இதைப்பார்த்த போலீஸ்காரர் மூதாட்டியை நிறுத்தி அருகிலிருந்த கடையில் செருப்பு, குடை வாங்கி கொடுத்தார்.

    தொடர்ந்து மூதாட்டிக்கு இளநீர் வாங்கி கொடுத்தார். அந்த வழியே சென்ற முதியோருக்கும் இளநீர் வாங்கி கொடுத்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் போலீஸ்காரரை பாராட்டி வருகின்றனர்.

    இவர் ஏற்கனவே அரசு நலத்திட்டங்களை பெறுவதில்லை என ரேஷன்கார்டை கவுரவ ரேஷன்கார்டாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நில பிரச்சினை சம்பந்தமாக பழங்குடியினர் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
    • இன்ஸ்பெக்டரை குறிவைத்து பழங்குடியின வாலிபர்கள் சிலர் தாக்கி கொண்டே இருந்தனர்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் சத்துப்பள்ளி மண்டலம் ராய பாலம் கிராமத்தில் பழங்குடியினர்கள் வசித்து வருகின்றனர்.

    நில பிரச்சினை சம்பந்தமாக பழங்குடியினர் இரு தரப்பினர் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது.

    இதனை அறிந்த சத்து பள்ளி போலீசார் பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க அங்கு வந்தனர். இரு தரப்பினரையும் ஒருங்கிணைத்து பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றனர்.

    அப்போது ஆத்திரம் அடைந்த பழங்குடியினரின் ஒரு தரப்பினர் கம்புகளால் போலீசாரை தாக்கினர். அதிலும் குறிப்பாக இன்ஸ்பெக்டர் ஒருவரை பைக்கில் இருந்து கீழே இழுத்து தள்ளினர். அவரை கம்பு மற்றும் கைகளால் புரட்டி எடுத்தனர். அங்கிருந்த போலீசாரால் இதை தடுக்க முடியவில்லை.

    இன்ஸ்பெக்டரை குறிவைத்து பழங்குடியின வாலிபர்கள் சிலர் தாக்கி கொண்டே இருந்தனர்.

    இதனால் போலீசார் இன்ஸ்பெக்டரை மீட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில் இன்ஸ்பெக்டர் உட்பட மேலும் சில போலீசார் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பழங்குடியினர் குறிப்பாக ஒரு இன்ஸ்பெக்டரை மட்டும் குறிவைத்து அதிக அளவில் தாக்கியது ஏன் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்ல. இன்ஸ்பெக்டரை குறி வைத்து தாக்கியதில் சதி செயல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டரை பழங்குடியினர் விரட்டி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தலை தடுக்க பிரதமர் மோடி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
    • ஜாபர்சாதிக், டி.ஜி.பியிடம் விருது வாங்கியுள்ளார். சினிமா கம்பெனி நடத்துகிறார். தி.மு.க. குடும்பத்துடன் நட்பாக உள்ளார்.

    கோவை:

    பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போதைப்பொருள் இந்தியாவின் எல்லையில் இருந்து ஊடுருவுகின்றன.

    இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தலை தடுக்க பிரதமர் மோடி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    கடந்த 2013-ம் ஆண்டு ஜாபர் சாதிக் உள்பட 4 பேர் சின்தடிக் போதைப்பொருள் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டனர்.

    அப்போது 20 கிலோவுக்காக கைது செய்யப்பட்ட அவர் 11 ஆண்டுகள் கழித்து 3 ஆயிரத்து 500 கிலோ போதைப்பொருளை கையாளும் வகையில் விஸ்வரூபமாக உயர்ந்துள்ளார்.

    ஒருமுறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிட்டால் போலீசார் கண்காணிக்க வேண்டும். ஆனால் அவரை போலீசாரும் தமிழக அரசும் கண்காணிக்கவில்லை. இதில் போலீசார் தோற்றுவிட்டனர்.

    ஜாபர்சாதிக், டி.ஜி.பியிடம் விருது வாங்கியுள்ளார். சினிமா கம்பெனி நடத்துகிறார். தி.மு.க. குடும்பத்துடன் நட்பாக உள்ளார்.

    ஜாபர் சாதிக் எல்லா இடத்திலும் ஊடுருவியுள்ளார். முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் என எல்லோருடனும் உள்துறை அமைச்சகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்-அமைச்சர் போதைப்பொருள் கடத்தல் விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து இதனை ஒரு சமுதாய இயக்கமாக ஒருங்கிணைக்க வேண்டும்.

    பா.ஜனதா இதற்காக ஒரு திட்டத்தை தொடங்கி உள்ளது. வருகிற 7 மற்றும் 8-ந் தேதிகளில் தென்காசியில் போதைப்பொருளுக்கு எதிரான நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.

    நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது கட்சிக்கு சின்னம் வேண்டும் என்றால் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அவர் விண்ணப்பிக்க தவறிவிட்டார்.

    அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால் அவருக்கு சின்னம் கிடைத்திருக்கும். ஆனால் அவர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் சின்னம் கிடைக்கவில்லை. இதற்கும் எனக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. சீமான் முதலில் மோடியை திட்டினார். தற்போது அண்ணாமலையை திட்ட தொடங்கி உள்ளார்.

    புதுச்சேரியில் பா.ஜனதா சுவரொட்டிகளில் எம்.ஜி.ஆர் உள்ளிட்டோர் படங்கள் இடம்பெற்றது தொடர்பாக நான் கருத்து கூற முடியாது. தமிழகத்தில் பா.ஜனதா சுவரொட்டிகளில் மற்ற தலைவர்களின் படங்கள் இருக்காது.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 39 தொகுதிகளிலும் எனக்கு பணி உள்ளது. தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று சொல்லவே இல்லை. பிரதமர் மோடி என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • விதி மீறலில் ஈடுபட்ட ஒரு நபருக்கு 7 நாட்களுக்குப் பிறகே அபராதம் தொடர்பான ரசீது அனுப்பப்படுவது உண்டு.
    • காவல்துறையில் இருந்து தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டும் வகையில் யாரும் பேசமாட்டார்கள்,

    சென்னை:

    சென்னை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக போலீசார் சாலைகளில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகரில் தினமும் 6 ஆயிரம் போலீசார் களப்பணியாற்றி வருகிறார்கள். 1500-ல் இருந்து 3 ஆயிரம் கேமராக்கள் வரையில் பொருத்தப்பட்டு அதன் மூலமாக போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சில நேரங்களில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடாமல் முறையாக வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுகிறது. சென்னை மாநகரில் தினமும் 5 ஆயிரம் வழக்கு கள் பதிவு செய்யப்படும் நிலையில்15 பேர் மட்டுமே தாங்கள் விதிமுறைகளில் ஈடுபடவில்லை. இருப்பினும் எங்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது என்று அப்பீல் செய்து வருகிறார்கள்.

    இதுபோன்று உண்மையிலேயே தவறு நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் 7 நாட்களுக்குள் அவர்கள் அப்பீல் செய்யலாம் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    விதி மீறலில் ஈடுபட்ட ஒரு நபருக்கு 7 நாட்களுக்குப் பிறகே அபராதம் தொடர் ன ரசீது அனுப்பப்படுவது உண்டு. அதற்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் போக்குவரத்து காவல் துறையை அணுகி உரிய ஆதாரங்களை காட்டி அபராதம் கட்டுவதில் இருந்து விலக்கு பெறலாம் என்று போலீசார் தெரித்துள்ளனர்.

    இதற்காக புகைப்பட ஆதாரங்கள் வீடியோ ஆதா ங்கள் போன்றவற்றைக் காட்டி வாகன ஓட்டிகள் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை முதலில் போலீசார் கேமராக்கள் மூலம் கண்டுபிடிக்கிறார்கள்.

    அதன் பிறகு எந்த விதிமுறைகளில் சம்பந்தப் பட்ட வாகனம் ஈடுபட்டுள்ளது என்பதை கண்டறிந்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டறை மூலமாக அவர்களுக்கு உரிய அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு நாளைக்கு 3 ஆயிரத்து 500 ரசீதுகள் அனுப்பப்பட்டு வருகின்றன என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே சென்னை மாநகர காவல்துறையை போன்ற போலியான முகவரிகளை உருவாக்கி மர்ம நபர்கள் சிலர் பணம் பறிக்கும் வேலையிலும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அது போன்ற நபர்களிடம் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.

    காவல்துறையில் இருந்து தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டும் வகையில் யாரும் பேச மாட்டார்கள் என்றும் பணம் பறிக்கும் நோக்கத்தில் இருப்பவர்கள் அது போன்று பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் எனவே பொதுமக்கள் இணையதள முகவரியிலேயே அபராதங்களை கட்டிக் கொள்ளலாம் இது போன்ற மோசடி ஆசாமிகளிடம் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    • 100 வருடங்களுக்கு மேல் இந்த பாரம்பரியா மரியாதை தொடர்வதாக பெரியவர்கள் கூறுகிறார்கள்.
    • நடைமுறையும், மரியாதையும் மிகவும் புதுமையாக உள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் விழாக்கள் அனைத்தும் சென்னிமலை டவுன் கிழக்கு ரத வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலிலும், திருத்தேரோட்டம் நகரின் நான்கு ரத வீதிகளில் தான் நடக்கும்.

    சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில் தேர் ரதம் பிடிக்கும் போது போலீஸ் நிலையம் சென்று அழைத்து வருவது. அதேபோல் நிலை சேர்ந்தவுடன் தேர் நிலையில் இருந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விடுவார்கள்.

    இந்த பழக்கம் பல நீண்ட வருடங்களாக உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கின்றனர். இது நடைமுறை என்பதை விட பழக்கம் என கூறலாம். 100 வருடங்களுக்கு மேல் இந்த பாரம்பரியா மரியாதை தொடர்வாதக பெரியவர்கள் கூறுகிறார்கள். இன்னும் இந்த மரியாதை மாறாமல் தொடர்ந்தது.

    இதில் சென்னிமலை இன்ஸ்பெக்டராக புதியதாக பொறுப்பேற்றுள்ள செந்தில்பிரபு நான் பல இடங்களில் பணியாற்றி உள்ளேன். இங்கு இந்த நடைமுறையும், மரியாதையும் மிகவும் புதுமையாக உள்ளது. மிகுந்த மன நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. கோவில் நிர்வாகத்திற்கும், தேரோட்டத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான முருகபக்தர்களுக்கும் என்றும் நான் தொண்டு செய்ய சென்னிமலை முருகன் அருள்புரிய வேண்டும் என்றார்.

    • பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள்.
    • வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய ‘நெட்வொர்க்’ அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    செல்போன்கள் மூலமாக இன்று இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் செய்துவிட முடிகிறது. அதே நேரத்தில் செல்போன் வழியாக பல்வேறு இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.

    செல்போனில் தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து விதவிதமான வழிகளில் பணத்தை உருவிக் கொண்டிருக்கிறார்கள்.

    உங்களது ஏ.டி.எம். கார்டு செயல் இழந்துவிட்டது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று பேசி வங்கி கணக்கு விவரங்களை கேட்டு பணத்தை சுருட்டி வந்த மோசடி பேர்வழிகள் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை வாரிச் சுருட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற மோசடிக்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய 'நெட்வொர்க்' அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பது என்பது சவாலாகவே இருந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து தற்போது புதிதாக நூதன முறையில் பலரை ஏமாற்றி பணத்தை அபகரிக்க தொடங்கி உள்ளனர்.

    உங்களது முகவரிக்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பார்சலில் வந்துள்ளது. நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். போதை பொருள் தடுப்பு பிரிவில் இருந்து பேசுகிறோம் என்று மோசடி ஆசாமி ஒருவன் முதலில் போனில் பேசுகிறார். பின்னர் பேசும் நபர் போலீஸ் அதிகாரி என்று கூறுகிறார்.

    இதனால் எதிர்முனையில் பேசிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் அரண்டு விடுகிறார்கள். இதுபோன்று சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் 62 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

    தொழில் அதிபரின் செல்போனுக்கு அறிமுகம் இல்லாத புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்பை துணை கமிஷனர் பேசுவதாக கூறியுள்ளார். உங்களது பெயரில் மும்பையில் உங்களது பெயரில் மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு கூரியர் மூலமாக பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 5 பாஸ்போர்ட்டுகள் 3 கிரெடிட் கார்டுகள் மற்றும் போதை பொருட்கள் உள்ளன என்றும் இதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றும் அந்த நபர் எச்சரித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை தொழில் அதிபர், நான் சென்னையில் இருக்கிறேன். எனது பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளனர். எனக்கும், அந்த பார்சலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.

    இருப்பினும் மோசடி ஆசாமி போனில் மிரட்டி, நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பயந்து போன சென்னை தொழில் அதிபர் ரூ.62 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை அனுப்பி உள்ளார்.

    இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டல் விடுத்த மோசடி கும்பல் பின்னர் தொடர்பை துண்டித்துவிட்டது. முன்னதாக தொழில் அதிபர் திரும்ப திரும்ப தொடர்பு கொண்டு பேச முற்பட்டுள்ளார். ஆனால் அதற்கு பயன் கிடைக்கவில்லை.

    இந்த மோசடி தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸ் துணை கமிஷனர் கீதாஞ்சலி கூறியதாவது:-

    இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகள் அதிக சம்பளம் வாங்கும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கிறார்கள்.

    பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள். இந்த யோசனைகள் 'ஸ்கைப்' செயலி மூலமாக அரங்கேற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்த மோசடி பேர்வழிகள் ஆரம்பத்தில் பணத்தை கேட்பது இல்லை. வங்கி கணக்குகள் மற்றும் அதன் உள்ளே நுழையக்கூடிய வழிகளை மிரட்டி கேட்டுப் பெற்று வருகிறார்கள். இதன் பிறகே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள் அல்லது மிரட்டி பணத்தை பரி மாற்றம் செய்ய சொல்கிறார்கள். தாய்லாந்து மற்றும் ஹாங்காங் பகுதியில் இருந்தே இந்த மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

    எனவே இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    ஆன்லைன் மூலமாக பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்ணை 1930-ல் உடனடியாக புகார் செய்தால் அந்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகளிடம் ஏமாறும் பொது மக்கள் www.cybercrime gov.in என்ற முகவரியிலும் புகார் செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர்.
    • சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள மாநில வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கோர்ட்டு அலுவலகம் கட்ட மாநில அரசு முடிவு செய்தது.

    பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட உள்ள இடத்தில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட உள்ளது.

    புதிய கட்டிடத்திற்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது வந்த போலீசார் மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை விரட்டியடித்தனர்.

    அப்போது கல்லூரி மாணவி ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். பைக்கில் வந்த 2 பெண் போலீசார் மாணவியை துரத்தி சென்றனர்.

    மாணவியின் அருகில் சென்ற பெண் போலீஸ் ஒருவர் மாணவியின் நீண்ட தலை முடியை பிடித்து கொண்டார். இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

    கீழே விழுந்த மாணவியின் தலைமுடியை பிடித்துக் கொண்டு தரதரவென இழுத்துக் கொண்டு பைக்கை ஓட்டி சென்றனர்.

    இதனால் மாணவி சிறிது தூரம் தரையில் விழுந்து உரசியபடி சென்றதால் காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த சில மாணவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அதில் இந்த சம்பவம் ஆழ்ந்த கவலைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    இதுகுறித்து மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையம் விரிவான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார். 

    • 17 காளைகளை அடக்கு கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார்.
    • 10 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

    உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 10 சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், 17 காளைகளை அடக்கு கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார். இவருக்கு, தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கினார்.

    இதற்கிடையே, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 51 பேர் காயமடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த , 10 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    25 காளை உரிமையாளர்கள், 22 மாடுபிடி வீரர்கள், 2 பார்வையாளர்களை, 2 போலீசார் என 51 பேர் காயமடைந்துள்ளனர்.

    • நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
    • அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரம்பட்டியில் சாலம்மாள் (வயது50).

    இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக, 85 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தால் அதன் அருகில் உள்ள சாலம்மாளின் சகோதரியான முனியம்மாள் (60) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதில், சாலம்மாள் தன்னுடைய நிலத்தை நில அளவயர் மூலம் முழுமையாக அளவீடு செய்ய முடிவு செய்தார். அதன்படி நிலத்தை அளவீடு செய்ய தாசில்தாரிடம் மனு அளித்து, தொப்பூர் போலீசார் பாதுகாப்புடன் பாகலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ், நில அளவயர் ஜோதி உள்ளிட்டோர் தண்டு காரம்பட்டி ஏரி அருகே உள்ள நிலத்தை அளவீடு செய்ய சென்றனர்.

    இந்த நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் கோபமடைந்து அதிகாரிகளிடம் முனியம்மாளும், மாதம்மாளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, நில உரிமையாளர் சாலம்மாள் அவருடன் வந்த உறவினர் மற்றும் தொப்பூர், எஸ்.எஸ்.ஐ., சரவணன் உள்ளிட்டோர் மீது முனியம்மாள் அவரது மகள் மாதம்மாள் கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை ஊற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இச்சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 2 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து முனியம்மாள், அவரது மகள் மாதம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சென்னையில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    • முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    2023 ஆண்டின் கடைசி நாள் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னைவாசிகளுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். நாளை (டிசம்பர் 31) உலகம் முழுக்க புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

    ஆங்கில புத்தாண்டு பிறப்பை மக்கள் கோலாகலமாக கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், புத்தாண்டை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடும் வகையில் சென்னையில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் சென்னை வார் மெமோரியல் சாலை முதல் லைட் ஹவுஸ் வரை இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

     


    பெசன்ட் நகர் கடற்கரையில், 6-வது அவென்யூ சாலைகள் மூடப்படுகின்றன. கடற்கரை பகுதிகளில் மது அருந்த தடை. கடற்கரையில் மணற்பகுதிகளில் மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும். கடலில் இறங்க அனுமதி கிடையாது. கடற்கரையிலும் மது அருந்த தடை. பெண்கள் மீதான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வாகனங்களில் வேகமாக செல்வது, ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டுவது, சாகசம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நகர் முழுக்க 6 ஆயிரத்திற்கும் அதிக கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    நாளை (டிசம்பர் 31) இரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். கேளிக்கை விடுதிகள், ரெசார்ட், ஓட்டல்கள் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். பாதுகாப்பு கருதி சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் இரவு நேரத்தில் மூடப்படும். புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

    ×