என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோ வழக்கில் போலீஸ் கைது
- 15 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியிலான சில்மிஷத்தில் சசிகுமார் ஈடுபட்டுள்ளார்.
- மாணவி படிக்கும் பள்ளியில் தவறான தொடுதல் தொடர்பான வகுப்பு சமீபத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 45). இவர் கடந்த 2002-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.
தற்போது பாளையங்கோட்டை ஆயுதப்படையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ள நிலையில் குடும்பத்துடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாக குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சசிகுமார் பாளையங்கோட்டையில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவர்களது குடும்பத்தினருடன் அவர் நெருங்கி பழகி வந்த நிலையில் உறவினரின் மகளான 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியிலான சில்மிஷத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரது உறவினர் குடும்பத்தினருக்கு தகவல் எதுவும் தெரியாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் அந்த மாணவி படிக்கும் பள்ளியில் தவறான தொடுதல் தொடர்பான வகுப்பு சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அப்போதுதான் அந்த மாணவிக்கு சசிகுமார் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்த விபரம் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவி தனது தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். ஆனாலும் அவரது தாய் போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே அவர் படிக்கும் பள்ளியில் சக மாணவிகளிடம் தனக்கு சோர்வாக இருப்பதாக தெரிவித்த அந்த மாணவி அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். உடனடியாக சக மாணவிகளின் அறிவுறுத்தலின் பேரில் 'ஒன் ஸ்டாப்' சென்டரை தொடர்பு கொண்ட அந்த மாணவி நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தைகள் நலன் சார்ந்த அதிகாரிகள் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து ள்ளனர்.
இதையடுத்து சிறுமியிடம் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு ஏட்டு சசி குமாரை கைது செய்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மாணவியின் தாயாருக்கும், தலைமை காவலர் சசி குமாருக்கும் நெருக்கமான பழக்கம் இருப்பதாகவும், அதன் காரணமாகவே மாணவியின் புகாரை போலீசில் தெரிவிக்க அவரது தாயார் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






