என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "corruption"

    • இந்தியா 100-க்கு 39 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
    • 28 மதிப்பெண்களுடன் பாகிஸ்தான் 136வது இடத்திலும், 24 மதிப்பெண்ணுடன் வங்கதேசம் 150வது இடத்திலும் உள்ளது.

    உலகளவில் பொதுத்துறையில் நிலவும் ஊழல் குறித்த Corruption Perceptions Index - CPI குறியீடு 2025 அறிக்கையை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.

    இந்த ஆய்வில், அதிக மதிப்பெண் பெற்றால் அரசு நிர்வாகத்தில் ஊழல் குறைந்து பட்டியலில் முன்னேறி இருப்பதாகவும், குறைந்த மதிப்பெண் பெற்றால் ஊழல் மலிந்த நாடுகளாக பின்தங்கி இருப்பதாவும் வரையறுக்கப்படுகிறது.

    மொத்தம் 182 நாடுகளின் பட்டியலில் உலகின் மிகக் குறைந்த ஊழல் கொண்ட நாடாக டென்மார்க் 100-க்கு 89 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் 84 மதிப்பெண்ணுடன் 3வது இடத்தில் உள்ளது.

    பட்டியலில் இந்தியா 91-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் 96-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 5 இடங்கள் முன்னேறி 91-வது இடத்திற்கு வந்துள்ளது.

    இந்த ஆண்டு இந்தியா 100-க்கு 39 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அதேநேரம் 28 மதிப்பெண்களுடன் பாகிஸ்தான் 136வது இடத்திலும், 24 மதிப்பெண்ணுடன் வங்கதேசம் 150வது இடத்திலும் உள்ளது.

    ஊழல் குறித்த இந்தப் பட்டியலில் டென்மார்க் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ள நிலையில், சோமாலியா மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகள் பட்டியலின் கடைசி இடங்களில் உள்ளன.

    உலகளாவிய சராசரி மதிப்பெண் 42 ஆகவும், ஆசிய-பசிபிக் பிராந்திய சராசரி 45 ஆகவும் உள்ளது.

    இந்தியாவின் 39 மதிப்பெண் இந்த இரண்டு சராசரிகளை விடவும் குறைவாகவே உள்ளது.

    பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் நிலவும் ஊழல், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    பலவீனமான சட்டங்கள், பொறுப்பற்ற தலைமைத்துவம் மற்றும் அரசியல் நிதியுதவியில் வெளிப்படைத்தன்மை இல்லாதது ஆகியவை பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் நல்லாட்சியை பலவீனப்படுத்துகின்றன" என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஆசிய பசிபிக் ஆலோசகர் இல்ஹாம் முகமது ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.   

    • 30 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் அவர் தனது வாழ்நாளைக் கழித்தார்.
    • தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற கூற்றுக்கு பாபுபாய் பிரஜாபதி உதாரணமாகியுள்ளார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த முன்னாள் போலீஸ் கான்ஸ்டபிள் அதிகாரி பாபுபாய் பிரஜாபதி (64).

    1996-ஆம் ஆண்டு, லாரி ஓட்டுநர் ஒருவரிடம் 20 ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் பாபுபாய் பிரஜாபதி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்கு பின் 2004 ஆம் ஆண்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    4 ஆண்டுகள் கடந்து விடுதலை ஆன போதும் தன் மீதான களங்கத்தை துடைக்க அவர் செய்த மேல்முறையீடு மேல்முறையீடு குஜராத் உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.

    கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் அவர் தனது வாழ்நாளைக் கழித்தார்.

    கடந்த புதன்கிழமை, குஜராத் உயர் நீதிமன்றம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை நிரபராதி என அறிவித்து வழக்கிலிருந்து விடுவித்தது. ஆனால் தீர்ப்பு வந்த மறுநாளே (வியாழக்கிழமை) அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

    தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற கூற்றுக்கு பாபுபாய் பிரஜாபதியின் நிலை மற்றொரு உதாரணமாக மாறியுள்ளது. 

    • ஊழல் மற்றும் லஞ்சத்தை குறைக்கவோ அல்லது நமது நிர்வாகத்திலிருந்து அகற்றவோ முடியாது.
    • இளைஞர்களிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா வேண்டுகோள் விடுத்தார்.

    ஊழலை கட்டுப்படுத்த நாட்டின் இளைஞர்கள் தங்கள் பெற்றோர்கள் ஊழல் வழிகளில் ஈட்டும் செல்வத்தைத் தவிர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா வேண்டுகோள் விடுத்தார்.

    2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இன் பிரிவு 17A அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதி பி.வி. நாகரத்னா தீர்ப்பளித்தார். இருப்பினும், மற்றொரு நீதிபதி விஸ்வநாதன் இது அரசியலமைப்பிற்கு எதிராக வில்லை என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

    அப்போது பேசிய நாகரத்னா, "நம் நாட்டின் இளைஞர்களும் குழந்தைகளும் தங்கள் பெற்றோர்கள் வருமானத்திற்கு அப்பால் ஊழல் மூலம் சம்பாதிக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும். அது தேசத்திற்கும் செய்யும் ஒரு சிறந்த சேவையாக இருக்கும்

    ஒருவரின் பேராசை மற்றும் பொறாமை மனப்பான்மையைக் கட்டுப்படுத்தி, மனதிலிருந்து அழிக்க வேண்டும். இல்லையெனில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதற்கு வழிவகுக்கும் ஊழல் மற்றும் லஞ்சத்தை குறைக்கவோ அல்லது நமது நிர்வாகத்திலிருந்து அகற்றவோ முடியாது. இத்தகைய போக்குகளைக் கட்டுப்படுத்தக்கூடிய வழிகளில் ஒன்று, ஆன்மீக மனநிலையை வளர்த்து மேம்படுத்துவதாகும். இதன் விளைவாக பொருள் சார்ந்த ஆசையில் இருந்து விடுபட்டு தேசத்திற்கு சேவை செய்வதில் கவனம் செலுத்த வைக்கும்" என்று தெரிவித்தார்.

    சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தில் கூட இதே போன்றதொரு கருத்தை தான் கூறியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் நேரத்தில் மட்டுமே சில தலைவர்களின் குரல் உயர்கிறது.
    • பாஜக ஆட்சியில் மாநகராட்சியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாலம் திட்டத்தைச் செலவு கணக்கில் 7 கோடி ரூபாயாக உயர்த்தியது

    மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியில் உள்ள பாஜக - அஜித் பவார் தலைமையிலான என்சிபி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

     ஆளும் கூட்டணியில் ஒன்றாக இருந்தாலும், எதிர்வரும், மும்பை, புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சித் தேர்தலில் பாஜக ஓரணியாகவும் மற்றும் அஜித் பவார் என்சிபி, இந்தியா கூட்டணியில் உள்ள சரத் பாவர் என்சிபியுடன் கூட்டணி வைத்து எதிராணியாகவும் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பஜகவை சேர்ந்த மகாராஷ்டிர முதல்வர் பட்நாவிஸ், "தேர்தல் நேரத்தில் மட்டுமே சில தலைவர்களின் குரல் உயர்கிறது. அஜித் தாதா வெறும் பேச்சிலேயே நேரத்தை வீணடிக்கிறார், ஆனால் நான் களத்தில் வேலை செய்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

    பட்நாவிஸின் கருத்துக்குப் பதிலளித்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், "நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை, அரசின் தோல்விகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்.

    சின்ச்வாட் மாநகராட்சியில் பாஜக செய்த ஊழல்கள் மற்றும் தவறுகளைச் சொல்வது விமர்சனம் ஆகாது" என்று கூறினார்.

    மேலும், பாஜக ஆட்சியில் பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாலம் திட்டத்தைச் செலவு கணக்கில் 7 கோடி ரூபாயாக உயர்த்தியது உட்படப் பல முறைகேடுகளை அஜித் பவார் கூறியுள்ளார். ஒரு மாநிலத்தின் துணை முதல்வர், முதல்வரின் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு வைப்பது பேசுபொருளாகி உள்ளது. 

    • பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அனில் விஜ் உள்ளார்.
    • ஆயிரக்கணக்கான நபர்களைப் போலியாகத் தொழிலாளர்களாகப் பதிவு செய்து, அவர்களுக்குப் போலி ஒர்க் ஸ்லிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அரியானா மாநில தொழிலாளர் நலத்துறையில் சுமார் ரூ.1,500 கோடி ஊழல் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் எரிசக்தி, போக்குவரத்து மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அனில் விஜ் உள்ளார்.

    இந்தியாவில் கட்டுமானத் தொழிலாளர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற வேண்டுமானால், அவர்கள் ஒரு வருடத்தில் குறைந்தது 90 நாட்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதற்கான ஆதாரமே ஒர்க் ஸ்லிப் ஆகும்.

    இந்நிலையில் அரியானாவில் தொழிலாளர் நல வாரியத்தில் இருக்கும் நிதியைப் பெறுவதற்காக, கட்டுமானப் பணியில் ஈடுபடாத ஆயிரக்கணக்கான நபர்களைப் போலியாகத் தொழிலாளர்களாகப் பதிவு செய்து, அவர்களுக்குப் போலி ஒர்க் ஸ்லிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதன் மூலம் சுமார் ரூ.1,500 கோடி ரூபாய் நலத்திட்ட நிதி முறைகேடாகக் கையாளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    போலிப் பதிவுகளைக் கண்டறிய அனில் விஜ் உத்தரவிட்டதை அடுத்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பல மாவட்டங்களில் தகுதியற்றவர்களுக்குத் திட்டப் பயன்கள் சென்றடைந்தது தெரியவந்தது.  

    இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த அரியானா முதல்வர் நாயப் சிங் சைனி 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். 

    • லோக்பால் அமைப்பு 'BMW 3 Series 330Li' ரக கார்களை வாங்கத் திட்டமிட்டிருந்தது.
    • ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் லோக்பால் தலைவராக உள்ளார்.

    ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 7 சொகுசு பிஎம்டபிள்யூ கார்களை வாங்குவதற்கான சர்ச்சைக்குரிய டெண்டரை ரத்து செய்துள்ளது.

    லோக்பால் உடைய தலைவர் மற்றும் அதன் 6 உறுப்பினர்களுகளின் அலுவலக பயன்பாட்டிற்காக மொத்தம் 7 பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை வாங்குவதற்கான டெண்டர் கடந்த 2025 அக்டோபரில் வெளியிடப்பட்டது.

    லோக்பால் அமைப்பு 'BMW 3 Series 330Li' ரக கார்களை வாங்கத் திட்டமிட்டிருந்தது. தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் லோக்பால் தலைவராக உள்ளார்.

    ஊழலை ஒழிப்பதற்கான ஒரு அமைப்பு, இவ்வளவு பெரிய தொகையில் சொகுசு கார்களை வாங்குவது குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

    இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, சொகுசு கார்கள் வாங்கும் முடிவு குறித்துலோக்பால் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி இந்த கொள்முதல் திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

    • மேல்முறையீடு செய்யப்பட்டபோதும் உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.
    • குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்தித்த பிறகு தூக்கிலிடப்பட்டார்.

    அரசுக்கு சொந்தமான சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் மேலாளர், லஞ்சம் வாங்கிய வழக்கில் நேற்று தூக்கிலிடப்பட்டதாக நிறைவேற்றப்பட்டதாக சீன அரசு அறிவித்துள்ளது.

    சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸின் (CHIH) முன்னாள் பொது மேலாளர் பாய் தியான்ஹுய் 2014 மற்றும் 2018 க்கு இடையில் பல திட்டங்களை வாங்குவதற்கும் நிதியளிப்பதற்கும் ஆதரவாக அவர் பெரும் அளவில் லஞ்சம் பெற்றதாகக் கண்டறியப்பட்டது.

    அவர் 156 மில்லியன் டாலர்களுக்கு மேல் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,300 கோடி) லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

    இந்த வழக்கில், தியான்ஜினில் உள்ள நீதிமன்றம் இந்த ஆண்டு மே மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டபோதும் உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.

    இந்நிலையில் நேற்று காலை பாய் தியான்ஹுய், குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்தித்த பிறகு தூக்கிலிடப்பட்டார்.  

    • டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் கடிதம்.
    • 20%- 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுகவின் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும் கம்பி எண்ணப்போவது உறுதி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ரூ. 1,020,00,00,000 !!!

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

    ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர் கே.என்.நேரு, தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு 7.5% முதல் 10% வரை கமிஷன் கொள்ளை அடித்துள்ளது, இக்கடிதம் வாயிலாக வெளிவந்துள்ளது.

    கழிப்பறை கட்டுவது முதல், நபார்ட் வங்கி திட்டங்கள் வரை பட்டியல் போட்டு, 20%- 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    மேலும், இதெல்லாம் "Tip of the Iceberg" தான் என தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, இதனை முழுமையாக விசாரிக்குமாறு தெரிவித்துள்ளது.

    வரலாறு நெடுக விஞ்ஞான ஊழல்களுக்கே பெயர்போன கட்சியான திமுக நடத்தும் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதே, வெறும் "கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மாடல்" தான் என்பதை நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.

    ஏற்கனவே ED அனுப்பிய ரூ. 888 கோடி #CashForJobs முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், ஊழல் அமைச்சரைக் காப்பாற்றி வருகிறது ஸ்டாலின் அரசு! தற்போது, அடுத்த ஊழலும் வெளிவந்துள்ளது.

    திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே,

    -மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம்.

    -ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம்.

    -பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ. 5000/- தாரளாமாக வழங்கலாம்.

    அவ்வளவு ஏன், தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம்.

    இவ்வளவு மக்கள் பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் தானும், தன் சகாக்களும் தப்பித்துக் கொள்வோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்?

    காலம் மாறுகிறது. காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன. அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி.

    உண்மையிலேயே திரு. ஸ்டாலினுக்கு மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமின்றி இந்த ஊழல்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். செய்வாரா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பீகாரில் ரூ.27 ஆயிரம் கோடி​யில் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அதானி பவர் லிமிடெட் அமைக்கிறது.
    • பிர்பைண்டி கிராமத்தில் 25 வருடங்களுக்கு மின்சார கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    அதானி பவர் லிமிடெட் நிறுவனம் பீகாரில் ரூ.27 ஆயிரம் கோடியில் 2,400 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கிறது. இந்தத் திட்டத்திற்காக, பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பைண்டி கிராமத்தில் 25 வருடங்களுக்கு மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு 800 மெகா வாட் திறன் கொண்ட 3 ஆலைகள் நிறுவப்படும். 5 ஆண்டுகளில் உற்பத்தி தொடங்கப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் இந்த ஒப்பந்தத்தில் மின்சாரம் பீகார் மாநிலத்துக்கு யூனிட்டுக்கு ரூ.6.075 என்ற விலையில் வழங்கப்படும்.

    இந்நிலையில், பீகார் அரசுக்கும் அதானி பவர் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையிலான மின்சார ஒப்பந்தத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் மத்திய மின்சார அமைச்சர் ஆர்.கே. சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

    பீகார் அரசு அதானி பவர் லிமிடெட் நிறுவனத்துடன் 25 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் என்ற அதிகமான விலையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆர்.கே. சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

    2017-2024 க்கு இடையில் ஆர்.கே. சிங் மத்திய மின்சார அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.
    • இதில் பல முக்கிய அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

    தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமிப்பதற்கான ஆள்தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை கையூட்டு பெறப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் கலாச்சாரத்தை திமுக அரசு கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டையே உலுக்கும் வகையிலான இந்த வேலைவாய்ப்பு ஊழல் குறித்த விவரங்களை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையில் இந்த ஊழல் குறித்த ஆவணங்கள் கிடைத்ததாக தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் அமலாக்கத்துறை தெரிவித்திருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்திருக்கிறது.

    நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆள்தேர்வின் மூலம் மூலம் 2538 அதிகாரிகள், பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. கையூட்டின் மூலம் வசூலிக்கப்பட்ட பணம் ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதில் பல முக்கிய அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கும் அமலாக்கத்துறை, இதற்கு மூளையாக செயல்பட்டவர்களின் விவரங்கள், ஊழல் எவ்வாறு செய்யப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய 232 பக்க ஆவணங்களையும் காவல்துறைக்கு அனுப்பியுள்ளது.

    நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த இந்த உண்மைகள் கேட்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால், இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. ஏனென்றால், கையூட்டு வாங்குவதற்காக திட்டமிட்டே இந்த ஆள்தேர்வு முறை வடிவமைக்கப்பட்டது என்பதை 2023&ஆம் ஆண்டிலேயே பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியிருந்தது.

    ''உள்ளாட்சிகளில் 2534 பணிகளை நேரடியாக நிரப்புவது ஊழலுக்கே வழிவகுக்கும்: டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப வேண்டும்!'' என்ற தலைப்பில் 16.11.2023&ஆம் நாள் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,''தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சில குறிப்பிட்ட வகை பணியாளர்களை அந்தந்த நிறுவனங்களே தேர்ந்தெடுக்கும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால், இத்தகைய நடைமுறையில் ஊழல்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, இனிவரும் காலங்களில் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் பணியாளர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.

    அதற்கான சட்டமும் கடந்த 2021 திசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களை, அந்த அமைப்புகளே தேர்ந்தெடுத்தால் நியாயமாக இருக்காது; ஊழல்களும், முறைகேடுகளும் நடைபெறலாம் என்பதால் தான், அவர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யும் பொறுப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், இப்போது அந்தப் பொறுப்பு மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், அதன் நோக்கம், தமிழக அரசு ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, ஊழல் செய்வதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?'' என்று வினா எழுப்பப்பட்டிருந்தது. பா.ம.க.வின் குற்றச்சாட்டு இப்போது உண்மையாகிவிட்டது.

    இதேபிரச்சினை தொடர்பாக கடந்த பிப்ரவரி 8&ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில்,''தமிழ்நாட்டில் இரண்டாம் தொகுதி பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால், அதை விட கீழான பணிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை நகராட்சி நிர்வாகத்துறை தேர்ந்தெடுக்கிறது எனும் போது, முறைகேடுகள் செய்வதற்காகத் தான் நேர்காணல் நடத்தப்படுகிறதோ? என்ற ஐயம் எழுவது இயற்கை. அதிலும் குறிப்பாக சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் முடிவடைந்த பிறகும் இறுதி முடிவுகளை வெளியிடாமல், கடந்த காலங்களில் நேர்காணலுக்கு வராதவர்களை மீண்டும், மீண்டும் நேர்காணலுக்கு வாருங்கள் என அழைக்கும் போது முறைகேடு குறித்த ஐயம் அதிகரிக்கிறது'' என்று கூறியிருந்தேன். அது தான் இப்போது நடைபெற்றிருக்கிறது. அரசு ஊழியர்கள் நியமனத்தில் திமுக அரசு திட்டமிட்டு ஊழல் செய்திருக்கிறது என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையில்லை.

    ஒரு பணிக்கு அதிகபட்சமாக ரூ.35 லட்சம் என்றால், 2538 பணிகளுக்கும் சேர்த்து ரூ.888.30 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் 1.30 இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு வேலை வழங்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்தால் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, இன்னும் 50 ஆயிரம் பேருக்கு கூட நிரந்தர வேலை வழங்கவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணி நியமனங்களிலும் கூட ரூ.35 லட்சம் வரை கையூட்டு வசூலிக்கப்படுகிறது என்றால் தமிழக ஆட்சியாளர்களுக்கு மனசாட்சியே இல்லை என்று தான் பொருள்.

    தமிழக ஆட்சியாளர்கள் உத்தமர்களைப் போல வேடமணிந்து நாடகமாடிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களின் ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் ஊழல் நிறைந்திருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் ஊழல்களைத் தவிர அவர்கள் வேறு எதையும் செய்யவில்லை. மணல் கொள்ளை ஊழல், மது விற்பனை ஊழல், மின்சாரக் கொள்முதல் ஊழல், கட்டுமான அனுமதி ஊழல், பேருந்து கொள்முதல் ஊழல் என எங்கும், எதிலும் ஊழல்கள் தான் நிரம்பியிருக்கின்றன. இவை அனைத்தையும் விட அரசு வேலைகளுக்கு கையூட்டு வாங்குவதன் மூலம் திறமையுள்ள ஏழை இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைப்பதை திமுக அரசு தடுத்திருக்கிறது. திமுக ஆட்சியாளர்களின் இந்த பாவத்திற்கு எக்காலத்திலும் மன்னிப்பு கிடையாது.

    நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னர், தமிழகத்தை அதிர வைக்கும் இந்த பணி நியமன ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு அரசு மாற்ற வேண்டும்.

    • பெரிய தலைகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுக்கிறது.
    • மோசடி குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியே வரும்.

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்?

    மதுரை மாநகராட்சியின் சொத்து வரி வசூலில் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மதுரை மேயர் திருமதி. இந்திராணி பொன் வசந்த் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது கடும் அதிர்ச்சியையும் பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது.

    திமுக அமைச்சர்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கக் கூடிய மதுரை முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் தடாலடியாக கைது செய்யப்படுவதையும், மேயர் கமுக்கமாக ராஜினாமா செய்வதையும் பார்த்தால், சிறிய மீன்களைப் பலியிட்டு பெரிய தலைகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுக்கிறது.

    ஊழல் குற்றச்சாட்டு, நிர்வாகக் குளறுபடிகள், நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தமிழகத்தின் முக்கிய மாநகராட்சிகளான கோவை, நெல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திமுக மேயர்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது மதுரையும் இணைந்திருப்பது, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதில் திமுக அரசு எந்தளவிற்கு தோல்வியடைந்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டு.

    மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டிய தமிழக உள்ளாட்சி அமைப்புகளை, மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் கருவிகளாக மாற்றி வைத்திருப்பது தான் திமுக அரசின் நாடு போற்றும் நல்லாட்சியா? மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்க மேயர்கள் ராஜினாமா, புது மேயர் பொறுப்பேற்பு எனத் திமுக அரசு என்னதான் நாடகம் ஆடினாலும், மாநிலம் முழுவதும் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல் வரி வசூலில் நடக்கும் மோசடி குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியே வரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நீதிபதி ரவீந்திர மைதானியும் இதேபோல எந்தக் காரணமும் குறிப்பிடாமல் விலகினார்.
    • ஒரு தனிநபரின் வழக்குகளில் இருந்து இவ்வளவு நீதிபதிகள் விலகுவது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை.

    உத்தரகாண்டை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி (IFS) அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி அரசின் பல்வேறு மட்டங்களில் நடைபெறும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவராக அறியப்படுபவர் ஆவார்.

    இந்த ஊழல்கள் குறித்து அவர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்திருக்கிறார்.

    ஆனால் இந்த வழக்குகள் விசாரிக்கப்படுவதில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தடங்கல் குறித்து பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே மத்திய அரசு ஊழியர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) க்கு எதிராக சஞ்சீவ் சதுர்வேதி தொடர்ந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து உத்தரகண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி அலோக் வர்மா விலகியுள்ளார். இது, சதுர்வேதியின் வழக்குகளில் இருந்து ஒரு நீதிபதி விலகுவது இது 16வது முறையாகும்.

    இவருக்கு முன், கடந்த செப்டம்பர் 26 அன்று, நீதிபதி ரவீந்திர மைதானியும் இதேபோல எந்தக் காரணமும் குறிப்பிடாமல் விலகினார்.

    சதுர்வேதி தொடர்ந்த வெவ்வேறு வழக்குகளில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள், கீழமை நீதிமன்றங்களின் இரண்டு நீதிபதிகள் மற்றும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் எட்டு நீதிபதிகள் இதுவரை விலகி உள்ளனர்.

    நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்காமல் விலகுவதற்கான காரணம் கூறப்படாத நிலையில் ஊழலை மூடி மறைக்க முயற்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஒரு தனிநபரின் வழக்குகளில் இருந்து இவ்வளவு நீதிபதிகள் விலகுவது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை.  

    ×