search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதானி குழுமம்"

    • அசுர் பவர் நிறுவனம், சாதகமான நடவடிக்கைகளுக்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு.
    • இது தொடர்பாக அமெரிக்கா விரிவான விசாரணையை தீவிரப்படுத்தியதாக தகவல்.

    அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அசுர் பவர் நிறுவனம், சாதகமான நடவடிக்கைகளுக்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்காவின் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இது தொடர்பாக அமெரிக்கா அதானி குழுமம் மற்றும் அதன் நிறுவனரான கவுதம் அதானி மீது விரிவான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால், "எங்கள் சேர்மனுக்கு எதிராக எந்தவொரு விசாரணையும் நடைபெற்றது குறித்து நாங்கள் அறியவில்லை" என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், "நிர்வாகத்தில் உயர்ந்த தரத்துடன் அதானி குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு சட்டங்களுக்கு நாங்கள் உட்பட்டு முழுமையாக இணைந்து செயல்பட்டு வருகிறோம்" எனவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

    ப்ரூக்ளின் மற்றும் வாஷிங்டன் நீதித்துறை தொடர்பான பிரிதிநிதிகள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். அசுர் பவர் நிறுவனமும் கருத்து தெரிவிக்கவில்லை.

    அதானி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை காரணமாக இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகபட்சமாக அதானி கிரீன் எனெர்ஜி நிறுவன பங்குகள் 13% சரிவடைந்துள்ளது
    • 2024-ம் ஆண்டில் அதானி கிரீன் எனெர்ஜி மிக அதிக அளவில் சரிவை சந்தித்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது

    தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 338 சரிந்து, 21,997 புள்ளிகளுடனும், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 906 புள்ளிகள் சரிந்து 72,761 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்நிலையில், அதானி குழும நிறுவன பங்குகள் இன்று ஒரே நாளில் ₹90,000 கோடி சரிவை கண்டுள்ளது. அதிகபட்சமாக அதானி கிரீன் எனெர்ஜி நிறுவன பங்குகள் 13% சரிவடைந்துள்ளது. 2024-ம் ஆண்டில் அதானி கிரீன் எனெர்ஜி மிக அதிக அளவில் சரிவை சந்தித்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது.

    அதானி எண்டர்பிரைசஸ் 5.5% சரிவையும், அதானி போர்ட்ஸ் 5.3% சரிவையும் கண்டுள்ளது. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், என்டிடிவி மற்றும் அதானி வில்மர் ஆகியவற்றின் பங்குகள் 4 முதல் 7 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.

    இதனால், அதானி குழுமத்தின் பங்குகள் ஒட்டுமொத்தமாக ரூ.90,000 கோடியை இழந்துள்ளது. இது அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதனமான ரூ. 15.85 லட்சம் கோடியில் 5.7%. ஆகும்.

    • முந்த்ரா நகரில் 1.2 பில்லியன் மதிப்பீட்டில் காப்பர் ஆலை உருவாகி வருகிறது
    • மின்சார வாகனங்களின் உற்பத்திக்கு காப்பர் ஒர் இன்றியமையாத தேவை

    இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவர், குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி (61). இவரது நிறுவனம், அதானி குழுமம் (Adani Group).

    பல்வேறு உலக நாடுகளில் பல துறைகளில் பல்லாயிரம் கோடி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் அதானி குழுமம், துறைமுக கட்டமைப்பு மற்றும் செயலாக்கத்தில் முக்கிய நிறுவனமாக திகழ்கிறது.

    இவை தவிர, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் நிர்வாகம், மின்சக்தி உற்பத்தி மற்றும் பகிர்மானம், சுரங்கம், இயற்கை எரிவாயு, உணவு மற்றும் பல உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் அதானி குழுமம் கால் பதித்து வெற்றி கொடி நாட்டி வருகிறது.

    இந்நிலையில், குஜராத் மாநில கட்ச் மாவட்டத்தின் முந்த்ரா (Mundra) நகரில் அதானி குழுமம், உலகின் மிக பெரிய "காப்பர்" (செம்பு) உற்பத்தி ஆலையை உருவாக்கி வருகிறது.

    இது முழு செயல்பாட்டிற்கு வந்ததும் காப்பர் தேவைக்காக அயல்நாடுகளை இந்தியா சார்ந்திருக்கும் நிலை பெருமளவு குறைந்து விடும்.

    சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்த ஆலை உருவாக்கப்பட்டு வருகிறது.


    2029 வருட காலகட்டத்தில் 1 மில்லியன் டன் உற்பத்தி இலக்கை எட்டவுள்ளது.

    ஒவ்வொரு நாட்டிற்கும் படிம எரிபொருள் (fossil fuel) சார்பு நிலையில் இருந்து பசுமை எரிபொருள் பயன்பாட்டிற்கு மாற தேவைப்படும் கட்டமைப்பிற்கும், மின்சார வாகனங்கள், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள், சோலார் செல்கள், பேட்டரிகள், காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட அனைத்தின் உருவாக்கத்திற்கும் காப்பர் தேவைப்படுகிறது.

    இதற்கிடையே, பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட, 4 லட்சம் டன்கள் உற்பத்தி திறன் படைத்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர அதன் உரிமையாளரான வேதாந்தா லிமிடெட் நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது.

    எஃகு மற்றும் அலுமினியம் ஆகிய உலோகங்களுக்கு அடுத்த நிலையில் தொழில்துறைக்கு மிகவும் தேவைப்படும் உலோகமாக காப்பர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தற்போது, உலகின் பெருமளவு காப்பர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள சிலி (Chile) மற்றும் பெரு (Peru) ஆகிய இரு நாடுகள் பூர்த்தி செய்து வருகின்றன.

    • பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
    • எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷி மாவட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகளின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக சுரங்கத்திற்குள் சிக்கித்தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 18-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது செங்குத்தாக துளையிடும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், "இந்த உத்தரகாண்ட் சுரங்கப்பாதை எந்த தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டது? அதன் பங்குதாரர்கள் யார்? அதில் ஒன்று அதானி குழுமமா?" என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், உத்தரகாண்டில் 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்க கட்டுமான பணியில் ஈடுபடவில்லை என்றும் கட்டுமான பணி மேற்கொள்ளும் நிறுவனத்தில் பங்கு இல்லை எனவும் அதானி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்த அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உத்தரகாண்டில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான சரிவு விவகாரத்துடன் எங்களை இணைக்க சில கூறுகள் மோசமான முயற்சிகளை மேற்கொள்வது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த முயற்சிகளையும் அதன் பின்னணியில் இருப்பவர்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதானி குழுமத்திற்கோ அல்லது அதன் துணை நிறுவனங்களுக்கோ சுரங்கப்பாதையின் கட்டுமானத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் மிக அழுத்தமாக தெளிவுபடுத்துகிறோம். சுரங்கப்பாதையின் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தில் எங்களிடம் எந்தப் பங்குகளும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். இந்த நேரத்தில், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஃபார்சூன் பிராண்ட் சமையல் எண்ணெய் இந்தியா முழுவதும் பிரபலமானது
    • அதானி-வில்மர் நிறுவனத்தில் அதானி குழுமத்திற்கு சுமார் 44 சதவீத பங்கு உள்ளது

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரை மையமாக கொண்டு முன்னணி தொழிலதிபரும், கோடீசுவரருமான கவுதம் அதானி என்பவரால் 1988ல் தொடங்கப்பட்டது அதானி குழுமம் (Adani Group).

    இக்குழுமம் துறைமுக கட்டுமானம், மின்சார உற்பத்தி/பகிர்மானம், எரிசக்தி, சுரங்கம், விமான நிலைய செயல்பாடு/நிர்வாகம், இயற்கை எரிவாயு, உணவுப்பொருள் தயாரிப்பு, நாட்டின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும்.

    அதானி குழுமத்தை சேர்ந்த அதானி என்டர்பிரைசஸ் (Adani Enterprises) மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த வில்மர் இன்டர்நேஷனல் (Wilmar International) ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவானது, அதானி வில்மர் (Adani Wilmar). சமையல் எண்ணெய் மற்றும் உணவு பொருட்களில் நாடு முழுவதும் பிரபலமான "ஃபார்சூன்" (Fortune) எனும் பெயரில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

    இந்நிறுவனத்தில், அதானி குழுமத்திற்கு 43.97 சதவீதம் பங்கு உள்ளது.

    இந்நிலையில், தனது பிற முக்கிய தொழில்களில் கவனம் செலுத்துவதற்காக அதானி வில்மர் குழுமத்தில் உள்ள தனது முழு பங்கையும் விற்று விட பல பன்னாட்டு நிறுவனங்களுடன் அதானி குழுமம் முயற்சிப்பதாகவும், ஒரு மாத காலத்தில் இந்த விற்பனை முடிவாகி விடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த பங்கு விற்பனை உறுதியானால், இதன் மூலம் அதானி குழுமத்திற்கு சுமார் ரூ.25 ஆயிரம் கோடிக்கு ($3 பில்லியன்) மேல் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.

    கடந்த இரு காலாண்டுகளாக அதானி வில்மர் நிறுவனத்தின் சமையல் எண்ணெய் விற்பனை மந்தமானதால், நிகர லாபம் பெரிதும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய மும்பை பங்கு சந்தை குறியீட்டில் அதானி வில்மார் நிறுவனத்தின் பங்குகள் ரூ.317 எனும் அளவில் வர்த்தகமாகி கொண்டிருந்தது.

    சில மாதங்களுக்கு முன் ஹிண்டன்பர்க் எனும் அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வ பொருளாதார புலனாய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் மீது பல்வேறு ஊழல் புகார்களை குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவின் உள்கட்டமைப்பு விவகராத்தில் விளையாட வெளிநாட்டவருக்கு ஏன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • அதானி குழுமம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லை என்று செபி தெரிவித்தது.

    மும்பையில் இன்று நடைபெற்ற ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணி ஆலோசணைக் கூட்டத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதானி குழுமம் சார்ந்து ஒ.சி.சி.ஆர்.பி. வெளியிட்ட அறிக்கை குறித்து சரமாரி கேள்விகளை எழுப்பினார். இது குறித்து அவர் பேசியதாவது..,

    "ஒ.சி.சி.ஆர்.பி. அறிக்கை குறித்து ஏராளமான கேள்விகள் உள்ளன. முதலில், இது யாருடைய பணம்? இது அதானியுடையதா? அல்லது வேறு யாருடையதாவதா? இதில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் மற்றும் இரண்டு வெளிநாட்டு நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இரண்டாவது கேள்வி, இந்தியாவின் உள்கட்டமைப்பு விவகாரத்தில் புகுந்து விளையாட இந்த இரு வெளிநாட்டவருக்கு ஏன் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது?"

     

    "இந்த விவகாரம் தொடர்பாக செபி விசாரணை நடத்தியது. அதில் அதானி குழுமம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லை என்று செபி தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை கொடுத்த நபர் தான் தற்போது என்.டி.டி.வி. இயக்குனராக இருக்கிறார். இந்தியாவுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை வாங்குவதற்கு வெளிநாட்டு பணத்தை திணிக்கும் நிர்வாக கூட்டமைப்பு செயல்படுவதாக தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஏன் இந்த விஷயம் தொடர்பாக அமைதி காக்கிறார்? ஏன் இது பிரச்சினையாக பார்க்கப்படவில்லை? சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற நிறுவனங்கள் ஏன் இந்த விஷயம் தொடர்பாக விசாரணை செய்ய முன்வரவில்லை?"

    "இந்த விவகாரம் இந்தியாவின் நற்பெயரை பாதிப்படைய செய்கிறது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதற்கு கூட்டு பாராளுமன்ற குழு ஒன்றை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும். பல பில்லியன் டாலர்கள் எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுகிறது என்பதை அனைத்து நாடுகளும் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இது நாட்டின் நற்பெயரை சேதப்படுத்தி வருகிறது."

    "அதானி குழுமம் தொடர்பான விசாரணை நடத்திய நபர் தற்போது அந்த குழுமத்தின் ஊழியராகி இருப்பது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, "இந்தியாவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுகிறது. ஜி20 உச்சி மாநாட்டை உலக மக்கள் தொகை பார்த்துக் கொண்டு இருக்கிறது. செபி சார்பில் அதானி குழுமம் மீது விசாரணை நடத்திய நபர், தற்போது அதானி நிறுவனத்தில் ஊழியராக இருக்கிறார். இதன் மூலம் விசாரணை எதுவும் நடைபெறவில்லை என்று தெரிகிறது. இதில் இருந்தே பிரதமருக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று தெரிகிறது," என ராகுல் காந்தி தெரிவித்து இருக்கிறார். 

    • அதானி நிறுவனத்தின் சில மின்னஞ்சல்களை ஓசிசிஆர்பி ஆய்வு செய்திருக்கிறது
    • மூடப்பட்ட வழக்குகளை மீண்டும் கடைந்தெடுத்துள்ளதாக கூறுகிறது அதானி நிறுவனம்

    இந்தியாவின் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் மிகப்பெரும் வர்த்தக நிறுவனம், 61 வயதான கவுதம் அதானி எனும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரால் தொடங்கப்பட்ட அதானி குழுமம்.

    இந்நிறுவனம் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிப்பதோடு, பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து ரூ.2 லட்சம் கோடி அளவிற்கு வருவாய் ஈட்டி வருகிறது.

    பெரும் பணக்காரர்களும் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களும் ஊழல், சட்டவிரோத பணபரிமாற்றம், கருப்பு பண பதுக்கல் மற்றும் பரிவர்த்தனை மற்றும் பங்குச்சந்தை முறைகேடு ஆகியவற்றில் ஈடுபடுவதை துப்பறிந்து, ஆதாரங்களுடன் ஆய்வு கட்டுரைகளை வெளியிடும் ஓசிசிஆர்பி (OCCRP) எனும் ஊழலுக்கு எதிரான அமைப்பு, இன்று அதானி குழுமத்தின் மீது குற்றம் சுமத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் ஸோரோஸ் என்பவரின் நிதியுதவியுடன் இயங்குவது ஓசிசிஆர்பி அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த அறிக்கையில், மொரிஷியஸ் நாட்டில் செயல்படும் சில மறைமுக நிதி (opaque funds) அமைப்புகள் மூலமாக இந்திய பங்கு சந்தைகளில் அதானி குழுமத்தின் நிறுவனங்களில் சட்டவிரோதமாக முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் அதானி குடும்பத்தை சேர்ந்த வர்த்தக கூட்டாளிகளுக்கும் பங்களிப்பு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    உலகின் ஒரு சில நாடுகள், அந்நாட்டில் முதலீடு செய்பவர்களின் பின்னணி குறித்து ஆராயாமல் முதலீடுகளை பெற்று, அவர்கள் செய்யும் முதலீட்டிற்கு வரிச்சலுகைகளையும் அளித்து வருகிறது. இது கருப்பு பண பரிவர்த்தனைக்கு உதவும் ஒரு வழிமுறை என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

    ஓசிசிஆர்பி, தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, அது போன்ற நாடுகளிலிருந்தும், அதானி நிறுவனத்தின் சில மின்னஞ்சல்களிலிருந்தும் பல ஆய்வுகளை மேற்கோள் காட்டி இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

    இக்குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்திருக்கும் அதானி நிறுவனம், இது குறித்து ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

    அதில் அக்குழுமம் தெரிவித்திருப்பதாவது:

    இக்குற்றச்சாட்டுகள் முன்னரே எங்கள் நிறுவனத்தின் மீது வைக்கப்பட்டவைதான். சம்பந்தபட்ட விசாரணை அமைப்புகளால் தீவிரமாக விசாரணைகளும் ஆய்வுகளும் நடத்தப்பட்டு எங்கள் நிறுவனத்தின் மீது எந்த தவறும் இல்லை என்றும் இக்குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் முன்னரே அறிவிக்கப்பட்டு விட்டது. மூடப்பட்ட அவ்வழக்குகளை தற்போது, மீண்டும் கடைந்தெடுத்து புதுப்பித்து, புதிய குற்றச்சாட்டாக ஓசிசிஆர்பி அமைப்பு முன்வைத்திருக்கிறது. பங்கு சந்தை முதலீட்டில் எந்த தவறான கையாளுதலும் நடைபெறவில்லை என ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிவித்தது. எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கவும், எங்கள் குழுமங்களின் பங்குகளை சரிய வைத்து அதன் மூலம் லாபமடையும் நோக்கில் உள்ளவர்களுக்கு உதவிடும் வகையிலும்தான் ஜார்ஜ் ஸோராஸினால் நிதியுதவி பெற்ற இந்த அமைப்பு உதவுகிறது.

    இவ்வாறு அதானி நிறுவனம் அறிவித்திருக்கிறது.

    இந்நிலையில் அதானி குழுமத்தை சேர்ந்த பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் ஓசிசிஆர்பி அறிக்கை வெளிவந்ததும் இன்று சரிவை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு முற்றிலும் முடங்கியது.
    • ராகுல் காந்தி பிரதமர் மோடி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

    புதுடெல்லி :

    அதானியின் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், கணக்குகளில் மோசடி செய்ததாகவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுகள் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் அரசியல் புயலை ஏற்படுத்தி இருக்கின்றன.

    இந்த பிரச்சினையை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியதால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு முற்றிலும் முடங்கியது.

    அதானி நிறுவன பிரச்சினையில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடி வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

    இந்த நிலையில் அதானி விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர், 'உண்மையான கேள்வி என்னவென்றால், அதானியை பா.ஜனதா இவ்வளவு தீவிரமாக பாதுகாப்பது ஏன்? என்பதாகும்' என்று நேற்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    முன்னதாக அவர், அதானி விவகாரத்தில் தான் யாருக்கும் அஞ்சமாட்டேன் என்றும், அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையேயான உறவு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டே இருப்பேன் என்றும் கூறியிருந்தார்.

    பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோதே அதானியுடனான அவரது உறவு தொடங்கி விட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

    • பத்திரிகையாளரிடம் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
    • ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைகளை ராகுல்காந்தி மீண்டும் தாக்கி உள்ளார்.

    புதுடெல்லி :

    அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் சூரத் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அப்போது, அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் உடன் சென்றனர். அப்படி சென்றது, நீதித்துறை மீது அழுத்தம் செலுத்தும் முயற்சி என்று பா.ஜனதா விமர்சித்தது.

    இந்நிலையில், ராகுல்காந்தி நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்தார். அப்போது, அங்கிருந்த பத்திரிகையாளர்களில் ஒருவர், ''கட்சி தலைவர்கள் புடைசூழ கோர்ட்டுக்கு சென்றது, நீதித்துறைக்கு அழுத்தம் தரும் முயற்சி என்று பா.ஜனதா கூறுகிறதே?'' என்று கேட்டார்.

    உடனே, ராகுல்காந்தி அந்த பத்திரிகையாளரை நோக்கி திரும்ப நடந்து வந்தார். அவரை பார்த்து, ''பா.ஜனதா சொல்வதையே நீங்களும் எப்போதும் சொல்வது ஏன்? ஒவ்வொரு தடவையும் பா.ஜனதா சொல்வதையே நீங்கள் சொல்கிறீர்கள்'' என்று கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில், ''மிகவும் எளிமையான கேள்வி. அதானியின் போலி கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி, யாருடைய பணம்? அது பினாமி பணம். அந்த பணத்துக்கு சொந்தக்காரர் யார்?'' என்றார். அத்துடன் தனது 'டுவிட்டர்' பதிவில், ''பிரதமர் மோடி ஏன் மவுனம் சாதிக்கிறார்? ஏன் பயப்படுகிறார்?'' என்று ராகுல்காந்தி கேட்டுள்ளார்.

    இதற்கிடையே, பத்திரிகையாளரிடம் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சி செய்தித்தொடர்பாளர் அனில் பலுனி கூறியிருப்பதாவது:-

    ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைகளை ராகுல்காந்தி மீண்டும் தாக்கி உள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், ஊடகங்களையும் இழிவுபடுத்துவது அவரது மனப்பான்மை.

    ஜனநாயக கட்டமைப்பை அடிக்கடி தாக்குவதில் தனது பாட்டியை அவர் பின்பற்றி வருகிறார். அவர் ஒரு ஆணவம் பிடித்த பரம்பரை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 19 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன.
    • பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    புதுடெல்லி :

    பிரபல தொழில் அதிபர் அதானியின் நிறுவனங்கள் பங்கு சந்தையில் முறைகேடுகள் செய்ததாகவும், கணக்குகளில் மோசடி செய்ததாகவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.

    இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடர்ந்து முடங்கி வருகிறது.

    இந்த நிலையில் அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், '19 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன. அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. நாங்கள் எங்கள் கோரிக்கையை தொடர்வோம்' என திட்டவட்டமாக கூறினார்.

    அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே எந்தவித தகவல் பரிமாற்றமும் இலலை என கூறிய அவர், அதற்காக ஆளுங்கட்சி முயற்சிக்கவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

    வனப்பாதுகாப்பு திருத்தச்சட்டம் 2023 குறித்த கேள்விக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில் அளிக்கையில், 'வனப்பாதுகாப்பு திருத்தச்சட்டம் எனது தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அது தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் வனச்சட்டங்களை பலவீனப்படுத்தும் நோக்கில் ஒரு நிகழ்ச்சி நிரல் அரசுக்கு இருக்கிறது' என்று குற்றம் சாட்டினார்.

    அதானி விவகாரத்தில் தங்கள் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் என காங்கிரஸ் கட்சி கூறியிருப்பதன் மூலம், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    • தேர்தல்களின்போது மக்களோடு தொடர்பு இல்லாத பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன.
    • காங்கிரசிடமிருந்து பெரும்பாலான எதிர்பார்ப்பு இருக்கிறது.

    ராய்ப்பூர் :

    சத்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் நடந்த 3 நாள் காங்கிரஸ் மாநாட்டின் இறுதி நாளான நேற்று, அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தையும் குறிவைத்து கவுதம் அதானி நாட்டுக்கு எதிராக செயல்படுகிறார். அதானிக்கும் பிரதமருக்கும் உள்ள தொடர்பு குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, ஒட்டுமொத்த பேச்சும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. அதானி விவகாரத்தில் உண்மைகள் வெளிவருகிறவரையில், நாங்கள் நாடாளுமன்றத்தில் ஆயிரமாயிரம் முறை கேள்விகள் எழுப்புவோம். ஓய்ந்து விட மாட்டோம்.

    அதானியின் நிறுவனம், நாட்டைக் காயப்படுத்துகிறது என்று அவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் பறித்துக்கொண்டிருக்கிறது.

    நாட்டின் அனைத்து வளங்களையும், துறைமுகங்களையும் ஒரே நிறுவனம் எடுத்துக்கொண்டு விட்டதை எதிர்த்து நாட்டின் சுதந்திரப்போராட்டம் நடைபெறுகிறது. வரலாறு திரும்புகிறது.

    பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவுகள் குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பும்.

    இந்திய ஒற்றுமை யாத்திரை மூலம் பெற்ற சக்தியை முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சி ஒரு புதிய திட்டம் வகுக்க வேண்டும். அதில் ஒட்டுமொத்த நாட்டுடன் நானும் பங்கேற்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், இந்த மாநாட்டில் பேசினார். அவர் கூறியதாவது:-

    நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுதான் உள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும் என்று (எதிர்க்கட்சிகளிடம்) நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது.

    எல்லா எதிர்க்கட்சிகளும், பா.ஜ.க.வின் சித்தாந்தத்தை எதிர்ப்பவர்களும் கண்டிப்பாக ஒன்றிணைந்து போராட வேண்டும். ஒவ்வொருவரிடம் இருந்தும் எதிர்பார்ப்பு இருக்கிறது. காங்கிரசிடமிருந்து பெரும்பாலான எதிர்பார்ப்பு இருக்கிறது.

    கட்சிக்காக போராடுகிற காங்கிரஸ் தொண்டர்களைப் பாராட்டுகிறேன்.

    பா.ஜ.க.வை எதிர்த்து நின்று போராடுகிற துணிச்சல் உங்களுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அந்த தைரியத்தை நாட்டுக்காக வெளிக்காட்ட வேண்டிய தருணம் வந்திருக்கிறது.

    மண்டல அளவில் இருந்து காங்கிரஸ் அமைப்பினை கட்டமைத்து, பலப்படுத்த வேண்டும்.

    தேர்தல்களின்போது மக்களோடு தொடர்பு இல்லாத பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. வேலையில்லா திண்டாட்டத்தை எப்படி சமாளிப்பது, நாட்டின் பொருளாதாரத்தை எப்படி பலப்படுத்துவது என்பதில்தான் அரசியல் இருக்க வேண்டும்.

    நம் மீது பா.ஜ.க. அதிரடி சோதனைகளை நடத்தியது. ஆனால் நாம் வலிமையுடன் நிற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதானி குழுமத்தில் எல்ஐசி மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81,000 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    • கடந்த ஒரு மாதத்தில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மும்பை:

    அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்தது அதானி குழுமத்தின் பங்குகள். இதனால், அதானி குழுமத்தில் எல்ஐசி செய்த முதலீடு மதிப்பானது 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கிட்டத்தட்ட ரூ.83,000 கோடியாக இருந்தது. இதுவே, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி ரூ.33,000 கோடியாக சரிந்துள்ளது. அதாவது, ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பெர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்ட போது, அதானி குழுமத்தில் எல்ஐசி மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81,000 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதானி குழுமத்தின் மிகப்பெரிய பங்குகளை வாங்கியிருக்கும் எல்ஐசி நிறுவனம், ஜனவரி 30ஆம் தேதிக்குப் பிறகு எந்தவிதமான பங்குகளையும் வாங்கவோ விற்கவோ இல்லை என்று கருதப்படுகிறது. இதுவரை அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனப் பங்குகளை எல்ஐசி நிறுவனம் ரூ.30,127 கோடிக்கு வாங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதானியின் குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் பங்குகளை எல்ஐசி 1.28 சதவிகிதம் முதல் 9.14 சதவிகிதம் வரை வாங்கியிருக்கிறது. அதானி போர்ட்ஸ் பங்குகளில் 9 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. இது ஜனவரியில் 15 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 11 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதுபோல அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 4.23 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்திருக்கும் அதானி குழுமத்தின் பங்குகளில், எல்ஐசியின் முதலீட்டு மதிப்பும் 25,500 கோடியிலிருந்து ரூ.5,200 கோடியாக சரிவடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பங்குச் சந்தைகளில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ×