என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Money Fraud"

    • மர்மநபர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
    • சைபர் கிரைம் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார்.

    ஒயிட்பீல்டு:

    பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இளம்பெண்ணின் வாட்ஸ்-அப்புக்கு ரிசர்வ் வங்கி அதிகாரி எனக்கூறி கொண்டு ஒரு நபர் பேசினார்.

    அப்போது உங்களது வங்கி கணக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது, அதுபற்றி மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று அந்த நபர் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். அதன்படி, மும்பை போலீசார் எனக்கூறி மற்றொரு நபர், இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நீங்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால், உங்களை கைது செய்வோம் என்று அவர் மிரட்டியுள்ளார்.

    இந்த வழக்கில் உங்களை கைது செய்யாமல் இருக்க தான் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும்படி மர்மநபர் இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் மர்மநபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.84½ லட்சத்தை இளம்பெண் அனுப்பி வைத்தார்.

    மர்மநபர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் மர்மநபர்கள் ரிசர்வ் வங்கி அதிகாரி, மும்பை போலீசார் பெயரில் மிரட்டி பணம் பறித்ததையும் இளம்பெண் உணர்ந்தார். இதுபற்றி ஒயிட்பீல்டு மண்டல சைபர் கிரைம் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.

    • விசாரணையில் ரூ. 3 கோடி மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் கிளையில் உள்ள மொபிகுல் ஆலம் முலா என்பவரது வங்கி கணக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
    • சைபர் கிரைம் போலீசார் மேற்கு வங்கம் சென்று மொபிகுல் ஆலம் முலாவை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது.

    அங்கு சுவிகியா என்பவர் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது செல்போனுக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி வந்தது. அதில் அவர் வேலை பார்க்கும் தொழிற்சாலை உரிமையாளரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    அதில் அரசு அதிகாரிகளிடம் ஒரு புதிய திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தி இருக்கிறேன். நமது அலுவலக வங்கி கணக்கில் உள்ள தொகையை மற்றொரு வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். இதனை உண்மை என்று நம்பிய சுவிகியா ரூ.5 கோடியே 10 லட்சத்தை அந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் இது தொடர்பாக தனது உரிமையாளரிடம் பேசினார். அப்போது மர்ம ஆசாமிகள் உரிமையாளர் பெயரில் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    விசாரணையில் ரூ.5 கோடியே 10 லட்சம் தொகையில், ரூ. 3 கோடி மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் கிளையில் உள்ள மொபிகுல் ஆலம் முலா என்பவரது வங்கி கணக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் மேற்கு வங்கம் சென்று மொபிகுல் ஆலம் முலாவை கைது செய்தனர்.

    பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 2 கோடி பணத்தை போலீசார் மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் மேலும் 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் வெளிநாட்டை சேர்ந்த கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இதுபோன்று பலரிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்ட மொபிகுல் ஆலம் முலாவை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    • கள்ளழகர் கோவில் நிலத்தை காட்டி ரூ.70 லட்சம் மோசடி செய்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மதுரை வண்டியூரில் 12 ஏக்கர் 70 செண்டு நிலம் ரூ.34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனைக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சூளக்கரை வீரப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவரது சகோதரர் சூரியநாராயணன். சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். அவர் அனுப்பும் சம்பள பணத்தை சேர்த்து வைத்து அந்த பகுதியில் நிலம் வாங்க ரங்க நாயகி முடிவு செய்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு 2020-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் சிவகிரி பட்டியை சேர்ந்த பத்மநாதபன் என்பவர் ரங்கநாகிக்கு அறிமுகமானார். அப்போது தான் ஓய்வு பெற்ற நீதிபதி என்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறியுள்ளார்.

    மதுரை வண்டியூரில் 12 ஏக்கர் 70 செண்டு நிலம் ரூ.34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனைக்கு உள்ளது என்று கூறியுள்ளார். இதனை நம்பி ரங்கநாயகி ரூ.70லட்சம் வரை பத்மநாபனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட அவர் நிலத்தை பதிவு செய்து தரவில்லை. இதுகுறித்து விசாரித்த போது பத்மநாபன் குறிப்பிட்ட நிலம் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கநாயகி பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தாக கூறப்படுகிறது.

    இந்த மோசடிக்கு பத்மநாபனுடன் அவரது மகன் சதீஷ் மற்றும் சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தை செல்வம் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இதுகுறித்து ரங்கநாயகி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனியார் ஆஸ்பத்திரியில் நர்சிங் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
    • எலிசபெத் ராணி, தோழி ஆத்ரின் மேரியிடம் ஹேரி அருள்ராஜ் தன்னை ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

    காரைக்காலை அருகே கோட்டுச்சேரி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வம் அமல்ராஜ். இவரது மனைவி எலிசபெத் ராணி(வயது45). எலிசபெத் ராணி காரைக்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சிங் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். எலிசபெத் ராணிக்கு, சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரியும் ஆத்ரின் மேரி என்பவர் பழக்கம், ஆத்ரின் மேரி, கடந்த 2020-ல், அதே ஊரைச்சேர்ந்த ஹரி அருள்ராஜ்(39) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். 

    சிறிது நாள் நல்லவர் போல் நடித்த ஹரி அருள்ராஜ், செக் குடியரசு நாட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தான் வேலை செய்வதாகவும், அங்குள்ள நர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. அந்த வேலையை தான் வாங்கித்தருவதாகவும் கூறி, கடந்த 2021ல் தனது வங்கி கணக்கிற்கு, ரூ.1 லட்சத்து ஐம்பதாயிரத்தை அனுப்பிவைக்கும்படி எலிசபத் ராணியிடம் பணத்தை பெற்றுள்ளார். 2 மாதம் ஆகியும், வேலை வாங்கித்தராததால், ஹரி அருள்ராஜிடம் வேலை தொடர்பாக கேட்ட பொழுது, விரைவில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இது குறித்து, எலிசபெத் ராணி, தோழி ஆத்ரின் மேரியிடம் ஹேரி அருள்ராஜ் தன்னை ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார். 

    தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம், எலிசபெத் ராணி ஹரி அருள் ராஜை செல்போனில் தொடர்பு கொண்டு, வெளிநாட்டில் வேலை வேண்டாம். கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுமாறு கேட்டுள்ளார். அதற்கு, ஹரி அருள்ராஜ் பணத்தை கொடுக்க முடியாது. இதற்கு மேல் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தால், காரைக்கால் வந்து உன்னை கொலை செய்து புதைத்து விடுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்ததார் இதனால் அதிர்ச்சி யடைந்த எலிசபெத் ராணி, கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீ சார் வழக்குப்பதிவு செய்து, ஹரி அருள்ராஜை தேடிவருகின்றனர்.

    • பெண் ஜவுளி வியாபாரியை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ. 57 லட்சம் வரை பணம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    மதுரை

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி நம்புனேஸ்வரி (வயது 34). இவர் ஆன்லைன் மூலம் ஜவுளி வணிகம் செய்து வருகிறார். இவர் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை ஆத்திகுளம் சுபம் தெருவை சேர்ந்த பாரதி சரவணன் குடும்பத்தினர் எங்களிடம் 2019-ம் ஆண்டு முதல் ஜவுளி பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வந்தனர். இதற்கான பணத்தை அவர்கள் பல ஆண்டுகளாக செலுத்த வில்லை.

    அந்த வகையில் பாரதி சரவணன் குடும்பத்தினர் ரூ. 57 லட்சம் வரை தர வேண்டியுள்ளது. நாங்கள் பணத்தை கேட்டோம். அதற்கு அவர்கள், 'அதோ தருகிறோம், இதோ தருகிறோம்' என்று கூறி அலைகழித்தனர். இந்த

    நிலையில் எனது கணவர் கார்த்திகேயன் கடன் தொல்லை காரணமாக, கடந்த 9-ந் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நான், எனது தந்தை பெரியசாமி, தாய் ராஜேஸ்வரி, பெரியம்மாள் ராமலட்சுமி ஆகிய 3 பேரும் மதுரைக்கு வந்தோம்.

    பாரதி சரவணன் குடும்பத்தினரை சந்தித்து ரூ. 57 லட்சத்தை கேட்டோம். அவர்கள் தர மறுத்தது மட்டுமின்றி, அவதூறாக பேசினர். இதை எனது தந்தை தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த பாரதி சரவணன், அவரது மனைவி ராஜேஸ்வரி, தங்கை மகாலட்சுமி, உறவினர் குட்டி கார்த்திக் ஆகிய 4 பேரும் எங்களை உருட்டு கட்டையால் தாக்கினர். எனவே போலீசார் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் ஆலோசனையின் பேரில், தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி பாரதி சரவணன், அவரது மனைவி ராஜேஸ்வரி, தங்கை மகாலட்சுமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான உறவினர் குட்டி கார்த்திக்கை போலீ சார் தேடி வருகின்றனர்.

    • தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை

    வந்தவாசி:

    பொங்கல் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வந்தவாசி தாசில்தார் அலுவலகம் முன்பு 250-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றி தலைமறைவான தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மீதி நடவடிக்கை எடுக்க கோரியும், சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திரும்ப தர வேண்டும் என்று கூறி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் தாசில்தார் முருகானந்தம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சீட்டு கட்டி ஏமாந்தவர்களிடம் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதனால் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பணத்தை கொடுக்க மறுத்த அருண் தம்பதியினர், சந்திரமோகனை மிரட்டி வெளியே அனுப்பினர்.
    • அருண் மற்றும் ஹேமலதா தம்பதியினர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கோவை:

    கோவை இருகூர் ஏ.ஜி.புதூர் சாலை பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 33). இவர் இங்கிலாந்தில் உள்ள பல்கலைகழகத்தில் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் படித்து முடித்துள்ளார். தற்போது கோவையில் வீட்டில் இருந்தவாறு வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் சந்திரமோகன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல ஆன்லைன் மூலம் முயற்சி செய்தார். அப்போது பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பு வந்தது. இதை நம்பி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தை அவர் அணுகினார்.

    அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான அருண் மற்றும் அவரது மனைவி ஹேமலதா ஆகியோர் இருந்தனர். சந்திரமோகனிடம் போலந்து நாட்டில் வேலை உள்ளதாகவும், அங்கு செல்ல ரூ.4 லட்சம் வரை செலவாகும் எனவும் அவர்கள் கூறினர். மேலும் முன் பணமாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும், பணியாணை வந்த பிறகு மீதி பணத்தை கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து சந்திரமோகன் இரண்டு தவணைகளாக ரூ.1 லட்சம் பணத்தை அருண் மற்றும் ஹேமலதா தம்பதியிடம் வழங்கினார். பின்னர் அவர்களிடம் வேலைக்கான பணியாணை குறித்து கேட்ட போது விரைவில் அழைப்பு வரும் என கூறி வந்தனர்.

    கடந்த ஓராண்டாக நேரில் சென்றும் முறையான பதில் அளிக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்ற சந்திரமோகன் பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டார். ஆனால் பணத்தை கொடுக்க மறுத்த அருண் தம்பதியினர், சந்திரமோகனை மிரட்டி வெளியே அனுப்பினர்.

    இதுகுறித்து சந்திரமோகன் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அருண் மற்றும் ஹேமலதா தம்பதியினர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மோசடியில் ஈடுபட்ட அருணை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது மனைவி ஹேமலதா தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    போலீஸ் விசாரணையில் இந்த தம்பதியினர் சந்திரமோகனை போல பலரை ஏமாற்றி உள்ளது தெரியவந்தது. இதில் கும்பகோணத்தை சேர்ந்த அமுதபிரியன் ரூ.1 லட்சம், சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த விஜயகுமார் ரூ.4.54 லட்சம், திருவள்ளூர் பொன்னேரியை சேர்ந்தவர் சரவணன் ரூ.1 லட்சம், முகமது ஜவகர் அலி ரூ.4.50 லட்சம், சேலம் மாவட்டத்தை சேர்ந்த முத்துகுமார் ரூ.1 லட்சம், சிதம்பரத்தை சேர்ந்த அகமது யாசர் ரூ.1 லட்சம், நாகர்கோவிலை சேர்ந்த பெஜாட்ச் ரூ.2 லட்சம் அரியலூர் புகழேந்தி மற்றும் கார்த்தீஸ்வரன் ஆகியோர் ரூ. 3.18 லட்சம் என மொத்தம் ரூ.19.22 லட்சம் பணத்தை பெற்று இந்த தம்பதியினர் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    • ரூ. 3 லட்சத்தை ராஜேஷ் பிரித்வியிடம் கொடுத்ததார்.
    • ராஜேஷ் பிரித்வி வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    கோவை,

    கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 46).

    இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த ராஜேஷ் பிரித்வி (35) என்பவர் அறிமுகமானார். அவர் சுப்பிரமணியிடம் கோவையில் பிரபல கல்லூரியில் சீட் வாங்கி தருகிறேன். யாருக்காவது சீட் வேண்டும் என்றால் சொல்லுங்கள் என கூறினார்.

    இதனை நம்பிய சுப்பிரமணி தனது மகனை கல்லூரியில் சேர்க்க வேண்டும் என கூறினார். அதற்கு ராஜேஷ் பிரித்வி கல்லூரியில் சீட் வாங்குவதற்கு பணம் செலவாகும் .

    அதற்கு ரூ. 3 லட்சம் வேண்டும் என கூறினார். இதனையடுத்து சுப்பிரமணி தனது மகனின் சீட்டிற்காக ரூ.3 லட்சத்தை ராஜேஷ் பிரித்வியிடம் கொடுத்ததார். ஆனால் பணத்தை பெற்ற பின்னர் கல்லூரியில் சீட் வாங்கி கொடுக்கவில்லை. மேலும் ராஜேஷ் பிரித்வி வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுப்பிரமணி இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் கல்லூரில் சீட் வாங்கித்தருவதாக கூறி ரூ.3 லட்சம் பணத்ஏதை பெற்று ஏமாற்றிய ராஜேஷ் பிரித்வி மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உலக பணக்காரர்கள் பட்டியலில் 7-வது இடத்துக்கு கவுதம் அதானி சரிவு.
    • அறிக்கையில் கேட்கப்பட்ட 88 நேரடி கேள்விகளில் ஒரு கேள்விக்குக் கூட அதானி குழுமத்திடமிருந்து பதில் இல்லை.

    மும்பை:

    பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக தொழில் அதிபர் கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மீது அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியதன் எதிரொலியாக, அந்தக் குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ.4.17 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்துள்ளது.

    ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, ஏராளமான தொகை கடன் வாங்கி அதனை மறைப்பது போன்ற முறைகேடான நடவடிக்கைகள் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பார்த்தன. மேலும், வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது போன்ற பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    அந்த அறிக்கை வெளியானதன் எதிரொலியாக, அதானி குழுமத்தில் பங்குகளை வாங்கியிருந்த முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் அதனை குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கினர். இதன் காரணமாக, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டே நாட்களில் அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை ரூ.4.17 லட்சம் கோடி வீழ்ச்சிடைந்தது.

    இதன் மூலம், கவுதம் அதானியின் சொத்து மதிப்பிலும் ரூ.4.17 லட்சம் கோடி குறைந்ததால், ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன் உலகின் 3-வது பெரிய பணக்காரராக இருந்த அவர். தற்போது 7-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    முன்னதாக, அந்த ஆய்வறிக்கை குறித்து அதானி குழுமத்தின் சார்பில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில், தவறான குறிக்கோளுடன் போதிய ஆய்வு செய்யாமல் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதானி குழுமம் எச்சரித்திருந்தது.

    இதற்கு பதிலளித்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், தங்களது அறிக்கையில் கேட்கப்பட்ட 88 நேரடி கேள்விகளில் ஒரு கேள்விக்குக் கூட அதானி குழுமத்திடமிருந்து பதில் இல்லை. 2 ஆண்டு கால தீவிர ஆய்வுக்குப் பிறகே அந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது அதனை சட்டரீதியில் எதிர்க்க வேண்டுமென்று அதானி குழுமம் உண்மையிலேயே நினைத்தால், தாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் அந்தக் குழுமம் வழக்கு தொடரலாம் என்று சவால்விட்டது.

    தற்போது நாடு முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில். பங்குச் சந்தையின் இரண்டே வர்த்தக நாள்களில் அதானி குழுமம் ரூ.4.17 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளது தொழில்துறையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    • ராமேசுவரம் அருகே இளம்பெண் ஒருவர் தோழியின் பேச்சை கேட்டு ரூ.2 லட்சத்தை இழந்தார்.
    • இதுகுறித்து அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகள் விஷ்ணு பிரியா (வயது 25). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி இன்ஸ்டாகிராம் பார்த்து கொண்டிருந்த போது தனது தோழியின் பெயரில் வந்த ஐ.டி.யில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் லாபம் பெற்றதாக தகவல் வந்தது. இதுகுறித்து அவர், தனது தோழியிடம் கேட்டதற்கு அவரும் அந்த தகவல் உண்மைதான் என்று கூறி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து தனது தோழியைபோல் பணம் முதலீடு செய்து லாபம் ஈட்ட முடிவு செய்த விஷ்ணு பிரியா, தனது வங்கி கணக்கில் இருந்து சிறிது சிறிதாக மொத்தம் ரூ.2 லட்சம் வரை குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

    பின்னர் அந்த தொகைக்கு லாபம் வந்துள்ளதா? என அந்த நிறுவனத்திடம் கேட்ட போது, எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது தோழியை அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் தனது இன்ஸ்டாகிராமை பிளாக் செய்து விட்டது தெரியவந்தது.

    இதனால் தோழி கூறியதை நம்பி பணத்தை இழந்து விட்டதை அறிந்த விஷ்ணு பிரியா, இதுபற்றி ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டுமான பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்த மத்திய அரசு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • இதுகுறித்து முருகன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான் பட்டியை சேர்ந்தவர் முருகன்(வயது53). மத்திய அரசு ஒப்பந்ததாரராக உள்ளார்.

    இவரது உறவினரான சிவகாசி கெங்காகுளத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற ஏ.கே.சாமி என்பவர் சென்னை ஊனமுற்றோர் கல்லூரியில் நிர்வாக பொறியாளராக உள்ளார். அவர் வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை வாங்கித்தந்தால் அதற்குரிய பணத்தை கொடுத்து விடுவதாக முருகனிடம் கூறியுள்ளார்.

    கருப்பசாமி மத்திய அரசு பணியில் இருப்பதால் அவர் மூலமாக டெண்டர் கிடைக்கும் என்று கருதி வீடு கட்டுவதற்கு தேவையான செங்கல், சிமெண்டு, கம்பி என ரூ.16 லட்சம் மதிப்பிலான கட்டுமான பொருட்களை முருகன் வாங்கி கொடுத்தார். அதற்குரிய பில்லை கொடுத்த பின்னர் கருப்பசாமி பணத்தை தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து முருகன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் கருப்பசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து வன்னியம்பட்டி போலீசார் கருப்பசாமி மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யூடியூப் லிங்கை கிளிக் செய்ய வைத்து ஒரு கும்பல் புதுவித ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகிறது.
    • ஆன்லைன் மோசடியில் பொது மக்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது.

    இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் பகுதி நேர வேலை தருவதாக கூறி யூடியூப் லிங்கை கிளிக் செய்ய வைத்து ஒரு கும்பல் புதுவித ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகிறது.

    இதுதொடர்பாக சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் கூறியதாவது:

    தற்போது ஆன்லைன் மூலம் புதிய வகை மோசடி நடந்து வருகிறது. பகுதி நேர வேலை தருவதாக வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்புவார்கள். என்ன வேலை என்று ரிப்ளை செய்தால் 'யூடியூப் வீடியோவை லைக் செய்வது' என்று பதில் அளிப்பார்கள்.

    அதன்படி அவர்களின் யூடியூப் வீடியோவை லைக் செய்தால் ரூ.50 முதல் ரூ.500 வரை உடனடியாக பணம் வரும். பின்னர் அவர்கள் நம்மை டெலிகிராம் குரூப்பில் இணைத்து விடுவார்கள். அதில் பகுதி நேர வேலை, முதலீடு என்று 2 வாய்ப்பு தருவார்கள். பகுதி நேர வேலையை தேர்வு செய்தால் ஒரு வேலையை கொடுப்பார்கள். அதற்கு மிக குறைந்த அளவு பணம் கட்ட வேண்டும். அதில் பல படிநிலைகள் இருக்கும்.

    முதல் 2 படிநிலைகள் எளிதாக இருக்கும். அதை செய்து முடித்தவுடன் முதலீடு செய்த பணம் போக 30 முதல் 60 சதவீதம் பணம் நமக்கு கமிஷனாக கிடைக்கும்.

    இப்படி ரூ.13 ஆயிரம் வரை பணத்தை திரும்ப நமக்கு தருவார்கள். அதற்கு அடுத்த படிநிலையில் முதலீடு செய்யும் தொகை ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என படிப்படியாக ரூ.5 லட்சம் வரை உயர்ந்து கொண்டே செல்லும்.

    நாம் அவர்கள் கொடுக்கும் பணியை முடித்துவிட்டால் நமக்கு கமிஷன் தொகை கிடைக்கும் என்று நினைத்திருப்போம். அதாவது நாம் ரூ.10 லட்சம் கட்டி இருந்தால் கமிஷன் தொகை 50 சதவீதத்தையும் சேர்த்து ரூ.15 லட்சம் நமக்கு கிடைக்க இருப்பதாக டிஸ்பிளேயில் காட்டும்.

    அதனால் ஆர்வத்துடன் ரூ.10 லட்சத்தை செலுத்தினால் அதன்பிறகு பணத்தை எடுக்க முடியாது. உங்கள் கணக்கு முடங்கிவிட்டது. பணத்தை எடுக்க வேண்டும் என்றால் உங்களுக்கு வர வேண்டிய ரூ.15 லட்சத்துக்கு 20 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். அதை செலுத்தினால் முழு பணமும் கிடைத்துவிடும் என்பார்கள்.

    இல்லாவிட்டால் நீங்கள் செய்த பணி தவறாகிவிட்டது. எனவே நீங்கள் இருக்கும் குழுவில் உள்ளவர்களுக்கு உங்கள் பணம் பகிர்ந்து அளிக்கப்பட்டுவிட்டது என்று கூறுவார்கள். இப்படி ஒவ்வொரு காரணமாக கூறி உங்களிடம் வெவ்வேறு வழிகளில் பணத்தை பறித்துக் கொண்டே இருப்பார்கள். அதன்பிறகு எந்த பணமும் நமக்கு வராது.

    நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் பகுதி நேர வேலை என்பதற்கு பதிலாக முதலீடு என்று தேர்வு செய்தால் நமது சேமிப்பு பணம் முழுவதையும் முதலீடு செய்ய வைத்து அதிக வட்டி தருவதாக கூறி நமது பணத்தை மோசடி செய்து விடுவார்கள்.

    எனவே, இதுபோன்ற ஆன்லைன் மோசடியில் பொது மக்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதையும் மீறி நீங்கள் ஏமாற்றப்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×