என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணமோசடி"

    • அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது
    • அசோக் குமார் பால் என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர்.

    சமீபத்தில் 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியின் மும்பை வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் பாலை அமலாக்கத்துறை கைது செய்தது. பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அசோக் குமார் பால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அசோக் பால், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் இருந்து நிதியைத் திசைதிருப்புவதிலும், பொதுத் துறை நிறுவனமான SECI- (Solar Energy Corporation of India) சிக்கவைக்க முக்கியப் பங்காற்றியதாக ED குற்றம் சாட்டியுள்ளது.

    இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அசோக் பாலுக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வரும் திங்கள்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    • மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸின், பர்வான் தொகுதி எம்எல்ஏ ஜீபன் கிருஷ்ணா சாஹா அமலாக்கத்துறையால் இன்று கைது செய்தனர்.

    முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஜீபன் கிருஷ்ணா தனது மொபைல் போன்களை வீட்டின் பின்னால் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு, சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றார்.

    இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்கு வந்திருந்த CRPF வீரர்கள் உதவியுடன் அவரை துரைத்திச் சென்று கைது செய்தனர். பின்னர், சாக்கடையில் இருந்து தொலைபேசிகள் மீட்கப்பட்டன. எம்எல்ஏவை அதிகாரிகள் கைது செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

    விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 2023 ஆம் ஆண்டு இதே வழக்கில் ஜீபன் கிருஷ்ணா சாஹாவை சிபிஐ கைது செய்தது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

    மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

    இந்த ஊழலில் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது நெருங்கிய தோழி அர்பிதா முகர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா உள்ளிட்ட பல முக்கிய நபர்களை அமலாக்கத் துறை ஏற்கனவே கைது செய்துள்ளது.

    • அனில் அம்பானிக்கு சொந்தமான அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது.
    • அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியது.

    ஜூலை 24 ஆம் தேதி, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு சொந்தமான மொத்தம் 50 நிறுவனங்கள், 25 வணிக கூட்டாளர்களின் வீடுகள் மற்றும் அம்பானி குழும நிறுவனங்களின் நிர்வாகிகளின் 35 க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் திடீர் சோதனைகளை நடத்தியது.

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த மூன்று நாள் சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியது.

    இந்நிலையில், இது தொடர்பான விசாரணைக்காக அனில் அம்பானி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.

    அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசா ரணை நடத்தினார்கள். 66 வயதான தொழில் அதிபர். அனில் அம்பானி மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வாக்குமூலத்தை பதிவு செய்வார்கள்.

    • ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் அனுப்பப்பட்டது.
    • பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் மூன்று நாள் சோதனை நடத்தப்பட்டது.

    ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது. ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் இந்த மாதம் 5 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    முன்னதாக ஜூலை 24 ஆம் தேதி, அனில் அம்பானிக்கு சொந்தமான மொத்தம் 50 நிறுவனங்கள், 25 வணிக கூட்டாளர்களின் வீடுகள் மற்றும் அம்பானி குழும நிறுவனங்களின் நிர்வாகிகளின் 35 க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் திடீர் சோதனைகளை நடத்தியது.

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த மூன்று நாள் சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. 

    • அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.
    • பணமோசடி வழக்கில் கடந்த வாரம் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

    திபிலிசி:

    ஜார்ஜியா முன்னாள் அதிபர் மிகைல் சாகாஷ்விலி (வயது 57). இவர் மீது அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.

    இதுதொடர்பான ஒரு வழக்கில் 2018-ம் ஆண்டு அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதன்பேரில் மிகைல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பணமோசடி வழக்கில் கடந்த வாரம் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

    இதற்கிடையே அவர் சட்ட விரோதமாக எல்லை தாண்டி உக்ரைன் சென்றிருந்தார். எனவே சட்ட விரோத பயணம் மேற்கொண்டதற்காக அவருக்கு தற்போது மேலும் 4½ ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    • 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஏமாந்ததை உணர்ந்த சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • கிறிஸ் கெயில் தான் தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரதாரர் என்று அவர் என்னிடம் கூறினார்.

    ஐதராபாத்தில் கிரிக்கெட் வீரர் க்றிஸ் கெயில் பெயரை வைத்து ரூ.2.8 கோடி மோசடி செய்ததாக சகோதரன் மீது சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார். 

    அவரது புகாரில், "2019-ல் காபி தூள் தயாரிக்கும் தொழிலை தொடங்கவுள்ளதாகவும், லாபத்தில் 4% பங்கு கொடுப்பதாகவும் சகோதரன் என்னிடம் உறுதியளித்தான். மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தான் தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரதாரர் என்று அவர் என்னிடம் கூறினார்.

    சகோதரனின் பேச்சை நம்பி நானும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தேன். மேலும், தனது சுற்றுவட்டாரத்தில் இருந்தும் மொத்தம் ரூ.5.7 கோடி திரட்டிக் கொடுத்தேன்.

    ஆரம்பத்தில் எனக்கு லாபம் என பணம் கொடுத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதை சகோதரன் நிறுத்தியுள்ளான். பல நாட்கள் ஆகியும் பணம் வரவில்லையே என நான் சகோதரனிடம் கேட்டபோது, என்னை தகாத வார்த்தைகளில் அவன் திட்டினான். மொத்தமாக ரூ.5.7 கோடி கொடுத்ததில் ரூ.90 லட்சம் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு நன் ஆளாகியுள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • சார், எங்களுக்கு டிக்கெட் பரிசோதகர் வேலை, கிளார்க் வேலை, போக்குவரத்து உதவியாளர் வேலைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • தினமும் 8 மணி நேரம் போகும் ரெயில்களையும், வரும் ரெயில்களையும் கணக்கெடுக்க சொல்லி இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

    ஒண்ணு... ரெண்டு... மூணு.... மொத்தம் 18 கோச். இதில் ஏ.சி. கோச் 3, முன்பதிவு செய்யப்படாதது 2 என்று டெல்லி ரெயில்வே ஸ்டேசன் பிளாட்பாரங்களில் நம்ம வடிவேலு மாதிரி ஓடி ஓடி சென்று புறப்படும் ரெயில்களையும், வந்த ரெயில்களையும் சில இளைஞர்கள் கணக்கெடுத்து கையில் இருந்த குறிப்பேட்டில் கவனமாக குறித்து கொண்டிருந்தார்கள்.

    பிளாட்பாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை மெதுவாக சென்று திரும்பிய போதும் கணக்கெடுப்பாளர்கள் செல்லவில்லை. அங்கேயே நின்று கணக்கெடுப்பதில்தான் தீவிரமாக இருந்தார்கள்.

    இதை கவனித்த இந்தி போலீஸ்காரர்கள் மற்ற பிளாட்பாரங்களில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்களுடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

    அப்போது 'பையன்களை பார்த்தால் தமிழ்நாட்டுகாரர்கள், நல்ல படித்தவர்கள் போல் இருக்கிறார்கள் என்று விபரத்தை சொல்லவும் மற்றொரு போலீஸ்காரர் 'டேய், நீ என்ன சொன்ன... இதே போல் 5-வது பிளாட்பாரத்திலும் சிலரை பார்த்தேன். 6-வது பிளாட்பாரத்திலும் சிலரை பார்த்தேன் என்று ஒவ்வொரு போலீஸ்காரரும் சொல்லவே சம்பந்தப்பட்ட இளைஞர்களில் சிலரை அழைத்து கேட்டிருக்கிறார்கள்.

    உடனே அவர்கள் மிகுந்த ஆர்வத்தில் 'சார், எங்களுக்கு டிக்கெட் பரிசோதகர் வேலை, கிளார்க் வேலை, போக்குவரத்து உதவியாளர் வேலைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்காக தினமும் 8 மணி நேரம் போகும் ரெயில்களையும், வரும் ரெயில்களையும் கணக்கெடுக்க சொல்லி இருக்கிறார்கள்' என்று கூறியிருக்கிறார்கள்.

    அதை கேட்டதும், "இவுங்க தலையில் எவனோ மிளகாய் அரைச்சிட்டாண்டா' என்று போலீசார் உஷாராகி விசாரித்த போது தான் பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

    விருதுநகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சுப்புசாமி (78). இவர் அந்த பகுதியில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்க உதவிகள் செய்துள்ளார்.

    கோவையைச் சேர்ந்த சிவராமன் என்பவரது அறிமுகம் சுப்புசாமிக்கு கிடைத்துள்ளது. சிவராமன் டெல்லியில் எம்.பி.க்கள் குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் அறிமுகம் கிடைத்தால் 'டெல்லியில் என்ன காரியம் ஆக வேண்டுமென்றாலும் பார்த்து கொள்ளலாம் என்று அளந்து விடுவாராம்.

    அவ்வாறு அவர் அளந்து விட்டதைத்தான் சுப்புசாமியும் நம்பி இருக்கிறார். அதாவது ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் முதல் பல வேலைகள் இருக்கிறது. எனக்கு தெரிந்த விகாஸ் ராணா (25) என்பவர் வடக்கு ரெயில்வேயில் உயர் அதிகாரியாக இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.

    அதை நம்பிய சுப்புசாமியும் உள்ளூரில் படித்த சில இளைஞர்களிடம் தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவல்கள் பலருக்கும் தெரியவரவே 28 பேர் வேலை கேட்டு அணுகி இருக்கிறார்கள். அனைவருமே பி.இ., எம்.இ. படித்தவர்கள். ரூ.2 லட்சம் முதல் 24 லட்சம் வரை அவர்களிடம் வசூலித்து மொத்தம் 2½ கோடி ரூபாயை விகாஸ் ராணாவிடம் கொடுத்து இருக்கிறார்கள்.

    அதை பெற்றுக்கொண்ட ராணா பணி ஆணை வாங்குவதற்கு முன்பு உங்களுக்கு பயிற்சி தேவை என்று ஒரு இடத்தில் தங்க வைத்து சில பயிற்சி புத்தகங்களை படிக்க கொடுத்துள்ளார்.

    அந்த பயிற்சிகளில் ஒன்றுதான் இந்த ரெயில்கள் கணக்கெடுப்பும். இந்த பயிற்சிகள் முடிந்ததும் கன்னாட்பிளேசில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு வர வேண்டும். ரெயில்வே அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என்று கூறி இருக்கிறார்.

    ஆனால் எல்லோரையும் வெளியே நிற்க சொல்லி விட்டு சான்றிதழ்களுடன் ராணாவும் அவரது கூட்டாளி துபே என்பவரும் உள்ளே சென்றிருக்கிறார்கள். நீண்ட நேரத்துக்கு பிறகு வெளியே வந்தவர்கள் சில உத்தரவு கடிதங்களையும் வழங்கி இருக்கிறார்கள்.

    ஆனால் அவை அனைத்தும் போலி என்பதும் அவர்கள் ஏமாற்றப்பட்டதும் தெரிய வந்தது. இதுபற்றி டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

    ஏமாந்த தமிழக வாலிபர்கள் இன்னும் எத்தனை பேரோ, போக போகத்தான் தெரிய வரும்.

    • பணத்தை கொடுக்க மறுத்த அருண் தம்பதியினர், சந்திரமோகனை மிரட்டி வெளியே அனுப்பினர்.
    • அருண் மற்றும் ஹேமலதா தம்பதியினர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கோவை:

    கோவை இருகூர் ஏ.ஜி.புதூர் சாலை பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 33). இவர் இங்கிலாந்தில் உள்ள பல்கலைகழகத்தில் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் படித்து முடித்துள்ளார். தற்போது கோவையில் வீட்டில் இருந்தவாறு வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் சந்திரமோகன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல ஆன்லைன் மூலம் முயற்சி செய்தார். அப்போது பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பு வந்தது. இதை நம்பி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தை அவர் அணுகினார்.

    அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான அருண் மற்றும் அவரது மனைவி ஹேமலதா ஆகியோர் இருந்தனர். சந்திரமோகனிடம் போலந்து நாட்டில் வேலை உள்ளதாகவும், அங்கு செல்ல ரூ.4 லட்சம் வரை செலவாகும் எனவும் அவர்கள் கூறினர். மேலும் முன் பணமாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும், பணியாணை வந்த பிறகு மீதி பணத்தை கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து சந்திரமோகன் இரண்டு தவணைகளாக ரூ.1 லட்சம் பணத்தை அருண் மற்றும் ஹேமலதா தம்பதியிடம் வழங்கினார். பின்னர் அவர்களிடம் வேலைக்கான பணியாணை குறித்து கேட்ட போது விரைவில் அழைப்பு வரும் என கூறி வந்தனர்.

    கடந்த ஓராண்டாக நேரில் சென்றும் முறையான பதில் அளிக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்ற சந்திரமோகன் பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டார். ஆனால் பணத்தை கொடுக்க மறுத்த அருண் தம்பதியினர், சந்திரமோகனை மிரட்டி வெளியே அனுப்பினர்.

    இதுகுறித்து சந்திரமோகன் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அருண் மற்றும் ஹேமலதா தம்பதியினர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மோசடியில் ஈடுபட்ட அருணை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது மனைவி ஹேமலதா தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    போலீஸ் விசாரணையில் இந்த தம்பதியினர் சந்திரமோகனை போல பலரை ஏமாற்றி உள்ளது தெரியவந்தது. இதில் கும்பகோணத்தை சேர்ந்த அமுதபிரியன் ரூ.1 லட்சம், சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த விஜயகுமார் ரூ.4.54 லட்சம், திருவள்ளூர் பொன்னேரியை சேர்ந்தவர் சரவணன் ரூ.1 லட்சம், முகமது ஜவகர் அலி ரூ.4.50 லட்சம், சேலம் மாவட்டத்தை சேர்ந்த முத்துகுமார் ரூ.1 லட்சம், சிதம்பரத்தை சேர்ந்த அகமது யாசர் ரூ.1 லட்சம், நாகர்கோவிலை சேர்ந்த பெஜாட்ச் ரூ.2 லட்சம் அரியலூர் புகழேந்தி மற்றும் கார்த்தீஸ்வரன் ஆகியோர் ரூ. 3.18 லட்சம் என மொத்தம் ரூ.19.22 லட்சம் பணத்தை பெற்று இந்த தம்பதியினர் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    • ஓ.டி.பி. எண்ணை சொன்ன அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போயுள்ளது.
    • தேவையில்லாமல் வரும் அழைப்புகளை உதாசீனப்படுத்தி விடுவதுதான் நல்லது என்றும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

    சென்னை:

    செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டுப் பெற்று பணத்தை பறிக்கும் வட மாநிலத்தவர்கள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனங்களின் பெயரைச் சொல்லி பொதுமக்களின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசும் வடமாநில வாலிபர்கள் உங்கள் செல்போன் எண்ணில் இருந்து உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்று கூறி வலை விரிக்கிறார்கள்.

    எதிர்முனையில் பேசும் பொதுமக்கள், நாங்கள் உணவு ஆர்டர் செய்யவில்லையே என்று கூறியதும்... என்ன சார் இப்படி சொல்றீங்க... உங்கள் செல்போனில் இருந்துதானே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இப்படி சொன்னால் எப்படி? என்று எதிர்கேள்வி கேட்கும் வடமாநில வாலிபர் சரி... உணவை நான் கேன்சல் செய்து கொள்கிறேன். உங்கள் நம்பருக்கு ஓ.டி.பி. வரும் அதை சொல்லுங்கள் என்பார்.

    அதேபோன்று சம்பந்தப்பட்ட நபரின் சொல்போனுக்கு ஓ.டி.பி. எண் வந்ததும் எதிர்முனையில் பேசிக் கொண்டு இருக்கும் வட மாநில வாலிபர் அதனை கூறுமாறு சொல்வார்.

    ஓ.டி.பி. எண்ணை சொன்ன அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போயுள்ளது.

    இப்படி ரூ.20 ஆயிரம் ரூபாயை ஒருவர் பறி கொடுத்துவிட்டு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பொது மக்களை உஷார்படுத்தி உள்ளனர். உங்கள் செல்போனுக்கு இதுபோன்று யாராவது தொடர்பு கொண்டு பேசினால் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்பை துண்டித்து விடுங்கள்.

    அதுதான் நல்லது. இல்லையென்றால் நீங்கள் பணத்தை இழப்பது உறுதி என்று போலீசார் தெரிவித்தனர். எப்போதுமே தேவையில்லாமல் வரும் அழைப்புகளை உதாசீனப்படுத்தி விடுவதுதான் நல்லது என்றும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவர் வேலை தேடிக் கொண்டிருந்தார். இணையதளம் வழியாகவும் பல்வேறு வேலை விவரங்களை தேடிக்கொண்டிருந்தார்.

    அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு நம்பரில் இருந்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்தது.

    அதில் நீங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை வெளிநாட்டில் உள்ளது.

    உங்களுக்கு அந்த வேலை வேண்டுமென்றால் நான் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும்.

    உங்களுக்கு விசா தயார் செய்து வெளிநாட்டிற்கு வேலை அனுப்புவது வேண்டியது எனது பொறுப்பு என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதனை உண்மை என்று நம்பி அந்த வாலிபர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினார். மொத்தம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வரை செலுத்தி இருந்தார்.

    ஆனால் நாட்கள் கடந்தும் வெளிநாட்டிற்கான வேலை பணி நியமன ஆணை வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அந்த வாலிபர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்தார்.

    ஆனால் எந்த தகவலும் தெரியவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அவர் உணர்ந்தார்.

    இது குறித்த அவர் தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட செல்போன் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    அதில் திருப்பூரை சேர்ந்த தீபிகா (வயது 30) என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் தீபிகாவை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் வாலிபரிடம் வெளிநாட்டு வேலை எனக்கூறி மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

    தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

    போலீசாரிடம், தீபிகா கூறிய விவரங்கள் வருமாறு:-

    எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் 6 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறேன்.

    பின்னர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்னை குன்றத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றி வந்தேன். எனக்கு பணம் அதிக அளவில் தேவைப்பட்டது .

    அப்போது யாருக்காவது போன் செய்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்தேன்.

    அதன்படி சம்பந்தப்பட்ட வாலிபருக்கு குறுந்தகவல் அனுப்பி எனது பெயரை மாற்றி கூறினேன். அவர் நம்பும் அளவிற்கு குறுந் தகவல்கள் அனுப்பினேன்.

    மேலும் வேறு ஒருவரின் வங்கி கணக்கை கொடுத்து அதில் பணம் போடச் செய்தேன். மேலும் வேறு பெயரில் உள்ள சிம் கார்டுகளை பயன்படுத்தினேன்.

    இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி நான் வேலை பார்த்த இடத்தில் என்னுடன் பணி புரிந்து வந்த ஒருவரை தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் இணையதளம் மோசடி செய்ததாக கூறி கைது செய்தனர்.

    அதுபோல் நானும் மாட்டிக்கொள்வேன் என்ற பயத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு கோயம்புத்தூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினேன். ஆனால் எப்படியோ என்னை தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து தீபிகாவை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ஐ போன், செல்போன், பல்வேறு சிம் கார்டுகள், பான் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து தீபிகாவை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரிக்க நீதிபதி , தீபிகாவை வருகிற 5-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

    அதன் பேரில் போலீசார், தீபிகாவை திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

    கவனமுடன் இருக்க வேண்டும்

    ஏதாவது ஒரு நம்பரில் இருந்து உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது.

    நீங்கள் பணம் அனுப்பினால் நாங்கள் அந்த பரிசுத்தொகையை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம் என குறுந்தகவல் வரும்.

    அதை யாரும் நம்ப வேண்டாம். மேலும் உங்களது செல்போன் எண்ணுக்கு பணம் கிடைத்துள்ளது. முன்பனமாக சிறிய தொகை செலுத்தினால் நாங்கள் பெரிய அளவில் பணம் தருகிறோம் எனவும் மெசேஜ் வரும்.

    அதனையும் நம்பி ஏமாற வேண்டாம். வங்கி விவரங்கள், ஓ.டி.பி விவரங்களை யாரும் கேட்டால் கொடுக்க வேண்டாம். ஏனென்றால் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் இருந்து இது போன்ற தகவல்கள் கேட்பதில்லை. சமூக வலைத்தளங்களை கவனமுடன் கையாள வேண்டும்.

    வெளிநாட்டில் வேலை என கூறி பலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே உண்மைத்தன்மை ஆராய்ந்து அதன் பிறகு முடிவு செய்ய வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர்.

    • அன்பழகன் உள்ளிட்ட சிலர் பிட் காயினில் பணம் முதலீடு செய்தால் அடுத்த 100 நாட்களில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.
    • அதனை கேட்டு நாங்கள் சுமார் ரூ.60 லட்சம், பிட் காயின் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தில் முதலீடு செய்தோம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன் மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஊராங்காணி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் மற்றும் சங்கராபுரம் அருகே அத்தியூர் கிராமத்தைத் சேர்ந்த அன்பழகன் உள்ளிட்ட சிலர் பிட் காயினில் பணம் முதலீடு செய்தால் அடுத்த 100 நாட்களில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள். அதனை கேட்டு நாங்கள் சுமார் ரூ.60 லட்சம், பிட் காயின் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தில் முதலீடு செய்தோம் ஆனால் நாட்கள் ஓடியும் மீண்டும் பணம் தரவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என கூறுகின்றனர். எனவே பிட் காயின் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து வருமாறு ராமசாமியிடம் அந்த நபர் கூறியுள்ளார்.
    • போலீசார் சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

     அவிநாசி:

    திருப்பூர் வாவிபாளையத்தை அடுத்த திருக்குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 64). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் துரைசாமி கடைக்கு தேவையான பிரிட்ஜ் வாங்குவதற்காக கடந்த வாரம் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பிரிட்ஜ் விலையை கேட்டு வந்துள்ளார்.

    இதை தொடர்ந்து துரைசாமியின் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தான் பிரிட்ஜ் வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி அறிமுகமாகி உள்ளார். மேலும் தங்களுக்கு தேவையான பிரிட்ஜ்க்கான முன்பணம் ரூ.15 ஆயிரம் என்றும், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வந்தால் உங்களை அழைத்து சென்று பிரிட்ஜ் வாங்கி தருவதாகவும் துரைசாமியிடம் கூறியுள்ளார். இதன் பின்பு செல்போனில் பேசிய நபர் துரைசாமி மளிகை கடைக்கு வந்து அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.

    மோட்டார்சைக்கிளில் ஏறிய உடன் அந்த நபர் முதியவரி–டம் இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தை வாங்கி கொண்டு பெருமாநல்லூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு ஜெராக்ஸ் கடை அருகில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து வருமாறு ராமசாமியிடம் அந்த நபர் கூறியுள்ளார். ராமசாமி ஜெராக்ஸ் எடுத்துவிட்டு வந்து பார்த்த போது அந்த நபர் அங்கு இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து முதியவர் ராமசாமி நடந்த சம்பவம் குறித்து பிரிட்ஜ் கடைக்கு போன் செய்து கேட்டுள்ளார். அப்போதுதான் அவர் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார்.

    இதுகுறித்து துரைசாமி திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி தருவதாக கூறி யாரேனும் போன் செய்தால் பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் என்றும், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.

    ×