search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cybercrime"

    • அலங்காரப் பொருட்கள் கூட ரகசிய கேமராவை கொண்டிருக்கலாம்.
    • கேமராக்கள் பெரும்பாலும் மின்னணு சாதனங்களில் மறைக்கப்படுகின்றன.

    மறைந்திருக்கும் ரகசிய கேமராக்களால் அம்பலமாகும் அபாயம் தற்போது நிறைய இடங்களில் இருக்கிறது. ஓட்டல், ஜவுளிக்கடையில் உடை அணிந்து பார்க்கும் அறை, பொதுவான இடங்களில் உள்ள கழிப்பிடம் போன்றவற்றில் ரகசிய கேமராக்கள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கலாம்.

    இந்நிலையில், ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி என்று பார்க்கலாம். ஓட்டல் அறைக்குள் சென்றதும். முதலில் அறையில் தேவையற்ற பொருட்களைக் கண்டால், உடனடியாக அவற்றை அகற்றச் சொல்லுங்கள். அகற்ற முடியாத பொருள் என்றால், அதுகுறித்து எச்சரிக்கையாக இருங்கள். அலங்காரப் பொருட்கள் கூட ரகசிய கேமராவை கொண்டிருக்கலாம்.

    கேமராக்கள் பெரும்பாலும் மின்னணு சாதனங்களில் மறைக்கப்படுகின்றன. எனவே தங்கும் அறையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் மீது கவனம் செலுத்துங்கள். ஸ்பீக்கர்கள் அல்லது கேட்கும் சாதனங்களை நன்றாகப் பாருங்கள். இதன் மூலம் கேமராவை எளிதில் மறைக்க முடியும். எனவே இவை அனைத்தையும் சரியாக கவனிக்கவும்.

     குளியலறை கொக்கிகள் அல்லது துணி தொங்கும் கம்பியை சரிபார்க்கவும். கேமராக்களை ஹேங்கர்களிலும் மறைத்து வைக்கலாம். அறையில் உள்ள திரைச் சீலைகளையும் நன்றாகப் பாருங்கள்.

     உங்களுக்கு கண்ணாடியின் மீது சந்தேகம் எழுந்தால் உடனே அதன் அருகில் சென்று உங்கள் விரலை கண்ணாடியில் வைக்கவும். உங்கள் விரலுக்கும், கண்ணாடியின் பிரதிபலிப்பிற்கும் இடைவெளி இருந்தால் அது உண்மையான கண்ணாடி. இடைவெளி இல்லாமல் இரண்டும் ஒட்டி இருந்தால் அது பொய்யான கண்ணாடி அதன் பின்னணியில் ஆபத்து இருக்க வாய்ப்பிருக்கிறது.

    இன்னொன்று சில கேமராக்கள் இரவிலும் செயல்படக்கூடியதாக இருக்கும் அதனால் அதனைச்சுற்றி எல்.ஈ.டி. விளக்குகள் எரிந்துகொண்டு இருக்கும். நீங்கள் அறையின் விளக்கை அணைத்தால் அது தெரிய வாய்ப்பிருக்கிறது.

     இதுதவிர இன்ஃப்ராரெட் கேமராக்களை நீங்கள் உங்கள் கைபேசி கேமராக்கள் வழியாகவே கண்டறியமுடியும். கேமராவை ஆன்செய்து ஒவ்வொரு இடமாக நகர்த்தினால் அங்கு கேமரா இருந்தால் சிவப்பு நிற விளக்கு எரியும். அதை வைத்து கண்டறியலாம். ரிமோட்டின் மேல் பகுதியிலுள்ள விளக்குபோன்ற பகுதிக்கு முன் செல்போன் கேமராவை வைத்து படமெடுத்தபடியே எந்த பட்டனையாவது அழுத்தினால் அதில் சிவப்பு நிற ஒளி எரியும். அவைதான் இன்ஃப்ராரெட். இது சாதரண கண்களுக்கு தெரியாது. தேவை இல்லாமல் எதாவது வயர் சென்றால் அந்த இடத்தை சோதித்துப் பாருங்கள்.

    "ஹிட்டன் கேமரா டிடெக்டர்" என்ற ஒரு ஆப் உள்ளது. இதன்மூலமும் கண்டறியலாம். இந்த ஆப்பை முழுமையாக நம்ப முடியாது என்றாலும், ஓரளவு நம்பகத்தன்மை கொண்டதுதான். இப்படியான வழிகளைக்கொண்டு நாம் கண்டறியலாம். நீங்கள் ஒருவேளை அதை உறுதிசெய்தால் உடனே அதை பதிவு செய்யுங்கள், காவல்துறையை, சைபர் கிரைமை அணுகுங்கள். நமது பாதுகாப்பு, நமது உரிமை. அதை பறிக்க யாருக்கும் உரிமையில்லை. அப்படி அத்துமீறுபவர்களுக்கு தண்டனை கொடுப்பது நமது கடமை.

    • தினேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஜூஜூவாடி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் தினேஷ்குமார்.

    தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் வாட்ஸ்-அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் பகுதிநேரம் வேலை இருப்பதாகவும், இதற்காக குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று இருந்தது.

    இதனை நம்பிய தினேஷ்குமார் அந்த மெசேஜில் வந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, அதில் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.12 லட்சத்து 21ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

    அதன்பின்பு அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது மர்ம நபரின் போன் சுவிட்ச் ஆப் செய்து இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டது தினேஷ்குமாருக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து தினேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார்.

    இதேபோல் கிருஷ்ணகிரி பவர்ஹவுஸ் காலனியை சேர்ந்தவர் அஜீன்குமார் (வயது27). இவரது செல்போனில் வந்த எஸ்.எம்.எஸில் வந்த குறுஞ்செய்தியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று வந்தது. அந்த லிங்க்கை கிளிக் செய்தபோது வந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் அஜீன்குமார் ரூ.7லட்சத்து 35ஆயிரத்தை செலுத்தினார். பின்னர் அந்த மர்ம நபரின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அஜீன்குமார் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார். இதேபோன்று ஓசூர் கே.சி.சி. நகரைச் சேர்ந்த ஷமீர் என்பவரின் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு மர்ம நபரின் வங்கி கணக்கில் ரூ.17 லட்சத்து 48 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் அவரை மர்ம நபர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். மாவட்டத்தில் 3 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.38 லட்சம் பணம் பறித்த சம்பவம் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
    • வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    சென்னை:

    சென்னை போலீசில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக 'அவள்' என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பெண்களுக்கான சட்ட உரிமைகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவள் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பெண்களுக்கான சைபர்கிரைம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் துணை கமிஷனர் கீதாஞ்சலி கலந்து கொண்டு பேசினார். 1,500 மாணவிகள் மத்தியில் சைபர் கிரைம் தொடர்பாக அவர் விளக்கி கூறியதாவது:-

    இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூக ஊடகங்கள் மூலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக போலியான ஆபாச வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது. எனவே பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும். தேவையில்லாத பட்சத்தில் தங்களது புகைப் படங்களையோ, வீடியோக்களையோ பகிராமல் இருப்பதே நல்லது. வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    ஒருவேளை சமூக ஊடகம் மூலமாக யாராவது தேவையில்லாத செய்தி களை அனுப்பினால் உடனே மனம் உடைந்து போகாமல் போலீசாரை அணுக வேண்டும். மனதில் தவறான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் தைரியமாக போலீசை அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அவள் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு இதுவரை 1,500 பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    • செல்போன் வாட்ஸ்-அப்பிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்துள்ளது.
    • கடந்த சில மாதங்களாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு:

    முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம் (45). தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவராகவும், தெலங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளராகவும் உள்ளார். மேலும் பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார்.

    மோகன் குமாரமங்கலம் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரு பழைய விமான நிலையம் கோடிஹள்ளி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது செல்போன் வாட்ஸ்-அப்பிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்துள்ளது. அப்போது அவருக்கு தெரியாமலேயே அந்த அழைப்பு ஏற்கப்பட்டது.

    அப்போது சத்தம் கேட்டு அவர் தனது செல்போனை எடுத்து பார்த்தார். அப்போது அதில் ஒரு இளம்பெண் நிர்வாணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அந்த வீடியோ காலை உடனடியாக துண்டித்து விட்டார். மேலும் மோசடி கும்பல் மோகன் குமாரமங்கலத்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து அவர் சாட்டிங் செய்தது போலவும், நிர்வாணமாக தோன்றிய பெண்ணின் வீடியோவை அவர் பார்ப்பது போன்றும் போலியாக தயாரித்து அவரை மிரட்டி பணம் கேட்டு உள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ரூ.6ஆயிரம் அந்த கும்பலுக்கு செலுத்தி உள்ளார். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் பணம் கேட்டு அவரை மிரட்டினர்.

    இதையடுத்து மோகன் குமாரமங்கலம் கடந்த 11-ந் தேதி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மோகன் குமாரமங்கலத்தை மிரட்டி பணம் பறித்த கும்பல் ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக பெங்களூரு பகுதியில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஆன்லைனில் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி துணிகரம்
    • சைபர் கிரைம் போலீசில் புகார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ஊசூர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அமீன் (வயது 32). இவரை ஆன்லைனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆன்லைனில் வேலை தருவதாக நம்பிக்கை வார்த்தைகள் கூறினர்.

    இதனை உண்மை என நம்பிய அமீன் அவர்கள் அனுப்பிய லிங்கில் இணைந்தார். பின்னர் சிறிது சிறிதாக ரூ.5 லட்சத்து 51 ஆயிரத்து 520 அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தினார்.

    மர்ம நபர்கள் கூறியபடி அமீன் முடித்துக் கொடுத்த வேலைக்கான பணம் அவரது வங்கி கணக்கில் வரவில்லை.

    இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் கேட்டபோது தாங்கள் கொடுக்கும் பணிகளை மீண்டும் முடித்துக் கொடுத்தால் பணம் வங்கி கணக்குக்கில் செலுத்து வதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அமீன் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அவசர செலவுக்கு பணம் தேவைப்படுவதாக ஹரிசேகரன் போல் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
    • கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஹரிசேகரன் பெயரில் 6 போலி பேஸ்புக் வலைத்தள கணக்குகள் செயல்பாட்டில் இருந்தது தெரிய வந்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில தீயணைப்பு துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் ஹரிசேகரன். இவர் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். மேலும் இவர் மறைந்த தமிழக மந்திரி கக்கனின் உறவினர் ஆவார். இவரது பெயரில் பேஸ்புக் வலைதள பக்கத்தில் போலி கணக்கு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அந்த கணக்கை கொண்டு பலரிடம் அவசர செலவுக்கு பணம் தேவைப்படுவதாக ஹரிசேகரன் போல் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதை நம்பிய சிலர் அதில் குறிப்பிட்டு இருந்த வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் சந்தேகம் அடைந்த சிலர் இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி.க்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே அவர் இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஹரிசேகரன் பெயரில் 6 போலி பேஸ்புக் வலைத்தள கணக்குகள் செயல்பாட்டில் இருந்ததும், அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பயன்படுத்தி பண மோசடி கும்பல் கைவரிசை காட்டியதும் தெரிந்தது.

    இதையடுத்து மோசடி கும்பலை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    • வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புகிறேன். அதனை கஷ்டப்படுபவர்களுக்கு கொடுங்கள் என்று பெண் ஒருவர் கூறியுள்ளார்.
    • வங்கி கணக்கில் உள்ள அமெரிக்க டாலர்களை எடுப்பதற்கு வரியாக ரூ.6 லட்சம் செலுத்த வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள லத்திகுளத்தை சேர்ந்தவர் மாடசாமி (வயது 42). இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது முகநூல் பக்கத்தை செல்போனில் பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் வந்த விளம்பரத்தை பார்த்துள்ளார்.

    அப்போது அதில் கொடுக்க ப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது எதிர்புறம் பேசிய பெண் ஒருவர் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புகிறேன். அதனை இந்தியாவில் கஷ்டப்படு பவர்களுக்கு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

    அதனை உண்மை என்று மாடசாமி நம்பி உள்ளார். தொடர்ந்து அவரது செல்போனுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதற்கிடையே சில நாட்களில் மாடசாமியை தொடர்பு கொண்ட மற்றொரு நபர் வருமான வரி அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களது வங்கி கணக்கில் அமெரிக்க டாலர்கள் இருப்பதை எடுப்பதற்கு வரியாக ரூ.6 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

    அதனை உண்மை என்று நம்பிய மாடசாமி அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி பல்வேறு தவணைகளாக ரூ.6 லட்சத்து 47 ஆயிரத்து 300-ஐ செலுத்தியுள்ளார். அதன் பின்னர் அவர் அந்த நபரை தொடர்பு கொண்ட போது அந்த செல்போன் 'சுவிட்ச் -ஆப்' ஆக இருந்துள்ளது.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாடசாமி நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பாலசுப்பிரமணியன் வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.7 லட்சத்து 9 ஆயிரத்து 329-யை செலுத்தியுள்ளார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்த வண்ணமாக உள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம், கமிஷன் பெறலாம் என்று மெசேஜ் அனுப்பி மீண்டும் 2 பேரிடம் ரூ.23 லட்சம் வரை மர்ம நபர்கள் பணமோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணியன். இவரது மனைவிக்காக செல்போன் மூலம் பகுதி நேர வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனில் டெலிகிராம் என்ற சமூக வலைதளத்தில் பகுதிநேரம் வேலை இருப்பதாகவும், அதில் குறைந்த முதலீடு செய்தால், அதிக சம்பளமும், கமிஷனும் கிடைக்கும் என்று குறுந்செய்தி வந்தது. அதனை நம்பிய பாலசுப்பிரமணியன் அந்த லிங்கை கிளிக் செய்ததன் மூலம் வந்த செல்போன் எண்ணில் மர்ம நபர் ஒருவரை தொடர்பு கொண்டார். அந்த மர்ம நபர் கூறியபடி பாலசுப்பிரமணியன் வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.7 லட்சத்து 9 ஆயிரத்து 329-யை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் அந்த மர்மநபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் என்று வந்தது. இதனால் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று கிருஷ்ணகிரி சாமந்தமலை அருகே தளவாய் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமாருக்கு செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு குறுந்செய்தி வந்தது. அதில் அதிக லாபம் மற்றும் கமிஷனுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக இருந்தது. இதனை நம்பிய அருண்குமார் மர்ம நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அவர் கூறியபடி வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சத்து 59 ஆயிரத்து 470-யை செலுத்தியுள்ளார்.

    அதன்பின்னர் அந்த மர்ம நபரை அருண்குமார் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. அதன்பின்னர் அருண்குமார் தன்னை மர்மநபர் ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் 2 பேரிடம் ரூ.23 லட்சம் வரை மர்ம நபர் பணமோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புகாரின் பேரில் விசாரணை நடத்த தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வந்தது.
    • மர்ம கும்பல் ரூ.11 லட்சத்தை பறித்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி ஆனந்த பிரியா (வயது28). சாப்ட் வேர் என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அனந்த பிரியாவின் வாட்ஸ் அப்பிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் தனியார் வங்கி மூலம் ரூ.10 லட்சம் கடன் தங்களுக்கு வந்துள்ளது என்று இருந்தது. அதனை நம்பிய ஆனந்த பிரியா அந்த லிங்கை கிளிக் செய்தார்.

    அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் வரை பணம் காணமால் போய்விட்டது. இது குறித்து ஆன்ந்தபிரியா சைபர் கிரைம் போலீசாருக்கு செல்போன் மூலம் புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்த தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீ சாருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ஆனந்த பிரியாவிடம் இருந்து ஆன்லைன் மூலம் மர்ம கும்பல் ரூ.11 லட்சத்தை பறித்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் என்ஜினீயரிடம் தனியார் வங்கி மூலம் கடன் தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீனா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் கடன் செயலிகள் செயல்பட்டு வருகிறது.
    • எப்போதுமே ஆன்லைன் தொடர்புகளில் வரும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் உஷாராக இருப்பதே நல்லது.

    சென்னை:

    சீனாவை சேர்ந்த கடன் செயலியால் வெளி மாநிலங்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் உஷாரான குஜராத் மற்றும் ஒடிசா மாநில போலீசார் நடவடிக்கை எடுத்து மோசடி கும்பலை கைது செய்து உள்ளனர்.

    இந்த கடன் செயலிகளுக்கு மூளையாக செயல்பட்டு மேற்பார்வையிட்டு வந்த விருதுநகர் வாலிபரை ஒடிசா போலீசார் கைது செய்து அழைத்துச் சென்று உள்ளனர். சீன நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வந்த சித்ரவேல் என்பவர் கைது செய்யப்பட்டு ஒடிசாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

    சீனா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் கடன் செயலிகள் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற செயலிகளில் சென்று எளிதாக கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் பொதுமக்கள் வங்கியில் இருக்கும் தங்களது பணத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

    எப்போதுமே இதுபோன்ற அறிமுகம் இல்லாத செயலிகள் மற்றும் நபர்களிடம் கடன் வாங்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. உரிய ஆவணங்களை காட்டினால் கடன் கொடுப்பதற்கு அங்கீகாரம் பெற்ற வங்கிகள் வரிசை கட்டி நிற்கின்றன. அது போன்ற வங்கிகளில் கடன் வாங்கி கொள்வதே சிறந்ததாகும்.

    தற்போது அனைவரது கைகளிலுமே செல்போன்கள் தவழ்வதால் அறிமுகம் இல்லாத பலர் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

    அதுபோன்ற நபர்களிடம் எதுவும் பேசாமல் தொடர்பை துண்டித்து விட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வீசும் வலையில் நிச்சயம் நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள்.

    எனவே எப்போதுமே ஆன்லைன் தொடர்புகளில் வரும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் உஷாராக இருப்பதே நல்லது.

    இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • கலையரசன் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
    • இளைஞர்களுக்கு செல்போன் மூலம், ஒலி பெருக்கி மூலம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அம்மன் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கலையரசன் (வயது29). இவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போனில் வாஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் பகுதி நேர வேலையில் சிறிய முதலீடு செய்தால், அதிக சம்பளமும், அதிக கமிஷன் தொகையும் தருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை நம்பிய கலையரசன் அந்த எண்ணை தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டபோது, எதிர் முனையில் பேசிய மர்ம நபர்கள் குறிப்பிட்ட தொகையை முதலில் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். உடனே அவர்கள் கூறிய வங்கி கணக்கில் கலையரசன் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது மர்ம நபர்கள் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து அவர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது மர்ம நபரின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டனர். இதுகுறித்து கலையரசன் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று ஓசூர் பத்தலபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னையன். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் (39). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கும் முன்பு அதிக சம்பளத்தில் பகுதி நேர வேலை தருவதாக ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதனை நம்பிய அவர் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.6 லட்சத்து 32 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன்பிறகு அவர் அந்த மர்ம நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து படித்த இளைஞர்களை குறிவைத்து இதேபோன்று ஆன்லைன் மூலம் பணமோசடியில் ஈடுபடும் மர்ம கும்பலை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், ஆன்லைன் மூலம் மோசடி நடைபெறுவதை தவிர்க்க இளைஞர்களுக்கு செல்போன் மூலம், ஒலி பெருக்கி மூலம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி வழிகாட்டுதல் படி , இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் மேற்பார்வையில் ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

    இதில் நிதி நிறுவன மோசடி,போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி,போலி கடன் செயலி ஆகியவை குறித்தும் ,சைபர் கிரைம் உதவி எண் 1930 பயன்படுத்துவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) ருத்ரகோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    ×