என் மலர்tooltip icon

    இந்தியா

    ரூ.3,000 கோடிக்கும் மேல் டிஜிட்டல் கைது மோசடி.. பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்ட NPCI
    X

    ரூ.3,000 கோடிக்கும் மேல் 'டிஜிட்டல் கைது' மோசடி.. பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்ட NPCI

    • நம்ப வைக்க போலி சீருடைகள், அரசாங்க லோகோக்கள் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற போலி பின்னணியை உருவாக்குவார்கள்.
    • வழக்கு விசாரிக்கப்படும் வரை ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் கணக்கிற்கு மாற்றுமாறு உங்களுக்கு அவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள்.

    நாடு முழுவதும் அரங்கேறி வரும் 'டிஜிட்டல் கைது' என்ற புதிய வகையான சைபர் மோசடி குறித்து நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) பொதுமக்களை எச்சரித்துள்ளது. மோசடி அழைப்பு வரும்போது செய்யவேண்டிய வழிகாட்டுதலைகளை NPCI வெளியிட்டுள்ளது.

    அதன் அறிக்கையில், இந்த 'டிஜிட்டல் கைது' மோசடியில், குற்றவாளிகள் முதலில் ஒரு சாதாரண தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, பின்னர் உங்களை நம்ப வைக்க வீடியோ அழைப்புக்கு மாறுவார்கள்.

    அவர்கள் தங்களை காவல்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, சுங்கத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு, பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் அல்லது வரி ஏய்ப்பு போன்ற கடுமையான வழக்குகள் உங்கள்மீது அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சுறுத்துவார்கள்.

    கைது செய்வதாக எச்சரித்து உங்களுக்கு அச்சத்தை உருவாக்குகிறார்கள். வீடியோ அழைப்புகளின் போது, உங்களை முழுமையாக நம்ப வைக்க போலி சீருடைகள், அரசாங்க லோகோக்கள் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற போலி பின்னணியை உருவாக்குவார்கள்.

    அவர்கள் உண்மையைச் சொல்வது போல் தோன்ற பின்னணியில் உள்ள அதிகாரப்பூர்வ அலுவலகங்களில் கேட்கக்கூடிய ஒலிகளையும் ஒலிக்கச் செய்வார்கள்.

    வழக்கு விசாரிக்கப்படும் வரை ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் கணக்கிற்கு மாற்றுமாறு உங்களுக்கு அவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள்.

    "வழக்கில் இருந்து உங்கள் பெயரை நீக்க", "விசாரணைக்கு ஒத்துழைக்க" அல்லது "திருப்பித் தரக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த" உள்ளிட்ட விஷயங்களைச் சொல்லி அவர்கள் மோசடியாக பணத்தை கொருவர்.

    இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான அழைப்புகளைப் பெற்றால் கவலைப்பட வேண்டாம். அரசாங்க புலனாய்வு நிறுவனங்கள் ஒருபோதும் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் விசாரணைகளை நடத்துவதில்லை, பணம் கோருவதில்லை.

    தெரியாத நபர்கள் அழைத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சொன்னால், உடனடியாக அழைப்பைத் துண்டித்து விவரங்களை சரிபார்க்கவும். தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது தொலைத்தொடர்புத் துறையின் 'சஞ்சார் சாத்தி' போர்ட்டலுக்கு புகார் அளிக்கவும்.

    அவர்களுடனான உரையாடல்களின் மெசேஜ்கள் மற்றும் ஸ்கிரீன் ஷாட்களைச் சேமித்தால் புகார் அளிக்கும்போது அதிகாரிகளால் அவை ஆதாரமாகப் பயன்படுத்தப்பட உதவும்" என்று NPCI தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.

    முன்னதாக அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்த வயதான தம்பதியிடமிருந்து போலியான நீதிமன்ற உத்தரவை காட்டி, உங்களை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக மிரட்டிய மர்ம நபர்கள், அவர்களிடம் இருந்து ரூ.1.05 கோடி பணத்தை பறித்துள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட அந்த வயதான பெண் நேரடியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்க்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து, உச்சநீதிமன்றம் தானாகவே வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

    நேற்று நடந்த இதன் விசாரணையின்போது கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், "நாடு முழுவதும் டிஜிட்டல் கைது வழியாக மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பலரிடம் ரூ.3,000 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    இதை கடுமையாக கையாளாவிட்டால் நிலைமை மோசமடையும். நமது விசாரணை அமைப்புகளின் திறனை நீதிமன்ற உத்தரவுகள் மூலம் வலுப்படுத்த வேண்டும். இந்த குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்." என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×