என் மலர்
நீங்கள் தேடியது "டிஜிட்டல் கைது"
- நம்ப வைக்க போலி சீருடைகள், அரசாங்க லோகோக்கள் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற போலி பின்னணியை உருவாக்குவார்கள்.
- வழக்கு விசாரிக்கப்படும் வரை ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் கணக்கிற்கு மாற்றுமாறு உங்களுக்கு அவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள்.
நாடு முழுவதும் அரங்கேறி வரும் 'டிஜிட்டல் கைது' என்ற புதிய வகையான சைபர் மோசடி குறித்து நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) பொதுமக்களை எச்சரித்துள்ளது. மோசடி அழைப்பு வரும்போது செய்யவேண்டிய வழிகாட்டுதலைகளை NPCI வெளியிட்டுள்ளது.
அதன் அறிக்கையில், இந்த 'டிஜிட்டல் கைது' மோசடியில், குற்றவாளிகள் முதலில் ஒரு சாதாரண தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, பின்னர் உங்களை நம்ப வைக்க வீடியோ அழைப்புக்கு மாறுவார்கள்.
அவர்கள் தங்களை காவல்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, சுங்கத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு, பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் அல்லது வரி ஏய்ப்பு போன்ற கடுமையான வழக்குகள் உங்கள்மீது அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சுறுத்துவார்கள்.
கைது செய்வதாக எச்சரித்து உங்களுக்கு அச்சத்தை உருவாக்குகிறார்கள். வீடியோ அழைப்புகளின் போது, உங்களை முழுமையாக நம்ப வைக்க போலி சீருடைகள், அரசாங்க லோகோக்கள் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற போலி பின்னணியை உருவாக்குவார்கள்.
அவர்கள் உண்மையைச் சொல்வது போல் தோன்ற பின்னணியில் உள்ள அதிகாரப்பூர்வ அலுவலகங்களில் கேட்கக்கூடிய ஒலிகளையும் ஒலிக்கச் செய்வார்கள்.
வழக்கு விசாரிக்கப்படும் வரை ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் கணக்கிற்கு மாற்றுமாறு உங்களுக்கு அவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள்.
"வழக்கில் இருந்து உங்கள் பெயரை நீக்க", "விசாரணைக்கு ஒத்துழைக்க" அல்லது "திருப்பித் தரக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த" உள்ளிட்ட விஷயங்களைச் சொல்லி அவர்கள் மோசடியாக பணத்தை கொருவர்.
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான அழைப்புகளைப் பெற்றால் கவலைப்பட வேண்டாம். அரசாங்க புலனாய்வு நிறுவனங்கள் ஒருபோதும் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் விசாரணைகளை நடத்துவதில்லை, பணம் கோருவதில்லை.
தெரியாத நபர்கள் அழைத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சொன்னால், உடனடியாக அழைப்பைத் துண்டித்து விவரங்களை சரிபார்க்கவும். தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது தொலைத்தொடர்புத் துறையின் 'சஞ்சார் சாத்தி' போர்ட்டலுக்கு புகார் அளிக்கவும்.
அவர்களுடனான உரையாடல்களின் மெசேஜ்கள் மற்றும் ஸ்கிரீன் ஷாட்களைச் சேமித்தால் புகார் அளிக்கும்போது அதிகாரிகளால் அவை ஆதாரமாகப் பயன்படுத்தப்பட உதவும்" என்று NPCI தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.
முன்னதாக அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்த வயதான தம்பதியிடமிருந்து போலியான நீதிமன்ற உத்தரவை காட்டி, உங்களை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக மிரட்டிய மர்ம நபர்கள், அவர்களிடம் இருந்து ரூ.1.05 கோடி பணத்தை பறித்துள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட அந்த வயதான பெண் நேரடியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்க்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து, உச்சநீதிமன்றம் தானாகவே வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
நேற்று நடந்த இதன் விசாரணையின்போது கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், "நாடு முழுவதும் டிஜிட்டல் கைது வழியாக மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பலரிடம் ரூ.3,000 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதை கடுமையாக கையாளாவிட்டால் நிலைமை மோசமடையும். நமது விசாரணை அமைப்புகளின் திறனை நீதிமன்ற உத்தரவுகள் மூலம் வலுப்படுத்த வேண்டும். இந்த குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்." என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- செல்போனில் குற்றப்பிரிவு போலீஸ்காரர் என கூறி ஒருவர் வீடியோ காலில் பேசினார்.
- குண்டு வெடிப்பு மற்றும் கடத்தல் வழக்குகளில் முதியவர் செல்போன் எண் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஸ்ரீ நகர் காலனியை சேர்ந்தவர் 78 வயது முதியவர். இவர் மத்திய அரசு ஊழியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருடைய செல்போனில் குற்றப்பிரிவு போலீஸ்காரர் என கூறி ஒருவர் வீடியோ காலில் பேசினார்.
குண்டு வெடிப்பு மற்றும் கடத்தல் வழக்குகளில் முதியவர் செல்போன் எண் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிபிஐயின் நோட்டீஸ்களை காட்டினார். இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் முதியவர் கணக்கில் இருந்து குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு ரூ.51 லட்சத்தை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார். வழக்கு முடிந்த பிறகு நீங்கள் அனுப்பும் பணத்தை மீண்டும் உங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும் என கூறினார்.
போலீசார் இந்த வழக்குகளில் தன்னை கைது செய்து விடுவார்களோ என பயந்த முதியவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.51 லட்சத்தை அனுப்பி வைத்தார். பின்னர் டிஜிட்டல் கைது மூலம் தான் ஏமாற்றப்பட்டுதை அறிந்த முதியவர் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த ஆண்டை விட 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை இருமடங்காகி 4,439 வழக்குகள் பதிவாகி உள்ளன.
- 'டிஜிட்டல் கைது' மூலம் பொதுமக்களிடமிருந்து சுமார் ரூ. 2,500 கோடி வரை பணம் பறிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பிறப்பித்தது போல போலியாகத் தயாரிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை பயன்படுத்தி அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்த 73 வயது பெண்மணி ஒருவரை 'டிஜிட்டல் கைது செய்வதாக ஏமாற்றி சைபர் மோசடி கும்பல் ஒன்று ரூ.1 பணம் பறிக்க முயற்சித்துள்ளது.
இதுதொடர்பாக அப்பெண்மணி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு புகார் கடிதம் ஒன்றை எழுதினார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே மோசடிக்காரர்கள் போலி செய்திருப்பது நீதிபதிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைதொடர்ந்து டிஜிட்டல் கைது மோசடிகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
"போலி ஆவணங்கள் மூலம் டிஜிட்டல் கைது மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்" என்ற தலைப்பில் தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட இந்த மனுவை, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஸி அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது.
இந்த மோசடிகளைச் சமாளிக்க மாநில காவல்துறையால் முடியுமா அல்லது நாடு தழுவிய விசாரணைக்கு மத்திய விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டுமா என்பது குறித்து இந்த அமர்வு முடிவு செய்யும்.
தேசிய சைபர் குற்றப் புகாரளிக்கும் இணையதளத்தில் (NCRP), 2024 இல் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 2,746 'டிஜிட்டல் கைது' வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கிட்டத்தட்ட இருமடங்காகி 4,439 வழக்குகளாக உயர்ந்துள்ளது.
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 'டிஜிட்டல் கைது' மூலம் பொதுமக்களிடமிருந்து சுமார் ரூ. 2,500 கோடி வரை பணம் பறிக்கப்பட்டுள்ளது.
- பணத்தை மர்ம நபரின் கணக்கில் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
- டிஜிட்டல் கைது என கூறும் அவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் ஊழியர் லெனி பிரபு. இவருடைய செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் வந்தது.
இதையடுத்து லெனி பிரபு அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர், தான் சட்ட அமலாக்க அதிகாரி. உங்களது பெயரில் சீனாவிற்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலில் 150 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை பொருள் இருப்பதாக கூறினார்.
அந்த பார்சலை கோர்ட்டில் ஒப்படைத்தால் 75 ஆண்டுகளுக்கு மேலான சிறைத்தண்டனை விதிக்கப்படும். தண்டனையில் இருந்து தப்பிக்க உங்களுக்கு தடையில்லா சான்றிதழை பெற என்னால் உதவ முடியும். அதுவரை உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும், உங்களை விடுவிக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்குமாறு மிரட்டினார்.
இதனால் பயந்த லெனி பிரபு முதலில் ரூ.55 லட்சத்தை அந்த நபரின் கணக்கிற்கு அனுப்பினார். மொத்தம் ரூ.3.09 கோடி பல பரிவர்த்தனைகள் மூலம் அனுப்பினார்.
இதை அறிந்த அக்கம், பக்கத்தினர் டிஜிட்டல் கைது என்பது மோசடி. உங்களை ஏமாற்றி சைபர் கிரைம் மோசடி கும்பல் பணத்தை பறித்துள்ளனர் என தெரிவிக்கவே அதிர்ச்சி அடைந்த லெனி பிரபு மங்களூரு சைபர் எக்னாமிக் அண்ட் நார்கோடிக்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து திருடப்பட்ட பணத்தை மர்ம நபரின் கணக்கில் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சைபர் மோசடி குற்றவாளிகள் பெரும்பாலும் சி.பி.ஐ. அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் அல்லது சுங்க அதிகாரிகள் என்று காட்டிக் கொண்டு செல்போன் அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்வார்கள். டிஜிட்டல் கைது என கூறும் அவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
- மறுமுனையில் பேசிய பெண் தான் ஜோதி விஸ்வநாத், தொலைதொடர்பு துறையில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.
- நகைகள், சொத்துக்களை விற்று, ரூ.19.24 கோடி ரூபாயை மோசடி கும்பலின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் மூத்த பெண் மருத்துவர் ஒருவர் டிஜிட்டல் கைது மோசடியில் மூன்று மாதங்களில் (102 நாட்களில்) ரூ.19 கோடிக்கும் மேல் இழந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் மருத்துவருக்கு போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் பேசிய பெண் தான் ஜோதி விஸ்வநாத், தொலைதொடர்பு துறையில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர்கள் மற்றும் நோட்டரி அதிகாரிகள் கூறி பலர் பேசியுள்ளார்.
மருத்துவர் பணமோசடி வழக்கில் சிக்கியுள்ளதாக நம்பவைத்துள்ளனர். போலி அமலாக்கத்துறை நோட்டீஸ்களை அனுப்பி, கைது செய்வோம் என தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.
மருத்துவரின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு கேட்ட அவர்கள் கேட்ட விவரங்களை கொடுத்த பின்னர், பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை டெப்பாசிட் செய்யுமாறு கூறியுள்ளனர்.
விசாரணை முடிந்த பிறகு பணம் திருப்பி அனுப்பப்படும் என்று அவர்கள் கூறியதை நம்பி மருத்துவரும் தனது நிலையான வைப்பு நிதிகளை உடைத்து, நகைகள், சொத்துக்களை விற்று, ரூ.19.24 கோடி ரூபாயை மோசடி கும்பலின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். பணத்தை திருப்பித் தராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவரின் புகாரின் அடிப்படையில் , சந்தேகத்தின் பேரில் லால்ஜி ஜெயந்திபாய் பல்தானியா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்போடியா நாட்டை சேர்ந்த சைபர் கிரைம் கும்பலுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ.1,192 கோடியை இந்தியர்களிடம் மோசடி செய்து பறித்துள்ளனர்.
- பிப்ரவரியில் ரூ.951 கோடி, மார்ச்சில் ரூ.1,000 கோடி மற்றும் ஏப்ரல் மாதத்தில் ரூ.999 கோடி மோசடி நடந்துள்ளது.
2025 இன் முதல் ஐந்து மாதங்களில், இந்தியர்கள் ஆன்லைன் மோசடியால் ரூ.7,000 கோடியை இழந்துள்ளனர்.
அதாவது, ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நிகழ்ந்துள்ளது. சிட்டிசன் ஃபைனான்சியல் சைபர் மோசடி மற்றும் மேலாண்மை அமைப்பின் ஆய்வில் இது கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கை நாட்டில் பதிவு செய்யப்பட்ட சைபர் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டது. புகார் அளிக்கப்படாத வழக்குகளையும் சேர்த்தால், தொகை இன்னும் அதிகமாக இருக்கும்.
இந்தப் பணத்தில் பாதிக்கும் மேற்பட்டவை கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட மோசடி மூலம் பறிக்கப்பட்டுள்ளது.
சீன ஆபரேட்டர்களால் கட்டுப்படுத்தப்படும் மிகவும் பாதுகாப்பான மையங்களில் மோசடிக்காரர்களின் நடவடிக்கைகள் மேற்கொள்படுகின்றன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த மோசடி செய்பவர்கள் ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ.1,192 கோடியை இந்தியர்களிடம் மோசடி செய்து பறித்துள்ளனர். பிப்ரவரியில் ரூ.951 கோடி, மார்ச்சில் ரூ.1,000 கோடி மற்றும் ஏப்ரல் மாதத்தில் ரூ.999 கோடி மோசடி நடந்துள்ளது.
இது தொடர்பாக கம்போடியாவைச் சேர்ந்த அதிகாரிகள் சமீபத்தில் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். கம்போடியாவில் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் 45 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. லாவோஸில் 5, மியான்மரில் 1 மையம் கண்டறியப்பட்டது . இந்த மோசடிகாரர்கள் முக்கியமாக பங்கு வர்த்தகம், முதலீட்டு மோசடி, டிஜிட்டல் கைதுகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியர்களை வைக்காதே இந்த மோசடிகளை அரங்கேற்றும் கும்பல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. முன்னதாக, கம்போடியாவில் சுமார் 5,000 இந்தியர்கள் சைபர் குற்றங்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதியவர் மோகன் நதிகாவை உங்களை டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டினார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு துரஹள்ளி வனப்பகுதிக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மோகன் நதிகா (71). இவரை கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி வாட்ஸ் அப்பில் அழைத்த சிலர் தங்களை மகாராஷ்டிரா போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
பின்னர் மோகன் நதிகாவிடம் நீங்கள் உங்கள் அடையாள அட்டையை தவறாக பயன்படுத்தி மோசடி செய்ததாக மிரட்டியுள்ளனர். மேலும் உங்களது அடையாள அட்டை மற்றும் வங்கி ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதனால் பயந்து போன முதியவர் மோகன் நதிகா தனது வங்கி ஆவணங்களை அவர்களிடம் கொடுத்தார். பின்னர் வீடியோ அழைப்பில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதியவர் மோகன் நதிகாவை உங்களை டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டினார்.
மேலும் அவரிடம் இருந்து பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 1கோடியே 13 லட்சத்தை பெற்றுக் கொண்டனர். பின்னர் தான் சைபர் மோசடி கும்பலால் மிரட்டப்பட்டது பற்றி தெரியவந்ததும் முதியவர் பெங்களூரு தெற்கு பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சைபர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
- பல்கலைக்கழக துணை வேந்தர் ரூ.14 லட்சத்தை இழந்திருப்பது ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெர்ஹாம்பூர்:
ஒடிசாவின் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக துணை வேந்தராக இருப்பவர் கீதாஞ்சலி தாஸ். இவரை கடந்த பிப்ரவரி மாதம் சிலர் செல்போனில் தொடர்பு கொண்டனர். தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்ட அவர்கள், கீதாஞ்சலி தாஸ் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.14 லட்சம் தருமாறு கூறிய அவர்கள், அதில் ரூ.80 ஆயிரத்தை திருப்பி கொடுத்து விட்டு மீதி பணத்தை விசாரணைக்குப்பின் தருவதாக கூறினர். ஆனால் அவர்கள் கூறியதைப்போல பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட கீதாஞ்சலி தாஸ், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், இந்த மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த 2 பேரை தற்போது கைது செய்துள்ளனர்.
அவர்களை ஒடிசா அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சைபர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் கைது மோசடியில் பல்கலைக்கழக துணை வேந்தர் ரூ.14 லட்சத்தை இழந்திருப்பது ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- முதியவர் அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பி உள்ளார்.
- புகாரின்பேரில் போலீசார் பணம் பறித்த மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
நவிமும்பை:
நவிமும்பை கோபர்கைரானே பகுதியை சேர்ந்த 70 வயது முதியவருக்கு, அண்மையில் வீடியோ கால் அழைப்பு ஒன்று வந்தது. இதில் எதிர்முனையில் தோன்றிய நபர், தன்னை சி.பி.ஐ. அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார்.
பின்னர் அவர், உங்கள் பெயரில் விமானத்தில் வந்த பார்சல் ஒன்று எங்களிடம் சிக்கியுள்ளது. அதில், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள், 8 பாஸ்போர்ட்டுகள், மடிக்கணினி ஆகியவை உள்ளது. இதனால் உங்களை டிஜிட்டல் கைது செய்யப் போகிறோம் என மிரட்டினார்.
மேலும் இதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் உடனடியாக ரூ.12½ லட்சத்தை அனுப்பி வைக்கவேண்டும் என கூறி ஒரு வங்கிக்கணக்கு எண்ணை தெரிவித்தார்.
இதனால் பயந்து போன முதியவர் அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் பணம் பறித்த மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
- போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மும்பை:
மும்பையில் வசித்து வரும் 86 வயது மூதாட்டியை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீஸ் அதிகாரி எனக்கூறி ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் மூதாட்டியின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் அதிகளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறினார். மேலும் அதற்காக மூதாட்டி மற்றும் அவரது மகள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக மிரட்டினார். இதேபோல மூதாட்டியை டிஜிட்டல் கைது செய்து இருப்பதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டியிடம் மேலும் சிலர் அதிகாரிகள் எனக்கூறி பேசினர்.
அந்த கும்பல் வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாக கூறி மூதாட்டியிடம் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த 5-ந்தேதி வரை ரூ.20 கோடி வரை பறித்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் ஏமாற்றப்படுவது குறித்து அறிந்த மூதாட்டி இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது மோசடியில் மலாடு மேற்கு பகுதியை சேர்ந்த ஷயான் ஜமீல் சேக்(20), மிரா ரோட்டை சேர்ந்த ரஜிக் அசாம் பட்டிற்கு(20) தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- வங்கிக்கணக்கு விவரங்களை கூறுங்கள் என மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.
- மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
சென்னை:
சர்வதேச செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் மாமனார் ஆனந்த் 81 வயதான இவர் கோட்டூர்புரம் வெள்ளையன் தெருவில் வசித்து வருகிறார். இவரது செல்போனில் கடந்த 18-ந் தேதி வாட்ஸ் அப் அழைப்பு வந்து உள்ளது.
அதில் பேசிய நபர் தன்னை கர்நாடக மாநில போலீஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசி உள்ளார். அப்போது அவர் உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி கர்நாடகாவில் வாடகை கார் எடுக்கப்பட்டு உள்ளது. அந்த கார் பெரிய அளவில் விபத்தில் சிக்கி உள்ளது. பலர் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உங்க வங்கிக்கணக்கு விவரங்களை கூறுங்கள் என மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.
இருப்பினும் உஷாரான ஆனந்தின் மாமனார் போலியான நபர் யாரோ நம்மிடம் பேசுகிறார் என்பதை உணர்ந்து இணைப்பை துண்டித்து உள்ளார். இதனால் அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணம் தப்பியது.
இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மும்பை உள்ளிட்ட வெளிமாநில போலீசார் பேசுவது போல மிரட்டி செஸ் சாம்பியன் ஆனந்தின் மாமனாரை மர்மநபர் டிஜிட்டல் முறையில் கைது செய்ய திட்டமிட்டு பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
- உங்கள் பெயரில் சீனாவிற்கு அனுப்பப்பட்ட பார்சலில் 400 கிராம் போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளோம்
- வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என கூறி ரூ.1,78,000 களவாடியுள்ளனர்.
டிஜிட்டல் கைது மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மோசடி செய்பவர்கள் அரசு அதிகாரிகள் அல்லது மத்திய புலனாய்வு அதிகாரிகள் போல் நடித்து ஆடியோ/வீடியோ அழைப்புகள் மூலம் மக்களை குறிவைக்கின்றனர். அவர்களின் வலையில் விழுந்த பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். சமீபத்தில் இந்த மோசடி கும்பலிடம் குஜராத்தை சேர்ந்த 90 வயது முதியவர் 1 கோடி ரூபாயை பறிகொடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த அந்த முதியவரின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம், தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து பேசியபோது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை ஒரு சி.பி.ஐ. அதிகாரி என்று என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

முதியவரின் பெயரில் மும்பையில் இருந்து சீனாவிற்கு அனுப்பப்பட்ட பார்சலில் 400 கிராம் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதியவரின் வங்கி கணக்கு மூலம் பணமோசடி உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மிரட்டியுள்ளார்.
மேலும் முதியவரை 'டிஜிட்டல் கைது' செய்திருப்பதாக கூறி, 15 நாட்களுக்கு அவர் யாரையும் தொடர்பு கொள்ள விடாமல் செய்துள்ளனர். முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை அவர்கள் எடுத்துள்ளனர். முதியவரின் குடும்பத்தினர் விஷயம் அறிந்து போலீசில் புகார் அழித்ததை அடுத்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
46 டெபிட் கார்டுகள், 23 வங்கி கணக்கு புத்தகங்கள், ரப்பர் ஸ்டாம்புகள், 28 சிம் கார்டுகள் ஆகியவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சீனாவில் செயல்பட்டு வரும் ஒரு கும்பலுடன் சேர்ந்து இத்தகைய மோசடிகளை அரங்கேற்றி வந்துள்ளது. இதுபோல பல்வேறு டிஜிட்டல் கைது மோசடி கும்பல்கள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.

மும்பையைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரிடம் டிஜிட்டல் கைது செய்துள்ளதாகக் கூறி வீடியோ காலில் ஆடைகளை கழற்ற கட்டப்படுத்திய சம்பவமும் அரங்கேறி உள்ளது. மும்பையில் போரிவலி கிழக்கு பகுதியில் வசிக்கும் அந்த பெண்ணை கடந்த நவம்பர் 19 ஆம் தேதி வீடியோ காலில் தொடர்புகொண்ட மோசடி நபர்கள் தங்களை டெல்லி காவல்துறையினரைப் போல் காட்டிக்கொண்டு அந்த பெண் மீது பண மோசடி வழக்கு போடப்போவதாக மிரட்டியுள்ளனர்.

வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என கூறி ரூ.1,78,000 களவாடியுள்ளனர். மேலும் உடலை சோதனை செய்யவேண்டும் என்று கூறி வீடியோ காலிலேயே ஆடைகளை கழற்ற வற்புறுத்தியுள்ளனர். மோசடியை உணர்ந்த பெண் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஐடி சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.






