என் மலர்
இந்தியா

டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டல்- பெங்களூருவை சேர்ந்த முதியவரிடம் ரூ.1.13 கோடி பறித்த கும்பல்
- அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதியவர் மோகன் நதிகாவை உங்களை டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டினார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு துரஹள்ளி வனப்பகுதிக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மோகன் நதிகா (71). இவரை கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி வாட்ஸ் அப்பில் அழைத்த சிலர் தங்களை மகாராஷ்டிரா போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
பின்னர் மோகன் நதிகாவிடம் நீங்கள் உங்கள் அடையாள அட்டையை தவறாக பயன்படுத்தி மோசடி செய்ததாக மிரட்டியுள்ளனர். மேலும் உங்களது அடையாள அட்டை மற்றும் வங்கி ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதனால் பயந்து போன முதியவர் மோகன் நதிகா தனது வங்கி ஆவணங்களை அவர்களிடம் கொடுத்தார். பின்னர் வீடியோ அழைப்பில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதியவர் மோகன் நதிகாவை உங்களை டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டினார்.
மேலும் அவரிடம் இருந்து பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 1கோடியே 13 லட்சத்தை பெற்றுக் கொண்டனர். பின்னர் தான் சைபர் மோசடி கும்பலால் மிரட்டப்பட்டது பற்றி தெரியவந்ததும் முதியவர் பெங்களூரு தெற்கு பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






