search icon
என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.
    • லாரி இருந்த ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தெலுங்கானாவில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ரங்காரெட்டி மாவட்டம் அள்ளூர் பகுதியில் சாலையோரம் காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

    லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சம்பந்தப்பட்ட லாரி வேகமாக வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் ஓட்டம் பிடித்தனர்.

    இதில், சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விபத்தை ஏற்படுத்திய லாரி, தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுதட்தி இறுதியாக மரத்தில் மோதி நின்றுள்ளது.

    விபத்தில், லாரி இருந்த ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்பத்தின் எதிர்பை மீறி நாகமணி - ஸ்ரீகாந்த் திருமணம் நடந்துள்ளது.
    • பலத்த காயமடைந்த நாகமணி இரத்த வெள்ளத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தெலுங்கானாவில் சாதி மாறி திருமணம் செய்த இளம் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் அண்ணனால் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், இப்ராஹிம்பட்டினம் மண்டலம், ராய்போல் கிராமத்தை நாகமணி. ஹயத்நகர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வரும் நாகமணி, கடந்த 15 நாட்களுக்கு முன்பு, தான் காதலித்து வந்த ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். குடும்பத்தின் எதிர்பை மீறி நாகமணி - ஸ்ரீகாந்த் திருமணம் நடந்துள்ளது. 

    இந்நிலையில் போலீஸ் கூற்றுப்படி, ராயபோலில் இருந்து மன்னேகுடா நோக்கி இன்று காலை ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த நாகமணி மீது கார் ஒன்று  வேண்டுமென்றே மோதியுள்ளது.

    ஸ்கூட்டரில் இருந்து நிலைதடுமாறி விழுந்த நாகமணியை காரில் இருந்து இறங்கிய அண்ணன் பரமேஷ் கத்தியால்  அவரது கழுத்து மற்றும் பிற இடங்களில் அறுத்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த நாகமணி இரத்த வெள்ளத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

     

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகமணியின் உடலை கைப்பற்றினர். நாகமணி காதல் திருமணத்தால் கோபமடைந்த அவரது  அண்ணன் பரமேஷ் இந்த ஆணவக் கொலையை செய்துள்ளதாக போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.

    வழக்குப்பதிவு விசாரணை நடத்திவரும் போலீசார் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர். கொலைக்கு சொத்து தகராறு காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் பிடிக்காததால்தான் நாகமணி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக அவரது கணவர் ஸ்ரீகாந்த்தும் தெரிவித்துள்ளார். 

    • சன்னி லியோனின் நேரடி டிஜே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
    • டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தனர்.

    ஐதராபாத் ஜூப்ளி ஹில்சில் உள்ள ஒரு மதுபான விடுதியில் வார இறுதி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடிகை சன்னி லியோனின் நேரடி டிஜே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

    இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தனர். ரசிகர்கள் போட்டிபோட்டு டிக்கெட்டுகளை வாங்கினர்.

    ஆனால், சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய மனுவை போலீசார் நிராகரித்தனர். மறுப்பு இருந்தாலும், பிரச்சனை சரியாகிவிடும் என்று எதிர்பார்த்து சன்னி லியோனை ஐதராபாத் வரவழைத்தனர்.

    டிக்கெட் வாங்கியவர்களும் அங்கு குவிந்தனர். ஆனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்டதை வீடியோ செய்தி மூலம் தெரிவித்தனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எண்ணெய் லாரில் இருந்த எரிபொருள் சாலையில் சிந்தியுள்ளது.
    • இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள குசைகுடா-நகரம் சாலையில் 25க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்ததில் பலர் காயமடைந்தனர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சாலையில் சென்ற எண்ணெய் லாரில் இருந்த எரிபொருள் சாலையில் சிந்தியுள்ளது. இந்த எரிபொருளால் இருசக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி விழுந்துள்ளது. இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் பலருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அந்த சாலையில் மரத்தூள் மற்றும் மணலைத் தெளித்து போக்குவரத்து போலீசார் சாலையை சீர்செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து குசைகுடா-நகரம் சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டது. 

    • கணவனும், மனைவியும் விவசாய வேலை செய்து கொண்டிருந்தனர்.
    • மனைவி கற்களை எடுத்து புலி மீது வீசி கூச்சலிட்டார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், குமரம் பீம் மாவட்டம்,சிர்ப்புர் அடுத்த டுப்பாக்குடாவை சேர்ந்தவர் சுரேஷ். விவசாயி. இவரது மனைவி சுஜாதா. இருவரும் நேற்று நிலத்திற்கு சென்று விவசாய வேலை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த புலி ஒன்று திடீரென பாய்ந்து வந்து சுரேசை தாக்கியது. இதில் சுரேஷின் கழுத்து மற்றும் உடல் பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சுரேஷ் வலியால் அலறி துடித்தார்.

    இதனைக் கண்ட அவரது மனைவியை சுஜாதா அங்கிருந்த கற்களை எடுத்து புலி மீது வீசி கூச்சலிட்டார். இதனைக் கண்ட புலி அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் ஓடியது.

    அருகில் இருந்தவர்கள் சுரேஷை மீட்டு சிர்புர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக மஞ்சரியாலா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    நேற்று முன்தினம் லட்சுமி என்ற பெண்ணை புலி கடித்து கொன்றது. அதே புலி தான் நேற்று விவசாயியை தாக்கியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாவோயிஸ்டு எதிர்ப்பு படையினர் மற்றும் கிரே ஹவுன்ட்ஸ் போலீசார் இணைந்து வனப்பகுதியில் அதிரடி வேட்டை நடத்தினர்.
    • சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் முக்கிய தலைவர்களும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம், ஏதூர் நகரம் அருகே உள்ள சல் பாகா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கிரே ஹவுன்ட்ஸ் மற்றும் மாவோயிஸ்டு எதிர்ப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மாவோயிஸ்டு எதிர்ப்பு படையினர் மற்றும் கிரே ஹவுன்ட்ஸ் போலீசார் இணைந்து வனப்பகுதியில் அதிரடி வேட்டை நடத்தினர். அடர்ந்த காட்டுக்குள் போலீசாரை கண்ட மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை எதிர்த்து போலீசாரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாவோயிஸ்டுகள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் முக்கிய தலைவர்களும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த ஓராண்டில் மாநிலத்தில் பதிவான மொத்த தற்கொலைகளில் கிட்டத்தட்ட 36 சதவீதம் குத்தகை விவசாயிகள்.
    • பல சலுகைகளை மறுத்துள்ளது விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் ரிது ஸ்வராஜ்ய வேதிகா என்ற அமைப்பு விவசாயிகள் பிரச்சனைகளுக்காக போராடி வருகிறது.

    இந்த அமைப்பு சார்பில் சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டனர். அதில் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் 223 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்று கூறியுள்ளது.

    அதிர்ச்சியளிக்கும் வகையில், வேதிகா வெளியிட்ட பட்டியலின்படி, கடந்த 12 மாதங்களில் சித்திப்பேட்டை மாவட்டத்தில் 22 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விவசாயத் துறையை உயர்த்துவோம் என்று பல வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.

    பயிர்க் காப்பீட்டை மறுத்ததோடு, குத்தகை விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கவும் அரசு தவறிவிட்டது.

    கடந்த ஓராண்டில் மாநிலத்தில் பதிவான மொத்த தற்கொலைகளில் கிட்டத்தட்ட 36 சதவீதம் குத்தகை விவசாயிகள்.

    100 சதவீத விவசாயிகளின் கடன் தள்ளுபடியை அமல்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துள்ளது. மேலும் பல சலுகைகளை மறுத்துள்ளது விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

    • ராஜேஷ்பாபு என்பவர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தார்.
    • அஷ்விதா (25) என்ற பெண்ணை ரூ.10 லட்சம் தருவதாகக் கூறி ஒப்பந்தம் செய்துள்ளார்.

    தெலங்கானா மாநிலத்தில் வாடகை தாயாக சென்ற அஷ்விதா என்ற பெண் 9 வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ராயதுர்கம் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ராஜேஷ்பாபு (54) என்பவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்துள்ளார்.

    இதற்காக ஒடிசாவைச் சேர்ந்த அஷ்விதா சிங் (25) என்ற பெண்ணிடம் ரூ.10 லட்சம் பணம் தருவதாகக் கூறி ஒப்பந்தம் செய்துள்ளார். பின்னர் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அஷ்விதா சிங்கை ராஜேஷ்பாபு தங்கவைத்துள்ளார்.

    இந்நிலையில், 9வது மாடியில் கீழ் விழுந்து அஷ்விதா பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அஷ்விதாவின் கணவர் சஞ்சய் சிங் அளித்த புகாரின் பேரில், ராஜேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போலீசார் விசாரணையில் அஷ்விதா கருப்பமாக இல்லை என்றும் அதற்கான சிகிச்சை அடுத்த மாதம் தான் தொடங்கவுள்ளது என்பதையும் அடுக்குமாடி குடியிருப்பின் 9-ம் மாடியில் இருந்து 7வது மாடி வரை 2 சேலைகள் கட்டப்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர்.

    இந்நிலையில், அடிக்கடி அஷ்விதாவிடன் பாலியல் அத்துமீறலில் ராஜேஷ்பாபு ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை ராஜேஷ் பாபுவின் பாலியல் தொல்லை அதிகரிக்கவே அஷ்விதா 9வது மாடியில் இருந்து 7வது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு சேலை கட்டி இறங்க முயன்றபோது கைகள் நழுவி கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • ஐதராபாத் வெங்கடாத்ரி நகர் பகுதியில் தெரு முழுவதும் ரத்த ஆறு ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சி
    • தெலுங்கானா மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா தொழிற்பேட்டை அருகே வெங்கடாத்ரி நகர் பகுதியில் தெரு முழுவதும் ரத்த ஆறு ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள், நகராட்சி அதிகாரிகளை அழைத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த அதிகாரிகள், இது ரத்தம் இல்லை என்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சிவப்பு நிற ரசாயனம் என்று தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

    இத்தகைய ரசாயனக் கழிவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் தெலுங்கானா மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து, தொழிற்சாலைகள் ரசாயனங்கள் வெளியேற்றப்படுவதை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தனர்.

    • 2 பெண் பயணிகள் வித்தியாசமான பெரிய கூடை ஒன்றை வைத்திருந்தனர்.
    • 2 பெண்களும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஷாம்ஷாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாங்காங்கில் இருந்து வந்த விமானத்தில் 2 பெண் பயணிகள் வித்தியாசமான பெரிய கூடை ஒன்றை வைத்திருந்தனர்.

    அதனை கண்ட சுங்க அதிகாரிகள் அந்த கூடைகளை பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அதில் கவர்ச்சியான 2 பாம்புகள் இருந்தன. இதனைக் கண்டு சுங்க அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் பாம்புகளுடன் பாங்காக்கில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் வந்துள்ளனர்.

    இந்த பாம்புகள், அதிக விஷம் கொண்டவை. 2 பெண்களும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர். பாம்புகள் மீட்கப்பட்டன.

    பாம்பு கடத்தலில் இந்த பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்டுள்ளார்களா அல்லது யாரேனும் அறிவுறுத்தல்களின்படி செயல்படுகிறார்களா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாங்கள் யாரிடமும் கூட ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை.
    • நன்கொடையை ஏற்கவில்லை என்பதை அதானி குழுமத்துக்கு நேற்று கடிதம் மூலம் தெரிவித்துவிட்டோம் என தெரிவித்தார்.

    ஐதராபாத்:

    யங் இந்தியா திறன் பல்கலைக்கழகத்திற்கு அதானி குழுமம் ரூ,100 கோடியை வழங்கி இருந்தது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்த தொகையை தெலுங்கானா அரசு நிராகரித்துவிட்டதாக அம்மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரேவந்த் ரெட்டி,

    யங் இந்தியா திறன் பல்கலைக்கழகத்துக்காக பல்வேறு நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ளன. அந்த வகையில், அதானி குழுமமும் ரூ.100 கோடி கொடுத்தது. ஆனால், அந்த நன்கொடையை ஏற்க வேண்டாம் என மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

    தெலுங்கானாவின் கவுரவம் மற்றும் கண்ணியத்தை பாதுகாக்கவும் எனக்கும் எனது அமைச்சரவை சகாக்களுக்கு உள்ள தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கவும் அதானியின் நன்கொடையை நிராகரிக்க நாங்கள் முடிவு செய்தோம். நாங்கள் யாரிடமும் கூட ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. நாங்கள் நன்கொடையை ஏற்கவில்லை என்பதை அதானி குழுமத்துக்கு நேற்று கடிதம் மூலம் தெரிவித்துவிட்டோம் என தெரிவித்தார். மேலும், கடிதத்தின் நகலையும் செய்தியாளர்களுக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி வழங்கினார்.

    அதானி குழுமத்திடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய அந்நிறுவனம் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அதை மறைத்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடம் இருந்து அந்நிறுவனம் நிதி திரட்டி உள்ளதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி:

    தெலுங்கு சினிமா காமெடி நடிகர் அலி. தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள எக்மாமிடி கிராமத்தில் பண்ணை வீடு கட்டி வருகிறார்.

    இந்த வீடு எந்தவித அனுமதி இன்றி கட்டப்படுவதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் சார்பில் அலிக்கு நோட்டீஸ் அனுப்பினர். அந்த நோட்டீஸ் கட்டிட பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கட்டுமானத்திற்கான அனுமதியை பெற வேண்டும். இதனை மீறினால் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அலி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு சேர்ந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் ராஜமுந்திரி அல்லது விஜயவாடாவில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு சீட் வழங்கப்பட வில்லை.

    இந்த நிலையில் அவர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். விரைவில் அவர் ஜனசேனா கட்சியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அலிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×