search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்"

    • அனைவரும் ஒன்றிணைந்து பஜனை கோவில் விழாவை நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
    • நீதிமன்றத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்ய உள்ளதாக அண்ணாதுரை தெரிவித்தார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பெரமியம் கிராமத்தில் பஜனை கோவில் உள்ளது. இங்கு ராமர் உருவ படம் வைத்து குறிப்பிட்ட ஒரு பிரிவினர் பல ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பிரிவை சேர்ந்த அண்ணாதுரை உட்பட 25 குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்தும், பஜனை கோவில் விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என கடும் கட்டுப்பாடுகளை ஒரு தரப்பினர் விதித்தனர்.

    இதையடுத்து 25 குடும்பத்தை சேர்ந்தோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாரர் அண்ணாதுரை மூலம் மனு தாக்கல் செய்தனர். எதிர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரு பிரிவுகளாக செயல்படாமல் ஒரே பிரிவாக செயல்பட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பஜனை கோவில் விழாவை நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

    ஆனால் மற்றொரு தரப்பினர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் தங்களுக்கென ஒரு தேதியை தேர்ந்தெடுத்து அதில் விழா கொண்டாட தொடங்கினர். இந்தநிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் திரவியம் மற்றும் போலீஸ் டி.எஸ்.பி., தினேஷ்குமார் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.

    நீதிமன்ற உத்தரவின்படி கிராம விழாவை இருதரப்பும் இணைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாதுரை தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் காவல்துறை அதிகாரி ஒருவரும் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சிலரும் , நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மற்றொரு தரப்பிற்கு சாதகமாக செயல்படுவதாக கூறியும், நீதிமன்ற உத்தரவை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தும் டி.எஸ்.பி., தினேஷ் குமாரின் காலில் விழுந்து அண்ணாதுரை கதறி அழுதார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவரை தூக்கிவிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்ய உள்ளதாக அண்ணாதுரை தெரிவித்தார்.

    • பிரசாதத்தை சுத்தமாக வழங்க கோவில் நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
    • லட்டு பாக்கெட்டுகளை எலிகள் சேதப்படுத்தி, அதில் தாய் எலிக்குட்டிகளை போட்டு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

    மும்பை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் நெய்யில் கலப்படம் செய்து இருப்பது உறுதியானது.

    பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாத பாக்கெட் வைக்கப்பட்டு இருந்த டிரே மற்றும் லட்டு பாக்கெட்டுகளை எலிகள் கடித்து சேதப்படுத்தி இருப்பதையும், அதில் எலிக்குட்டிகள் கிடப்பதையும் காட்டும் வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    திருப்பதி கோவில் பரபரப்பு அடங்குவதற்குள் சித்தி விநாயகர் கோவில் லட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளது. லட்டு பாக்கெட்டுகளை எலிகள் சேதப்படுத்தி, அதில் தாய் எலிக்குட்டிகளை போட்டு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

    சமூகவலைதள வீடியோ குறித்து கோவில் அறக்கட்டளை தலைவரும், சிவசேனா எம்.எல்.ஏ.வுமான சதாசர்வன்கர் கூறியதாவது:-

    கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான லட்டுகள் வினியோகம் செய்யப்படுகிறது. லட்டு தயாரிக்கும் இடம் மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது. வீடியோவில் காட்டப்படும் இடம் அசுத்தமாக உள்ளது. அந்த வீடியோ கோவிலில் எடுக்கப்பட்டது அல்ல. வெளியில் எங்கோ அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்படும். மேலும் இந்த விவகாரம் குறித்து துணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    பிரசாதத்தை சுத்தமாக வழங்க கோவில் நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. லட்டு தயாரிக்க பயன்படும் நெய், முந்திரி உள்ளிட்டவை மும்பை மாநகராட்சி ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அங்கு ஒப்புதல் பெற்ற பிறகு தான் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும். பக்தர்களுக்கு வழங்கும் பிரசாதம் சுத்தமாக கொடுப்பதை உறுதி செய்ய நாங்கள் முழுகவனம் செலுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கமாக இந்த கோவில் கொடை விழாக்களில் பொங்கல், புளியோதரை, மதியம் சாப்பாடு அன்னதானமாக வழங்கப்படும்.
    • கடந்த ஆண்டு இதே கோவிலில் திருவிழாவின்போது பக்தர்களுக்கு அன்னதானமாக சப்பாத்தி வழங்கியது குறிப்பிடத்கத்தது.

    ஆலங்குளம்:

    நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஆடி மாதத்தில் தொடங்கி வரிசையாக அம்மன் கோவில்களில் கொடை விழாக்கள் வெகு விமரிசையாக நடக்கும். ஆடுகள் பலியிடுதல், சாமக்கொடை, மதிய கொடை என பல்வேறு வகை நிகழ்ச்சிகள் இந்த கொடை விழாக்களில் நடைபெறும்.

    இன்றளவும் கிராமப்பகுதிகளில் விமரிசையாக நடந்து வரும் இந்த விழாக்களை காண வெளியூர்களில் இருந்தும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

    வழக்கமாக இந்த கோவில் கொடை விழாக்களில் பொங்கல், புளியோதரை, மதியம் சாப்பாடு அன்னதானமாக வழங்கப்படும். இதனை கிராம மக்கள் குடும்பத்துடன் வந்து சாப்பிட்டு செல்வார்கள். ஆனால் சமீப காலமாக சற்று வித்தியாசமாக அரிசி சாதத்திற்கு பதிலாக பக்தர்களுக்கு சப்பாத்தி, பரோட்டா உள்ளிட்டவைகளை அன்னதானமாக வழங்குவது நெல்லை, தென்காசி மாவட்ட கோவில்களில் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் நெல்லை மாவட்டம் முக்கூடல் நாராயணசுவாமி கோவிலில் திருவிழாவின்போது பக்தர்களுக்கு அந்த ஊர் இளைஞர்கள் முழு பங்களிப்புடன் பரோட்டா தயார் செய்து அன்னதானமாக வழங்கினர்.


    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் சமீபத்தில் நடந்து முடிந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களின் பங்களிப்புடன் பக்தர்களுக்கு இரவு அன்னதானமாக சப்பாத்தி, குருமா வழங்கப்பட்டது.

    இந்நிலையில் ஆலங்குளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவிலிலும் தற்போது கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. அந்த கோவிலிலும் வித்தியாசமாக அன்னதானம் வழங்கவேண்டும் என்று முடிவு எடுத்த கோவில் நிர்வாகிகள், பரோட்டா வழங்க திட்டமிட்டனர்.

    இதையடுத்து கொடை விழா நிறைவு நாளன்று 16 பேர் கொண்ட குழு மாஸ்டர் சுந்தர் என்பவர் தலைமையில் பரோட்டா சுட்டனர். சுமார் 750 கிலோ மாவு பயன்படுத்தி கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 800 பரோட்டாக்கள் போடப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்கு வந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பரோட்டாவையும், அதற்கு வழங்கப்பட்ட சென்னா மசாலாவையும் போட்டி போட்டு வாங்கி ருசித்து சாப்பிட்டனர்.

    கடந்த ஆண்டு இதே கோவிலில் திருவிழாவின்போது பக்தர்களுக்கு அன்னதானமாக சப்பாத்தி வழங்கியது குறிப்பிடத்கத்தது.

    • ஷிண்டே சேனா தலைவர் மற்றும் பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    • கோவிலுக்குள் செல்ல முயன்றவர்களை இருப்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

    கோவில் வளாகத்திற்குள் சிலர் அனுமதிக்க மறுத்து, அவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தானேவில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்தில் ஷிண்டே சேனா தலைவர் மற்றும் பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    சாதி பாகுபாடு காரணமாக 25 வயது மாணவர் மற்றும் அவரது சமூகத்தை சேர்ந்த சிலருக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த கேட்ட போது ஷிண்டே சேனா தலைவர் மற்றும் பலர் ஒன்றுகூடி மாணவர் மற்றும் அவருடன் கோவிலுக்குள் செல்ல முயன்றவர்களை இருப்பு கம்பியால் தாக்கியதோடு, அவர்கள் மீது காலணியை வீசியுள்ளனர்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரில் விகாஸ் ரெபேல் மற்றும் பலர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், கலவரம் தூண்டுதல் மற்றும் பல சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் சிக்கியுள்ள நபர் ஒருவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று வேகிள் எஸ்டேட் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • பேரிடர் மேலாண்மைக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ரா அருகே உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி ஆலய வாரியத்தின் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

    நிலச்சரிவில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

    • அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம்.
    • கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

    புதுச்சேரி:

    தமிழ்நாட்டில் அம்மன் கோவில்களில் ஆடி மாதம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

    இதே போல் ஆந்திராவில் அங்குள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். தெலுங்கு நாட்காட்டிபடி சிரவண மாதம் ஆகஸ்டு 3-ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 3-ந் தேதி முடிகிறது. இந்த நாட்களில் அங்குள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம்.

    ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை ஒட்டியுள்ள புதுவையின் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. இதில் ரூபாய் நோட்டுக்களால் மாலை செய்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய்,20 ரூபாய், 10 ரூபாய் ஆகியவற்றைக் கொண்டு ரூ.16 லட்சம் மதிப்பிலான நோட்டுக்களால் அம்மனுக்கு மாலையும், அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

    12 ஆண்டுகளாக இதே பகுதியை சேர்ந்த வனக்கால நரேந்திரா என்ற பக்தர் அம்மனுக்கு ஆண்டுதோறும் ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்து கடைசி நாளில் பக்தர்களுக்கு அந்த நோட்டுகளை பிரசாதமாக வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருநெடுங்களம் கோவிலை வணங்கினால் தீரா துயர் தீரும்.
    • திருமணஞ்சேரி தலத்தில் வழிபட்டால் திருமண தோஷம் விலகும்.

    சென்னை:

    கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. நமது ஊரில் உள்ள கோவில்களுக்குச் சென்று சாமியை தரிசனம் செய்து வரவேண்டும் என முன்னோர் வலியுறுத்தி உள்ளனர்.

    அதன்படி, எந்த ஊருக்குச் சென்று எந்த சாமியை வணங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

    திருக்கருக்குடி கோவிலை வணங்கினால் குடும்ப கவலை நீங்கும்.

    திருக்கருவேலி கோவிலை வணங்கினால் குழந்தை பாக்கியம் பெறலாம். வறுமை நீங்கும்.

    திருவழுந்தூர் கோவிலை வணங்கினால் முன்ஜென்ம பாவம் விலகும்.

    திருப்பராய்துறை கோவிலை வழிபட்டால் கர்வத்தால் கெட்டவர்கள் நலம் பெறலாம்.

    திருநெடுங்களம் கோவிலை வணங்கினால் தீரா துயர் தீரும்.

    திருவெறும்பூர் கோவிலை வழிபட்டால் அதிகார மோகத்தால் வீழ்ந்தவர்கள் தெளிவு பெறலாம்.

    திருப்பைஞ்ஞீலி கோவிலை வணங்கினால் எம பயம் விலகும்.

    திருவையாறு கோவிலை வழிபட்டால் அக்னி தோஷம் விலகும்.

    திருவைகாவூர் கோவிலில் வில்வ அர்ச்சனை செய்தால் பாவங்கள் விலகும்.

    திருமங்கலங்குடி ஈசனை வணங்கினால் குழந்தை பாக்கியம் பெறலாம்.

    திருமணஞ்சேரி தலத்தில் வழிபட்டால் திருமண தோஷம் விலகும்.

    திருமுல்லைவாயல் ஈசனை வணங்கினால் சந்திர தோஷம் விலகும்.

    திருவெண்காடு கோவிலை வழிபட்டால் ஊழ்வினை தோஷம் நீங்கும்.

    திருநெல்வேலி நெல்லையப்பரை வணங்கினால் மகான்களுக்கு செய்த குற்றம் விலகும்.

    திருக்குற்றாலம் குற்றால நாதரை வேண்டினால் முக்தி கிடைக்கும்.

    திருவாலவாய் கோவிலை வணங்கினால் நட்சத்திர தோஷம் நீங்கும்.

    திருப்பரங்குன்றத்தை வழிபட்டால் வாழத் தெரியாது தவிப்பவர்களுக்கு வழி கிடைக்கும்.

    திருவாடானை தலத்தை வணங்கினால் தீராத பாவம் நீங்கும்.

    திருமுருகநாத சுவாமி கோவிலை வழிபட்டால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலகும்.

    திருப்பாதிரிபுலியூர் தலத்தை வணங்கினால் தாயை விட்டுப் பிரிந்திருக்கும் குழந்தைக்கு தோஷம் நீங்கும்.

    திருவேற்காடு ஈசனை வணங்கினால் வாணிப பாவம் விலகும்.

    திருமயிலாப்பூர் கபாலீஸ்வரரை வழிபட்டால் 3 தலைமுறை தோஷம் நீங்கும்.

    • கிராம மக்கள் கோவிலுக்கு சென்றபோது, அந்த வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை பார்த்துள்ளனர்.
    • வேப்ப மரத்தில் பால் வடிவதை கூட்டம் கூட்டமாக ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

    நம்பியூர் அடுத்துள்ள பருத்திக்காட்டு பாளையத்தில் சிறிய அளவிலான விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே வேப்பமரம் உள்ளது.

    இந்நிலையில் கிராம மக்கள் கோவிலுக்கு சென்றபோது, அந்த வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை பார்த்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு சென்று பார்த்த போது, மரத்தின் உயரமான கிளையில் இருந்து அதிக அளவில் பால் வடிவது கண்டு ஆச்சரியமடைந்தனர்.

    விநாயகர் கோவில் அருகே உள்ள வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவது குறித்து தகவல் அறிந்த அருகில் உள்ள கிராம மக்களும் வேப்ப மரத்தில் பால் வடிவதை கூட்டம் கூட்டமாக ஆச்சரியமாக பார்த்து சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழலாக நிலவியது.

    • ஆடி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை தொடங்கி 5 வாரங்கள் சனிக்கிழமைகளில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறும்.
    • பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட இந்த கோவில் சனி பரிகார தலமாக உள்ளது.

    இந்த கோவிலுக்கு முன்பு செல்லும் சுரபி நதிக்கரையில் பக்தர்கள் நீராடி எள்சாதம், நெய் தீபம் ஏற்றி கருப்பு வேட்டி, பூமாலை, பழம், படையல் செய்து வழிபாடு நடத்தினால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதற்காக ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த கோவிலில் முக்கிய திருவிழாவாக ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை தொடங்கி 5 வாரங்கள் சனிக்கிழமைகளில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறும்.


    இந்த திருவிழாவின் போது சனீஸ்வரர் திருக்கல்யாணம், துணை சன்னதியான கருப்பணசாமி கோவிலில் பொங்கல் வைத்தல், மதுபான படையல், ஆடு, கோழிகளை பலியிட்டு விருந்து வைத்தல் ஆகிய வழிபாடுகள் நடைபெறும். அதன்படி ஆடி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று குச்சனூர் சனீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றி சென்றனர். பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

    நடப்பாண்டில் குச்சனூர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ரூ.1 கோடியில் துணை சன்னதிகளான விநாயகர், முருகன், கருப்பணசாமி, பலிபீடம், கொடி மரம் உள்ளிட்ட 14 இடங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை, பகல், இரவு ஆகிய 3 கால பூஜைகள் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 40 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • போஜ்சாலா வளாகத்தில் போஜிஸாலா கோவிலும் அதன் அருகில் கமல் மவுலா மசூதியும் அருகருகில் உள்ளது.
    • கடந்த 3 மாதங்களாக நடந்து வந்த ஆராய்ச்சியின் முடிவுகளை ASI உயர்நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தது.

    மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தில் உள்ள வாக்தேவி சரஸ்வதி கோவில் மற்றும் கமல் மவுலா மசூதியும் ஒரே இடத்தில உள்ளது. மசூதி இருக்கும் இடத்தில் கோவில் கட்டடமே இருந்ததாக சிலர் சர்ச்சையை கிளப்பிய நிலையில் போஜ்சாலா வளாகத்தை ஆய்வு செய்ய கடந்த மார்ச் மாதம் அம்மாநில உயர்நநீதிமன்றம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்துக்கு [ASI] உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த 3 மாதங்களாக நடந்து வந்த ஆராய்ச்சியின் முடிவுகளை ASI உயர்நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், 'போஜ்சாலாவின் உள்ள கமல் மவுலா மசூதிக் கட்டடமானது ஏற்கனவே அங்கிருந்த கோவில் கட்டடத்தின் எச்சங்களிலின் மீது கட்டப்பட்டுள்ளது.

    மசூதியின் தரைப்பகுதி ஏற்கனவே இருந்த கல்வெட்டுகளின் மீது அமைக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்த கோவிலின் தூண்கள் மசூதி கட்டடத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.  அந்த தூண்களில் இந்து கடவுளர்களின் சிதைந்த சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

    அதுபோன்ற மொத்தம் 94 சிற்பங்கள் அங்கு தென்படுகிறது என்று தனது அறிக்கையில் ASI தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை வரும் ஜூலை 22 ஆம் தேதி உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்த நான் அவர் மீதான அதிக அன்பின் காரணமாக அவருக்கு கோவில் கட்டியுள்ளேன்.
    • பிரதமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.

    திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். விவசாயியான அவர், துபாயில் வேலை பார்த்து வந்த அவர் சொந்த ஊர் திரும்பியதும் விவசாயத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடியின் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட அவர் அந்த திட்டங்களால் பயன் அடைந்தார்.

    இதனால் பிரதமர் மோடி மீதான அதிக ஈடுபாட்டின் காரணமாக அவருக்கு கோவில் கட்ட திட்டமிட்டார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டில் அவர் மோடிக்கு சிலை அமைத்து கோவில் எழுப்பினார். ரூ.1.25 லட்சம் செலவு செய்து 6 மாதமாக கோவில் திருப்பணியில் ஈடுபட்டார்.

    இவர் கட்டியுள்ள கோவிலில் பிரதமர் மோடிக்கு அழகிய மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவிலில் சாமி படங்களுடன், காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மோடி, அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்களையும் வைத்துள்ளார்.

    இந்த நிலையில் அவருக்கு விவசாயத்தில் விளைச்சல் அதிகரித்தால் சிறப்பு வழிபாடு செய்வது என்றும்,பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆகவேண்டும் எனவும் வேண்டுதல் வைத்தார்.

    அவரது வேண்டுதல் நிறைவேறியதை தொடர்ந்து மோடிக்கு தான் கட்டிய கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்த நான் அவர் மீதான அதிக அன்பின் காரணமாக அவருக்கு கோவில் கட்டியுள்ளேன். இப்போது தேங்காய், மாங்காய், மரவள்ளி போன் விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைப்பதால், மோடியை கடவுளாக நினைத்து தினமும் பூஜை செய்து, வழிபாடு நடத்தி வருகிறேன்.

    ஒவ்வொரு விவசாய சாகுபடியிலும் கிடைத்த லாபத்தில் 10 ஆயிரம் ரூபாய் வீதம் எடுத்து வைத்து, 5 ஆண்டுகளாக கணிசமான தொகை வைத்துள்ளேன். அவர் 3-வது முறை பிரதமாக வேண்டும், என்று பழநி முருகனிடம் வேண்டுதல் வைத்தேன்.

    அந்த வேண்டுதல் நிறைவேறி உள்ளதால், பழனியில் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்த உள்ளேன். இது தவிர, என் வயலில் விளைந்த 10 மூட்டை நெல்லில், கிடாவெட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்து உள்ளேன்.

    பிரதமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. எனக்கு பிறகும், நிலத்தில் ஒரு பகுதியை இந்த கோவிலுக்காக நிலத்தை எழுதி பத்திரம் போட்டு வைத்துள்ளேன். பிரதமர் நீடுழீ வாழ வேண்டும். 2030-ம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்து விவசாயிகளுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது தான் என் ஆசை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொதுமக்கள் வழித்துணை விநாயகரை வழிபட்டு வந்தனர்.
    • வழித்துணை விநாயகர் சிலை இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    தேவிகாபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு டவுன் அவலூர் பேட்டை சாலையில் உள்ள குளம் அருகே திறந்த வெளியில் வழித்துணை விநாயகர் கோவில் உள்ளது.

    அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வழித்துணை விநாயகரை வழிபட்டு வந்தனர். இந்த விநாயகர் சிலையை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றனர். விநாயகர் சிலையை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விநாயகர் சிலையை ஏற்கனவே இருந்த இடத்தில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் வைத்துச் சென்றனர்.

    மேலும் விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை அவ்வழியாக சென்ற பக்தர்கள் வழித்துணை விநாயகர் சிலை இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதனையடுத்து விநாயகரை பக்தர்கள் வழிபட்டு சென்றனர். மேலும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

    ×