என் மலர்
நீங்கள் தேடியது "Tirupati"
- திருமலையில் அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது.
- புஷ்கரணியில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி.
திருப்பதி:
திருமலையில் அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி ஸ்ரீவாரி புஷ்கரணியில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
திருமலையில் ஆண்டுதோறும் 'சுக்ல சதுர்தசி' அன்று அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 108 திவ்ய தேச கோவில்களில் ஆண்டு தோறும் அனந்த பத்மநாபசாமி விரதம் நடக்கும். 108 திவ்ய தேச கோவில்களில் முதன்மையானவர் 'திருமால்' என்பதால், அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி நேற்று திருமலையில் அனந்த பத்மநாபசாமி விரதம் அனுசரிக்கப்பட்டது. காலை 6 மணிக்கு சுதர்சன சக்கரத்தாழ்வாரை கோவிலில் இருந்து பூவராகசாமி கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியின் கரைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்த பின், ஸ்ரீவாரி புஷ்கரணியில் சாஸ்திர ரீதியாக 'சக்கர ஸ்நானம்' எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
இந்தச் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் கடைசிநாள், வைகுண்ட துவாதசி, ரத சப்தமி, அனந்த பத்மநாபசாமி விரதம் ஆகிய முக்கிய நாட்களில் மட்டுமே நடப்பது சிறப்பம்சமாகும்.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்ததும் ஸ்ரீவாரி புஷ்கரணியில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்குள் சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
பெண்களின் நலனுக்காக வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதுபோல், ஆண்களின் நலன் மற்றும் செல்வ செழிப்புக்காக அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சமுத்திரத்தில் சேஷ சயனத்தில் வீற்றிருக்கும் திவ்ய மங்கல வடிவமே அனந்த பத்மநாபன். இந்த விரதத்தில் பூமியின் பாரத்தை சுமக்கும் அனந்தனும், ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்டு வழிபடப்படும் மகா விஷ்ணுவை பக்தர்கள் வழிபடுகின்றனர்.
ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் அருள்பாலிக்கும் அனந்த பத்மநாபசாமி வீற்றிருக்கும் மகா விஷ்ணுவை வேண்டி, இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் செல்வ செழிப்போடு வாழ்வர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
- பத்மாவதி தாயார் கோவிலில் 3 நாள் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது.
- ஆஞ்சநேயருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
திருப்பதி:
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 3 நாள் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று அதிகாலை சுப்ர பாதத்தில் மூலவர் பத்மாவதி தாயாரை துயிலெழுப்பி சஹஸ்ர நாமார்ச்சனை, காலை 8.30 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவா் பத்மாவதி தாயாரை யாக சாலைக்கு கொண்டு வந்து சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. உற்சவர் முன்னிலையில் கும்ப ஆவாஹனம், சக்ராதி மண்டல பூஜை, சதுஸ்தான அர்ச்சனை, அக்னி பிரதிஷ்டை, பவித்ர பிரதிஷ்டை நடந்தன.
அதைத்தொடர்ந்து மாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நடந்த பவித்ரோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று முன்தினம் காலை சுப்ரபாதம், தோமால சேவை, சகஸ்ர நாமார்ச்சனை நடந்தது. காலை 6.30 மணியில் இருந்து 8.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமியை கோவிலில் இருந்து யாக சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைதீக காரியக்கர்மங்கள் நடந்தது. காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை திருமஞ்சனம் நடந்தது. பின்னர் மூலவர், உற்சவர்கள், துணை சன்னதிகள், பரிவார தேவதைகளுக்கு விமானப் பிரகாரம், கொடி மரம், பலிபீடம், ஆஞ்சநேயருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
பவித்ரோற்சவத்தின் 3-வது நாளான நேற்று காலை சுப்ரபாதம், தோமால சேவை, சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. அதன் பிறகு யாகசாலைக்கு உற்சவமூர்த்திகளை கொண்டு வந்து வைதீக காரியக்கர்மங்கள் செய்யப்பட்டன. காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை திருமஞ்சனம், மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணி வரை உற்சவமூர்த்திகள் கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரவு 7.30 மணியில் இருந்து 9.30 மணி வரை கோவிலின் யாக சாலையில் காரியக்கர்மங்கள், பூர்ணாஹுதி நடந்தது. இதோடு பவித்ரோற்சவம் நிறைவடைந்தது.
- திவ்ய பிரபந்தங்களை பாராயணம் செய்தனர்.
- பெரியஜீயர், சின்னஜீயர் சுவாமிகள் பல்வேறு பாசுரங்களை பாடினர்.
திருப்பதி:
பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று மதியம் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீேதவி, பூதேவி, மலையப்பசாமிக்கு விஸ்வக்சேனாராதனம், புண்யாஹவாசனம், தூப தீப நெய்வேத்தியம், ராஜோபசாரம் நடந்தது.
முதலில் மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தேன், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
திருமஞ்சனத்தின் போது வேத பண்டிதர்கள் வேதபாராயணங்கள், உபநிடதங்கள், தச சாந்தி மந்திரங்கள், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நிலசூக்தம், விஷ்ணுசூக்தம் எனப் பஞ்சசூக்த மந்திரங்களை ஓதினர். மேலும் திவ்யப் பிரபந்தங்களை பாராயணம் செய்தனர். பெரியஜீயர், சின்னஜீயர் சுவாமிகள் பல்வேறு பாசுரங்களை பாடினர்.
உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பல வண்ணக் கற்களால் தயார் செய்யப்பட்ட கண்ணாடி மாலைகள், ஆப்பிரிக்கட்டு மாலைகள், வெட்டி வேர் மாலைகள், குருவெறு மாலைகள், வண்ணமயமான ரோஜா மாலைகள், மஞ்சள் ரோஜா மாலைகள், பலவகையான உலர் பழங்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள், வெண்முத்து மாலைகள், கிரீடங்கள், துளசி மாலைகள் ஆகியவற்றை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
தேவஸ்தான தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் அனைத்து அலங்காரமும் செய்யப்பட்டது. அலங்காரத்துக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து மாலைகளை தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த ராஜேந்தர் காணிக்கையாக வழங்கினார். மேலும் திருமஞ்சனம் நடத்தப்பட்ட ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பிரத்தியேக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த மண்டபல அலங்காரத்துக்காக சம்பிரதாய பாரம்பரிய மலர்கள், அலங்கார கொய் மலர்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த அலங்கார கணிக்கையை ஐதராபாத்தை சேர்ந்த பக்தர்களான ஸ்ரீஹரி, ஸ்ரீதர், சீனிவாஸ் ஆகியோர் ஏற்றனர்.
- திருப்பதி என்றாலே ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்தான் நினைவுக்கு வரும்.
- இறைவனை துயிலெழுப்பும் நிகழ்ச்சியே திருப்பள்ளி எழுச்சி தத்துவம் ஆகும்.
திருப்பதி என்றாலே ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்தான் நினைவுக்கு வரும். பிறவிக் குருடனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும், திருவேங்கட மலைக்குப் போய் சேவித்து நின்று பார்வையையும், செல்வத்தையும் சேர்த்து பெறலாம் என்கிறது ரிக் வேதம்.
வேதங்கள் போற்றும் மகிமைகள் கொண்ட திருவேங்கடத்தின் சிறப்பையும் திருமாலின் புகழையும் ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதம் பாடுவதாகவே அமைகிறது. இறைவனின் பாத மலர்களின் புகழைப்பாடிக் கொண்டிருந்தாலே போதும்! உய்வடையலாம் என்ற மையக் கருத்துடன் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாத பாடல்கள் முழுவதும் அமைந்துள்ளன. அதிகாலைப் பொழுதில் பள்ளி எழுந்தருள்வாயே என்று இறைவனை துயிலெழுப்பும் நிகழ்ச்சியே திருப்பள்ளி எழுச்சி தத்துவம் ஆகும்.
எங்கள் உள்ளங்களில் ஆன்மீக விழிப்புணர்வை தந்தருள்க என்று இறைவனை வேண்டுவதாகவே சுப்ரபாதம் அமைகிறது. இப்படி இறைவனுக்கு திருப்பள்ளி எழுச்சிபாடுவது நாம் அஞ்ஞானத்திலிருந்து விழித்துக் கொள்வதற்கு உதவும் பள்ளி கொண்ட பரந்தாமனை முதன் முதலில் எழுப்பியது மகரிஷி விசுவாமித்திரர்தான்.
எல்லோராலும் தற்போது உச்சரிக்கப்படும். `கவுசல்யா ஸூப்ரஜா, ராமா...!' என்று தொடங்கும் சுலோகம் மகரிஷி வால்மீகியின் வாக்கை வைத்தே புகழ் பெற்ற சுப்ரபாதம் பிறந்தது எனலாம்.
சுமார் 675 ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்தவர் அண்ணாமாச்சார்யா சுவாமிகள், வைணவ ஆச்சாரியார்களில் மேன்மை பெற்ற வேதாந்த தேசிக சுவாமிகளின் மைந்தர் வரதாச்சாரியார் சுவாமி சீடரே அண்ணன் சுவாமிகள். தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழி அருகில் உள்ள திருநாங்கூரில் பிறந்து பகவானுக்கு தொண்டு செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திய அண்ணன் சுவாமிகள் மகிமை மிக்க இந்த ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதத்தை நான்கு பகுதிகளாக முதன் முதலில் பாடினார்.
சுப்ரபாதத்தின் முதல் பகுதியான திருப்பதி ஏழுமலையானை துயிலெழுப்புவதாக உள்ள இந்த துயிலெழுப்பும் பாடல்கள் நம் மனதிலும் ஆன்மீக விழிப்புணர்வை எழுப்பும். `கமலாகுச' எனத் தொடங்கும் முதல் பகுதி வெங்கடேசனைப் புகழ்ந்து பாடும்.
இரண்டாவது பகுதி ஸ்தோத்திரம் எனப்படுகிறது. மூன்றாவது பகுதியாக சரணாகதி பாடப்படுகிறது. இப்பகுதி பாடல்களைப் பாடுவதன் மூலம் பகவானிடம் சரணடைந்து பேறு பெறலாம். அதிகாலையில் நம் இல்லங்களில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஒலித்தால் வீட்டில் மங்களம் நிறையும். புரட்டாசி மாதம் முழுவதும் வீடுகளில் அதிகாலையில் சுப்ரபாதம் ஒலித்தால் திருமகள் கடாட்சமும் பெருகும். திருவெங்கட முடையோனின் சன்னதியில் தினந்தோறும் காலை வேலைகளில் நடைபெறுகின்ற வைபவங்களை அழகுறக் கண்முன் நிறுத்துகின்ற ஆனந்த வலிமையும் சுப்ரபாதத்திற்கு உண்டு.
கலியுக தெய்வமாகிய ஸ்ரீ வெங்கடநாதனை துதிப்போர் திருமகள் அருள்பெற்று வளமான வாழ்வுதனைப் பெறலாம் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. ஓம் நமமோ நாராயணாயா...!
- பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
- ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் தங்கத் தேரில் 4 மாட வீதிகளில் உலா.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. 6-வது நாளான நேற்று மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இரவு 7 மணிக்கு ஏழுமலையான் கஜ வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்தார். அப்போது ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, பாண்டிச்சேரி, ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்த 250 கலைஞர்கள் 4 மாட வீதிகளில் கலை நிகழ்ச்சிகளை செய்து காட்டி பக்தர்களை பரவசப்படுத்தினர்.
பாண்டிச்சேரி லலிதாம்பிகை கலைக்குழுவை சேர்ந்த 25 கலைஞர்கள் பிரம்மா லட்சுமி நாராயணா பகிரதன் போன்று வேடமணிந்து கலை நிகழ்ச்சி செய்தனர்.
இதேபோல் கேரளா கலைஞர்கள் பாரம்பரிய உடை அணிந்து கரகாட்டம் ஆடினர். பிரம்மோற்சவ விழா 7-வது நாளான இன்று காலை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.
மதியம் 1 மணி முதல் 3 வரை வரை ஏழுமலையானுக்கு ஸ்நான திருமஞ்சனம் நடந்தது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஏழுமலையான் சந்திரபிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்தார்.
நேற்று ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் நிரம்பி வழிந்தது.
கிருஷ்ண தேஜா தங்கும் விடுதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். திருப்பதியில் நேற்று 74,884 பேர் தரிசனம் செய்தனர். 32,213 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.70 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- கல்ப விருட்ச வாகன வீதிஉலா.
- பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதி உலா நடந்தது. இன்று கருடசேவை நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை 'கல்ப விருட்ச' வாகன வீதிஉலா நடந்தது.
கல்ப விருட்சம் என்பது மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் தெய்வீக மரம். விஸ்வாகராமரால் சொர்க்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். கல்ப விருட்ச வாகனத்தில் 'ராஜமன்னார்' அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமி, தன்னை வணங்கும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவேன் என்பதை உணர்த்தவே கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.
வீதிஉலாவின் போது நான்கு மாட வீதிகளில் கூடியிருந்த திரளான பக்தர்கள் கோவிந்த நாமங்களை முழங்கி சாமி தரிசனம் செய்தது விண்ணில் எதிரொலித்தது.
வாகன வீதி உலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், யானைகள், காளைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. ஆண், பெண் பக்தர்கள் மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பத்மாவதி தாயார், நரசிம்மர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட வேடமிட்டு ஆடி, பாடி சென்றனர். பல்வேறு கலைஞர்கள் நடனம், கோலாட்டம், நாட்டுப்புற நடனம் ஆடினர். மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
வாகன வீதிஉலாவில் திருமலை மடாதிபதிகள், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை 'சர்வ பூபால' வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை பல்லக்கு வாகன வீதிஉலா நடக்கிறது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'மோகினி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 7 மணியளவில் 'சிகர' நிகழ்ச்சியாக கருட சேவை (தங்கக் கருட வாகன வீதிஉலா) தொடங்கி நடக்கிறது.
- இன்று மூலவர், உற்சவருக்கு அணிவிக்கப்படுகிறது.
- வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
திருப்பதி:
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் நேற்று திருமலைக்கு வந்தன. அந்த மாலைகளுக்கு பெரிய ஜீயர் மடத்தில் பூஜைகள் செய்யப்பட்டது. இன்று மூலவர், உற்சவருக்கு அணிவிக்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 'சிகர' நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கருடசேவை நடக்கிறது.
தங்க கருட வாகனத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமிக்கும், மூலவர் வெங்கடாசலபதிக்கும் அணிவிப்பதற்காக தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கோதாதேவி 'சூடிக்கொடுத்த மாலைகள்' மற்றும் கிளிகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் நேற்று திருமலைக்கு வந்தன.
முதலில் திருமலை பேடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகில் உள்ள பெரியஜீயர் மடத்துக்கு ஆண்டாள் சூடிய மாலைகள் கொண்டு வரப்பட்டன. அங்கு பெரிய ஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதன் பிறகு பெரிய ஜீயர் மடத்தில் இருந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, தமிழகத்தைச் சேர்ந்த அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் கோதாதேவியின் மாலைகளை ஏழுமலையான் கோவில் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று மூலவர் சன்னதிக்குள் கொண்டு சென்றனர்.
அப்போது திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருமலைக்கு கோதாதேவி மாலைகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி கோதாதேவி மாலைகள் திருமலைக்கு வந்தன. கருடசேவையின்போது புனித மாலைகள் மூலவருக்கும், உற்சவருக்கும் அணிவித்து அலங்கரிக்கப்படும், என்றார். மாலைகள் ஊர்வலத்தில் டெல்லி தகவல் மைய உள்ளூர் ஆலோசனைக் குழு தலைவர் வேமிரெட்டிபிரசாந்தி, திருமலை கோவில் துணை அதிகாரி லோகநாதம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அதிகாரிகள் ரங்கராஜன், சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உற்சவர் மலையப்பசாமி ‘யோக நரசிம்மர்’ அலங்காரத்தில் பவனி.
- விஜயவாடாவைச் சேர்ந்த கலைஞர்கள் பஜனை.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதிஉலா முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், காளைகள், குதிரைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.
தமிழகம், கர்நாடகத்தில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சியை நடத்தினர். விஜயவாடாவைச் சேர்ந்த கலைஞர்கள் பஜனை பாடல்களை பாடினர். கோலாட்டமும் ஆடினர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'காளிங்க நர்த்தன' அலங்காரத்தில் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.
- மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
- கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
திருப்பதி:
பிரம்மோற்சவ விழா வாகன சேவை முடிந்ததும் நேற்று மதியம் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. காலை வாகனச் சேவை முடிந்ததும் ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
அதன் பிறகு ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பவித்ர மாலைகள், பச்சை மாலைகள், மஞ்சள் பட்டு நூல் மாலைகள், தாமரை விதைகள், துளசி விதை மாலைகள், தங்க திராட்சை மாலைகள், பாதாம் மாலைகள், நந்திவர்தனம், ரோஜா இதழ்கள், பல வண்ண ரோஜா இதழ்களாலான மாலைகள், கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
திருமஞ்சனத்தின்போது வேதபாராயணங்கள், உபநிடத மந்திரங்கள், தச சாந்தி மந்திரங்கள், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நிலசூக்தம், விஷ்ணுசூக்தம் போன்ற பஞ்சசூக்த மந்திரங்கள், திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்யப்பட்டது. முன்னதாக விஸ்வசேனாராதனம், புண்யாஹவச்சனம், தூப தீப நைவேத்தியம் சமர்ப்பித்து, ராஜோபச்சாரம் நடந்தது.
திருமஞ்சனத்தில் திருமலை பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள் பங்கேற்றனர். தேவஸ்தான தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் உற்சவர்களுக்கு பிரத்யேக அலங்காரம் செய்யப்பட்டது. சாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த பக்தர் ராஜேந்தர் காணிக்கையாக வழங்கினார்.
- விநாயகப் பெருமான் அனைத்து மக்களுக்கும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரட்டும்.
- கோவிந்த கோடி புத்தகங்களை பக்தர்களுக்கு இலவசமாக வினியோகித்தார்.
திருப்பதி:
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் கூட்டம் நடந்தபோது, அதில் பங்கேற்ற அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. சனாதன கருத்துக்கு ஆதரவாக 'கோவிந்த கோடி' எழுதும் திட்டத்தை அறிவித்தார். அதன்படி கோவிந்த நாமத்தை ஒரு கோடி முறை எழுதி வரும் பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் அளிக்கப்படும், எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில் திருப்பதியில் விநாயக சாகரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'கோவிந்த கோடி' விநாயகரை அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், கோவிந்த கோடியை விநாயகப்பெருமான் எழுதுவதுபோல் தயார் செய்யப்பட்டுள்ள இந்த சிலை நன்றாக இருக்கிறது. சிலை நிறுவப்பட்டுள்ள மண்டபத்தின் நான்கு பக்கமும் கோவிந்த கோடி நாமம் எழுதி வைத்திருப்பது சிறப்பு.
விநாயகப் பெருமான் அனைத்து மக்களுக்கும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரட்டும். வெங்கடாசலபதி, விநாயகர் ஆசியோடு திருப்பதி நகரம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும், என்றார்.அதைத்தொடர்ந்து அறங்காவலா் குழு தலைவர், தெலுங்கில் எழுதப்பட்ட ஏராளமான கோவிந்த கோடி புத்தகங்களை பக்தர்களுக்கு இலவசமாக வினியோகித்தார். அறங்காவலர் குழு தலைவர், சாமி தரிசனம் செய்தபோது மேயர் ஷிரிஷா, கமிஷனர் ஹரிதா ஆகியோர் உடனிருந்தனர்.