என் மலர்
நீங்கள் தேடியது "பக்தர்கள்"
- திருப்பதியில் 66,530 பேர் தரிசனம் செய்தனர்.
- தரிசனத்திற்கு வந்த குழந்தைகள் முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை என்பதால் நேற்று மாலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.
இதனால் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டகை முழுவதும் நிரம்பியது.
பக்தர்கள் ஷீலா தோரணம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 66,530 பேர் தரிசனம் செய்தனர். 32,478 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குளிர்ந்த காற்று வீசுகிறது
இதனால் தரிசனத்திற்கு வந்த குழந்தைகள் முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
- திருப்பதி மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.
- பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பும் அனைத்து அறைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாள் என்பதால் நேற்று முன்தினம் காலை முதலே ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.
இதனால் பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பும் அனைத்து அறைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருப்பதி மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.
நேற்று முன்தினம் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ஆக்டோபஸ் வரை வரிசையில் காத்திருந்தனர். இதனால் தரிசனத்திற்கு 16 மணி நேரம் ஆனது.
நேற்றும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் அதிகரித்ததால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பாபவிநாசம் சாலையில் உள்ள சீலா தோரணம் வகை சுமார் 5 கிலோ மீட்டர் வரை வரிசையில் காத்திருந்தனர்.
இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம், மற்றும் ஸ்ரீனிவாசன் மையங்களில் பக்தர்கள் தரிசன டிக்கெட் பெற அலைமோதினர்.
இன்று காலையில் ஓரளவு கூட்டம் குறைந்தது. பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காததால், மறுநாள் அறைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அறை வழங்கும் மையங்கள் அருகில் உணவு சாப்பிட்டு அங்கேயே தூங்கினர்.
அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 80,193 பேர் தரிசனம் செய்தனர். 33, 298 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.43 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரத்துக்குமேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.
- கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.
இன்று பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.
பக்தர்கள் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. இதனால் கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
திருப்பதியில் நேற்று 90,087 பேர் தரிசனம் செய்தனர். 41891 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.30 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 25 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- 16 கோவில்களில் இருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தனர்.
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை ஆகியவை சார்பில் 91-ம் ஆண்டு கருட சேவை பெருவிழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து, 26 பெருமாள்கள் கருடசேவை விழா நேற்று (திங்கட்கிழமை) நடந்தது.
இதனைத் தொடர்ந்து, 16 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி பெருவிழா என்கிற நவநீத சேவை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இதில் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள், நரசிம்மப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், மேல ராஜவீதி நவநீத கிருஷ்ணன், விஜயராமர் சன்னதி, எல்லையம்மன் தெரு ஜனார்த்தனப் பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கீழ ராஜவீதி வரதராஜப் பெருமாள், தெற்கு ராஜவீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராம சுவாமி பெருமாள், மகர்நோம்புச்சாவடி நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதப் பெருமாள், படித்துறை வெங்கடேசப் பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆகிய 16 கோவில்களில் இருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தனர்.
பின்னர் அங்கிருந்து 16 பெருமாள்களும் புறப்பட்டு கீழராஜவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஒரே நேரத்தில் 16 சுவாமிகள் அவர்களுக்கு சேவை சாதித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். விழாவில் நாளை (புதன்கிழமை) விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.
- திருப்பதி கோவிலில் இருந்து என்.ஜி.செட் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்திருந்தனர்.
வைகுண்டம் பக்தர்கள் காத்திருப்பு அறைகள், நாராயணகிரி தோட்டம், 4 மாட வீதிகள் என அனைத்து இடங்களிலும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.
இதனால் திருப்பதி கோவிலில் இருந்து என்.ஜி.செட் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.
திருப்பதியில் நேற்று 90, 802 பேர் தரிசனம் செய்தனர். 35,776 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பல நூறு ஆண்டு பழமையான வடிவேல் சுப்பிரமணிய சாமி கோவில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.
வேலூர்:
வேலூர், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடாபுரம் அடுத்த புது வசூர் தீர்த்தகிரி மலையில் பல நூறு ஆண்டு பழமையான வடிவேல் சுப்பிரமணிய சாமி கோவில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு முன்பாக 92 அடி உயரத்தில் மிகப்பிரமாண்டமான முருகன் சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் ஸ்தபதி இந்த சிலையையும் வடிவமைத்துள்ளார். தென் வடக்கு திசையை பார்த்தவாறு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த முருகன் சிலை மலை உச்சியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
தற்போது திருப்பணிகள் முடிந்து கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது.
கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவிலில் இன்று இரவு வான வேடிக்கை மகா அபிஷேகம் அலங்கார தரிசனம் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
இன்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் குழுவினரின மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு சாமி வீதி உலா நடைபெறுகிறது.
பிரமாண்ட முருகன் சிலையின் முன்பு குடும்பத்துடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- திருப்பதியில் நேற்று 88,257 பேர் தரிசனம் செய்தனர்.
- 45,068 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முதலே பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் வைகுந்தம் பக்தர்கள் காத்திருப்பு அறைகள், நாராயணகிரி தோட்டம் என அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பக்தர்கள் ஏழுமலையான் கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம் உள்ள சீலா தோரணம் வரை தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு விஷ்ணு நிவாசம், ஸ்ரீனிவாசம், அலிபிரி பூதேவி வளாகங்களில் உள்ள கவுண்ட்டர்களில் இலவச நேர ஒதுக்கீட்டு தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. பூதேவி வளாகத்தில் உள்ள கவுண்ட்டர்களில் தரிசன டிக்கெட் வாங்க பக்தர்கள் காத்திருந்தனர்.
மதியம் 12.30 மணி அளவில் தேவஸ்தான ஊழியர்கள் வளாக நுழைவு வாயில்களை திறந்தனர். அப்போது தரிசன டிக்கெட் வாங்க காத்திருந்த பக்தர்கள் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு வரிசைக்கு ஓடினர்.
இதனால் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு சில பக்தர்களிடம் கைகலப்பு நடந்தது. இதனால் கைக்குழந்தைகளுடன் காத்திருந்த பக்தர்கள், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார்.
தரிசன டிக்கெட் வாங்க எவ்வளவு நேரம் காத்திருக்கிறோம். மாலையில் சாமி தரிசனம் செய்ய இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமோ என பக்தர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.
எனவே தேவஸ்தான அதிகாரிகள் வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்களை வரிசைப்படுத்தி தரிசன டிக்கெட் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 88,257 பேர் தரிசனம் செய்தனர். 45,068 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
- காலை, மாலை, இரவு நேரம் என பண்ணாரி அம்மன் கோவில் அருகே அந்த ஒற்றை யானை சுற்றி வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், கரூர் என அண்டை மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
பண்ணாரி அம்மன் கோவில் அருகே சோதனை சாவடி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒற்றை யானை ஒன்று அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி பண்ணாரி அம்மன் கோவில் அருகே சுற்றி வருகிறது.
வனத்துறையினர் பட்டாசை வைத்து விரட்டினாலும் சிறிது நேரம் மீண்டும் சாலையோரம் வந்து விடுகிறது. காலை, மாலை, இரவு நேரம் என பண்ணாரி அம்மன் கோவில் அருகே அந்த ஒற்றை யானை சுற்றி வருகிறது. இதனால் பண்ணாரி அம்மன் கோவில் செல்லும் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதைப்போல் வனப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, வனப்பகுதியில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் உணவு தண்ணீர் தேடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வாகனங்களை வழிமறிப்பது, கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதை ஆகி வருகிறது.
தற்போது பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது. எனவே கோவில் செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக வனப்பகுதிக்குள் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அந்த ஒற்றை யானையின் நடமாட்டத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்றனர்.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்துள்ளனர்.
- வனத்துறையினர், மலையேற வரும் பக்தர்களை தீவிர சோதனைக்கு பின்னரே மலையேற அனுமதித்து வருகிறார்கள்.
வடவள்ளி:
கோவை பூண்டியில் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.
இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து 6 மலைகளை கடந்து 7-வது மலையில் சுவாமி சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த சுயம்பு லிங்க சுவாமியை மலையேறி தரிசிக்க ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு, கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அன்று முதல் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்து வெள்ளியங்கிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்துள்ளனர். அவர்கள் அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து விட்டு, தங்கள் மலைப்பயணத்தை தொடங்குகின்றனர்.
கைகளில் குச்சிகளை வைத்து கொண்டு அதன் உதவியுடன் மலையேறி சென்று சுயம்பு வடிவிலான வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று அதிகளவிலான கூட்டம் இருந்தது. கிரிமலையில் அதிகாலை நேரத்தில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சூரிய தரிசனம் முடிந்து பலகாரம் மேடையில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு அடிவாரத்தை நோக்கி கீழே இறங்கி வந்தனர்.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆர்வத்துடன் மலையேறுகின்றனர். இதய பலவீனமானவர்கள், நோயால் பாதிக்கப்பட்டோர் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலையேறும் பக்தர்களிடம் பிளாஸ்டிக் பைகள், மது, புகையிலை, பீடி, சிகரெட், தீப்பெட்டி, எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர், மலையேற வரும் பக்தர்களை தீவிர சோதனைக்கு பின்னரே மலையேற அனுமதித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மலையடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை கோவில் வளாகத்தில் நுழைந்தது. அங்கிருந்த பிரசாத கடையை அடித்து நொறுக்கி அங்கிருந்த அரிசியை ருசிபார்த்தது.
யானையை பார்த்த பக்தர்கள் சத்தம் போடவே, யானை வனத்திற்குள் சென்று விட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர்.
- கோவிலுக்கு தாமதமாக வந்த பக்தர் ஒருவர் சாமி கும்பிடுவதற்காக கோவில் கதவின் துவாரம் வழியாக அம்மனை பார்த்து வழிபட்டார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள தெற்கு தெரு மாரியம்மன் கோவிலில் நேற்று இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர்.
பின்னர் கோவிலுக்கு தாமதமாக வந்த பக்தர் ஒருவர் சாமி கும்பிடுவதற்காக கோவில் கதவின் துவாரம் வழியாக அம்மனை பார்த்து வழிபட்டார்.
அப்போது அம்மன் சிலையில் கண் திறந்து இருப்பதாக பக்தி பரவசத்துடன் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். அம்மன் சிலையை செல்போனிலும் புகைப்படம் எடுத்தார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் கோவில் நடை அடைக்கப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.
அப்போதும் அம்மனின் கண் திறந்து இருந்ததாகவும், கோவில் பூசாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ததும் கண் மூடியதாகவும் கோவிலின் அருகே வசித்து வரும் பக்தர் குட்டி என்பவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
- எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்வது வழிபாட்டு முறையாக இருந்தாலும், அது சுகாதாரத்திற்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல.
- பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மதுரை:
திருவண்ணாமலையைச் சேர்ந்த அரங்கநாதன், தமிழக அரசின் தமிழ் வழியில் அர்ச்சராக பயின்று தற்போது திருவண்ணாமலை கோவிலில் அர்ச்சராக பணி புரிந்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி கடந்த ஆண்டு உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் 18-ந்தேதி நடைபெற்ற நிகழ்வில், எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணமும் செய்யப்பட்டது.
2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை மறைத்து ஐகோர்ட்டில் எச்சிலையில் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதி பெறப்பட்டது.
இந்த உத்தரவு பலராலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி யிருந்தார்.
இதே போல தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக கரூர் மாவட்ட கலெக்டரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்குகளை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பை இதே நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டில் இருந்து இன்று பிறப்பித்தனர்.
அந்த தீர்ப்பில், எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்வது வழிபாட்டு முறையாக இருந்தாலும், அது சுகாதாரத்திற்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அது போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என தீர்ப்பில் கூறியுள்ளனர்.
- மின்தடை உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் முழுமையாக பின்பற்றபடும்.
- தஞ்சைக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை பெருவிழா தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் தேரோடும் தஞ்சை மேலவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு வீதி ஆகிய 4 வீதிகளில் இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்தார்.
தேரோடும் வீதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.
இன்று தேரோடும் வீதிகளில் அலுவலர்கள், போலீசாருடன் நேரடியாக கள ஆய்வு நடத்தினோம்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக தேரோட்டத்தை காண பக்தர்கள், பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
தேரோட்டத்தை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க அந்தந்த துறை அலுவலர்க ளுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி தேரோட்டத்தை காண பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
தேரோடும் வீதி சாலைகளில் உள்ள சிறு சிறு பள்ளங்கள் மூடப்பட்டு சரி செய்யப்பட்டு வருகின்றன. பார்க்கிங் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சிறப்பாக செய்யப்படும்.
மேலும் அரசு கூறியப்படி தேரோடும் நேரத்தில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தபட்ட துறை அலுவலர்களுக்கு ஏற்கனவே எடுத்து கூறி உள்ளோம்.
அதாவது தேரோடும் பகுதியில் அன்றைய தினம் செய்ய வேண்டிய மின்தடை உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் முழுமையாக பின்பற்றபடும்.
இது தவிர தேரோட்டம் இன்று தஞ்சைக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது ஆணையர் சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, தாசில்தார் சக்திவேல், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி,
இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.






