என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் திருவிழா"

    • பக்தர்கள் மலை இடுக்குகளில் உள்ள தேள்களை தேடிப்பிடித்து நூல்களில் மாலையாக கட்டினர்.
    • வெங்கடேஸ்வர சாமிக்கு தேள் மாலை அணிவித்தால் வேண்டிய வரங்களை நிறைவேற்றி தருவார் என்பது ஐதீகம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கொடுமுரு 7-வது மலையில் பிரசித்தி பெற்ற வெங்கடேஸ்வர சாமி கோவில் உள்ளது. தெலுங்கு மாதத்தின் 3-வது திங்கட்கிழமையான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.

    பக்தர்கள் மலை இடுக்குகளில் உள்ள தேள்களை தேடிப்பிடித்து நூல்களில் மாலையாக கட்டினர். பின்னர் வெங்கடேஸ்வர சாமிக்கு அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர்.

    தேள்களைப் பிடித்து மாலையாக கட்டும் பக்தர்களுக்கு தேள் கொட்டவில்லை. பொதுவாக பக்தர்கள் சாமிக்கு பட்டு வஸ்திரம் மலர் மாலை மற்றும் ஆபரணங்களை அணிவித்து பூஜைகள் செய்வது வழக்கம்.

    ஆனால் இந்த வெங்கடேஸ்வர சாமிக்கு தேள் மாலை அணிவித்தால் வேண்டிய வரங்களை நிறைவேற்றி தருவார் என்பது ஐதீகம். இதேபோல் சில பக்தர்கள் தேள்களை பிடித்து தங்களது முகம்,தலை, கைகளில் வைத்து நூதன முறையில் வழிபட்டனர். 

    • திருவிழாவில் மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளின் சந்தை பிரபலமாக உள்ளது.
    • பல்வேறு மாநிலங்களில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்படுகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா வரும் 13-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதற்காக அந்தியூர் பகுதியில் கோவில், கடைகள், கேளிக்கை அரங்குகள், குதிரை மற்றும் மாட்டு சந்தைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    திருவிழாவில் மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளின் சந்தை பிரபலமாக உள்ளது. குறிப்பாக இசைக்கு ஏற்ப நடமாடும் குதிரை உலக புகழ் பெற்றது. சந்தைக்கு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சைஜா என்பவர் 24 குதிரைகளை சந்தைக்கு கொண்டு வந்தார். குதிரையின் பாதுகாவலராக பைரஸ் என்பவர் இருந்தார். நேற்று இரவு குதிரைக்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருந்து வாளியின் மூலம் தண்ணீர் கொண்டு வைத்தார். வாளியில் யூரியா இருந்துள்ளதை கவனிக்காமல் தண்ணீர் எடுத்து வைத்ததில் 6 குதிரைகள் தண்ணீரை குடித்துள்ளது. யூரியா தண்ணீரை குடித்த 6 குதிரைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்து இறந்தன. மற்ற குதிரைகள் வேறு வாளியில் இருந்த தண்ணீரை குடித்ததால் உயிர் தப்பியது.

    திருவிழாவை முன்னிட்டு சந்தையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்ட குதிரைகளில் 6 குதிரைகள் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விவசாயி சொக்கலிங்கம் என்பவர் தேரில் இருந்த தீயை அணைக்க முயற்சி செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகே உள்ள பெரிய புளியம்பட்டி கிராமத்தில் ஊர் திருவிழா நடந்தது. நேற்று சாமி சிலைகளை தேரில் அலங்கரித்து சாமிகள் டிராக்டரில் ஊர்வலமாக வந்தனர்.

    அப்போது பெரிய புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே டிராக்டர் தீ பிடித்து எறிந்தது. இதனை தருமபுரி மாவட்டம், வனத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சொக்கலிங்கம் என்பவர் தேரில் இருந்த தீயை அணைக்க முயற்சி செய்தார்.

    அப்போது மின்சாரம் பாய்ந்து சொக்கலிங்கம் தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தார்.

    இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மின் கம்பி தாழ்வாக செல்கிறது என்று கிராம மக்கள் புகார் அளித்த நிலையில் மின்சார துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் இந்த மின் விபத்து ஏற்பட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் மு.க.ஸ்டாலின் மாடல் விடியா தி.மு.க. அரசுக்கு எனது கண்டனம்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சியில், கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும் , முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது.

    எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் மு.க.ஸ்டாலின் மாடல் விடியா தி.மு.க. அரசுக்கு எனது கண்டனம்.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பூசாரிப்பட்டியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டிக்கு சாமி ஊர்வலம் சென்றது.
    • பட்டாசு வெடித்து சிதறியதில் செல்வராஜ் உள்பட 8 பேர் சிக்கிக் கொண்டனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி திரவுபதி அம்மன் கோவில் திருவிழா 27 ஆண்டுகளுக்கு பிறகு நடந்து வருகிறது. இந்த விழாவில் 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள். இதனால் கஞ்சநாயக்கன்பட்டி, பூசாரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் விழாக்கோலம் பூண்டு இருந்தது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே ஒவ்வொரு கிராம மக்கள் மட்டும் அல்லாமல் தனிப்பட்ட குழுவாகவும் பட்டாசுகள் வாங்கி கோவில் விழாவில் ஆங்காங்கே மக்கள் வெடிப்பார்கள்.

    அந்த வகையில் கஞ்சநாயக்கன்பட்டி பக்கத்து ஊரான கோட்டமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ், லோகநாதன் உள்பட 3 பேர் தாரமங்கலம் அருகே சின்னப்பம்பட்டிக்கு சென்று பட்டாசுகளை வாங்கியதாக தெரிகிறது. அந்த பட்டாசுகளை ஒரு மூட்டையில் கட்டி மொபட்டில் கஞ்சநாயக்கன்பட்டிக்கு கொண்டு வந்தனர்.

    பூசாரிப்பட்டியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டிக்கு சாமி ஊர்வலம் சென்றது. அப்போது மேளதாளம் முழங்க சீர்வரிசை பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன. இந்த நிலையில் சாலையோரம் பற்றி எரிந்த தீயில், செல்வராஜ் சென்ற மொபட் பட்டாசுகளுடன் திடீரென நிலைதடுமாறி சாய்ந்து விழுந்தது.

    இதில் மூட்டையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பட்டாசு வெடித்து சிதறியதில் செல்வராஜ் உள்பட 8 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் செல்வராஜ் மற்றும் 12 வயது சிறுவன் உள்பட 4 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடல் சிதறி பலியான 4 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • அரசியல் நிகழ்வுகளுக்கு கோயில்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    • கோயில் வளாகங்களையும் திருவிழாக்களையும் அரசியலாக்குவது குறுகிய மனப்பான்மையை பிரதிபலிக்கிறது.

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டுக்கலில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு (TDB) நிர்வகிக்கும் ஒரு கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை விழாவில் ஆர்.எஸ்.எஸ்.இந்தன் 'கான கீதம்' (பிரார்த்தனை பாடல்) பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட 'கான மேளா' (இசை கச்சேரி) நிகழ்ச்சியின் போது, தொழில்முறை இசைக் குழுவின் உறுப்பினர்களால் ஆர்எஸ்எஸ் பாடல் இசைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் கொடிகள் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

    இந்நிலையில் கோயில் திருவிழாவின் போது 'ஆர்.எஸ்.எஸ். கானகீதம்' பாடலைப் பாடுவது தீவிரமான கவலைக்குரிய விஷயம் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன், அரசியல் நிகழ்வுகளுக்கு கோயில்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், கோவில்களில் விதிமீறல் நடந்துள்ளது கவலைக்குரிய விஷயம். இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவசம் போர்டை வலியுறுத்தினார்.

    கோயில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை, கோயில் வளாகங்களையும் திருவிழாக்களையும் அரசியலாக்குவது குறுகிய மனப்பான்மையை பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு
    • தேர் இழுத்து செல்லப்பட்டு கடைவீதியில் நிலை நிறுத்தப்பட்டது

    ராசிபுரம்:

    ராசிபுரத்தில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது.

    இதையொட்டி நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுவனம், நகராட்சி தலைவர் கவிதா சங்கர், நகர திமுக செயலாளர் சங்கர் உள்பட முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சமுதாயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    முக்கிய வீதிகளில் தேர் இழுத்து செல்லப்பட்டு கடைவீதியில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இன்று மாலை மீண்டும் தேரோட்டம் நடக்கிறது.

    • டி.கல்லுப்பட்டி அருகே திருவிழாவில் பெண்களிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இந்த திருவிழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகே அம்மாபட்டியில் ஏழூர் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.

    நேற்று நடந்த விழாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நேற்று மாலை திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோதிகள் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவிழாவிற்கு வந்திருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் அந்த கும்பல் 20 பவுன் நகைகளை அபேஸ் செய்திருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    • இந்த ஆண்டு கருப்பண்ணார் கோவிலில் வேல் எடுக்கும் திருவிழா நடத்துவதற்கு மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.
    • ஆனால் இக்கோவிலில் பரம்பரையாக வேல் எடுக்கும் கனகராஜ் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஊஞ்சப்பா ளையத்தில் கருப்பண்ணார் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவின் போது முக்கிய நிகழ்வாக வேல் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இக்கோவில் பரம்பரை தர்ம கர்த்தாவாக கனகராஜ் என்பவர் இருந்து வருகிறார்.

    நீதிமன்றத்தில் அனுமதி

    இந்த நிலையில் இந்த ஆண்டு கருப்பண்ணார் கோவிலில் வேல் எடுக்கும் திருவிழா நடத்துவதற்கு மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். இதையடுத்து வேல் எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர். ஆனால் இக்கோவிலில் பரம்பரையாக வேல் எடுக்கும் கனகராஜ் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக நீதிமன்றத்தில் வேல் எடுக்க அனுமதி பெற்ற மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் வேல் எடுப்பதற்கும், திருவிழா நடத்துவதற்கும் பாதுகாப்பு கோரினர்.

    பேச்சுவார்த்தை

    அதன் அடிப்படையில் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார், நீதிமன்ற உத்திரவின் படி மாரப்பன் தரப்பினர் வேல் எடுத்து திருவிழா நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மாரப்பன் தரப்பினர் வேல் எடுத்து திருவிழாவை தொடங்கினர். பின்னர் கனகராஜ் தரப்பினரும் தனியாக வேல் எடுத்துக் கொண்டு கருபண்ணார் கோவிலுக்கு சென்றனர்.

    மேலும் கனகராஜ் தரப்பினர் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறினர். இதற்கு மாரப்பன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், கனகராஜ் தரப்பினர் வேலை கோவிலுக்கு வெளியே ஊன்றிவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • செல்லத்தம்மன் கோவில் திருவிழா வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.
    • மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலாக குறிப்பிடத்தக்கது, வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோவில். இங்கு கண்ணகி இடது கையில் சிலம்புடனும், வலது கையில் செண்டு ஏந்திய நிலையிலும் எழுந்தருளி உள்ளார்.

    மதுரை வடக்கு வாசல் செல்லத்தம்மனை வழிபடு வோருக்கு பேச்சாற்றல் ஏற்படும். பகைவரால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி பிரச்சினைகள் அகலும் என்பது ஐதீகம் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோவிலில் வருகிற 12-ந் தேதி இரவு வாஸ்து சாந்தியுடன் திருவிழா தொடங்குகிறது.

    13-ந் தேதி கொடியேற்றத்துடன் உற்சவர் திருவிழா தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிறது. இதில் முத்தாய்ப்பாக 20-ந் தேதி செல்லத்தம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது செல்லத்தம்மன் மதுரை மீனாட்சி சுந்தரே சுவரர் கோவிலில் எழுந்தருளுகிறார்.

    21-ந் தேதி சட்டத்தேரும், 22-ந் தேதி மலர்ச்சப்பரமும் நடக்கிறது. மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

    • பிரசித்திப்பெற்ற முனியப்பன் கோவிலில் திருவிழா நடைப்பெற்றது.
    • பொங்கல் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    பென்னாகரம், 

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பிளியனூர் அக்ரஹாரத்தில் பழமை வாய்ந்த பிரசித்திப்பெற்ற முனியப்பன் கோவிலில் திருவிழா நடைப்பெற்றது.

    இக்கோவில் திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆயிரக்கணக்கான ஆடுகள், கோழிகளை பலியிட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இந்த திருவிழாவை யொட்டி அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் கொட்டும் பனியையும், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    மேலும் இந்த விழாவில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முனியப்பனுக்கு மார்கழி 1-ம் தேதியில் இருந்து விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டும், அலகு குத்திக் கொண்டும் ஊர்வலமாக கோவிலிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால் இங்கு பென்னாகரம் காவல் துணை சூப்பிரண்டு இமயவர்மன் பென்னாகரம் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர்.

    மேலும் முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இரவு நேரங்களில் வானவேடிக்கை நிகழச்சியும் நடைப்பெற்றது. மேலும் இவ்விழாவில் ஏராளமான விவசாயிகள் கரும்புகளை விற்பனை செய்தனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை, தக்கார். ஆய்வாளர் உத்தரவின் பேரில் செயல் அலுவலர் சிவக்குமார் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
    • இதில் புகார் கூறிய இரண்டு தரப்பினரும் பங்கேற்றனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமார பாளையம், கல்லங்காட்டுவலசு, நல்லாம்பாளையம் ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இதில் புகார் கூறிய இரண்டு தரப்பினரும் பங்கேற்றனர். இதில் ஒரு தரப்பினர் சுவாமியை சப்பரத்தில் வைத்து, குறிப்பிட்ட நபரின் டிராக்டரில் தான் வைக்க வேண்டும் என கூறினார்கள். இதற்கு எதிர் தரப்பினர் மறுத்தனர். பேச்சு வார்த்தை சமரசம் ஏற்படாததால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் திருவிழா நடத்த தற்காலிகமாக தடை விதித்து தாசில்தார் உத்தரவிட்டார். இந்த சமாதான கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, ஆர்.ஐ. விஜய். வி.ஏ.ஓ. செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×