என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் திருவிழாவில் தீ"

    • விவசாயி சொக்கலிங்கம் என்பவர் தேரில் இருந்த தீயை அணைக்க முயற்சி செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகே உள்ள பெரிய புளியம்பட்டி கிராமத்தில் ஊர் திருவிழா நடந்தது. நேற்று சாமி சிலைகளை தேரில் அலங்கரித்து சாமிகள் டிராக்டரில் ஊர்வலமாக வந்தனர்.

    அப்போது பெரிய புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே டிராக்டர் தீ பிடித்து எறிந்தது. இதனை தருமபுரி மாவட்டம், வனத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சொக்கலிங்கம் என்பவர் தேரில் இருந்த தீயை அணைக்க முயற்சி செய்தார்.

    அப்போது மின்சாரம் பாய்ந்து சொக்கலிங்கம் தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தார்.

    இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மின் கம்பி தாழ்வாக செல்கிறது என்று கிராம மக்கள் புகார் அளித்த நிலையில் மின்சார துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் இந்த மின் விபத்து ஏற்பட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • கோவில் திருவிழாவின் போது பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி இருந்தனர்.
    • அவர்களது எச்சரிக்கையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மதுரை:

    மதுரை திடீர்நகர் மேலவாசல் பகுதியில் சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா தற்போது நடந்து வருகிறது.

    விழாவை முன்னிட்டு கோவிலில் நேற்று பூம்பல்லக்கு தூக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த வாலிபர்களில் சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது தீப்பொறி பறந்து கோவிலில் போடப்பட்டிருந்த பந்தலில் விழுந்தது.

    இதனால் பந்தல் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அங்கு கூடியிருந்த பக்தர்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர். இந்த கோவிலின் அருகே தீயணைப்பு நிலையம் உள்ளது. கோவில் பந்தல் தீப்பிடித்து எரிவதை பார்த்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    ஏற்கனவே கோவில் திருவிழாவின் போது பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி இருந்தனர். அவர்களது எச்சரிக்கையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த தீ விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சந்தனமாரி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் முனியாண்டி என்பவர் திடீர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது சந்தனமாரி அம்மன் கோவில் திருவிழாவில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி பட்டாசுகள் வெடித்தது மேலவாசல் கண்ணன் மற்றும் குணா என்ற முருகேசன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×