என் மலர்
நீங்கள் தேடியது "Temple Festival Fire"
- கோவில் திருவிழாவின் போது பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி இருந்தனர்.
- அவர்களது எச்சரிக்கையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மதுரை:
மதுரை திடீர்நகர் மேலவாசல் பகுதியில் சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா தற்போது நடந்து வருகிறது.
விழாவை முன்னிட்டு கோவிலில் நேற்று பூம்பல்லக்கு தூக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த வாலிபர்களில் சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது தீப்பொறி பறந்து கோவிலில் போடப்பட்டிருந்த பந்தலில் விழுந்தது.
இதனால் பந்தல் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அங்கு கூடியிருந்த பக்தர்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர். இந்த கோவிலின் அருகே தீயணைப்பு நிலையம் உள்ளது. கோவில் பந்தல் தீப்பிடித்து எரிவதை பார்த்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஏற்கனவே கோவில் திருவிழாவின் போது பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி இருந்தனர். அவர்களது எச்சரிக்கையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த தீ விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சந்தனமாரி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் முனியாண்டி என்பவர் திடீர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது சந்தனமாரி அம்மன் கோவில் திருவிழாவில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி பட்டாசுகள் வெடித்தது மேலவாசல் கண்ணன் மற்றும் குணா என்ற முருகேசன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






