search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephant"

    • வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வராதபடி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அதிலும் குறிப்பாக சமவெளி பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வரும் காட்டு யானைகள் வனத்தையொட்டிய அடிவாரப்பகுதியில் முகாமிட்டு அவ்வப்போது முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

    வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து காட்டு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினாலும் அவை மீண்டும் திரும்பி வந்துவிடுகிறது.

    இந்த நிலையில் கெத்தை பகுதியில் இருந்து காட்டு யானைகள் குன்னூர் அடுத்த கிரேக்மோர் எஸ்டேட் பகுதிக்கு வந்தன.

    பின்னர் அவை அங்குள்ள ரேசன் கடையை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடியது. தொடர்ந்து பக்கத்திலுள்ள மளிகை கடையையும் உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது.

    இதனையடுத்து சுமார் ஒரு கி.மீ.. தொலைவுக்கு நடந்துசென்ற காட்டு யானைகள் கொலகம்பை பகுதியில் உள்ள ரேசன் கடையை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடியது. பின்னர் அங்கு இருந்த ஒரு மூட்டை அரிசியையும் தூக்கிக்கொண்டு சென்றது. தொடர்ந்து பஜார் பகுதியில் 2 மளிகை கடைகளை சேதப்படுத்தி காய்கறிகளை ருசித்தன.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த யானைகள் இன்று காலை கம்மந்து வனப்பகுதியில் முகாமிட்டு நிற்பது தெரியவந்தது.

    தொடர்ந்து வனச்சரகர்கள் ரவீந்திரநாத் (குன்னூர்), சீனிவாசன் (குந்தா) ஆகியோர் மேற்பார்வையில் ஊழியர்கள் தீப்பந்தங்களை ஏந்தி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டினர்.

    காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வராதபடி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    காட்டு யானைகளின் அட்டகாசத்தால் தோட்டத் தொழிலாளர்களும் பொதுமக்களும் பீதி அடைந்ததுடன் தூக்கம் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் வனத்துறையினருடன் இணைந்து காட்டு யானைகளை விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • யானை குட்டி ஆற்றின் நடுவே வெள்ளத்தில் தத்தளிப்பதை பார்த்த ஒருவர் பாலத்தின் மேல் இருந்து கீழே பெரிய கயிற்றுடன் இறங்குகிறார்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் யானை குட்டியை மீட்ட பொதுமக்களை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஒரு ஆற்றின் நடுவே யானை குட்டி ஒன்று சிக்கியதும், அதனை வாலிபர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து கயிறு கட்டி மீட்ட காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    அங்குள்ள ஒரு ஆற்றை 6 வார வயது கொண்ட குட்டி யானை ஒன்று கடக்க முயன்ற போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றை ஒட்டிய பாலத்தை கடக்க யானை குட்டி முயன்ற நிலையில் வெள்ளத்தில் சிக்கி உள்ளது. இதனால் யானை குட்டி ஆற்றின் நடுவே வெள்ளத்தில் தத்தளிப்பதை பார்த்த ஒருவர் பாலத்தின் மேல் இருந்து கீழே பெரிய கயிற்றுடன் இறங்குகிறார்.

    பின்னர் வெள்ளத்தில் மெதுவாக நடந்து சென்று யானை குட்டியை நெருங்கிய அவர், அதன் இடுப்பில் கயிற்றை சுற்றிக்கட்ட முயற்சிக்கிறார். முதலில் யானை குட்டி அங்கும், இங்குமாக சென்ற நிலையில், அந்த வாலிபர் போராடி யானையின் இடுப்பு முழுவதும் கயிற்றை கட்டுகிறார். பின்னர் பாலத்தின் மேல் இருந்து பொதுமக்கள் அந்த கயிற்றை மேலே இழுக்க யானை குட்டி பத்திரமாக மீட்கப்படுகிறது.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் யானை குட்டியை மீட்ட பொதுமக்களை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    • மூக்கையா இரவு காவல் பணியில் இருந்த போது தோட்டத்துக்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்தது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி மலையடிவாரத்தில் ஊரில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பிள்ளையார் பாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    அதில் தென்னை, மாமரம் உள்ளிட்ட மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த தோட்டத்தின் காவலாளியாக சொக்கம்பட்டி அருகே உள்ள வளையல்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மூக்கையா என்பவர் வேலை பார்த்து வருகிறார். அங்கு அவர் சுமார் 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

    சமீப காலமாக தோப்பு அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இரவில் தொடர்ந்து யானை வந்து கொண்டி ருந்தது. இதனால் இரவிலும் தோட்டத்தை காவல் காக்க வேண்டும் என்பதற்காக தோட்டத்தின் உரிமையாளர் பிள்ளையார் பாண்டி நேற்று இரவு மூக்கையாவை அழைத்துக்கொண்டு தோப்பிற்கு சென்றார்.

    அங்கு மூக்கையா இரவு காவல் பணியில் இருந்த போது தோட்டத்துக்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்தது. உடனே அதனை அவர் விரட்டினார்.

    அப்போது யானை, மூக்கையாவை துரத்தியது. உடனே அவர் பதறியபடி ஓடியபோது தடுமாறி கீழே விழுந்தார். பின்னால் அவரை துரத்தி வந்த யானை மூக்கையாவை மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே மூக்கையா உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை கண்ட பிள்ளையார் பாண்டி அங்கு இருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் மூக்கையாவின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மூக்கையாவின் மனைவி மற்றும் அவரது 3 மகள்களுடன் சேர்ந்து ஊர் மக்கள் அந்த பகுதியில் திரண்டனர். அவரது இறப்பிற்கு இழப்பீடு வழங்க கோரி மறியலுக்கு முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் அங்கு சென்று மறியலுக்கு திரண்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும் வனத்துறை ரேஞ்சர் சுரேஷ், புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக ரேஞ்சர் சுரேஷ் தெரிவித்தார். தொடர்ந்து அவர்களிடம் வனத்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் குடிப்பதற்காக ஷட்டர் அருகே வந்த போது தவறி உள்ளே விழுந்தது.
    • யானை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தேக்கடி வனப்பகுதியை ஒட்டி ஏராளமான யானை, மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை அடிக்கடி தண்ணீர் தேடி அணைப்பகுதியை ஒட்டி நடமாடி வருகின்றன.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் ஷட்டர் பகுதியில் இன்று காலை ஒரு யானை நடமாடியது. திடீரென தண்ணீர் குடிப்பதற்காக ஷட்டர் அருகே வந்த போது தவறி உள்ளே விழுந்தது.

    பின்னர் அந்த யானை மேலே எழ முடியாமல் சத்தம் போட்டது. உடனே தமிழக பொதுப்பணித்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். யானையை மீட்பதற்கு கேரள வனத்துறைக்கு மட்டுமே அனுமதி உள்ளது என்பதால் இது குறித்து பெரியாறு புலிகள் சரணாலய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. யானை ஷட்டர் பகுதியில் விழுந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுவதும் நிறுத்தப்பட்டது.

    இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 1 மணி நேர போராட்டத்துக்கு பின்பு யானை மேலே கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து யானை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.

    யானை மற்றும் வன விலங்குகள் நடமாடும் பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தடுப்பணை பகுதிக்கு தண்ணீர் தேடி ஊசிக்கொம்பன் என்ற ஆண் காட்டு யானை ஒன்று வந்தது.
    • சேற்றில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட நெல்லிமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.

    அடர்ந்த மலை பகுதியாக உள்ள இந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் அவ்வப்போது இடம் பெயர்ந்து வருகின்றன.

    இதனிடையே இந்த வனப்பகுதியில் மழை காலங்களில் பெய்யும் தண்ணீரை சேமிக்க தாசம்பாளைத்தில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு இந்த தடுப்பணை பகுதிக்கு தண்ணீர் தேடி ஊசிக்கொம்பன் என்ற ஆண் காட்டு யானை ஒன்று வந்தது. அந்த யானை திடீரென்னு தடுப்பணையில் படுத்தவாறு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை அந்த பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர் ஆண் காட்டு யானை உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் வனத்துறையினர் யானை எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் யானை தண்ணீரில் படுத்தவாறு உயிரிழந்துள்ள நிலையில் கிடப்பதால், சேற்றில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • யானையின் அருகில் பராமரிப்பாளர்கள் யாரும் இல்லை.
    • சிறுவன் தவறவிட்ட காலணியை யானை துதிக்கையால் எடுத்து வேலியை தாண்டி உயரமான மேடையில் நிற்கும் சிறுவனிடம் நீட்டியது.

    யானை தொழுவத்திற்குள் சிறுவன் தவறவிட்ட செருப்பை எடுத்து யானை கருணையுடன் திரும்ப கொடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் அதிகம் ரசிக்கப்படுகிறது.

    சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் வெய்ஹாய் உயிரியல் பூங்காவில் அந்த யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கம்பி வேலி போட்ட அடைப்பிற்குள் விடப்பட்டு உள்ள யானையை ரசிக்க உயரமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

    25 வயதான அந்த யானையை ரசித்துக் கொண்டிருந்தபோது 5 வயதிற்கு உட்பட்ட சிறுவன் ஒருவன் தனது காலணியை தவறவிட்டான். அது யானையின் தொழுவத்திற்குள் சென்று விழுந்தது. அப்போது யானையின் அருகில் பராமரிப்பாளர்கள் யாரும் இல்லை. இருந்தபோதிலும் சிறுவன் தவறவிட்ட காலணியை யானை துதிக்கையால் எடுத்து வேலியை தாண்டி உயரமான மேடையில் நிற்கும் சிறுவனிடம் நீட்டியது.

    சிறுவனும் அதை கைநீட்டி பெற்றுக் கொண்டான். புத்திசாலித்தனமும், கருணையும் மிகுந்த யானையின் இந்த செய்கை அங்கு நின்ற பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒருவர் இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பரப்ப, பல்வேறு வலைத்தளங்களுக்கும் அது பரவியது. இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். 52 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.


    • கரும்பு தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி அமைந்துள்ளது.
    • யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் புகுந்து 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தி உள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விளை நிலையங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ராமாபுரம் பிரிவு பகுதியைச் சேர்ந்த விவசாயி மல்லு (50) என்பவர் தனது தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு இருந்தார். நேற்று காலை வழக்கம் போல் மல்லு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்ற போது கரும்பு பயிர்களுக்கு இடையே 4 காட்டு யானைகள் முகாமிட்டபடி கரும்பு பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் நிர்மல் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகள் கரும்பு தோட்டத்திற்குள் நடமாடுவதை கண்டு உடனடியாக யானைகளை விரட்ட முயற்சித்தனர். பகல் நேரம் என்பதால் காட்டு யானைகள் கரும்பு தோட்டத்தை விட்டு வெளியேறாமல் போக்கு காட்டி வந்தது.

    இதையடுத்து யானைகள் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணிக்க வனத்துறையின் டிரோன் கேமரா குழுவினர் வர வழைக்கப்பட்டனர். டிரோன் கேமரா மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டதில் கரும்புத் தோட்டத்தில் முகாமிட்ட 4 யானைகளும் ஆண் யானைகள் என தெரிய வந்தது.

    யானைகள் அப்பகுதியில் முகாமிட்டதை அறிந்த பொதுமக்கள் யானைகளை வேடிக்கை பார்ப்பதற்காக கூட்டமாக திரண்டதால் சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி போலீசார் பொதுமக்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    கரும்பு தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் தான் கரும்பு தோட்டத்தில் முகாமிட்டது தெரியவந்தது.

    தொடர்ந்து இரவு வரை டிரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்தனர். சுமார் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக இரவில் அந்த 4 யானைகளும் கர்நாடக வனப்பகுதிக்குள் சென்றது.

    இதன் பிறகு வனத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் புகுந்து 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தி உள்ளது. இதனால் நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயி மல்லு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • பராமரிப்பாளர்கள் யானைகளை வழிக்கு கொண்டுவர வாலை பிடித்து இழுத்தால் அவை பயந்துள்ளது என்று கூறப்படுகிறது.
    • மக்கள் அலறியடித்து பயந்து சிதறிய இந்த சம்பவதின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரழகை வருகிறது

    இலங்கை தலைநகர் கொழும்பு -வுக்கு தெற்கே 280 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கதிர்காமம் பகுதியில் நேற்று நடந்த இந்து மத கோவில் நிகழ்ச்சியில் யானைகள் அழைத்துவரப்பட்டன.  இரவு கொண்டாட்டங்களின்போது திடீரென பாகனின் கட்டுப்பாட்டை இழந்த யானைகள் அச்சத்தில் பிளிறியதால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தினர்

    இதனால் ஏற்பட்ட நெரிசலில் 12 பேர் காயமடைந்துள்ளனர். சிவப்பு, நீல ஆடைகளுடன் அலங்கரிக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு அழைத்து  அழைத்துவரப்பட்ட  யானைகள் மணி இசையாலும், பராமரிப்பாளர்கள் அதை வழிக்கு கொண்டுவர வாலை பிடித்து இழுத்தாலும் யானை பயந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    மக்கள் அலறியடித்து பயந்து சிதறிய இந்த சம்பவதின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரழகை வருகிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யானை துன்புறுத்தப்பட்டதற்கு விலங்குகள் நல ஆர்வர்களிடமிருந்து கண்டங்கள் குவிந்து வருகிறது.

    • பெட்ரோல் பங்கில் யானை ஒன்று புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • பெட்ரோல் பங்கில் யானை சுற்றித் திரிந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    கோயம்புத்தூர்:

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது.

    இந்த பெட்ரோல் பங்கில் யானை ஒன்று புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் பங்கில் யானையைப் பார்த்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.

    இதுதொடர்பான காட்சிகள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. பெட்ரோல் பங்கில் யானை சுற்றித் திரிந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    யானை ஊருக்குள் வந்த சம்பவம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தாளவாடி பகுதி விவசாயிகள் கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர்.
    • யானையால் 1 ஏக்கர் கரும்பு சேதாரம் ஆனது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி பகுதி விவசாயிகள் கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சிக்கள்ளி கிராமத்தில் நேற்று இரவு 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் விவசாயி சங்கர் (30) என்பவர் தோட்டத்தில் புகுந்து கரும்பு பயிரை சேதாரம் செய்தது.

    இதை கண்ட விவசாயி அக்கம் பக்கத்து விவசாயிகளுடன் யானையை விரட்டினர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை வனப் பகுதியில் விரட்டப்பட்டது. யானையால் 1 ஏக்கர் கரும்பு சேதாரம் ஆனது.

    தொடர்ந்து வன விலங்குகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெறும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • குட்டியுடன் கூடிய 4 யானைகள் மற்றும் ஒற்றை யானை ஆகியவை காட்டுக்குள் திரும்பாமல் ஊருக்குள் சுற்றி வந்தன.
    • காட்டு யானைகள் அதிகாலை நேரத்தில் செம்மேடு புற்றுக்கண் கோவில் அருகே வந்தது.

    வடவள்ளி:

    கோவை போளுவாம் பட்டி சரகத்துக்கு உட்பட்ட நரசீபுரம் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 12 காட்டு யானைகள் வெளியேறின. பின்னர் அவற்றில் 7 யானைகள் நேற்று அதிகாலை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன.

    ஆனால் குட்டியுடன் கூடிய 4 யானைகள் மற்றும் ஒற்றை யானை ஆகியவை காட்டுக்குள் திரும்பாமல் ஊருக்குள் சுற்றி வந்தன. அதிலும் குறிப்பாக ஒற்றை காட்டுயானை முட்டத்து வயல் பகுதிக்கு சென்று அங்குள்ள ரேசன் கடையை உடைத்து அரிசியை தின்றுவிட்டு பின்னர் பூண்டி வனப்பகுதிக்குள் சென்றது.

    இதற்கிடையே குட்டியுடன் கூடிய 4 காட்டு யானைகள் அதிகாலை நேரத்தில் செம்மேடு புற்றுக்கண் கோவில் அருகே வந்தது. பின்னர் அங்குள்ள தனியார் பாக்கு தோட்டத்தில் முகாமிட்ட யானைகள் அங்கு விளைந்து நிற்கும் சணப்பை பயிர்களை தின்று தீர்த்தது.

    அப்போது காலைநேரம் என்பதால் பூண்டி சாலையில் போக்குவரத்து நிறைந்து காணப்பட்டது. இதனால் மாலைவரை வனத்துறையினர் காத்திருந்தனர். பின்னர் மாலை 6 மணியளவில் போலீசார் உதவியுடன் பூண்டி சாலையில் போக்குவரத்தை நிறுத்தி தொடர்ந்து பட்டாசு வெடித்தும், ஜே.சி.பி. வாகனம் உதவியுடனும் காட்டு யானைகளை விரட்ட முயற்சித்தனர். ஆனால் இரவு 8 மணிவரை காட்டு யானைகள் பாக்கு தோட்டத்தை விட்டு வெளியேவரவில்லை. தொடர்ந்து வனத்துறையினர் சுமார் 14 மணிநேரம் போராடி காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.

    • யானை கண்டதும் அப்பகுதி மக்கள் அலறடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • ஆவேசமடைந்த யானை அந்த பகுதியில் உள்ள மரங்களை உடைத்து சேதப்படுத்தி மலையை சுற்றி சுற்றி வருகிறது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வரச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் டி.என்.பாளையம் வனச்சரக பகுதியில் இருந்து வழி தவறி வந்த ஆண் யானை ஒன்று இன்று காலை 5.30 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் அருகே மூலவாய்க்கால், குமரகிரி முருகன் கோவில் அருகே வந்தது.

    இந்த கோவில் மலைமேல் உள்ளது. சுற்றி வனப்பகுதி அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் வழி தவறி வந்த ஆண் யானை குமரகிரி முருகன் கோவில் மலைப்பகுதியை சுற்றி சுற்றி வருகிறது. ஆண் யானை பார்க்க மிகவும் பிரம்மாண்டமாக பெரிய தந்தங்களுடன் ஆவேசமாக மலைப்பகுதி சுற்றி சுற்றி வருகிறது. யானை கண்டதும் அப்பகுதி மக்கள் அலறடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.டி. என். பாளையம் ரேஞ்சர் மாரியப்பன், விளாமுண்டி ரேஞ்சர் கணேஷ் பாண்டி, வன அலுவலர் பழனிச்சாமி மற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் ஆவேசமடைந்த யானை அந்த பகுதியில் உள்ள மரங்களை உடைத்து சேதப்படுத்தி மலையை சுற்றி சுற்றி வருகிறது. யானை ஊருக்குள் புகுந்த செய்தி காட்டு தீ போல் பரவியதால் யானை பார்க்க 100-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடிவிட்டனர். கூட்டத்தை கண்டதும் யானை மேலும் ஆவேசம் அடைந்து பிளிரியபடி சுற்றி சுற்றி வருகிறது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக யானை போக்கு காட்டி வருகிறது.

    யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பாக சூழ்நிலை நிலவி வருகிறது.

    ×