என் மலர்
உள்ளூர் செய்திகள்

யானை துரத்தியதால் பள்ளத்தில் பாய்ந்த லாரியை மீட்கும் காட்சி.
தாளவாடி அருகே யானை துரத்தியதால் பள்ளத்தில் பாய்ந்த லாரி
- வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சாலையோரம் சுற்றித்திரிந்தது.
- ஒற்றை யானை அந்த லாரியில் கரும்பு இருக்கிறது என நினைத்து லாரியை துரத்தியது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும், சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாலையில் வந்து கரும்பு வாகனங்களை எதிர்பார்த்து அந்த வழியாக வரும் வாகனங்களை வழி மறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி அருகே சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கும்பாரண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சாலையோரம் சுற்றித்திரிந்தது. அந்த வழியாக கரும்புகளை ஏற்றி வாகனம் வருகிறதா என ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி பார்த்தது. அப்போது சத்தியமங்கலம் இருந்து தாளவாடி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. கும்பாரண்டு அருகே செல்லும் போது ஒற்றை யானை அந்த லாரியில் கரும்பு இருக்கிறது என நினைத்து லாரியை துரத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் பயத்தில் லாரியை வேகமாக இயக்கினார். அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் அவ்வழியாக வந்த லாரியில் கயிற்றை கட்டி பள்ளத்தில் இருந்த லாரியை மீட்டனர். பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சமீப காலமாக வனப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களை யானைகள் துரத்துவது தொடக்கதையாகி வருவதால் வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர்.






