என் மலர்
நீங்கள் தேடியது "forest"
- வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சாலையோரம் சுற்றித்திரிந்தது.
- ஒற்றை யானை அந்த லாரியில் கரும்பு இருக்கிறது என நினைத்து லாரியை துரத்தியது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும், சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாலையில் வந்து கரும்பு வாகனங்களை எதிர்பார்த்து அந்த வழியாக வரும் வாகனங்களை வழி மறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி அருகே சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கும்பாரண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சாலையோரம் சுற்றித்திரிந்தது. அந்த வழியாக கரும்புகளை ஏற்றி வாகனம் வருகிறதா என ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி பார்த்தது. அப்போது சத்தியமங்கலம் இருந்து தாளவாடி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. கும்பாரண்டு அருகே செல்லும் போது ஒற்றை யானை அந்த லாரியில் கரும்பு இருக்கிறது என நினைத்து லாரியை துரத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் பயத்தில் லாரியை வேகமாக இயக்கினார். அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் அவ்வழியாக வந்த லாரியில் கயிற்றை கட்டி பள்ளத்தில் இருந்த லாரியை மீட்டனர். பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சமீப காலமாக வனப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களை யானைகள் துரத்துவது தொடக்கதையாகி வருவதால் வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர்.
- கட்டுப்பாட்டை மீறி பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்ததாக புகார் எழுந்தது.
- பழைய குற்றால அருவியில் குளிக்கும் நேரத்தை வனத்துறையினர் குறைத்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று பழைய குற்றால அருவி. இந்த அருவிக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலில் ஈடுபடுவார்கள்.
பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதித்தனர். இந்த நிலையில் இரவு 8 மணிக்கு பிறகு கட்டுப்பாட்டை மீறி பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்ததாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குளிக்கும் நேரத்தை வனத்துறையினர் குறைத்தனர். அதாவது காலை 6 மணி முதல் மாலை 6.30 வரை மட்டுமே பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் கூடுதல் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
- கோவில் வளாகத்தை அந்த ஒற்றை யானை சுற்றி வந்தது.
- வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆசனூர், தாளவாடி, பர்கூர் வனச்சரக்கத்தில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு தண்ணீரை தேடி சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து வாகனங்களை வழிமறிப்பதும், கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனத்துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று உணவுக்காக பண்ணாரி அம்மன் கோவில் வளாகம் அருகே அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தது.
நீண்ட நேரமாக கோவில் வளாகத்தை அந்த ஒற்றை யானை சுற்றி வந்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து அந்த ஒற்றை யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
இதனால் பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் புகுவது தொடர்கதை ஆகி வருகிறது.
குறிப்பாக உணவு தண்ணீருக்காக யானைகள் வெளியே வருகின்றன. இதனால் வனப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றனர்.
- மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 5460.90 ச.கி.மீ. காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
- தமிழகத்தில் 157.68 ச.கி.மீ., ஆந்திராவில் 133.18 ச.கி.மீ., குஜராத்தில் 130.08 ச.கி.மீ., கேரளாவில் 49.75 ச.கி.மீ. பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
மத்திய சுற்றுக்சூழல் அமைச்சகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு வழங்கியுள்ள அறிக்கையில், நாட்டில் (மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்) 13 ஆயிரம் ச.கி.மீ. (13,05,668.1 ஹெக்டேர்) காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் அளவு டெல்லி, சிக்கிம், கோவை மாநிலங்களின் ஒட்டுமொத்த அளவைவிட அதிகமாகும்
அந்தமான், அசாம், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, சண்டிகார், சத்தீஸ்கார், தாதர்&நகர் மற்றும் டாமன்&டையு, கேரளா, லட்சத்தீவு, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், சிக்கிம், மத்திய பிரதேசம், மிசோரம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதில் மார்ச் 2024 வரையிலான தரவுகளில், மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 5460.90 ச.கி.மீ. காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் 3620.9 ச.கி.மீ. பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் 863.08 ச.கி.மீ. காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 575.54 ச.கி.மீ., அருணாச்சல பிரதேசத்தில் 534.9 ச.கி.மீ., ஒடிசாவில் 405.07 ச.கி.மீ., உத்தர பிரதேசத்தில் 264.97 ச.கி.மீ., மிசோரமில் 247.72 ச.கி.மீ., ஜார்க்கண்டில் 200.40 ச.கி.மீ., சத்தீஸ்கரில் 168.91 ச.கி.மீ. நிலங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 157.68 ச.கி.மீ., ஆந்திராவில் 133.18 ச.கி.மீ., குஜராத்தில் 130.08 ச.கி.மீ., கேரளாவில் 49.75 ச.கி.மீ. நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
- பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான மரபு வழிபட்ட பஞ்சவாடி எனப்படும் தெய்வீக வனங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
- தெய்வீக வனங்களை உருவாக்கும் விதமாக மரக்கன்றுகள் நட்டார்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், 96.நெம்மேலி ஊராட்சியில் மனோலயம் ஹெல்த் கேர் டிரஸ்ட் சங்கமாஸ் இன்டர்நேஷனல், ஐயோஃபா மற்றும் 108 தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழ்நாட்டில் 108 இடங்களில் பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான மரபு வழிபட்ட பஞ்சவாடி எனப்படும் தெய்வீக வனங்களை உருவாக்க முடிவு செய்து மரக்கன்றுகள் நடதிட்டமிட்டது.
அதன்படி, மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் சேரன்குளம் தி.மனோகரன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயக்குமார் சதீஷ்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வெயிலின் காரணமாக வனப் பகுதிகளில் செடி, கொடிகள் முற்றிலும் கருகி கடும் வறட்சி நிலவி வருகிறது.
- 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் வந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நிலவி வந்த கடும் உறை பனிப்பொழிவு மற்றும் பகல் நேரத்தில் நிலவி வரும் வெயிலின் காரணமாக வனப் பகுதிகளில் செடி, கொடிகள் முற்றிலும் கருகி கடும் வறட்சி நிலவி வருகிறது.
இதனால் ஊட்டி, கூடலூா், குன்னூா் உள்ளிட்ட வனப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு வருவதால் இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா், தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தநிலையில் ஊட்டி அருகே மந்தாடா பகுதியில் மலை ெரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ள வனத்தில் வெயிலின் காரணமாக ஏற்பட்ட காட்டுத் தீ அருகில் இருந்த செடி, கொடிகள் மீது பரவியது. இதில் சுமாா் 3 ஏக்கா் பரப்பளவில் இருந்த செடி, கொடிகள் எரிந்து சாம்பலானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஊட்டி தீயணைப்புத் துறையினா் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். வனப்பகுதியில் காட்டுத் தீ மேலும் பரவாமல் இருக்க தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் வந்தது.
- இந்த குரங்குகள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளை துரத்துவதும், கடை தெருவில் தின்பண்டங்கள் வாங்கிச் செல்லும் சிறார்களை விரட்டு வதுமாக அட்டகாசம் செய்து வந்தது.
- பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் குரங்கு பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஏராளமான குரங்குகள் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன,
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இந்த குரங்குகள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளை துரத்துவதும், கடை தெருவில் தின்பண்டங்கள் வாங்கிச் செல்லும் சிறார்களை விரட்டு வதுமாக அட்டகாசம் செய்து வந்தது.
அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு உத்தரவின் பேரில் செயல் அலுவலர் அருள்குமார் முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் குரங்கு பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஏராளமான குரங்குகள் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன. அரகண்டநல்லூர் பேரூ ராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்களும் வியாபாரிகளும் குறிப்பாக பெண்களும் பள்ளி செல்லும் குழந்தைகளும் பாராட்டு தெரிவித்தனர்.
- யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
- கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகம் உள்ளது. இந்த அடர்ந்த வனப்பகுதியில் தாளவாடி, ஆசனூர், தலமலை உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை கள், புலி, சிறுத்தை, கரடி என பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
மேலும் ஆசனூர் வனப்பகுதிகளில் குளம், குட்டைகள் மற்றும் நீரோடைகள் உள்ளது. இந்த நீர்நிலைகளில் வன விலங்குகள் வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் தாளவாடி, ஆசனூர் வனப்பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆசனூர் வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது.
ஆசனூர் வனப்பகுதியை ரசிப்பதற்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்து வருகிறார்கள். இதையடுத்து வனத்துறையின்ர் கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஈரோடு மாட்ட பொதுமக்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து இயற்கை அழகை ரசிக்கிறார்கள். இதனால் ஆசனூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
மேலும் வனத்துறையினரும் ரோந்து வந்து கண்காணித்து வருகிறார்கள். அப்போது வனப்பகுதிக்குள் நுழைபவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.
இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதிக்குள் சிலர் அனுமதியின்றி நுழைந்து ஆபத்தை உணராமல் சுற்றி திரிந்தனர். அப்போது 3 பேர் ஆசனூர் வனப்பகுதியில் உள்ள நீரோடையில் குளித்து கொண்டு இருந்தனர். அந்த பகுதியில் ரோந்து வந்த வனத்துறையினர் அவர்களிடம் விசரணை நடத்தி அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த பகுதியில் அனுமதியின்றி நுழைந்து யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் அவர் கொண்டு வந்த கேமிராவையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் வனப்பகுதியில் உள்ள ஆபத்து குறித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆசனூர் வனசரக அலுவலர் சிவகுமார் கூறும்போது, வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்பட பல வன விலங்குகள் உள்ளன. பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அத்துமீறி நுழைகிறார்கள். இதனால் ஆபத்து நிகழ கூடும். எனவே பொது மக்கள் வனப்பகுதிக்குள் நுழைவதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி அனுமதியின்றி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்தல், நீரோடைகளில் குளித்தல் போன்ற குற்றங்களுக்காக கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.9 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
- பல்வேறு பகுதிகளில் அரிசி கொம்பனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது இத்தொகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது.
- யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை, ஊராட்சிகளில் 10 பேரை பலி வாங்கியதாக கூறப்படும் அரிசி கொம்பன் ஆண் காட்டு யானையை கேரள வனத்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
அதன் பின்பு தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது. அங்கு வனத்தை விட்டு வெளியேறி தமிழக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த அரிசி கொம்பன் கடந்த மாதம் 27-ந் தேதி கம்பம் நகருக்குள் ஆக்ரோஷத்துடன் நுழைந்தது.
பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானை சண்முகாநதி அணையை ஒட்டியுள்ள பகுதியில் தஞ்சமடைந்தது. அதனை நேற்று முன்தினம் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர் கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதியான முத்துக்குழி பகுதியில் விட்டுள்ளனர்.
அரிசி கொம்பன் யானையால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என நெல்லை, குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே யானையின் இருப்பிடத்தை உறுதி செய்ய வலியுறுத்தி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் அரிசி கொம்பன் யானையை மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் பகுதியிலேயே விட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செண்பகத்தொழு குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் படாதபாடு படுத்தி மயக்க ஊசி செலுத்தி பிடித்து வேறு இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் ஆரம்ப கால வசிப்பிடம் மூணாறு வனப்பகுதியை ஒட்டியே இருந்தது. எனவே அதனை மீண்டும் அதே இடத்துக்கு கொண்டு வந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் இருந்தவரை அரிசி கொம்பனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனால் பல்வேறு பகுதிகளில் அரிசி கொம்பனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது இத்தொகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது என்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
- காட்டு யானைகள் உணவு தேடி வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சாலையில் வந்தது.
- சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானை கூட்டம் நடுரோட்டில் நின்றதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என் பாளையம், விளாமுண்டி, ஆசனூர், தலமலை, தாளவாடி, கடம்பூர், கெட்டவாடி, கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்கள் உள்ளன.
இதில் யானை, புலி, மான், சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறி வரும் யானைகள் சாலையில் நிற்பதும், கரும்புலோடு ஏற்றி வரும் லாரியை மறித்து கரும்புகளை ருசிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. யானைகள் சாலை நடுவே நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பள்ளம் அருகே 3 காட்டு யானைகள் உணவு தேடி வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சாலையில் வந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டனர். யானை கூட்டம் ஆனது சிறிது நேரம் வாகனங்களுக்கு வழி விடாமல் நடுரோட்டிலேயே நின்றது.
இதனை பார்த்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானை கூட்டம் நடுரோட்டில் நின்றதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பிறகு 3 யானைகள் மெல்ல மெல்ல நகர்ந்து ரோட்டை கடந்து சென்றது. பிறகு வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனங்களை இயக்கினர்.
- வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை உணவு தேடி சுற்றி திரிகிறது.
- வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொங்கர்பாளையம் ஊராட்சி குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் இன்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை உணவு தேடி பங்களாப்புதூர் வழியாக எருமைக்குட்டை, அண்ணாநகர் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டப்பகுதியில் விளை நிலங்கள் வழியாக சுற்றி திரிகிறது.
இந்த தகவலறிந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் தற்போது யானையை கண்காணித்து ஒலி எழுப்பி வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பூர்த்தி செய்து தருகின்றன.
- வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகளில் கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது
உடுமலை:
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்கு ஈட்டி,சந்தனம், வெள்வெல்,வாகை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் வளர்ந்துள்ளன. அது தவிர வனச்சரகங்களை வாழ்விடமாக கொண்டு யானை, புலி,சிறுத்தை, காட்டெருமை,கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றுக்குக்கான உணவு மற்றும் தண்ணீர் தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பூர்த்தி செய்து தருகின்றன.
ஆனால் கோடைகாலத்தில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளில் நீர்வரத்து குறைந்து விடுவதுடன் அங்கு வளர்ந்துள்ள மரங்கள், புற்கள், செடிகள் உள்ளிட்டவை காய்ந்து விடுகின்றன. இதனால் வன விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. அதைத்தொடர்ந்து வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அடிவாரப் பகுதிக்கு வந்து விடுகின்றன. அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை கொடுத்து அமராவதி அணை அடைக்கலம் அளித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கோடை காலத்தின் போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதையடுத்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக அமராவதி அணைக்கு வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகளில் கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.அத்துடன் வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளதுடன் இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.மேலும் வனப்பகுதியும் பசுமைக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டு உள்ளது.இதனால் வன விலங்குகளுக்கான உணவு தண்ணீர் தேவை பூர்த்தி அடையும் வாய்ப்பு உள்ளது.
ஆனாலும் பருவமழை தீவிரமடைந்து ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினால் மட்டுமே வனப்பகுதி முழுமையாக பசுமைக்கு திரும்பும். வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறையும் நிவர்த்தி ஆகும்.அப்போதுதான் அடிவாரப் பகுதியில் முகாமிட்டுள்ள வனவிலங்குகள் அடர்ந்த வனப்பகுதிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.






