என் மலர்
உள்ளூர் செய்திகள்

பச்சை பசேல் போல் காட்சியளிக்கும் உடுமலை வனப்பகுதியில் காட்சி.
சாரல் மழையால் பசுமைக்கு திரும்பும் உடுமலை வனப்பகுதி
- வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பூர்த்தி செய்து தருகின்றன.
- வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகளில் கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது
உடுமலை:
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்கு ஈட்டி,சந்தனம், வெள்வெல்,வாகை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் வளர்ந்துள்ளன. அது தவிர வனச்சரகங்களை வாழ்விடமாக கொண்டு யானை, புலி,சிறுத்தை, காட்டெருமை,கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றுக்குக்கான உணவு மற்றும் தண்ணீர் தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பூர்த்தி செய்து தருகின்றன.
ஆனால் கோடைகாலத்தில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளில் நீர்வரத்து குறைந்து விடுவதுடன் அங்கு வளர்ந்துள்ள மரங்கள், புற்கள், செடிகள் உள்ளிட்டவை காய்ந்து விடுகின்றன. இதனால் வன விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. அதைத்தொடர்ந்து வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அடிவாரப் பகுதிக்கு வந்து விடுகின்றன. அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை கொடுத்து அமராவதி அணை அடைக்கலம் அளித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கோடை காலத்தின் போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதையடுத்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக அமராவதி அணைக்கு வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகளில் கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.அத்துடன் வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளதுடன் இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.மேலும் வனப்பகுதியும் பசுமைக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டு உள்ளது.இதனால் வன விலங்குகளுக்கான உணவு தண்ணீர் தேவை பூர்த்தி அடையும் வாய்ப்பு உள்ளது.
ஆனாலும் பருவமழை தீவிரமடைந்து ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினால் மட்டுமே வனப்பகுதி முழுமையாக பசுமைக்கு திரும்பும். வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறையும் நிவர்த்தி ஆகும்.அப்போதுதான் அடிவாரப் பகுதியில் முகாமிட்டுள்ள வனவிலங்குகள் அடர்ந்த வனப்பகுதிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.






