என் மலர்
நீங்கள் தேடியது "வனப்பகுதி"
- இந்தப் பைலாடிலா வனப்பகுதி மிக உயர்தரமான இரும்புத் தாது மற்றும் பழமையான மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகும்.
- மூத்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் மாதவ் காட்கில் மறைந்த அதே நேரத்தில், காடுகளை அழிக்கும் இத்தகைய திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
சத்தீஸ்கர் மாநிலத்தின் பைலாடிலா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், அரசுக்குச் சொந்தமான NMDC நிறுவனம் இரும்புத் தாது சுரங்கப் பணிகளை விரிவுபடுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் 874.924 ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதியில் இரும்புத் தாது தோண்டி எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரும்புத் தாது உற்பத்தியை ஆண்டுக்கு 11.30 மில்லியன் டன்னில் இருந்து 14.50 மில்லியன் டன்னாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பைலாடிலா வனப்பகுதி மிக உயர்தரமான இரும்புத் தாது மற்றும் பழமையான மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகும்.
இந்த விரிவாக்க நடவடிக்கையால் இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கம் மற்றும் நீர் ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சுரங்க விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தார்வாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காடுகளை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் வழங்கும் இந்த நடவடிக்கையை அவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.
மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் மாதவ் காட்கில் மறைந்த அதே நேரத்தில், காடுகளை அழிக்கும் இத்தகைய திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது முரணாக பார்க்கப்படுகிறது.
- குடியிருப்புகளில் ஏராளமான குரங்குகள் சுற்றி வருகின்றன.
- கூண்டில் 19 குரங்குகள் சிக்கின.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், பன்றிகள், காட்டு மாடுகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
மேலும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக கொடைக்கானல் அப்சர்வேட்டரி, புதுக்காடு உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான குரங்குகள் சுற்றி வருகின்றன.
திறந்திருக்கும் வீடுகளில் புகுந்து உணவு பொருட்கள், துணிகள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்கின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு மட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கும் தொல்லை கொடுத்து வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு குணா குகைக்கு வந்த சுற்றுலா பயணியிடம் இருந்து பையை பறித்து அதில் இருந்த பணத்தை சூறை விட்ட சம்பவமும் நடந்தது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் குரங்குகள் தொல்லையால் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் வனத்துறையினர் கடந்த 2 நாட்களாக குரங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவை நடமாடும் பகுதியில் கூண்டுகளை வைத்தனர். இந்த கூண்டில் 19 குரங்குகள் சிக்கின. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, பைன் மரக்காடுகள், பேரிஜம் ஆகிய இடங்களிலும் குரங்குகள் நடமாட்டம் உள்ளதால் இவற்றை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
- வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சாலையோரம் சுற்றித்திரிந்தது.
- ஒற்றை யானை அந்த லாரியில் கரும்பு இருக்கிறது என நினைத்து லாரியை துரத்தியது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும், சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாலையில் வந்து கரும்பு வாகனங்களை எதிர்பார்த்து அந்த வழியாக வரும் வாகனங்களை வழி மறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி அருகே சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கும்பாரண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சாலையோரம் சுற்றித்திரிந்தது. அந்த வழியாக கரும்புகளை ஏற்றி வாகனம் வருகிறதா என ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி பார்த்தது. அப்போது சத்தியமங்கலம் இருந்து தாளவாடி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. கும்பாரண்டு அருகே செல்லும் போது ஒற்றை யானை அந்த லாரியில் கரும்பு இருக்கிறது என நினைத்து லாரியை துரத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் பயத்தில் லாரியை வேகமாக இயக்கினார். அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் அவ்வழியாக வந்த லாரியில் கயிற்றை கட்டி பள்ளத்தில் இருந்த லாரியை மீட்டனர். பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சமீப காலமாக வனப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களை யானைகள் துரத்துவது தொடக்கதையாகி வருவதால் வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர்.
- சுற்றுலா பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்.
- கோடை சீசன் நடைபெறுவதால் இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சமவெளி பகுதியில் இருந்து ஏராளமான காட்டு யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை வழியாக வனத்துக்குள் சென்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம், முள்ளி உள்ளிட்ட பகுதியில் இருந்து 23 காட்டு யானைகள் இடம்பெயர்ந்து குன்னூர் பகுதியில் தனித்தனி குழுவாக நடமாடி வருகிறது.
ஊட்டியில் சுற்றித்திரிந்த ஒற்றைக்கொம்பன் தற்போது தொட்டபெட்டா பகுதிக்கு சென்று லவ்டேல் பகுதியில் நடமாடி வருகிறது.
இந்த நிலையில் சமவெளி பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை நேற்று மாலை குன்னூருக்கு வந்தது. பின்னர் அந்த ஒற்றை யானை சாலையோரம் வழியாக சென்று அங்குள்ள செங்குத்தான மலைச்சரிவில் ஏறி வனத்துக்குள் சென்றது. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே குன்னூர் மலைப்பாதையில் ஒற்றை காட்டு யானை வேகமாக மலையேறி செல்வதை அங்குள்ள சுற்றுலா பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீலகிரியில் கோடை சீசன் நடைபெறுவதால் இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் காட்டு யானைகள் மலைப்பாதையில் தொடர்ந்து நடமாடி வருவதால் அனைத்து தரப்பினரும் அச்சத்தில் உள்ளனர்.
- விவசாய தோட்டப் பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றை யானை ஒன்று சுற்றி திரிகிறது.
- கடந்த 3 நாட்களாக யானை அப்பகுதியில் தென் படவில்லை.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மோத்தங்கல்புதூர், மணல்காடு, அய்யன்தோட்டம் ஆகிய வனத்துறை ஒட்டிய விவசாய தோட்டப் பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றி திரிகிறது.
இரவில் மட்டுமின்றி, பகல் நேரத்திலும் வெளியேறும் யானையால் விவசாயிகளும், மோத்தங்கபுதுார் மக்களும் அச்சத்தில் உள்ளனர். தோட்டப்பகுதிகளில் புகுந்த யானை வாழை, கரும்பு பயிர்களை நாசம் செய்தது. அங்கிருந்த வீட்டை ஒட்டி இருந்த வாழை மரங்களை முறித்து தின்று விவசாயிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்துக்கு சென்ற சென்னம்பட்டி வனத்துறையினர், யானையை காட்டுக்குள் துரத்தினர். ஆனால் அந்த யானை மீண்டும் மீண்டும் அடுத்த அடுத்த நாட்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், ஒற்றை யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனச்சரகர் ராஜா தலைமையில் வனப்பணியாளர்கள் டிரோன் கேமாரவை பயன்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக யானை அப்பகுதியில் தென் படவில்லை. இதுகுறித்து வனச்சரகர் ராஜா கூறியதாவது;- எண்ணமங்கலம், கோவிலூர், மணல்காடு, மோத்தங்கபுதுார் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்துக்குள் ஒற்றை யானை நடமாட்டம் இருக்கிறது. பலமுறை விரட்டியும் தொடர்ந்து யானை வெளியேறுவதை தடுக்க முடிய வில்லை.
டிரோன் கேமராவை பயன்படுத்தி யானை நடமாட்டத்தை கண்டறிந்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானையை விரட்டும் வரை, இரவு நேரத்தில் வனப்பகுதி ஒட்டிய இடங்களிலும், பகலில் வனப் பகுதிகளிலும் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என சென்னம்பட்டி வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- கோவில் வளாகத்தை அந்த ஒற்றை யானை சுற்றி வந்தது.
- வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆசனூர், தாளவாடி, பர்கூர் வனச்சரக்கத்தில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு தண்ணீரை தேடி சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து வாகனங்களை வழிமறிப்பதும், கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனத்துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று உணவுக்காக பண்ணாரி அம்மன் கோவில் வளாகம் அருகே அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தது.
நீண்ட நேரமாக கோவில் வளாகத்தை அந்த ஒற்றை யானை சுற்றி வந்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து அந்த ஒற்றை யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
இதனால் பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் புகுவது தொடர்கதை ஆகி வருகிறது.
குறிப்பாக உணவு தண்ணீருக்காக யானைகள் வெளியே வருகின்றன. இதனால் வனப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றனர்.
- தின்னப்பட்டி பிரிவு சாலை பகுதியில் திடீரென வனப் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
- வனத்துறையினரும் பொது மக்களும் இணைந்து தீயை முழுவதுமாக கட்டுப் படுத்தினர்.
தருமபுரி:
தருமபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூக்கனூர் அருகே அரூர்-தருமபுரி பிரதான சாலையில் வனப்பகுதி அமைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மூக்கனூர் அருகே தின்னப்பட்டி பிரிவு சாலை பகுதியில் திடீரென வனப் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அவ்வழியாக சென்ற பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த பச்சிலைகளை வெட்டி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் தருமபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்குள்ளாக வனத்துறையினரும் பொது மக்களும் இணைந்து தீயை முழுவதுமாக கட்டுப் படுத்தினர். இதனால் வனப்பகுதியில் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து அங்கிருந்த ஒருவர் தீயணைப்பு துறையினரிடம் ஒன்றரை மணி நேரமாக தீ எரிந்து கொண்டிருக்கிறது.
தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்தால் வர முடியாது என தெரிவிக்கிறார்கள் என கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
அப்பொழுது தீயணைப்பு வீரரும், அவரிடத்தில் வர முடியாது என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீப்பற்றியது.
- 2-வது நாளாக எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
செங்கோட்டை:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடுமையான வெயிலின் தாக்கம் காணப்பட்டு வரும் சூழலில் அங்குள்ள அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அவ்வப்போது தீப்பிடித்து எரிந்து வருகிறது.
2-வது நாளாக தீ
கடந்த 3 நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் மேக்கரையை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தீப்பற்றி 100 ஏக்கருக்கு மேலான வனப்பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியது.
இந்தநிலையில் நேற்று மீண்டும் மேக்கரையை ஒட்டி உள்ள எருமை சாவடி பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தற்போது தீ தொடர்ந்து பரவி வருகிறது. காற்றின் வேகம் காரணமாக 2-வது நாளாக எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள வனவிலங்குகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. அவை ஊருக்குள் புகாத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், வன உயிரினங்கள் எதுவும் தீ விபத்தில் சிக்காமல் இருக்கவும் அவர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மழை இன்றி வனப்பகுதிகள் காய்ந்த நிலையில் காணப்படுவதால் அங்கு செல்வோர் தீ எளிமையாக பற்றும் வகையில் எந்த பொருளையும் எடுத்து ெசல்ல வேண்டாம் எனவும், வனப்பகுதிகளில் பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் உள்பட 22 பேர் கொண்ட குழுவினர் காட்டுத் தீயணைக்க வனப்பகுதிக்கு சென்றனர்.
- உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருபவர் ஆனந்த் (28). சம்பவத்தன்று இரவு ஆசனூர் வனசரகத்திற்கு உட்பட்ட மாவல்லரம் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் உள்பட 22 பேர் கொண்ட குழுவினர் காட்டுத் தீயணைக்க வனப்பகுதிக்கு சென்றனர். தீயை அணைக்கும் கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் கால் தவறி கீழே பாறையில் விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடன் இருந்த மற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் உடனடியாக ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்ததால் ஆனந்த் சுயநினைவை இழந்தார். தொடர்ந்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- அமராவதி வனச்சரகங்களில் 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.
- கிலோ 150 ரூபாய்க்கு மலையடிவார சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
உடுமலை :
ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ளவர்கள் வனத்திலுள்ள சிறு பொருட்களை சேகரித்து நகரப்பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.தற்போது வடுமாங்காய் எனப்படும் சிறிய அளவிலான மாங்காய்கள் வரத்து துவங்கி உள்ளது. அவற்றை சேகரித்து வந்து கிலோ 150 ரூபாய்க்கு மலையடிவார சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- இயற்கையாகவே இம்மரங்கள் 70 மீ., வரை மிக உயரமாக வளரும். மார்ச் முதல் மே வரை சிறிய அளவிலான வடுமாங்காய்கள் காய்க்கும்.குரங்கு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகள் விரும்பி உண்ணும். ஊறுகாய் மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்கு வடுமாங்காய் அதிகம் பயன்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இந்த குரங்குகள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளை துரத்துவதும், கடை தெருவில் தின்பண்டங்கள் வாங்கிச் செல்லும் சிறார்களை விரட்டு வதுமாக அட்டகாசம் செய்து வந்தது.
- பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் குரங்கு பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஏராளமான குரங்குகள் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன,
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இந்த குரங்குகள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளை துரத்துவதும், கடை தெருவில் தின்பண்டங்கள் வாங்கிச் செல்லும் சிறார்களை விரட்டு வதுமாக அட்டகாசம் செய்து வந்தது.
அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு உத்தரவின் பேரில் செயல் அலுவலர் அருள்குமார் முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் குரங்கு பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஏராளமான குரங்குகள் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன. அரகண்டநல்லூர் பேரூ ராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்களும் வியாபாரிகளும் குறிப்பாக பெண்களும் பள்ளி செல்லும் குழந்தைகளும் பாராட்டு தெரிவித்தனர்.
- 2-வது நாளாக இன்றும் கணக்கெடுப்பு பணி தீவிரம்
- 3 நாட்களுக்கு பிறகு தான் எத்தனை யானைகள் நடமாட்டம் உள்ளது என்ற விவரம் தெரியவரும்
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் புலி, யானை, சிறுத்தை, மான் உட்பட ஏராளமான விலங்கு கள் உள்ளன.
கடந்த 2017-ம் ஆண்டு யானைகள் கணக்கெடுக்கப் பட்டது. அப்போது 20 யானைகள் வசித்து வந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஒருங்கிணைந்து யானைகள் கணக்கெடுக்கும் பணியை நேற்று தொடங்கியது.
குமரி மாவட்டத்திலும் வன அதிகாரி இளையராஜா மேற்பார்வையில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 30 குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 3 வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இடம் பெற்றுள்ளனர். கோதையார், மாறாமலை, சாமிகுச்சி, ரோஸ்மியாபுரம், தாடகைமலை, அசம்பு, களியல் போன்ற பகுதிகளில் இந்த குழுவினர் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது களியல் பகுதியில் 3 யானைகள் சுற்றி திரிந்தது தெரியவந்தது. மேலும் ஒரு சில பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் இருந்தது. காலை தொடங்கிய கணக்கெடுக்கும் பணி மாலை வரை நடைபெற்றது. கணக்கெடுப்பு குழுவினர் இரவு காட்டுப்பகுதியிலேயே கொட்டகை அமைத்து தாங்கினார்கள்.
இன்று 2-வது நாளாக இந்த குழுவினர் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். யானைகள் சாணத்தை வைத்து கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. நாளை காடுகளில் உள்ள நீர்நிலை பகுதிகளில் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். யானைகள் நீர்நிலைகளில் தண்ணீர் குடிக்க வருவதை வைத்து கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், குமரி மாவட்டத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஒரு சில இடங்களில் யானைகள் தென்பட்டதாக கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கணக்கெடுக்க சென்ற ஒரு சிலரை தொடர்பு கொள்ள முடியாததால் முதல் நாளில் எத்தனை யானைகள் தென்பட்டது என்ற விவரம் தெரிய வில்லை. இன்றும் அந்த குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் மேற்கொண்டு வருகிறார்கள். நாளை நீர் நிலைகளுக்கு வரும் யானைகளை கணக்கெடுக்க உள்ளனர். 3 நாட்களுக்கு பிறகு தான் குமரி மாவட்டத்தில் எத்தனை யானைகள் நடமாட்டம் உள்ளது என்ற விவரம் தெரியவரும் என்றார்.






