search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியல் வனப்பகுதியில் 3 யானைகள் தென்பட்டது
    X

    களியல் வனப்பகுதியில் 3 யானைகள் தென்பட்டது

    • 2-வது நாளாக இன்றும் கணக்கெடுப்பு பணி தீவிரம்
    • 3 நாட்களுக்கு பிறகு தான் எத்தனை யானைகள் நடமாட்டம் உள்ளது என்ற விவரம் தெரியவரும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் புலி, யானை, சிறுத்தை, மான் உட்பட ஏராளமான விலங்கு கள் உள்ளன.

    கடந்த 2017-ம் ஆண்டு யானைகள் கணக்கெடுக்கப் பட்டது. அப்போது 20 யானைகள் வசித்து வந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஒருங்கிணைந்து யானைகள் கணக்கெடுக்கும் பணியை நேற்று தொடங்கியது.

    குமரி மாவட்டத்திலும் வன அதிகாரி இளையராஜா மேற்பார்வையில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 30 குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 3 வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இடம் பெற்றுள்ளனர். கோதையார், மாறாமலை, சாமிகுச்சி, ரோஸ்மியாபுரம், தாடகைமலை, அசம்பு, களியல் போன்ற பகுதிகளில் இந்த குழுவினர் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர்.

    அப்போது களியல் பகுதியில் 3 யானைகள் சுற்றி திரிந்தது தெரியவந்தது. மேலும் ஒரு சில பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் இருந்தது. காலை தொடங்கிய கணக்கெடுக்கும் பணி மாலை வரை நடைபெற்றது. கணக்கெடுப்பு குழுவினர் இரவு காட்டுப்பகுதியிலேயே கொட்டகை அமைத்து தாங்கினார்கள்.

    இன்று 2-வது நாளாக இந்த குழுவினர் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். யானைகள் சாணத்தை வைத்து கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. நாளை காடுகளில் உள்ள நீர்நிலை பகுதிகளில் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். யானைகள் நீர்நிலைகளில் தண்ணீர் குடிக்க வருவதை வைத்து கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

    இது குறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், குமரி மாவட்டத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஒரு சில இடங்களில் யானைகள் தென்பட்டதாக கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    கணக்கெடுக்க சென்ற ஒரு சிலரை தொடர்பு கொள்ள முடியாததால் முதல் நாளில் எத்தனை யானைகள் தென்பட்டது என்ற விவரம் தெரிய வில்லை. இன்றும் அந்த குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் மேற்கொண்டு வருகிறார்கள். நாளை நீர் நிலைகளுக்கு வரும் யானைகளை கணக்கெடுக்க உள்ளனர். 3 நாட்களுக்கு பிறகு தான் குமரி மாவட்டத்தில் எத்தனை யானைகள் நடமாட்டம் உள்ளது என்ற விவரம் தெரியவரும் என்றார்.

    Next Story
    ×