search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wilderness"

    • வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.
    • ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை அதிகம் நம்பி உள்ளது.

    தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கான உணவு தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்துவிட்டன.

    அமராவதி அணையில் நீர்இருப்பு உள்ளதால் அணைப் பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அவற்றுக்கான உணவு தண்ணீர் தேவை தற்காலிகமாக பூர்த்தி அடைந்து உள்ளது.

    மேலும் யானைகள் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். இதன் காரணமாக யானைகள் மிரண்டு வாகனஓட்டிகளை துரத்திச் சென்ற சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.

    இதனால் உடுமலை மூணாறு-சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் அங்கிருந்து செல்லும் வரை ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீதுகற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை மூணாறு- சாலை மலைஅடிவாரப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.
    • யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    தருமபுரி:

    ஒற்றை ஆண் யானை ஒன்று, கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல் வனப்பகுதியை விட்டு வெளியேறியது. இந்த யானை கிராமப் பகுதிகளில் சுற்றி திரிந்து, கடந்த வாரம் தருமபுரி நகர் பகுதி வரை சென்றது. மேலும் தருமபுரியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனே தருமபுரிக்கு வந்து அட்டகாசம் செய்து வந்த ஒற்றை யானையை தொப்பூர் வனப் பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த ஒற்றை யானை மீண்டும் பொம்மிடி கிராமப் பகுதியில் நுழைந்தது.

    குறிப்பாக முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, காளிக்கரம்பு வழியாக சுற்றிய யானையை கம்பைநல்லூர் வழியாக கொண்டு சென்று பாலக்கோடு வனப்பகுதியில் விட வன துறை தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த யானை சில்லாரஅள்ளியில் இருந்து கொடகாரஅள்ளி பகுதியில் மைலாப்பூர் கிராமத்தில் தஞ்சம் புகுந்தது.

    வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வத்தல் மலை அடிவாரபகுதியில் நேற்று இரவு நேரத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டிலிருந்து வெளியேறிய யானை விவசாய தோட்டங்களை சேதப்படுத்தி உணவை உட்கொண்டது. அப்போது யானைக்கு வனத்துறையினர் இரண்டு மயக்க ஊசி செலுத்தினர்.

    உடனடியாக கிரேன் மூலம் யானையை மீட்டு ஒகேனக்கல் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப் பகுதிகளுக்குள் விடுவதற்காக யானையை வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர்.

    கடந்த 3 வாரமாக மக்களை அச்சுறுத்தி வந்த யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    • கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
    • முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீா் வசதி பெற்று வருகின்றன.

    குடிநீா் மற்றும் பாசன தேவைகளுக்காக அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் அமராவதி அணையில் இருந்து வெளியேறிய சில முதலைகள் கரையோரத்தில் நடமாடி வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். மேலும் உடுமலையை அடுத்துள்ள கொழுமம் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடி அருகே பெரிய முதலை சாலையில் ஊா்ந்து சென்றுள்ளது. இதனைப்பார்த்த இளைஞர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    அதனைப்பார்த்த கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

    இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:- அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. வழக்கமாக பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடும்போது அணையில் உள்ள முதலை கள் பிரதான ஷட்டா் வழியாக அமராவதி ஆற்றில் சென்று விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. பொது மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம்.

    முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    • குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
    • சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்றுவிட்டனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அரோபாளையம் கிராமத்தில் இன்று காலை 6 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு குட்டி யானை அங்கு உலா வந்தது.

    இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக ஆசனூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். குட்டி யானை அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்று விட்டனர். குட்டி யானை வனப்பகுதியில் இருந்து எப்படி வெளியே வந்தது என தெரியவில்லை.

    இந்நிலையில் அந்த குட்டி யானை கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் வனப்பகுதியில் விடப்பட்ட குட்டி யானை என ஒரு தகவல் பரவியது. ஆனால் இது குறித்து வனத்துறையினர் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

    • கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது.
    • சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கரடி, சிறுத்தை, காட்டுமாடு, யானை போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பெரும்பாலான விலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் மலைஅடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மனிதன்-விலங்கு மோதல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு பூட்டியிருந்த கேட்டை தாண்டி வீட்டுக்குள் புகுந்தது. தொடர்ந்து மாடிப்படிக்கட்டில் ஏறிய கரடி உணவு தேடி சுற்றி திரிந்தது. அங்கு சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காததால் அந்த கரடி மீண்டும் வந்த வழியாக திரும்பி காட்டுக்குள் சென்றுவிட்டது. இது அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    கெரடா குடியிருப்புக்குள் புகுந்த கரடி பூட்டிய வீட்டின் கேட்டை தாண்டி மாடிப்படிக்கு சென்று உணவு தேடிய சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஊருக்குள் நுழையும் கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிக்க வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது கால் தடயங்களை வைத்து அது சிறுத்தை உடையது என வனத்துறையினர் உறுதி செய்தனர்.
    • சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு எருமை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் பவானி சாகர் வனப்பகுதியில் இருந்து கடந்த 15-ந் தேதி வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ராஜன் நகர் அருகே காந்தி நகர் கிராமத்தில் சுப்புராஜ் என்பவர் தோட்டத்தில் புகுந்து 3 ஆடுகளை கடித்துக் கொன்றது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது கால் தடயங்களை வைத்து அது சிறுத்தை உடையது என வனத்துறையினர் உறுதி செய்தனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ராஜன் நகரில் வெள்ளியங்கிரி என்பவர் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை 4 ஆடுகளை அடித்துக் கொன்றது. கிட்டத்தட்ட 2 நாட்களில் 7 ஆடுகளை சிறுத்தை கொன்றுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை யினர் கூறும்போது, சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் முதற்கட்டமாக தானியங்கி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. கேமிரா பதிவுகளை கண்காணித்த பின் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம். அடர்ந்த வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்க்க அழைத்துச் செல்ல வேண்டாம் என்ன வலியுறுத்தி உள்ளனர். மேலும் சிறுத்தை உறுமல் சத்தம், கால்நடைகள் அலறல் சத்தம் கேட்டால் உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

    • சீகூர் வனப்பகுதியில் 2 குட்டிகள் உடல்நலக்குறைவால் இறந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
    • ஊட்டி எமரால்டு பகுதியில் 2 புலிகளை விஷம் வைத்து கொன்றதாக ஒருவரை வனத்துறையினர் கைது செய்து உள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 புலிகள் திடீரென பலியாகின. அவை எப்படி இறந்தன என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இந்த நிலையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி ரமேஷ், இந்திய வனவிலங்கு நிறுவன மண்டல துணை இயக்குநர் கிபாசங்கர், சென்னை வனவிலங்கு ஆய்வர் டோக்கி ஆதில் லையா அடங்கிய குழுவினர், கடந்த மாதம் 25-ந்தேதி நீலகிரி மாவட்டத்துக்கு வந்தனர்.

    அப்போது அவர்கள் புலிகள் இறந்து கிடந்த பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரடியாக களஆய்வு நடத்தினர். பின்னர் இதுதொடர்பான இறுதிகட்ட அறிக்கை, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தலைமை வனஉயிரின காப்பாளர் சீனிவாராவ்ரெட்டி தற்போது அந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 2006-ம்ஆண்டு 56 புலிகள் மட்டுமே இருந்தன. ஆனால் இங்கு தற்போது 114 புலிகள் உள்ளன. முதுமலை புலிகள் அடர்ந்த பகுதியாக உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் விலங்குகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

    பொதுவாக வயது முதிர்ந்த பெண் புலிகள் ஒரு பிரசவத்தில் 5 குட்டிகள் வரை ஈனும்.

    இதில் 50 சதவீதம் குட்டிகள் நோய், பட்டினி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பலியாக வாய்ப்பு உள்ளது. மேலும் இளைய வயது பிரசவம் காரணமாகவும் பிறந்த குட்டிகள் பலி யாகக்கூடும். சீகூர் வனப்பகுதியில் 2 குட்டிகள் உடல்நலக்குறைவால் இறந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

    சின்னக்குன்னூர் பகுதியில் இறந்த 4 குட்டிகள் 2 மாதங்களே ஆனவை. அவைகளுக்கு உணவு தேடி தாய்ப்புலி வெகுதூரம் சென்றிருக்கலாம். இதனால் தான் அந்த புலிகள் பலியாக நேர்ந்து உள்ளது.

    மாமிச உண்ணிகளுக்கு இடையே உட்பூசல் என்பது ஒரு பொதுவான நிகழ்வு. இதன்காரணமாகவே நடுவட்டம், கார்குடி ஆகிய பகுதிகளில் புலிகள் பலியாகி உள்ளன. ஊட்டி எமரால்டு பகுதியில் 2 புலிகளை விஷம் வைத்து கொன்றதாக ஒருவரை வனத்துறையினர் கைது செய்து உள்ளனர்.

    சின்னக்குன்னூர், சீகூர் ஆகிய வனப்பகுதிகளில் வனத்துறை சார்பில் முறையே 40, 16 இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    சின்னக்குன்னூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் சிக்கிய 15-ல் 4 பெண் புலிகள். சீகூர் பகுதியில் தென்பட்ட 5-ல் 4 பெண் புலிகள் ஆகும். சின்னக்குன்னூர் பகுதியில் இறந்த 4 குட்டிகளை ஈன்ற தாய்ப்புலி இரைதேடி அடர்ந்த காட்டுக்குள் வெகு தூரம் வரை சென்று இருக்கக்கூடும். அதனை தேடி கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறையினர் தொட ர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை இறந்து கிடப்பதை கண்டு பிடித்தனர்.
    • யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற் கூறு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட எக்கத்தூர் வனப்பகுதி கச்சப்பள்ளம் என்ற இடத்தில் வனக்காப்பாளர் அர்த்த நாரீஸ்வரன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அறிந்த வனத்துறை ஊழியர்கள் ஏதாவது வனவிலங்குகள் இறந்து கிடக்கிறதா என தேடி பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை இறந்து கிடப்பதை கண்டு பிடித்தனர்.

    இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பெயரில் கடம்பூர் வனச்சரக அலுவலர் (பொறுப்பு) மாரியப்பன், வன குழு மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில் யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற் கூறு ஆய்வு மேற்கொண்டார்.

    இதன் முடிவில் தான் யானை எவ்வாறு இறந்தது தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் உள்பட 22 பேர் கொண்ட குழுவினர் காட்டுத் தீயணைக்க வனப்பகுதிக்கு சென்றனர்.
    • உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருபவர் ஆனந்த் (28). சம்பவத்தன்று இரவு ஆசனூர் வனசரகத்திற்கு உட்பட்ட மாவல்லரம் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் உள்பட 22 பேர் கொண்ட குழுவினர் காட்டுத் தீயணைக்க வனப்பகுதிக்கு சென்றனர். தீயை அணைக்கும் கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் கால் தவறி கீழே பாறையில் விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடன் இருந்த மற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் உடனடியாக ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்ததால் ஆனந்த் சுயநினைவை இழந்தார். தொடர்ந்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-ல் ஒரு பங்கு வனப்பகுதி உள்ளன. குறிப்பாக ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைப்பகுதியையொட்டிய வனப்பகுதிகளும் கிருஷ்ணகிரி மாவட்டத்தையொட்டி அமைந்துள்ளன.

    இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் எதுவும் உள்ளதா? என நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் கிருஷ்ணகிரி, பர்கூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வனப்பகுதிகளில் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியையொட்டி உள்ள கிராமமக்களிடம் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாராவது நடமாடினால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். 
    ×