search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உடுமலை-மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு- வனத்துறையினர் எச்சரிக்கை
    X

    உடுமலை-மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு- வனத்துறையினர் எச்சரிக்கை

    • வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.
    • ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை அதிகம் நம்பி உள்ளது.

    தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கான உணவு தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்துவிட்டன.

    அமராவதி அணையில் நீர்இருப்பு உள்ளதால் அணைப் பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அவற்றுக்கான உணவு தண்ணீர் தேவை தற்காலிகமாக பூர்த்தி அடைந்து உள்ளது.

    மேலும் யானைகள் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். இதன் காரணமாக யானைகள் மிரண்டு வாகனஓட்டிகளை துரத்திச் சென்ற சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.

    இதனால் உடுமலை மூணாறு-சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் அங்கிருந்து செல்லும் வரை ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீதுகற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை மூணாறு- சாலை மலைஅடிவாரப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×