search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forest department"

    • கர்நாடகா வனத்துறையில் 35 முதல் 40 கும்கி யானைகள் உள்ளன.
    • தசரா விழாவிற்கு பிறகு 4 கும்கி யானைகள் ஆந்திர மாநில வனத்துறைக்கு வழங்கப்படும் என்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஆந்திரா, கர்நாடக மாநில வனத்துறை சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

    கர்நாடகா வனத்துறை அமைச்சர் ஈஸ்வர.பி.காந்த்தே, ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    அப்போது கர்நாடக மாநில வனத்துறை அமைச்சர் கூறுகையில்:-

    கர்நாடகா வனத்துறையில் 35 முதல் 40 கும்கி யானைகள் உள்ளன. இதில் 18 யானைகள் தசரா விழாவில் பங்கேற்க உள்ளது. தசரா விழாவிற்கு பிறகு 4 கும்கி யானைகள் ஆந்திர மாநில வனத்துறைக்கு வழங்கப்படும் என்றார்.

    • சிறுத்தை நடமாட்டத்தால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
    • கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், கூண்டு வைத்து பிடிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் ஓலக்கடை எதிரே தனியாருக்கு சொந்தமான கியாஸ் பங்க் உள்ளது. இது அடர்ந்த காட்டுப்பகுதியாகும். அங்கு தாராபுரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் வந்துள்ளார்.

    அப்போது காட்டுப்பகுதியில் சிறுத்தை ஒன்று வேகமாக பாய்ந்து சென்றுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவக்குமார் உடனே தாராபுரம் போலீசாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு காங்கயம் வனச்சரக அலுவலர் மவுனிகா தலைமையில் வனவர் ஷேக்உமர், வனக்காவலர் குணசேகரன், வனக்காப்பாளர் பூரணி ஆகியோர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறுத்தை வந்ததற்கான தடயங்கள் ஏதாவது உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தனர்.

    மேலும் இந்தப் பகுதியின் அருகே ரங்கம்பாளையம், கருவேலம்பள்ளம், ஆச்சியூர், மங்களம் பாளையம் பிரிவு, கோனேரிப்பட்டி, துலுக்கனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அதிக அளவில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. சிறுத்தை நடமாட்டத்தால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள்-பொது மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

    ஏற்கனவே ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கிய சிறுத்தை இதுவரை பிடிபடாத நிலையில் அங்குள்ள சிறுத்தை தான் இங்கு வந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே தாராபுரத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், கூண்டு வைத்து பிடிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

    • கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை ஒன்று தென்பட்டது.
    • வனத்துறையினர் குட்டைக்குள் இறங்கி சகதிக்குள் கிடந்த முதலையை லாவகமாக பிடித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அன்னூர் அடுத்த பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது பட்டக்காரனூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை ஒன்று தென்பட்டது.

    இதனை அந்த பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஊர் மக்கள் அளித்த தகவலின் பேரில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் குட்டையில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி விட்டு ஆழத்தில் பதுங்கிய முதலையை பிடிப்பதென தீர்மானிக்கப்பட்டது. அதன்ஒருபகுதியாக குட்டையில் உள்ள தண்ணீரை 2 மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி தொடங்கியது.

    சுமார் 30 மணிநேரத்துக்கு பிறகு குட்டையில் இருந்த தண்ணீர் முழுமையாக வற்ற தொடங்கியது. அப்போது வற்றிய குட்டையின் ஆழத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் முதலை பதுங்கி கிடப்பது தெரியவந்தது.


    தொடர்ந்து வனத்துறையினர் குட்டைக்குள் இறங்கி சகதிக்குள் கிடந்த முதலையை லாவகமாக பிடித்தனர். பின்னர் தப்பிவிடாத அளவுக்கு கயிறுகள் மூலம் பிணைக்கப்பட்டன. தொடர்ந்து குட்டைக்குள் கிடந்த முதலையை தோளில் தூக்கியபடி வனத்துறையினர் கரைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் அந்த முதலை பவானிசாகர் அணையில் ஆழமான பகுதியில் கொண்டு போய் விடப்பட்டது. முதலை உயிருடன் பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். முதலையை பிடிக்க போராடிய வனத்துறையினருக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில் இங்கு 2 முதலைகள் இருப்பதாக தகவலின்பேரில் தேடுதல் வேட்டை நடத்தினோம். ஆனால் அங்கு ஒரு முதலை மட்டுமே பிடிபட்டது. அந்த முதலை அணைப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது என்றனர்.

    • கண்டெய்னர் விடுதி உருவாகி வரும் நிலையில், தெலுங்கானாவில் முதல் கண்டெய்னர் பள்ளிக்கூடம் உருவாகியுள்ளது.
    • மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து அதே இடத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கண்டெய்னர் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.

    தற்போது பல இடங்களிலும் தற்காலிக கண்டெய்னர் கட்டிடங்கள் பெருகி வருகிறது. விலை குறைவாகவும் எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடதிக்ரு கொண்டு செல்ல கூடியதாகவும் இருப்பதால் பலர் இந்த கண்டெய்னர் கட்டிடங்களை உருவாக்கி வருகின்றனர்.

    கண்டெய்னர் விடுதி, உணவகங்கள் உருவாகி வரும் நிலையில், தெலுங்கானாவில் முதல் கண்டெய்னர் பள்ளிக்கூடம் உருவாகியுள்ளது.

    முலுகு மாவட்டத்தில் உள்ள கோத்திகோயகும்பு வனப்பகுதியில் பள்ளிக் கட்டடம் கட்ட வனத்துறை அனுமதி அளிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து அதே இடத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கண்டெய்னர் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகளாக அப்பகுதியில் குடிசை பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். அப்பகுதியில் மழை பெய்தால் குழந்தைகள் படிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் அப்பகுதியில் புதிய பள்ளி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    புதிய பள்ளிக் கட்டிடம் கட்ட வனத்துறையினர் அனுமதி கிடைக்காததால் புதுமையாக யோசித்து கண்டெய்னர் பள்ளிக்கூடத்தை மாவட்ட ஆட்சியர் உருவாக்கி கொடுத்துள்ளார். இந்த பள்ளிக்கூடம் அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே முலுகு மாவட்டத்தில் போச்சாபூர் கிராமத்தில் மருத்துவமனை வேண்டும் என்ற பழங்குடி மக்களின் கோரிக்கைக்கு இணங்க கண்டெய்னர் மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் கட்டிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பழங்குடி மக்களின் துன்பங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த மாவட்ட ஆட்சியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையோரம் முகாமிட்டிருந்தன.
    • வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவதும், வாகனங்களை வழி மறித்து உணவு இருக்கிறதா? என்று தேடுவதும் தொடர்கதை ஆகிவருகிறது.

    இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தனது குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையோரம் முகாமிட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் சிறிது தொலைவிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர். சிலர் தங்களது செல்போன்களில் யானை கூட்டத்தை போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

    சிறிது நேரம் சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டுயானை கூட்டம் சாலையைக் கடந்து பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

    எனினும் அதே பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும், வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • 2000 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.
    • வனத்துறையினர் வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் நடத்திய சோதனையின் போது காதர் மொய்தீன் என்பவர் சிக்கினார். இவர் மலேசியாவில் இருந்து 2000 நட்சத்திர ஆமைகளை கொண்டு வந்த போது பிடிபட்டார். அவற்றை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் புழல் லட்சுமி புரம் பொருமாள் கோவில் 2-வது தெருவில் ரவிக்குமார் என்பவர் கடல்வாழ் உயிரினம் மற்றும் மலைப்பாம்பு ஆகியவற்றை வைத்திருப்பதாக தகவல் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் வனத்துறையினர் நேற்று அந்த வீட்டிற்கு சென்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்தது. அதனை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஒரு மலைப்பாம்பும், 150 நட்சத்திர ஆமைகளும் அங்கு இருந்தன.

    மேலும் சில சாதாரண ஆமைகளும் இருந்தன. அவற்றை கைப்பற்றிய வனத்துறையினர் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். தலைமறைவான ரவிக்குமாரை தேடி வருகிறார்கள்.

    • கிராம மக்கள் கள்ளத்துப்பாக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.
    • வனத்துறையினர் துப்பாக்கிகளை ஒப்படைத்த பொதுமக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம், ஏரியூர், உள்ளிட்ட பகுதிகள் வனத்துறையையொட்டிய கிராமங்கள் அதிக அளவில் உள்ளதால் தங்கள் விளை நிலத்துக்குள் வன விலங்குகள் உள்ளே நுழையாமல் இருக்க ஆங்காங்கே கிராம மக்கள் கள்ளத்துப்பாக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அனுமதியின்றி கள்ளத்துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வனஅலுவலர் வனத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் பென்னாகரம், ஏரியூர் வன பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வன அலுவலர்கள் பொது மக்களிடம் சட்ட விரோதமாக உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதியப்படாது என தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பென்னாகரம் பகுதியில் உள்ள ஏரிமலை கிராமத்தில் சட்ட விரோதமாக உரிமம் இல்லாத வைத்திருந்த 12 நாட்டு துப்பாக்கிகளை கிராம மக்கள் தாமாக முன்வந்து வன துறையிடம் ஒப்படைத்தனர். அவற்றை கைப்பற்றி வனத்துறையினர் நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைத்த பொதுமக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • ஒற்றை காட்டு யானை ஒன்று அப்பகுதிக்குள் சுற்றி வருகிறது.
    • முருகன் கோவில் பகுதியில் மற்றொரு காட்டு யானை ஒன்று உலா வருகிறது.

    கோவை:

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அங்குள்ள வீட்டு சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக, ஒற்றை காட்டு யானை ஒன்று அப்பகுதிக்குள் சுற்றி வருகிறது.

    குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியும், விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்குள்ள பயிர்களையும் சேதப்படுத்தி அழித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஒற்றை யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார், 5 பேர் படுகாயம் அடைந்தனர். ஒற்றை யானையின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள முத்திப்பாளையம் கிராமத்திற்குள் ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. ஊருக்குள் நுழைந்த யானை வீதிகளில் உலா வருகிறது. ஊருக்குள் யானை உலவுவதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து ஊருக்குள் உலா வந்த காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அங்கிருந்த யானை, மத்திப்பாளையம் அருகில் உள்ள அன்னை இந்திரா நகர் பகுதிக்குள் நுழைந்தது.

    மேலும், யானை, அங்குள்ள வீட்டிற்குள் வீட்டிற்குள் புகுந்தது. பின்னர் அங்கிருந்து வீட்டின் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு காட்டு யானை வெளியேறியது. தொடர்ந்து அதிகாலை வரை அந்த பகுதியிலேயே உலாவிய ஒற்றை யானை, செந்தில் என்பவரின் தோட்டத்தில் 1½ ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை பயிர்களை சேதப்படுத்தயது.

    இரவு முழுவதும் சுற்றி திரிந்த யானை இன்று அதிகாலை 5 மணிக்கு பிறகே வனத்திற்குள் சென்றது. இரவு முழுவதும் யானை ஊருக்குள் சுற்றி திரிந்ததால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர். அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாமல் முடங்கினர். இதற்கிடையே வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து கொண்டு யானை வெளியேறுவதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் மருதமலை முருகன் கோவில் பகுதியில் மற்றொரு காட்டு யானை ஒன்று உலா வருகிறது. அந்த கோவிலின் ராஜகோபுரத்திற்கு பின்புறம் யானை உலா வந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக் கூடிய கோவிலில், யானை நடமாவடுவது பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை அறிந்த மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கே விரைந்து சென்று யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன்.
    • வனத்தையும் பாதுகாக்க வேண்டும். வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும். மக்களும் முக்கியம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் வனத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வனத்துறையில் பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிய பணியாளர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. யானைகளை கண்காணிக்க, பாதுகாக்க வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட பலர் இருக்கிறார்கள். இதற்காக கூடுதல் நிதியும் முதல்-அமைச்சர் ஒதுக்கி இருக்கிறார்.

    இதற்காக தனியாக குழு அமைக்க முடியாது. காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன். அரசாணை விரைவில் வெளியிடப்படும். அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

    மாஞ்சோலை விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஆகையால் அதைப் பற்றி பேச முடியாது. வனத்துறை சார்பில் நீதிமன்றத்தில் நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    மணிமுத்தாறு பகுதியில் அமைய இருந்த பல்லுயிர் பூங்கா நெல்லை மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட விவகாரம் குறித்து வனத்துறை அதிகாரிகளுடன் பேசி இது தொடர்பாக பதில் அளிக்கிறேன். இடம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருக்கலாம். அதனால் மாற்றப்பட்டு இருக்கலாம்.

    மாஞ்சோலை சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசீலனை செய்து வருகிறோம்.

    வனத்தையும் பாதுகாக்க வேண்டும். வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும். மக்களும் முக்கியம். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    வனப்பகுதியில் குற்றங்களை குறைக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்டத்தை பிரித்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் தனி மாவட்ட வன அலுவலர் நியமிக்கும் பணி பரிசீலனையில் உள்ளது. விரைவில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வராதபடி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அதிலும் குறிப்பாக சமவெளி பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வரும் காட்டு யானைகள் வனத்தையொட்டிய அடிவாரப்பகுதியில் முகாமிட்டு அவ்வப்போது முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

    வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து காட்டு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினாலும் அவை மீண்டும் திரும்பி வந்துவிடுகிறது.

    இந்த நிலையில் கெத்தை பகுதியில் இருந்து காட்டு யானைகள் குன்னூர் அடுத்த கிரேக்மோர் எஸ்டேட் பகுதிக்கு வந்தன.

    பின்னர் அவை அங்குள்ள ரேசன் கடையை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடியது. தொடர்ந்து பக்கத்திலுள்ள மளிகை கடையையும் உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது.

    இதனையடுத்து சுமார் ஒரு கி.மீ.. தொலைவுக்கு நடந்துசென்ற காட்டு யானைகள் கொலகம்பை பகுதியில் உள்ள ரேசன் கடையை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடியது. பின்னர் அங்கு இருந்த ஒரு மூட்டை அரிசியையும் தூக்கிக்கொண்டு சென்றது. தொடர்ந்து பஜார் பகுதியில் 2 மளிகை கடைகளை சேதப்படுத்தி காய்கறிகளை ருசித்தன.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த யானைகள் இன்று காலை கம்மந்து வனப்பகுதியில் முகாமிட்டு நிற்பது தெரியவந்தது.

    தொடர்ந்து வனச்சரகர்கள் ரவீந்திரநாத் (குன்னூர்), சீனிவாசன் (குந்தா) ஆகியோர் மேற்பார்வையில் ஊழியர்கள் தீப்பந்தங்களை ஏந்தி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டினர்.

    காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வராதபடி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    காட்டு யானைகளின் அட்டகாசத்தால் தோட்டத் தொழிலாளர்களும் பொதுமக்களும் பீதி அடைந்ததுடன் தூக்கம் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் வனத்துறையினருடன் இணைந்து காட்டு யானைகளை விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • 2 டிரோன்களை அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் ரேணுராஜ் ஒப்படைத்தார்.

     கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பொதுமக்கள் காட்டு விலங்குகளால் தாக்கப்படுவதை தடுக்கும் விதமாக வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    "வயநாடு முன்முயற்சி" என்ற திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 2 டிரோன்களை வனத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் ரேணுராஜ் ஒப்படைத்தார். அப்போது அவர் புதிய டிரோன்களை பறக்கவிட்டார்.

    • சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
    • சுற்றுலா வாகனங்களில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப், கவியருவி, சின்னகல்லார் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

    அப்போது அந்த வாகனங்கள் ஆழியார் சோதனைச்சாவடி மற்றும் டாப்சிலிப் வழித்தடத்தில் உள்ள சேத்துமடை சோதனைச்சாவடி ஆகிய பகுதிகளில் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

    இதற்கிடையே சுற்றுலாப் பயணிகள் போல ஒருசிலர் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களை சட்டத்துக்கு புறம்பாக வாகனங்களில் கொண்டு செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின்பேரில் வனச்சரகர் ஞானமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று ஆழியார் சோதனைச் சாவடியை கடந்து கவியருவி, வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் வனத்துறையின் பைரவா மோப்பநாய் மூலம் சுற்றுலா வாகனங்களில் ஏதேனும் போதைப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆழியார் சோதனைச்சாவடி வழியாக கவியருவி, வால்பாறை மட்டுமின்றி அட்டக்கட்டி, சின்னகல்லார், சோலையார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். எனவே இந்த வழியாக செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே போதைப்பொருட்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான பொருட்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் ஆழியாறுக்கு வரும் சுற்றுலா வாகனங்களில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    மேலும் வனப் பகுதிகளுக்குள் எவரேனும் அத்துமீறி செல்கின்றனரா என்பதையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.

    ×