என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை"

    • யானைபின் தொடர்ந்து துரத்தி, ராஜேசை தாக்கியது.
    • பொதுமக்கள், ராக்வுட் தேயிலை தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை பகுதியில் ராக்வுட் தேயிலைத் தோட்டம் அருகே ஒரு ஆண் யானை கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்தது.

    கடந்த 30-ந் தேதி இரவு, அங்குள்ள எஸ்டேட் தொழிலாளி ராஜேஷ் (48) என்பவர் தனது மனைவி கங்காவுடன் நெலாக்கோட்டை பஜாரில் பூஜை சாமான்கள் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினார்.

    வீட்டிற்கு அருகே வந்தபோது, ரோட்டில் யானை நின்று கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், அவரது மனைவி, மற்றும் ஆட்டோ டிரைவர் ரமேஷ் ஆகியோர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடினர். அப்போது யானைபின் தொடர்ந்து துரத்தி, ராஜேசை தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யானை ஆட்டோவையும் சேதப்படுத்தியது.

    வனத்துறையினர் ராஜேஷ் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, பொதுமக்கள் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டி.எஸ்.பி வசந்தகுமார் மற்றும் வனத்துறை அதகாரிகள் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

    சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நேற்று காலை மீண்டும் பொதுமக்கள், ராக்வுட் தேயிலை தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உயிரிழந்தவரின் மனைவிக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும், மனிதர்களை தாக்கும் யானையை பிடிக்க வேண்டும், கூடுதல் வன ஊழியர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு எம்.எல்.ஏ ஜெயசீலன், ஆர்.டி.ஓ குணசேகரன், டி.எஸ்.பி. வசந்தகுமார், தாசில்தார் சிராஜுநிஷா ஆகியோர் நேரில் வந்து பேச்சு நடத்தினர். மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மதியம் போராட்டத்தை கைவிட்டனர். அப்பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • தாய் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
    • யானை அருகே சென்ற வனத்துறையினரை குட்டி யானை விரட்டியது.

    வடவள்ளி:

    கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை அடிவாரம் வனப்பகுதியில் குட்டி யானையுடன், பெண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது.

    திடீரென அந்த தாய் யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரே இடத்தில் யானை படுத்து கிடந்தது. அந்த யானையால் எழும்பக்கூட முடியவில்லை. குட்டி யானை அதன் அருகே பரிதவித்தபடி இருந்தது.

    இதனை பார்த்த பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் தாய் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் குட்டி யானை, தாய் யானை அருகே யாரையும் நெருங்க விடாமல் இருந்தது. யானை அருகே சென்ற வனத்துறையினரை குட்டி யானை விரட்டியது.

    மேலும் குட்டி யானை, தாய் யானையின் மேல் படுத்துக் கொண்டு தனது முழு பலத்தையும் காட்டி எழுப்ப முயன்றது. அம்மா எழுந்திரும்மா, எழுந்திரும்மா... என்பது போல் அந்த குட்டி யானையின் செயல்கள் இருந்தன. குட்டி யானையின் இந்த பாசப்போராட்டம் காண் போரை கண் கலங்கச் செய்தது.

    வனத்துறையினர் பல மணி நேரம் போராடி பார்த்தனர். ஆனால் குட்டி யானை அங்கிருந்து நகராமல் தனது தாயை காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தது. குட்டி யானை வழிவிட்டால் தான் தாய் யானைக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நிலை வந்தது. இதுபற்றி வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்களது உத்தரவின்பேரில் முதுமலையில் இருந்து கும்கி யானை ஒரியன் வரவழைக்கப்பட்டது. கும்கி யானையுடன் கால்நடை மருத்துவர் விஜயன் என்பவரும் வந்தார். கும்கி யானை உள்ளே புகுந்து குட்டி யானையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் குட்டி யானை அங்கிருந்து ஓடி வெகுதூரத்தில் போய் நின்றது.

    இதையடுத்து தாய் யானையை கிரேன் உதவியுடன் நிறுத்தினர். யானைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருந்து, மாத்திரைகள் உணவுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. அதனை உட்கொண்ட யானை உடல் நலம் தேறி வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    குட்டி யானை தொடர்ந்து தாய் யானையை கண்காணித்தபடியே சுற்றித்திரிகிறது. இந்த உருக்கமான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • யானை நெலாக்கோட்டையில் இருந்து வெளியேறி வந்த வழியாக காட்டுக்குள் திரும்பி சென்றது.
    • தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டை அமைந்து உள்ளது. இது மலைஅடிவாரத்தை ஒட்டிய கிராமம் ஆகும்.

    இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை இன்று அதிகாலை நெலாக்கோட்டை கிராமத்துக்கு வந்தது. பின்னர் அங்கு நின்ற வாகனங்களை தந்தத்தால் முட்டி சேதப்படுத்தியது. மேலும் நெலாக்கோட்டை வீடுகளின் பக்ககவாட்டு சுவர்களை இடித்து தள்ளியது.

    இதற்கிடையே தெருநாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு கிராம மக்கள் திடுக்கிட்டு விழித்து வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது தெருவில் காட்டு யானை சுற்றி திரிவது தெரிய வந்தது.

    இதனை பார்த்து கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வரவில்லை என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து நெலாக்கோட்டை கிராமத்தினர் திரண்டு வந்து பெரிதாக சத்தம் எழுப்பியும், தகரங்களை தட்டி ஓசை எழுப்பியும் காட்டு யானையை விரட்டினர். பின்னர் அந்த யானை நெலாக்கோட்டையில் இருந்து வெளியேறி வந்த வழியாக காட்டுக்குள் திரும்பி சென்றது.

    நெலாக்கோட்டை கிராமத்துக்குள் இன்று அதிகாலை புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு நின்ற வாகனங்களை தாக்கியதுடன் வீடுகளையும் சேதப்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நெலாக்கோட்டை-கூடலூர் போக்குவரத்து சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதன்காரணமாக நெலாக்கோட்டை-கூடலூர் ரோட்டில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து நெலாக்கோட்டை கிராமத்தினர் கூறுகையில், எங்கள் பகுதிக்கு காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. மேலும் அவை குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    தொடர்ந்து நாங்கள் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்க வலியுறுத்தி வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தோம். இருந்தபோதிலும் அவர்கள் நெலாக்கோட்டை பகுதியில் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர்.

    • அந்த வழியாக வந்த ஒற்றை காட்டு யானை கருப்பனை தாக்கி தூக்கி வீசியது.
    • உடனடியாக முள்ளங்காடு, நரசிபுரம் வனப்பணியாளர்கள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கோவை:

    கோவை ஆலந்துறை செம்மேடு அருகே உள்ள பட்டியார் கோவில்பதியை சேர்ந்தவர் கருப்பன் (வயது 73). கூலித் தொழிலாளி. இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கழிப்பறை செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை காட்டு யானை கருப்பனை தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்றனர். பின்னர் யானையை காட்டுக்குள் விரட்டினர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக முள்ளங்காடு, நரசிபுரம் வனப்பணியாளர்கள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்த கருப்பனை ஆம்புலன்சு மூலமாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வனச்சரக பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
    • யானை ஒன்று அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சிறிது நேரம் தும்பிக்கையால் கரும்பு உள்ளதா என பார்க்கிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக திம்பம், தாளவாடி, ஆசனூர் போன்ற வனச்சரக பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உலா வருவதும், அந்த வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து கரும்பு கட்டுகள் உள்ளதா என பார்ப்பதும் தொடர் கதையாகி வருகின்றது.

    இந்நிலையில் தமிழக-கர்நாடக எல்லை பகுதியான காரப்பள்ளம் சோதனை சாவடியில் அருகே நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சிறிது நேரம் தும்பிக்கையால் கரும்பு உள்ளதா என பார்க்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    காரப்பள்ளம் சோதனை சாவடியில் ஒற்றை யானை நடமாடி வருகிறது. கரும்புகளை தேடி அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×