search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • கொள்ளையனை தாக்கியதால் அவன் நிலை குலைந்தான்.

    திருவள்ளூர்:

    திருவாலங்காடு அடுத்த மணவூர் ரெயில் நிலையம் அருகே சங்கமித்ரா நகர் உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் மர்மநபர் ஒருவர் வீட்டின் கதவு பூட்டை உடைத்தார். சத்தம் கேட்டு எழுந்த அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து கொள்ளையனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவனது கை, காலைகட்டிப்போட்டு சரமாரியாக தாக்கி நையப்புடைத்தனர். சுமார் 2 மணிநேரத்திற்கும் மேல் கொள்ளையனை தாக்கியதால் அவன் நிலை குலைந்தான்.

    தகவல் அறிந்ததும் திருவாலங்காடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிராமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த கொள்ளையனை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அவர் புட்லூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (45) என்பது தெரிந்தது. அவர் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே கிராமமக்கள் தங்களது பகுதியில் தொடர்ந்து திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திருவலாங்காடு போலீஸ் நிலையம் அருகே திருவள்ளூர் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் திடீர் மறியிலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • தமிழகம் முழுவதும் இந்த பாதிப்புகள் உள்ளன.
    • தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் தற்போது வாந்தி, பேதியால் மருத்துவ மனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாலும், குடிநீர் சரியாக சுத்திகரிக்கப்படாமல் வழங்கப்படுவதாலும் வாந்தி, பேதி, காலரா போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

    தமிழகம் முழுவதும் இந்த பாதிப்புகள் உள்ளன. இவற்றை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் தற்போது 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, பேதியை தடுக்கும் வகையில் ஓ.ஆர்.எஸ். கரைசல், ஜிங்க் மாத்திரை ஆகியவை முகாம்களிலும், வீடுவீடாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாந்தி, பேதி ஏற்படாமல் தங்களை பாதுகாக்க பொதுமக்கள் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவமனைகள் வரை குடிநீரால் ஏற்படும் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவில் மருந்துகள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் வாந்தி, பேதி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    மேலும் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். அவ்வாறு அருந்தினால் குடிநீரால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை பெருமளவு குறைக்க முடியும். இதுகுறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • புதிய கிரிமினல் சட்டத்தில் பதியப்பட்ட முதல் வழக்கு அது கிடையாது
    • நேற்று ஒரே நாளில் டெல்லியில் மட்டுமே புதிய குற்றவியல் சட்டங்களின்கீழ் 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

    இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் நேற்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன.

     

    பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் கீழ் முதல் வழக்கு டெல்லியில் உள்ள தள்ளுவண்டிக் கடைக்காரர் மீது பாய்ந்தது. டெல்லி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சாலையில் தள்ளு வண்டியில் வைத்து தண்ணீர் பாட்டில்கள், பீடி,சிகரெட்டுகள் விற்றுக்கொண்டிருந்தார்.

    அவரது வண்டி சாலையில் செல்பவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி அவர் மீது தனது உடைமையைக் கொண்டு பொதுமக்களுக்கு பாதிப்பு விளைவித்த குற்றத்துக்காக புதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 285 இந்த கீழ் தள்ளுவண்டிக்கடைக்காரர் மீது தற்போது எப்.ஐ.ஆர் பதியப்பட்டது என்று தகவல் வெளியானது.

    இந்நிலையில் அவரை மன்னித்து அவர் மீதான வழக்கு நீக்கப்பட்டுள்ளது என்றும் எனவே புதிய கிரிமினல் சட்டத்தில் பதியப்பட்ட முதல் வழக்கு அது  கிடையாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

     

    மேலும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின்கீழ் முதல் வழக்கு மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் மோட்டார் சைக்கிள் திருட்டு குற்றத்துக்காக ஒருவர் மீது பதியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    பாரதிய நியாய சன்ஹிதா [பி.என்.எஸ்] சட்டத்தின்கீழ் முதல் வழக்காக ஹைதராபாத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம்   ஒ ஓட்டியதாக இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று ஒரே நாளில் டெல்லியில் மட்டுமே புதிய குற்றவியல் சட்டங்களின்கீழ் 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • தாராபுரம் போலீசார் சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சூரியநல்லூர் கிராமம் இடையன் கிணறு நால்ரோடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

    இதற்கு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை தாராபுரம் திருப்பூர் சாலையில் மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் சூரியநல்லூர் மற்றும் கொழுமங்குழி, இடையன் கிணறு பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்களை மறியலை கைவிடவில்லை. இதைய டுத்து டி.எஸ்.பி., கலையரசன், தாசில்தார் கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பொதுமக்கள் டாஸ்மாக் கடை அமைத்தால் விபத்துக்கள் அதிகம் நிகழும். எனவே கடை அமைக்கக்கூடாது என்றனர். தொடர்ந்து பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • தமிழகத்திலும் சுற்றுலா தலங்கள் உள்ள நிலையில் கேரளாவை பின்பற்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கதக்களி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. இப்பகுதியில் படகு சவாரி, பசுமைநடை, மலையேற்றம், வியூபாயிண்ட் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா பயணிகள் உள்ளன. கேரளாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இங்கு அவ்வப்போது களரி, கதக்களி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன் அருகிலேயே வாகம்மன், ராமக்கால்மெட்டு, செல்லாறு, கோவில் மெட்டு உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் உள்ளது. இங்கு வருடந்தோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் பசுமை பள்ளத்தாக்குகள் பரந்து விரிந்து கிடக்கிறது. இங்குள்ள தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள், தவழந்து செல்லும் மேகங்கள், ஆண்டு முழுவதும் நிலவும் இதமான சீதோசனம் போன்றவை சுற்றுலா பயணிகளை சுண்டி இழுத்து வருகின்றன.

    கேரளாவை பொறுத்தவரை அரசின் முக்கிய வருவாயாக ஆன்மீக தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் விளங்கி வருகின்றன. இதனால் சுற்றுலா வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை அந்த அரசு மேற்கொண்டு வருகிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதுடன் அவர்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி வருகிறது.

    இதன் ஒருபகுதியாக சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதால் இப்பகுதிகளில் யாசகம் எடுக்கத்தடை விதித்து இதற்காக போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில்,

    மூணாறு, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகின்றனர். இவர்களிடம் யாசகம் கேட்பதால் நம் நாட்டினர் மீது மாறுபட்ட கருத்தியல் சூழல் நிலவுகிறது. மேலும் யாசகர் போர்வையில் வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. எனவே யாசகம் எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களை முகாமிற்கு அனுப்பி வருகிறோம். எங்களுடன் இணைந்து வியாபாரிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளும் பணியாற்றி வருகிறோம்.

    இதனால் கேரளாவில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்களில் இதுபோன்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என்றார். தமிழகத்திலும் பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்கள் உள்ள நிலையில் கேரளாவை பின்பற்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இளம் வாலிபர்களும், பெண்களும் வெள்ளை எருமையுடன் செல்பி எடுத்து அதனை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
    • வெளிநாடுகளில் உள்ள கலப்பின மாடுகளில் இருந்து பெறப்பட்ட விந்தணு கலந்து வந்திருக்கலாம்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (55). விவசாயியான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த எருமை மாடு ஒன்று சினை பிடிக்காததால், கால்நடை மருத்துவரை அணுகி, சினை ஊசி போட்டுள்ளார். இதன் காரணமாக எருமை மாடு சினையானது. உரிய நாட்களுக்கு பின்னர் அந்த எருமை, கன்று ஒன்றை ஈன்றுள்ளது. எருமை ஈன்ற கன்றை பார்த்த முருகேசன் ஆச்சரியம் அடைந்துள்ளார். காரணம் அந்த கன்று வெள்ளை நிறத்தில் இருந்துள்ளது. இதன் காரணமாக அந்த கன்றை மிகவும் கவனமாக அவர் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் வெள்ளை எருமை மாட்டை பார்ப்பதற்கு நாள்தோறும் அப்பகுதி மக்கள் விவசாயினுடைய வீட்டிற்கு வந்து செல்கின்றனர். இதனால் முருகேசன் வீட்டில் எப்போதும் பொருட்காட்சி நடப்பதை போல கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இளம் வாலிபர்களும், பெண்களும் வெள்ளை எருமையுடன் செல்பி எடுத்து அதனை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    இது குறித்து கால்நடை வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த முதியவர் ஒருவர் கூறும்போது:-

    சினை பிடிப்பதற்காக போடப்படும் ஊசி வெளிநாடுகளில் இருந்து வருகிறது. அவ்வாறு வந்த ஊசியில், வெளிநாடுகளில் உள்ள கலப்பின மாடுகளில் இருந்து பெறப்பட்ட விந்தணு கலந்து வந்திருக்கலாம். எனவே எருமை வெள்ளையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மருத்துவரீதியாக இதற்கான காரணம் மெலனின் என்று சொல்லப்படுகிறது. உடம்பில் மெலனின் சுரக்காதபோது இவ்வாறு வெண்மை நிறம் ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது. இப்படிப் பிறக்கும் விலங்குகளை அல்ஃபினோ வகை விலங்குகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 10 ஆயிரத்து ஓர் உயிரினம் இப்படிப் பிறப்பதாக அவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

    • மீஞ்சூர் வல்லூர் வரை சாலை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
    • பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிதி ஒதுக்கப்பட்டு ரூ.14 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது.

    பொன்னேரி:

    பொன்னேரி- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வட சென்னை அனல் மின் நிலையம், தேசிய அனல் மின் நிலையம், காமராஜர் துறைமுகம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கப்பல் கட்டும் தளம், கண்டெய்னர் யார்டுகள், பெட்ரோல் நிறுவனங்கள், நிலக்கரி யார்டுகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிறுவனங்களில் இருந்து தினமும் 40 ஆயிரம் கனரக வாகனங்கள் மீஞ்சூர் வழியாக பொன்னேரி பகுதிக்கும், வல்லூர் 100 அடி சாலையில் இருந்து மணலி வழியாக சென்னைக்கும், வண்டலூர் சாலை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கும் செல்கின்றன.

    இந்நிலையில் மீஞ்சூர் வல்லூர் வரை சாலை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பும் ஏற்படுகிறது. குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பள்ளம் பள்ளமாக காணப்படும் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் பலமுறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதிகாரியிடம் மனு அளித்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிதி ஒதுக்கப்பட்டு ரூ.14 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது.


    இந்நிலையில் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மீஞ்சூர் பி.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து வல்லூர் வரை 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சாலையில் ஏற்படும் தூசிகள் கடை முழுவதும் பரவி வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். வாடிக்கையாளர்கள் வராததால் ஓட்டல்கள், டிபன் கடைகள், டீக் கடைகளை வியாபாரிகள் மூடி வருகிறார்கள். மேலும் காய்கறி, பழக்கடைகள் முழுவதும் தூசி மற்றும் மணலால் நிரம்பி காணப்படுவதால் கடைகளை காலை 7 மணி முதல் 9 மணி வரையும் மாலை 6 மணி முதல் 8 மணிவரையும் திறந்து வியாபாரம் செய்துவிட்டு செல்கின்றனர். சிலர் கடையை காலி செய்து விட்டு வேறு இடத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் வியாபாரிகளுக்கு கடந்த 2 வருடத்திற்கு மேலாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடையை நடத்த முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனத்துறையினர் 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தியும், ஆற்று ஓரங்களில் கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
    • ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்க இருக்க வேண்டும் என தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    கபிஸ்தலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு செம்பங்குளம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.

    இதைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க 30-க்கும் மேற்பட்ட வனத்துறை குழுக்கள் அமைத்து, ஆனை மலை புலிகள் காப்பத்தில் இருந்து வந்த வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து சித்தர்காடு, ஆரோக்கியநாதபுரம், அசிக்காடு, மறையூர் சுற்று வட்டார பகுதியில் முழுவதையும் கண்காணித்து தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் மோப்ப நாய்களும் தேடுதல்பணியில் ஈடுப்பட்டது.

    மயிலாடுதுறை சித்தர்காடு ரெயில் தண்டவாள பாலத்தில் வனத்துறையினர் சிறுத்தையின் கழிவுகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இந்த சிறுத்தை மயிலாடுதுறை கூறைநாடு செம்பங்குளம் பகுதியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவு பயணித்து குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் கிராமத்தில் சுற்றி திரிந்ததாக அப்பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவர் தகவல் தெரிவித்தார். அங்கு முகாமிட்ட வனத்துறையினர் 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தியும், ஆற்று ஓரங்களில் கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

    பின்னர் குத்தாலம் காஞ்சி வாய் கிராமத்தை அடுத்த பேராவூர் ஊராட்சியில் நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சிறுத்தையை பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் எங்கும் தேடியும் சிறுத்தை கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை அரியலூர் மாவட்டம் செந்துறையில் காணப்பட்டதாக தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் அங்கு முகாம்மிட்டு சிறுத்தையை தேடி வந்தனர். தற்போது சிறுத்தை அரியலூர்-பெரம்பலூர் எல்லை பகுதியில் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் பகுதி உமையாள்புரம் ஊராட்சி, உடப்பாங்கரை கிராமத்தில் வசிக்கும் அய்யப்பன் என்பவர் கடந்த 13-ந் தேதி மாலை 7 மணியளவில் தனது பருத்தி வயலில் தண்ணீர் பாய்ச்சும் போது சத்தம் கேட்டு பார்த்த போது சிறுத்தை சென்றதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் அவரது வயலில் அண்டகுடி கிராம நிர்வாக அலுவலர், மற்றும் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததில் சிறுத்தை சென்றதாககால் தடம் எதுவும் இல்லை எனவும், புல்வெளிகள் மிகுந்த பகுதியாக இருப்பதாகவும், தெரிவித்தனர்.

    மேலும் இந்த இடங்களை பார்வையிட்ட வனத்துறையினர் உமையாள்புரம், உடப்பாங்கரை, திருமண்டங்குடி, கூனஞ்சேரி, ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்க இருக்க வேண்டும் என தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் சிறுத்தை என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறைவு விழா நடத்தப்படாமல் பொருட்காட்சி முடிவடைந்தது.

    சென்னை:

    தமிழக அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 48-வது சுற்றுலா பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


    இந்த பொருட்காட்சியில், 51 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகளில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவை தவிர கடைகள், பொழுதுபோக்கு வளாகம் ஆகியவையும் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், 32-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள், ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றி ருந்தன. அரசு பள்ளி மாண வர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தினந்தோறும் பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக சென்று சுற்றுலா பொருட்காட்சியை கண்டு களித்தனர். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சுற்றுலா பொருட்காட்சி நேற்று முடிவடைந்தது. இந்த பொருட்காட்சியை மொத்தம் 5.86 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர். இவர்களில் 4,91,361 பேர் பெரியவர்கள், 94,637 பேர் குழந்தைகள் ஆவர். பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடப்பதால் கடந்த வாரம் பொது மக்களின் வருகை குறைந்து காணப்பட்டது.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறைவு விழா நடத்தப்படாமல் பொருட்காட்சி முடிவடைந்தது. சிறந்த அரங்குக்கான விருது ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அரசரடி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று பழுதடைந்த நிலையில் பல வருடமாக காணப்பட்டது.
    • நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ள நிலையில் வாக்குப்பதிவு மையத்தை சீரமைத்து என்ன பயன் என்றும் தெரிவித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மேகமலை ஊராட்சிக்குட்பட்ட அரசரடி, இந்திரா நகர், பொம்முராஜபுரம், நொச்சிஓடை ஆகிய கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சராசரியாக 1500 வாக்குகள் பதிவாகும். வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமங்களில் எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை.

    குறிப்பாக சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் போன்ற எந்த பணிகள் மேற்கொள்ள வேண்டுமானாலும் வனத்துறை அனுமதி பெற்றே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அரசரடி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று பழுதடைந்த நிலையில் பல வருடமாக காணப்பட்டது.

    அதனை சீரமைக்க கூட வனத்துறை அனுமதிக்கவில்லை. பள்ளி கட்டிடம் பழுதான நிலையில் இருப்பதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவித்தும் கட்டிடத்தை சீர் செய்யவில்லை.

    இது போன்ற காரணங்களால் மேற்படி 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அறிவிப்பு பலகை வைத்தனர். தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் ஏற்கவில்லை.

    இந்நிலையில் இங்குள்ள அரசு பள்ளியில்தான் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதால் அந்த வாக்குப்பதிவு மையத்தை சீரமைக்க அதிகாரிகள் தலைமையில் பணியாளர்கள் வந்தனர்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் மாணவர்களுக்கு பாதிப்பு என்று நாங்கள் சொன்னபோது வராமல் வாக்குப்பதிவுக்காக மட்டும் பள்ளியை சீரமைக்க எதற்காக வந்தீர்கள் என கேள்வி எழுப்பினர். பள்ளியின் மேற்கூரையை இடித்து விட்டு நிரந்தரமாக கட்டிடத்தை சீரமைத்தால் அந்த பணியை மேற்கொள்ள வேண்டும். தற்காலிக பணி மேற்கொள்வதென்றால் வேண்டாம் என அவர்களுக்கு எச்சரித்தனர்.

    மேலும் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ள நிலையில் வாக்குப்பதிவு மையத்தை சீரமைத்து என்ன பயன் என்றும் தெரிவித்தனர். இதனால் பணியை மேற்கொள்ளாமல் ஆணையாளர் தலைமையில் வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். இன்று திட்ட அலுவலர் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • செலவின பார்வையாளராக மதுகர் குமார், தொடர்பு அலுவலராக காசி விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இலவச தொலை பேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வடசென்னை சட்டமன்ற தொகுதிகளான திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ராயபுரத்திற்கு செலவின பார்வையாளராக அபிஜித் அதிகாரி, தொடர்பு அலுவலராக சண்முகம், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிக்கு செலவின பார்வையாளராக ஹரஹானந்த், தொடர்பு அலுவலராக முத்துகுமாரசாமி நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மத்திய சென்னையின் வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக சுபோத் சிங், தொடர்பு அலுவலராக இளங்கோ மற்றும் துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக மதுகர் குமார், தொடர்பு அலுவலராக காசி விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தென்சென்னையின் விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக முகேஷ் குமாரி, தொடர்பு அலுவலராக ஹரிநாத் மற்றும் சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக மானசி திரிவேதி, தொடர்பு அலு வலராக மோகன வடிவேல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 3 பாராளுமன்ற தொகுதிகளில் நேற்று முதல் தேர்தல் பணிகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் இருக்கும் பட்சத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இலவச தொலை பேசி எண்கள் 1950, 1800 425 7012 மற்றும் 044-2533 3001, 2533 3003, 2533 3004, 2533 3005 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது.
    • வாகனத்தை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குழித்துறை:

    கேரளா மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை வாகனங்களில் ஏற்றி கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், சாலையோரங்கள் மற்றும் வேளாண் நிலங்களில் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

    கேரளாவில் இருந்து குமரி மாவட்ட சோதனை சாவடிகள் வழியாக கொண்டு வரப்படும் கழிவுகள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வீசிச்செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுத்து நிறுத்தும படி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதுடன், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

    ஆனால் கேரளாவில் இருந்து வாகனங்களில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு குமரி மாவட்டத்திற்குள் கொட்டப்படுவது நின்றபாடில்லை. இந்நிலையில் இன்று அதிகாலையில் குமரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடி வழியாக கேரளா மாநிலத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு கூண்டு வாகனம் ஒன்று வந்தது.

    படர்ந்தாலுமூடு பகுதியை தாண்டி சென்று கொண்டிருந்த அந்த வாகனத்தை பார்த்த பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் துரத்தி சென்றனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. இதனையடுத்து அவர்கள் அந்த பகுதி முழுவதுமாக கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை தேடினர்.

    அப்போது குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த பொதுமக்கள், அந்த வாகனத்தை சிறை பிடித்தனர். இதுகுறித்து குழித்துறை நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராம திலகம் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கழிவுகள் ஏற்றிவந்த அந்த வாகனத்துக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை குழித்துறை நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்அதை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×