என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dharapuram"

    • சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களான சஞ்சித், சுகேஷ், வீரராஜ், சரவணன் ஆகிய 4 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    • மாணவர்கள் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொழிஞ்சி வாடி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 215 மணவர்கள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பின்னர் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 42 மாணவர்கள் உணவு சாப்பிட்டனர்.

    சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களான சஞ்சித், சுகேஷ், வீரராஜ், சரவணன் ஆகிய 4 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்களை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோர் சென்று மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

    மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி விழுந்துள்ளதாகவும், அதனை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • போலீசார் தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
    • வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடை அமைத்து விளை பொருட்களான தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் உள்பட பல்வேறு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    ஆனால் உழவர் சந்தைக்கு முன்பாக உள்ள சாலைகளிலும், பொள்ளாச்சி ரோட்டிலும் விவசாயிகள் அல்லாத வெளி ஆட்கள் சாலை யோரங்களில் காய்கறி கடைகளை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தையில் வியாபாரம் பாதித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். நேற்று காய்கறிகளை தரையில் கொட்டி புகார் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை தாராபுரம் நகராட்சி, நெடுஞ்சாலை துறை மற்றும் போலீசார் தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டனர். இருப்பினும் நகராட்சி ஊழியர்கள் உழவர்சந்தை அருகே உள்ள சாலையில் அமைக்கப்பட்டிருந்த சாலையோர காய்கறி கடைகளை அப்புறப்படுத்தினர்.

    • தினசரி மார்க்கெட் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.
    • உழவர்சந்தை விவசாயிகளின் போராட்டத்தால் தாராபுரத்தில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணாநகரில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு தாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு வந்து அதிகாலை 4 மணி முதல் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தரைக்கடை காய்கறி வியாபாரிகள் உழவர் சந்தை அருகே உள்ள பொள்ளாச்சி சாலையில் சாலையோரம் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், விற்பனை ஆகாத காய்கறிகளை குப்பையில் கொட்டுவதாகவும் உழவர்சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இது தொடர்பாக ஏற்கனவே போராட்டம் நடத்தி உள்ளனர். அப்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதும், பின்னர் மீண்டும் தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்வதுமாக இருந்தனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி தாராபுரம் உழவர்சந்தை விவசாயிகள் இன்று காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். காய்கறிகளை விற்காமல் தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். உழவர் சந்தையிலேயே சமையல் செய்து சாப்பிட்டு உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் தாராபுரம் தாசில்தார் திரவியம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் , போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொள்ளாச்சி சாலையில் உள்ள வியாபாரிகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.


    இது குறித்து ரங்கபாளையத்தை சேர்ந்த விவசாயி கருப்புசாமி கூறுகையில், நாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழ வகைகள், ஊட்டி காய்கறிகள் என அனைத்தையும் உழவர்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு மீதியை மொத்த மார்க்கெட்டுக்கு கொடுத்து வருகிறோம். தாராபுரத்தில் உள்ள தினசரி மார்க்கெட் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.

    மார்க்கெட்டில் கடை அமைத்தவர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் தற்போது உழவர்சந்தை அருகே உள்ள பொள்ளாச்சி சாலை மற்றும் உழவர் சந்தையை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருவதால் எங்களுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை நாங்கள் போராட்டம் நடத்திய போதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    உழவர்சந்தை அருகிலேயே கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருவதால் பொது மக்கள் உழவர் சந்தைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் நாங்கள் கொண்டுவரும் காய்கறிகளில் 30 சதவீதம் மற்றும் 40 சதவீதம் மட்டுமே விற்பனை செய்து பின்னர் குப்பையில் போட வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். பொள்ளாச்சி சாலை மற்றும் உழவர் சந்தை பகுதிகளில் இருந்து 200 மீட்டர் தள்ளி தரைக்கடை வியாபாரிகள் கடைகளை அமைக்க வேண்டும் என்றனர். சாலையோர கடை வியாபாரிகள் கூறுகையில்,

    தாராபுரம் தினசரி மார்க்கெட் இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டி வருவதால் அரசின் விதிப்படி சாலை ஓரங்களில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம் என்றனர். உழவர்சந்தை விவசாயிகளின் போராட்டத்தால் தாராபுரத்தில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

    • முதலையை வனத்துறையினர் பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ஆற்று பாலத்தின் அருகே முதலை நடமாட்டம் உள்ளதாக பதாகை வைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் செல்லும் ரோட்டில் அமராவதி ஆற்று பாலம் உள்ளது. இந்த ஆற்றுப்பாலத்தில் முதலை ஒன்று உலா வந்து கொண்டு இருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். உடுமலை அமராவதி அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடும் போது அமராவதி அணையில் இருந்து முதலைகள் தண்ணீர் வழியாக வந்து ஆற்றில் ஆங்காங்கே இருந்து வருகிறது.

    இதற்கு முன்பு சீதக்காடு, தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவில், வீராச்சிமங்கலம், தாளக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள அமராவதி ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருந்து வந்தது. அப்போது தாராபுரம் ஈஸ்வரன் கோவில் அமராவதி ஆற்றில் முதலையை பிடிப்பதற்காக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முதலையை பிடிக்க முயற்சி செய்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் முதலை தப்பி சென்றது.

    தற்போது முதலை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே முதலையை வனத்துறையினர் பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் முதலை நடமாட்டத்தால் அலங்கியம் அமராவதி ஆற்றுப் பாலம் பகுதியில் கீழே இறங்கி குளிக்கவும் துணி துவைக்கவும் வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பக்தர்கள் தாராபுரம் வழியாக பழனிக்கு செல்லும்போது அலங்கியம் அருகில் உள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அமராவதி ஆற்று பாலத்தின் அருகே முதலை நடமாட்டம் உள்ளதாக பதாகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • குடிமகன்கள் மது வாங்கி கொண்டு வந்து பொதுமக்கள் நடந்து செல்லும் போதும் குடித்து வருகின்றனர்.
    • தட்டிக்கேட்டால் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறி வருகின்றனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் பஸ் நிலையத்திற்கு தினசரி ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன . பயணிகளும் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் 2 சப்வேக்கள் உள்ளன.

    இதில் மேல்புறமுள்ள மாடிக்கு செல்லும் படிக்கட்டில் 24 மணி நேரமும் குடிமகன்கள் மது வாங்கி கொண்டு வந்து பொதுமக்கள் நடந்து செல்லும் போதும் குடித்து வருகின்றனர். தட்டிக்கேட்டால் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறி வருகின்றனர்.எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • 4 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.
    • வழக்குகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    தாராபுரம் :

    தாராபுரம் சர்ச் வீதியில் நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றம் , தாலுகா அலுவலகம் அருகில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என 4நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற ஆணையின் படி நீதிமன்ற பணிகள், தினசரி வழக்குகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த பதிவு செய்யப்பட்ட விபரங்களை வழக்கறிஞர்களும் பொதுமக்களும் தினசரி பார்த்துக் கொள்ளும் வசதிகள் உள்ளன. இந்தநிலையில் நீதிமன்ற வளாக இணையதள சேவையில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இதனால் பணி , வழக்கு விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே இணையதள சேவையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என தாராபுரம் வக்கீல் ராஜேந்திரன் மற்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • இரண்டு மாடுகள் பூட்டப்பட்டு 200 மீட்டர் ,300 மீட்டர் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டு பந்தயங்கள் நடைபெற்றது.
    • 280 ரேக்ளா வண்டிகளில் இரண்டு மாடுகள் பந்தயங்கள் நடைபெற்றது.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் ரேக்ளா கிளப் மற்றும் விவசாயிகள் சார்பில் 10ம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி அருகில் நடைபெற்ற பந்தயத்தில் தாராபுரம் ,பழனி, சத்திரப்பட்டி ,திருப்பூர்,பொள்ளாச்சி, காங்கேயம், சங்கரண்டாம்பாளையம், புளியம்பட்டி, சோமனூர், அன்னூர், சத்தியமங்கலம், என 50க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து வந்திருந்த 280 ரேக்ளா வண்டிகளில் இரண்டு மாடுகள் பூட்டப்பட்டு 200 மீட்டர் ,300 மீட்டர் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டு பந்தயங்கள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் தாளாளரும் ,பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே. எஸ். என். வேணுகோபாலு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஆபீஸ் தோட்டம் செல்லமுத்து மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நவீன உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் தான் உள்ளது.
    • பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அரங்கேற்ற விழாவில், பவளக்கொடி கும்மியாட்டம் ஆடி பெண்கள், குழந்தைகள் அசத்தினர். இந்த பவளக்கொடி கும்மியாட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட வள்ளி கும்மி ஆட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று ஆடினர். மேலும், நூத்தி நாற்பதாவது மேடை நிகழ்வாக 41 வது அரங்கேற்ற நிகழ்ச்சியாக இந்த கும்மியாட்டம் நடைபெற்றது.

    பவளக்கொடி கும்மியாட்டத்தில்7 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் பங்கு பெற்று, ஒலிக்கும் இசைக்கு ஏற்றவாறு தங்களது நடனத்தை ஒன்றாக வெளிப்படுத்தி ஆடினர். இந்த நடனம் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும் விதமாக அமைந்து இருந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    மேலும் இந்த கும்மி ஆட்டத்தில் ஆடிய அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்காகவும், பாரம்பரிய கலையை மீட்டெடுப்பதற்காகவும் ஆடினர். இது மட்டுமல்லாமல் 7 வயது முதல் 20 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் ஆர்வமுடன் இந்த பவளக்கொடி கும்மியாட்ட கலையை கற்று வருகின்றனர். இந்த கலை மென்மேலும் வளர்ந்தால் தான் நன்றாக இருக்கும் என பவளக்கொடி கும்மியாட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

    இன்றைய நவீன உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் தான் உள்ளது. அவ்வாறு அழிந்தால் அந்த கலையின் பெருமை, அதன் மரபு ஆகியவை அடுத்த தலைமுறையினருக்கு தெரியாமலேயே போகும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு, பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என கும்மியாட்ட குழுவினர்களால் வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    பல்லடம் அடுத்த, செம்மிபாளையம் ஊராட்சி கே.என்.புரம் கிராமத்தில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, காவடி மற்றும் கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி புதுக்காலனி விநாயகர் கோவில் திடலில் நடந்தது. குழந்தை வடிவேலன் கலைக்குழு சார்பில் நடந்த அரங்கேற்ற நிகழ்ச்சியை ஊராட்சி தலைவர் ஷீலா புண்ணியமூர்த்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

    முன்னதாக முருகப்பெருமானை வணங்கிய பின் கலை நிகழ்ச்சி துவங்கியது. சிறுவர், சிறுமியரின் காவடி கரகாட்டமும், இதையடுத்து, குழந்தை வடிவேலன் கலைக்குழுவினரின் கும்மி ஆட்டம் மற்றும் காவடி ஆட்டம் நடந்தது.சிறுவர்கள், இளம் பெண்கள் மற்றும் தாய்மார்கள் உள்ளிட்டோர் கும்மியாட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    • தாராபுரம் ஐ.டி.ஐ. கார்னரில் உள்ள 108 ஆம்புலன்சு கட்டிடத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
    • ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) தாராபுரம் ஐ.டி.ஐ. கார்னரில் உள்ள 108 ஆம்புலன்சு கட்டிடத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. வாகன ஓட்டுனருக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். 24 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிய ஆவணங்களை சரிபார்ப்புக்கு கொண்டு வர வேண்டும்.

    மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி.நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. படிப்புகளை 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பையாலஜி படித்திருக்க வேண்டும். 19 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பகல் மற்றும் இரவு நேரங்களில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வீட்டில் இருந்து 10 லிட்டர் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தாராபுரம் :

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக டிஜிபி. சைலேந்திர பாபு அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள்,மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளுக்கு கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் தாராபுரம் டிஎஸ்பி. தன்ராசு உத்தரவின் பேரில் அலங்கியம் உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட போலீசார் அலங்கியம், கொங்கு, மனக்கடவு, உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தாராபுரம் அருகே அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கயம்பாளையம் பகுதியில் ஒருவரது வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக அலங்கியம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் அலங்கியம் போலீசார் காங்கேயம்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன் (42) என்பவரது வீட்டினை சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து 10 லிட்டர் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புதைத்து வைக்கப்பட்டிருந்தஊறல் கைப்பற்றப்பட்டு அதே இடத்தில் அழிக்கப்பட்டது .

    அதன் பிறகு அவரிடம் வேறு ஏதாவது இடத்தில் ஊறல் பதுக்கி வைத்துள்ளாரா என்று விசாரணை நடத்தப்பட்டதில் அவரது வீட்டில் இரண்டு லிட்டர் சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். பிறகு 2 லிட்டர் சாராயத்துடன் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் . அதன் பிறகு மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்ட அலங்கியம் காவலர்களை தாராபுரம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் தனராசு மற்றும் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் பாராட்டினர்.

    • திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை கூட்டம் நடக்கிறது.
    • மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குறை நிறைகளை கூறலாம்.

    திருப்பூர் :

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :- திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. எனவே அவினாசியை சுற்றியுள்ள மின்நுகர்வோர் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரில் மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலையில் 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்லடம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைபொறியாளர் கலந்து கொள்கிறார். எனவே மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தொழில் முனைவோர் கலந்து கொண்டு கூட்டத்தில் குறை நிறைகளை கூறலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • வாகனத்தின் பின்புறத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
    • விபத்து குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மூலனூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் ( வயது 56). இவர் தனது உறவினர்கள் 20 பேருடன் இன்று காலை லோடு ஆட்டோவில் திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே பட்டுத்துறை என்ற இடத்தில் உள்ள மலையாள கருப்பண்ணசாமி கோவிலில் வழிபடுவதற்காக சென்றார்.

    தாராபுரம் அருகே மூலனூர் அடுத்த துலுக்க வலசு அருகே செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

    இதில் வாகனத்தின் பின்புறத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். சிலர் வாகனத்தின் அடியில் சிக்கினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் தாராபுரம் மற்றும் வெள்ளகோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பழனிசாமி என்பவரின் மனைவி பொட்டியம்மாள் (55) இறந்தார். சத்யா (14), மணிமேகலை (35,) நாகரத்தினம் (36), மாரியம்மாள் (36), செல்வபிரியா(13), ஈஸ்வரி (39), மற்றொரு ஈஸ்வரி (30), லட்சுமி (47), சுப்பிரமணி (60) , பழனியம்மாள் ( 70) உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.12 பேர் தாராபுரம் அரசு மருத்துவமனையிலும்,7 பேர் வெள்ளக்கோவில் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்செல்லக்கூடாது என போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் சிலர் சரக்கு வாகனத்தில் பொதுமக்களை அழைத்து செல்கின்றனர். எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×