search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffic damage"

    • போக்குவரத்து சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் வருகிறது.
    • மலைப்பாதை பகுதியில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த ஒருவாரமாக ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    இதனால் அங்குள்ள போக்குவரத்து சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் வருகிறது. மேலும் ஆற்றில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்வதால் அங்கு கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே குன்னூர் அடுத்த உபதலை-பழத்தோட்டம் சாலையில் நேற்று ராட்சத மரம் மின்கம்பி மீது விழுந்ததால் அந்த வழித்தடத்தில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத்துறை ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து மின்வாளால் சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. மேலும் அங்குள்ள பெரும்பாலான விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மழையின் தாக்கம் சற்று குறைந்து மேகமூட்டம், பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதை பகுதியில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.

    • மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    • பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலத்தை விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை.

    ஆவடி:

    பட்டாபிராம், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையின் குறுக்காக அமைக்க ப்பட்டுள்ள ரெயில்வே பாதை வழியாக சென்னையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசலும், அவரச தேவைக்கு செலவோரும் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக கடந்த 2010-ம் ஆண்டில் ரூ.33 கோடி செலவில் அப்பகுதியில் நான்கு வழிச்சாலையுடன் ரெயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரெயில்வே துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, ரெயில்வே துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டத்தை மறுமதிப்பீடு செய்தது.

    இதன்படி, திட்ட மதிப்பீடு ரூ.52.11 கோடியாக உயர்ந்தது. திருத்திய மதிப்பீட்டின்படி கடந்த 2018-ம்ஆண்டு ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்கப்பட்டன.

    இதனை 2 ஆண்டுகளில் முடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதிக்கு இயக்கப்படும் வாகனங்கள் தற்போது மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.

    பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே தண்டுரை, அன்னம்பேடு வழியாக மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக சென்று அங்கிருந்து நெமிலிச்சேரி ரவுண்டானாவை கடந்து சென்னை- திருத்தணி நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும். இதனால், வாகனங்கள் சுமார் 6 முதல் 9 கிமீ தூரம் வரை மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு காரணங்களால் பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலப்பணி முடிவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.

    இதையடுத்து கடந்த சில மாதங்களாக ரெயில்வே மேம்பாலப்பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது.

    கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த மேம்பால பணி தற்போது நிறை வடைந்து உள்ளது. பாலத்தில் தடுப்புகள் அமைத்து வர்ணம் பூசப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

    இதில் பாலத்தில் சென்னை- திருவள்ளூர் நோக்கி வாகனங்கள் செல்லும் பாதை முழுவதும் பணிகள் முடிந்து உள்ளன.

    திருவள்ளூர்-சென்னை செல்லும் பாதையில் மட்டும் சில பணிகள் முடிக்க வேண்டி உள்ளது. இதுவும் வரும் நாட்களில் விரைந்து முடிக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.

    எனவே பொதுமக்களின் நலன்கருதி பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • தாராபுரம் போலீசார் சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சூரியநல்லூர் கிராமம் இடையன் கிணறு நால்ரோடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

    இதற்கு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை தாராபுரம் திருப்பூர் சாலையில் மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் சூரியநல்லூர் மற்றும் கொழுமங்குழி, இடையன் கிணறு பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்களை மறியலை கைவிடவில்லை. இதைய டுத்து டி.எஸ்.பி., கலையரசன், தாசில்தார் கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பொதுமக்கள் டாஸ்மாக் கடை அமைத்தால் விபத்துக்கள் அதிகம் நிகழும். எனவே கடை அமைக்கக்கூடாது என்றனர். தொடர்ந்து பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • வாகனங்கள் பழுதாகி நிற்பதும், விபத்து ஏற்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
    • தமிழக-கர்நாடகா இடைய போக்குவரத்து முடங்கி விடும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. திம்பம் மலைப்பாதை 21 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்வதற்கான மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது.

    திம்பம் மலைப்பகுதியில் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நிற்பதும், விபத்து ஏற்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. விபத்து ஏற்படும் நேரங்களில் தமிழக-கர்நாடகா இடைய போக்குவரத்து முடங்கி விடும்.

    இந்நிலையில் இன்று காலை கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு காய்கறி லோடுகளை ஏற்றி சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்று திம்பம் மலைப்பகுதியில் உள்ள 7-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விழுந்தது.

    இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினர். 7-வது கொண்டை ஊசி வளைவில் விழுந்ததால் தமிழக-கர்நாடக இடையேயான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பிறகு பண்ணாரியில் இருந்து ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு ரோட்டில் கவிழ்ந்து கிடந்த சரக்கு வேன் மீட்கப்பட்டது. அதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    • அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
    • சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    குழித்துறை:

    வர்த்தக நகரமான மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க குழித்துறை ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் நவீன முறையில் இரும்பு மேம்பாலம் அமைக்கப் பட்டது.

    இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டது முதல் அடிக்கடி அப்பகுதியில் வாகன விபத்துகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து கம்பி லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை கல்லுபாலம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார்.

    லாரி குழித்துறை மேம்பாலப்பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற கார் மற்றும் ஆம்னி பஸ்சை லாரி டிரைவர் முந்த முயன்றார்.

    அவர் லாரியை வேகமாக இயக்கி வாகனங்களை முந்த முற்பட்டார். அப்போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மற்றும் ஆம்னி பஸ் மீது உரசியது.

    மேலும் சாலையின் நடுவே குறுக்கு மறுக்காக லாரி ஓடி உள்ளது. அப்போது எதிரே கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் நோக்கி வந்த லாரியை கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்த ஷாஜி (30) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது லாரி தாறுமாறாக ஓடி வருவதை கண்ட அவர் பயந்து வாகனத்தில் இருந்து குதித்து தப்பி உள்ளார்.

    இதையடுத்து 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதி சுமார் 10 மீட்டர் தூரம் டாரஸ் லாரியை இழுத்து சென்று மேம்பாலத்தின் சுவரில் மோதி நின்றது.

    இதில் 2 வாகனங்களின் முன்பக்கமும் பலத்த சேதமடைந்த நிலையில் லாரி டிரைவரின் கால்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி வெளியேற முடியாமல் பரிதவித்து உள்ளார்.

    இது குறித்து தகவலறிந்து வந்த குழித்துறை தீயணைப்பு துறையினர் அவரை சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

    இந்த விபத்தில் 2 லாரிகளின் டிரைவர்களும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    மேலும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்ப டுத்தினர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    • சாலைகளில் தேங்கிய மழைநீரில் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடியே சென்றன.
    • கூடலூரை அடுத்த இருவயல் பழங்குடியின கிராமத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அந்த கிராமத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே பலத்த மழை கொட்டியது.

    இதனால் ஊட்டி படகு இல்ல சாலை, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    சாலைகளில் தேங்கிய மழைநீரில் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடியே சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. ஊட்டி நகரின் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையான படகு இல்லம் செல்லும் சாலையில் உள்ள இரும்பு பாலம் பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அவ்வழியாக வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

    ஊட்டியில் இருந்து தூனேரி செல்லும் சாலையின் குறுக்கே சாலையோரம் நின்றிருந்த பெரிய மரம் மழைக்கு முறிந்து விழுந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதேபோல் குன்னூர், எடப்பள்ளி, பாரஸ்டேல், பந்துமை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் அந்த பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

    கூடலூர் பகுதியிலும் நேற்று மழை பெய்தது. மழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்ப வழிகின்றன.

    கூடலூரை அடுத்த இருவயல் பழங்குடியின கிராமத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அந்த கிராமத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர்.

    தகவல் அறிந்த கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், அலுவலர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்று மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டனர்.

    இதையடுத்து வருவாயத்துறையினர் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கிராமத்தை மழை வெள்ளம் சூழ்ந்திருந்தாலும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும், தொடர்ந்து கண்காணிப்பதாகவும் வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய விண்வெளி திட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.
    • காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் சிட்கோ தொழிற் பேட்டையில் பிரபல தனியார் நிறுவனத்தின் கனரக லாரி தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது.

    இந்த தொழிற்சாலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவிற்கு தேவைப்படும் அதிநவீன கனரக லாரியை தயாரித்து சாலை மார்க்கமாக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தொழிற்சா லையின் தலைமை செயல் அலுவலர் தெரிவித்தாவது:-

    இந்திய விண்வெளிதிட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.

    அதன் பிறகு அவற்றை இஸ்ரோவின் ஏவுதளமான ஸ்ரீஹரி கோட்டாவுக்கு கொண்டு செல்ல இந்த பிரம்மாண்ட லாரி பயன்படும்.

    லாரியின் விலை ரூ.1.40 கோடி ஆகும். இந்த லாரி 74 அடிநீளமும், 17.5 அடி அகலமும் 17 அடி உயரமும் கொண்டது. இதன் மேற்புரம் தானாக திறந்து கொள்ளும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வாகனம் எந்த பக்கமும் தானே திரும்பிக்கொள்ளும் சிறப்பு ஸ்டேரிங் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தின் மூலம் மகேந்திரகிரியில் தயாராகும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை மிகுந்த பாதுகாப்புடன் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு அனுப்ப முடியும்.

    மழை உள்ளிட்ட அனைத்து வித பாதிப்புகளையும் தாங்கி உள்ளே இருக்கும் ராக்கெட்டை பாதுகாப்புடன் கொண்டுச் செல்வதற்காக முழுவதும் இந்திய தொழில்நுட்பத்துடன் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவிற்கு இரு சிறிய ரக லாரிகளை அனுப்பி வைத்தோம். தற்போது மகேந்திரகிரிக்கு மிகவும் நவீன முறையில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட லாரியை உருவாக்கி அனுப்பி வைத்துள்ளோம்.

    மேலும் திருவனந்தபுரம் தும்பாவில் உள்ள இஸ்ரோ தளத்திற்கு ஒரு லாரி தயாரிக்கும் ஒப்பந்தம் பெறப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளன என்றார்.

    இந்நிலையில் லாரி அரக்கோணத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மகேந்திரகிரிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    அதன்படி லாரி நேற்று மாலை அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் சென்றது. லாரி மிகவும் நீளமாகவும், அகலமாகவும் இருந்ததால் அந்த வழியில் நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்குவரத்து இடையூறாக நின்றுக் கொண்டும், படுத்துக் கொண்டும் இருந்தார்.
    • சுசீலாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள நகைக்கடையின் பின்புறம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு ஓட்டை போட முயற்சித்துள்ளனர்.

    கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சி அடிப்படையில் பழைய போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெகநாதன், விக்னேஷ் மற்றும் கண்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் பழைய போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த சுசிலா (வயது55) என்பவர் மது போதையில் போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்குவரத்து இடையூறாக நின்றுக் கொண்டும், படுத்துக் கொண்டும் இருந்தார். வாகன ஓட்டிகள் மீறி செல்ல முயன்றால் அவர்களை மிரட்டி வாகனத்தை தடுத்து நிறுத்தினார்.

    இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. விபரம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் சுசீலாவை சமாதானம்பபடுத்த முயன்றனர். அப்போது எனது மகன்களான ஜெகநாதன், விக்னேஷ் மற்றும் எனது மருமகன் கண்ணன் ஆகிய 3 பேர் மீது பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பியதாக வாதாடினார். மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோரை போலீசார் கைது செய்ததால் அவ்வப் போது மதுபோதையில் போலீஸ் நிலையம் சென்று வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு வந்த நிலையில் போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்கு வரத்துக்கு இடையூறாக செயல்பட்டார். பின்னர் சுசீலாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் சீதோசன நிலை மாறி மாறி வருகிறது.
    • வாகனங்கள் அனைத்தும் சாலையில் மிகவும் ஊர்ந்தபடியே செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவும், மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது.

    இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் நிலவுவதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் சீதோசன நிலை மாறி மாறி வருகிறது. இதில் இன்று அதிகாலை 5 மணியிலிருந்து காலை 8 மணி வரையிலும் கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

    கடும் குளிர் நிலவி வருவதால் உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் குடியிருப்புகள் மற்றும் விடுதிகளிலேயே முடங்கி உள்ளனர்.

    மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நீலகிரிக்கு வந்தவர்கள் நேற்று மாலை முதல் சமவெளி பகுதிகளுக்கு திரும்பி கொண்டு வருகின்றனர். இன்று காலையும் ஏராளமானோர் ஊர்களுக்கு சென்றனர்.

    இதனால் மலைப்பாதையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்தன. கடும் பனிமூட்டம் நிலவுவதால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.

    முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே வாகனங்களை இயக்கி செல்கிறார்கள். வாகனங்கள் அனைத்தும் சாலையில் மிகவும் ஊர்ந்தபடியே செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக உறைபனி அதிகமாக உள்ளது. இன்றும் உறைபனி அதிகமாக காணப்பட்டது.

    ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி, குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களில் உறைபனி கொட்டி புல்தரை முழுவதும் மறைந்து, வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காணப்பட்டது.

    இதுதவிர கார், வேன், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களிலும் உறைபனி கொட்டி இருந்தது. அதனை பொது மக்கள் அகற்றி விட்டு தங்கள் பணிக்கு சென்றனர்.

    இன்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலையாக 23.07 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 6.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    உறைபனியுடன் கடும் குளிரும் நிலவுவதால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். குளிரில் இருந்து காத்து கொள்ள குல்லா, சுவர்ட்டர் போன்ற ஆடைகளை அணிந்து வருகின்றனர்.

    ஆங்காங்கே தீ மூட்டியும் மக்கள் குளிர் காய்ந்து வருகிறார்கள். ஊட்டியில் கொட்டி வரும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. காலையில் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    அவர்கள் சுவர்ட்டர் அணிந்து கொண்டும், தலையில் குல்லா அணிந்து சென்றதையும் காணமுடிந்தது.

    தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியால் மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.

    • திருச்செந்தூருக்கு நேரடி போக்குவரத்து இல்லாமல் மாற்று பாதையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கமான அளவை விட குறைந்து கோவில் காணப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமாகி தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. திருச்செந்தூர் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி நடைபெறுகிறது.

    கனமழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூருக்கு நேரடி போக்குவரத்து இல்லாமல் மாற்று பாதையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்செந்தூர் வரும் பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் நெல்லையில் இருந்து மூலைகரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, மெஞ்ஞானபுரம் வழியாக வந்து செல்கின்றனர்.

    மேலும் ரெயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கமான அளவை விட குறைந்து கோவில் காணப்படுகிறது. இதனால் கோவில் வளாகத்தில் தங்கியுள்ள பக்தர்கள், உள்ளூர் பக் தர்கள் சுவாமியை எளிதாக தரிசனம் செய்து வரு கின்றனர்.

    இன்று காலையில் சங்கரன்கோவில் பக்தர்கள் வேல் குத்தியும், காவடி எடுத்து வந்து வழிபாடு செய்தனர். 

    • நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 5 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்தன.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மிக கனமழை கொட்டி வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதுடன் முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. நகரின் மத்தியில் உள்ள நட்சத்திர ஏரியும் நிரம்பிவிட்டது.

    இன்று காலை வரை கொட்டித் தீர்த்த கனமழையால் மேல்மலை கிராம சாலைகளில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. கொடைக்கானலில் இருந்து வானியல் ஆய்வு மையத்துக்கு செல்லும் சாலையில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சாலை மன்னவனூர், பூம்பாறை ஆகிய மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான பகுதியாகும். நிலச்சரிவு ஏற்பட்டதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நிலச்சரிவை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதும் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் சீரமைப்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதே போல் இரவு முழுவதும் நீடித்த மழையால் மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையான அப்சர்வேட்டரி செம்மண் மேடு பகுதியில் இன்று அதிகாலை மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நேரம் மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களால் போக்குவரத்து சீரானது.

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சிபட்டி, குப்பம்மாள்பட்டி, ஆடலூர், பன்றிமலை, பெரியூர், பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு, மரக்கிளைகள் விழுந்தன. இதேபோல் பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு-மூலக்கடைஇடையே மலைப்பாதையில் மரக்கிளை முறிந்து விழுந்தது.

    இதனால் அப்பகுதியில் உள்ள 5 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்தன. இதனால் மூலக்கடை, புல்லாவெளி, மீனாட்சி ஊத்து பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா, உதவிசெயற் பொறியாளர் மாணிக்கம், அய்யம்பாளையம் உதவிமின் பொறியாளர் செல்லகாமாட்சி ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை அவர்கள் அப்புறப்படுத்தினர். அப்பகுதியில் இன்று மின் வினியோகம் சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல் ஆங்காங்கே மலைபாதையில் முறிந்து விழுந்த மரங்களை அப்பகுதி மக்களே அகற்றி வருகின்றனர். தற்போது மழை குறைந்திருந்தாலும் விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று கொடைக்கானல் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று மாணவ-மாணவிகள் சாரல் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். 

    • கடந்த சில நாட்களாக பெய்த பருவ மழையின் காரணமாக பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பி உள்ளது.
    • கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியைச் சேர்ந்த காரணி ஊராட்சியில் இருந்து கொசவன்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த அஞ்சாதம்மன் கோவில் பகுதிக்கு வருவதற்கு ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப் பாலம் ஒன்று உள்ளது. இந்த தரை பாலத்தின் வழியாக எருக்குவாய், நெல்வாய், எருக்குவாய் கண்டிகை, முக்கரம்பாக்கம், சந்திராபுரம், மங்களம், பாலேஸ்வரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருவார்கள்.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த பருவ மழையின் காரணமாக பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பி உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் காரணி-அஞ்சாதம்மன் கோவில் இடையில் ஆரணி ஆற்றில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. மேலும், ஆரணி சமுதாயக் கூடம் எதிரில் இருந்து மங்களம் கிராமத்திற்கு செல்லும் வழியில் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள நடைபாதையும் வெள்ள நீரில் மூழ்கியது. இதனால் இப்பகுதியில் ஆபத்தையும் உணராமல் கிராம மக்கள் சிலர் கடந்து சென்று வருகின்றனர்.

    பெரியபாளையம் மற்றும் ஆரணி போலீசார் இப்பகுதிகளில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர்.

    இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு பெரியபாளையம் வழியாக சென்று வருகின்றனர்.

    ×