search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அபராதம் விதிப்பதில் மும்முரம் காட்டும் போலீசார்
    X

    அபராதம் விதிப்பதில் மும்முரம் காட்டும் போலீசார்

    • அபராதம் விதிப்பதில் மும்முரம் காட்டும் போலீசார் ராஜபாளையம் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • ஆனால் போலீசார் அபராதம் விதிப்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? என்று தெரிவித்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராட்சியான ராஜபாளையத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகன எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ராஜ பாளையம் நகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பெரும்பாலான சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு அதனை சரியாக மூடாமல் குண்டும், குழியுமாக காட்சிய ளிக்கிறது.

    இதுதவிர சத்திரப்பட்டி ரோடு ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகளும் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதனால் ராஜ பாளையம் பொது மக்கள் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி படும் அவஸ்தை சொல்லி மாளாது.

    ராஜபாளையம்-தென்காசி மெயின் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்தப்பகுதியை கடக்க குறைந்தது 30 நிமிடங்கள் ஆகிறது. ராஜபாளையத்தில் இருந்து வேறொரு பகுதிக்கு செல்ல எந்த சாலையை பயன்படுத்தினாலும் அங்கு ஏதாவது திட்டப்பணிகள் என்ற பெயரில் பள்ளம் தோண்டி வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த போதிய போலீசார் நியமிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் இஷ்டத்திற்கு சென்று மேலும் மேலும் போக்குவரத்து நெரிசலை சிக்கலாக்குகின்றன.

    ஆனால் இதை யெல்லாம் கண்டு கொள்ளாமல் தற்போது ராஜபாளையம் போலீசார் ஹெல்மெட் அணியாமல் மற்றும் விதிமுறைகளை பின்பற்றவில்லை என கூறி மோட்டார் சைக்கிள்களை மறித்து அபராதம் போடும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

    கண் எதிரே போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் சாலையின் நடுவில் வாகனங்களை மறித்து போலீசார் அபராதம் விதிப்பது ராஜபாளையம் பகுதி மக்களை கடும் அதிருப்பதியடைய செய்துள்ளது. போலீசார் வாகனத்தின் எண்களை பதிவு செய்து அபராத தொகையை செலுத்துமாறும் உரிமையாளரின் செல்போனுக்கு தகவல் அனுப்புகிறார்கள். போலீசாரின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ராஜபாளையம் நகரில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித சாலைப்பணிகளும் நடைபெறவில்லை. அதற்கு மாறாக நன்றாக இருக்கும் சாலைகளையும் பள்ளம் தோண்டி வைத்துள்ளனர். மழை காலங்களில் சேறும், சகதியுமாகவும் மற்ற நேரங்களில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சரி செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் போலீசார் அபராதம் விதிப்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×