என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி சேற்றில் சிக்கிய காட்சி.
செங்கம் சாலையில் சேற்றில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு
- பொக்லைன் எந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது
- தீப திருவிழாவுக்கு முன்பு சீரமைக்க வலியுறுத்தல்
செங்கம்:
செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணிகள் மந்தகதியாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக செங்கம் அருகே உள்ள முறையாறு, கரியமங்கலம், கொட்டகுளம், மண்மலை உள்ளிட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் தற்போது வரை மெத்தனமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக மண்மலை மற்றும் கரியமங்கலம் பகுதிகளில் நீர் வழி கால்வாய்கள் மீது சிறிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கரியமங்கலம் பகுதியில் சிறிய பாலம் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண் கொண்டு மூடப்பட்டிருந்தது. தொடர் மழையின் காரணமாக தற்காலிகமாக மண் போட்டு மூடப்பட்ட இடத்தில் சரக்கு ஏற்றி வந்த லாரி நேற்று சிக்கிக் கொண்டது.
இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நின்றன. இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் சேற்றில் சிக்கிக்கொண்ட லாரி மீட்கப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தீபத் திருவிழா நெருங்கிவரும் சூழலில் செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சூழல் உள்ளது.
எனவே இந்த சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






