என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்தில் வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.
    • விபத்தில் காயமடைந்தவர்கள் இளைஞர்கள் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை காரைகாட்டன் பஜார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் தினேஷ் (வயது 20). வேலூர் ரங்காபுரம் ஏகாம்பர தெருவை சேர்ந்த அல்லாபக்சா மகன் ஷாஜகான் (26). ஆற்காடு காந்திநகரை சேர்ந்த தமிழரசன் மகன் பாலமுருகன் (19).

    நண்பர்களான இவர்கள் 3 பேரும் இன்று அதிகாலை 3 மணியளவில் வாலாஜாவில் இருந்து ராணிப்பேட்டை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர். ராணிப்பேட்டை நாவல்பூர் புதிய ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது எதிரே சிப்காட் பகுதியிலிருந்து ராணிப்பேட்டை நோக்கி வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் பைக் மீது மோதியது.

    இதில் பைக்கில் வந்த தினேஷ், ஷாஜகான், பாலமுருகன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ஷாஜகான், பாலமுருகன் ஆகியோரை சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஷாஜகான் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட பாலமுருகனும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் 3 வாலிபர்களின் உடல் களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களான 3 வாலிபர்கள் விபத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பெண்கள் மாதந்தோறும் ஆயிரம் பெற்று வருகின்றனர்.
    • விடுபட்ட பெண்களுக்கு டிசம்பர் மாதம் முதல் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின் அவர் பேசியதாவது:-

    73 ஆயிரம் பேருக்கு இன்று ரூ.300 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது மகிழ்ச்சி அளிக்கிறது. குறுகிய காலத்தில் இந்த விழாவை மிகப்பிரமாண்டமாக மாவட்ட மாநாடு போல ஏற்பாடு செய்ததற்காக பாராட்டுகிறேன்.

    ராஜாக்கள் பெயரில் அதிக அளவில் ஊர்கள் உள்ளன. ராணிகள் பெயரில் சில ஊர்கள் மட்டுமே உள்ளன. அதில் முக்கியமானது ராணிப்பேட்டை.

    அதனால்தான் ராணிப்பேட்டையில் நடைபெறும் இந்த விழாவில் ராணிகளுக்கு அதாவது பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று நலத்திட்ட உதவிகள் பெற்ற 73 ஆயிரம் பேரில் 55 ஆயிரம் பேர் பெண்கள்.

    திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து மகளிருக்கான திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தாக விடியல் பயணத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    கடந்த 4½ ஆண்டுகளில் 820 கோடி பயணங்கள் இதன் மூலம் மகளிர் சென்றுள்ளனர். இதன்மூலம் மாதம் ரூ.900 முதல் ஆயிரம் வரை சேமிக்கிறார்கள்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த திட்டத்தில் 8 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது அரசின் மிகப்பெரிய வெற்றி. அனைவரும் உயர் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த திட்டத்தில் 8 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் பயனடைகின்றனர். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தங்கள் பிள்ளைகள் பசியுடன் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகிறார்கள்.

    இதன் மூலம் தரமான உணவு, கல்வி வழங்கப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தில் தினமும் 22 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 25,000 குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.

    இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தன.

    கடன் சுமை, நிதிச் சுமை இருந்தாலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 20 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பெண்கள் மாதந்தோறும் ஆயிரம் பெற்று வருகின்றனர்.

    விடுபட்ட பெண்களுக்கு டிசம்பர் மாதம் முதல் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும். இந்த அறிவிப்பை நான் தான் சட்டசபையில் வெளியிட்டேன்.

    திராவிட மாடல் அரசின் திட்டங்களை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் செயல்படுத்தப்படும் மாநிலமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புடன் செயல்பட்டு வருகிறார்.

    மகளிர் குழுவினருக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் அரசு பஸ்களில் சுமார் 25 கிலோ எடை வரை 100 கிலோ மீட்டர் தூரம் வரை இலவசமாக பொருட்களை எடுத்துச் செல்லலாம்.

    எனவே மகளிர் குழுவினர் உங்களுடைய அடையாள அட்டைகளை பாதுகாப்பாக வைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழகத்தில் கடந்த 4½ ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 12,000 பேருக்கு பட்டா கிடைக்கப் பெற்றுள்ளது.

    பட்டா கேட்டு அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்ற நிலைமை மாறி அரசு தேடி வந்து பட்டா வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அன்பு கரங்கள் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

    விளையாட்டில் ஈடுபடுங்கள் உங்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இன்று அரசு நலத்திட்ட உதவிகள் பெற்ற அனைவருக்கும் பாராட்டு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல திராவிட மாடல் அரசுக்கும் முதலமைச்சருக்கும் உங்கள் ஆதரவு தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • கலவைநகரம், கணியந்தாங்கல், கணியனூர், மேச்சேரி, அரும்பாக்கம்,

    திமிரி:

    ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த திமிரி, கலவை, ஆனைமல்லூர், தாமரைப்பாக்கம், புதுப்பாடி, சென்னலேரி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திமிரி, விளாப்பாக்கம், ஆனைமல்லூர், காவனூர், தாமரைப்பாக்கம், சாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடப்பந்தாங்கல், கிளாம்பாடி, சின்னகுக்குண்டி, கீராம்பாடி, பெரியகுக்குண்டி, புதுப்பாடி, மாங்காடு, லாடாவரம், மேல்நெல்லி, வளையாத்தூர், மழையூர், கலவைபுதூர், மேல் நேத்தபாக்கம் தி.புதூர், பிண்டித்தாங்கல், நல்லூர் அல்லா ளச்சேரி, வெள்ளம்பி, குட்டியம் பின்னத்தாங்கல், கலவைநகரம், கணியந்தாங்கல், கணியனூர், மேச்சேரி, அரும்பாக்கம், சென்னலேரி, கே.வேளுர் மற்றும் அதனை கற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை ஆற்காடு செயற்பொறியாளர் ச.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. அரசு ஒருபோதும் யாரையும் கண்டு அஞ்சாது.
    • பா.ஜ.க உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு கூட தி.மு.க. ஒருபோதும் அஞ்சியதில்லை.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவரிடம் கரூர் சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?, அவரை பார்த்து தி.மு.க. பயப்படுகிறதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த துரைமுருகன் தி.மு.க. அரசு ஒருபோதும் யாரையும் கண்டு அஞ்சாது. எவரையும் பார்த்து அஞ்ச வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இல்லை. பா.ஜ.க உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு கூட தி.மு.க. ஒருபோதும் அஞ்சியதில்லை.

    தொடர்ந்து தி.மு.க. மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் எந்த குற்றச்சாட்டு கண்டும் தி.மு.க. அஞ்சாது. விஜய்க்கு போதுமான அளவுக்கு பக்குவம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளம்பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
    • இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    வேலூரை சேர்ந்ததாக கூறப்படும் இளம்பெண் தனது காதலனுடன் ராணிப்பேட்டை மாவட்டம் நவ்லாக் பண்ணை பகுதிக்கு நேற்று இரவு வந்ததாக கூறப்படுகிறது.

    அங்கு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அவரகரையை சேர்ந்த 3 பேர் காதலர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் நகை, பணம் கேட்டு மிரட்டினர். இதையடுத்து இளம்பெண்ணின் காதலனை அடித்து உதைத்தனர். அடி தாங்க முடியாமல் வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது.

    பின்னர் தனியாக இருந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக அந்த இளம்பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தி.மு.க. குடும்பத்துக்காக பாடுபடும் இயக்கம். அ.தி.மு.க. மக்களுக்காக பாடுபடும் இயக்கம்.
    • தி.மு.க. ஆட்சியில் மருத்துவமனைக்கு கையோடு போனால் கை இல்லாமல் வருகிறார்கள்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை சோளிங்கர் தொகுதிகளில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பின்னர் அரக்கோணம் காந்தி சாலையில் குழுமியிருந்த மக்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்றார் உதயநிதி. அரக்கோணத்திலாவது உங்கள் ரகசியத்தை சொல்லுங்கள். மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார். போட்டோ ஷூட் எடுப்பார். குழு அமைப்பார் அவ்வளவுதான். இதுவரை 52 குழு அமைத்து கிடப்பில் கிடக்கிறது. மக்களை ஏமாற்றுவதில் சாதனை படைத்திருப்பது தி.மு.க. அரசு.

    ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாகப் போற்றப்பட்ட தமிழக காவல்துறை இப்போது ஏவல்துறையாக மாறிவிட்டது. இன்று இவ்வளவு பெரிய கூட்டம் நடக்கிறது. எங்காவது காவல்துறை இருக்கிறதா?. இதுவே ஸ்டாலின் நடத்தும் கூட்டத்துக்கு 2 ஆயிரம் காவலர்களை நிறுத்துகிறார்கள். ஏனென்றால், ஸ்டாலினுக்கு மக்கள் கூட்டம் வராது. அதனால் காவல்துறையை நிறுத்தி கூட்டத்தைக் காட்டுகிறார்கள். நீங்கள் பாதுகாப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் எங்கள் தொண்டர்கள் மக்களை பாதுகாப்பார்கள்.

    தி.மு.க. குடும்பத்துக்காக பாடுபடும் இயக்கம். அ.தி.மு.க. மக்களுக்காக பாடுபடும் இயக்கம். இதுதான் வித்தியாசம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது இயக்கத்தை உடைக்க சதித் திட்டம் தீட்டியும் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. சில சுயநலவாதிகள் நம் ஆட்சியை கவிழ்க்க எதிரியோடு இணைந்து பணியாற்றினார்கள். அதையும் முறியடித்தோம். தி.மு.க.வின் சூழ்ச்சியை மக்கள் ஆதரவோடு தவிடுபொடியாக்கினோம்.

    இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்குபவரும் அ.தி.மு.க. தலைவரைப் போற்றித்தான் கட்சி தொடங்க வேண்டிய நிலை இருக்கிறது. அப்படி நமது தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தனர். வருகிற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற நல்லாதரவை தரவேண்டும்.

    ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து ஏழை மக்கள் உயர்தர சிகிச்சை கொடுத்தோம். ஒரு மருத்துவக் கல்லூரியை தி.மு.க. அரசால் கொண்டுவர முடிந்ததா?. வறட்சி ஏற்பட்ட காலங்களில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசுதான்.

    தி.மு.க. ஆட்சியில் மருத்துவமனைக்கு கையோடு போனால் கை இல்லாமல் வருகிறார்கள். காலோடு போனால் உயிரில்லாமல் வருகிறார்கள். கடலூரில் சளிக்கு சிகிச்சை பெற போன இடத்தில் நாய்க்கடி ஊசி போட்டார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாரத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறார். மக்களை காப்பதற்கு அமைச்சர் பதவி கொடுத்தால் இவர் ஓடிக்கொண்டே இருக்கிறார். ஓடுவதை நிறுத்துங்கள். மருத்துவமனைகளுக்கு ஆய்வுக்கு செல்லுங்கள்.

    அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தாலிக்குத் தங்கம் திட்டம் தொடரும். மணமகளுக்கு பட்டுசேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி வழங்கப்படும். தி.மு.க. எந்த கோரிக்கையையும் நிறைவேற்றிய வரலாறு கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியில் கன்னியாகுமரி-திருப்பதி கனரக தொழிற்வட்ட சாலைத் திட்டத்தில் அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம், திருத்தணி வரை சாலை அமைக்க ரூ.350 கோடியில் டெண்டர் விடப்பட்டு, இன்னமும் நிறைவடையாமல் உள்ளது. இதுதான் தி.மு.க. அரசின் நிலைப்பாடு.

    அரக்கோணம் நகரத்துக்கு ரூ.110 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.57 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு அரசு கலைக் கல்லூரியாக மாற்றப்பட்டு ரூ.7 கோடியில் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விடுதி கட்டப்பட்டது. அரக்கோணத்தில் ரூ.8 கோடியில் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. நெமிலி ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டது.

    மேலும் ரெயில்வே மேம்பாலம் வேண்டும், பழனிபேட்டையில் உள்ள ரெட்டைக்கண் பாலத்துக்கு பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும், அரக்கோணம் மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், சுரங்கப்பாதை, நான்குவழிச்சாலை போன்ற கோரிக்கைகளை கொடுத்திருக்கிறீர்கள். அ.தி.மு.க. அரசு அமைந்ததும் நிறைவேற்றப்படும். அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திமுகவின் 51 மாத ஆட்சியில் கிராமம் முதல் நகரம் வரை போதை விற்பனை நடக்கிறது.
    • தமிழகத்தை ஒரு குடும்பம் சுரண்டி வருவதை தடுக்கும் தேர்தல் இது.

    ராணிப்பேட்டையில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை நகரமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம். அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நம் கூட்டணி வேட்பாளர் இத்தொகுதியில் வெற்றி பெறப்போகிறார் என்பதற்கு இந்தக் கூட்டமே சாட்சி.

    அதிமுக ஆட்சியில்தான் நீங்கள் நீண்ட நாட்களாக வைத்த கோரிக்கையான ராணிப்பேட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவித்தோம். இது மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு.

    ஏனென்றால் இதற்கு 400 கோடி ரூபாய் நிதி வேண்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கண்காணிப்பாளர் அலுவலகம் என பல துறை அலுவலகங்கள் அமைக்க வேண்டும். நீங்கள் பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தது அதிமுக அரசு.

    சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், முதியோர் என ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள் விற்பனையால் இளைஞர்கள் சீரழிகிறார்கள். திமுகவின் 51 மாத ஆட்சியில் கிராமம் முதல் நகரம் வரை போதை விற்பனை நடக்கிறது. இதனால் குடும்பமே. நடுத்தெருவுக்கு வருகிறது.

    போதை ஆசாமிகளால் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை எல்லாம் நடக்காத நாளே இல்லை. செய்திகளில் பார்த்தால் கொலை நடக்காத நாளே இல்லை, கொலை நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது.

    7 மாதத்தில் 850 கொலைகள் நடந்திருக்கிறது. கடந்த 18 நாட்களில் இந்த மாவட்டத்தில் 63 கொலைகள் நடந்திருக்கிறது. ஒரு மாநிலம் அனைத்து துறையிலும் சிறந்து விளங்க சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். இன்றைக்கு பொம்மை முதல்வர் ஆள்வதால் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

    திமுக குடும்ப கட்சியின் ஆட்சியாக மாறிவிட்டது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் 2026. தமிழகத்தை ஒரு குடும்பம் சுரண்டி வருவதை தடுக்கும் தேர்தல் இது, ஒரு குடும்பம் பிழைப்பதற்காக தமிழகம் இருக்கிறது..?

    திமுக நாளுக்கு நாள் தேய்கிறது அதனால்தான் வீடுவீடாக கதவைத் தட்டி உறுப்பினர் சேர்க்கைக்கு கெஞ்சிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். திமுக எந்தளவுக்கு செல்வாக்கு இழந்திருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். மக்கள் மட்டுமின்றி கட்சியினர் செல்வாக்கையும் இழந்துவிட்டது.

    இந்த 51 மாதமும் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. குடும்பத்தை பற்றிதான் சிந்தித்தனர். உதயநிதிக்கு எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதல்வர் கொடுத்ததுதான் சாதனை. வேறு என்ன இருக்கிறடு? அதிமுக ஆட்சி சாதனை என்றால் மாவட்டத்தை பிரித்து மக்கள் நன்மதிப்பை பெற்றோம், திமுக அப்படியா?

    ஸ்டாலினும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் நடந்துசெல்கிறார்கள், அச்சமயம் உதயநிதி ஒரு படத்தில் நடத்திருந்ததைப் பற்றி பேசிக்கொண்டு செல்கிறார்கள். நாட்டு மக்கள் பற்றி பேசினால் பரவாயில்லை, மகன் படம் மூலம் வருமானம் வருகிறதா என்று கேட்கிறார். ஆக மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை, மகனைப் பற்றிதான் சிந்திக்கிறார். ஓட்டுக்களை வாங்கும்வரை கவர்ச்சியாகப் பேசுவார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை மறந்துவிடுவார்கள்.

    திமுக 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். கொஞ்ச நஞ்ச பொய் இல்லை, மூட்டை மூட்டையாக பொய் சொல்கிறார்கள். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் சிலவற்றைச் சொல்கிறேன்.

    100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார், சம்பளம் உயர்த்தப்படும் என்றார், ஆனால் செய்யவில்லை. இப்போது 100 நாள் வேலைத்திட்டம் 50 நாளாக சுருங்கிவிட்டது.

    தொழிலாளிகளுக்கான சம்பளத்தையே அதிமுக தான் மத்திய அரசிடம் போராடி வாதாடி, முதற்கட்டமாக 2999 கோடி ரூபாய் பெற்றுக்கொடுத்தோம். ஆட்சியில் இருப்பது திமுக, ஆனால் நிதி பெற்றுக்கொடுப்பது அதிமுக. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான்.

    கேஸ் சிலிண்டருக்கு மானியம் 100 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள், கொடுக்கவில்லை. மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் ரத்துசெய்யப்படும் என்றனர், ரத்து செய்யவில்லை. பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்றனர், பெட்ரோல் விலையை மட்டும் பெயரளவுக்குக் குறைத்தனர். ஆனால், விவசாயிகள், மீனவர்கள் பெருமளவு பயன்படுத்துவது டீசல்தான். அதற்கான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    நீட் தேர்வு ரத்து செய்வதுதான் எங்கள் ஆட்சியின் முதல் கையெழுத்து என்றார் ஸ்டாலின். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றார் உதயநிதி. அதனை ராணிப்பேட்டையில் வந்து சொல்லுங்கள், எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள். அவர்களின் கொஞ்சநேரம் பேச்சைக்கேட்டால் உண்மை என்று நம்பிவிடுவீர்கள் அதனையும் பொய். திமுகவுக்கு முதலீடே பொய்தான்.

    இதே அதிமுக அறிவித்த அறிவிப்பை நிறைவேற்றிய கட்சி. அம்மா மிக்ஸி, ஃபேன் கொடுத்தோம். சீருடை, புத்தகம், லேப்டாப் எல்லாம் கொடுத்தோம். திறமையான மாணவர்களை உருவாக்கிக் கொடுத்தோம், அதைப் பொறுக்க முடியாமல் லேப்டாப் நிறுத்திவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சிஅமைந்ததும் இத்திட்டம் தொடரும்.

    உரிமைத் தொகை கொடுத்தோம் என்று ஸ்டாலின் சொல்கிறார். அவர் தானாகக் கொடுக்கவில்லை, தாய்மார்கள் பட்ட கஷ்டத்தைப் பார்த்துக் கொடுக்கவில்லை. அதிமுகதான் தொடர்ந்து அதுக்குப் போராடியது. அதன்பிறகுதான் 28 மாதங்கள் கழித்து உரிமைத் தொகை கொடுத்தனர்.

    இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு கொடுப்பதாகச் சொல்கிறார். தேர்தலுக்கு 8 மாதம் உள்ளது. அதுவும் பெண்கள் கஷ்டத்தைப் பார்த்துக் கொடுக்கவில்லை, தேர்தலுக்கு பெண்கள் வாக்கு தேவை அதுக்காகவே கொடுக்கிறார்கள். இவர்களுக்கு வெறும் 8 மாதம் தான் கிடைக்கும், 52 மாதம் பணம் கிடைக்கவில்லை. மக்களைப் பற்றி கவலைப்படாத கட்சி திமுக.

    எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு அடிமையாகிவிட்டார் என்கிறார் ஸ்டாலின். நீங்க சிந்தித்துப் பாருங்கள், 1998 அதிமுக, பாஜக கூட்டணி திருச்செங்கோட்டில் வென்று நான் எம்பியானேன், அதன்பிறகு அம்மா விலகிய பின்னர் திமுக பாஜகவோடு 1999 மற்றும் 2001 ஆகிய தேர்தல்களில் கூட்டணி வைத்தது.

    மத்தியிலும் திமுக அங்கம் வகித்தது. அப்போதெல்லாம் பாஜக மோசமான கட்சியல்ல, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாதக் கட்சி. திமுகவுக்கு ஆட்சி அதிகாரம் தேவை என்றால் யார் காலையும் பிடிப்பார்கள். அந்தக் கூட்டணியிலாவது விசுவாசமாக இருந்தார்களா என்றால் இல்லை, 5 ஆண்டு பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு உடனே காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்துவிட்டது. அவர்களுக்கு கொள்கையும் கிடையாது கோட்பாடும் கிடையாது, அதிகாரம் தான் முக்கியம்.

    எங்களை பொறுத்தவரை கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலுக்கு அமைக்கப்படுவது, கொள்கை என்பது நிலையானது மாறாது. அந்த அடிப்படையில் மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது அதிமுக நிலைப்பாடு, ஊழல் நிறைந்த திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது பாஜக நிலைப்பாடு, இரண்டு பேருக்கும் ஒத்த கருத்து திமுகவை அகற்றுவது அதனால்தான் கூட்டணி சேர்ந்திருக்கிறோம். ஸ்டாலின் இதை அப்படியே மாற்றி இபிஎஸ் மதவாதக் கட்சிக்கு அடிமையாகிவிட்டார் என்கிறார்.

    நகர்மன்ற உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி வைக்கவில்லை, இப்ப திமுகவை அகற்ற கூட்டணி அமைத்திருக்கிறோம். சிறுபான்மை மக்களிடம் வெறுப்பபை உண்டாக்கும் வகையில் பேசுகிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும், அதிமுக மீது பழி சுமத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் நாடகம்.

    சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் அரசு அதிமுக தான். எம்ஜிஆர், அம்மா, அவருக்குப் பிறகும் என 31 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த கட்சி அதிமுக. இந்தக் காலகட்டத்த்தில் மத, ஜாதி சண்டை கிடையாது, அமைதிப்பூங்காவாக தமிழகம் திகழ்ந்தது.

    அம்மா முதல்வராக இருந்தபோது ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி வழங்கப்பட்டது. நாகூர் தர்கா சந்தனம் விலையில்லாமல் கொடுத்தோம், ஹஜ் மானியம் 12 கோடி ரூபாய் வழங்கினோம், உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் கொடுத்தோம், சென்னை ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி நிதியளித்தோம், ஹாஜிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கினோம், உலமாக்களுக்கு மோதினார்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தினோம், உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் ரூ.25 ஆயிரம் கொடுத்தோம், வக்ப் வாரிய ஆண்டு நிர்வாக மானியம், தர்கா பள்ளிவாசல் கட்டிட நிதி வழங்கினோம்.

    இஸ்லாமியர்களுக்கு நேரடி நியமன முறையில் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறையை நீடிக்க அரசாணை வெளியிட்டோம். கஜா புயலால் நாகூர் தர்கா குலக்கரை சேதமடைந்தது, நானே பார்வையிட்டு சரிசெய்ய ரூ.4 கோடியே 25 லட்ச ரூபாய் கொடுத்தோம்.

    சிறுபான்மை மேம்பாட்டுக் கழகம் அமைத்தோம். 2017ல் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு குறித்த மணிமண்டபம் திறக்கப்பட்டது, கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைத்தோம், ராமேஸ்வரத்தில் மறைந்த அப்துல் கலாம் பெயரில் அரசு கலை அறிவியல் கல்லூரி கொடுத்தோம். இஸ்லாமியர்களின் பெரும்பான்மை கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுத்தோம்.

    இந்தப் பகுதியில் மரியாதைக்குரிய முகமது ஜான் அவர்களை எம்.பி.யாக்கினோம். சிறுபான்மை மக்கள் குரல் மாநிலங்களவையில் ஒலிக்க எம்பி பதவி கொடுத்தோம். எங்களுக்கு ஜாதி,மதம் கிடையாது, ஆண் ஜாதி ,பெண் ஜாதி இரண்டுமட்டுமே. நாங்கள் வாக்குக்காக சொல்லவில்லை, என்ன செய்தோம் என்பதைச் சொல்கிறோம்.

    சிறுபான்மை மக்கள் உணரவேண்டும் என்பதற்காக சொல்கிறோம். திமுக சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்கள், கொள்கையுடன் நடப்பது அதிமுக. அவரவர் மதம் அவரவருக்கு புனிதமானது அதில் ஒருபோதும் அதிமுக தலையிடாது. எந்த மத்ததை சார்ந்தவரும் எவருக்கும் அடிமையில்லை.

    கிறிஸ்தவ பெருமக்களுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள், தேவாலய புனரமைப்பு நிதி, ஜெருசலேம் புனித பயணம் நிதியுதவி ரூ.38 ஆயிரமாக உயர்த்தி வழங்கினோம், சிறுபான்மை கல்வி உதவித்தொகை, அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளில் 37 லடத்து 16 ஆயிரம் மாணவர்களுக்கு 884 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. சிறுபான்மை கல்வி அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட உதவினோம்.

    2026 தேர்தல் ஊழல் நிறைந்த மக்கள் விரோத திமுகவை வீழ்த்துவதாக இருக்க வேண்டும். மேல்விஷாரம் பகுதியில் 557 இஸ்லாமியர்கள் நீண்டநாள் குடியிருந்தனர், மாற்று இடம் கொடுத்து வீடுகளை அப்புறப்படுத்தினால் சரியாக இருந்திருக்கும், ஆனால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும் வகையில் வீடு ஒதுக்காமல் அவர்களின் வீடுகளை இடித்துள்ளனர். அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் மேல்விஷாரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

    அதேபோல், இந்த மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலத்துக்கு கனிமவளம், மணல் கடத்துறாங்க, அது யாரென்பது உங்களுக்கு தெரியும். இனி காவல்துறையும், வருவாய்த்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும், அப்படி தடுக்காவிட்டால், எல்லா லாரிகளும் டோல்கேட் வழியாகத்தான் போகுது, அதையெல்லாம் தோண்டி எடுத்து யாரெல்லாம் இந்தக் காலகட்டத்தில் மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்தார்களோ அவர்கள் மீது அதிமுக ஆட்சியில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஸ்டாலின் அவரையே சூப்பர் முதல்வர் என்று சொல்லிக்கொள்கிறார்.

    எதில் என்றால் கடன் வாங்குவதில்தான்..? இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் என்ற பெருமை ஸ்டாலினை சேரும். 5 ஆண்டுகளில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன். நாம் தான் கட்டியாக வேண்டும். மக்கள் மீது கடனை சுமத்திய அரசு தொடர வேண்டுமா? ஏற்கனவே வரிகளையெல்லாம் உயர்த்திட்டாங்க, மின்கட்டணத்தையும் உயர்த்திட்டாங்க.

    தமிழகத்தில் நிர்வாக்க கோளாறு. இப்போது இருக்குற டிஜிபி ஓய்வு பெற இருக்கிறார். வருகிற 31ம் தேதியோடு ஓய்வு. 3 மாதத்துக்கு முன்பாகவே மத்திய அரசுக்கு தகுதியான பட்டியல் அனுப்ப வேண்டும். மத்திய அரசு மூவரைத் தேர்வுசெய்து மாநில அரசுக்கு அனுப்புவார்கள்.

    அதில் ஒருவரை தமிழக அரசு நியமிக்க வேண்டும். ஆனால் இன்னும் 10 நாள்தான் இருக்கிறது. இன்னும் இந்த அரசு பட்டியலை அனுப்பாமல் தடுமாறிக்கொண்டு இருக்குது, அவர்களுக்கு சாதகமானவரை நியமிக்க முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகம் வருகிறது.

    டிஜிபி முக்கியமான பொறுப்பு. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இதுக்கு தலைமை இல்லாவிட்டால் யார் கவனிப்பது…? உடனே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் வீடு வீடாக வந்தார்களா? நான்கு வருடங்கள் மக்களை பற்றி கலவைப்படலை, மனுவை வாங்கி தீர்வு காண்பாராம் நடக்குமா? 46 பிரச்னை இருப்பதாக முதல்வரே ஒப்புக்கொண்டார். இத்தனை பிரச்னை இருந்தும், அவற்றை தெரியாமல் இருக்கும் முதல்வர் ஆளவேண்டுமா?

    அதிமுக அரசு அமைந்தவுடன் ஏழை ,தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும். இந்த மாவட்டத்தில் மந்திரி இருக்கிறார், அவர்தான் வேட்டி சேலை கொடுக்கவேண்டும். அவர் முறையாக கொடுக்கவில்லை. நான் சட்டமன்றத்தில் பேசியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இது பற்றி விசாரிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை மக்களுக்கு கொடுப்பதில் ஊழல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதிமுக ஆட்சி அமைந்ததும், தீபாவளிதோறும் சேலை வழங்கப்படும். தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் தொடரும், மணமகனுக்கு பட்டுவேட்டி, மணமகளுக்கு பட்டுச்சேலை கொடுக்கப்படும்.

    ராணிப்பேட்டைக்கு காவிரி கூட்டுக்குடிநீர், மேல்விஷாரத்தில் குடிநீர் தேவை பூர்த்தி செய்தோம், நீர்த்தேக்க தொட்டி, மருத்துவமனை தரம் உயர்த்தல், மாவட்ட எஸ்பி அலுவலகம், சிப்காட் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டு அதில் ஃபேஸ் 3, 599 ஏக்கர் நிலத்தில், 53 தொழிற்சாலைகள் அறிவிக்கப்பட்டு, இப்போது 35 தொழிற்சாலைகள் தான் இயங்குகிறது.

    அதிமுக ஆட்சி அமைந்ததும் மீதமுள்ள நிலத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுப்போம். இன்னும் நிறைய திட்டங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.

    அடுத்தாண்டு தேர்தல் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி வேட்பாளருக்கு அவர்கள் சின்னத்துக்கும் ஓட்டளித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மக்களின் செல்வாக்கையும், கட்சியின் செல்வாக்கையும் திமுக இழந்துவிட்டது.
    • திமுக என்ற கட்சி இன்று நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டிருக்கிறது.

    ராணிப்பேட்டையில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தை ஒரு குடும்பம் சுரண்டுவதை தடுத்து நிறுத்துவதற்கான தேர்தல் 2026ல் நடைபெறுகிறது.

    மக்களின் செல்வாக்கையும், கட்சியின் செல்வாக்கையும் திமுக இழந்துவிட்டது.

    திமுக என்ற கட்சி இன்று நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டிருக்கிறது.

    உதயநிதியை துணை முதலமைச்சராக்கியது தான் திமுக செய்த சாதனை.

    திமுக ஆட்சியில் மக்கள் கனவில் தான் வீடு கட்ட முடியும். திமுக ஆட்சியில் விவசாயி, நெசவாளர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இச்சிப்புத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • ஈசலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூர் துணை மின் நிலையத்தில் ஆகஸ்டு 19-ந் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    அதன்படி இச்சிப்புத்தூர், வடமாம்பாக்கம், எம்ஆர்எப், தணிகைபோளூர், வாணியம் பேட்டை, தண்டலம், உளியம் பாக்கம், வளர்புரம், ஈசலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    • உதயநிதி ஸ்டாலின் பேசும்போது பிரச்சினை ஆக்குகின்றனர்.
    • சங்பரிவார் தமிழகத்தில் காலுன்றிவிடக்கூடாது என கவலைபடுகின்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி

    ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்து மதத்தை மட்டும் நீங்கள் விமர்சிப்பதாக கேட்கிறார்கள். அது சகோதரத்துவமாக இல்லை என்பதுதான் பிரச்சனை. பாஜக, ஆர்எஸ்எஸ் இதை ஏன் சுய விமர்சனமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் நம் கேள்வி. திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக என அனைவரும் மதச்சார்பின்மை கொள்கையில் உள்ளோம்.

    காங்கிரசோடு நமக்கு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மதசார்பின்மை கொள்கையில் உறுதியோடு இருக்கிறோம். சனாதானத்தை பற்றி திருமாவளவன் பேசியபோது பிரச்சனை ஆகவில்லை. உதயநிதி ஸ்டாலின் பேசும்போது பிரச்சினை ஆக்குகின்றனர். எங்கள் கருத்து இந்து சமூகத்திற்கு எதிரான கருத்து இல்லை. கருத்தியலுக்கு எதிரானதுதான்.

    எடப்பாடி.பழனிசாமி, பாஜக வை உடன் வைத்துக்கொண்டு தமிழகத்தை காப்போம் மக்களை மீட்போம் என்கிறார். நாம் மதச்சார்பின்மை காப்போம் என்கிறோம்.

    தற்போது நடைபயணம் கிளம்பியுள்ளவர்கள் எல்லாம் பா.ஜ.க.வை ஆதரிப்பவர்கள். தி.மு.க. தனியாகவே எதிரிகளை சந்திக்கும் அவர்களுக்கு திருமாவளவன் போன்றவர்கள் தேவை இல்லை.

    ஆர்எஸ்எஸ் உள்பட இயக்கங்களை எதிர்க்க கொள்கை உள்ள நாங்கள் உடன் இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி அழைத்ததாக நான் கூறினேனா? துணை முதல்வர் பதவி தருவதாக அழைக்கின்றனர்.

    நான் முதல் அமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? நானும் ரவுடிதான் என யார் யாரோ கிளம்புகின்றனர். முதல்-அமைச்சர் ஆக்குங்கள் என்கின்றனர்.

    நானும் 35 ஆண்டுகளாக அரசியல் பொது வாழ்க்கையில் உள்ளேன். கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின், ராகுல் என அனைவரோடும் அரசியலில் பயணித்துள்ளேன். துணை முதல் அமைச்சர் என ஆசை காட்டினால் நான் சென்று விடுவேன் என நினைக்கின்றனர்.

    கொள்கை அரசியலில் செயல்படும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. சங்பரிவார் தமிழகத்தில் காலுன்றிவிடக்கூடாது என கவலைபடுகின்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதனால் தி.மு.க.வுடன் உறுதியாக நிற்கிறோம் பயணிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், விசிக தலைவர் பேச்சு.

    ராணிப்பேட்டையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதச்சார்பின்மை காப்போம் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அப்போது பேசிய திருமாளவன், " தமிழகத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்கள் எல்லாம் மதசார்பின்மைக்கு எதிரானவர்கள்" என்று கூறினார்.

    தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், தமிழகத்தில் சுற்றுப்யணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • சிக்னல்கள் இயங்க தடைபட்டதால் அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
    • தொடர்ந்து ரெயில்வே துறை அதிகாரிகள் மின் சாதன கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கும் புளியமங்கலம் ரெயில் நிலையம் இடையே மின்சாதன கோளாறு ஏற்பட்டது .

    இதனால் சிக்னல்கள் இயங்க தடைபட்டதால் அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    தொடர்ந்து ரெயில்வே துறை அதிகாரிகள் மின் சாதன கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றன.

    குறிப்பாக கோவையில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில், கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

    இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். குறித்த நேரத்திற்கு பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறுகையில்:-

    மின்சார துண்டிப்பு, தண்டவாளம் பழுது, மின்சார கோளாறு என பல்வேறு காரணங்களால் அரக்கோணத்தில் ரெயில்கள் இயக்கம் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடும் அவதி அடைந்து வருகிறோம். அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளை மேற்பார்வையிட்டு இது போன்ற தவறை இனி நடக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×