என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் துரைமுருகன்"
- காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
- விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கப்படவில்லை.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஓர் அணையை மேகதாதுவில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக அரசு தன்னிச்சையாகத் தயாரித்து, மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 2018ஆம் ஆண்டில் சமர்ப்பித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு மாண்பமை உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
இத்திட்டத்தை மேற்கொள்வதற்காகத் தேவைப்படும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கான ஆய்வு வரம்புகளுக்கு (Terms of Reference) ஒப்புதல் பெறுவதற்காக, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தை கர்நாடக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு அணுகிய போது, மற்றொரு மனுவை மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து தமிழ்நாடு அரசு அதைத் தடுத்து நிறுத்தியது.
இதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் மேகதாது திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியபோது, தமிழ்நாடு அரசு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, அதற்கான எந்தவிதமான அனுமதியையும் அளிக்கக்கூடாது என்று ஒன்றிய அரசையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 21-3-2022 அன்று ஒருமனதாக தீர்மானத்தையும் இந்த அரசு நிறைவேற்றியது.
மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களை 31-3-2022 மற்றும் 26-5-2022 அன்று நேரில் சந்தித்த போது மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என ஒன்றிய ஜல்சக்தி அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் வலியுறுத்தினார்.
இந்த காலக்கட்டத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடக அரசின் கருத்துருவை பரிசீலிக்க அதிகாரம் உள்ளது என ஒன்றிய அரசு கருத்து தெரிவித்ததையடுத்து, இந்த விரிவான அறிக்கை பற்றிய பொருண்மைகள் இந்த ஆணையத்தின் விவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்ட போதும், இதனை பரிசீலிப்பதற்கான அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு இல்லை என்பதை வலியுறுத்தி மேலும் ஒரு மனு 7-6-2022 அன்று தமிழ்நாடு அரசால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் அடிப்படையில், அன்றிலிருந்து இன்றுவரை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை விவாதிக்கப்படவில்லை.
மேலும், தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு தொடர் முயற்சிகளின் பயனாக, மேகதாது அணை பற்றிய கருத்துருவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 9-2-2024 அன்று திருப்பியனுப்பியது. இது தமிழ்நாடு அரசின் முயற்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும்.
இந்த சூழ்நிலையில், மேகதாது அணை குறித்துப் பேசிய மாண்புமிகு கர்நாடக மாநில முதலமைச்சர் அவர்கள், இந்த பாசன ஆண்டு 2025-2026இல் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய நீரின் அளவை விட கூடுதலாக நீர் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ள கூற்று எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடிய ஆண்டுகளில் வேறுவழியின்றி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு நீரைத் திறந்து விடுகிறதேயன்றி, வறட்சி ஆண்டுகளில் நமக்கு விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவிற்கான நீர் வழங்கப்படுவது இல்லை என்பதையும், மேகதாது அணை கட்டப்பட்டால் வறட்சி ஆண்டுகளில், நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீர் கிடைக்காத சூழல் உருவாகும் என்பதையும் அனைவரும் அறிவார்கள். எனவே, மேகதாதுவில் அணை கட்டப்படுவது என்பது, தமிழ்நாட்டு விவசாயிகளை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குவதோடு, காவிரி நதிநீர்ப் பிரச்சினை தொடர்பான நடுவர் மன்றம் மற்றும் மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முரணாகவும் அமையும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
இந்நிலையில், இந்த அணை தொடர்பான வழக்குகளை விசாரித்த மாண்பமை உச்சநீதிமன்றம், இன்று (13-11-2025) மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் கருத்துக்கள் அனைத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமத்திடம் தெரிவிக்கலாம் என்றும், தமிழ்நாடு அரசின் கருத்துக்களைக் கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில், வெற்றிகரமாக மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தியதைப் போன்றே, இனியும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமும், மத்திய நீர்வளக் குழுமத்தின் முன்பும் தமிழ்நாடு அரசு தனது வலுவான வாதங்களை முன்வைக்க உள்ளது.
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மாண்பமை உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாக சில தவறான தகவல்கள் வெளிவருவது கண்டிக்கத்தது என்பதையும், இத்தகவலில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்படும் திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரை, காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து மாண்பமை உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் எந்தவொரு முயற்சியையும், தமிழ்நாடு அரசு முளையிலேயே கிள்ளி எறியும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வடமாநில தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற கருத்து உள்ளது.
- வாக்காளர்கள் சிறப்பு திருத்தத்தில் அச்சம் உள்ளது.
வேலூர்:
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 3-ந்தேதி வேலூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், கட்சியினர் சார்பிலும் செய்யப்பட்டு வருகிறது.
அவர் 4-ந் தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் சுமார் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக அங்கு விழா மேடை அமைப்பது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் கடலுக்கு செல்கிறது. எனவே தமிழகத்தில் உள்ள ஆறுகளை புனரமைக்க பூகோலப்படி, சாத்தியமா என ஆய்வு செய்கிறோம். அவ்வாறு ஆய்வுக்கு பின்னர் நிதி வசதி இருந்தால் செய்யலாம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வடமாநில தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற கருத்து உள்ளது. இது ஆபத்து தான்.
ஒரே இடத்தில் 700 இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றால், அவர்களை வாக்காளர் சிறப்பு திருத்தத்தில் நீக்கிவிட்டு அவர்களின் பெயரை சேர்த்து விடுவார்கள்.
வாக்காளர்கள் சிறப்பு திருத்தத்தில் அச்சம் உள்ளது. அதுதான் பிரச்சனையே. ஆண்டாண்டு காலமாக இங்கிருந்து வாக்களிப்பவர்களை இல்லையென்று ஆக்கிவிடுவார்கள்.
எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ள பாதிப்பு ஏற்படும்போது மக்களுடன் இருப்பது அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள்தான்.
- ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்ற வேதனை இருக்கிறது .
செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து மக்கள் பிரதிநிதிக்கு சொல்வது கட்டாயமில்லையா? மூத்த அமைச்சர், மாபெரும் கட்சியின் பொதுச் செயலர் இப்படி கேள்வி கேட்கலாமா?
அமைச்சர் துரைமுருகனின் பேச்சு வருத்தம் அளிக்கிறது. நான் கேள்வி கேட்டது குற்றம் என அவர் நினைப்பது நியாயமா? வெள்ள பாதிப்பு ஏற்படும்போது மக்களுடன் இருப்பது அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள்தான்.
பட்டியலினத்தவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆட்சி திமுக ஆட்சி; குறிப்பாக முதல்வர் இந்த விஷயத்தில் கண்ணும், கருத்துமாக இருக்கிறார்; துணை முதல்வரும் இரவும், பகல் பாராமல் வேலை செய்கிறார்.
ஆனால் ஒன்றிரண்டு அதிகாரிகள் செய்யும் தவறுகளைதான் சுட்டிக்காட்டுகிறோம். இந்த அதிகாரிகளால் ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்ற வேதனை இருக்கிறது .
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தகவல்.
- வழக்கின் விசாரணையை நவம்பர் 24ம் தேதி தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு.
அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் காவல்துறைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? என காவல்துறை விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கின் விசாரணையை நவம்பர் 24ம் தேதி தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை?
- திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன்.
ராணிப்பேட்டை போல் திருச்சியிலும் அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனின் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, ஒரு நாளில் ஒன்றும் ஆகிவிடாது என அவர் கூறியதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இது என்ன மாதிரியான மனநிலை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர், சூரை, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளிலும், குமணந்தாங்கல் அரசுப்பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி மீண்டும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு.
ஏற்கனவே, திருச்சியிலும் இதே போல அரசுப்பள்ளியில் முகாம் நடத்தப்பட்டதை மாணவர்களும், பெற்றோரும் கண்டித்த நிலையில், தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற துஷ்பிரயோகங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்களிடம், "ஒருநாளில் பாடத்தை எடுக்கப்போவதில்லை. மாணவர்களுக்கு எந்த இடையூறும் இல்லை" என கூச்சமின்றி பதிலளித்துள்ளார் அமைச்சர் திரு. துரைமுருகன்.
உங்களின் சுய விளம்பரத்திற்காக முகாம்களை நடத்தவேண்டும் என்றால் உங்கள் கட்சி அலுவலகங்களில் நடத்தலாமே அமைச்சரே. மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை?
ஏற்கனவே, திருபுவனத்தில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததை அனைவரும் அறிவார்கள். இதுதான் நீங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் லட்சணம். இப்படியிருக்க, ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்து கெடுக்கிறீர்கள்? மாணவர்களின் கல்வியை தடுத்து அரசுப்பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- கரூர் விவகாரத்துக்கு தி.மு.க காரணம் என யாரும் சொல்லவில்லை.
- கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது அன்றைய சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு.
வேலூர்:
வேலூர் மாவட்டம் சேர்க்காடு பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் துரைமுருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீர் நிலைகளை தூர்வாருதல், கரைகளை, பலப்படுத்துதல் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் எவ்வளவு மழை வந்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் சொல்வது தான் மெயின், நீதிபதிகள் உண்மையை சொல்லி உள்ளார்கள்.
கரூர் விவகாரத்துக்கு தி.மு.க காரணம் என யாரும் சொல்லவில்லை.
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது அன்றைய சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு. 41 பேர் உயிரிழந்தது மிக சாதாரணமானது அல்ல.
விஜயை கைது செய்யும் நிலை வந்தால் கைது பண்ணுவோம். தேவையில்லாத சூழலில் பண்ண மோட்டோம். அனாவசியமாக நாங்க யாரையும் கைது செய்ய மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. அரசு ஒருபோதும் யாரையும் கண்டு அஞ்சாது.
- பா.ஜ.க உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு கூட தி.மு.க. ஒருபோதும் அஞ்சியதில்லை.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவரிடம் கரூர் சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?, அவரை பார்த்து தி.மு.க. பயப்படுகிறதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த துரைமுருகன் தி.மு.க. அரசு ஒருபோதும் யாரையும் கண்டு அஞ்சாது. எவரையும் பார்த்து அஞ்ச வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இல்லை. பா.ஜ.க உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு கூட தி.மு.க. ஒருபோதும் அஞ்சியதில்லை.
தொடர்ந்து தி.மு.க. மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் எந்த குற்றச்சாட்டு கண்டும் தி.மு.க. அஞ்சாது. விஜய்க்கு போதுமான அளவுக்கு பக்குவம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு.
- சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது.
தி.மு.க.வின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளரான துரைமுருகன், நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
இவர், கடந்த 1996- 2001ம் ஆண்டு வரை நடைபெற்ற கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் செயல்பட்டு வந்தபோது, தனது வருமானத்துக்கு மீறி அதிக சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது, அதன்பிறகு அமைந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு வேலூர் முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2007ல் அமைச்சர் துரை முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவின்கீழ், துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக விசாரணையை துவங்கி, ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் சிறப்பு கோர்ட்டுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி இருவரும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து துரைமுருகனின் மனைவி நேரில் ஆஜராகி பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரினார். இதனை தொடர்ந்து அவரது பிடிவாரண்ட்டை நீதிமன்றம் ரத்து செய்தது.
ஆனால், துரைமுருகன் இன்று ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிரான பிடிவாரண்ட்டை வருகிற 15-ம் தேதி அமல்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ஐந்தே மாதங்களில் 41 லட்சம் வாக்காளர்கள் எப்படி வந்தார்கள்.? வானத்திலிருந்து குதித்தார்களா?.
- எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு வாக்காளர்களையும் டெல்லியிடம் அடமானம் வைக்கத் துணிந்துவிட்டாரா?
தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொய்களைக் கட்டவிழ்த்து ஆட்சியைப் பிடித்த பாஜக, தங்களுடைய ஆட்சித்திறனால் மக்களைக் கவர முடியாமல் நாட்டைத் தொடர்ந்து ஆள எத்தனையோ குறுக்கு வழிகளைக் கையாண்டு வருகிறது. தங்களால் வெற்றி பெறவே முடியாத மாநிலங்களில் ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கிறது.
கடந்த தேர்தல்களில் போலி வாக்காளர்களைச் சேர்த்து, அதன் மூலம் பாஜக தனது வெற்றியைச் சாத்தியப்படுத்தியதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் ஆதாரங்களோடு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தேர்தல் மோசடி ஆதாரங்கள், தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாகவே மாறிவிட்டதை காட்டுகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கே பேராபத்து!
2024 பாராளுமன்றத் தேர்தல் முடிந்து, அடுத்த 5 மாதங்களில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின்போது பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களை விடக் கூடுதலாக 41 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். ஐந்தே மாதங்களில் 41 லட்சம் வாக்காளர்கள் எப்படி வந்தார்கள்.? வானத்திலிருந்து குதித்தார்களா?.
2024 பாராளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 30 தொகுதிகளை கைபற்றியது. பாஜக கூட்டணிக்கு 17 இடங்கள்தான் கிடைத்தன. இதனை அப்படியே சட்டமன்றத் தேர்தலில் மாற்றி அமைக்க வேண்டுமெனில் எதையாவது செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லுக்களை அரங்கேற்றியது பாஜக. 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் தோற்ற பாஜக கூட்டணி, அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் வென்றதற்குக் காரணமே போலியாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள்தான். கூடுதலாகச் சேர்க்கப்பட்ட 41 லட்சம் வாக்காளர்களால் தேர்தல் முடிவே மாறிப் போனது. பாராளுமன்றத் தேர்தலில் வென்ற காங்கிரஸ் கூட்டணி, பாஜகவும் தேர்தல் ஆணையம் கூட்டணி போட்டுச் செய்த சதித்திட்டத்தால் சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது.
இந்த சதியை அம்பலப்படுத்த வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை வழங்குமாறு தேர்தல் ஆணையத்தைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கேட்டபோது வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களை தேர்தல் நடந்து 45 நாட்களுக்குப்பின் அழித்து விடுமாறு மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது எனச் சொல்லி வாக்குச்சாவடி கண்காணிப்பு கேமரா பதிவுகளை எல்லாம் அழித்திருக்கிறார்கள்.
இதே பாணியில்தான் வரப் போகிற பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் மோசடிகளை அரங்கேற்ற பாஜக முயல்கிறது. SIR என்ற சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் பீகார் மாநில வாக்காளர் பட்டியலிலிருந்து பாஜகவிற்கு எதிரான மனநிலை கொண்ட வாக்காளர்கள் பல லட்சம் பேரை நீக்கியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி (SIR) என்கிற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம் இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையில் கை வைத்திருக்கிறது.
சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் பாஜகவின் கண்ணசைவிற்கும் அரசியல் விருப்பத்திற்கும் ஏற்ப செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது நாட்டின் ஜனநாயகத்திற்கு விடப்பட்டிருக்கிற மிகப்பெரிய அச்சுறுத்தல். பீகாரில் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிற சூழலில், இவ்வளவு குறுகிய காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஏன்? என எதிர்க்கட்சிகள் அனைத்தும் கேள்வி கேட்டும் அதனை மதிக்காமல் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது தேர்தல் ஆணையம்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில் நாட்டு மக்களின் குடியுரிமையைச் சோதித்துப் பார்க்கும் நடவடிக்கையாகவே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது. ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டையையும், தேர்தல் ஆணையமே கொடுத்த வாக்காளர் அடையாள அட்டையையுமே கூட வாக்காளர் தகுதிக்கான அடையாளமாக ஏற்றுக் கொள்ளாமல் மக்களைத் திணறடித்தது தேர்தல் ஆணையம். உச்ச நீதிமன்றம் அவற்றையும் ஆவணங்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய பின்பும் அதனைப் புறக்கணித்து அராஜகம் செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையினால் பீகாரில் 65 லட்சம் பேர் தங்களது வாக்குரிமையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதில் 36 இலட்சம் பேர் வேலைகளுக்காக வேறு மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேலைக்காகத் தற்காலிகமாக வெளியூர் சென்றவர்களை எல்லாம் எந்தவிதக் கேள்வியுமின்றி நீக்கி உள்ளனர். அதோடு அவர்கள் வசிக்கும் மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைந்து கொள்ளலாம் என மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலையும் தெரிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையத்தின் இந்த SIR நடவடிக்கையினால் பெரியளவில் ஏழை எளிய மக்களும் , சிறுபான்மையின மக்களும், பெண்களும் தங்களது வாக்குரிமையை இழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதோடு போலி வாக்காளர்களையும் அதிகளவு சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத நபர்கள் பல பேர் ஒரே வீட்டில் வசிப்பதாக வாக்காளர் பட்டியலில் பதிவாகி உள்ளது. SIR என்பது முறைகேட்டைத் தவிர்ப்பதற்காகச் செய்யப்படுகிறது என்றால் இந்த முறைகேடு எப்படி நடந்தது? முறைகேட்டைக் களைவதாகச் சொல்லிக் கொண்டு முறைகேட்டைத் தேர்தல் ஆணையம் செய்யலாமா? SIR என்ற முறையற்ற வாக்காளர் திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் உடனடியாகக் கைவிட வேண்டும்.
அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டு வாக்காளர்கள் தங்களது வாக்காளர் தகுதியை நிரூபிக்க வேண்டும் எனும் பெயரால் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதே போல முறையற்ற வகையில் லட்சக்கணக்கான பிற மாநில மக்களைத் தமிழ்நாட்டில் சேர்க்கும் சதி திட்டத்தையும் ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ளக் கூடும் . இது தமிழ்நாட்டின் அரசியல் உரிமையையே அபகரிக்கும் செயல்.
நாட்டில் ஜனநாயகத்திற்கும் தமிழ்நாட்டு மக்களின் அரசியல் உரிமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் வாய்மூடி கள்ள மௌனம் காத்து தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. பாஜகவின் அடிமையாய் மாறி, அதிமுக-வை அடமானம் வைத்தவர், தமிழ்நாட்டு வாக்காளர்களையும் டெல்லியிடம் அடமானம் வைக்கத் துணிந்துவிட்டாரா? இல்லை என்றால் SIR என்ற முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏன்?
தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாகப் போராடி வெற்றி பெற முடியாத அடிமைகளும் அவர்கள் எஜமானர்களும் குறுக்கு வழியில் வெற்றி பெற்று விடலாம் என்று கனவு கண்டால், அது ஒருபோதும் நடக்காது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோடு தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் திரண்டு நின்று சதிகார கும்பலை விரட்டி அடிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?" என்று முழக்கமிட்டிருக்கிறார்.
- அவருக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாது என்று நிரூபித்திருக்கிறார்.
பாமக தலைவர் அன்புமணியின் குற்றச்சாட்டிற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த அன்புமணி அவர்கள் தன்னுடைய தந்தையான டாக்டர் அய்யா அவர்களை எதிர்த்து ரத கஜ துரக பதாதிகளுடன் தமிழகத்தில் திக் விஜயம் செய்ய புறப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து கருத்து சொல்ல நமக்கு உரிமையில்லை; நாம் சொல்லப் போவதுமில்லை.
ஆனால், இந்த திக் விஜயத்தில் நேற்று வேலூருக்கு வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் போர்பிரகடனம் செய்திருக்கிறார்.
அவர் பேசுகிறபோது, என்மீது ஒரு சிறிய பாசமழையை பொழிந்துவிட்டு, அதே வேகத்தில் நான் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகளை குறித்து விவரம் தெரியாமல் என்னுடைய அமைச்சர் பணியை குறித்து கொச்சைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கிறார்.
அதாவது, "இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவரை நான் கேட்கிறேன். பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?" என்று முழக்கமிட்டிருக்கிறார்.
அன்புமணி அவர்கள் கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து அவருக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாது என்று நிரூபித்திருக்கிறார்.
தலைவர் கலைஞர் அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது தான் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுகின்ற பணியை ஆரம்பித்தார்.
அதன் தொடர்ச்சியாக, நான் இந்த துறைக்கு அமைச்சராக, கலைஞர் முதல்வராக இருந்த காலகட்டத்திலும், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக இருக்கிற இந்த காலத்திலும்,
பாலாற்றில்
இறையங்காடு
பொய்கை
சேண்பாக்கம்
அரும்பருத்தி
திருப்பாற்கடல்
கவுண்டன்யாநதியில்
ஜங்காலப்பள்ளி
செதுக்கரை
பொன்னையாற்றில்
பரமசாத்து- பொன்னை
குகையநல்லூர்
பாம்பாற்றில்
மட்றப்பள்ளி
ஜோன்றாம்பள்ளி
கொசஸ்தலையாற்றில்
கரியகூடல்
அகரம் ஆற்றில்
கோவிந்தப்பாடி
மலட்டாற்றில்
நரியம்பட்டு
வெள்ளக்கல் கானாற்றில்
பெரியாங்குப்பம்
கன்னாற்றில்
சின்னவேப்பம்பட்டு
ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டியிருக்கிறேன்.
இந்த ஆண்டு அம்பலூர், பாப்பனபள்ளி-செங்குனிகுப்பம்
அம்முண்டி, வெப்பாலை, ஆகிய இடங்களில் தடுப்பணை பணிகள் நடைபெற்று வருகின்றன.
எனவே, திரு அன்புமணி அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள், இனிமேலாவது பேசுவதற்கு முன், யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக தலைவர்கள் கூடி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
- பீகாரை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களானால் அரசியல் மாற்றம் ஏற்படும்.
வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்,
* வடமாநில வாக்காளர்கள் தமிழகத்தில் வாக்காளர்கள் ஆவதை தடுக்க வேண்டும்.
* தமிழக தலைவர்கள் கூடி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
* பீகாரை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களானால் அரசியல் மாற்றம் ஏற்படும்.
* திருமாவளவனின் கருத்தை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.
- பீகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இல்லை என போட்டு விட்டார்கள்.
- மக்கள் நலன் சார்ந்த முகாமை முதல்வர் தொடங்கி உள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்பு திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த விவரம் வருமாறு:-
கேள்வி: பிரேமலதா, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரை சந்தித்தனர். இது கூட்டணியாக மாற வாய்ப்பு உள்ளதா? இதன் பின்னணி ஏதேனும் உள்ளதா?
பதில்: பின்னணியும் இல்லை, முன்னணியும் இல்லை. தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அரசியல் பண்பாட்டுடன் வந்து பார்த்தார்கள் அவ்வளவுதான்.
கேள்வி: பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே?
அவர்களுக்கு எல்லாம் அவர்கள் ஊரிலேயே வேலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் நம்ம ஊருக்கு வந்திருக்க மாட்டார்கள். இங்க வந்திருக்கிறார்கள் இப்போது என்ன செய்வது என்பது மிகப்பெரிய பிரச்சனை. ஏனென்றால் பீகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இல்லை என போட்டு விட்டார்கள். அந்த மாதிரி நம் ஊரில் போட முடியாது. இதை தலைவர்கள் தான் அணுக வேண்டும். வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது வரும் காலத்தில் தமிழகத்தில் நிச்சயம் அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மேடையில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு முகாம்களை முதல்வர் நடத்தி வருகிறார். இப்போதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது, அது முடிவதற்குள்ளேயே இன்னொரு மக்கள் நலன் சார்ந்த முகாமை முதல்வர் தொடங்கி உள்ளார். என்னால் இப்போதைக்கு அதிகமாக பேச முடியாது ஏனென்றால் எனக்கு சற்று உடல் நலம் சரியில்லை என பேசினார்.






