என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Duraimurugan"

    • காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
    • விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கப்படவில்லை.

    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஓர் அணையை மேகதாதுவில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக அரசு தன்னிச்சையாகத் தயாரித்து, மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 2018ஆம் ஆண்டில் சமர்ப்பித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு மாண்பமை உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

    இத்திட்டத்தை மேற்கொள்வதற்காகத் தேவைப்படும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கான ஆய்வு வரம்புகளுக்கு (Terms of Reference) ஒப்புதல் பெறுவதற்காக, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தை கர்நாடக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு அணுகிய போது, மற்றொரு மனுவை மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து தமிழ்நாடு அரசு அதைத் தடுத்து நிறுத்தியது.

    இதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் மேகதாது திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியபோது, தமிழ்நாடு அரசு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, அதற்கான எந்தவிதமான அனுமதியையும் அளிக்கக்கூடாது என்று ஒன்றிய அரசையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 21-3-2022 அன்று ஒருமனதாக தீர்மானத்தையும் இந்த அரசு நிறைவேற்றியது.

    மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களை 31-3-2022 மற்றும் 26-5-2022 அன்று நேரில் சந்தித்த போது மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என ஒன்றிய ஜல்சக்தி அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் வலியுறுத்தினார்.

    இந்த காலக்கட்டத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடக அரசின் கருத்துருவை பரிசீலிக்க அதிகாரம் உள்ளது என ஒன்றிய அரசு கருத்து தெரிவித்ததையடுத்து, இந்த விரிவான அறிக்கை பற்றிய பொருண்மைகள் இந்த ஆணையத்தின் விவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்ட போதும், இதனை பரிசீலிப்பதற்கான அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு இல்லை என்பதை வலியுறுத்தி மேலும் ஒரு மனு 7-6-2022 அன்று தமிழ்நாடு அரசால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இவ்வாறு தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் அடிப்படையில், அன்றிலிருந்து இன்றுவரை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை விவாதிக்கப்படவில்லை.

    மேலும், தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு தொடர் முயற்சிகளின் பயனாக, மேகதாது அணை பற்றிய கருத்துருவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 9-2-2024 அன்று திருப்பியனுப்பியது. இது தமிழ்நாடு அரசின் முயற்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும்.

    இந்த சூழ்நிலையில், மேகதாது அணை குறித்துப் பேசிய மாண்புமிகு கர்நாடக மாநில முதலமைச்சர் அவர்கள், இந்த பாசன ஆண்டு 2025-2026இல் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய நீரின் அளவை விட கூடுதலாக நீர் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ள கூற்று எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.

    அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடிய ஆண்டுகளில் வேறுவழியின்றி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு நீரைத் திறந்து விடுகிறதேயன்றி, வறட்சி ஆண்டுகளில் நமக்கு விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவிற்கான நீர் வழங்கப்படுவது இல்லை என்பதையும், மேகதாது அணை கட்டப்பட்டால் வறட்சி ஆண்டுகளில், நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீர் கிடைக்காத சூழல் உருவாகும் என்பதையும் அனைவரும் அறிவார்கள். எனவே, மேகதாதுவில் அணை கட்டப்படுவது என்பது, தமிழ்நாட்டு விவசாயிகளை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குவதோடு, காவிரி நதிநீர்ப் பிரச்சினை தொடர்பான நடுவர் மன்றம் மற்றும் மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முரணாகவும் அமையும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

    இந்நிலையில், இந்த அணை தொடர்பான வழக்குகளை விசாரித்த மாண்பமை உச்சநீதிமன்றம், இன்று (13-11-2025) மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் கருத்துக்கள் அனைத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமத்திடம் தெரிவிக்கலாம் என்றும், தமிழ்நாடு அரசின் கருத்துக்களைக் கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது.

    கடந்த நான்கு ஆண்டுகளில், வெற்றிகரமாக மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தியதைப் போன்றே, இனியும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமும், மத்திய நீர்வளக் குழுமத்தின் முன்பும் தமிழ்நாடு அரசு தனது வலுவான வாதங்களை முன்வைக்க உள்ளது.

    இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மாண்பமை உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாக சில தவறான தகவல்கள் வெளிவருவது கண்டிக்கத்தது என்பதையும், இத்தகவலில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்படும் திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரை, காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.

    காவிரி நடுவர் மன்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து மாண்பமை உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் எந்தவொரு முயற்சியையும், தமிழ்நாடு அரசு முளையிலேயே கிள்ளி எறியும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வெள்ள பாதிப்பு ஏற்படும்போது மக்களுடன் இருப்பது அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள்தான்.
    • ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்ற வேதனை இருக்கிறது .

    செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து மக்கள் பிரதிநிதிக்கு சொல்வது கட்டாயமில்லையா? மூத்த அமைச்சர், மாபெரும் கட்சியின் பொதுச் செயலர் இப்படி கேள்வி கேட்கலாமா?

    அமைச்சர் துரைமுருகனின் பேச்சு வருத்தம் அளிக்கிறது. நான் கேள்வி கேட்டது குற்றம் என அவர் நினைப்பது நியாயமா? வெள்ள பாதிப்பு ஏற்படும்போது மக்களுடன் இருப்பது அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள்தான்.

    பட்டியலினத்தவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆட்சி திமுக ஆட்சி; குறிப்பாக முதல்வர் இந்த விஷயத்தில் கண்ணும், கருத்துமாக இருக்கிறார்; துணை முதல்வரும் இரவும், பகல் பாராமல் வேலை செய்கிறார்.

    ஆனால் ஒன்றிரண்டு அதிகாரிகள் செய்யும் தவறுகளைதான் சுட்டிக்காட்டுகிறோம். இந்த அதிகாரிகளால் ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்ற வேதனை இருக்கிறது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தகவல்.
    • வழக்கின் விசாரணையை நவம்பர் 24ம் தேதி தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு.

    அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் காவல்துறைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? என காவல்துறை விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வழக்கின் விசாரணையை நவம்பர் 24ம் தேதி தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை?
    • திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன்.

    ராணிப்பேட்டை போல் திருச்சியிலும் அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனின் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, ஒரு நாளில் ஒன்றும் ஆகிவிடாது என அவர் கூறியதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இது என்ன மாதிரியான மனநிலை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர், சூரை, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளிலும், குமணந்தாங்கல் அரசுப்பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி மீண்டும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு.

    ஏற்கனவே, திருச்சியிலும் இதே போல அரசுப்பள்ளியில் முகாம் நடத்தப்பட்டதை மாணவர்களும், பெற்றோரும் கண்டித்த நிலையில், தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற துஷ்பிரயோகங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

    இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்களிடம், "ஒருநாளில் பாடத்தை எடுக்கப்போவதில்லை. மாணவர்களுக்கு எந்த இடையூறும் இல்லை" என கூச்சமின்றி பதிலளித்துள்ளார் அமைச்சர் திரு. துரைமுருகன்.

    உங்களின் சுய விளம்பரத்திற்காக முகாம்களை நடத்தவேண்டும் என்றால் உங்கள் கட்சி அலுவலகங்களில் நடத்தலாமே அமைச்சரே. மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை?

    ஏற்கனவே, திருபுவனத்தில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததை அனைவரும் அறிவார்கள். இதுதான் நீங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் லட்சணம். இப்படியிருக்க, ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்து கெடுக்கிறீர்கள்? மாணவர்களின் கல்வியை தடுத்து அரசுப்பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • கரூர் விவகாரத்துக்கு தி.மு.க காரணம் என யாரும் சொல்லவில்லை.
    • கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது அன்றைய சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் சேர்க்காடு பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் துரைமுருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீர் நிலைகளை தூர்வாருதல், கரைகளை, பலப்படுத்துதல் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் எவ்வளவு மழை வந்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

    கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் சொல்வது தான் மெயின், நீதிபதிகள் உண்மையை சொல்லி உள்ளார்கள்.

    கரூர் விவகாரத்துக்கு தி.மு.க காரணம் என யாரும் சொல்லவில்லை.

    கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது அன்றைய சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு. 41 பேர் உயிரிழந்தது மிக சாதாரணமானது அல்ல.

    விஜயை கைது செய்யும் நிலை வந்தால் கைது பண்ணுவோம். தேவையில்லாத சூழலில் பண்ண மோட்டோம். அனாவசியமாக நாங்க யாரையும் கைது செய்ய மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
    • திமுக மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டுமென அறிவிப்பு.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 23ம் தேதி காலை 10 மணிக்கு திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

    திமுக மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டுமென பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    • அதிமுக கட்சி விவகாரத்தில் தலையிட நான் தயாராக இல்லை.
    • விஜய் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை வைத்தால் என்ன?, வெள்ளிக்கிழமை வைத்தால் நமக்கென்ன?.

    வேலூர்:

    வேலூர், காட்பாடி காந்திநகரில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆனது குறித்து...

    பதில்: தமிழர் என்பது மட்டும் அல்ல, அவர் எனக்கு வேண்டிய நண்பர். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கேள்வி: எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க.வை பார்த்தவர் நீங்கள். அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்து...

    பதில்: அ.தி.மு.க. நிலை குறித்து நான் என்ன சொல்வது. அது அவர்கள் கட்சி. அந்த கட்சி விவகாரத்தில் தலையிட நான் தயாராக இல்லை.

    கேள்வி: தாமிரபரணி ஆற்றை தி.மு.க. தலைமுழுகி விட்டதாக நயினார் நாகேந்திரன் பேசி இருக்கிறாரே?.

    பதில்: நயினார் பாவம். புது பதவிக்கு வந்து வேகமாக இருக்கிறார். அவர் சட்டசபையில் எப்படி செயல்படுகிறார் என எங்களுக்கு தெரியும்.

    கேள்வி: த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் குறித்து...

    பதில்: நடிகர் விஜய் முதலில் வெளியே வரட்டும் பார்க்கலாம். அவர் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை வைத்தால் என்ன?, வெள்ளிக்கிழமை வைத்தால் நமக்கென்ன?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?" என்று முழக்கமிட்டிருக்கிறார்.
    • அவருக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாது என்று நிரூபித்திருக்கிறார்.

    பாமக தலைவர் அன்புமணியின் குற்றச்சாட்டிற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த அன்புமணி அவர்கள் தன்னுடைய தந்தையான டாக்டர் அய்யா அவர்களை எதிர்த்து ரத கஜ துரக பதாதிகளுடன் தமிழகத்தில் திக் விஜயம் செய்ய புறப்பட்டிருக்கிறார்.

    இதுகுறித்து கருத்து சொல்ல நமக்கு உரிமையில்லை; நாம் சொல்லப் போவதுமில்லை.

    ஆனால், இந்த திக் விஜயத்தில் நேற்று வேலூருக்கு வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் போர்பிரகடனம் செய்திருக்கிறார்.

    அவர் பேசுகிறபோது, என்மீது ஒரு சிறிய பாசமழையை பொழிந்துவிட்டு, அதே வேகத்தில் நான் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகளை குறித்து விவரம் தெரியாமல் என்னுடைய அமைச்சர் பணியை குறித்து கொச்சைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கிறார்.

    அதாவது, "இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவரை நான் கேட்கிறேன். பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?" என்று முழக்கமிட்டிருக்கிறார்.

    அன்புமணி அவர்கள் கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து அவருக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாது என்று நிரூபித்திருக்கிறார்.

    தலைவர் கலைஞர் அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது தான் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுகின்ற பணியை ஆரம்பித்தார்.

    அதன் தொடர்ச்சியாக, நான் இந்த துறைக்கு அமைச்சராக, கலைஞர் முதல்வராக இருந்த காலகட்டத்திலும், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக இருக்கிற இந்த காலத்திலும்,

    பாலாற்றில்

    இறையங்காடு

    பொய்கை

    சேண்பாக்கம்

    அரும்பருத்தி

    திருப்பாற்கடல்

    கவுண்டன்யாநதியில்

    ஜங்காலப்பள்ளி

    செதுக்கரை

    பொன்னையாற்றில்

    பரமசாத்து- பொன்னை

    குகையநல்லூர்

    பாம்பாற்றில்

    மட்றப்பள்ளி

    ஜோன்றாம்பள்ளி

    கொசஸ்தலையாற்றில்

    கரியகூடல்

    அகரம் ஆற்றில்

    கோவிந்தப்பாடி

    மலட்டாற்றில்

    நரியம்பட்டு

    வெள்ளக்கல் கானாற்றில்

    பெரியாங்குப்பம்

    கன்னாற்றில்

    சின்னவேப்பம்பட்டு

    ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டியிருக்கிறேன்.

    இந்த ஆண்டு அம்பலூர், பாப்பனபள்ளி-செங்குனிகுப்பம்

    அம்முண்டி, வெப்பாலை, ஆகிய இடங்களில் தடுப்பணை பணிகள் நடைபெற்று வருகின்றன.

    எனவே, திரு அன்புமணி அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள், இனிமேலாவது பேசுவதற்கு முன், யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சாதனை விளக்க பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசுகிறார்.
    • கட்சிக்கு உழைக்காதவர்கள் ஓரம் கட்டப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

    தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் அமைச்சர் துரைமுருகன் கட்சியில் ஓரம் கட்டப்படுகிறார். அவருக்கு இந்த முறை பொதுச்செயலாளர் பதவி இல்லை.

    50 ஆண்டுகாலமாக எம்.எல்.ஏ. பதவி வகித்து வரும் அமைச்சர் துரைமுருகன் மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சட்டசபையில் நீண்ட நாள் உறுப்பினர் என்ற சாதனையை தகர்த்து விடுவார்.

    இதனால் இந்த முறை காட்பாடி தொகுதியிலும் அமைச்சர் துரைமுருகனுக்கு போட்டியிட சீட் கிடைக்காது என்றும் பரவலாக பேசி வருகின்றனர்.

    ஆனால் இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் அமைச்சர் துரைமுருகன் இந்த வயதிலும் கட்சி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

    கடந்த சில நாட்களாக காட்பாடி தொகுதியில் முகாமிட்டுள்ள அமைச்சர் துரைமுருகன் அந்த தொகுதியில் உள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு உள்ளார்.

    மேலும் சாதனை விளக்க பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசுகிறார்.

    காட்பாடி தொகுதி எனக்கு கோவில். இந்த தொகுதி மக்கள் தான் என் தெய்வம் என தொடர்ந்து பேசி வரும் துரைமுருகன் ஒருபோதும் காட்பாடி தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டார். அவர் மீண்டும் போட்டியிடுவார் என ஒரு தரப்பினர் சொல்லி வருகின்றனர்.

    கட்சிப் பதவியைப் பற்றி கவலை இல்லை. ஆனால் காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் மீண்டும் போட்டியிடுவது உறுதி என அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டுள்ள துரைமுருகன் அங்குள்ள வார்டு செயலாளர்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை தனித்தனியாக சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் தேர்தலில் தி.மு.க. வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும். கட்சிக்கு உழைக்காதவர்கள் ஓரம் கட்டப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

    இது துரைமுருகன் மீண்டும் காட்பாடியில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளது.

    • வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்தது.
    • சென்னையில் நடந்த விழாவில் வேள்பாரி ஒரு லட்சம் வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.

    சென்னை:

    விகடன் பிரசுரத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.

    இந்நிலையில், வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 'வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    நிறைய சொல்ல வேண்டும் என அறிவு சொல்லும். எப்படிப் பேசவேண்டும் என திறமை சொல்லும். எவ்வளவு பேச வேண்டும் என அரங்கம் சொல்லும். எதைப் பேசவேண்டும், பேசக்கூடாது என அனுபவம் சொல்லும்.

    கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு நிகழ்ச்சியில் ஓல்டு ஸ்டூடண்ஸ் குறித்துப் பேசினேன். அரங்கத்துல இருக்குற எல்லாரும் சிரிச்சதால நான் பேசணும்னு நினைச்சதை மறந்துட்டேன்.

    இந்த விழாவுக்காக சு.வெங்கடேசன் என்னை அப்ரொச் பண்ணிய விதம் ரொம்ப பிடித்திருந்தது.

    விகடனில் அதிகம் கிழித்தது என்னைத்தான், இருந்தாலும் நட்பில் எந்த விரிசலும் இல்லை.

    சிவக்குமாரும் கமல்ஹாசனும் சிறந்த அறிவாளிகள்... ஆனா, என்னை ஏன் கூப்பிட்டாங்க? இந்த 75 வயசுலயும் கூலிங் கிளாஸ் போட்டு ஸ்லோ மோஷன்ல நடந்து வர என்ன ஏன்பா விழாவுக்கு கூப்டீங்க?

    வேள்பாரி புத்தகத்தை நான் இன்னும் முழுசா படிக்கல. வேள்பாரி திரைப்படமாக உருவாகும் என காத்திருக்கிறேன்.

    ஓய்வுக் காலத்தில் நல்ல புத்தகங்களைப் படிக்க விருப்பம் உள்ளது. அதற்காக வேள்பாரி புத்தகத்தை எடுத்து வைத்துள்ளேன்.

    எல்லோரும் காத்திருப்பது போல நானும் வேள்பாரி திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.

    • துணை முதல்வர் ஆனபோது முன்வரிசையில் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தேன்.
    • காட்பாடி தொகுதிக்கு வருகை தந்த நினைவுகள் குறித்து பேசினார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    என்னுடைய அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டு, பிள்ளையார் சுழி போட்டதே இந்த காட்பாடி தொகுதி தான். நமது கழகத்தின் பொதுச்செயலாளர் உள்ள மண் இந்த காட்பாடி மண். அப்படிப்பட்ட பெருமைமிகு மண்ணில் இருப்பதைக் கண்டு பெருமை கொள்கிறேன்.

    நான் துணை முதலமைச்சர் ஆன போது பொதுச்செயலாளர் என்னை வாழ்த்தினார். அது எப்படி என்றால்.

    நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது பின் வரிசையில் இருந்தேன், துணை முதல்வர் ஆனபோது முன்வரிசையில் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தேன்.

    அப்போது, இனிமே நீ என் பக்கத்து சீட்டு தானே வா.. வா... உன்னை பார்த்துக்கொள்கிறேன் என பொதுச்செயலாளர் துரைமுருகன் என்னை வாழ்த்தினார் என கூறினார்.

    மேலும் இதற்கு முன்பு காட்பாடி தொகுதிக்கு வருகை தந்த நினைவுகள் குறித்து பேசினார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்:-

    எனது மகன் கதிர் ஆனந்திற்காக முதன் முதலில் எம்.பி தேர்தலில் பிரச்சாரத்திற்கு வந்து பேசியதை துணை முதல்வர் உதயநிதி குறிப்பிட்டார். அது எனக்கே ஞாபகம் இல்லை. ஆனால் அவர் ஞாபகம் வைத்து பேசுகிறார்.

    "துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தாவை (கருணாநிதி) போல் ஞாபக சக்தி அதிகம். உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்"என்றார்.

    • கூமாப்பட்டி எங்க இருக்கு என்று கூகுள் மேப்பில் தேடி அந்த ஊருக்கு படையெடுத்தனர்.
    • கூமாபட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்,

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாப்பட்டி என்ற கிராமம் ரீல்ஸ் மூலம் இணையத்தில் ட்ரெண்டானது.

    தங்கபாண்டியன் என்பவர் தனது இன்ஸ்டா ஐடியில் கூமாப்பட்டி ஊருக்கு வாருங்கள் என்று அந்த ஊரின் அருமை பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இவரது வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

    'மன அழுத்தமா?, விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க... கூமாப்பட்டி ஒரு தனி தீவு... இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர்... என்று அவர் பேசிய வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் கூமாப்பட்டி எங்க இருக்கு என்று கூகுள் மேப்பில் தேடி அந்த ஊருக்கு படையெடுத்தனர்.

    இதனிடையே கூமாப்பட்டி பிளவக்கல் அணை பகுதியில் பொதுமக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி இல்லை என்றும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து ஏமாற வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் கூமாபட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா அமைக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர், "எல்லா இடங்களிலும் பூங்கா அமைத்திட முடியாது. இது குறித்து அதிகாரியிடம் பேசியுள்ளேன். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். 

    ×