என் மலர்
நீங்கள் தேடியது "கர்நாடக அரசு"
- கர்நாடக முதலமைச்சர் தெரிவித்து இருக்கிற கருத்து ஏற்கத்தக்கதல்ல.
- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணையை அமைப்பதற்கு கர்நாடக அரசு முயற்சி எடுத்து வரும் நிலையில், இதற்கு எதிராக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. குறிப்பாக திட்ட அறிக்கையை (DPR) தயாரிப்பதற்கு கர்நாடக அரசுக்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்த நிலையில், அதற்கு அனுமதியை வழங்க ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், ஏற்கனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தி இருந்தது.
தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, கர்நாடக மாநில அரசு மேகதாது அணைக்கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணையில் நவம்பர் 23 ஆம் தேதி இன்று உச்ச நீதிமன்றம் "திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒன்றிய நீர் ஆணையத்திடம் வழங்கும் போது, தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்" என்றுதான் உத்தரவிட்டு இருக்கிறது.
ஆனால் மேகதாது அணைக் கட்ட உச்ச நீதிமன்றம் கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி அளித்து விட்டதாக கர்நாடக முதலமைச்சர் தெரிவித்து இருக்கிற கருத்து ஏற்கத்தக்கதல்ல.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கி உள்ள தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மாநில அரசு மேகதாது அணை கட்டுவதற்கு முனைந்திருக்கிறது.
இந்திய அரசின் நீர் வள ஆணையம் எந்த சூழ்நிலையிலும் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
- விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கப்படவில்லை.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஓர் அணையை மேகதாதுவில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக அரசு தன்னிச்சையாகத் தயாரித்து, மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 2018ஆம் ஆண்டில் சமர்ப்பித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு மாண்பமை உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
இத்திட்டத்தை மேற்கொள்வதற்காகத் தேவைப்படும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கான ஆய்வு வரம்புகளுக்கு (Terms of Reference) ஒப்புதல் பெறுவதற்காக, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தை கர்நாடக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு அணுகிய போது, மற்றொரு மனுவை மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து தமிழ்நாடு அரசு அதைத் தடுத்து நிறுத்தியது.
இதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் மேகதாது திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியபோது, தமிழ்நாடு அரசு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, அதற்கான எந்தவிதமான அனுமதியையும் அளிக்கக்கூடாது என்று ஒன்றிய அரசையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 21-3-2022 அன்று ஒருமனதாக தீர்மானத்தையும் இந்த அரசு நிறைவேற்றியது.
மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களை 31-3-2022 மற்றும் 26-5-2022 அன்று நேரில் சந்தித்த போது மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என ஒன்றிய ஜல்சக்தி அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் வலியுறுத்தினார்.
இந்த காலக்கட்டத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடக அரசின் கருத்துருவை பரிசீலிக்க அதிகாரம் உள்ளது என ஒன்றிய அரசு கருத்து தெரிவித்ததையடுத்து, இந்த விரிவான அறிக்கை பற்றிய பொருண்மைகள் இந்த ஆணையத்தின் விவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்ட போதும், இதனை பரிசீலிப்பதற்கான அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு இல்லை என்பதை வலியுறுத்தி மேலும் ஒரு மனு 7-6-2022 அன்று தமிழ்நாடு அரசால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் அடிப்படையில், அன்றிலிருந்து இன்றுவரை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை விவாதிக்கப்படவில்லை.
மேலும், தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு தொடர் முயற்சிகளின் பயனாக, மேகதாது அணை பற்றிய கருத்துருவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 9-2-2024 அன்று திருப்பியனுப்பியது. இது தமிழ்நாடு அரசின் முயற்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும்.
இந்த சூழ்நிலையில், மேகதாது அணை குறித்துப் பேசிய மாண்புமிகு கர்நாடக மாநில முதலமைச்சர் அவர்கள், இந்த பாசன ஆண்டு 2025-2026இல் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய நீரின் அளவை விட கூடுதலாக நீர் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ள கூற்று எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடிய ஆண்டுகளில் வேறுவழியின்றி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு நீரைத் திறந்து விடுகிறதேயன்றி, வறட்சி ஆண்டுகளில் நமக்கு விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவிற்கான நீர் வழங்கப்படுவது இல்லை என்பதையும், மேகதாது அணை கட்டப்பட்டால் வறட்சி ஆண்டுகளில், நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீர் கிடைக்காத சூழல் உருவாகும் என்பதையும் அனைவரும் அறிவார்கள். எனவே, மேகதாதுவில் அணை கட்டப்படுவது என்பது, தமிழ்நாட்டு விவசாயிகளை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குவதோடு, காவிரி நதிநீர்ப் பிரச்சினை தொடர்பான நடுவர் மன்றம் மற்றும் மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முரணாகவும் அமையும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
இந்நிலையில், இந்த அணை தொடர்பான வழக்குகளை விசாரித்த மாண்பமை உச்சநீதிமன்றம், இன்று (13-11-2025) மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் கருத்துக்கள் அனைத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமத்திடம் தெரிவிக்கலாம் என்றும், தமிழ்நாடு அரசின் கருத்துக்களைக் கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில், வெற்றிகரமாக மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தியதைப் போன்றே, இனியும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமும், மத்திய நீர்வளக் குழுமத்தின் முன்பும் தமிழ்நாடு அரசு தனது வலுவான வாதங்களை முன்வைக்க உள்ளது.
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மாண்பமை உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாக சில தவறான தகவல்கள் வெளிவருவது கண்டிக்கத்தது என்பதையும், இத்தகவலில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்படும் திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரை, காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து மாண்பமை உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் எந்தவொரு முயற்சியையும், தமிழ்நாடு அரசு முளையிலேயே கிள்ளி எறியும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- டிக்கெட் கட்டணம் ரூ.200க்கு கட்டுப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருந்தார்.
- ஆட்சேபணை எதுவும் இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவிப்பு.
கர்நாடக அரசு, மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்களில் திரைப்பட டிக்கெட் கட்டணத்தை அதிகபட்சமாக ரூ.200 ஆக நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட ஆணையில்; "அனைத்து மொழிப் படங்களுக்கான, மல்டிபிளக்ஸ் உள்ளிட் அனைத்து விதமான தியேட்டர்களும் பொழுதுபோக்கு வரி உட்பட ரூ.200க்கு மிகாமல் கட்டணத்தை வைக்க வேண்டும். இது குறித்த ஆட்சேபணை எதுவும் இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று டிக்கெட் கட்டணம் ரூ.200க்கு கட்டுப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்களில் திரைப்பட டிக்கெட் கட்டணத்தை கட்டுக்குள் கொண்டுவர கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் இந்த உத்தரவு, பொழுதுபோக்கு வரி உட்பட அனைத்து மொழி படங்களுக்கும், அனைத்து வகை திரையரங்குகளுக்கும் பொருந்தும். இது கர்நாடக சினிமா (ஒழுங்குமுறை) (திருத்த) விதிகள், 2025 இன் கீழ், கர்நாடக சினிமா (ஒழுங்குமுறை) சட்டம், 1964 இன் பிரிவு 19-ஐ பயன்படுத்தி உள்துறைத் துறையால் வெளியிடப்பட்டது.
மக்களுக்கு சினிமாவை மலிவு விலையில் கிடைக்கச் செய்வதுடன், கன்னட சினிமாவை ஊக்குவிப்பதும் இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐ.பி.எல் கோப்பையை வென்ற நிலையில் ரசிகர்களிடம் ஏற்பட்ட அளவு கடந்த உற்சாகத்தை நேற்று இரவே அறிய முடிந்தது.
- கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
பெங்களூர் வெற்றிப் பேரணியில் உயிரிழந்த 13 பேருக்கு ஆழ்ந்த இரங்கல்.
ஐ.பி.எல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றதைக் கொண்டாடும் வகையில், கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இன்று நடைபெற்ற வெற்றிப் பேரணியில் 13 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
பெங்களூர் அணி 18 ஆண்டுகளில் முதன் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற நிலையில் ரசிகர்களிடம் ஏற்பட்ட அளவு கடந்த உற்சாகத்தை நேற்று இரவே அறிய முடிந்தது. அதன்பின் 12 மணி நேர அவகாசத்தில் வெற்றிக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அளவு கடந்த கூட்டம் வரும் என்பதை கணித்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் கொண்டாட்டத்தை இன்னும் சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்க வேண்டும். இவற்றைச் செய்யத் தவறிய கர்நாடக அரசும், ஆர்சிபி அணி நிர்வாகமும் தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வரும் நிலையில் அவர்களின் உயிர்களைக் காக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மேகதாது அணைக்கு அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடகம் வலியுறுத்தியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
- மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டு தான் இருக்கும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் ஆகியோர் தில்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்திற்கு காவிரி நீர் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் கர்நாடகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதைத் தடுப்பதில் தமிழகம் அலட்சியம் காட்டுவது சரியல்ல.
மேகதாது அணைக்கு அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடகம் வலியுறுத்தியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கடந்த மாதம் 7-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது அணை கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகத் தான் மத்திய அமைச்சரை கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சந்தித்திருப்பதைப் பார்க்க வேண்டும்.
70 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 184 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகைபாலைவனமாகிவிடும். அதைத் தடுக்க வேண்டியது அவசர, அவசியத் தேவையாகும்.
மேகதாது அணை கட்ட கர்நாடகம் தீவிரம் காட்டுவதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் போதெல்லாம், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்தக் கொம்பனாலும் மேகதாது அணையைக் கட்ட முடியாது என்று கூறி கடந்து சென்று விடுகிறது. அதுமட்டுமின்றி, கர்நாடக ஆட்சியாளர்களிடம் ஒட்டி உறவாடுகிறது. இவற்றைப் பார்க்கும் போது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் அதன் உரிமையை இழந்து விடுமோ? என்ற ஐயம் தான் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடியாது என்று உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தீர்ப்பளித்திருப்பது உண்மை தான். ஆனால், அந்தத் தீர்ப்பை மீறித்தான் 2018-ஆம் ஆண்டில் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதை வைத்துக் கொண்டு தான் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து, அதனடிப்படையில் அனுமதி கோரி வருகிறது. வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்த மத்திய அரசு, அணை கட்டவும் அனுமதி அளிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அலட்சியமாக இருந்ததன் காரணமாகத் தான் கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, சுவர்ணவதி ஆகிய 4 அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல், இப்போதும் மேகதாது அணை கட்டப்படுவதற்கு தமிழக அரசின் அலட்சியம் காரணமாக இருந்து விடக் கூடாது.
மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அளித்த அனுமதி செல்லுபடியாகும் வரை மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டு தான் இருக்கும். அதை ரத்து செய்வது தான் மேகதாது அணையை நிரந்தரமாகத் தடுப்பதற்கான ஒரே வழியாகும். எனவே, அந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்யும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
- வக்கீலை நியமித்து சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
- தீர்ப்பு வழங்கப்பட்டு 1 மாதம் ஆகியும் வக்கீல் நியமிக்கப்படாததால் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நரசிம்மமூர்த்தி மனுதாக்கல் செய்தார்.
புதுடெல்லி:
பெங்களூருவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. உடனடியாக வக்கீலை நியமித்து சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்டு 1 மாதம் ஆகியும் வக்கீல் நியமிக்கப்படாததால் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நரசிம்மமூர்த்தி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு ஏப்ரல் 11-ந்தேதி விசாரிக்கும் என்று தெரிவித்தது.
- ராம்தேவ் மலையில் மொத்தம் 19 ஏக்கர் பரப்பளவில் கோயில் கட்டப்பட உள்ளது.
- குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராமநகரில் உள்ள ராமதேவரா மலையில் ராமர் கோவில் கட்ட கர்நாடக அரசு முன் வந்தது. இதையடுத்து ராமர் கோவில் கட்டப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த கோவிலை வடிவமைக்கும் வரைபடம் உருவாக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த பணிகள் மாநில உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் தலைமையில் நடைபெற்று வருகிறது. அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டு, ராமநகரில் கோவில் கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், இந்த ராமர் கோவிலின் கட்டிடத்திற்கான வரைபடம் வீடியோவை மந்திரி அஸ்வத் நாராயண் வெளியிட்டுள்ளார். 2 நிமிடம் ஓடும் வீடியோவில் கோவிலின் வளாகம், மண்டபங்கள், கோபுரம், கோவில் மைய பகுதி கட்டிடங்களின் வரைபடம் வீடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவில் தென் இந்தியாவின் ராமர்கோவில் என பக்தர்களால் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மலைக்கு ராமர் வந்து சென்றதாகவும், இதனால் இங்கு ராமர் கோவில் கட்டப்பட இருப்பதாகவும் அரசு தெரிவித்து உள்ளது.
ராம்தேவ் மலையில் மொத்தம் 19 ஏக்கர் பரப்பளவில் கோயில் கட்டப்பட உள்ளது. மலையில் சாலுமண்டபம், பிரமாண்ட கோபுரம், அனைத்து வசதிகளுடன் கூடிய படிக்கட்டு, சிவன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், காட்சி கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 120 கோடி ரூபாய் செலவாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அரசு முதற்கட்டமாக ரூ.40 லட்சத்தை ஒதுக்கி உள்ளது. இந்த ராமர் கோவில் மூலம் மாவட்டத்தில் இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது.
- வாடகை தொகையை தேர்தல் செலவு நிதியில் இருந்து மட்டுமே ஒதுக்க வேண்டும்.
- தனியார் பஸ்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.43.50 ஆகவும், ஒரு நாளைக்கு ரூ.8,700 ஆகவும் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர்:
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசு மற்றும் தனியார் பஸ்கள் தேர்தல் பணிக்கு வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்படும். இதையொட்டி அந்த பஸ்களுக்கான வாடகையை நிர்ணயித்து அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
கா்நாடகத்தில் அரசு பஸ்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.57.50 ஆகவும், ஒரு நாள் வாடகை குறைந்தபட்சம் ரூ.11 ஆயிரத்து 500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும். ஒரு நாள் என்பது 24 மணி நேரங்களை உள்ளடக்கியது. அதற்கு மேல் 2 மணி நேரம் ஆனால், அதை முழு நாளாக கருத வேண்டும். இந்த வாடகை தொகையை தேர்தல் செலவு நிதியில் இருந்து மட்டுமே ஒதுக்க வேண்டும்.
பெங்களூர் நகருக்குள் பயன்படுத்தப்படும் தனியார் பஸ்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.43.50 ஆகவும், ஒரு நாளைக்கு ரூ.8,700 ஆகவும் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு முடிவு செய்து, அதை பயன்படுத்தாமல் இருந்தால் அதற்கு வாடகையாக ரூ.4,350 செலுத்த வேண்டும். பெங்களூரு நகருக்கு வெளியே பயன்படுத்தப்படும் தனியார் பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.42.50 ஆகவும், ஒரு நாள் வாடகையாக ரூ.8,200 ஆகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறியரக சரக்கு வாகனங்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.29 ஆகவும், ஒரு நாள் வாடகையாக ரூ.2,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- கர்நாடக முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நரசிம்ம மூர்த்தி மேல்முறையீடு செய்தார்.
- கர்நாடகா அரசு தரப்பில் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டதால், விரைவில் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம்விட வாய்ப்பு உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.
பெங்களூர்:
சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 27 ஆண்டுகளாக கர்நாடகா கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் 27 வகை பொருள்களை மட்டும் ஏலம்விட்டு அதில் வரும் தொகையை கொண்டு சொத்துக்குவிப்பு வழக்கிற்கு செலவிடப்பட்ட நிதியை வசூல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கர்நாடக முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நரசிம்ம மூர்த்தி மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமச்சந்திரா, சிறப்பு வழக்கறிஞரை நியமித்து ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும் ஏலம் விட்டு நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டார். அதன்படி, ஜெயலலிதாவின் வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள், தங்க நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள், 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த புடவைகள், 44 குளிர்சாதன இயந்திரங்கள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார சேர்கள், 81 தொங்கு விளக்குகள், 20 சோபா செட்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதன பெட்டிகள், 10 தொலைக்காட்சி பெட்டிகள், 8 சிவிஆர் கருவிகள், 140 வீடியோ கேசட்டுகள் ஆகியவை ஏலத்தில் விற்கப்பட இருக்கின்றன.
இதனிடையே தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் சொத்துகளை ஏலம்விட வழக்கறிஞர் நியமிக்கப்படாததால் கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இதுபற்றி விரைவில் விசாரிக்க உள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட சிறப்பு வழக்கறிஞராக கிரண் எஸ்.ஜாவலியை நியமித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் இவர் மேற்கொள்வார் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா அரசு தரப்பில் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டதால், விரைவில் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம்விட வாய்ப்பு உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.
- மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளேன்.
- மேகதாது விவகாரத்தில் நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகாவின் முந்தைய அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்தபோது, எனது தலைமையிலான அம்மாவின் அரசு சட்ட ரீதியாகவும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தி அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியது.
மேலும், நான் முதலமைச்சராக இருந்த போதும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும், பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்திக்கும்போதெல்லாம் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்ததோடு, அவ்வாறு அணை கட்டினால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளேன்.
பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் 1956-ன்படி, நதிநீரை தடுப்பதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது என்று தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதி ஆணையில், எந்த ஒரு திட்டத்தினையும் செயல்படுத்தும் முன்னரே, கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
மேகதாது விவகாரத்தில் இந்த நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாகக் கண்டிப்பதோடு, தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று கர்நாடக மாநில அரசை எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- தமிழ்நாடு அமைச்சர்கள் கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
- வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவே அணை கட்டப்படுகிறது என டிகே சிவக்குமார் பேச்சு
கர்நாடக அரசு மேகதாது என்னுமிடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிப்படி மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சியை தொடங்கி உள்ளது.
தற்போதைய துணை முதல்வரான டி.கே.சிவகுமார், நீர்வளத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். நீர்வளத்துறை அதிகாரிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டத்திலேயே, மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்தார். இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள் கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் இந்த எதிர்ப்பு தொடர்பாக டி.கே.சிவக்குமார் கூறுகையில், மேகதாது அணை கட்டும் விஷயத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.
'தண்ணீருக்காக நாங்கள் பாதயாத்திரை மேற்கொண்டோம். வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவே அணை கட்டப்படுகிறது. தமிழ்நாடு இந்த விவகாரத்தை சகோதரத்துவத்துடன் அணுக வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. அணையால் தமிழகத்திற்கு அதிக பயன் உள்ளது. உரிய நேரத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பங்கீடு நீர் கிடைக்கும்' என்று டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.
ஆனால் தமிழகம் தரப்பில் இந்த விளக்கத்தை ஏற்க தயாராக இல்லை. அணை கட்டும் முயற்சியை தடுப்பதில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் உள்ளன. இந்த விஷயத்தில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு மோதலுக்கு தயாராகிவிட்டது. இதன் காரணமாக மேகதாது அணை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
- புதிய நிபந்தனையால் பெங்களூரு மாநிலம் முழுவதும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
- கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது.
பெங்களூரு:
கர்நாடக அரசு, இலவச மின்சார திட்டத்திற்கான அரசாணையை பிறப்பித்துள்ளது. இதில் விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனையால் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு திட்ட சலுகை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அரசு சமீபத்தில், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் மாதம் தலா 200 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் ஜூலை 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவித்தது. வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் இலவச மின்சார திட்டம் பொருந்தும் என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறினார். ஆனால் தற்போது ஒருவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், அதில் ஒரு இணைப்புக்கு மட்டுமே இலவச மின்சார திட்டம் பொருந்தும் என்று அரசு கூறியுள்ளது.
இந்த புதிய நிபந்தனையால் பெங்களூரு மாநிலம் முழுவதும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடகை வீட்டில் வசிப்போர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த திட்டத்திற்கான அரசாரணையை மாநில அரசு பிறப்பித்துள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:-
கர்நாடகத்தில் வீடுகளுக்கு மாதம் தலா 200 யூனிட் வரை இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் வணிக நோக்கங்களுக்கு மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பொருந்தாது. மாதந்தோறும் மீட்டர் அளவிடும்போது, மொத்த மின் பயன்பாட்டிற்கு கட்டணத்தை கணக்கிட வேண்டும்.
ரசீதில் தகுதியான மின் பயன்பாட்டிற்கான தொகையை கழித்துவிட்டு அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை கணக்கிட்டு மின் நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.
கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது. சேவா சிந்து இணையதளம் அனுமதிக்கப்பட்ட மின் அளவை விட நுகர்வோர் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தி இருந்தால், அத்தகையோருக்கு பூஜ்ஜியம் என்று குறிப்பிட்ட ரசீது வழங்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் பயனை பெற விரும்புகிறவர்கள் சேவா சிந்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மின் நுகர்வோர் தங்களின் மின் நுகர்வோர் அடையாள எண், கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள பாக்கிய ஜோதி, குடீர ஜோதி, அம்ருத் ஜோதி திட்ட மின் இணைப்புகள் இந்த திட்டத்துடன் இணைக்க வேண்டும்.
மின் கட்டண பாக்கியை வருகிற 3 மாதத்திற்குள் செலுத்த வேண்டும். அதற்குள் பாக்கியை செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின் நுகர்வோர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், அவற்றில் ஒரு இணைப்பு மட்டுமே இந்த திட்டத்தின் பயனை பெற முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






