என் மலர்
நீங்கள் தேடியது "அன்புமணி"
- வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்.
- தமிழகம் வட்டிக்கு கடன் வாங்கும் நிலையிலேயே உள்ளது.
நெய்வேலி:
நெய்வேலி என்.எல்.சி. பாட்டாளி தொழிற் சங்க பொது செயலாளர் செல்வராசு-ஜெயந்தி மாலா மகள் சரண்யாவிற்கும், சென்னை ஓட்டேரியை சேர்ந்த சுப்பிரமணி-அருணாராணி மகன் ஈஸ்வருக்கும் நெய்வேலியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விஜயகாந்த் உழைப்பால் உயர்ந்தவர். அவரை மதிக்கிறேன். தமிழ்நாட்டை தி.மு.க. அழிக்கிறது என்ற கொள்கையில் கடைசி வரை உறுதியாக இருந்தவர் விஜயகாந்த்.
அவர் உருவாக்கிய கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைந்ததை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தோல்வி அடையும் கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்து உள்ளது வருத்தமாக இருக்கிறது.
வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற மன நிலையில் மக்கள் உள்ளனர்.
தமிழகம் வட்டிக்கு கடன் வாங்கும் நிலையிலேயே உள்ளது. மகளிருக்கு ரூ. 5 ஆயிரம் ரூபாய் வழங்கியது கூட கடன் வாங்கித்தான் கொடுத்தார்கள்.
கடன் வாங்கி தமிழ்நாடு திவாலாகி விட்டது. நேரடி கடன் 10 லட்சம் கோடி உள்பட 15 லட்சம் கோடி கடன் வழங்கியது தி.மு.க. ஆட்சி.
தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றததால் துப்புரவு பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், ஊராட்சி செயலாளர்கள் என அனைவரும் வீதியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் கூட்டணிகுள் எந்தவித குழப்பமும் கிைடயாது. தி.மு.க. கூட்டணிக்குள் ஏகப்பட்ட உள் குழப்பம் நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் சமீபத்தில் எல்-வடிவ மேம்பாலம் திறக்கப்பட்டது.
- தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட எந்த பாலமும் தரமானதாக இல்லை.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட எல்-வடிவ மேம்பாலம் மிக மோசமான தரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. சற்று நேரத்திற்கு முன் அந்தப் பாலத்தில் பயணம் செய்தபோது அதன் மோசமான தரத்தை நானே அனுபவித்து தெரிந்து கொண்டேன். ரூ.61 கோடி மக்கள் பணத்தைக் கொட்டி அமைக்கப்பட்டுள்ள பாலம் சிறுவர்களால் விளையாட்டுக்கு கட்டப்பட்டதை விட மிக மோசமான தரத்துடன் அமைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மத்திய கைலாஷ் பாலத்தை கடந்த 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் முதல்வர் திறந்துவைத்தார். ஆனால், 652 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை தூக்கித் தூக்கி போடும் அளவுக்கு மேடும் பள்ளமுமாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பாலத்தில் பயணிக்கும்போது W வடிவத்தில் அமைக்கப்பட்ட பாலத்தில் பயணித்த உணர்வுதான் ஏற்பட்டது. சாலையே அமைக்கப்படாத மலைப்பாதைகளில் பயணிப்பதை விட மிக மோசமான அனுபவத்தை இந்தப் பாலம் மக்களுக்கு அளிக்கும். இதற்கு காரணம் மிக மோசமான வடிவமைப்பும், கட்டுமானமும்தான்.
மொத்தம் 652 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத் தொகையாக ரூ.60.68 கோடி , அதாவது ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.100 கோடி என்ற அளவில் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு உலகத்தரத்தில் பாலத்தை அமைக்க முடியும்.
ஆனால், இந்தப் பாலம் உள்ளூர் தரத்தில் கூட இல்லை. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட 3-வது மாதத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தைக் கட்டிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் மேற்பார்வையில் கட்டப்பட்ட பாலம் இந்த லட்சணத்தில் தான் இருக்கும்.
தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட எந்தப் பாலமும் தரமானதாக இல்லை. அதற்குக் காரணம் பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் நடைபெறும் ஊழல்கள்தான். இத்தகைய ஊழல்களை சென்னை உயர் நீதிமன்றமே சுட்டிக்காட்டியிருக்கிறது. மத்திய கைலாஷ் பாலம் இவ்வளவு மோசமான தரத்தில் கட்டப்பட்டிருப்பதற்கும் ஊழல் தான் காரணமாக இருக்க முடியும்.
எனவே, மத்திய கைலாஷ் பாலத்தைக் கட்டுவதில் ஊழல்கள் நடந்ததா என்பது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். மிக மோசமான தரத்தில் இந்தப் பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர் நிறுவனம்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- பொய்யும், புரட்டுமாக பேசுகின்றனர். எங்களை வசைப்பாடுகிறார்கள்.
- தேர்தல் ஆணையத்தில் அடிமட்ட அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்கள்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட எதை எதையோ பேசுகிறார்கள். ஒரு கூட்டம் பொய் பேசுவதையே அரசியலாக கொண்டு செயல்படுகிறது. அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி விட்டோம். அவர்களிடம் ஒரு கூட்டம் சேர்ந்து செயல்படுகிறது.
என்னை பற்றி அவதூறாக மனம் புண்படும்படியும், ஏளனமாகவும், பொய்யும், புரட்டுமாக பேசுகின்றனர். எங்களை வசைப்பாடுகிறார்கள். என்னை மட்டுமின்றி அரசியல் அனுபவம் கொண்ட பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணியையும் அவர்கள் வசைப்பாடுகிறார்கள்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நமக்கு சாதகமாக 2 முறை தீர்ப்பு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் சிலரை அக்கும்பல் தன் வசப்படுத்தியதால் அவர்களுக்காக தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் அடிமட்ட அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்யவேண்டிய வழக்கை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தேர்தல் ஆணையம் சரியான திசையில் செல்லவில்லை. கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட கட்சி பா.ம.க
- கஷ்டப்பட்டு இந்த இயக்கத்தை உருவாக்கிய ராமதாஸை ஒரேநாளில் தூக்கி எறிய பார்த்தார்கள்.
பாமகவின் அதிகாரப்பூர்வ தலைவராக அன்புமணி ராமதாஸை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ அருள், 'தேர்தல் ஆணையத்தை என்ன விலை கொடுத்து வாங்கினார்கள்' என தெரியவில்லை என அன்புமணி தரப்பை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,
"அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட கட்சி பா.ம.க. அக்கட்சியின் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது" என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது இப்போது இந்த வாதத்தை மாற்றிக் கொள்கிறோம் என தேர்தல் ஆணையமே ஒரு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்கிறது. அதற்கு நீதிமன்றம் மாற்றமாட்டோம், பதிவு செய்துகொள்கிறோம் என கூறுகிறது.
தற்போது தேர்தல் ஆணையத்தை இவர்கள் என்ன விலை கொடுத்து வாங்கினார்கள் என்று தெரியவில்லை. அதன்மூலம் ஒரு பொய்யான அறிக்கையை சமர்பிக்கிறார்கள். மறுசீராய்வு மனு என்பது 30 நாட்களுக்குள் தாக்கல்செய்ய வேண்டும். ஆனால் 72 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் போடுகிறது. இதன் உள்நோக்கம் எங்களுக்கு தெரியவில்லை. கஷ்டப்பட்டு இந்த இயக்கத்தை உருவாக்கிய ராமதாஸை ஒரேநாளில் தூக்கி எறிய பார்த்தார்கள். அதற்கு நீதிபதி அனுமதி தரவில்லை. நீதிமன்றத்தை விலைக்கு வாங்கமுடியவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தை வாங்கியுள்ளனர்." என தெரிவித்தார்.
- தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
- தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கனவே அங்கீகரித்ததை தெளிவாக்கியுள்ளது.
அங்கீகரிக்கப்படாத கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் ஆணையம் முடிவு செய்ய முடியாது என்ற உத்தரவை மாற்றக்கோரி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்சி உரிமை கோரல் பிரச்சனை எழுவதற்கு முன்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாமக விஷயத்தில் முடிவெடுத்துள்ளது பற்றி தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. இதன்மூலம், தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கனவே அங்கீகரித்ததை தெளிவாக்கியுள்ளது.
தற்போதைய சூழலில் நீதிமன்றம் பாமக கட்சி வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாமகவின் தலைவர், நிர்வாகிகள் யார் என்பதை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்தக்கு தடை இல்லை என்ற வாதத்தை பதிவு செய்கிறோம் என்றும் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை மட்டுமே பதிவு செய்கிறோம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- பழனியாண்டி தாக்கியதற்கான காணொலி ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
- திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய மு.க.ஸ்டாலின் அரசு தயங்குவது ஏன்?
கனிமக்கொள்ளை குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி தாக்கியதற்கு ஆதாரம் கிடைத்தும் கைது செய்ய தாமதம் ஏன்? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் கனிமக்கொள்ளையை படம் பிடித்த நியூஸ் தமிழ் 24*7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோரை திருவரங்கம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டி தாக்கியதற்கான காணொலி ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மக்கள் பிரதிநிதி ஒருவரே ஜனநாயகத்தின் நான்காவது தூணின் பிரதிநிதியான செய்தியாளர்களை கொலைவெறியுடன் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
கனிமக்கொள்ளை நடப்பதை அம்பலப்படுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை. அந்தக் கடமையை செய்த செய்தியாளர்களை அவர்களின் படப்பிடிப்புக் கருவிகளை பிடுங்கி, திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடூரமான முறையில் தாக்குகிறார். தாக்குதலில் காயமடைந்த செய்தியாளர்கள் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கான காணொலி ஆதாரமும் வெளியாகியுள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய மு.க.ஸ்டாலின் அரசு தயங்குவது ஏன்?
ஆளுங்கட்சிக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டால், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு காவல் படைகளை அனுப்பி கைது செய்யும் காவல்துறை, கனிமக்கொள்ளையை அம்பலப்படுத்தியவர்களை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தயங்குவது ஏன்? திமுகவில் உறுப்பினராக இருந்தால் அனைத்து சட்டவிரோத செயல்களையும் செய்ய உரிமம் பெற்றதாக பொருளா?
நியூஸ் தமிழ் 24*7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர்களை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியையும், அவரது அடியாள்களையும் உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.
- கறிக்கோழி விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்களின் தூண்டுதலில் இந்த கைது நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.
உரிமைகளுக்காக போராடிய கறிக்கோழி விவசாயிகளை சிறையில் அடைப்பதா? உழவர்களின் முதல் எதிரியே திமுக தான் என்று பாமக தலைவர் அன்புமணி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை கிலோவுக்கு ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அறவழியில் போராடிய கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட 10 நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. உரிமைக்காக போராடிய விவசாயிகளை திமுக அரசு சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
கறிக்கோழி வளர்ப்பை பெரு நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தாலும், அவர்களுக்காக கறிக்கோழிகளை வளர்த்து தருபவர்கள் உழவர்கள் தான். இதற்காக அவர்களுக்கு கிலோவுக்கு ரூ.6.50 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த ஊதியம் உயர்த்தப்படாத நிலையில், கறிக்கோழி வளர்ப்புக் கூலியை கிலோவுக்கு ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி கறிக்கோழி விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக நாளை மறுநாள் 21-ஆம் தேதி முத்தரப்பு பேச்சுகள் நடத்தப்படவுள்ளன. அதற்கு முன்பாகவே கறிக்கோழி விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கவே, கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்களின் தூண்டுதலில் இந்த கைது நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.
உழவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, பெரு நிறுவனங்களின் கையாளாக மாறி அவர்களை ஒடுக்கி வருகிறது. மேல்மா பகுதியில் சிப்காட் வளாகத்திற்காக நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து போராட்டம் நடத்திய உழவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த திமுக அரசிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இத்தகைய நடவடிக்கைகளால் உழவர்களின் முதல் எதிரியாக திமுக அரசு உருவெடுத்திருக்கிறது.
கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்டோரை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ.20 கூலி வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2026ஆம் ஆண்டு போட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு அட்டவணைக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றனர்.
- தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
4 லட்சம் ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டுவிடக்கூடாது 2026 தேர்வு அட்டவணையை தேர்வு வாரியம் உடனே வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக 2026-ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள போட்டித்தேர்வுகளின் அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வரை வெளியிடவில்லை. ஆசிரியர் பணிக்கு செல்லத் துடிக்கும், ஆசிரியர் பணியில் சேர்ந்து அதைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் லட்சக்கணக்கானவர்களின் எதிர்காலம் தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளின் அட்டவணை அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படுவது வழக்கம். அப்போது தான் அந்தத் தேர்வுககளை எழுத விரும்புபவர்கள் திட்டம் வகுத்து தயாராக வசதியாக இருக்கும். அதிலும் குறிப்பாக 2026-ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காலத்தில் போட்டித் தேர்வுகளை நடத்த முடியாது என்பதாலும் தேர்வு அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட வேண்டியது அவசியமாகும்.
இவ்வளவு அதிக தேவைகள் இருந்தும் கூட, 2026-ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடாதது அதன் அலட்சியத்தையும், பொறுப்பின்மையையும் தான் காட்டுகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் இந்த அலட்சியம் பல்வேறு தரப்பினருக்கு மிகக்கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டிய 1205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையும், நவம்பர் மாதம் வெளியிடப் பட்டிருக்க வேண்டிய 51 வட்டாரக் கல்வி அலுவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையும் வெளியிடப்படவில்லை. இதனால் அந்தப் பணிகளுக்காக காத்திருந்த ஆசிரியர் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்புபவர்களை விட, 2011-ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்து தகுதித் தேர்வை நிறைவு செய்யாதவர்கள் தான் 2026ஆம் ஆண்டு போட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு அட்டவணைக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றனர்.
கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்; தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனால், 2011-ஆம் ஆண்டுக்கு முன் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியில் சேர்ந்த 4 லட்சம் ஆசிரியர்கள் பணியில் நீடிக்கும் தகுதியை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த சிக்கலுக்குத் தீர்வு காண உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நான் வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மாறி, மாறி முடிவெடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 4 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி பேச்சு நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படாது என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார். அதன்படியே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதன்பின்னர் நிலையை மாற்றிக் கொண்ட தமிழக அரசு, 2026-ஆம் ஆண்டு ஜனவரி, ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி அறிவித்தது. அதைத் தொடர்ந்து 2026 ஜனவரி 24, 25 ஆகிய சிறப்புத் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை கடந்த நவம்பர் 19-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆனால், அறிவிக்கை வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே திரும்பப் பெறப்பட்டது. இது ஆசிரியர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
அடுத்த 6 நாள்களில் நிலைப்பாட்டை மீண்டும் மாற்றிக் கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2011-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்பதை ரத்து செய்யும் வகையில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் 23-ஆம் பிரிவில் திருத்தம் செய்யும்படி கடந்த ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆசிரியர்களின் நலன்களை பாதுகாக்கும் விஷயத்தில் 3 முறை நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட திமுக அரசு, அவற்றில் எந்த நிலைப்பாட்டையும் சாத்தியமாக்க துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்பது தான் வருத்தமும், வேதனையும் அளிக்கும் உண்மையாகும்.
ஆசிரியர்கள் நலனில் திமுக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருந்தால், கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டும், சிறுநீரகத் திருட்டு வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தும் உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைகளை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அந்த வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வந்த திமுக அரசு, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இன்றுடன் 110 நாள்களாகியும் அதை விசாரணைக்கு கொண்டு வருவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
அதேபோல், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதன்பின் 53 நாள்களாகியும் எந்த தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எளிமையான பாடத்திட்டம், குறைக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகியவற்றுடன் சிறப்புத் தகுதித் தேர்வை நடத்தியிருந்தால் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தங்களின் பணிகளை உறுதி செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், எந்த நிலைப்பாட்டிலும் உறுதியாக இருக்காமல் ஆசிரியர்களின் எதிர்காலத்தை இருளிலேயே திமுக அரசு வைத்திருக்கிறது.
திமுக அரசின் அதிகாரம் இன்னும் ஒரு மாதத்தில் முடிவுக்கு வரப்போகிறது. ஆசிரியர்கள் தகுதித் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது, திமுக அரசுக்கு 6 மாதப் பதவிக்காலம் மீதமிருந்தது. அந்தக் காலத்தில் தங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க திமுக அரசு எதேனும் நடவடிக்கை எடுக்கும் என்று ஆசிரியர்கள் நம்பினார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கையை திமுக அரசு இதுவரை காப்பாற்ற வில்லை. நம்பிய ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டு விடாமல், எளிய பாடத்திட்டம், குறைக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகியவற்றுடன் கூட சிறப்புத் தகுதித் தேர்வை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நடப்பாண்டில் நாளை வரையிலான 4 நாள்களில் மது வணிகம் ரூ.900 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
- மக்கள் விரோத மது ஆதரவு அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் ரூ.454 கோடிக்கு மது விற்பனையாகி இருந்த நிலையில், நடப்பாண்டில் அதை விட 14.10 சதவீதம் அதிகம் ஆகும். தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் 11.19 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியடைந்த நிலையில், அதை விட அதிகமாக மது வணிகம் வளர்ச்சியடைந்திருக்கிறது. மக்களுக்கு மதுவைப் புகட்டுவதில் மட்டும் தான் தி.மு.க. அரசு சாதனை படைக்கிறது.
கடந்த ஆண்டு பொங்கல் திருநாளின்போது 4 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில், நடப்பாண்டில் நாளை வரையிலான 4 நாள்களில் மது வணிகம் ரூ.900 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
பொங்கல் திருநாள் மது வணிகத்தில் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், மனமகிழ் மன்றங்களின் மூலம் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது என்பது தான். இது மதுக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட ரூ.435.41 கோடி மதுவுடன் ஒப்பிடும்போது 19 சதவீதம் ஆகும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் 500 மதுக்கடைகளை, அதாவது 9 சதவீதம் மதுக்கடைகளை மூடிய தி.மு.க. அரசு, 19 சதவீதம் கூடுதலாக மது வணிகம் செய்யும் அளவுக்கு மனமகிழ் மன்றங்களைத் திறந்து மதுவை விற்பனை செய்திருப்பது உறுதியாகி யிருக்கிறது.
மக்கள் விரோத மது ஆதரவு அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது.
- ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 7 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று ஆசிரியர் கண்ணன் என்பவர் (ஜனவரி 13) விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் கண்ணனின் உயிரிழப்புக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில,
"பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடத்தி வந்த போராட்டத்தின் போது நஞ்சு குடித்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் மருத்துவம் பயனளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பகுதிநேர ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணி நிலைப்புக் கோரிக்கையை வலியுறுத்தி 13 ஆண்டுகளாக போராடி வரும் அவர்கள், கடந்த 8ஆம் தேதி முதல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு மறுப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு எதிராக அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது.
சென்னையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் வானகரத்தில் உள்ள திருமண அரங்கத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அடக்குமுறைகளைக் கண்டித்தும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் கண்ணன் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மருத்துவம் பயனளிக்காமல் இன்று மாலை காலமானார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை. கடந்த ஐந்தாண்டுகளாக அவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட , அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு பதிலாக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே ஆசிரியர் கண்ணன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆசிரியர் கண்ணன் உயிரிழப்புக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
இனியாவது திமுக அரசு மனசாட்சிக்கு அஞ்சி பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு உரிமை இல்லை
- அன்புமணி தனது தலைவர் பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்ள மோசடி செய்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், கட்சி மற்றும் அதன் தேர்தல் கூட்டணிகள் குறித்து முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார.
அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி ராமதாஸ் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதும், கூட்டணி அமைத்ததும் சட்டவிரோதமானது மற்றும் அங்கீகரிக்கப்படாதது என தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவெடுக்கவும் தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், அன்புமணிக்கு அந்த உரிமை இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அன்புமணி தனது தலைவர் பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்ள மோசடி செய்துள்ளதாகவும், தற்போது பாமகவின் தலைவர் பதவியை தானே (ராமதாஸ்) ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பாமகவின் பெயர், கொடி அல்லது 'மாம்பழம்' சின்னத்தைப் பயன்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
- ஆசிரியர்களுக்கு எதிரான திமுக அரசின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.
- பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கோருவது மிகவும் நியாயமானது.
பணி நிலைப்பு கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர்களை கைது செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கி கைது செய்துள்ளனர். சில பெண் ஆசிரியர்களின் தலைமுடியை பிடித்து இழுத்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிய கொடுமையும் நடந்திருக்கிறது. ஆசிரியர்களுக்கு எதிரான திமுக அரசின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.
அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 16,500க்கும் கூடுதலான பகுதி நேர சிறப்பாசிரியர்களில் இப்போது சுமார் 12 ஆயிரம் பேர் மட்டுமே இப்போது பணியாற்றி வருகின்றனர். இவ்வளவு காலத்திற்கு பிறகும் மாதம் ரூ.12,500 மட்டுமே ஊதியம் பெறும் அவர்கள், தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கோருவது மிகவும் நியாயமானது.
ஆனால், ஜனநாயக உரிமைகள் பற்றி வாய்கிழியப் பேசும் திமுக, பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களின் உரிமைக்காக போராடுவதைக் கூட அனுமதிக்காமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத திமுக அரசு, போராடும் ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப் போவதாக எச்சரித்திருக்கிறது. அரசு ஆசிரியர்களுக்கு மோசடியான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து, அதையும் செயல்படுத்தாமல் ஏமாற்றி வருகிறது.
ஆட்சியும், அதிகாரமும் கைகளில் இருக்கும் திமிரில் திமுக ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன் மூலம் போராட்டங்களை முடக்கி விடலாம் என்று கனவு காண்கின்றனர். மக்கள் சக்தியை அதிகாரத்தின் மூலம் ஒடுக்க முடியாது. அதிகாரத் திமிரில் அடக்குமுறைகளை ஏவுபவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வி எனும் தண்டனையை வழங்கவிருப்பது உறுதி.






