என் மலர்
நீங்கள் தேடியது "மது விற்பனை"
- டெட்ரா பேக்குகளில் போதை தரும் மது தான் இருக்கிறது என்று பெற்றோராலும், ஆசிரியர்களாலும் கூட சந்தேகிக்கக்கூட முடியாது.
- காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்யப்பட்டால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தேன்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மது வகைகளை சிறிய அளவிலான காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது; இது குழந்தைகளின் வாழ்வில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்து காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்வதற்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு மிகவும் சரியானது என்பதை உறுதி செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் மது வகைகளின் தரப்பெயர் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கண்ணாடி புட்டிகளிலும், காகிதக் குடுவைகளிலும் அடைக்கப்பட்ட மது வகைகளின் மாதிரிகள் நீதிபதிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டன. மேல்சட்டைப் பைகளிலும், கால்சட்டைப் பைகளிலும் எளிதாக எடுத்துச் செல்ல வசதியாக சிறிய காகிதக் குடுவைகளில் (டெட்ரா பேக்) விஸ்கி எனும் மது வகை அடைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிர்ச்சியடைந்தார். மது வகைகள் இப்படி விற்பனை செய்யப்படுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
''இது மிகவும் ஆபத்தானது. இது பழச்சாறு அடைக்கப்பட்ட டெட்ரா பேக் போல காட்சியளிக்கிறது. இது குழந்தைகளின் கைகளில் கிடைத்தால் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த டெட்ரா பேக்குகளில் போதை தரும் மது தான் இருக்கிறது என்று பெற்றோராலும், ஆசிரியர்களாலும் கூட சந்தேகிக்கக்கூட முடியாது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்" என்று நீதிபதி சூர்யகாந்த் எச்சரித்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதி விடுத்த இந்த எச்சரிக்கைக்கும், தமிழ்நாட்டிற்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனாலும், மது வணிகத்தில் புதுமையை புகுத்துவதாகக் கூறி கடந்த ஆண்டில் டெட்ரா பேக்குகள் எனப்படும் காகிதக் குடுவைகளில் மது விற்க முடிவு செய்திருந்தது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உச்சநீதிமன்ற நீதிபதி இப்போது தெரிவித்த இதே கருத்துகளை அப்போது வெளியிட்டு எச்சரித்த நான், காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்யப்பட்டால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தேன். அதைத் தொடர்ந்து தான் அந்தத் திட்டத்தை திமுக அரசு கைவிட்டது.
ஒருவேளை பாட்டாளி மக்கள் கட்சியின் எச்சரிக்கையையும் மீறி காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தியிருந்தால், உச்சநீதிமன்றத்தால் இப்போது தெரிவிக்கப்பட்டதை விட மிக மோசமான கண்டனத்திற்கு ஆளாகியிருக்க நேரிடும். எது எப்படியிருந்தாலும் வருங்காலத் தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்ய நினைத்ததற்காகவே திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வாரம் பெருமளவில் குறைந்தது.
- பிரீமியம் மதுபானங்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்ததால் அதை வாங்க யாரும் முன் வரவில்லை.
புதுச்சேரி:
புதுவையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை அதிகளவில் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டைவிட தீபாவளி மது விற்பனை அதிகரித்து வந்துள்ளது. இந்த ஆண்டு வார விடுமுறையையொட்டி தீபாவளி பண்டிகை வந்தது. இதனால் மது விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டைவிட மது விற்பனை 5 முதல் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதற்கு கடந்த 3 மாதம் முன்பு அரசின் வருவாயை உயர்த்த மதுபானங்களின் வரியை உயர்த்தியதே காரணம் என தெரிய வந்துள்ளது.
அதோடு வழக்கமாக தீபாவளியை கொண்டாட புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வாரம் பெருமளவில் குறைந்தது. இதற்கு கனமழை எச்சரிக்கையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.
வழக்கமாக சுற்றுப்புறங்களான தமிழக மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் புதுவைக்கு வந்து மதுபானங்களை வாங்கி செல்வார்கள். ஆனால் பிரீமியம் மதுபானங்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்ததால் அதை வாங்க யாரும் முன் வரவில்லை. அதேநேரத்தில் குறைந்த விலையில் உள்ள உள்ளூர் மதுபானங்கள் அதிகளவில் விற்பனையாகி உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மட்டுமே மதுபான விற்பனை நடக்கிறது. இதனால் மாவட்ட வாரியாகவும், ஒட்டுமொத்தமாகவும் எத்தனை கோடிக்கு மதுபானம் விற்பனையானது என உடனடியாக தெரிந்து விடும். ஆனால் புதுவையில் தனியார் மொத்த மதுபான விற்பனை நிலையம், சில்லரை விற்பனை நிலையம், சுற்றுலா மதுபான விடுதிகள், ரெஸ்டோ பார்கள் என பல விதமாக விற்பனை நடப்பதால் ஒட்டுமொத்த விற்பனை தொகையை கண்டறிய முடியவில்லை.
இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மதுவிற்பனை வெகுவாக குறைந்துள்ளது என மதுபான விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரூ.438 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.
- தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 18-ந் தேதி ரூ.230 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி அக்டோபர் 18-ந் தேதி ரூ.230 கோடி, 19-ந் தேதி ரூ.293 கோடி, 20-ந் தேதி ரூ.266 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் சென்னை ரூ.158 கோடி, திருச்சி ரூ. 157 கோடி, சேலம் ரூ,153 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரூ.438 கோடியாக இருந்த மது விற்பனை இந்த ஆண்டு ரூ.790 கோடியாக அதிகரித்துள்ளது.
- டாஸ்மாக் மதுக்குடோன்கள் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை செயல்படாது.
- கடந்த ஆண்டை விட இந்த வருடம் மது விற்பனை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும்.
பொதுமக்கள் பண்டிகையை கொண்டாடி விட்டு சொந்த ஊருக்கு திரும்ப வசதியாக தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமையும் அரசு விடுமுறை அளித்துள்ளது.
எனவே 4 நாட்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் மக்கள் மூழ்கி உள்ள நிலையில் மது பிரியர்களும் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர். பண்டிகை நாட்களில் மது விற்பனையை அதிகரிக்க டாஸ்மாக் நிறுவனம் ஊழியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிஉள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 4829 மதுக்கடைகளில் 15 நாட்களுக்கு இருப்பு வைக்க வேண்டும். எந்த சரக்கும் இல்லை என்று சொல்லாமல் வாடிக்கையாளர்கள் கேட்கும் மதுபானங்களை கொடுக்க வேண்டும்.
சாதாரண ரக மது வகைகள் அதிகளவில் வைத்திருக்க வேண்டும். பிராந்தி, விஸ்கி, பீர், ரம் ரகங்கள் ரூ.140 குறைந்த விலை சரக்கு அதிகளவில் இருப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
டாஸ்மாக் மதுக்குடோன்கள் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை செயல்படாது. ஆனால் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை நாளிலும் செயல்படுகிறது. எந்தெந்த கடைகளுக்கு மதுபானம் தேவைப்படுகிறதோ அங்கு தட்டுப்பாடு இல்லாமல் சரக்கு அனுப்ப குடோனில் ஊழியர்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டை விட இந்த வருடம் மது விற்பனை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண நாட்களில் ரூ.100 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.130 கோடிக்கு விற்பனையாகும்.
பண்டிகை நாட்களில் இது ரூ.180 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. அந்த வகையில் இன்று முதல் 21-ந்தேதி வரை மதுபானங்கள் சுமார் ரூ.600 கோடிக்கு விற்பனைக்கு கடைகளில் குவிக்கப்பட்டுள்ளது. எந்த மதுக்கடையிலும் குறிப்பிட்ட ரக மதுபானங்கள் இல்லை என்று சொல்லாத வகையில் ஊழியர்கள் விற்பனையில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுபான பயன்பாடு இருந்து வருவதால் விற்பனை படுஜோராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் மதுக்கடைகளில் ரம் மது வகைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்களின் ரம் வகைகள் சப்ளை இல்லாததால் மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
- தற்போது டாஸ்மாக் கடைகளில் 10-க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்கப்படுகின்றன.
- தற்போது தினமும் சராசரியாக டாஸ்மாக் கடைகளில் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை விற்பனை நடைபெறுகிறது.
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய 2 நாட்களும் விடுமுறை தினங்கள் ஆகும். இதையொட்டி டாஸ்மாக் கடைகளில் இந்த ஆண்டு தீபாவளியையொட்டி அதிக அளவில் மது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி தீபாவளி பண்டிகை கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான மதுபானங்களை கையிருப்பில் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் அதன் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறைகள் வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்களிலும் மதுபானங்கள் தேவை சீராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால் முக்கியமான இடங்களில் கூடுதல் மதுபானங்களை இருப்பு வைக்க திட்டமிட்டுள்ளோம். முக்கியமாக பீர் வகைகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்படும்.
தற்போது டாஸ்மாக் கடைகளில் 10-க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்கப்படுகின்றன. அவற்றில் 5 முதல் 7 வகையான பீர்கள் வேகமாக விற்பனையாகின்றன. அந்த 7 வகை பானங்களும் கையிருப்பில் இருப்பதை கண்காணிக்க மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தினமும் சராசரியாக டாஸ்மாக் கடைகளில் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் விற்பனை பொதுவாக 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும். பண்டிகை காலங்களில், வழக்கமாக 15 சதவீதம் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
கடந்த 2023-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 3 நாட்களில் ரூ.460 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடந்தது. கடந்த 2024-ம் ஆண்டு 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளது.
டாஸ்மாக்கின் தினசரி வருவாயில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கிட்டத்தட்ட 40 சதவீதம் பங்களிக்கின்றன. விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த ஆண்டு கூடுதலாக ரூ.50 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
- உத்திராட நாளில் (அதாவது ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள்) மட்டும் ரூ.137 கோடிக்கு மது விற்பனையானது.
கொச்சி:
கேரளாவில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 10 நாட்கள் ஓணம் விழா நடந்தது. மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 நாட்களில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை ஆனது. கடந்த ஆண்டு ரூ.776 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இதை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.50 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
உத்திராட நாளில் (அதாவது ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள்) மட்டும் ரூ.137 கோடிக்கு மது விற்பனையானது. கடந்த ஆண்டு அதே நாளில் ரூ.126 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. இதை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.11 கோடி மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் 6 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் ரூ.1 கோடி மற்றும் அதற்கு கூடுதலாக மதுபானங்கள் விற்பனையானது. இதில் 3 சில்லறை விற்பனை கடைகள் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது.
கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளி பகுதியில் உள்ள அரசின் சில்லறை விற்பனை கடையில் ரூ.1.46 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இது மாநிலத்திலேயே அதிக அளவு விற்பனையான கடை ஆகும். அதற்கு அடுத்தபடியாக கொல்லம் அருகே உள்ள காவநாடு சில்லறை விற்பனை கடையில் ரூ.1.24 கோடிக்கும், மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னாவில் உள்ள எடப்பால் குற்றிப்பாலா சில்லறை மதுபான விற்பனை கடையில் ரூ.1.11 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
திருச்சூர் மாவட்டம் சாலக்குடி மதுபான சில்லறை விற்பனை கடையில் ரூ.1.07 கோடிக்கும், இரிஞ்சாலகுடா மதுபான கடையில் ரூ.1.03 கோடிக்கும், கொல்லம் மாவட்டம் குண்டராவில் உள்ள மதுபான கடையில் ரூ.1 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது என்று கேரள அரசின் மதுபான விற்பனை கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சிலர் ஜெயசித்ராவை விடுவிக்குமாறு ரகளையில் ஈடுபட்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி-தம்மம்பட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே பகலில் மது விற்றது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மனைவி ஜெயசித்ரா (35) என்பவரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவரிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
அப்போது அங்கு வந்த சிலர் ஜெயசித்ராவை விடுவிக்குமாறு ரகளையில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ராஜா மற்றும் அவரது நண்பர்களான ஜெயச்சந்திரன் (51), நீலகண்டன் (50) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இவர்களில் ஜெயச்சந்திரன் அரசு போக்குவரத்து கழகத்தில் தம்மம்பட்டி பணி மனையில் கண்டக்டராகவும், நீலகண்டன் சேலம் மெய்யனூர் பணி மனையில் டிரைவராகவும் பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து 2 பேரையும் சஸ்பெண்டு செய்து அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
- வழக்கத்திற்கு மாறாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை குறைந்துள்ளதாக தெரிகிறது.
- கோடையில் ஏப்ரல் முதல் ஜூலை வரை பீர் விற்பனை நன்றாகவே இருக்கும்.
சென்னை:
தமிழகத்தில் அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 4,777 கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் சராசரியாக தினமும் 1.60 லட்சம் மது பெட்டிகள் விற்பனையாகின்றன. அதில் 85 லட்சம் பெட்டிகள் பீர் பாட்டில்கள் ஆகும். கோடை காலம் என்றாலே பீர் விற்பனை அதிகமாக இருக்கும். மதுபிரியர்கள் குளிர்ச்சியான பீர் கேட்பதால், அனைத்து கடைகளிலும் குளிர்சாதன பெட்டியில் போதிய அளவு பீர் பாட்டில்கள் இருப்பு வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வழக்கத்திற்கு மாறாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை குறைந்துள்ளதாக தெரிகிறது. அதாவது முந்தைய ஆண்டுடன் ஏப்ரல் முதல் வாரத்தில் ஒப்பிடும்போது சுமார் 12 சதவீதம் அளவுக்கு தமிழகம் முழுவதும் பீர் விற்பனை குறைந்து விட்டது என்றும், குறிப்பாக சேலம், நாமக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், தஞ்சை ஆகிய மண்டலங்களில் மட்டும் 24 சதவீதம் அளவிற்கு பீர் விற்பனை குறைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் அவர்கள், விற்பனையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், கோடையில் ஏப்ரல் முதல் ஜூலை வரை பீர் விற்பனை நன்றாகவே இருக்கும். மழை பெய்யும் நாட்களில் விற்பனை சரியும் என்றனர்.
மேலும் பீர் விற்பனையை அதிகரிக்கும் விதமாக ஏற்கனவே டாஸ்மாக் நிறுவனம், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மது தயாரிக்கும் நிறுவனத்தின் 'பிளாக் பஸ்டர்' என்ற பீர் பாட்டிலை அறிமுகம் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மத்திய பிரதேச மாநிலத்தின் 'பிளாக் போர்ட்' மற்றும் 'உட்பெக்கர்' ஆகிய இரண்டு வகை பீர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அது தவிர மேலும் ஒரு வகை பீர் அறிமுகம் செய்யவும் டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் இரு மடங்கு விற்பனை
- அதிகளவில் வருவாய் ஈட்டி உள்ளதாக அதிகாரிகள் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 216 கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.3½ கோடி வரை மதுபான விற்பனை நடைபெறும்.
ஆனால் இந்த வருடம் தீபாவளி அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் இரு மடங்கு மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளது. இதில் 8 ஆயிரத்து 79 பெட்டி பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபான வகைகளும், 10 ஆயிரத்து 637 பெட்டி பீர் வகைகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.7 கோடியே 62 லட்சத்து87 ஆயிரத்து 920 வருவாய் ஈட்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர்.
- சுப்பிரமணியனிடம் இருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதே போல கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (28) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. ரோடு டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (22) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த 3 சம்பவங்கள் குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
- சந்து கடைகள் முளைத்து விவசாயக் கூலி தொழிலாளர்களை முழு நேர மது பிரியர்களாக மாற்றி வருவதாக கிராமப் பகுதி பெண்மணிகள் குமுறி வருகின்றனர்.
- மது விற்பனை குறித்த வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலாக தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் சுமார் 68 அரசு மதுபான கடைகள் உள்ளது. இருந்த போதிலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெளி மாநில மதுபாட்டில்கள் மற்றும் அரசு மது பாட்டில்கள் அமோகமாக விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாலக்கோடு பைபாஸ் சாலையையொட்டியும் , புதூர் மாரியம்மன் கோவில் எதிரிலும், கக்கன்ஜிபுரத்திலும் 4 ரோடு சந்திப்பிலும் ஏராளமனோர் பகல், இரவு என எந்த நேரத்திலும் மது பாட்டில்கள் கிடைக்கும் வகையில் சட்ட விரோதமாக அரசு மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜருகு சாமி செட்டிபட்டி ஏலகிரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சந்து கடைகள் முளைத்து விவசாயக் கூலி தொழிலாளர்களை முழு நேர மது பிரியர்களாக மாற்றி வருவதாக கிராமப் பகுதி பெண்மணிகள் குமுறி வருகின்றனர்.
மது விற்பனை குறித்த வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலாக தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் சந்து கடைகள் பெருகி வருவது வருத்தம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இவர்களுக்கு அரசு மதுபான கடைகளில் இருந்து மொத்தமாக விற்பனை செய்வதே இதற்கெல்லாம் காரணம் எனவும் காவல் துறையினருக்கு தெரிந்தே இது போன்ற செயல்கள் நடைபெறுகிறது எனவும், அதே போல் மொத்தமாக விற்பனை செய்யும் அரசு மதுபான கடை ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வண்டலூர் ஜெய் நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஜெய் நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு திருட்டுத்தனமாக மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






