என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் தீபாவளி மது விற்பனை சரிவு
- புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வாரம் பெருமளவில் குறைந்தது.
- பிரீமியம் மதுபானங்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்ததால் அதை வாங்க யாரும் முன் வரவில்லை.
புதுச்சேரி:
புதுவையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை அதிகளவில் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டைவிட தீபாவளி மது விற்பனை அதிகரித்து வந்துள்ளது. இந்த ஆண்டு வார விடுமுறையையொட்டி தீபாவளி பண்டிகை வந்தது. இதனால் மது விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டைவிட மது விற்பனை 5 முதல் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதற்கு கடந்த 3 மாதம் முன்பு அரசின் வருவாயை உயர்த்த மதுபானங்களின் வரியை உயர்த்தியதே காரணம் என தெரிய வந்துள்ளது.
அதோடு வழக்கமாக தீபாவளியை கொண்டாட புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வாரம் பெருமளவில் குறைந்தது. இதற்கு கனமழை எச்சரிக்கையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.
வழக்கமாக சுற்றுப்புறங்களான தமிழக மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் புதுவைக்கு வந்து மதுபானங்களை வாங்கி செல்வார்கள். ஆனால் பிரீமியம் மதுபானங்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்ததால் அதை வாங்க யாரும் முன் வரவில்லை. அதேநேரத்தில் குறைந்த விலையில் உள்ள உள்ளூர் மதுபானங்கள் அதிகளவில் விற்பனையாகி உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மட்டுமே மதுபான விற்பனை நடக்கிறது. இதனால் மாவட்ட வாரியாகவும், ஒட்டுமொத்தமாகவும் எத்தனை கோடிக்கு மதுபானம் விற்பனையானது என உடனடியாக தெரிந்து விடும். ஆனால் புதுவையில் தனியார் மொத்த மதுபான விற்பனை நிலையம், சில்லரை விற்பனை நிலையம், சுற்றுலா மதுபான விடுதிகள், ரெஸ்டோ பார்கள் என பல விதமாக விற்பனை நடப்பதால் ஒட்டுமொத்த விற்பனை தொகையை கண்டறிய முடியவில்லை.
இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மதுவிற்பனை வெகுவாக குறைந்துள்ளது என மதுபான விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.






