search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diwali"

    • நிறைய இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • சென்னை நகரில் மெட்ரோ உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தி.நகர், புரசைவாக்கம் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

    இந்த நிலையில் தி.நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் இன்று ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களை பார்வையிட்டார். மேலும் தி.நகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தி.நகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.

    ரெங்கநாதன் தெருவை சுற்றிலும் 64 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தொலைந்து போவதை தடுக்க அவர்களின் கைகளில் டேக் (அடையாள அட்டை) கட்டப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளை சீக்கிரமாக கண்டுபிடிக்க முடியும்.

    நிறைய இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்கு காவல்துறை சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அவை அனைத்தையும் எடுத்துள்ளோம்.

    தி.நகரில் பொருத்தப்பட்டுள்ள 64 கண்காணிப்பு கேமராக்களில் முகம் கண்டறியும் வசதி இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கூட்டத்தில் குற்றவாளி இருந்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியும்.

    பழைய குற்றவாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் எங்களிடம் இருக்கிறது. அதனுடன் ஒப்பிட்டு தி.நகரில் கூட்டத்தில் குற்றவாளிகள் இருப்பதை கண்டு பிடித்து உடனே எச்சரிக்கை தகவல் அனுப்பப்படும்.

    தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பஸ் நிலையங்கள் உள்ளதால் கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. சென்னை நகரில் மெட்ரோ உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்றைய கட்டணம் ரூ.585 முதல் ரூ.1,200 வரைதான்.
    • அனைத்து நகரங்களுக்கும் வழக்கத்தைவிட 3 மடங்கு மேல் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரமே உள்ளது. பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அவ்வாறு வெளியூர் செல்லும் பொதுமக்கள் சிரமமில்லாமல் சென்று திரும்ப போக்குவரத்துக்காக விரிவான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

    வருகிற 28-ந்தேதி (திங்கள்) முதல் 30-ந்தேதி (புதன்) வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் 11 ஆயிரத்து 200 அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    28 சிறப்பு ரெயில்களையும் தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது. அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் ஆம்னி பஸ்களும் அதிக அளவில் இயக்கப்படுகிறது. பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் மூன்று மடங்குக்கு மேல் கட்டணம் வசூலிப்பது வழக்கம்.

    அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும். உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசும் எச்சரிக்கும். ஆனாலும் இந்த கட்டண உயர்வு பண்டிகை காலங்களில் தடுக்க முடியாததாகவே இருக்கிறது.

    வழக்கம் போல் இந்த ஆண்டும் ஆம்னி பஸ்களில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் 'ரெட் பஸ்' என்ற இணைய தளம் வழியாகத்தான் பெரும்பாலும் முன்பதிவு செய்கிறார்கள்.

    சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்றைய கட்டணம் ரூ.585 முதல் ரூ.1,200 வரைதான். ஆனால் 29-ந்தேதி ரூ.2,110 முதல் ரூ.4,350 வரை. இதேபோல் கோவைக்கு ரூ.800 முதல் ரூ.1,040தான். ஆனால் 29-ந்தேதி ரூ.1,800 முதல் ரூ.3,470 வரை நிர்ணயித்துள்ளார்கள். இதே போல் தான் மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்பட அனைத்து நகரங்களுக்கும் வழக்கத்தைவிட 3 மடங்கு மேல் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.

    இந்த கட்டண உயர்வை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது பற்றி புக்கிங் ஏஜெண்ட் ஒருவர் கூறியதாவது:-

    அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் சொன்னாலும் பஸ் உரிமையாளர் தரப்பில் இணையதள நிறுவனத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி நழுவி விடுவார்கள். ஆனால், உண்மையில் இணைய தள நிறுவனத்துக்கு பஸ் உரிமையாளர்கள் கொடுப்பது 10 சதவீத கமிஷன் மட்டும்தான். எனவே ஆதாரத்துடன் கட்டண உயர்வை நிரூபித்து நடவடிக்கை எடுப்பது சிரமம் தான் என்றனர்.

    டிக்கெட்டுக்கு அலைமோதுவது, கிடைத்தாலும் அதிக கட்டணம் கொடுக்க வேண்டியிருப்பது போன்ற சிரமங்களால் பொதுமக்களும் தங்கள் பயணத் திட்டங்கள் பற்றி மாற்றி யோசிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

    நண்பர்கள் சேர்ந்து வாடகைக்கு கார்களை அமர்த்தி ஊர்களுக்கு செல்வது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இதுபற்றி டெம்போ வேன்கள் இயக்கும் ஒருவர் கூறியதாவது:-

    இங்கிருந்து நாகர்கோவில் வரை செல்ல ரூ.30 ஆயிரம் தான் வாடகை. 14 பேர் பயணிக்கலாம். இவர்கள் ஆம்னி பஸ்களில் சென்றால் 40 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியிருக்கும்.

    மேலும் ஊருக்கு சென்ற பிறகும் ஒரு நாள் வாடகை ரூ.2,400 கொடுத்தால் வேனை தங்கள் வசம் வைத்து கொண்டு அங்குள்ள இடங்களையும் சுற்றிப் பார்க்க முடியும். பின்னர் பண்டிகை முடிந்து ஊர் திரும்பலாம். இந்த ஆண்டு ஏராளமான வேன்கள் முன்பதிவு செய்யப்படுகிறது என்றார்.

    அதிலும் இப்போது 'ரெண்டல் கார்' வசதி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதாவது சாதாரண கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை கிடைக்கிறது. பயணம் செய்பவர்கள் எண்ணிக்கையை பொறுத்து எந்த ரக கார் வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ள முடியும்.

    ஒரு நாள் வாடகை ரூ.1,800 முதல் ரூ.5 ஆயிரம் வரை கார்களை பொறுத்து வசூலிக்கிறார்கள். டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், பணி செய்யும் நிறுவனத்தின் அடையாள அட்டை போன்ற மூன்று முக்கிய ஆவணங்களின் ஒரிஜினலை கொடுத்துவிட்டு காரை எடுத்து ஓட்டி செல்லலாம். இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கார் ஓட்ட தெரிந்தவர்கள் சொகுசான, வசதியான பயணத்துக்காக இந்த மாதிரி கார்களை முன்பதிவு செய்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு மட்டும் 500-க்கும் மேற்பட்ட கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக இதை நடத்தும் தனியார் நிறுவனத்தினர் கூறினார்கள்.

    • பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
    • அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தீபாவளி இனிப்புகளை வழங்கவும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    சென்னை:

    சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளா்கள் மற்றும் துணைப் பதிவாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் பால் வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத கிராமங்களில் புதிய சங்கங்களை உருவாக்குவது, சங்க உறுப்பினா்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

    மேலும், பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

    தீபாவளியை முன்னிட்டு ஆவின் சார்பில் காஜு பிஸ்தா ரோல், காஜு கட்லி, நெய் பாதுஷா, முந்திரி அல்வா, மிக்சர், முறுக்கு உள்ளிட்ட 6 சிறப்பு பல காரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு தேவைக்கேற்ப இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டை விட நிகழாண்டில் தீபாவளி விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்கவும், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தீபாவளி இனிப்புகளை வழங்கவும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை முதன்மைச் செயலர் சத்யபிரத சாகு, பால்வளத்துறை இயக்குநா் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநா் சு. வினீத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.

    • முதல்கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள்களில் 7 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
    • சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 30, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தென் மாவட்டங்கள், கேரளா, வெளிமாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து விரைவு ரெயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. குறிப்பாக முக்கிய வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களில் அதிக அளவில் காத்திருப்போர் பட்டியல் காணப்படும் நிலையில் அங்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    இந்நிலையில், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் புறப்படும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த ரெயில்களில் மொத்தமாக 7000 வரை காத்திருப்போர் பட்டியல் உள்ளது. பயணிகள் வசதிக்காக வருகிற 25-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரையும் அனுப்பப்பட்டுள்ளது.

    இதேபோன்று, சாத் பண்டிகையை முன்னிட்டு வருகிற 23-ந்தேதி முதல் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து புதுடெல்லி, அகமதாபாத்துக்கு வாரம் இருமுறை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வேக்கு உட்பட வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகா்கோவில், கோவை, திருவனந்தபுரம், மங்களூர், பெங்களூரு, மைசூா் உள்ளிட்ட நகரங்களுக்கு வருகிற 25-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள்களில் 7 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதில், சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 29, நவம்பர் 5-ந் தேதிகளில் நாகர்கோவிலுக்கும், வருகிற 29, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் கோவைக்கும், வருகிற 30, நவம்பர் 6 ஆகிய தேதிகளில் திருநெல்வேலிக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 30, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு நவம்பர் 2-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படும். கொச்சுவேலி-பெங்களூரு இடையே நவம்பர் 4-ந் தேதியும், நாகா்கோவில்-மைசூா் இடையே நவம்பர் 2-ந் தேதியும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    இதேபோன்று, சென்னை, எா்ணாகுளத்தில் இருந்து புதுடெல்லி மற்றும் அகமதாபாத்துக்கு நவம்பர் 15-ந்தேதி வரை சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

    • விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    • முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    கும்பகோணம் கோட்டம் சார்பில் சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டியும், பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது.

    இதைப்போல் சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு இரண்டு நாட்களும் சேர்த்து 280 கூடுதல் சிறப்பு பஸ்களும்,

    திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு இரண்டு நாட்களும் சேர்த்து 150 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும். இரு நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 430 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 20, 21 ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களிலும் 150 சிறப்பு பஸ்களும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையை சேர்ந்த கார்த்திக் தீபாவளி சீட்டு பிடித்து வந்தார்.
    • தீபாவளி சீட்டு பணத்தில் ரூ.3 லட்சத்தை மகன் கார்த்திக்கிடம் இருந்து அவரது தந்தை லோகநாதன் வாங்கியிருந்தார்.

    மதுரை, அக்.16-

    மதுரை வில்லாபுரம் பகுதியில் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அப்பள கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். லோகநாதனுக்கு கார்த்திக் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் கூட்டுக்குடித்தனமாக வசித்து வந்தனர்.

    சமீபத்தில் கார்த்திக் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கார்த்திக் தீபாவளி சீட்டு பிடித்து வந்தார். இதற்காக அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோரிடம் பணம் வசூலித்து வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருந்தார். அதனை தீபாவளி பண்டிகையின் பணம் வசூலித்தவர்களுக்கு பலகாரம், பரிசுப்பொருள் மற்றும் வட்டியுடன் கொடுக்க திட்டமிட்டு இருந்தார்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபாவளி சீட்டு பணத்தில் ரூ.3 லட்சத்தை மகன் கார்த்திக்கிடம் இருந்து அவரது தந்தை லோகநாதன் வாங்கியிருந்தார். தீபாவளிக்கு முன்னதாக அந்த பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் அவர் உறுதியளித்து இருந்தார். ஆனால் தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது வரை லோகநாதன் ரூ.3 லட்சத்தை திருப்பித்தரவில்லை.

    இதுதொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு அந்த பணத்தை கார்த்திக் தந்தையிடம் கேட்டபோது மீண்டும் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக், தந்தை என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லோகநாதனை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.

    பின்னர் அவர் நேராக அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கொலையுண்ட லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கார்த்திக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தீபாவளி சீட்டு பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பித்தராத தந்தையை மகனே கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    • விழா காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது அரசின் தொடர் நடவடிக்கை.
    • முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளது.

    பெரம்பலூர்:

    தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் 24-ந்தேதி ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படும். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    செல்போன் செயலி மூலமாக பதிவு செய்து பயணிப்பவர்களை அரசால் எதுவும் செய்ய முடியாது. அதுகுறித்து புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,

    விழா காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது அரசின் தொடர் நடவடிக்கை. அந்த வகையில் கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறோம். சில நேரங்களில் பஸ்கள் தேவைப்படும் வழித்தடங்களில் புதிதாக சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கும், நாள் முழுவதும் பஸ்களை இயக்கிய பணியாளர்களைக் கொண்டு மீண்டும் இயக்குவதும் பாதுகாப்பற்றது.

    அதனால், முக்கியமான விழா காலங்களில் தனியார் பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையின்போது பரீட்சர்த்தா முறையில் அந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டது. அதில், எந்தவித சிரமமும் ஏற்படவில்லை.

    எனவே தீபாவளி பண்டிகையின்போது, தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அரசின் முக்கிய நோக்கம், பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு எவ்வித சிரமமும் இன்றி செல்ல வேண்டும் என்பது தான். விழாக்களை அவர்கள் விருப்பம் போல கொண்டாடுவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.

    வழக்கமாக தமிழகத்தில் 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருவிழா காலங்களில் கூடுதலாக 4 அல்லது 5 ஆயிரம் பஸ்கள் இயக்க வேண்டும் என்றால், அதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் பஸ்களை வாங்கி நிறுத்தி வைத்திருக்க முடியாது. அதுபோன்ற நாள்களில் ஊழியர்களையும் நியமிக்க முடியாது.

    அதனால் இடைக்கால நிவாரணமாகவே தனியார் பஸ்களை அரசு ஒப்பந்த அடிப்படையில், அந்தந்த வழித் தடங்களில் இயக்கப்படுவது தவிர்க்க முடியாதது. பொதுமக்கள் தனியார் பஸ்களை விட, அதிகமாக அரசுப் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளது. எனவே பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு, இதுபோன்ற இடைக்கால ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    பேட்டியின்போது கலெக்டர் கிரேஸ் பச்சாவ், அருண் நேரு எம்.பி., பிரபாகரன் எம்.எல்.ஏ. உடனிருந்தனர்.

    • ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாளுக்கான ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும்.
    • ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர்.

    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

    மொத்தம் 11.72 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையாக ரூ.2.028.57 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸ் தொகையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதன்மூலம் லோகோ பைலட்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தீபாவளிக்குள் குண்டும் குழியும் இல்லாத சாலை திட்டத்தை டெல்லி அதிஷி அரசு முன்னெடுத்துள்ளது.
    • இன்று காலை 6 மணிக்கு அதிஷி மற்றும் அமைச்சர்கள் சாலைகளை ஆய்வு செய்தனர்.

    டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள அதிஷி நேற்று அமைச்சர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது தீபாவளிக்குள் குண்டும் குழியும் இல்லாத வகையில் சாலைகள் தரம் உயர்த்தப்படும். டெல்லி அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையில் தெருவில் இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

    அதன்படி இன்று காலை அதிஷி உள்ளிட்ட டெல்லி மாநில மந்திரிகள் தெருக்களில் உள்ள மோசமான சாலைகள் குறித்த ஆய்வு மேற்கொண்டனர். அத்துடன் போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    இது தொடர்பாக டெல்லி மாநில முதல்வர் அதிஷி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் "ஒட்டுமொத்த டெல்லி அரசின் அமைச்சரவை காலை ஆறு மணியில் இருந்து சேதம் அடைந்த சாலைகளை ஆய்வு செய்தோம். மோடி மில் பிளைஓவர், என்.எஸ்.ஐ.சி. ஒக்லா, சிராக் டெல்லி போன்ற இடங்களில் சேதம் அடைந்த சாலைகளை சரி செய்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் "சாலைகள் மோசமான இருந்தன. மக்கள் சாலைகளில் உள்ள பள்ளத்தால் கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்தித்து வந்தனர். போர்க்கால அடிப்படையில் சாலைகளை சரி செய்ய வேண்டும் என நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அரவிந்த் கெஜ்ரிவால் வழிக்காட்டுதலின்படி தீபாவளிக்குள் பள்ளம் இல்லாத சாலைகள் என்பதை உறுதி செய்ய நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

    டெல்லி மாநில மந்திரி சவுரப் பரத்வாஜ், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கிழக்கு டெல்லியில் உள்ள பத்பார்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தனர்.

    இது தொடர்பாக பரத்வாஜ் கூறுகையில் "டெல்லியில் அதிகமான மழை பெய்தது. இந்த பகுதியில் அனைத்து சாலைகளிலும் பள்ளம் இல்லாமல் உள்ளது. ஆனால், தண்ணீர் தேங்கியதால் 50 மீட்டர் சாலை சேதமடைந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். நாங்கள் வீதியில் இறங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இதை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்றார்" எனக் கூறினார்.

    வட கிழக்கு டெல்லி, யுமுனா விஹார், வாசிராபாத் சாலை போன்ற இடங்களில் மந்திரி கோபால் ராய் சாலைகளை ஆய்வு செய்தார். "எங்களுக்கு ஒரு குறிக்கோள் உள்ளது: டெல்லியில் உள்ள அனைத்து சாலைகளையும் சரிசெய்ய வேண்டும்" என்றார்.

    முன்னதா,

    டெல்லி முதலமைச்சர் அதிஷி நேற்று அமைச்சர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். டெல்லி தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறையினர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர், வருகிற தீபாவளி பண்டிகைக்கு முன் டெல்லியில் சாலைகளின் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

    தொடர்ந்து பேசிய அவர், "மழையால் பல சாலைகள் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. டெல்லி ஜல் போர்டு, பி.எஸ்.இ.எஸ்., டாடா பவர் போன்ற ஏஜென்சிகள் அந்தந்த பணிகளை மேற்கொண்டாலும், அதன்பிறகு சாலைகள் சீரமைக்கப்படாத காரணத்தால் உடைந்த சாலைகளால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

    1,400 கி.மீ., பொதுப்பணித்துறை சாலைகள் முழுமையாக சேதமடைந்து, புனரமைப்பு தேவை, எந்தெந்த சாலைகள் 100-200 மீட்டருக்கு பகுதியளவு சேதமடைந்துள்ளன, எந்தெந்த சாலைகளில் சிறிய பள்ளங்கள் மட்டுமே உள்ளன, அவற்றை நிரப்ப வேண்டும் என விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

    திங்கள் கிழமை முதல், டெல்லி அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் டெல்லியின் தெருக்களில் இருக்கும். நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பல்வேறு பகுதிகளுக்கு பொறுப்பேற்றுள்ளோம், அங்கு நாங்கள் நேரில் சாலைகளை ஆய்வு செய்து தேவையான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

    அக்டோபர் மாதத்தில் மட்டும் 1,400 கி.மீ. சாலைகளை சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் இறுதிக்குள், அதாவது தீபாவளி பண்டிகைக்குள், டெல்லி மக்களுக்கு தரமான சாலைகளை இருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.

    • டெல்லியில் சாலைகளின் தரம் உயர்த்தப்படும்.
    • உடைந்த சாலைகளால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

    டெல்லி முதலமைச்சர் அதிஷி இன்று அமைச்சர்கள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். டெல்லி தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறையினர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர், வருகிற தீபாவளி பண்டிகைக்கு முன் டெல்லியில் சாலைகளின் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

    தொடர்ந்து பேசிய அவர், "மழையால் பல சாலைகள் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. டெல்லி ஜல் போர்டு, பி.எஸ்.இ.எஸ்., டாடா பவர் போன்ற ஏஜென்சிகள் அந்தந்த பணிகளை மேற்கொண்டாலும், அதன்பிறகு சாலைகள் சீரமைக்கப்படாத காரணத்தால் உடைந்த சாலைகளால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்."

    "1,400 கி.மீ., பொதுப்பணித்துறை சாலைகள் முழுமையாக சேதமடைந்து, புனரமைப்பு தேவை, எந்தெந்த சாலைகள் 100-200 மீட்டருக்கு பகுதியளவு சேதமடைந்துள்ளன, எந்தெந்த சாலைகளில் சிறிய பள்ளங்கள் மட்டுமே உள்ளன, அவற்றை நிரப்ப வேண்டும் என விரிவான ஆய்வு நடத்தப்பட்டது."

    "திங்கள் கிழமை முதல், டெல்லி அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் டெல்லியின் தெருக்களில் இருக்கும். நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பல்வேறு பகுதிகளுக்கு பொறுப்பேற்றுள்ளோம், அங்கு நாங்கள் நேரில் சாலைகளை ஆய்வு செய்து தேவையான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்."

    "அக்டோபர் மாதத்தில் மட்டும் 1,400 கி.மீ. சாலைகளை சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் இறுதிக்குள், அதாவது தீபாவளி பண்டிகைக்குள், டெல்லி மக்களுக்கு தரமான சாலைகளை இருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று தெரிவித்தார்.

    • விமான டிக்கெட் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளன.
    • கட்டணங்கள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை உயர்ந்துள்ளன.

    ஆலந்தூர்:

    தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 31-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாட இப்போதே பயணதிட்டத்தை வகுத்து வருகிறார்கள்.

    தீபாவளிக்கு விமான பயணம் மேற்கொள்வோர் தங்களுடைய விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர். 90 நாட்களுக்கு முன்பே விமான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கி உள்ளதால் தீபாவளி பண்டிகையையொட்டி விமான கட்டணங்கள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளன.

    இதில் அக்டோபர் 30-ந்தேதியில் இருந்து நவம்பர் 5-ந்தேதி வரையிலான டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விமான டிக்கெட் எண்ணிக்கையும் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளன.

    பெங்களூரில் இருந்து பாட்னா செல்ல ரூ.30 ஆயிரம் வரை கட்டணம் எகிறி உள்ளது. இதேபோல் பெங்களூரில் இருந்து வாரணாசிக்கு ரூ.23 ஆயிரம், மும்பை-லக்னோ ரூ.19 ஆயிரத்து 292, பூனே-லக்னோ ரூ.19ஆயிரத்து 226, டெல்லி-கவுகாத்தி ரூ.18 ஆயிரத்து 573 ஆக கட்டணங்கள் உள்ளன.

    இதேபோல் மும்பையில் இருந்து சென்னைக்கு ரூ.5083 ரூபாயும், டெல்லியில் இருந்து சென்னைக்கு ரூ.7,618 ஆகவும் கட்டணம் உயர்ந்துள்ளது.

    கடைசி நேரங்களில் ரெயில் மற்றும் பேருந்து டிக்கெட் கிடைக்காதவர்கள் சொந்த ஊரு செல்வதற்கு விமான பயணத்தை மேற்கொள்ள திட்டமிடுவர்.

    இதனால் தீபாவளி பண்டிகை நெருங்கும் நாட்களில் விமான டிக்கெட் கட்டணம் பலமடங்க அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல்.
    • சூர்யா நடித்துள்ள ‘கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ்.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் 'விடாமுயற்சி' படத்தில் நடித்திருக்கிறார். திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    'விடாமுயற்சி' படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

    சூர்யாவின் திரை பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் 'கங்குவா', 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது விடுதலை இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படமும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்ற புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.




    அடுத்ததாக நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார் கவின். இந்த படத்திற்கு `கிஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படமும் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


    அதன்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் `எல்ஐசி'. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் தவிர எஸ்.ஜே.சூர்யா, கிரித்தி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படமும் தீபாவளி ரேசில் இணையும் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

    அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த 5 படங்களும் மோதிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஐந்து படங்கள் ரிலீசாவது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×