என் மலர்
நீங்கள் தேடியது "Festivals"
- பன்னீரை கடையில் வாங்காமல், வீட்டில் நாமே செய்தால் கலாகண்ட் நன்றாக வரும்.
- 1947-ல் பாபா தாக்கூர் தாஸ் என்பவரால் கலாகண்ட் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்!
தீபாவளிக்கு முறுக்கு, அதிரசம், குலாப் ஜாமூன், லட்டு என எண்ணெய் பலகாரங்கள் நிறைய செய்திருப்போம், சாப்பிடிருப்போம். ஆனால் பலரும் இந்தியாவின் பிரபலமான இந்த இனிப்பை மறந்திருப்போம். அப்படி தீபாவளிக்கு கலாகண்ட் செய்ய மறந்தவர்களுக்கான பதிவுதான் இது. சுவையான கலாகண்ட் செய்வது எப்படி என பார்ப்போம். கலாகண்ட் செய்வதற்கு பால், பன்னீர், நெய், சர்க்கரை, ஏலக்காய் உள்ளிட்டவை அவசியம். இதில் பன்னீரை கடையில் வாங்கமல், வீட்டில் இருக்கும் பாலை வைத்து நாமே செய்தால் கலாகண்ட் நன்றாக வரும்.
தேவையான பொருட்கள்...
பால் - 1 லிட்டர்
நெய் - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
குங்குமப்பூ - (வேண்டுமென்றால்)
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
பிஸ்தா - (வேண்டுமென்றால்)
பாதாம் - (வேண்டுமென்றால்)
எலுமிச்சை பழச்சாறு - 1 பழம்

ருசிக்க தயாராக கலாகண்ட் இனிப்பு
செய்முறை
முதலில் பன்னீர் செய்வது எப்படி என பார்ப்போம். பன்னீர் செய்வதற்கு 500மிலி பால் எடுத்துக்கொள்வோம். பாலை நன்கு காய்ச்சவேண்டும். பால் நன்கு கொதித்தபின்பு, அதில் ஒரு எலுமிச்சைப்பழத்தை பிழிந்து விடவேண்டும். பால் முழுவதுமாக திரிந்து வரும்வரையில் அடுப்பை நிறுத்தவேண்டாம். பின்னர் தண்ணீர் தனியாக பிரிந்த உடன், அதனை எடுத்து வடிகட்டி கொள்ளலாம். பின்னர் பன்னீர் மீது தண்ணீர் ஊற்றவேண்டும். அப்போதுதான் பன்னீரில் எலுமிச்சைப் பழத்தின் புளிப்பு தெரியாது.
பின்னர் ஒரு லிட்டர் பால் எடுத்துக்கொண்டு, அதனை நன்கு கொதிக்கவிடவேண்டும். கொதிக்கும்போது கிண்டிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் பாத்திரத்தில் அடிபிடிக்காது. பால் நன்கு வற்றி, க்ரீம் பதத்திற்கு வரும்வரை கிண்டவேண்டும். இந்தப்பதம் வரும்போதே பாலில், செய்துவைத்த பன்னீரை எடுத்துக்கொட்டி கிண்டுங்கள். தொடர்ந்து கிண்டியபிறகு பாலில் உள்ள ஈரம் வற்றியபிறகு, அதில் அரை கப் நெய் ஊற்றவேண்டும். நெய் ஊற்றி 5 நிமிடம் நன்றாக கிண்டியபின், 1 கப் வெள்ளை சர்க்கரையை சேர்க்கவேண்டும். இனிப்பு கூடுதலாக வேண்டுமென்றால், கூடுதல் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
கடைசியில் ஏலக்காய்தூள் போட்டு கிண்டவேண்டும். பின்னர் கலாகண்ட் நன்கு கெட்டி பதத்திற்கு வந்தபின் இறக்கிக்கொள்ளலாம். நன்கு நிறம்வேண்டும் என்பவர்கள் கூடுதல் நேரம்வைத்து கிண்டலாம். பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்தடவி, கலாகண்ட் கலவை சூடாக இருக்கும்போதே அதனை கொட்டி அழுத்திவிடவேண்டும். வேண்டுமானால் அதன்மேல் முந்திரி, பாதாம், என உங்களுக்கு பிடித்த பருப்பு வகைகளை சேர்த்துக்கொள்ளலாம். ஒரு இரண்டுமணிநேரம் கழித்து கலாகண்ட் கலவையை எடுத்துப்பார்த்தால் நன்கு ஆறி, கெட்டியாக இருக்கும். அருமையான கலாகண்ட் இனிப்பு தயார்.
- பாகு சூடாக இருக்கும்வரை லட்டு பிடிக்கக்கூடாது.
- 10 - 15 நாட்கள்வரை ரவா லட்டுவை வைத்து சாப்பிடலாம்.
அரைமணி நேரத்தில் ஈஸியாக செய்யக்கூடிய தீபாவளி பலகாரம் குறித்துதான் பார்க்கப் போகிறோம். அது வேறு ஒன்றும் இல்லை, ரவா லட்டுதான். பலரும் ரவா லட்டு செய்ய ஜவ்வரிசி, கடலை, பால் பயன்படுத்துவார்கள். ஆனால் இவை எதுவும் இல்லாமல், அரைமணி நேரத்தில் எளிமையான, இரண்டு வாரத்திற்கு வைத்து சாப்பிடக்கூடிய ரவா லட்டு செய்வது எப்படி என பார்ப்போம்.

முதலில் கடாயில் நெய்யை ஊற்றி, அது லேசாக சூடானவுடன் முந்திரி மற்றும் திராட்சையை சேர்க்கவேண்டும். முந்திரி, திராட்சை பொரிந்தவுடன் அதனை தனியாக எடுத்து வைக்காமல், அதிலேயே ரவையை கொட்டி வறுக்கவேண்டும். நீண்டநேரம் ரவையை வறுக்கக்கூடாது. பொன் நிறம் வந்தவுடன் எடுத்துவிடவேண்டும். அதன்பிறகு சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும். அரைகிலோ சர்க்கரை என்றால் அதில் முக்கால் பங்கு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ரவா லட்டுக்கு பாகு கெட்டியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். ஒருவேளை சர்க்கரையில் அழுக்கு இருந்தால் பாகு கொதிக்கும்போது அதில் கொஞ்சம் பால்சேர்த்து கொள்ளுங்கள். அப்போது அழுக்கு முழுவதும் மேலே வந்துவிடும். அதனை நாம் எடுத்துவிட்டால் பாகு சுத்தமாகிவிடும். பின்னர் குலாப் ஜாமுனுக்கு எப்படி பாகு பதம் எடுப்போமோ, அதைவிட கொஞ்சம் கெட்டியாக வரும்வரை பாகை கொதிக்கவைக்க வேண்டும். பாகு, பதத்திற்கு வந்தபின் அதனை இறக்கி, வறுத்து வைத்துள்ள ரவையில் ஊற்றி கிளறிவிட வேண்டும். பாகை முழுவதும் ஊற்றியபின் அதில் ஏலக்காய் தூளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையை லட்டு வடிவத்தில் பிடிக்கவேண்டும். பாகு சூடாக இருக்கும்வரை லட்டு பிடிக்கக்கூடாது. சூடாக லட்டு பிடித்தால், ஆறியவுடன் அது கடினமாகிவிடும். அதற்காக மிகவும் ஆறவிட்டும் லட்டு பிடிக்கக்கூடாது. மிதமான சூட்டில் ரவை லட்டுவை பிடிக்கவேண்டும். அவ்வளவுதான் எளிமையான ரவா லட்டு ரெடி. இதனை தாராளமாக 10 - 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
- எத்தனை இனிப்பு வகைகள் இருந்தாலும் கடித்துக்கொள்ள முறுக்கு வேண்டும்!
- நல்ல எண்ணெயில் சுட்டால் முறுக்கை 2 மாதத்திற்குக் கூட வைத்து சாப்பிடலாம்.
தீபாவளி நெருங்கிவிட்டது. அனைவரது வீட்டிலும் அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் சுடும் வாசம் வீசத்தொடங்கியிருக்கும். நாம் எத்தனை இனிப்பு வகைகள் சாப்பிட்டிருந்தாலும், அத்துடன் கடித்துக்கொள்ள முறுக்கு வேண்டும் என நாவின் சவை அரும்புகள் கேட்கும். அப்படிப்பட்ட முறுக்கில் பலவகைகள் உள்ளன. வெவ்வேறு பொருட்களை பயன்படுத்தி முறுக்கு சுடலாம். அந்தவகையில் பாசிப்பருப்பு முறுக்கு எப்படி சுடலாம் என பார்ப்போம்.

செய்முறை
பாசிப்பருப்பு முறுக்கு சுடுவதற்கு அரை கப் வெள்ளை உளுந்து, கால் கப் பாசிப்பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கழுவ வேண்டும். பின்னர் இவை இரண்டையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்ததும், சிறிதுநேரம் ஆறவிடவேண்டும். பின்னர் தண்ணீர் இல்லாமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கூடவே 4 கப் அரிசிமாவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் அரைத்த பாசிப்பருப்பு கலவை, கருப்பு எள் அல்லது வெள்ளை எள், கொஞ்சமாக உப்பு மற்றும் மிதமான சூட்டில் 2 கரண்டி எண்ணெய் சேர்க்கவேண்டும். எந்த எண்ணெய் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். அப்படி எண்ணெய் வேண்டாம் என நினைப்பவர்கள் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் பெருங்காயத்தூளையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து பிசைந்துக்கொள்ள வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிகமாக ஊற்றிவிடக்கூடாது. மாவு கெட்டியாக இல்லாமல் நல்ல மென்மையான பதத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் முறுக்கு நன்றாக வரும். மொறுமொறுவெனவும் இருக்கும். அந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முறுக்கு உரலில் நிரப்பவேண்டும். பின்னர் வாழை இலை அல்லது தட்டு எடுத்து, அதில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய்தடவி அதன்மீது உங்களுக்கு என்ன வடிவத்தில் வேண்டுமோ அதற்கேற்றவாறு பிழிந்து கொள்ளலாம். அதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். வெள்ளை நிறத்திலேயே வேண்டும் என்றால் கொஞ்ச நேரத்திலேயே எடுத்துவிடவேண்டும். நன்கு சிவப்பான நிறத்தில் வேண்டும் என்றால் கொஞ்சநேரம் எண்ணெயில் விட்டு எடுக்கவேண்டும். முறுக்கு நன்கு ஆறியபின் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும்.
- தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய பகுதி ஆடை அலங்காரம்.
- ஒவ்வொரு உடையும் இந்தியாவின் கலாச்சார கதையைச் சொல்கிறது.
பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். புத்தாடை அதற்கு இன்னும் அழகை கூட்டுகிறது. இந்நிலையில் அனைவரின் மனதிலும் எழும் கேள்வி, "தீபாவளிக்கு என்ன ட்ரெஸ் போடுவது?" என்பதுதான். தீபாவளிக்கு என்ன அணியலாம் என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கான பதிவுதான் இது. தீபாவளிக்கு ஆடை அணிவது என்பது வெறும் பாரம்பரிய நடைமுறை மட்டுமல்ல. மக்கள் தங்கள் தனித்துவமான பாணிகளைக் காட்ட ஒரு சிறந்த வழியாகும். அது மின்னும் புடவைகளாக இருந்தாலும் சரி, நேர்த்தியான லெஹங்காக்களாக இருந்தாலும் சரி, துடிப்பான சல்வார் கமீஸ் ஆக இருந்தாலும் சரி... ஒவ்வொரு உடையும் இந்தியாவின் கலாச்சார கதையைச் சொல்கிறது. மேலும் தீபாவளி ஆடைகள், மாறிவரும் நவீன காலத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. இதில் சில உடைகள் குறித்து பார்ப்போம்.
புடவை
பெண்களை மிகவும் அழகாக காட்டும் உடை என்றால், அது புடவைதான். அதிலும் நம்மை தனியாக எடுத்துக்காட்ட வேண்டுமானால், நீலம், அடர்சிவப்பு, அடர்பச்சை போன்ற பிரகாசமான நிறங்களில் புடவை கட்டலாம். ஆனால், அந்த கலர் நமக்கு ஏற்றதாக இருக்குமா என்றும் ஒருமுறை பார்த்துக்கொள்ளலாம். தற்போதையை தலைமுறையினர் பலருக்கும் புடவை கட்டத்தெரியாது. சிலருக்கு சிரமமாக இருக்கும். அதற்கான தீர்வாக தீபாவளி ட்ரெண்டிங்கில் இப்போது ரெடிமேட் சாரீஸ் வந்துள்ளன. இது பாரம்பரியம் மற்றும் ஸ்டைல் என இரண்டையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டைலாகவும் இருக்கணும், புடவையாகவும் இருக்கணும் என நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வு.
அனார்கலி
சிலருக்கு புடவை கட்டிக்கொண்டு நீண்டநேரம் இருப்பது சௌகரியத்தை அளிக்காது. அப்படி இருப்பவர்கள் பாரம்பரியம் மற்றும் சௌகரியத்தை கொண்ட அனார்கலியை தேர்வு செய்யலாம். கொஞ்சம் எடுத்துக்காட்ட வேண்டுமானால் எம்பிராய்டரி செய்யப்பட்ட அனார்கலியை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். பல வண்ணங்களில், கச்சிதமான டிசைனிங் கொண்ட இந்த ஆடைகள், தீபாவளி போன்ற விழாக்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கின்றன.

பல வண்ணங்களில் கச்சிதமான டிசைனிங் கொண்ட ஆடைகள், தீபாவளி போன்ற விழாக்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும்
லெஹங்கா
பட்டு, வெல்வெட், ஜார்ஜெட் போன்ற துணிகளில், ஜர்தோசி, எம்ப்ராய்டரி, சீக்வின்ஸ், முத்துக்கள் மற்றும் கற்கள் கொண்டு செய்யப்படும் நேர்த்தியான வேலைப்பாடுகள் லெஹங்காவுக்கு ஒரு ராஜரீக தோற்றத்தை அளிக்கின்றன. லெஹங்காவுடன் அணியும் துப்பட்டா, அதன் அழகை மேலும் அதிகரிக்கிறது. மெல்லிய துணியில், லெஹங்கா மற்றும் சோளியின் வேலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு டிசைன் செய்யப்பட்ட துப்பட்டா, பெண்ணுக்கு நல்ல தோற்றத்தை அளிக்கிறது. இப்போதெல்லாம் மணப்பெண்கள் கூட லெஹங்காவைத்தான் அணிகின்றனர்.
பலாசோ
பலாசோவில் நிறைய ஸ்டைல் செய்யலாம். பளீர் நிறங்களில் கோல்ட் ஜரிகைகள் கொண்ட பலாசோ வாங்கி அதற்கு டாப் அல்லது குர்த்தா அணிந்து மேட்ச் செய்து அசத்தலாம்.
சல்வார்...
பெண்கள் சல்வார் அணிந்து சுடிதார் அணிவது இயல்பு. ஆனால் சல்வாரிலும் ஜரிகை டிசைனில் இப்போது ட்ரெண்டிங்கில் நிறைய கிடைக்கின்றன. அதற்கேற்றவாறு அணிகலன்கள் அணிந்தால் நன்றாக இருக்கும்.
லாங் கவுன்
முழு நீள குர்த்தா அல்லது முழு நீள கவுன் என்ற பெயரில் சுங்குடி புடவையில் கஸ்டமைஸ்டு முறையில் தைத்து அணிவது சமீபத்திய ட்ரெண்ட். அது இந்த தீபாவளிக்குப் பக்கா பொருத்தமாக இருக்கும்.
பாவாடைச் சட்டை
ஜரிகை வைத்தப் பட்டுப் பாவடை அல்லது கற்கள் பதித்த டிசைனர் பட்டுப்பாவடை. இப்படி எது தேர்வு செய்தாலும் நல்ல தேர்வாக இருக்கும்.
- தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது முறுக்கும், அதிரசமும்தான்.
- கடைகளில் பலகாரம் வாங்குவதைவிட வீட்டில் செய்வதுதான் ஸ்பெஷல்!
"தீபாவளி வந்துடுச்சி.. ட்ரெஸ் வாங்கியாச்சா? பலகாரம் எல்லாம் சுட்டாச்சா"? என்ற கேள்விகளிலேயே பாதி தீபாவளி பிறந்துவிட்டது. ட்ரெஸ் வாங்குகிறோமோ இல்லையோ, பலகாரம் இல்லாமல் தீபாவளி ஓடாது. காரணம் எல்லாரும் சாப்பிடுவாங்க. பிள்ளைங்க, யாரையும் வேடிக்கை பார்த்து ஏங்கக்கூடாது என, இருக்கும் பொருட்களில் எதையாவது செய்வாள் அம்மா. அந்த வகையில் தீபாவளி என்றாலே நமக்கு பெரும்பாலும் நினைவுக்கு வருவது முறுக்கும், அதிரசமும்தான். தீபாவளிக்கு அம்மா சுடும் முறுக்கையும், அதிரசத்தையும் ஒரு மாதத்திற்கு மேலும் வைத்து சாப்பிடுவோம். முறுக்கு சற்று நமத்தாலும், அதிரசம் அப்படியே இருக்கும். அப்படிப்பட்ட அதிரசத்தை சுவையாக, எளிதாக செய்வது எப்படி? என பார்ப்போம்.

அதிரசம் செய்முறை
1 கிலோ பச்சரிசியை கழுவி, அரிசியில் இருக்கும் ஈரம் போகும்வரை காயவைக்க வேண்டும். பின்னர் அதனை லேசாக கொரகொர பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். அரைக்கும்போது வாசனை கொடுக்கும் அளவிற்கு ஏலக்காயை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கிலோ அரிசிக்கு ஏற்ப, சுவைக்கு தகுந்தவாறு 600 அல்லது 750 கிராம் வெல்லம் எடுத்துக்கொள்ளலாம். அந்த வெல்லத்தை தண்ணீரில் கொதிக்கவைத்து பாகு காய்ச்ச வேண்டும். பாகு பதம் பற்றி கவலைப்படாதீர்கள். வெல்லம் தண்ணீர் நன்றாக கொதிக்கும்போது, விரல்களில் தொட்டு பார்க்கும்போது, அது நூல்போல வரவேண்டும். அவ்வளவுதான்...
அந்தப் பதம் வந்த பிறகு, பாகை இறக்கி, அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் ஊற்றி, இரண்டையும் நன்றாக கலந்துவிடவேண்டும். அப்போது கொஞ்சம் சுக்குப்பொடியும் சேர்த்துக்கொள்ளலாம். மொத்தமாக சேர்த்து பிசைந்த மாவை 2, 3 நாட்கள் ஊறவைக்க வேண்டும். பின்னர் மாவை எடுத்து பார்த்தால் நன்றாக பதம் பெற்றிருக்கும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து, அதனை வாழை இலையில் வைத்து தட்டி, சூடான கடலை எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான அதிரசம் ரெடி. இதில் வேறு எந்தப் பொருளும் சேர்க்கத் தேவையில்லை.
- சூரி நடிப்பில் அண்மையில் வெளியான 'மாமன்' படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.
நடிகர் சூரி நடிப்பில் அண்மையில் வெளியான 'மாமன்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் சூரி மதுரை அருகே ராஜாக்கூர் கிராமத்தில் தனது சொந்த ஊரில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவில் ஊர் மக்களோடு சேர்ந்து கும்மி அடித்து உற்சாக நடனம் ஆடியுள்ளார்.
ஊர்த்திருவிழாவில் பெண்களுடன் சேர்ந்து சூரி கும்மி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- விவசாயி பணிகளை முடிந்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சருகுவலையபட்டி ஊராட்சியை சேர்ந்தது அரியூர்பட்டி. இங்கு மோகினி சாத்தான் கண்மாய் உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் தங்கள் விவசாயி பணிகளை முடிந்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் மீன்பிடித் திருவிழா விவசாய பணிகள் முடிந்த பின்பு இன்று காலை 5 மணி அளவில் தொடங்கியது. இந்த மீன் பிடி திருவிழாவில் பங்கேற்க சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மட்டுமன்றி சிவகங்கை, திண்டுக்கல் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.
முதலில் கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளைத் துண்டு வீச, சுற்றி இருந்த மக்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டு இறங்கி தங்கள் கொண்டு வந்திருந்த கச்சா, வலை, குத்தா போன்ற ஏராளமான மீன்பிடி சாதனங்களை பயன்படுத்தி மீன்களை போட்டி போட்டு பிடித்தனர்.
இதில் கெண்டை, கெளுத்தி, கட்லா, ரோகு ஜிலேபி, வீரா மீன்கள் என சிறிய ரக மீன்கள் முதல் 2 கிலோ, 3 கிலோ வரை உள்ள பெரிய மீன்கள் பிடிபட்டது. பிடித்த மீன்களை இப்பகுதி மக்கள் விற்பனை செய்யாமல் தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து சமைத்து சாமி கும்பிட்டு சாப்பிடுவது வழக்கமாய் உள்ளது.
இப்படி செய்வது மூலம் வருங்காலங்களில் மழை நன்றாக பெய்து விவசாயம் செழிக்கும் என்பதை பகுதி மக்களின் தொடர் நம்பிக்கையாக உள்ளது. இத்திருவிழாவில் ஜாதி மத பாகுபாடு இன்றி சமத்துவமாய் நடைபெறும் ஒரு சமத்துவ திருவிழாவாக நடைபெற்றது.
- கந்தர்வகோட்டை ஆபத் சகாயேஸ்வரர் கோவிலில் முப்பெரும் விழா நடைபெற்றது
- விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோவிலில் திருவாசகம் முற்றோதல், முதலாம் ஆண்டு நிறைவு விழா, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் திருமேனி திருவீதி உலா மற்றும் திருமுறைகள் திருவீதி உலா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
கோவில் கிழக்கு கோபுரத்திலிருந்து நால்வர் திருமேனிகள் மற்றும் திருமறைகள் அடங்கிய பெட்டிகளை சிவன் அடியார்கள் தங்களின் சிரமேல் வைத்து பக்தி பெருக்குடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கைலாய வாத்தியம் முழங்க திரு வீதிஉலா நடைபெற்றது.திருவீதி உலாவின் போது சிவன் அடியார்களுக்கும், பக்தர்களுக்கும் ஆங்காங்கே பொதுமக்கள் நீர்மோர், இளநீர், பிஸ்கட் உள்ளிட்ட உணவு வழங்கினர். நிகழ்ச்சியில் சென்னை, பட்டுக்கோட்டை, திருச்சி, கந்தர்வகோட்டை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளுவர்.
- 6-ந் தேதி காலை மீண்டும் சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்றடையும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான முத்து பல்லக்கு திருவிழா நாளை இரவு தொடங்கி 6-ந் தேதி அதிகாலை வரை நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி தஞ்சையில் உள்ள கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகிய சுவாமிகள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 வீதிகளிலும் உலா வருவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. தஞ்சை சின்ன அரிசிக்காரத்தெருவில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர், முருகப்பெருமான், குறிச்சி தெருவில் உள்ள முருகன், மேலஅலங்கம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள முருகர், கீழவாசல் வெள்ளை விநாயகர், உஜ்ஜையினி காளி கோவிலில் இருந்து கல்யாண கணபதி, தெற்கு ராஜ வீதி கமலரத்தின விநாயகர், காமராஜர் காய்கறி மார்க்கெட் செல்வ விநாயகர், வடக்கு வாசல் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து முருகர், விநாயகர், மேல வெளி ரெட்டிப்பாளையம் சாலை வெற்றி முருகன் உள்பட 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் முத்துப் பல்லக்கில் எழுந்தருளி நாளை இரவில் தஞ்சையில் உள்ள 4 ராஜ வீதிகளிலும் வீதி உலா வர உள்ளது.இந்த பல்லக்குகள் எல்லாம் அந்தந்த கோவில்களில் இருந்து புறப்பட்டு தஞ்சை தெற்கு வீதி, கீழவீதி, மேலவீதி, வடக்கு வீதி ஆகிய வீதிகளில் வலம் வரும். நாதஸ்வர கச்சேரி மற்றும் வான வேடிக்கைகளுடன் விடிய விடிய இந்த திருவிழா நடைபெற உள்ளது. 6-ந் தேதி காலை மீண்டும் சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்றடையும்.
திருவிழாவை முன்னிட்டு அந்தந்த கோவில்களில் முத்துப் பல்லக்கு தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர்.
- அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஆற்றங்கரை தெருவில் செல்வமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானமும்,பால், பன்னீர்,இளநீர், சந்தனம்,குங்குமம், மாப்பொடி ,திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், பூச்சொரிதல் நடைபெற்றது.
தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி மற்றும் சாமி வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- நமது கலாரத்தில், பண்டிகைகளும் விசேஷங்களும் அதிகமாக நடக்கும்.
- பலகாரங்கள், உடல் எடையை அதிகரிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நமது கலாரத்தில், பண்டிகைகளும் விசேஷங்களும் அதிகமாக நடக்கும். அனைத்து பண்டிகைகளும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அதிகரிக்கக் கூடியவை. அதேசமயம் பண்டிகைக்கு தயாரிக்கும் பலகாரங்கள், உடல் எடையை அதிகரிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். பண்டிகை நாட்களில் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றி, உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு சில குறிப்புகள்:
பண்டிகைக்கால பரபரப்பில் பலரும் காலை உணவை தவிர்த்து விடுவார்கள். அதனால் மதியம் உணவு சாப்பிடும் அளவு அதிகரிக்கும். இடையில் நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் எண்ணம் உண்டாகும். அதன் காரணமாக பண்டிகை பலகாரங்களை கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுவீர்கள்.
பண்டிகை நாட்களில் உடல் எடையை குறைப்பது சாத்தியம் இல்லாதது. உறவினர்களும், நண்பர்களும் இனிப்புகளை வழங்கும்போது உங்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது. எனவே உடல் எடையை குறைக்கும் எண்ணத்தைத் தவிர்த்து, தற்போது இருக்கும் எடையை அதிகரிக்காமல் பராமரிப்பதற்கான வழிகளை கடைபிடியுங்கள்.
பண்டிகை நாட்களிலும் உடற்பயிற்சியை தவிர்க்காதீர்கள். மிதமான உடற்பயிற்சிகள், உடங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதோடு மன நிறைவையும் உண்டாக்கும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல் வதற்கு முன்பு, குறைந்த அளவு உணவு சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். காய்கறி சாலட், ஆரோக்கிய மான சிற்றுண்டி போன்றவற்றை சாப்பிடும்போது வயிறு சற்றே நிறைந்து இருக்கும். இதனால் விருந்தில் இருக்கும் தின்பண்டங்கள் உங்கள் ஆர்வத்தைத் தூண்டாமல் தடுக்க முடியும். குளிர்பானங்கள் குடிப்பதில் சற்றே கவனமாக இருங்கள்.
அதிகப்படியான சர்க்கரை ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் மதிய உணவில் அதிக கொழுப்பு உள்ள பொருட்களையும், இனிப்புகளையும் சாப்பிட்டீர்கள் என்றால். மற்ற நேரங்களில் எளிய உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு நாளுக்கு கூடுதலாக 500 கலோரிகள் எடுத்துக்கொண்டால். அது உங்கள் உடல் எடையில் விரைவாக எதிர்மறை மாற்றத்தை உண்டாக்கும். பண்டிகை நாட்களாகவே இருந்தாலும், ஆரோக்கிய மான உணவுகளை சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுங்கள். எண்ணெய், கொழுப்பு நிறைந்த, மசாலா சேர்த்த உணவுகளை தவிர்த்து விடுவதே நல்லது.
- இவை தவிர மேலும் பல மகிமைகளும் இந்த பங்குனி உத்திரத் திருநாளுக்கு உண்டு.
- தெய்வ மணம் கமழும் எண்ணற்ற திருநாட்களுள் பங்குனி உத்திரத் திருநாளும் ஒன்று.
தெய்வ மணம் கமழும் எண்ணற்ற திருநாட்களுள் பங்குனி உத்திரத் திருநாளும் ஒன்று.
இத்திருநாளை தெய்வீகத் திருமண நாளாகவே இந்து சமயம் போற்றி கொண்டாடுகிறது.
பங்குனி மாதம் பவுர்ணமி திதியோடு உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளான
பங்குனி உத்திர திருநாளில் தான் அநேக தெய்வீக திருமணங்கள் நடந்தேறியுள்ளன.
இந்த புராண அடிப்படையிலேயே பங்குனி மாதத்தில் சைவத் திருத்தலங்களோடு, வைணவ ஆலயங்களிலும்
திருக்கல்யாண உற்சவ மாத பங்குனி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
இவை தவிர மேலும் பல மகிமைகளும் இந்த பங்குனி உத்திரத் திருநாளுக்கு உண்டு.






