என் மலர்
நீங்கள் தேடியது "Diwali sweets"
- வழக்கமான மீன் வறுவலை விட முற்றிலும் மாறுபட்ட மீன் சமையல்!
- செட்டிநாடு உணவுக்கு சின்ன வெங்காயம் தனிச்சுவை தரும்.
செட்டிநாடு சமையல் தனித்துவமான நறுமணமும், காரசாரமான சுவையும் கொண்ட உணவுகளுக்குப் பெயர் போனது. அந்த சிறப்பு மிக்க பட்டியலில், செட்டிநாடு ஸ்டைல் மீன் பூண்டு வறுவல் ஒரு தனி இடத்தைப் பிடிக்கிறது. இது வழக்கமான மீன் வறுவலை விட முற்றிலும் மாறுபட்டு, பூண்டின் தனித்துவமான சுவையையும், அற்புதமான வாசனையையும் தாங்கி நிற்பதால், இதனைச் சுவைப்பவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும். சாதத்துக்குத் துணையாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ பரிமாற ஏற்ற இந்த உணவு, சுவை மிகுந்தது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும்கூட. இந்த ரெசிபியை நமக்கு செய்துகாட்டுகிறார் ஃபெரோஸ் ஹோட்டலின் செஃப் சதீஷ் தாமு.

செய்முறை
* முள் இல்லாத மீனை 65 மசாலா சேர்த்து நன்றாக ஊற வைத்து பொரித்து எடுத்து வைக்கவும். (பொரித்த மீனை கையால் லேசாக மசிக்கவும்.)
* ஒரு கனமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
* எண்ணெய் சூடானதும், முதலில் சோம்பு சேர்த்து பொரிய விடவும். சோம்பு நல்ல மணம் வந்ததும், கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
* பிறகு, குண்டு வரமிளகாயை சேர்த்து வறுக்கவும்.
* அடுத்ததாக, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். செட்டிநாடு உணவுக்கு சின்ன வெங்காயம் தனிச்சுவை தரும். வெங்காயம் நல்ல பொன்னிறமாக வரும்வரை வதக்க வேண்டும்.
* வெங்காயம் வதங்கியதும், நசுக்கி வைத்த பூண்டை போட்டு, அதன் பச்சை வாசனை போகும்வரை நன்றாக வறுக்கவும். இந்த டிஷ்ஷுக்கு பூண்டின் சுவை மிக முக்கியம். நல்ல பிரவுன் கலராகும்வரை பூண்டை வறுக்க வேண்டும்.
* வதக்கிய பூண்டு மற்றும் வெங்காய கலவையில், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
* அடுப்பை குறைத்து வைத்து, மிளகாய் தூள், சீரகத் தூள், தனியா தூள், சோம்புத் தூள், சுவைக்காக செட்டிநாடு மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
* இந்த மசாலாக்கள் எண்ணெயிலேயே ஸ்லோ குக் (மெதுவாக வறுக்கப்படுவது) ஆகி, நல்ல மணம் வரும் வரை கிளறவும்.
* சிறிது உப்பு சேர்த்து கிளறவும்.
* மசாலா வேக, சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். மசாலா பச்சை வாசனை நீங்கி, நன்கு குக் ஆனதும் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.
* மசாலா தயாரானதும், முன்னரே பொரித்து, மசித்து வைத்த மீன் துண்டுகளை அதில் சேர்த்து, மசாலா, மீன் துண்டுகளுடன் நன்றாகக் கலக்கும்படி மெதுவாக புரட்டவும்.
* இறுதியில், தேங்காய்த் தூளைச் சிறிதளவு தூவி, மீண்டும் ஒருமுறை கிளறி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் மீன் பூண்டு வறுவல் தயார்.
* கொத்தமல்லித் தழை, வறுத்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் குண்டு மிளகாய் ஆகியவற்றால் அலங்கரித்துப் பரிமாறவும்.

ப்ளேட்டிங் செய்யப்பட்டுள்ள மீன் பூண்டு வறுவல்
ஆரோக்கிய நன்மைகள்
1. மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன.
2. மீனில் உள்ள வைட்டமின் D மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.
3. இந்த உணவில் பூண்டு அதிக அளவில் சேர்க்கப்படுவதால், செரிமானத்தை மேம்படுத்துவதுடன், பூண்டில் உள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றன.
4. செட்டிநாடு சமையலில் பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன், உணவுக்கு நல்ல சுவையையும் தரும்.
- பட்டாசு வெடிக்கும்போது தளர்வான உடை வேண்டாம்! ஜீன்ஸ் போன்ற டைட்டான உடை அணிய வேண்டும்!
- சாதாரண பட்டாசுக்கும், பசுமை பட்டாசுக்கும் வித்தியாசம் என்ன?
தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். அப்படி அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் பட்டாசு வெடிக்கும்போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது. குறிப்பாக பெண்கள், தீபாவளிக்கு தாங்கள் வாங்கிய புத்தாடைகளை அணிந்துக்கொண்டு பட்டாசு வெடிக்கும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, தங்கள் உடை தளர்வாக இல்லாமல், இறுக்கமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் பட்டாசு வெடிக்கும்போது, எப்படிப்பட்ட உடைகளை அணியலாம்? பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும்? பசுமை பட்டாசுகள் என்றால் என்ன? உள்ளிட்ட தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இதுபோன்ற பட்டாசுகளை வெடிக்கும்போது கண்ணாடி அணிவது கண்களைப் பாதுகாக்கும்!
பட்டாசு வெடிக்கும்போது...
* பட்டாசுகளை வீட்டுக்கு வெளியே தூரமாக வைத்து வெடிக்க வேண்டும்.
* ராக்கெட் போன்ற வாண வெடிகளை குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் வெடிக்க வேண்டும்.
* வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.
* பட்டாசு வெடிக்கும்போது கண்டிப்பாக காலணி அணிய வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும்போது அருகிலேயே ஒரு வாளியில் நீரை வைத்துக்கொள்ள வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பக்கத்தில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
* பெரியவர்களின் மேற்பார்வையில்தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.
* பட்டாசு வெடித்து முடித்தவுடன் கட்டாயம் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
உடை விஷயத்தில் பெண்களுக்கு கவனம் தேவை!
* பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான ஆடைகளை அணியுமாறு தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
* பெண்கள் இறுக்கமான பருத்தி ஆடைகளையோ, ஜீன்ஸ் போன்ற ஆடைகளையோ அணிய வேண்டும். அவை எளிதில் காற்றில் பறந்து தீப்பிடிக்காது.
* காற்றில் பறக்கும் தளர்வான உடைகள், எளிதில் தீப்பற்றிவிடும் என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டும்.
* பட்டு, நைலான் உள்ளிட்டவற்றால் ஆன உடைகள் மற்றும் சேலை, துப்பட்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

திறந்த வெளியில்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
தீப்பற்றினால்...!
* பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக உடலில் தீப்பற்றினால் ஓடக்கூடாது.
* தீயை உடனே தண்ணீர் ஊற்றி அணைக்கலாம் அல்லது கீழே படுத்து உருளலாம்.
* தீப்புண்ணின் மீது உடனே தண்ணீர் ஊற்ற வேண்டும்.
* தீப்புண்ணுக்கு மருந்து போடுகிறேன் என்ற பெயரில், இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
* கண்ணில் தீப்பொறி பட்டுவிட்டால், உடனடியாக சுத்தமான நீரை ஊற்றிக் கழுவிவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
சாதாரண பட்டாசு vs பசுமை பட்டாசு!
* காற்று மாசுபடுவதை கருத்தில் கொண்டு, மாசுபாட்டை குறைக்க, பசுமை பட்டாசுகளை வெடிக்க, அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது.
* பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.
* சாதாரண பட்டாசுகளில், ஆர்சனிக், லித்தியம், பேரியம் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
* பசுமை பட்டாசுகளில் இதுபோன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
* பசுமை பட்டாசுகளில் அலுமினியம், ஈயம், கார்பன் ஆகியவை உள்ளன. இவை பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் புகையை குறைக்கும்.
* சாதாரண பட்டாசுகளை வெடிக்கும்போது பொதுவாக 160 டெசிபல் சத்தம் வெளிவரும்.
* பசுமை பட்டாசில் 110 முதல் 125 டெசிபல் சத்தம் மட்டுமே வெளிவரும்.
- பாகு சூடாக இருக்கும்வரை லட்டு பிடிக்கக்கூடாது.
- 10 - 15 நாட்கள்வரை ரவா லட்டுவை வைத்து சாப்பிடலாம்.
அரைமணி நேரத்தில் ஈஸியாக செய்யக்கூடிய தீபாவளி பலகாரம் குறித்துதான் பார்க்கப் போகிறோம். அது வேறு ஒன்றும் இல்லை, ரவா லட்டுதான். பலரும் ரவா லட்டு செய்ய ஜவ்வரிசி, கடலை, பால் பயன்படுத்துவார்கள். ஆனால் இவை எதுவும் இல்லாமல், அரைமணி நேரத்தில் எளிமையான, இரண்டு வாரத்திற்கு வைத்து சாப்பிடக்கூடிய ரவா லட்டு செய்வது எப்படி என பார்ப்போம்.

முதலில் கடாயில் நெய்யை ஊற்றி, அது லேசாக சூடானவுடன் முந்திரி மற்றும் திராட்சையை சேர்க்கவேண்டும். முந்திரி, திராட்சை பொரிந்தவுடன் அதனை தனியாக எடுத்து வைக்காமல், அதிலேயே ரவையை கொட்டி வறுக்கவேண்டும். நீண்டநேரம் ரவையை வறுக்கக்கூடாது. பொன் நிறம் வந்தவுடன் எடுத்துவிடவேண்டும். அதன்பிறகு சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும். அரைகிலோ சர்க்கரை என்றால் அதில் முக்கால் பங்கு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ரவா லட்டுக்கு பாகு கெட்டியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். ஒருவேளை சர்க்கரையில் அழுக்கு இருந்தால் பாகு கொதிக்கும்போது அதில் கொஞ்சம் பால்சேர்த்து கொள்ளுங்கள். அப்போது அழுக்கு முழுவதும் மேலே வந்துவிடும். அதனை நாம் எடுத்துவிட்டால் பாகு சுத்தமாகிவிடும். பின்னர் குலாப் ஜாமுனுக்கு எப்படி பாகு பதம் எடுப்போமோ, அதைவிட கொஞ்சம் கெட்டியாக வரும்வரை பாகை கொதிக்கவைக்க வேண்டும். பாகு, பதத்திற்கு வந்தபின் அதனை இறக்கி, வறுத்து வைத்துள்ள ரவையில் ஊற்றி கிளறிவிட வேண்டும். பாகை முழுவதும் ஊற்றியபின் அதில் ஏலக்காய் தூளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையை லட்டு வடிவத்தில் பிடிக்கவேண்டும். பாகு சூடாக இருக்கும்வரை லட்டு பிடிக்கக்கூடாது. சூடாக லட்டு பிடித்தால், ஆறியவுடன் அது கடினமாகிவிடும். அதற்காக மிகவும் ஆறவிட்டும் லட்டு பிடிக்கக்கூடாது. மிதமான சூட்டில் ரவை லட்டுவை பிடிக்கவேண்டும். அவ்வளவுதான் எளிமையான ரவா லட்டு ரெடி. இதனை தாராளமாக 10 - 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
- எத்தனை இனிப்பு வகைகள் இருந்தாலும் கடித்துக்கொள்ள முறுக்கு வேண்டும்!
- நல்ல எண்ணெயில் சுட்டால் முறுக்கை 2 மாதத்திற்குக் கூட வைத்து சாப்பிடலாம்.
தீபாவளி நெருங்கிவிட்டது. அனைவரது வீட்டிலும் அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் சுடும் வாசம் வீசத்தொடங்கியிருக்கும். நாம் எத்தனை இனிப்பு வகைகள் சாப்பிட்டிருந்தாலும், அத்துடன் கடித்துக்கொள்ள முறுக்கு வேண்டும் என நாவின் சவை அரும்புகள் கேட்கும். அப்படிப்பட்ட முறுக்கில் பலவகைகள் உள்ளன. வெவ்வேறு பொருட்களை பயன்படுத்தி முறுக்கு சுடலாம். அந்தவகையில் பாசிப்பருப்பு முறுக்கு எப்படி சுடலாம் என பார்ப்போம்.

செய்முறை
பாசிப்பருப்பு முறுக்கு சுடுவதற்கு அரை கப் வெள்ளை உளுந்து, கால் கப் பாசிப்பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கழுவ வேண்டும். பின்னர் இவை இரண்டையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்ததும், சிறிதுநேரம் ஆறவிடவேண்டும். பின்னர் தண்ணீர் இல்லாமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கூடவே 4 கப் அரிசிமாவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் அரைத்த பாசிப்பருப்பு கலவை, கருப்பு எள் அல்லது வெள்ளை எள், கொஞ்சமாக உப்பு மற்றும் மிதமான சூட்டில் 2 கரண்டி எண்ணெய் சேர்க்கவேண்டும். எந்த எண்ணெய் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். அப்படி எண்ணெய் வேண்டாம் என நினைப்பவர்கள் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் பெருங்காயத்தூளையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து பிசைந்துக்கொள்ள வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிகமாக ஊற்றிவிடக்கூடாது. மாவு கெட்டியாக இல்லாமல் நல்ல மென்மையான பதத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் முறுக்கு நன்றாக வரும். மொறுமொறுவெனவும் இருக்கும். அந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முறுக்கு உரலில் நிரப்பவேண்டும். பின்னர் வாழை இலை அல்லது தட்டு எடுத்து, அதில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய்தடவி அதன்மீது உங்களுக்கு என்ன வடிவத்தில் வேண்டுமோ அதற்கேற்றவாறு பிழிந்து கொள்ளலாம். அதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். வெள்ளை நிறத்திலேயே வேண்டும் என்றால் கொஞ்ச நேரத்திலேயே எடுத்துவிடவேண்டும். நன்கு சிவப்பான நிறத்தில் வேண்டும் என்றால் கொஞ்சநேரம் எண்ணெயில் விட்டு எடுக்கவேண்டும். முறுக்கு நன்கு ஆறியபின் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும்.
- தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது முறுக்கும், அதிரசமும்தான்.
- கடைகளில் பலகாரம் வாங்குவதைவிட வீட்டில் செய்வதுதான் ஸ்பெஷல்!
"தீபாவளி வந்துடுச்சி.. ட்ரெஸ் வாங்கியாச்சா? பலகாரம் எல்லாம் சுட்டாச்சா"? என்ற கேள்விகளிலேயே பாதி தீபாவளி பிறந்துவிட்டது. ட்ரெஸ் வாங்குகிறோமோ இல்லையோ, பலகாரம் இல்லாமல் தீபாவளி ஓடாது. காரணம் எல்லாரும் சாப்பிடுவாங்க. பிள்ளைங்க, யாரையும் வேடிக்கை பார்த்து ஏங்கக்கூடாது என, இருக்கும் பொருட்களில் எதையாவது செய்வாள் அம்மா. அந்த வகையில் தீபாவளி என்றாலே நமக்கு பெரும்பாலும் நினைவுக்கு வருவது முறுக்கும், அதிரசமும்தான். தீபாவளிக்கு அம்மா சுடும் முறுக்கையும், அதிரசத்தையும் ஒரு மாதத்திற்கு மேலும் வைத்து சாப்பிடுவோம். முறுக்கு சற்று நமத்தாலும், அதிரசம் அப்படியே இருக்கும். அப்படிப்பட்ட அதிரசத்தை சுவையாக, எளிதாக செய்வது எப்படி? என பார்ப்போம்.

அதிரசம் செய்முறை
1 கிலோ பச்சரிசியை கழுவி, அரிசியில் இருக்கும் ஈரம் போகும்வரை காயவைக்க வேண்டும். பின்னர் அதனை லேசாக கொரகொர பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். அரைக்கும்போது வாசனை கொடுக்கும் அளவிற்கு ஏலக்காயை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கிலோ அரிசிக்கு ஏற்ப, சுவைக்கு தகுந்தவாறு 600 அல்லது 750 கிராம் வெல்லம் எடுத்துக்கொள்ளலாம். அந்த வெல்லத்தை தண்ணீரில் கொதிக்கவைத்து பாகு காய்ச்ச வேண்டும். பாகு பதம் பற்றி கவலைப்படாதீர்கள். வெல்லம் தண்ணீர் நன்றாக கொதிக்கும்போது, விரல்களில் தொட்டு பார்க்கும்போது, அது நூல்போல வரவேண்டும். அவ்வளவுதான்...
அந்தப் பதம் வந்த பிறகு, பாகை இறக்கி, அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் ஊற்றி, இரண்டையும் நன்றாக கலந்துவிடவேண்டும். அப்போது கொஞ்சம் சுக்குப்பொடியும் சேர்த்துக்கொள்ளலாம். மொத்தமாக சேர்த்து பிசைந்த மாவை 2, 3 நாட்கள் ஊறவைக்க வேண்டும். பின்னர் மாவை எடுத்து பார்த்தால் நன்றாக பதம் பெற்றிருக்கும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து, அதனை வாழை இலையில் வைத்து தட்டி, சூடான கடலை எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான அதிரசம் ரெடி. இதில் வேறு எந்தப் பொருளும் சேர்க்கத் தேவையில்லை.
- மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது.
- சர்க்கரை பாகும், கடலை மாவும் சேர்ந்து நல்ல பதத்திற்கு வந்தவுடன் நெய் சேர்த்தால் மைசூர் பாக் ரெடி!
தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை வரிசையில் பலகாரத்திற்கும் முக்கிய இடம் உண்டு. தீபாவளி நோம்பு இருப்பவர்கள், அதிரசம், முறுக்கு போன்றவற்றை செய்து சாமிக்கு படைத்து கொண்டாடுவார்கள். நோம்பு இல்லாதவர்கள், பெரும்பாலும் குலாப் ஜாமுன் செய்வார்கள். சிலர் கடைகளில் இனிப்புகளை வாங்கி நண்பர்களுக்கு கொடுப்பார்கள். கடை இனிப்புகளில் முக்கியமானது மைசூர் பாக். அதிலும் வாயில் போட்டவுடன் கரையும் மைசூர் பாக்குக்கு நிறைய பேர் அடிமை என்றே சொல்லலாம். அந்த மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது. ஆனால் மைசூர் பாக்கை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம். வாங்க...

மைசூர் பாக் செய்முறை
* மைசூர் பாக் செய்வதற்கு முதலில் கடலை மாவை நன்கு சலித்துக்கொள்ள வேண்டும்.
* நெய் மற்றும் எண்ணெய்யை ஒன்றாக சேர்த்து லேசாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி, அதில் காய்ச்சிய நெய் கலவையை பாதி அளவு ஊற்றி, கெட்டி ஆகாமல் மாவை பிசைந்துக்கொள்ள வேண்டும். (மீதி நெய் கலவையை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்)
* அடுப்பை பற்றவைத்து, கனமான கடாயில் சர்க்கரையை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு பாகு எடுக்க வேண்டும். பாகு எடுக்க தெரியாது என்பவர்கள், தண்ணீர் நன்கு கொதித்து வெள்ளை நுரைபோல பொங்கும் பதத்தை, பாகு பதமாக எடுத்துக்கொள்ளலாம்.
* சர்க்கரை பாகில், கடலை மாவு கலவையைக் கொட்டி, கெட்டி இல்லாமல் கலக்கிவிட வேண்டும்.
* ஸ்டவ்வை, மீடியம் அல்லது லோ ஃப்ளேமில் மாறி மாறி வைத்துக்கொள்ளலாம். ஹை ஃப்ளேமில் வைக்கக்கூடாது.
* சர்க்கரை பாகுடன் கடலை மாவு கலவை நன்கு சேர்ந்தவுடன், மீதி உள்ள நெய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்து கிளற வேண்டும்.
* கடாயில், மைசூர் பாக் கலவை நன்கு திரண்டு உருண்டு வரும்போது அடுப்பை ஆஃப் செய்துவிடலாம்.
* ட்ரே ஒன்றில் சுடான மைசூர் பாக் கலவையை ஊற்றி, 5 முதல் 6 மணி நேரங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.
* மேலும் ட்ரேவில் ஊற்றிய மைசூர் பாக் கலவையை அதிகமாக அழுத்திவிடக் கூடாது.
* 6 மணி நேரங்களுக்கு பிறகு, கத்தி ஒன்றை எடுத்து, நமக்கு பிடித்த ஷேப்பில் மைசூர் பாக்கை வெட்டிக்கொள்ளலாம்.
* அந்த மைசூர் பாக்கை எடுத்து வாயில் வைத்தால் நிச்சயம் அப்படியே கரைந்து தொண்டைக் குழிக்குள் இறங்கும்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் விற்பனையில் சிறப்பு சலுகைகள்.
- பல்வேறு இனிப்புகள் அடங்கிய காம்போ ஆஃபர்களை ஆவின் நிர்வாகம் அறிமுகம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் விற்பனையில் சிறப்பு சலுகைகளை ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, பல்வேறு இனிப்புகள் அடங்கிய காம்போ ஆஃபர்களை ஆவின் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில், மைசூர்பாகு 250 கி, மிக்சர் 200 கி, ஆவின் குக்கீஸ் 80 கி, ரூ.10 சாக்லேட் -1 அடங்கிய காம்போ ரூ.300க்கு விற்கப்படுகிறது.
இதேபோல், நெய் பாதுஷா 250 கி, பாதாம் மிக்ஸ் 200 கி, குலாப் ஜாமூன் 250 கி, மிக்சர் 200 கி, ரூ.10 சாக்லேட் -1 காம்போ ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, காஜு பிஸ்தா ரோல் 250 கி, காஜூ கட்லி 250 கி, நெய் பாதுஷா 250 கி, முந்திரி அல்வா 250 கி ஆகிய இனிப்புகள் அடங்கிய காம்போ ரூ.900க்கு சிறப்பு சலுகையில் விற்பனையாகிறது.
- சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதால் நிலைமை இன்னும் மோசமாகத் தொடங்கியது.
- இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுத்தப்பட்டது.
இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்ய முடியாமல் இருக்கிறது.
அதற்குப் பதிலாக எல்.ஏ.சி. எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து சென்று வந்தனர். அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாகச் சீனா இருக்கிறது.
முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் வைத்து இந்திய ரோந்து படை மீது சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதால் நிலைமை இன்னும் மோசமாகத் தொடங்கியது. இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
ஊடுருவிய நிலப்பகுதிகளிலிருந்து சீன ராணுவம் பின்வாங்க மறுத்து எல்.ஏ.சி. எல்லையை ஒட்டி கட்டுமானங்களை மேற்கொண்டு வந்தது.
இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளாக இந்த பிரச்சனையைத் தீர்க்க இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுத்தப்பட்டது.
அதன்படி, 2020 ஜூன் மாதத்துக்கு முன் இருந்த உடன்பாட்டின்படி இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்ல உடன்பாடு ஏற்பட்டது. எனவே எல்லையில் இருந்து இரு நாட்டு படைகளும் முன்பிருந்த முகாம்களின் துாரத்துக்கு பின்னோக்கி செல்லும் நடவடிக்கை தொடங்கின.
இந்தியா– சீனா எல்லையில் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்துவிட்டதை தொடர்ந்து, தீபாவளியை முன்னிட்டு இன்று இந்தியா- சீனா இடையே இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
- தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்.
- உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தல்
தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் வகை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், கடைக்காரர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பூந்தமல்லியில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் நிர்வாகத்துறை சார்பில் பூந்தமல்லியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் பூந்தமல்லி, கரையான்சாவடி, குமணன்சாவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இனிப்பு கடைகள், பேக்கரிகள், இனிப்பு, காரம் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பண்டிகை காலத்தில் தரமான இனிப்பு, காரம், தின்பண்டங்கள் தயாரிப்பது குறித்தும், செயற்கை நிரமூட்டிகளை தவிர்ப்பது, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடுதல், தண்ணீர் பரிசோதனை, சுகாதாரம், பணியாளர்களின் நலன், மத்திய மாநில அரசுகள் வகுத்துள்ள உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அதற்கான வழிமுறைகள், உணவு பாதுகாப்புத்துறை அனுமதி சான்று, பொதுமக்களை பாதிக்காத வகையில் உரிய விதிமுறைகளை பின்பற்றி உணவு மற்றும் தின்பண்டங்களை தயாரிப்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் வேலவன், ரவிச்சந்திரன், இனிப்பு காரம் தயாரிப்பவர்கள், வியாபாரிகள், உணவகங்களின் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்






