என் மலர்
நீங்கள் தேடியது "Cooking Show"
- சர்க்கரைக்கு பதில் பனங்கற்கண்டு போட்டு ஆரோக்கியமான பாயாசம் செய்யலாம்!
- பால், நட்ஸ்கள் சேர்க்கப்படுவதால், புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைக்கும்.
நம்ம ஊர் திருவிழாக்களிலும், விருந்துகளிலும், விசேஷ நாட்களிலும் தவறாமல் இடம் பிடிக்கும் ஓர் இனிப்பு பலகாரம் என்றால் அது பாயாசம் தான். அதிலும், பால் பாயாசத்தின் தனித்துவமான சுவையும், கிரீமிப் பதமும் யாருக்குத்தான் பிடிக்காது? சமைப்பதற்கு எளிதான அதேவேளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும் இந்த பால் பாயாசத்தை, பாரம்பரிய முறையிலும் ஆரோக்கியமான மாற்றுகளுடனும் தயாரிக்கும் செய்முறையை சமையல் கலைஞர் வனிதா நமக்காக செய்து காட்டியுள்ளார். பொதுவாக, பாயாசம் என்றால் அதில் சர்க்கரையின் பங்கு அதிகம் இருக்கும் என்ற எண்ணம் உண்டு. ஆனால், இங்கு நாம் பார்க்கப் போகும் செய்முறையில், வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்து, ஆரோக்கியம் நிறைந்த பனங்கற்கண்டு சேர்த்து, கூடுதல் நன்மையுடன் சுவையான பால் பாயாசம் எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாம்.

கிரீமி பால் பாயாசம் செய்முறை
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 4 கப் கொழுப்புடன் கூடிய பாலைச் சேர்க்கவும்.
* பால் ஊற்றியவுடன் லேசாக ஒருமுறை மட்டும் கிண்டி விடவும். இது அடி பிடிக்காமல் இருக்க உதவும். அதேவேளை பாலில் ஒரு துளிகூட தண்ணீர் சேர்க்கக்கூடாது. இதுவே பாயாசத்துக்குக் கெட்டியான, கிரீமி சுவையைக் கொடுக்கும்.
* பால் கொதித்து நுரைத்து பொங்கும் தருவாயில், சுவையைச் சமநிலைப்படுத்த ஒரு சிட்டிகை உப்பைச் சேர்க்கவும்.
* பால் கொதித்துக் கொண்டு இருக்கும்போது, 4 ஸ்பூன் பால் பவுடருடன் கொஞ்சம் பாலைக் கலந்து, கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
* பிறகு வறுத்து வைத்திருக்கும் 4 ஸ்பூன் சேமியாவைக் கொதிக்கும் பாலில் சேர்க்கவும். சேமியா சேர்த்த உடனேயே, 1 ஸ்பூன் நெய்யைச் சேர்க்கவும். இது சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல், கட்டி முட்டியாகாமல் இருக்க உதவும்.
* இந்த நேரம் கரைத்து வைத்த பால் பவுடர் கலவையையும், 1 ஸ்பூன் கண்டென்ஸ்டு மில்க்கையும் (மில்க் மேட்) பாலில் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
* இப்போது பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட நட்ஸ் வகைகளைச் சேர்க்கவும். இந்த பாயாசத்திற்கு நட்ஸ்களை வறுக்கத் தேவையில்லை.
* கலவை கொதி வந்த பிறகு, அடுப்பைச் சிம்மில் வைத்து, குறைந்தது 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். அப்போதுதான் சேமியா முழுமையாக வெந்து பால் பவுடர், கண்டென்ஸ் மில்க் ஆகியவை நன்கு கிரீமியாக மாறும்.
* சேமியா நன்றாக வெந்து, பால் திக்கான பிறகு, பொடித்து சலித்து வைத்த 4 ஸ்பூன் பனங்கற்கண்டு தூளைச் சேர்க்கவும். (சேமியா வேகும் முன் சர்க்கரை சேர்த்தால், சேமியா வேகாமல் போக வாய்ப்புள்ளது)
* பனங்கற்கண்டு சேர்த்த பிறகு, ஏலக்காய்த்தூளைச் சேர்க்கவும். பின் இனிப்பு நன்கு கரைந்து, பாயாசம் இன்னும் 10 நிமிடங்கள் கொதித்து கிரீமியாக, திக்கான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
இப்போது கிரீமியான, சுவையான பால் பாயாசம் தயார்!

பரிமாற தயார் நிலையில் கிரீமி பால் பாயாசம்
பால் பாயாசத்தின் நன்மைகள்
* இந்தப் பால் பாயாசத்தில் ஆரோக்கியமான பனங்கற்கண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இது வெள்ளை சர்க்கரையை விட சிறந்த ஆரோக்கிய மாற்று. இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும், இது உடலைக் குளிர்ச்சிப்படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
* பால் மற்றும் நட்ஸ்கள் சேர்க்கப்படுவதால், புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைக்கின்றன.
* இது ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும். விசேஷ நாட்களில் உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.
* இனிப்புச் சுவை இயற்கையாகவே மனதிற்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தரக்கூடியது.
இந்த கிரமி பால் பாயாசம், சுவைக்காக மட்டும் அல்லாமல், ஆரோக்கியமான நன்மைகளையும் கொண்டுள்ளதால், இந்த இனிய உணவைத் தயாரித்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை மட்டும் அல்ல விருந்தினர்களையும் அசத்துங்கள்!
- சீன, மேற்கத்திய சமையல் முறைகளின் கலவையில் பிறந்த உணவுதான் 'பட்டர் கார்லிக் பிரான்'!
- இறாலை நீண்ட நேரம் வேகவைத்தால் ரப்பர் போன்று இறுகிவிடும் என்பதால் கவனமாக சமையுங்கள்!
சமையல் என்பது ஒரு கலை. அதுவும் புதுப்புது உணவு கலவைகளை உருவாக்கி, சுவைகளில் புரட்சி செய்வதென்பது ஒரு அசாத்தியமான திறன். அப்படி, சீன, மேற்கத்திய சமையல் முறைகளின் கலவையில் பிறந்த ஒரு உணவுதான் 'பட்டர் கார்லிக் பிரான்' (Butter Garlic Prawn). உணவகங்களில் மட்டுமே கிடைத்துவந்த இந்த சுவையான இறாலை, வீட்டிலேயே எளிதாகவும், குழந்தைகள் விரும்பும் வகையிலும் எப்படிச் செய்வது என்பதை ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் தியாகு செய்து காட்டுகிறார்.
செய்முறை
* முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடாக்கவும்.
* வாணலி சூடானதும், வெண்ணெயைச் சேர்த்து உருக விடவும். வெண்ணெய் அதிகம் சேர்த்தால் சுவை இன்னும் சிறப்பாக இருக்கும்.
* வெண்ணெய் உருகியதும், பொடியாக நறுக்கிய பூண்டுத் துண்டுகளைச் சேர்க்கவும். வெண்ணெய் மற்றும் பூண்டின் கலவை சேர்ந்து சமைக்கும்போது, சுவை பல மடங்கு அதிகரிக்கும்.
* பூண்டு பொன்னிறமாக வந்தவுடன், முழு சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய குடைமிளகாயைச் சேர்த்து வதக்க வேண்டும். வெண்ணெயில் சமைக்கும்போது அடுப்பின் தீயைக் குறைத்துக்கொள்வது முக்கியம், இல்லையென்றால் வெண்ணெய் கருகிவிடும்.
* இப்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் இறால்களைச் சேர்க்கவும். இறால்களைச் சேர்த்த உடனேயே, தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும். உப்பு சேர்த்த பின்னர்தான் இறால், சுவையை நன்கு உறிஞ்சும்.
* காரத்துக்கு மிளகாய் தூளைச் சேர்க்கவும். இந்த உணவு தயாராக 5 முதல் 10 நிமிடங்களே ஆகும். இறாலை நீண்ட நேரம் சமைத்தால் ரப்பர் போன்று இறுகிவிடும் என்பதால் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* இப்போது சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அதனுடன் சோயா சாஸ் மற்றும் கூடுதல் காரத்துக்குத் தேவையான மிளகாய் தூளையும் சேர்க்கவும். வெண்ணெய் மற்றும் பூண்டுடன் சேர்ந்து சோயா சாஸ் ஒரு அற்புதமான குழம்புப் பக்குவத்தைக் கொடுக்கும்.
* இறுதியாக, பொடியாக நறுக்கிய வெங்காயத் தாளைத் தூவி அடுப்பை அணைக்கவும். இது உணவின் சுவையை மேலும் அதிகரிக்கும்.
இந்த உணவில் உள்ள நன்மைகள்
* இறாலில் புரதம் அதிக அளவில் உள்ளது. இது உடலின் திசுக்கள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு அவசியமானது. மேலும், இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இதய நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
* பூண்டு ஒரு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு. இதில் உள்ள அல்லிசின் என்ற கலவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இது செரிமானத்திற்கும் துணைபுரிகிறது.
* வெங்காயத்தில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதில் உள்ள குவெர்செடின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இப்படி ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் 'பட்டர் கார்லிக் பிரான்', சுவையுடன் சேர்த்து உங்கள் உடலுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. அதோடு இன்றைய வேகமான உலகில், வெளியில் கிடைக்கும் ஆரோக்கியமற்ற உணவுகளை தேடிச் செல்வதற்குப் பதிலாக, உணவகங்களில் சாப்பிடும் அதே சுவையை வீட்டிலேயே அனுபவிக்க இந்த ரெசிபி சிறந்த தேர்வாக இருக்கும். இது குடும்பத்தினருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும் பிடித்தமான ஒரு உணவாக நிச்சயம் அமையும். இதை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து சுவைத்து மகிழுங்கள்.
- மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது.
- சர்க்கரை பாகும், கடலை மாவும் சேர்ந்து நல்ல பதத்திற்கு வந்தவுடன் நெய் சேர்த்தால் மைசூர் பாக் ரெடி!
தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை வரிசையில் பலகாரத்திற்கும் முக்கிய இடம் உண்டு. தீபாவளி நோம்பு இருப்பவர்கள், அதிரசம், முறுக்கு போன்றவற்றை செய்து சாமிக்கு படைத்து கொண்டாடுவார்கள். நோம்பு இல்லாதவர்கள், பெரும்பாலும் குலாப் ஜாமுன் செய்வார்கள். சிலர் கடைகளில் இனிப்புகளை வாங்கி நண்பர்களுக்கு கொடுப்பார்கள். கடை இனிப்புகளில் முக்கியமானது மைசூர் பாக். அதிலும் வாயில் போட்டவுடன் கரையும் மைசூர் பாக்குக்கு நிறைய பேர் அடிமை என்றே சொல்லலாம். அந்த மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது. ஆனால் மைசூர் பாக்கை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம். வாங்க...

மைசூர் பாக் செய்முறை
* மைசூர் பாக் செய்வதற்கு முதலில் கடலை மாவை நன்கு சலித்துக்கொள்ள வேண்டும்.
* நெய் மற்றும் எண்ணெய்யை ஒன்றாக சேர்த்து லேசாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி, அதில் காய்ச்சிய நெய் கலவையை பாதி அளவு ஊற்றி, கெட்டி ஆகாமல் மாவை பிசைந்துக்கொள்ள வேண்டும். (மீதி நெய் கலவையை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்)
* அடுப்பை பற்றவைத்து, கனமான கடாயில் சர்க்கரையை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு பாகு எடுக்க வேண்டும். பாகு எடுக்க தெரியாது என்பவர்கள், தண்ணீர் நன்கு கொதித்து வெள்ளை நுரைபோல பொங்கும் பதத்தை, பாகு பதமாக எடுத்துக்கொள்ளலாம்.
* சர்க்கரை பாகில், கடலை மாவு கலவையைக் கொட்டி, கெட்டி இல்லாமல் கலக்கிவிட வேண்டும்.
* ஸ்டவ்வை, மீடியம் அல்லது லோ ஃப்ளேமில் மாறி மாறி வைத்துக்கொள்ளலாம். ஹை ஃப்ளேமில் வைக்கக்கூடாது.
* சர்க்கரை பாகுடன் கடலை மாவு கலவை நன்கு சேர்ந்தவுடன், மீதி உள்ள நெய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்து கிளற வேண்டும்.
* கடாயில், மைசூர் பாக் கலவை நன்கு திரண்டு உருண்டு வரும்போது அடுப்பை ஆஃப் செய்துவிடலாம்.
* ட்ரே ஒன்றில் சுடான மைசூர் பாக் கலவையை ஊற்றி, 5 முதல் 6 மணி நேரங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.
* மேலும் ட்ரேவில் ஊற்றிய மைசூர் பாக் கலவையை அதிகமாக அழுத்திவிடக் கூடாது.
* 6 மணி நேரங்களுக்கு பிறகு, கத்தி ஒன்றை எடுத்து, நமக்கு பிடித்த ஷேப்பில் மைசூர் பாக்கை வெட்டிக்கொள்ளலாம்.
* அந்த மைசூர் பாக்கை எடுத்து வாயில் வைத்தால் நிச்சயம் அப்படியே கரைந்து தொண்டைக் குழிக்குள் இறங்கும்.
- மாட்டுக்கறி வங்காளதேசத்தில் தேசிய உணவுகளில் ஒன்றாகும்.
- நான் மற்ற மதத்தை புண்படுத்த விரும்பவில்லை.
பெங்காலி நடிகை சுதிபா சாட்டர்ஜி, வங்காளதேச சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்நிகழ்ச்சியில் மாட்டிறைச்சி உணவைத் தயாரித்துக் கொண்டிருந்த பங்கேற்பாளருடன் சுதீபா உரையாடிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவ பலரும் சுதிபா சாட்டர்ஜிக்கு எதிரான கருத்துக்களை பதிவிட ஆரம்பித்தனர்.
மேலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் வங்காள அமைச்சர் பாபுல் சுப்ரியோவுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.
பின்னர் இது தொடர்பாக விளக்கம் அளித்த சுதிபா சாட்டர்ஜி, "என்னை ட்ரோல் செய்யும் பெரும்பாலானோர் அந்த வீடியோவை பார்க்கவில்லை என்று நான் நம்புகிறேன். நான் ஒருபோதும் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. மாட்டிறைச்சியை நான் தொட்டது கூட இல்லை.
கரீம் ஜஹான் (நிகழ்ச்சியில் பங்கேற்றவர்) சமையல் செய்த வீடியோக்கள் இன்னும் எடிட் செய்யப்படவில்லை. மாட்டுக்கறி வங்காளதேசத்தில் தேசிய உணவுகளில் ஒன்றாகும். அதனால், நான் மற்ற மதத்தை புண்படுத்த விரும்பவில்லை.
இந்த வீடியோக்களை வைத்து மம்தா பானர்ஜி மற்றும் பாபுல் சுப்ரியோவை பலர் விமர்சித்து வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டுமில்ல எந்த அரசியல் கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை
பாஜகவின் பெயரிலும் பல மிரட்டல் செய்திகள் வருகின்றன. என்னை உயிருடன் எரித்துவிடுவோம் அல்லது என் மகனைக் கடத்துவோம் என்று வெளிப்படையாக மிரட்டல் விடுக்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.






