என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி இனிப்புகள்"

    • வழக்கத்தைவிட பண்டிகை நாட்களில் பலரும் கொஞ்சம் எடை கூடுவதாக கண்டுபிடிப்பு.
    • இனிப்பு சாப்பிடும் முன்பு புரதம் அல்லது நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட்டுவிடுங்கள்.

    அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வழக்கத்தைவிட பண்டிகை நாட்களில் பலருக்கும் கொஞ்சம் எடை கூடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இனிப்புகள், எண்ணெய் பலகாரங்கள் மற்றும் அசைவ உணவுகள். நம் வீடுகளில் சாப்பிடுவது மட்டுமின்றி, உறவினர்கள் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் கொடுப்பதையும் தவிர்க்க இயலாது. தீபாவளி, கண்டிப்பாக இனிப்புகள் இல்லாமல் முழுமையடையாது. ஆனால் தீபாவளி திண்பண்டங்களால் எடைக்கூடாமல் இருக்கவேண்டுமானால், கீழே குறிப்பிட்டுள்ளவற்றை கவனத்தில்கொண்டு சாப்பிடுங்கள்.

    இனிப்புக்கு முன் புரதம் அல்லது நார்ச்சத்து

    இனிப்புகளை சாப்பிடுவதற்கு முன்பு புரதம் அல்லது நார்ச்சத்துள்ள பொருட்களை சாப்பிடுங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிறு நிரம்பிய உணர்வை ஊக்குவிக்கும். இதனால் இனிப்புகளை அதிகம் எடுத்துக்கொள்ள மாட்டோம்.

    நீரேற்றம்

    விழாக்காலங்களில் நமது கவனம் முழுவதும் கொண்டாட்டத்தில்தான் இருக்கும். வேளைக்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும், தண்ணீர் குடிக்கவேண்டும் என்பதையே மறந்துவிடுவோம். அம்மா சுடும் வடை, வீட்டில் இருக்கும் இனிப்பை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொள்வோம். தண்ணீரும் போதுமான அளவு எடுத்துக்கொள்ளமாட்டோம். அதனால் எடை அதிகரிப்பை தவிர்க்க வேண்டும் என நினைத்தால் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். இதுவும் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதனால் மற்ற திண்பண்டங்களை அதிகம் எடுத்துக்கொள்ளமாட்டோம்.

    சாப்பிட வேண்டுமா?

    தீபாவளி என்பதால் உறவினர்கள் வீட்டிற்கு அதிகம் செல்லவேண்டியிருக்கும். அவர்களும் பாசத்தில் நிறைய உணவுகளை எடுத்துவந்து சாப்பிட கொடுப்பார்கள். அதை சாப்பிடுவதற்கு நம் வயிற்றில் இடமே இருக்காது. இருப்பினும் அவர்கள் மனது புண்படக்கூடாது என்பதற்காக எடுத்துக்கொள்வோம். அதை செய்யவேண்டாம். உண்மையில் உங்களுக்கு சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடலாம் என தோன்றினால் மட்டும் சாப்பிடுங்கள். அவர்கள் கொடுத்த அன்பிற்காக துளி அளவு மட்டும் எடுத்து சாப்பிட்டால் போதுமானது. வயிறு நிரம்பியிருக்கும்போது அடுத்தடுத்து உணவை உள்ளே செலுத்தாதீர்கள்.


    அதிகளவு இனிப்பு பலகாரங்கள் உட்கொள்வதை தவிர்க்கவும்

    திரையை தவிர்க்கவும்

    சாப்பிடும்போது டிவி பார்த்துக்கொண்டு அல்லது ஃபோனில் பேசிக்கொண்டு சாப்பிடுவதை நிறுத்துங்கள். ஏனெனில் டிவி பார்க்கும்போதோ அல்லது ஃபோனில் பேசும்போதோ நமது கவனம் உணவில் இருக்காது. கவனச்சிதறல், உட்கொள்ளல் அளவை அதிகரிக்கும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக, உங்கள் அன்புக்குரியவர்களுடன் அமர்ந்து அவர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுங்கள்.

    உடற்பயிற்சியை தொடரவும்

    விடுமுறை என்றாலே நமக்கு ஓய்வுதான். அதுவும் பண்டிகை என்றால் சொல்லவா வேண்டும். கொண்டாட்டங்களுக்கு மத்தியில் உணவுகள் அதிகரிக்கும்போது உடற்பயிற்சி தவிர்க்கப்படுகிறது. இது எடை அதிகரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எனவே, வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வது கூடுதல் முயற்சிகள் இல்லாமல், அதே எடையை நிர்வகிக்க உதவும் ஒரு மிகப்பெரிய வழியாகும்.

    ஆரோக்கியமாக இருப்பதும், குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் நினைவுகளை போற்றுவதற்கான மற்றொரு வழியாகும். எனவே, இந்த தீபாவளியில் ஒரு சில எளிய முயற்சிகளை எடுப்பது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நீண்ட தூரம் அழைத்துச்செல்லும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

    • பட்டாசு வெடிக்கும்போது தளர்வான உடை வேண்டாம்! ஜீன்ஸ் போன்ற டைட்டான உடை அணிய வேண்டும்!
    • சாதாரண பட்டாசுக்கும், பசுமை பட்டாசுக்கும் வித்தியாசம் என்ன?

    தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். அப்படி அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் பட்டாசு வெடிக்கும்போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது. குறிப்பாக பெண்கள், தீபாவளிக்கு தாங்கள் வாங்கிய புத்தாடைகளை அணிந்துக்கொண்டு பட்டாசு வெடிக்கும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, தங்கள் உடை தளர்வாக இல்லாமல், இறுக்கமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் பட்டாசு வெடிக்கும்போது, எப்படிப்பட்ட உடைகளை அணியலாம்? பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும்? பசுமை பட்டாசுகள் என்றால் என்ன? உள்ளிட்ட தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.


    இதுபோன்ற பட்டாசுகளை வெடிக்கும்போது கண்ணாடி அணிவது கண்களைப் பாதுகாக்கும்!

    பட்டாசு வெடிக்கும்போது...

    * பட்டாசுகளை வீட்டுக்கு வெளியே தூரமாக வைத்து வெடிக்க வேண்டும்.

    * ராக்கெட் போன்ற வாண வெடிகளை குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் வெடிக்க வேண்டும்.

    * வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.

    * பட்டாசு வெடிக்கும்போது கண்டிப்பாக காலணி அணிய வேண்டும். 

    * பட்டாசு வெடிக்கும்போது அருகிலேயே ஒரு வாளியில் நீரை வைத்துக்கொள்ள வேண்டும்.

    * பட்டாசு வெடிக்கும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பக்கத்தில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். 

    * பெரியவர்களின் மேற்பார்வையில்தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.

    * பட்டாசு வெடித்து முடித்தவுடன் கட்டாயம் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். 

    உடை விஷயத்தில் பெண்களுக்கு கவனம் தேவை!

    * பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான ஆடைகளை அணியுமாறு தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

    * பெண்கள் இறுக்கமான பருத்தி ஆடைகளையோ, ஜீன்ஸ் போன்ற ஆடைகளையோ அணிய வேண்டும். அவை எளிதில் காற்றில் பறந்து தீப்பிடிக்காது.

    * காற்றில் பறக்கும் தளர்வான உடைகள், எளிதில் தீப்பற்றிவிடும் என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டும். 

    * பட்டு, நைலான் உள்ளிட்டவற்றால் ஆன உடைகள் மற்றும் சேலை, துப்பட்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.


    திறந்த வெளியில்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்

    தீப்பற்றினால்...!

    * பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக உடலில் தீப்பற்றினால் ஓடக்கூடாது.

    * தீயை உடனே தண்ணீர் ஊற்றி அணைக்கலாம் அல்லது கீழே படுத்து உருளலாம்.

    * தீப்புண்ணின் மீது உடனே தண்ணீர் ஊற்ற வேண்டும்.

    * தீப்புண்ணுக்கு மருந்து போடுகிறேன் என்ற பெயரில், இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

    * கண்ணில் தீப்பொறி பட்டுவிட்டால், உடனடியாக சுத்தமான நீரை ஊற்றிக் கழுவிவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

    சாதாரண பட்டாசு vs பசுமை பட்டாசு!

    * காற்று மாசுபடுவதை கருத்தில் கொண்டு, மாசுபாட்டை குறைக்க, பசுமை பட்டாசுகளை வெடிக்க, அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது. 

    * பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.

    * சாதாரண பட்டாசுகளில், ஆர்சனிக், லித்தியம், பேரியம் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    * பசுமை பட்டாசுகளில் இதுபோன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.

    * பசுமை பட்டாசுகளில் அலுமினியம், ஈயம், கார்பன் ஆகியவை உள்ளன. இவை பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் புகையை குறைக்கும்.

    * சாதாரண பட்டாசுகளை வெடிக்கும்போது பொதுவாக 160 டெசிபல் சத்தம் வெளிவரும்.

    * பசுமை பட்டாசில் 110 முதல் 125 டெசிபல் சத்தம் மட்டுமே வெளிவரும்.

    • மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது.
    • சர்க்கரை பாகும், கடலை மாவும் சேர்ந்து நல்ல பதத்திற்கு வந்தவுடன் நெய் சேர்த்தால் மைசூர் பாக் ரெடி!

    தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை வரிசையில் பலகாரத்திற்கும் முக்கிய இடம் உண்டு. தீபாவளி நோம்பு இருப்பவர்கள், அதிரசம், முறுக்கு போன்றவற்றை செய்து சாமிக்கு படைத்து கொண்டாடுவார்கள். நோம்பு இல்லாதவர்கள், பெரும்பாலும் குலாப் ஜாமுன் செய்வார்கள். சிலர் கடைகளில் இனிப்புகளை வாங்கி நண்பர்களுக்கு கொடுப்பார்கள். கடை இனிப்புகளில் முக்கியமானது மைசூர் பாக். அதிலும் வாயில் போட்டவுடன் கரையும் மைசூர் பாக்குக்கு நிறைய பேர் அடிமை என்றே சொல்லலாம். அந்த மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது. ஆனால் மைசூர் பாக்கை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம். வாங்க... 


    மைசூர் பாக் செய்முறை

    * மைசூர் பாக் செய்வதற்கு முதலில் கடலை மாவை நன்கு சலித்துக்கொள்ள வேண்டும்.

    * நெய் மற்றும் எண்ணெய்யை ஒன்றாக சேர்த்து லேசாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். 

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி, அதில் காய்ச்சிய நெய் கலவையை பாதி அளவு ஊற்றி, கெட்டி ஆகாமல் மாவை பிசைந்துக்கொள்ள வேண்டும். (மீதி நெய் கலவையை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்) 

    * அடுப்பை பற்றவைத்து, கனமான கடாயில் சர்க்கரையை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு பாகு எடுக்க வேண்டும். பாகு எடுக்க தெரியாது என்பவர்கள், தண்ணீர் நன்கு கொதித்து வெள்ளை நுரைபோல பொங்கும் பதத்தை, பாகு பதமாக எடுத்துக்கொள்ளலாம்.

    * சர்க்கரை பாகில், கடலை மாவு கலவையைக் கொட்டி, கெட்டி இல்லாமல் கலக்கிவிட வேண்டும். 

    * ஸ்டவ்வை, மீடியம் அல்லது லோ ஃப்ளேமில் மாறி மாறி வைத்துக்கொள்ளலாம். ஹை ஃப்ளேமில் வைக்கக்கூடாது. 

    * சர்க்கரை பாகுடன் கடலை மாவு கலவை நன்கு சேர்ந்தவுடன், மீதி உள்ள நெய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்து கிளற வேண்டும். 

    * கடாயில், மைசூர் பாக் கலவை நன்கு திரண்டு உருண்டு வரும்போது அடுப்பை ஆஃப் செய்துவிடலாம். 

    * ட்ரே ஒன்றில் சுடான மைசூர் பாக் கலவையை ஊற்றி, 5 முதல் 6 மணி நேரங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.  

    * மேலும் ட்ரேவில் ஊற்றிய மைசூர் பாக் கலவையை அதிகமாக அழுத்திவிடக் கூடாது. 

    * 6 மணி நேரங்களுக்கு பிறகு, கத்தி ஒன்றை எடுத்து, நமக்கு பிடித்த ஷேப்பில் மைசூர் பாக்கை வெட்டிக்கொள்ளலாம். 

    * அந்த மைசூர் பாக்கை எடுத்து வாயில் வைத்தால் நிச்சயம் அப்படியே கரைந்து தொண்டைக் குழிக்குள் இறங்கும். 

    • தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 2 விமானங்களில் இனிப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
    • சிங்கப்பூருக்கு 2 டன் இனிப்புகளும், சார்ஜாவுக்கு 3 டன் இனிப்புகளும் ஏற்றுமதி செய்ய புக்கிங் ஆகி உள்ளன.

    கோவை:

    உலகம் முழுவதும் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

    இந்தியாவில் தீபாவளி உள்பட எந்த ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டாலும், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களும் அதனை கொண்டாடுவார்கள்.

    தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையின்போது வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள். இதற்காக அந்த நாடுகளுக்கு கோவையில் இருந்து கட்டு கட்டாக கரும்பு விமானத்தில் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் வருகிற 24-ந் தேதி இந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களும் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

    தீபாவளியையொட்டி சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சார்ஜாவுக்கு இனிப்புகள், பலகாரங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்படி, சிங்கப்பூருக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் மூலம் நாளை முதல் 2 டன் இனிப்புகளும், சார்ஜாவுக்கு ஏர் அரேபியா விமானம் மூலம் 3 டன் இனிப்புகளும் அனுப்பப்பட உள்ளன.

    தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 2 விமானங்களில் இனிப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம்போல இனிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    அதன்படி, சிங்கப்பூருக்கு 2 டன் இனிப்புகளும், சார்ஜாவுக்கு 3 டன் இனிப்புகளும் ஏற்றுமதி செய்ய புக்கிங் ஆகி உள்ளன. இனிப்புகள் அனைத்தும் நாளை (சனிக்கிழமை) முதல் தினமும் 200 முதல் 300 கிலோ வரை என பேக்கிங் செய்து அனுப்பி வைக்கப்படும். இதில் லட்டு, அல்வா, மில்க் இனிப்புகள் போன்றவை பேக்கிங் செய்யப்பட்டு இருக்கும்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோவையிலிருந்து அனுப்பப்படும் இனிப்புகளின் அளவு அதிகம். ஆனால், இதை விட சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிக அளவில் சிங்கப்பூருக்கு இனிப்புகள் ஏற்றுமதி செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×