என் மலர்
நீங்கள் தேடியது "Women care"
- துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வையுங்கள்!
- துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் பல பிரச்சனைகளை தீர்க்கலாம்.
மழைக்காலம் வந்தாலே, பெண்களுக்கு சலவைப் பணிகள் ஒரு பெரும் சவாலாக மாறிவிடுகின்றன. வெயிலும், காற்றின் வேகமும் குறையும் போது, துணிகளை உலர்த்துவது மிகவும் கடினமாகிறது. ஈரப்பதம் வெளியேறாமல், துணிகள் சீக்கிரம் காயாமல் பூஞ்சை வாடை வீச ஆரம்பிப்பது பலரது வீட்டிலும் நடக்கும் பொதுவான பிரச்சனை. துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாகாமல், துணிகளை விரைவாகவும், சுகாதாரமாகவும் உலர்த்துவது எப்படி? அதிகபட்ச நீரை வெளியேற்றுவது முதல், சரியான காற்றோட்டத்தை உருவாக்குவது மற்றும் பூஞ்சை வாடையை அகற்றும் சமையலறை ரகசியம் வரை, மழைக்காலத்தில் சலவை செய்யும் உத்திகள் குறித்து இப்போது விரிவாகக் காணலாம்.
துணிகளை விரைவாக உலர்த்த
மழைக்காலத்தில், வெயில் மற்றும் காற்றின் ஈரப்பதம் இல்லாத காரணத்தால் துணிகளை உலர்த்துவது பெரும் சவாலாக உள்ளது. இதனால் துணிகள் சீக்கிரம் காயாமல் பூஞ்சை வாடை வீச ஆரம்பிக்கிறது. இதற்குத் தீர்வாக, முதலில் துணிகளில் உள்ள அதிகபட்ச நீரை வெளியேற்ற வேண்டும்; வாஷிங் மெஷினில் துவைப்பவர்கள் துணிகளை அதிக வேகத்தில் இரண்டு முறை 'சுழற்றுதல் (Spin Cycle)' செய்ய வேண்டும், கைகளால் துவைப்பவர்கள் துணிகளை ஒரு சுத்தமான, உலர்ந்த டவலில் வைத்து இறுக்கமாகச் சுருட்டி அழுத்தி நீரை உறிஞ்சச் செய்யலாம். மேலும், துணிகளை உலர்த்தப் போடும் முன் ஒவ்வொன்றையும் நன்கு உதறி, அதன் இழைகளைப் பிரித்து, துணியின் மேற்பரப்பை அதிகப்படுத்துவதன் மூலம் ஆவியாதல் சீக்கிரமாக நடைபெறும்; குறிப்பாக ஜீன்ஸ் போன்ற கனமான துணிகளை மடிப்பு இல்லாமல் பரப்பிப் போடுவது மிகவும் அவசியமாகும்.

பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தை தவிர்க்க கடைசி அலசலின்போது சிறிதளவு வினிகர் சேர்த்துக் கொள்ளலாம்
உட்புறத்தில் காற்றோட்டமே முக்கியம்
வீட்டிற்குள் துணிகளை உலர்த்துவதற்குச் சரியான காற்றோட்டமே மிக முக்கியமாகும். துணிகளை உலர்த்த ஒரு மடிப்பு ஸ்டாண்டைப் பயன்படுத்தி, அதை சீலிங் ஃபேன் அல்லது டேபிள் ஃபேன் இயங்கும் அறையில் வைக்க வேண்டும். ஃபேன் காற்று நேரடியாகத் துணிகள் மீது படுமாறு வைத்தால், ஈரப்பதம் வேகமாக ஆவியாகும். முக்கியமாக, துணிகளை நெருக்காமல், ஒவ்வொரு துணிக்கும் இடையில் குறைந்தபட்சம் 3 அங்குலமாவது இடைவெளி விட வேண்டும். துணிகள் ஒன்றோடு ஒன்று தொட்டால், ஈரப்பதம் தங்கிக் கொண்டே இருக்கும், இதனால் துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வைத்தால், அவை காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை ஈர்த்து, உலர்த்தும் செயல்முறையைத் துரிதப்படுத்த உதவும்.
பூஞ்சை வாடைக்குத் 'தடா'
மழைக்காலத்தில் சலவை செய்யப்பட்ட துணிகளில் ஏற்படும் பூஞ்சை வாசனை மற்றும் துர்நாற்றத்தைத் தவிர்க்க ஒரு எளிய, செலவு குறைந்த சமையலறை ரகசியம் உள்ளது. துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையையும் கையாளலாம். வினிகர் பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் சக்தி வாய்ந்தது; மேலும், அதன் வாசனை துணி காய்ந்தவுடன் முற்றிலும் ஆவியாகிவிடும். துர்நாற்றம் நீங்கவில்லை எனில், மீண்டும் அலசும் தண்ணீரில் வினிகர் சேர்த்து ஒரு முறை அலசி, பின்னர் உலர வைக்கலாம். இந்த எளிய மற்றும் பயனுள்ள உட்புற நிர்வாக உத்தியின் மூலம், விலை உயர்ந்த இயந்திரங்களைப் பற்றிய கவலை இல்லாமல், எந்தவொரு குடும்பத் தலைவியும் மழைக்காலச் சலவைப் பணிகளை மிகச் சிறப்பாகவும், துர்நாற்றமின்றியும் நிர்வகிக்க முடியும்.
- கருப்பு புடவை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்த முதல் பெண் குடியரசுத் தலைவர்!
- இருமுடி கட்டி, 18 படிகள் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்த முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை பெற்றார் முர்மு!
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக பிரசித்திப் பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நேற்று (22.10.25) இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது பெரும் கவனம் ஈர்த்துள்ளது. காரணம் குடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர், இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இதற்குமுன் குடியரசு முன்னாள் தலைவர் விவி கிரி, ஆளுநராக இருந்த காலத்தில்தான் சபரிமலை சென்றுள்ளார். இந்நிலையில், இருமுடி கட்டி, 18 படிகள் ஏறி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் திரவுபதி முர்மு!
இருமுடிக்கட்டை தலையில் சுமந்துசென்ற திரவுபதி முர்மு, பதினெட்டுப்படி தாண்டி, சன்னிதானத்தில் சமர்ப்பித்தார். அவருடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும் இருமுடி கட்டுகளை சுமந்து சென்று சன்னிதானத்தில் சமர்பித்தனர். தொடர்ந்து குடியரசுத் தலைவரின் இருமுடி கட்டுகள் கருவறைக்குள் எற்றுக்கொள்ளப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தீபாராதனையை குடியரசுத் தலைவர் தொட்டு வணங்கியதுடன், கோயிலை வலம் வந்து மீண்டும் சாமி தரிசனம் செய்தார்.

இணையத்தில் வைரலாகிவரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் சபரிமலைப் புகைப்படம்
திரவுபதி முர்மு யார்?
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக ஜூலை 25, 2022-ல் பதவியேற்றவர் திரவுபதி முர்மு. பழங்குடி சமூகத்தை சேர்ந்த இவர், பிரதிபா பாட்டிலுக்கு பின் பதவி வகிக்கும் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவராவார். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவரும் இவர்தான். முன்னதாக 2015 முதல் 2021 வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும் , 2000 முதல் 2009 வரை ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் முர்மு பணியாற்றினார். ராம்நாத் கோவிந்திற்கு பிறகு ஜூன் 2022 இல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு முர்முவை பரிந்துரைத்தது.
- எண்ணெய்ப்பசை அதிகம் இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் வருவது அதிகமாக இருக்கும்.
- முகத்தில் சீபம் அதிகம் சுரப்பதால் பருக்கள் தவிர்க்கமுடியாது என்பவர்கள் முகத்திற்கு டோனர் பயன்படுத்தலாம்.
முகத்தை எப்போதும் பளபளப்பாக, அழகாக காட்ட வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் விருப்பம். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைதான் மேக்கப். ஆனால் சிலரின் முகத்தில் பருக்கள், துவாரங்கள் இருக்கும். இவை வெளியில் செல்லும்போதும், பொது நிகழ்ச்சிகள், விசேஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும், ஃபோட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் பலருக்கும் பெரும் சங்கடத்தை கொடுக்கும். சில பருக்கள் மறைந்தாலும், தழும்புபோல் மாறி கருமையாக காட்சியளிக்கும். இதனால் முகத்தில் பருக்கள் இருப்பவர்கள் மேக்கப் போடலாமா? அப்படி மேக்கப் போட்டால் அது இன்னும் அதிக விளைவுகளை ஏதேனும் ஏற்படுத்துமா? என சந்தேகம் எழும், பயமும் இருக்கும். ஆனால் அந்த பருக்களை மறைக்குமாறும், அதற்கு ஏற்றவாறும், அதனால் எந்த பக்க விளைவுகள் ஏற்படாமலும் மேக்கப் போட முடியும் என்கிறார் அழகுகலை நிபுணர் பிரஷாந்தி.
முகத்தில் முதலில் மாய்ச்சுரைசர் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் ரேசர் வைத்து முகத்திலிருக்கும் சின்ன சின்ன முடிகளை அகற்ற வேண்டும். அதன்பிறகு டோனர் பயன்படுத்த வேண்டும். துவாரங்கள் (Pores) கொண்ட சருமத்தைக் கொஞ்சம் டைட்டாக மாற்றுவதற்கும், துவாரங்களை மறைப்பதற்கும் டோனர் அவசியம். எண்ணெய்ப்பசை அதிகம் இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் வருவதும் அதிகமாகவே இருக்கும். முகத்தில் சீபம் அதிகம் சுரப்பதால் பருக்கள் தவிர்க்கமுடியாது என்பவர்கள் முகத்திற்கு டோனர் பயன்படுத்தலாம்.
அடுத்ததாக ப்ரைமர் போட வேண்டும். ப்ரைமருக்கு பின் அவர்களின் முக நிறத்திற்கு ஏற்ப கரெக்டர் பயன்படுத்த வேண்டும். பின்னர் கண்சீலர் போடலாம். இதனைத்தொடர்ந்து ஃபவுண்டேசன் அப்ளை செய்யலாம். ஃபவுண்டேஷனைத் தொடர்ந்து பவுடர் போடவேண்டும். பவுடர் போட்ட பிறகு செட்டிங் ஸ்பிரே அடிக்க வேண்டும். இது முடிந்தால் மேக்கப்பில் ஒரு பார்ட் ஓவர்.
தற்போது கண் பகுதிக்கு மேக்கப் போட வேண்டும். அதற்கு முதலில் ஐப்ரோவை ஷேப் செய்து, அதனை டார்க்கன் செய்ய வேண்டும். தொடர்ந்து ஐ-ஷேடோ அப்ளை செய்ய வேண்டும். ஐ-ஷேடோ நாம் அணிந்திருக்கும் ஆடை நிறத்திற்கு ஏற்ப கொடுக்க வேண்டும். பிறகு ஐ-லைனர், காஜல் போட வேண்டும்.
இறுதியாக லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளலாம். ஆடை மற்றும் ஐ-ஷேடோவிற்கு ஏற்ற நிறத்தில் லிப்ஸ்டிக் கலரை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். மேலும், லிப் லைனரால் நிச்சயம் அவுட்லைன் வரைந்த பின்னரே லிப்ஸ்டிக் போட வேண்டும். லிப்ஸ்டிக் போட்டு முடித்தால் மொத்த மேக்கப்பும் முடிந்தது. குறிப்பாக, இந்த மேக்கப் போட்டு முடித்த பிறகு, முகத்தில் முகப்பரு இருப்பதே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆரோக்கியத்தையும், சுவையையும் விரும்பும் அசைவப் பிரியர்களுக்கான ஸ்பெஷல் டிஷ்!
- கறிவேப்பிலைப் பொடியை, சிக்கன் முழுமையாக வெந்த பிறகு கடைசியில் சேர்க்க வேண்டும்.
சிக்கன் பிரியர்களுக்காகவே தனித்துவமான சுவையுடன், ஆரோக்கியம் நிறைந்த ஓர் உணவுதான் ''கறிவேப்பிலை சிக்கன் ரோஸ்ட்''. கலப்படமற்ற, இயற்கையான சுவையுடன் கூடிய உணவுகளை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு. வழக்கமான சிக்கன் உணவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இதன் தனித்துவமான மணமும், கறிவேப்பிலையின் ஆரோக்கியமும் இணைந்து ஒரு புதுமையான சுவையை வழங்குகிறது. ஆரோக்கியத்தையும், சுவையையும் விரும்பும் அசைவப் பிரியர்களுக்கென்றே பிரத்யேகமான இந்த உணவை, செயற்கை நிறமூட்டிகள் இல்லாமல், முற்றிலும் இயற்கையான முறையில் ஃபெரோஸ் ஹோட்டலின் செஃப் சாந்தம் செய்து காட்டுகிறார்.
கறிவேப்பிலை கோழி ரோஸ்ட் செய்முறை
* முதலில் கறிவேப்பிலை மசாலாவைத் தயார் செய்ய வேண்டும். ஒரு வாணலியில் சிறிது உளுந்தை வறுக்கவும். பின்னர், அதே வாணலியில் கறிவேப்பிலையைச் சேர்த்து, அதன் நிறம் மாறாமல் மொறுமொறுப்பாகும்வரை வறுத்து எடுக்கவும். அதனை ஆறவைத்த பிறகு, மிக்ஸியில் போட்டுப் பொடி செய்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
* அடுத்து சமைக்கத் தொடங்குவோம். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சோம்பு மற்றும் வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.
* தாளித்ததும், காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். பிறகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* இஞ்சி பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும், சுத்தம் செய்து வைத்திருக்கும் எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும்.
* சிக்கன் துண்டுகளை நன்றாக வதக்கி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் முழுமையாக வெந்த பிறகு, தண்ணீர் வற்றி, எண்ணெய் தனியாகப் பிரியும்.
* இந்த சமயத்தில், நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் கறிவேப்பிலை பொடியைச் சேர்த்து, சிக்கனுடன் நன்றாகக் கலக்கவும். பொடியை சேர்த்தவுடன் அதிக நேரம் வேகவிட வேண்டாம். வெகு நேரம் வேகவிட்டால், கறிவேப்பிலையின் நிறம் மாறி கருப்பாகிவிடும்.
* கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும்.
சிறப்பு குறிப்பு: கறிவேப்பிலைப் பொடியை, சிக்கன் முழுமையாக வெந்த பிறகு கடைசியில்தான் சேர்க்க வேண்டும். முதலில் சேர்த்தால், சமைக்கும்போது கறிவேப்பிலையின் நிறம் மாறிவிடும்.
- முகத்தில் தோல் உரிந்தால், சருமத்திற்கு நீரேற்றம் தேவை என்று அர்த்தம்.
- தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம்தான் சருமம் வெண்மையாக உதவுகிறது!
தயிரை உணவில் சேர்த்துக்கொள்வது பல்வேறு நன்மைகளை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏனெனில் இதில் லாக்டோபாகிலஸ் பல்கேரிகஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபிலஸ் போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளதோடு, புரோபயாடிக்குகள், புரோட்டீன்கள், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்துக்களும் உள்ளன. உணவு மட்டுமின்றி தயிர் அழகியல் நடைமுறையிலும் பயன்படுத்தப்படுகிறது. தயிர் பயன்பாடு சருமத்தை பளபளப்பாக்கும் என்று பொதுவாகவே பலருக்கும் தெரியும். ஆனால் சரும பளபளப்பு மட்டுமின்றி பல்வேறு சரும நலன்களை கொண்டுள்ளது தயிர். தயிரை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.
சருமத்திற்கு ஈரப்பதம்...
வறண்ட சருமம் என்பது நீரிழப்புக்கான அறிகுறியாகும். சருமம் வறண்டு போகும்போது முகத்தில் தோல் உரியும். அப்படி தோல் உரிந்தால், சருமத்திற்கு நீரேற்றம் தேவை என்று அர்த்தம். தயிரை முகத்தில் தடவுவது சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கான விரைவான மற்றும் பயனுள்ள வழியாகும். தயிர் சருமத்தின் மந்தமான நிலையை உடனடியாக மேம்படுத்தும். சருமம் பிரகாசமாகவும் மாற உதவும்.
சரும பிரகாசம்...
தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம்தான் சருமம் வெண்மையாக உதவுகிறது. இந்த லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, மெலனின் உற்பத்தியைக் குறைத்து, சருமத்தை பிரகாசமாக்குகிறது. இது மெலனின் உற்பத்தியைத் தடுக்கும் நொதிகளை உற்பத்தி செய்ய உதவுகிறது.

தயிரில் உடலுக்கும், சருமத்திற்கும் அதிக நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன
புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாப்பு
சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் சருமத்தை விரைவில் கருமையடையச்செய்யும். மேலும் சருமத்தை பாதிக்கும். புற ஊதா கதிர்களால் ஏற்படும் புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை சரிசெய்ய தயிரைப் பயன்படுத்தலாம். சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதில் தயிரில் உள்ள துத்தநாகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நெகிழ்ச்சித்தன்மை
சருமம் கொலாஜனை இழக்கும்போது, அதன் நெகிழ்ச்சி குறையும். தயிரை முகத்தில் தடவும்போது சரும நெகிழ்ச்சித்தன்மை அதிகரிக்கும்.
முகச்சுருக்கங்களை தடுக்கும்
சருமம் மீள்தன்மையுடன் இருக்கும்போது, சுருக்கங்கள் மற்றும் முகத்தில் புள்ளிகள் தோன்றுவது குறையும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இந்த நிலையைத் தடுக்க ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இதன் காரணமாக, உங்கள் இளமையைப் பாதுகாக்க மென்மையான, பளபளப்பான சருமத்தைப் பெறுவீர்கள்.
முகப்பரு
தயிரில் உள்ள புரோபயாடிக்குகள், அழற்சி, முகப்பரு புண்களுக்கு முக்கிய காரணமான P. acnes பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவும் என்று கூறப்படுகிறது. ப்ரோபியோனிபாக்டீரியம் ஆக்னஸ் (P. acnes) என்ற பாக்டீரியா இயற்கையாகவே தோலில் வசிக்கிறது. இருப்பினும், முகத்துளைகள் அடைக்கப்படும்போது, இந்த பாக்டீரியாக்கள் பெருகி, வீக்கம் மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்துகின்றன. புரோபயாடிக்குகள் ஒட்டுமொத்த வீக்கத்தைக் குறைக்கின்றன. இது முகப்பருவைத் தணித்து, நீண்ட காலத்திற்கு முகப்பரு வருவதை தடுக்க உதவும்.
பிற தோல்நோய்கள்
புரோபயாடிக்குகளில் காணப்படும் அதே அழற்சி எதிர்ப்பு பண்புகள், ரோசாசியா, சொரியாசிஸ் போன்ற பிற தோல்நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவுகின்றன.
- பட்டாசு வெடிக்கும்போது தளர்வான உடை வேண்டாம்! ஜீன்ஸ் போன்ற டைட்டான உடை அணிய வேண்டும்!
- சாதாரண பட்டாசுக்கும், பசுமை பட்டாசுக்கும் வித்தியாசம் என்ன?
தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். அப்படி அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் பட்டாசு வெடிக்கும்போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது. குறிப்பாக பெண்கள், தீபாவளிக்கு தாங்கள் வாங்கிய புத்தாடைகளை அணிந்துக்கொண்டு பட்டாசு வெடிக்கும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, தங்கள் உடை தளர்வாக இல்லாமல், இறுக்கமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் பட்டாசு வெடிக்கும்போது, எப்படிப்பட்ட உடைகளை அணியலாம்? பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும்? பசுமை பட்டாசுகள் என்றால் என்ன? உள்ளிட்ட தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இதுபோன்ற பட்டாசுகளை வெடிக்கும்போது கண்ணாடி அணிவது கண்களைப் பாதுகாக்கும்!
பட்டாசு வெடிக்கும்போது...
* பட்டாசுகளை வீட்டுக்கு வெளியே தூரமாக வைத்து வெடிக்க வேண்டும்.
* ராக்கெட் போன்ற வாண வெடிகளை குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் வெடிக்க வேண்டும்.
* வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.
* பட்டாசு வெடிக்கும்போது கண்டிப்பாக காலணி அணிய வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும்போது அருகிலேயே ஒரு வாளியில் நீரை வைத்துக்கொள்ள வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பக்கத்தில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
* பெரியவர்களின் மேற்பார்வையில்தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.
* பட்டாசு வெடித்து முடித்தவுடன் கட்டாயம் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
உடை விஷயத்தில் பெண்களுக்கு கவனம் தேவை!
* பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான ஆடைகளை அணியுமாறு தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
* பெண்கள் இறுக்கமான பருத்தி ஆடைகளையோ, ஜீன்ஸ் போன்ற ஆடைகளையோ அணிய வேண்டும். அவை எளிதில் காற்றில் பறந்து தீப்பிடிக்காது.
* காற்றில் பறக்கும் தளர்வான உடைகள், எளிதில் தீப்பற்றிவிடும் என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டும்.
* பட்டு, நைலான் உள்ளிட்டவற்றால் ஆன உடைகள் மற்றும் சேலை, துப்பட்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

திறந்த வெளியில்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
தீப்பற்றினால்...!
* பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக உடலில் தீப்பற்றினால் ஓடக்கூடாது.
* தீயை உடனே தண்ணீர் ஊற்றி அணைக்கலாம் அல்லது கீழே படுத்து உருளலாம்.
* தீப்புண்ணின் மீது உடனே தண்ணீர் ஊற்ற வேண்டும்.
* தீப்புண்ணுக்கு மருந்து போடுகிறேன் என்ற பெயரில், இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
* கண்ணில் தீப்பொறி பட்டுவிட்டால், உடனடியாக சுத்தமான நீரை ஊற்றிக் கழுவிவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
சாதாரண பட்டாசு vs பசுமை பட்டாசு!
* காற்று மாசுபடுவதை கருத்தில் கொண்டு, மாசுபாட்டை குறைக்க, பசுமை பட்டாசுகளை வெடிக்க, அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது.
* பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.
* சாதாரண பட்டாசுகளில், ஆர்சனிக், லித்தியம், பேரியம் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
* பசுமை பட்டாசுகளில் இதுபோன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
* பசுமை பட்டாசுகளில் அலுமினியம், ஈயம், கார்பன் ஆகியவை உள்ளன. இவை பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் புகையை குறைக்கும்.
* சாதாரண பட்டாசுகளை வெடிக்கும்போது பொதுவாக 160 டெசிபல் சத்தம் வெளிவரும்.
* பசுமை பட்டாசில் 110 முதல் 125 டெசிபல் சத்தம் மட்டுமே வெளிவரும்.
- புளி பயன்படுத்தப்படும் உணவுகளில் வெந்தயம் சேர்க்கப்படும்.
- வெந்தயத்தின் அதிக பயன்பாடு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.
தமிழர்களின் உணவுமுறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை மேம்படுத்துவதோடு பல நோய்களிலிருந்தும் நிவாரணம் அளிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் வெந்தயம். பொதுவாக புளி பயன்படுத்தப்படும் உணவுகளில் வெந்தயம் சேர்க்கப்படும். ஏனெனில் புளி சூட்டை கிளப்பி, வயிற்று வலியை உண்டாக்கும் எனக் கூறுவார்கள். வெந்தயம் வயிற்று வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால்தான் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமின்றி பல மருத்துவ குணங்கள் நிறைந்தது வெந்தயம். உடலுக்குத் தேவையான கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் வெந்தயத்தில் காணப்படுகின்றன. வெந்தயத்தில் பல நன்மைகள் இருந்தாலும், அதனால் உடல் உபாதைகளும் ஏற்படுமாம். அது எப்படி எனப் பார்ப்போம்.
தாய்ப்பால் அதிகரிப்பு
குழந்தை பிறந்த தொடக்கத்தில், சில பெண்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காது. அப்போது பலரும் நாட்டு வைத்தியங்கள் சிலவற்றை பரிந்துரைப்பர். அந்த வகையில் வட ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தெற்கு ஐரோப்பாவில் உள்ள மக்கள் பாரம்பரியமாக தாய்ப்பாலை அதிகரிக்க வெந்தயத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். வெந்தயம் பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்க உதவும் என பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும்
ஆண்களின் விந்தணுக்களால் உற்பத்தி செய்யப்படும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவை அதிகரிக்க வெந்தயம் உதவும். வயதாகும்போது டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் இயற்கையாகவே குறைகின்றன. இது எரிச்சல், மனநிலை மாற்றம் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு வழிவகுக்கும். வெந்தய பயன்பாடு டெஸ்டோஸ்டிரோன் சுரக்க உதவுவதோடு, பாலியல் உந்துதலையும் மேம்படுத்துகிறது. 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 12 வாரங்களுக்குப் பிறகு 35-65 வயதுடைய 45 ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவு 46% வரை அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குறையும் ரத்த சர்க்கரை அளவு
நீரிழிவு நோய் அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலை உள்ளவர்களுக்கு வெந்தயம், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். ரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்கும். இயற்கையிலேயே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் பண்புகள் கொண்டது. நீரிழிவு காரணமாக உண்டாகும் நீரிழிவு நரம்பியல், கேட்கும் திறன் மற்றும் பார்வை இழப்பு, இதய நோய், சிறுநீரக நோய், பல் சிதைவு, ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என எல்லாவற்றுக்கும் தீர்வாக நாம் வெந்தயத்தை சொல்ல முடியும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க வெந்தயம் உதவுகிறது!
குறையும் கொழுப்பு
வெந்தயம் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதில் உள்ள அதிக நார்ச்சத்து, ரத்தத்தில் உள்ள மொத்த கொழுப்பு, கெட்ட கொழுப்பு (LDL) மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்கவும் உதவும். ஆனால் இதுகுறித்த ஆராய்ச்சிகள் இன்னும் தேவைப்படுகின்றன.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு
வெந்தயத்தில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் எனப்படும் சேர்மங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜனைப் போலவே செயல்படுகின்றன. இது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்றுவலி உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.
எந்த அளவில் வெந்தயத்தை பயன்படுத்த வேண்டும்?
வெந்தயத்தின் பயன்பாடு நோய்களின் தன்மையை பொறுத்து மாறுபடும். வெந்தயத்தை எந்த அளவு, எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து முடிவெடுக்கலாம்.
வெந்தய பயன்பாடு பாதுகாப்பானதா?
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான். அதுபோலத்தான் வெந்தயத்தின் அதிக பயன்பாடு ஆபத்தை விளைவிக்கக்கூடியது. வெந்தயத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரல் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். அதுபோல கர்ப்பிணிகளும் வெந்தயத்தை அதிகளவு எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வாமை உள்ளவர்களும் வெந்தயத்தை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு 21 கிராமுக்கு மேல் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது பாதுகாப்பானது.
- 10 நிமிடங்கள் முடிக்கு மசாஜ் கொடுத்து, சுடுநீரில் முடியை கழுவவேண்டும்.
- பேன் சீப்பை வைத்து சீவினாலே பொடுகுகள் அனைத்தும் கொட்டிவிடும்.
உடல்நலனைவிட தற்போதெல்லாம் சரும நலனுக்கு மெனக்கெடுபவர்கள்தான் அதிகம். இதற்காக பலரும் பியூட்டி பார்லர்களுக்கு சென்று ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்கின்றனர். அப்படி பியூட்டி பார்லர் செல்ல இயலாதவர்கள், வீட்டிலேயே சருமத்தின் அழகை மெருகூட்ட, சில பியூட்டி டிப்ஸ்களை கூறியுள்ளார் அழகுக்கலை நிபுணர் நிஷா கோஷ். அந்த குறிப்புகளை காணலாம்.
வறண்ட சருமம் இருக்கக்கூடாது!
நமக்கு எண்ணெய் சருமமாக கூட இருக்கலாம். ஆனால் வறண்ட சருமமாக இருக்கக்கூடாது. வறண்ட சருமம், அரிப்பு, செதில்கள் மற்றும் வறண்ட திட்டுகள் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும், மேலும் புற ஊதா கதிர்களால் எளிதாக சேதமடையக்கூடும், எனவே வறண்ட சருமம் உள்ளவர்கள், பாதாம் எண்ணெய் இரண்டு சொட்டுகள், ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டுகள் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்துவிட்டு, காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் முகம் கழுவுவதால் சருமத்தை நன்றாக பாதுகாத்துக் கொள்ளமுடியும். இதை தினசரி செய்யும்போது அழகான மற்றும் வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு எண்ணெய் சருமம் கிடைக்கும்.
பொடுகு பிரச்சனைக்கு தீர்வு
பொடுகு பிரச்சனை நிறைய இருப்பவர்கள், முல்தானி மெட்டி, எலுமிச்சைச் சாறு, முட்டையின் வெள்ளைக்கரு ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து ஸ்கேல்ப்பில் அப்ளை செய்யவேண்டும். ஒரு பத்து நிமிடம் மசாஜ் கொடுக்கவேண்டும். பின்னர் சுடுநீரில் முடியை கழுவவேண்டும். பின்னர் சீப்பை வைத்து சீவினாலே பொடுகுகள் அனைத்தும் கொட்டிவிடும். இதை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். முடி பார்க்க வழுவழுப்பாக சிக்கில்லாமல் தெரிய முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சைச் சாறு, புதினாச்சாறு ஆகிய மூன்றையும் நன்றாக பீட்செய்து முடியில் அப்ளை செய்யவேண்டும். 20 நிமிடம் அல்லது அரைமணிநேரம் கழித்து ஷாம்பூ போட்டு முடியை கழுவினால், பளப்பளப்பாக, வழுவழுவென முடி நன்றாக இருக்கும்.
கருகருவென நீளமான முடிக்கு!
அதுபோல முடி நீளமாக கருகருவென வளரவேண்டுமென எண்ணினால், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கேரட்டின் இலையை துண்டு துண்டாக வெட்டி போட்டு சூடுப்படுத்த வேண்டும். அதில் கொஞ்சம் மிளகு, வெந்தயம் சேர்க்கவேண்டும். அந்த எண்ணெய்யை நன்கு காய்ச்சி, வடிகட்டி ஒரு மூன்று நாட்கள் வெயிலில் வைக்கவேண்டும். அதை தலைக்கு தேய்த்தால், முடி கருகருவென நன்றாக வளரும். புழுவெட்டு இருப்பவர்கள் தலையில் சின்ன வெங்காயத்தை நன்கு தேய்க்க வேண்டும். மூன்று மாதங்கள் தொடர்ந்து தேய்த்தால், அந்த இடத்தில் குட்டி குட்டி முடி வளரத் தொடங்குவதை நீங்கள் பார்ப்பீர்கள். அதுபோல கண்புருவம் அடத்தியாக வேண்டும் என்றால், விளக்கெண்ணெய்யை அப்ளை செய்யலாம்.
கருமை நீங்க...
கண்ணில் கருவளையம் இருப்பவர்கள், உருளைக்கிழங்கு சாறுடன், கடலைமாவை சேர்த்து பத்துபோல போட்டு வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். உதடு கருப்பாக இருப்பவர்கள், தாங்களாகவே ரோஸ்வாட்டர் தயாரித்து அப்ளை செய்தால் நன்றாக இருக்கும். சந்தைகளில் வாங்குவதில் நிறைய போலிகள் உள்ளன. ரோஸ் வாட்டர் எப்படி செய்வது என நான் கூறுகிறேன். ரோஜாப்பூக்கள் ஒரு கிலோ வாங்கினோமானால், அதன் இதழ்களை எடுத்து தண்ணீரில் கொதிக்கவைக்க வேண்டும். ஒருகிலோ இதழ் 100 மில்லிக்கு வரும்வரையில், கொதிக்கவைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து வடிகட்டி, தினமும் காட்டன் துணியால் தொட்டு உதட்டில் தடவி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். உதடு ரோஸ் நிறத்திற்கு மாறும். இவை அனைத்திற்கும் மேலாக, என்னதான் ஸ்கின் கேர் செய்தாலும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பட்டர் ஃப்ரூட் எடுத்துக்கொள்ளலாம். இது கர்ப்பப்பைக்கும் நல்லது, முகத்திற்கும் பளபளப்பு மற்றும் அழகை தரும்.
- வீட்டில் பிரசவம் பார்க்கும்போது பல பெண்களும், குழந்தைகளும் உயிரிழக்கிறார்கள்.
- கர்ப்பமாக இருக்கும்போது குங்குமப்பூ நிறைய சாப்பிட்டு அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்கள் தான் அதிகம்.
தாய்மை அடையும் நேரம் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம் ஆகும். எனவே பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டம் என்பது கர்ப்பகாலம் மற்றும் பிரசவ நேரம் ஆகியவை தான். இதைத்தான் ஒவ்வொரு பெண்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குகிறார்கள். அந்த அளவுக்கு கர்ப்பம், பிரசவம் ஆகியவை பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு வயதில் மூத்த பெண்கள் கூறும் தவறான அறிவுரைகள்:
கர்ப்ப காலமும், பிரசவ நேரமும் எல்லா பெண்களுக்கும் மகிழ்ச்சியான காலகட்டமாக அமைவதில்லை. கர்ப்பம், பிரசவம் ஆகியவை பெண்கள் மட்டுமே சந்திக்கும் பிரத்தியேகமான விஷயங்கள் ஆகும். இந்த விஷயங்களில் பெண்கள் பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள் பலருக்கும், வயதில் மூத்த பெண்கள் பலரும் பல்வேறு அறிவுரைகளை கூறுவார்கள்.
ஆனால் அந்த அறிவுரைகளில் சரியான விஷயங்களும் இருக்கும், சில நேரங்களில் தவறான விஷயங்களும் இருக்கும். அதாவது தவறான விஷயங்களை தவறு என்று அறியாமலேயே அவர்கள் சரியானது என்று கூறுவார்கள். அப்படி நிறைய விஷயங்கள் கர்ப்பிணிகளின் காதில் வந்து விழும்.
ஆனால் இவற்றில் எது நல்லது? எது கெட்டது என்பது பல நேரங்களில் அந்த கர்ப்பிணி பெண்கள் அறியாத ஒரு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் இதைப்பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் இன்றைக்கு ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற முக்கியமான விஷயமான கர்ப்பம் மற்றும் பிரசவம் என்பது மிகவும் சீரான முறையில், நல்ல முறையில் இருக்க வேண்டும். அந்த கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தம் எதுவும் இல்லாமல், நல்ல மகிழ்ச்சியோடு இருந்தால் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும். பிரசவத்தின்போது தாய் சேய் இருவரும் பாதுகாப்பாகவும் இருக்க முடியும்.
இந்த வகையில் கர்ப்ப காலத்தின்போது பெண்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் ஆகியவை எக்கச்சக்கம் இருக்கிறது. மேலும் சமுதாய ரீதியாக ஏற்படும் பல பிரச்சனைகளும் கர்ப்பிணி பெண்களின் வாழ்க்கையில் பங்கு வகிக்கிறது.
வீட்டிலேயே பிரசவம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
மருத்துவத்துறை இப்போது எவ்வளவோ முன்னேறியுள்ளது. ஆனால் இந்த காலகட்டத்திலும் வீட்டில் பிரசவம் பார்க்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிரசவம் எங்கு, எப்படி, யாரால் பார்க்கப்படுகிறது என்று கடந்த 2018-ம் ஆண்டிலேயே உலக அளவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் நிறைய பேர் வீட்டில் பிரசவம் பார்க்கிறார்கள் என்பதை கண்டறிந்து உள்ளனர். இன்றும் நிறைய பேர் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதை நாம் கேள்விப்படுகிறோம். யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்தேன் என்று நிறைய பேர் கூறுகிறார்கள்.
பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு போனால் குளுக்கோஸ் ஏற்றுகிறார்கள், ஊசி போடுகிறார்கள், சிசேரியன் அறுவை சிகிச்சை செய்கிறார்கள், தையல் போடுகிறார்கள் என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. பிரசவம் என்பது இயற்கையாக ஏற்படுவது தானே? கர்ப்பம் இயற்கையாக உருவாகும் நிலையில், பிரசவமும் இயற்கையாகத்தானே இருக்க வேண்டும் என்பது போன்று பலரது கருத்துக்கள் உள்ளன.
அந்த கருத்துக்களில் தவறு இல்லை என்றாலும் கூட, அதை முழுக்க முழுக்க சரியென்று பலரும் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்த காலத்தில் வீட்டில் பிரசவம் ஆகவில்லையா என்கிற நம்பிக்கையோடு, தேவையில்லாமல் மருத்துவரை பார்க்க வேண்டாம் என்று எண்ணி, வீட்டிலேயே பிரசவம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இப்போதும் அதிகமாக உள்ளது.
இதைத்தான் அந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அந்த ஆய்வுகளில் சொல்லியிருக்கக்கூடிய விஷயம், படித்தவர்கள் நிறைய பேர் வசிக்கும் சுவீடன் போன்ற நாடுகளில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 0.1 சதவீதமாக உள்ளது.
ஆனால் மலேசியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வீட்டில் பிரசவம் பார்ப்பது 19 முதல் 20 சதவீதமாக இருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதில் ஒரு விஷயத்தை மட்டும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பதை தவிருங்கள்:
வீட்டில் பிரசவம் பார்த்தவர்களில், பிரசவம் சரியாக நடந்த ஒருவர் வேண்டுமானால் அதை யூடியூப்பில் போடலாம். ஆனால் வீட்டில் பிரசவம் பார்க்கும்போது பல பெண்களும், குழந்தைகளும் உயிரிழக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருமே அதை யூடியூப்பில் போடுவதில்லை. ஏனென்றால் யூடியூப்பை பார்த்து பிரசவம் பார்க்கும்போது தாயும், குழந்தையும் ஒருவேளை இறக்க நேரிட்டால் அது மிகப்பெரிய பிரச்சனையாகி விடும். எனவே யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பதை தவிருங்கள்.
அந்த வகையில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், ஒரு கர்ப்ப காலத்தில் பலரும் பலவிதமான மாற்றுக் கருத்துக்களை கூறுவார்கள். இன்றைக்கும் அந்த காலத்து பெரியவர்கள் சிலர் சொல்லுவார்கள். நாங்கள் அந்த காலத்தில் வீட்டில் தான் பிரசவம் பார்த்தோம். இன்றைக்குத் தான் பெரிய பெரிய மருத்துவமனைகள் வந்துள்ளன. பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து விடுவார்கள். இப்படி சொல்கின்ற அந்தக்கால பெண்கள் அதிகம்.
காலம் காலமாக பழகி வந்த கலாசாரம் மற்றும் அவர்களுடைய சமூக பழக்க வழக்கம் ஆகியவற்றை பின்பற்றி கர்ப்பிணியாக இருக்கும் பெண்களுக்கு அந்த காலத்து பெண்கள் நிறைய அறிவுரைகளை சொல்வார்கள். நான் நிறைய பெண்களுக்கு பிரசவம் பார்த்திருக்கிறேன். எனக்கு தெரியாதா என்று விமர்சனம் செய்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அவர்கள் இப்படி விமர்சனம் செய்வதற்கு அறிவியல் ரீதியாக பிரசவம் பற்றிய புரிதல் இல்லாததுதான் முக்கியமான காரணம் ஆகும். கர்ப்பம் மற்றும் பிரசவம் என்கின்ற இயற்கையான விஷயத்தின் அறிவியல் அடிப்படையே அவர்களுக்கு தெரிவதில்லை. இது தொடர்பான புரிதல் என்பது மிகவும் முக்கியம்.
அந்த புரிதல் இல்லாததால் தான் பிரசவத்தின்போது வருகிற சவால்கள், என்ன நடக்குமோ என்கிற குழப்பங்கள், இதனால் வருகிற பாதிப்புகள் பற்றி தெரியாமல், நிறைய பேர் ஒரு சில விஷயங்களை மட்டும் தெரிந்து கொண்டு வீட்டிலேயே பிரசவம் பார்க்கிறார்கள்.
மேலும் பிரசவம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்கிற தவறான கருத்துக்களையும் சொல்கிறார்கள். அதனால் தான் இன்றைக்கு கர்ப்ப காலத்தில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது.
குங்குமப்பூ அதிகம் சாப்பிட்டால் கருச்சிதைவு அபாயம்:
இதேபோல் கர்ப்ப காலத்தின்போது பெண்களுக்கு, எல்லோரும் பலவிதமான அறிவுரைகளை சொல்வார்கள். நான் இதைத்தான் சாப்பிட்டேன், எனது குழந்தை நல்ல கலராக இருந்தது. நான் இதை சாப்பிட்டேன், குழந்தை மோசமாக இருந்தது என்பார்கள்.
இந்த மாதிரி பலவிதமான உணவு பழக்க வழக்க முறைகளிலும், வாழ்க்கை முறைகளிலும், அவர்கள் என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை தங்களுடைய அனுபவத்தில் இருந்து, இதுதான் சரி என்று எண்ணி, தவறான கருத்துக்களை சொல்வது இன்னும் அதிகமாக இருக்கிறது.
இன்றைக்கும் சமூக வலைதளத்திலோ அல்லது யூடியூப்களிலோ யாராவது எளிதாக சொல்லி விடுவார்கள். நான் கர்ப்பமாக இருக்கும்போது இதைத்தான் சாப்பிட்டேன், அதனால் எனது குழந்தை நல்ல கலராக இருந்தது என்று பதிவிடுவார்கள். ஆனால் அது உண்மையான தகவலாக இருக்காது.
அந்த காலத்தில் குங்குமப்பூ சாப்பிட்டால் தான் குழந்தை நல்ல கலராக இருக்கும் என்பார்கள். ஆனால் கர்ப்பமாக இருக்கும்போது குங்குமப்பூ நிறைய சாப்பிட்டு அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்கள் தான் அதிகம். ஏனென்றால் குங்குமப்பூவில் இருக்கிற பல விதமான விஷயங்கள் கருவுக்கும், கரு வளர்ச்சிக்கும் பிரச்சனையாக இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்ட தகவல் ஆகும்.
இந்த வகையில் கருச்சிதைவு என்பது குங்குமப்பூ அதிகம் சாப்பிடுவதால் ஏற்படுகிறது என்பதை பல ஆய்வுகளில் உறுதி செய்திருக்கிறார்கள். ஆனால் இது தெரியாமல் நிறைய பேர் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை அழகாக இருக்கும், நல்ல நிறமாக இருக்கும் என்கிறார்கள்.
இதெல்லாம் தவறான கருத்துக்கள். இப்படி பலரும் சமூக ஊடகத்தில் சொல்லும் தவறான கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்களை, கர்ப்பிணிகள் சரியானது என்று கருதி, அதை பயன்படுத்தி, அதனால் பலவித பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
குங்குமப்பூ விஷயம் போலவே, அடுத்ததாக கர்ப்ப காலத்தில் என்னென்ன சாப்பிட வேண்டும், என்னென்ன சாப்பிடக்கூடாது என்கிற சந்தேகங்கள் நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கிறது. அதுபற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
- கொழுப்பில் இருந்து வருகிற சில ஹார்மோன்கள் கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும்.
- உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக ஹார்மோன் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்.
உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பாதிப்பு ஏற்படும். இது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ஏனென்றால் கொழுப்பில் இருந்து வருகிற சில ஹார்மோன்கள் கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும்.
குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஈஸ்ட்ராடியோல், கொழுப்பில் இருந்து வருகிற மற்றொரு ஹார்மோன் ஆன்ட்ரோஜன் டெஸ்டோஸ்டிரோன் ஆகிய அனைத்துமே கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும் தன்மை கொண்டது.
எனவே இந்த ஹார்மோன்களின் சமநிலையின்மை மாற்றங்கள் காரணமாக பல பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சியில் குறைபாடுகள் ஏற்படும். அதன் மூலம் நாளமில்லா சுரப்பிகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு, ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய் வரலாம். மேலும் பி.சி.ஓ.டி. எனப்படும் பாலிசிஸ்டிக் கருப்பை பாதிப்பும் வரலாம். இதனால் கருமுட்டைகளின் தரம் குறைவாகலாம்.
எனவே உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக ஹார்மோன் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். முக்கியமாக தைராய்டு பாதிப்பு இருக்கலாம். புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாக இருக்கலாம். ஒழுங்கற்ற மாதவிடாயும் ஏற்படலாம். இதனால் தான் அந்த பெண்கள் உடல் எடையை குறைக்கும்போது அவர்களுக்கு மாதவிலக்கு சரியாக வரும். உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும்போது மாதவிலக்கு சீராகும்.
எனவே பெண்களின் உடல் எடை கூடுவது கண்டிப்பாக கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கும். அதனால் தான் உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இவர்களில் பலர், தங்களுக்கு ஒரு நோயின் அறிகுறி ஏற்பட்டபிறகும் நேரமின்மை அல்லது அலுவலகப் பணிச்சுமை காரணமாக மருத்துவரிடம் செல்வதில்லை. இது, அனைத்துப் பெண்களிடம் பரவலாகக் காணப்படும் மனநிலையாக இருக்கிறது. பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவது மிகவும் அவசியம்.
பெண்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய ஆரோக்கிய விதிகள் குறித்துப் பார்ப்போம்.
* வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமல்ல, வீட்டிலிருப்பவர்களும்கூட காலை உணவைத் தவிர்ப்பது வழக்கமாக இருக்கிறது. காலை உணவுதான் அன்றைய நாளின் உற்சாகத்துக்கு அடிப்படை. காலை உணவாக, ஒரு முட்டை, இரண்டு பழங்கள்/ இட்லி, சாம்பார்/ சாண்ட்விச், ஜூஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம்.
* உடல்பருமன் பல்வேறு நோய்களுக்கு நுழைவுவாயிலாக இருக்கிறது. எனவே, உயரத்துக்கேற்ப உடல் எடையைப் பராமரிப்பது அவசியம். ஒருவருக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக 2,000 கலோரி தேவை. ஒருவரின் உடலுழைப்பு, பி.எம்.ஐ அளவைப்பொறுத்து மாறுபடும் என்பதால், உணவியல் நிபுணரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். குறிப்பாக, பெரியளவில் உடலுழைப்பு இல்லாத பணிகளைச் செய்பவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை முடிந்தஅளவு குறைக்க வேண்டும். உணவில் எப்போதும் அதிகமான காய்கறிகள் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

* ஹார்மோன் சமச்சீரின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இது மாதவிடாயில் தொடங்கி மகப்பேறுவரை பல்வேறு வகையில் பெண்களைப் பாதிக்கிறது. எனவே, ஹார்மோன்கள் சரியாக சுரக்கின்றனவா என்பதைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதிப்பது நல்லது. பிரச்னை இருந்தால் அதற்கான சிகிச்சைகளை எடுக்க வேண்டும்.
* உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. தினமும் 30 நிமிடம் யோகா அல்லது ஏதேனும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான தேகத்துக்கு வழிவகுக்கும். உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசித்து, வீட்டிலேயே எளிமையான பயிற்சிகளைச் செய்யலாம்.
* கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்கள் அண்மைக்காலமாகப் பெண்களை அதிக அளவில் பாதித்து வருகின்றன. எனவே, 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் மார்பகத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் `மாமோகிராம்' (Mammogram) பரிசோதனை செய்வது நல்லது. மார்பகங்களில் வலி, வீக்கம், கட்டிகள், அரிப்பு மற்றும் வேறுவிதமான மாற்றங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டும். பொதுவாக 40-லிருந்து 50 வயதுவரையுள்ள பெண்களுக்குத்தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும். பெண்கள் பருவமடைவதில் தாமதம் ஏற்படுவது, மாதவிடாய் சரியாக நிகழாமல் இருப்பது போன்றவை இருந்தால், இந்தப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. `பாப் ஸ்மியர் டெஸ்ட்' (pap smear test ) பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
* 40 வயதைக் கடந்த பெண்களுக்கு மெனோபாஸ் நின்றுவிடும் என்பதால், ஹார்மோன்களின் சுரப்பு குறைந்துவிடும். இதனால் `ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) எனும் எலும்பின் அடர்த்தி குறையும் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் முதுகு வலி, எலும்பு முறிவு பிரச்னைகள் ஏற்படும். இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் அடர்பச்சை நிறக் கீரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். எலும்பு மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை உட்கொள்ளலாம்.
* உடலின் சீரான செயல்பாட்டுக்குத் தேவையான அளவு நீர் அருந்தவேண்டியது அவசியம். மனித உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனதே. எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க உதவும். இதன்மூலம் டிஹைட்ரேசன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்" என்கிறார் காவியா கிருஷ்ணன்.
* அதிகாரம் பெற்ற முகவரிடம் (Power Of Attorney) சொத்து வாங்குவதாக இருந்தால், சொத்தை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். ஒருவேளை விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மட்டும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கலாம். மேலும், அதிகாரம் அளித்தவர் உயிருடன் இல்லையென்றால் அந்த அதிகாரப்பத்திரம் செல்லாது.
* நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் நிலையில் அதற்கான உரிமை, உடைமை மற்றும் அந்த நிறுவனத்தின் விதிமுறைகள் பற்றியும் தெரிந்துகொள்வது முக்கியம்.
* சொத்தின் உரிமையாளர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அந்த சொத்தை வங்குவதற்கு நீதிமன்ற அனுமதி அவசியம்.
* நிலத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லாத நிலையில், வாரிசு சான்றிதழ் மூலம் வாரிசுகள் யார் என்பதை கண்டறிந்து, அவர்கள் சம்மதத்துடன் விற்பனை செய்யப்பட வேண்டும். வாரிசுதாரர்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், உயர் நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் மூலம் சொத்துப் பரிமாற்றம் நடக்கவேண்டும்.
* சொத்துக்கான மூல ஆவணத்தை பெற்று தக்க சட்ட ஆலோசனை பெறவேண்டும். மூல ஆவணம் இல்லாத சொத்துக்கள் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் அடமானம் வைக்கப்பட்டதாக இருக்கலாம். அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக்கு மூல ஆவணம் அடமானத்தில் இருக்கலாம். அந்த நிலையில் வாங்கப்படும் வீட்டின் மீது வங்கிக்கு எவ்வித உரிமையும் இல்லை என்ற சான்றிதழ் (NOC) பெறுவது அவசியம்.
* சொத்தின் மீதான முந்தைய பரிவர்த்தனைகளை கண்டறிய 30 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழ் பெற்று பார்த்துக்கொள்ள வேண்டும்.
* அடுக்குமாடிக் குடியிருப்பு என்றால் அதற்கான அனுமதி, வரைபட அனுமதி உள்ளிட்ட அனைத்து வித அனுமதிகளையும் பெற்று சரிபார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைபட அளவுக்கும் அதிகமாக, கட்டிடப் பரப்பளவு இருந்தால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வரலாம்.
* சொத்தின் பத்திரப்பதிவுக்கு கால அவகாசம் உள்ள நிலையில் விற்பனை ஒப்பந்தம் செய்து கொண்டு, அதை பதிவு செய்து கொள்வதுதான் சட்டப்படி பாதுகாப்பானது. அந்த ஒப்பந்தத்தில் முன்பணம், விற்பனை தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் அளிக்கப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.






