என் மலர்
நீங்கள் தேடியது "உடல்நலம் பாதிப்பு"
- புளி பயன்படுத்தப்படும் உணவுகளில் வெந்தயம் சேர்க்கப்படும்.
- வெந்தயத்தின் அதிக பயன்பாடு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.
தமிழர்களின் உணவுமுறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை மேம்படுத்துவதோடு பல நோய்களிலிருந்தும் நிவாரணம் அளிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் வெந்தயம். பொதுவாக புளி பயன்படுத்தப்படும் உணவுகளில் வெந்தயம் சேர்க்கப்படும். ஏனெனில் புளி சூட்டை கிளப்பி, வயிற்று வலியை உண்டாக்கும் எனக் கூறுவார்கள். வெந்தயம் வயிற்று வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால்தான் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமின்றி பல மருத்துவ குணங்கள் நிறைந்தது வெந்தயம். உடலுக்குத் தேவையான கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் வெந்தயத்தில் காணப்படுகின்றன. வெந்தயத்தில் பல நன்மைகள் இருந்தாலும், அதனால் உடல் உபாதைகளும் ஏற்படுமாம். அது எப்படி எனப் பார்ப்போம்.
தாய்ப்பால் அதிகரிப்பு
குழந்தை பிறந்த தொடக்கத்தில், சில பெண்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காது. அப்போது பலரும் நாட்டு வைத்தியங்கள் சிலவற்றை பரிந்துரைப்பர். அந்த வகையில் வட ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தெற்கு ஐரோப்பாவில் உள்ள மக்கள் பாரம்பரியமாக தாய்ப்பாலை அதிகரிக்க வெந்தயத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். வெந்தயம் பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்க உதவும் என பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும்
ஆண்களின் விந்தணுக்களால் உற்பத்தி செய்யப்படும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவை அதிகரிக்க வெந்தயம் உதவும். வயதாகும்போது டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் இயற்கையாகவே குறைகின்றன. இது எரிச்சல், மனநிலை மாற்றம் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு வழிவகுக்கும். வெந்தய பயன்பாடு டெஸ்டோஸ்டிரோன் சுரக்க உதவுவதோடு, பாலியல் உந்துதலையும் மேம்படுத்துகிறது. 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 12 வாரங்களுக்குப் பிறகு 35-65 வயதுடைய 45 ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவு 46% வரை அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குறையும் ரத்த சர்க்கரை அளவு
நீரிழிவு நோய் அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலை உள்ளவர்களுக்கு வெந்தயம், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். ரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்கும். இயற்கையிலேயே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் பண்புகள் கொண்டது. நீரிழிவு காரணமாக உண்டாகும் நீரிழிவு நரம்பியல், கேட்கும் திறன் மற்றும் பார்வை இழப்பு, இதய நோய், சிறுநீரக நோய், பல் சிதைவு, ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என எல்லாவற்றுக்கும் தீர்வாக நாம் வெந்தயத்தை சொல்ல முடியும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க வெந்தயம் உதவுகிறது!
குறையும் கொழுப்பு
வெந்தயம் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதில் உள்ள அதிக நார்ச்சத்து, ரத்தத்தில் உள்ள மொத்த கொழுப்பு, கெட்ட கொழுப்பு (LDL) மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்கவும் உதவும். ஆனால் இதுகுறித்த ஆராய்ச்சிகள் இன்னும் தேவைப்படுகின்றன.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு
வெந்தயத்தில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் எனப்படும் சேர்மங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜனைப் போலவே செயல்படுகின்றன. இது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்றுவலி உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.
எந்த அளவில் வெந்தயத்தை பயன்படுத்த வேண்டும்?
வெந்தயத்தின் பயன்பாடு நோய்களின் தன்மையை பொறுத்து மாறுபடும். வெந்தயத்தை எந்த அளவு, எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து முடிவெடுக்கலாம்.
வெந்தய பயன்பாடு பாதுகாப்பானதா?
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான். அதுபோலத்தான் வெந்தயத்தின் அதிக பயன்பாடு ஆபத்தை விளைவிக்கக்கூடியது. வெந்தயத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரல் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். அதுபோல கர்ப்பிணிகளும் வெந்தயத்தை அதிகளவு எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வாமை உள்ளவர்களும் வெந்தயத்தை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு 21 கிராமுக்கு மேல் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது பாதுகாப்பானது.
- பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினரும் முகாமிட்டு சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நகரப்பகுதியான உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளில் கடந்த 7-ந் தேதி பலருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது.
அவர்களில் 3 பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தனர். பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பொது பணித்துறையினர் மேற்கொண்ட ஆய்வில், முத்தரையர் பாளையத்தில் இருந்து நகரப் பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதனை உடனடியாக சீரமைத்தனர்.
இந்த நிலையில் நெல்லித்தோப்பு தொகுதி பெரியார் நகர், ராஜய்யா தோட்டம், புது அய்யனார் கோவில் தெரு பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டடோர் நேற்று மாலை வாந்தி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில், 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதோடு அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினரும் முகாமிட்டு சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மீதமான உணவான தக்காளி சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
- உடல்நலம் பாதிக்கப்பட்ட 25 பேர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பண்ருட்டி:
பண்ருட்டியில் நடந்த தேமுதிக போராட்டத்தில் மீதமான உணவு முத்துகிருஷ்ணாபுரம் கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
மீதமான உணவான தக்காளி சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. உணவை சாப்பிட்ட 25 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 25 பேர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மும்பை கோரேகாவ் கிழக்கு, சந்தோஷ் நகரில் உள்ள ஓட்டலில் சம்பவத்தன்று சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
- சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் மும்பை மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை:
சமீபகாலமாக சிக்கன் சவர்மா உணவு வகை பிரபலமாகி இருக்கிறது. இருப்பினும் சிக்கன் சவர்மாவை சாப்பிட்டு பலர் நொந்து போன சம்பவங்களும் நடந்துள்ளன.
தற்போது மும்பை கோரேகாவ் கிழக்கு, சந்தோஷ் நகரில் உள்ள ஓட்டலில் சம்பவத்தன்று சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 9 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.
3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் மும்பை மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்லில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவியும், கேரளாவில் ஒரு சிறுமியும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திருமண நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
- உணவு மற்றும் ஐஸ்கிரீம் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பினர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் சாத்தனூர் தாலுகா சன்னப்பட்டிணம் பகுதியில் ஒரு திருமண விழா நடைபெற்றது. மதியம் உணவுக்கு பின்பு ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது. இந்த திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை உள்ளூர் அரசு மருத்துவமனை, மாகடி அரசு மருத்துவமனை, ராம்நகர் மாவட்ட மருத்துவமனை மற்றும் மாண்டியா மாவட்ட மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று அனுமதிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலோனார் குழந்தைகள். இதுபற்றி தெரியவந்ததும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திருமண நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் உணவு மற்றும் ஐஸ்கிரீம் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பினர். அதன் அறிக்கை வந்த பின்பே என்ன காரணம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இறைச்சி வெகுநாட்கள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி வைத்து கிரில் சமைத்ததால் உணவே விஷமாகி இருக்கலாம் என தெரிகிறது.
- சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஓட்டலில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை பாலம் பகுதியில் தனியார் அசைவ ஓட்டல் உள்ளது.
இங்கு நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 3 குழந்தைகள் மற்றும் கூடைப்பந்தாட்டம் விளையாடும் வீரர்கள் 19 பேர் கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்டு உள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் 22 பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
நேற்று இரவு முதல் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவர்களை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் சாப்பிட்ட கிரில் சிக்கன் காலாவதியானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இறைச்சி வெகுநாட்கள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி வைத்து கிரில் சமைத்ததால் உணவே விஷமாகி இருக்கலாம் என தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஓட்டலில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






