என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking water"

    • இலவசமாகத் தண்ணீர் வழங்க மறுத்து விலை கொடுத்துத் தண்ணீர் பாட்டிலை வாங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
    • இலவசக் குடிநீர் வழங்குவது விதிமுறை என்று சுட்டிக்காட்டியும் ஹோட்டல் நிர்வாகம் அதனை ஏற்கவில்லை.

    அண்மைக் காலமாக உயர்தர உணவகங்களில் தண்ணீரும் விலை கொடுத்து வாங்கும் சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில் வாடிக்கையாளருக்கு இலவசக் குடிநீர் வழங்க மறுத்து, விலை கொடுத்து பாட்டில் தண்ணீரை வாங்க வற்புறுத்திய ஓட்டல் ஒன்றுக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

     அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள கார்டன் கிரில்ஸ் 2.0 என்ற ரெஸ்டாரண்டிற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆகாஷ் சர்மா என்பவர் சென்றுள்ளார்.

    அங்கு அவர் குடிநீர் கேட்டபோது, ஓட்டல் ஊழியர்கள் இலவசமாகத் தண்ணீர் வழங்க மறுத்துள்ளனர்.

    அதற்குப் பதிலாக, விலை கொடுத்துத் தண்ணீர் பாட்டிலை வாங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

    இலவசக் குடிநீர் வழங்குவது விதிமுறை என்று சுட்டிக்காட்டியும் ஹோட்டல் நிர்வாகம் அதனை ஏற்கவில்லை. இறுதியில் அவர் 40 ரூபாய் கொடுத்து இரண்டு பாட்டில் தண்ணீரை வாங்கியுள்ளார்.

    இது தொடர்பாக ஆகாஷ் சர்மா நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் புகார் அளித்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 3,000 ரூபாய் இழப்பீடும், அவர் தண்ணீர் பாட்டிலுக்காகச் செலவழித்த 40 ரூபாயைத் திரும்ப வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.  

    • வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
    • குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

    இந்தியாவின் தூய்மையான நகரம் எனப் பெயர் பெற்ற இந்தூரில், மீண்டும் அசுத்தமான குடிநீரைக் குடித்ததால் ஒரே பகுதியில் 22 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தூரின் மௌ பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 22 பேருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

    இவர்களில் நிலைமை மோசமாக இருந்த 9 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

    மாவட்ட ஆட்சியர் சிவம் வர்மா மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நிலைமையைக் கேட்டறிந்தார்.

    குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.

    ஏற்கனவே சில வாரங்கள் முன் இந்தூரின் பாகீரத்புரா பகுதியில் இதேபோல அசுத்தமான குடிநீரால் 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

    • அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா, பயனற்ற கேள்வி என பொருள்தரும் 'காண்டா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரை அருந்தி 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு அறிக்கையில் தனது சொந்த அரசியல் விமர்சனங்களைச் சேர்த்ததற்காக துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்தூரில் அசுத்தமான குடிநீரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அம்மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா, பயனற்ற கேள்வி என பொருள்தரும் 'காண்டா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அமைச்சரின் இந்த அலட்சியமான பதில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

    இந்நிலையில் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஆனந்த் மாளவியா, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர்பாக ஒரு உத்தரவை வெளியிட்டார்.

    அந்த அரசு உத்தரவில், காங்கிரஸ் கட்சி அளித்த மனுவில் இடம்பெற்றிருந்த வாசகங்களை அப்படியே சேர்த்திருந்தார். அதில் அமைச்சரின் 'காண்டா' என்ற வார்த்தை பிரயோகம் "மனிதநேயமற்றது மற்றும் சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது" என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனமும் இடம்பெற்றிருந்தது.

    அரசு சார்ந்த நிர்வாக உத்தரவில் இத்தகைய அரசியல் ரீதியான விமர்சனங்களை சேர்த்ததால் உஜ்ஜைனி மண்டல வருவாய் ஆணையர் ஆஷிஷ் சிங், ஆனந்த் மாளவியாவை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.  

    • தாகத்தை போக்கவும், நீரிழப்பை தடுக்கவும் சிறிதளவு தண்ணீர் பருகலாம்.
    • உடல் தூக்கத்தின்போது உடல் பாகங்களை பழுதுபார்க்கும் பணியை செய்யும்.

    நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து தாகத்தோடு சிலர் எழுவதுண்டு. நாவறட்சியை போக்குவதற்கு தண்ணீர் அருந்தவும் செய்வார்கள். அப்படி நள்ளிரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா? என்ற கேள்விக்கு நல்லதல்ல என்பதே மருத்துவ நிபுணர்களின் பதிலாக இருக்கிறது.

    அப்படி தாகமாக எழுந்தால் உடல் நீரிழப்புக்கு ஆளாகி இருப்பதாக அர்த்தம். தாகத்தை போக்கவும், நீரிழப்பை தடுக்கவும் சிறிதளவு தண்ணீர் பருகலாம். ஆனால் அதிகம் பருகக்கூடாது. அது தூக்கத்தை சீர்குலைத்துவிடும். மீண்டும் சிறுநீர் கழிக்க எழுந்திருக்க நேரிடும். ஆழ்ந்த தூக்கத்தையும், நோய் எதிர்ப்பு அமைப்பையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கும்.

    அதேவேளையில் உடல் தூக்கத்தின்போது உடல் பாகங்களை பழுதுபார்க்கும் பணியை செய்யும். இந்த செயல்முறைகளுக்கு தண்ணீர் மிக முக்கியமானது. அதனால் தூங்க செல்வதற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் பருகலாம். நள்ளிரவில் அடிக்கடி தாகம் எடுப்பதை தவிர்க்க பகலில் உடலில் நீர்ச்சத்தை போதுமான அளவு தக்கவைப்பது அவசியம்.

    • பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினரும் முகாமிட்டு சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நகரப்பகுதியான உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளில் கடந்த 7-ந் தேதி பலருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது.

    அவர்களில் 3 பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தனர். பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பொது பணித்துறையினர் மேற்கொண்ட ஆய்வில், முத்தரையர் பாளையத்தில் இருந்து நகரப் பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதனை உடனடியாக சீரமைத்தனர்.

    இந்த நிலையில் நெல்லித்தோப்பு தொகுதி பெரியார் நகர், ராஜய்யா தோட்டம், புது அய்யனார் கோவில் தெரு பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டடோர் நேற்று மாலை வாந்தி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில், 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதோடு அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினரும் முகாமிட்டு சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • இன்று காலை 8 மணி முதல் நாளை மறுநாள் இரவு 10 மணி வரை 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.
    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாயினை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதனால் இன்று காலை 8 மணி முதல் நாளை மறுநாள் இரவு 10 மணி வரை 3 நாட்கள் அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள குடிநீர் வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    • அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள குடிநீர் வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாயினை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வருகிற 30-ந்தேதி காலை 8 மணி முதல் ஆகஸ்டு 1-ந்தேதி இரவு 10 மணி வரை 3 நாட்கள் அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள குடிநீர் வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குழந்தைகளை தவிர்த்து மற்றவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
    • ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 800 மி.லி. முதல் ஒரு லிட்டர் சிறுநீரை வெளியேற்றும் திறன் கொண்டது.

    உடல் நலனை பேணுவதற்கு தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்பது நெடுங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. அப்படி 8 டம்ளர் தண்ணீர் மட்டும் பருகினால் போதுமானதா? என்ற கேள்விக்கு அது ஒரு கட்டுக்கதை என்கிறார், டாக்டர் சிரியாக் அபி பிலிப்ஸ். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த இவர் கல்லீரல் நோய் நிபுணர். கல்லீரல் டாக்டர் என்றும் அழைக்கப்படும் இவர், தினமும் உடலில் ஏற்படும் திரவ இழப்பை ஈடு செய்வதற்கு ஏதுவாக தண்ணீர் பருக வேண்டும் என்றும் கூறுகிறார். உடல் தினமும் எவ்வளவு திரவ இழப்பை சந்திக்கிறது? அதற்கான காரணம் என்ன? தினமும் எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும்? என்பது பற்றி விளக்கி இருக்கிறார். அது பற்றி பார்ப்போம்.

    எவ்வளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும்?

    நீரிழப்பைத் தவிர்க்க குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் (பானங்கள் மற்றும் தண்ணீர் உட்பட) திரவம் உட்கொள்ள வேண்டும். இந்த நீரில் சுமார் 20 சதவீதம் உண்ணும் உணவில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து கிடைக்கும். இந்த அளவு உணவை பொறுத்து மாறுபடும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக நீர் உள்ளடங்கி இருக்கும். இறைச்சிகளில் மிதமான நீர் கலந்திருக்கும். பதப்படுத்தப்பட்ட, வேகவைத்த பொருட்களில் குறைவான அளவில் நீர் இருக்கும். ஒன்றரை லிட்டர் என்பது குறைந்தபட்ச அளவுதான். அவரவர் உடலமைப்பு, நீரிழப்புக்கு ஏற்ப தண்ணீர் பருகும் அளவு மாறுபடும்.

    வெப்பம்-உடல் செயல்பாடு: கடுமையான வெப்பம் மற்றும் கடின உடலுழைப்பு காரணமாக உடலில் இருந்து வியர்வை வெளிப்படுவதுண்டு. இந்த வியர்வை ஒரு மணி நேரத்திற்கு 300 மி.லி. முதல் 2 லிட்டர் வரை உடலில் திரவ இழப்பை ஏற்படுத்தக்கூடும். உடற்பயிற்சியினால் ஏற்படும் நீரிழப்பை தடுக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 400 மி.லி. முதல் 800 மி.லி. திரவ பானங்களை பருகுமாறு அமெரிக்க விளையாட்டு மருத்துவக்கல்லூரி பரிந்துரை செய்துள்ளது.

    குழந்தைகள்: வயது மற்றும் உடல் செயல்பாட்டை பொறுத்து குழந்தைகளுக்கு நீரின் தேவை மாறுபடும். 2 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 1.3 லிட்டர் தண்ணீரும், 4 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1.6 லிட்டர் தண்ணீரும் பருக வேண்டும்.

    மற்றவர்கள்: குழந்தைகளை தவிர்த்து மற்றவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். தாக உணர்வு, சிறுநீரக செயல்பாடுகளை பொறுத்து இந்த அளவு மாறுபடும்.

    நீரேற்ற திட்டம்

    மிதமான வானிலை நிலவும் சூழலில் ஒரு நாளைக்கு சுமார் 1.5 லிட்டர் (தண்ணீர், பானங்கள் மற்றும் உணவில் கலந்திருக்கும் ஈரப்பதம்) உட்கொள்வது போதுமானது. மற்ற சமயங்களில் ஒரு நாளைக்கு 2 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் பருகலாம்.

    அதே நேரத்தில் கடுமையான உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ மேற்கொள்பவர்கள் ஒரு நாளைக்கு 6 முதல் 7 லிட்டர் வரை பருகலாம். கடுமையான வெயில், அதிக வியர்வை வெளியேற்றம் போன்ற சமயங்களில் 10 லிட்டர் தண்ணீர் வரை பருக வேண்டியிருக்கும். மருத்துவரின் ஆலோசனை பெற்று தண்ணீர் பருகுவது நல்லது.

    உடல் எவ்வளவு தண்ணீரை இழக்கிறது?

    நாம் ஓய்வெடுக்கும்போது கூட உடல் தொடர்ந்து நீரிழப்புக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறது. 20 முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வசிக்கும்ஆரோக்கியமான நபர் தினமும் சிறுநீர் வழியாக தினமும் சுமார் 500 மி.லி. திரவ இழப்பை எதிர்கொள்கிறார். சுவாசம் மற்றும் சருமத்தில் இருந்து ஆவியாதல் செயல்முறை மூலம் கூட சுமார் 700 மி.லி. நீரை இழக்கிறார். ஒட்டுமொத்தமாக சிறுநீர் கழித்தல், வியர்த்தல், சுவாசித்தல் மற்றும் குடல் அசைவுகள் போன்ற பல்வேறு செயல்முறைகள் மூலம் மனித உடல் ஒரு நாளைக்கு சுமார் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீரை இழக்கிறது. இது வெப்பமான காலநிலையிலோ, கடுமையான உடற்பயிற்சியின்போதோ அதிகரிக்கக்கூடும்.

    சிறுநீரகங்களின் செயல்பாடு

    ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 800 மி.லி. முதல் ஒரு லிட்டர் சிறுநீரை வெளியேற்றும் திறன் கொண்டது. அதற்காக ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் என்ற அளவில் தண்ணீர் பருகுவது ஆபத்தானது.

    அப்படி அதிகமாக தண்ணீர் பருகுவது ரத்தத்தில் சோடியத்தை நீர்த்து போகச் செய்து ஹைபோநெட்ரீமியா எனப்படும் சோடியம் குறைபாடு சார்ந்த நோய் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    நீரேற்றமாக இருப்பது எப்படி?

    8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்பதை மறந்துவிடுங்கள். அதற்கு பதிலாக உடலின் சமிக்ஞைகளை கவனியுங்கள். சிறுநீர் தெளிவாகவோ அல்லது வெளிர் மஞ்சள் நிறமாகவோ இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் தண்ணீர் கூடுதலாக பருக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடைசியாக எப்போது தாகமாக உணர்ந்தீர்கள் என்பதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப தண்ணீர் பருகுங்கள்.

    • நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அண்ணா நகர் மண்டலம், புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் 24-ந் தேதி காலை 8 மணி முதல் 25-ந் தேதி காலை 8 மணி வரை தண்டையார்பேட்டை மண்டலம்-4, ராயபுரம் மண்டலம்-5, புரசைவாக்கம்,

    பெரியமேடு, சௌகார்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை, திரு.வி.க நகர் மண்டலம்-6, ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், அண்ணா நகர் மண்டலம்-8, கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ், தேனாம்பேட்டை மண்டலம்-9, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • தரமின்றி, முறையான அனுமதியின்றி அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை.
    • அடைக்கப்பட்ட குடிநீரில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட வேண்டும்.

    தரமின்றி, முறையான அனுமதியின்றி அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கோடை வெயில் எதிரொலியின் காரணமாக கேன் வாட்டர் விற்பனை என்பது அதிகரித்துள்ள நிலையில் கேன் வாட்டர் குடிநீரின் தரத்தை முழுமையாக பின்பற்றுமாறும், அடைக்கப்பட்ட குடிநீரில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட வேண்டும் என்றும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

    அதே போல் கால்சியம் அளவை ஒரு லிட்டர் குடிநீரில் 10 முதல் 75 மில்லிகிராம் என்ற அளவிலும், மெக்னீசியத்தின் அளவை 1 லிட்டர் குடிநீரில் 5 முதல் 30 மில்லிகிராம் என்ற அளவிலும் கடைபிடிப்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்றுவது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டது.

    குடிநீர் கேன்கள் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பி பயன்படுத்த வேண்டும் எனவும் கேன்களின் நிறம் மாறிடும் பட்சத்தில் மீண்டும், மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தொடர்ந்து அவ்வாறு செய்யும் பட்சத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    • இரவு நேரங்களில் மழை பெய்வதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
    • பலத்த காற்றுடன் பெய்யும் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் ஆங்காங்கே சாலைகளில் சாய்ந்து விழுகின்றன.

    மைசூரு:

    மைசூரு டவுன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவில் மழையும், பகலில் வெயிலும் அடித்து வருகிறது. கடந்த 19-ந்தேதி இரவு கனமழை பெய்தது. சில இடங்களில் இடி- மின்னலுடன் மழை பெய்தது. இதனால், சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மைசூருவில் மழை காரணமாக கடந்த 3 நாட்களாக சாலையோர வியாபாரிகள் அவதி அடைந்தனர். அதாவது இரவு 7 மணி முதல் 9 மணி வரை மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் சாலையோர வியாபாரிகள் கடைகளை மூடிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு செல்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் மழை பெய்வதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

    காரணம் பலத்த காற்றுடன் பெய்யும் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் ஆங்காங்கே சாலைகளில் சாய்ந்து விழுகின்றன. ஆனால், கிராமப்புற பகுதிகளில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும், அவர்கள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். அதாவது டிராக்டர் மூலம் நிலங்களை உழுது விதைகளை விதைத்து வருகிறார்கள். இந்த ஆண்டு மைசூரு மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்ததால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. எனவே மைசூருவில் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாது என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட்டதன் மூலம் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது
    • அந்த பகுதியில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் மின்னப்பன்தெரு, பனிக்கன்தெரு, காமாட்சி அம்மன் தெரு, நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கூறி அந்த பகுதி பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர்.

    பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று குடிநீர் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.

    இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலரிடம் புகார் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 4½ வயது பெண் குழந்தை மற்றும் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிர் இழந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் சரவணன் கூறுகையில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து இறந்ததாக கூறப்படும் 4½ வயது குழந்தை வண்ணாங்கோவில் பகுதியில் பாரம்பரிய முறையில் ஓதல், வயிற்று தொக்கு நீக்குதல் சிகிச்சை வழங்கப்பட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் கோவில் திருவிழாவின்போது நடைபெற்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட்டதன் மூலம் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    மேலும் குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் எந்திரங்களை கொண்டு, குடிநீர் வினியோகம் செய்யும் குழாயில் ஆய்வு மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி பகுதிகளில் வயிற்றுப்போக்கு உண்டான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மாநகராட்சி மருத்துவமனைகளை அணுகுமாறு கேட்டுக்கெள்ளப்படுகிறது என்றார்.

    ×